பேசும் கடல்
- சகேஷ் சந்தியா
- May 15
- 2 min read

“இனியன் அமுதா நீங்க ரெண்டு பேரும் அம்மா அப்பா பேச்சை கேப்பீங்களா?” என்று கடல் பாட்டி கேட்டார்.
அமுதா, “ஐயோ கடல் பாட்டி, இந்த பெரியவங்களே இப்படித்தான் கேட்பிங்க.. சில நேரம் கேட்போம் சில நேரம் கேட்க மாட்டோம்”
என்று சொன்னாள்.
அதைக்கேட்டு நுரை ததும்பும் அலையை வீசிச் சிரித்தார் கடல்பாட்டி.
.
“ஆனால் மீனவர்கள் எப்போதுமே என்னிடம் மரியாதையாகத்தான் நடந்து கொள்வார்கள்.” என்றார் கடல்பாட்டி.
” என்ன கடல் பாட்டி புதுசா புதிர் போடுறீங்க? ” என்று இனியன் கேட்டான்.
” நீங்க வீட்டிலிருந்து வரும்போது கால்ல செருப்பு போட்டு வந்தீங்களா? ” என்று கடல்பாட்டி கேட்டார்.
” ஆமாம்.. ஆனால் அப்பா கடற்கரைக்கு செருப்பு போட்டுட்டு போக வேண்டாம்னு சொல்லுவாங்க..” என்றாள் அமுதா.
” ஏன் தெரியுமா? ” என்று கேட்டுவிட்டு அமைதியாக இருந்தார் கடல்பாட்டி.
” ஐயோ! பாட்டி.. விளக்கமா சொல்லுங்க ” என்று அமுதா சலிப்புடன் மணலில் உட்கார்ந்தாள். கடல்பாட்டி மெல்ல வந்து அவள் காலை நனைத்தார். அவளுக்குக் கிச்சுகிச்சு மூட்டியது போல இருந்தது.
அவள் கெக்கெக்கே என்று சிரித்தாள். இனியனும் சிரித்தான்.
” பொதுவாகவே என்னை நம்பி வாழும் பாரம்பரிய மீனவர்கள் கடலில் பயணிக்கும்போதும் சரி, மீன் பிடிக்கும் போதும் சரி, கடற்கரையில் வலைகளைப் பழுது பார்க்கும் பொழுதும் சரி, மீன்பிடித்தொழில் சார்ந்த கருவிகளைப் பராமரிக்கும் பொழுதும் சரி காலில் செருப்பு அணிவதே இல்லை. ” என்று சொன்னார் கடல்பாட்டி.
” ஆமா.. இனியன் அங்க பாரு! அப்பா செருப்பு போடாமல் தான் வலையைப் பழுது பார்க்கிறாரு..” என்று சொன்னாள் அமுதா.
அதற்கு இனியன், “ ஆமாம்.. அப்பா செருப்பு போட்டு பார்த்ததே இல்லை.. ஏன் பாட்டி? ” என்று இனியன் கேட்டான்.
” பேரப்பிள்ளைகளா! எங்கெல்லாம் செருப்பு போடாம போவாங்க உங்களுக்கு தெரியுமா? ” என்று கடல்பாட்டி கேட்டார்.
” சாமி கும்பிடும் போது போடமாட்டாங்க.. பிறருக்கு மரியாதை செய்யும் போதும் செருப்பு போடமாட்டாங்க..” என்றாள் அமுதா.
” இப்ப புரியுதா நெய்தல் நிலத்தில் வாழும் பாரம்பரிய மீனவர்களுக்கு நான்தான் முதல் தெய்வம். அதாவது இயற்கை தான் இவர்களின் ஒரே நம்பிக்கை. மீனவர்கள் இயற்கையை நம்பி மட்டுமே வாழ்பவர்கள். ” என்றார் கடல்பாட்டி.
” பாட்டி நீங்க சொல்றது சரிதான். எங்க ஊர்ல கடல் தொழில் செய்யும் யாருமே இதுவரை கடற்கரைக்கு செருப்பு போட்டு வந்து நாங்க பாக்கல. அவங்க வலை, படகு, கடல் எதுலயும் செருப்புபடாம பாத்துக்குவாங்க படகுகளில் ஏறும் பொழுது மத்தவங்க செருப்பு போட்டு இருந்தாலும் கழற்ற சொல்லிடுவாங்க ” என்று அமுதன் சொன்னான்.
”அது மட்டும் இல்ல கண்ணுகளா..கடல்ல ஆழியைத் தாண்டி வரும்போது வெத்தல பாக்கு புகையிலை எதுவும் போட மாட்டார்கள். ஆழி இருக்கும் திசை நோக்கி அவர்கள் கையெடுத்து கும்பிடுவார்கள். அப்பொழுது தலையில் கட்டி இருக்கக்கூடிய தலைப்பாகையையும் அவிழ்த்து இடுப்பில் கட்டிக் கொள்வார்கள். அந்தப் பகுதியை கடக்கும் வரை கடலிலே அவர்களை எச்சில் துப்பமாட்டார்கள். வேட்டியை மடித்து கட்ட மாட்டார்கள். ” என்றார் கடல்பாட்டி.
” ஆஹா! மிகவும் புதிய தகவலாக இருக்கிறதே. இது எனக்கு தெரியாதே எங்க அப்பா கிட்ட இன்னைக்கு நான் கேட்டு தெரிந்து கொள்ளப்போறேன். ” என்றாள் அமுதா.
அமுதாவுக்கு எல்லாம் ஆச்சரியமாக இருந்தது.
இனியனும் அமுதாவும் கடல் பாட்டியோடு நீண்ட உரையாடல் செய்து கொண்டிருந்தார்கள் அவர்களின் உரையாடலின் மூலம் நெருக்கம் கூடக்கூட உடைந்த மணல் கோபுரத்தை மறந்து போனாள் அமுதா.
” அமுதா நம்ம கடலை பாத்தியா எவ்வளவு அழகா இருக்கு. அந்த கடல்தான் நமக்கு வாழ்வாதாரம். கடல் தொழிலில் எதுவும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காகவும் அதில் தொழில் செய்யும் பொழுது அவர்கள் உயிருக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காகவும் அதை வணங்கிட்டுதான் தொழிலுக்கு போவாங்க. ” என்று இனியன் சொன்னான்.
” ஆமாம் அண்ணா. அது சரி ஆழின்னா என்ன? ” என்று கேட்டாள் அமுதா.
” வா நம்ம கடல் பாட்டிகிட்டயே கேட்டு தெளிவுபடுத்துவோம் “ என்று சொன்னான் இனியன். இருவரும் திரும்பிப்பார்க்கும் போது கடல்பாட்டியைக் காணவில்லை.
( கடல் பேசும்.)
அருமை 💐💐💐💐