top of page

சிறார்களுக்கு உபதேசம் தேவையில்லை

  • Writer: ஈரோடு சர்மிளா
    ஈரோடு சர்மிளா
  • May 15
  • 2 min read

எழுத்தாளர் அம்பையுடன் நேர்காணல் - எழுத்தாளர் ஈரோடு ஷர்மிளா
எழுத்தாளர் அம்பையுடன் நேர்காணல் - எழுத்தாளர் ஈரோடு ஷர்மிளா

ஈரோடு சர்மிளா: இந்தியச் சிறார் இலக்கியம் எப்படி இருக்கிறது?


அம்பை: சிறார் இலக்கியம் குறித்து அதிக ஆர்வம் காட்டத் துவங்கியது 

குழந்தைகளுக்குப் பாட புத்தகங்களிலும் கதைப் புத்தகங்களிலும் நாம் என்ன

கூறுகிறோம் நாம் எந்தக் கதைகள் சொல்கிறோம் என்பதைப் பெண்ணிய

இயக்கத்தைச் சேர்ந்த கமலா பஸீன்  போன்றவர்கள் ஆராய்ந்து மாற்றுக் கதைகளை

எழுதத் துவங்கியபோதும்  என் வளர்ப்புக் குழந்தைகளுக்காகவும் நண்பர்களின்

குழந்தைகளுக்காகவும் நான் கதைப் புத்தகங்கள் வாங்கத் துவங்கியபோதும்தான்.

 மிகச் சிறந்த சிறார் நூல்களும் காமிக்ஸும் தமிழில் இருந்த காலத்தில் நான்

வளர்ந்தவள் என்பதால், அழ.வள்ளியப்பா, வாண்டு மாமா, ”கண்ணன்” பத்திரிகையில்

லெமன் என்ற பெயரில் எழுதிய லக்ஷ்மணன் இவர்கள் என்னுடன் 

இருந்தார்கள் நான் சிறுமியாக இருந்தபோது. தவிர, ’கண்ணன’, ‘கல்கண்டு’

’அம்புலிமாமா’, ‘ஜிங்லி’ போன்ற பத்திரிகைகள் புராணக் கதைகளையும் நவீன உலகக்கதைகளையும் அள்ளி வழங்கின. 


அன்பளிப்பாகப் புத்தகங்களை வாங்க ஆரம்பித்தபோது ஆங்கிலத்தில் உள்ள அளவு

தமிழிலும் மற்ற மொழிகளிலும் இல்லையோ என்ற உணர்வு ஏற்பட்டது. ஆங்கிலத்தில்

படிக்கும் சிறார்களுக்கு கதைப் புத்தகங்களைப் பொறுத்தவரை அதிகச் சலுகை

இருப்பதுபோல் தோன்றியது. அது உண்மையும் கூட. ஆனால் கடந்த பத்துப்

பதினைந்து ஆண்டுகளில் தமிழ் உட்பட மற்ற இந்திய மொழிகளில் வெளிவந்துள்ள

சிறார் நூல்கள் இந்தக் குறையைத் தீர்த்துள்ளன என்று கூறலாம். இன்னும் பலர் எழுத

வருவார்கள் என்று நம்புகிறேன்.


ஈரோடு சர்மிளா: சிறார் இலக்கியத்தில் இன்னும் பேசப்பட வேண்டிய

விஷயங்களாக எதையெல்லாம் நினைக்கிறீர்கள்?


அம்பை: ’The Very Hungry Caterpillar’ என்ற குழந்தைகளுக்கான நூலை நீங்கள்

பார்த்திருக்கிறீர்களா என்று தெரியாது. நான் பல குழந்தைகளுக்குப் பரிசளித்த நூல்

அது. ஒரு கம்பளிப் பூச்சி பட்டாம்பூச்சியாக மாறுவதை மிகவும் அழகாக, அழகான

ஓவியங்களுடன் கூறும் கதைப் புத்தகம். பள்ளிக்கு செல்லத் துவங்காத

குழந்தைகளுக்கு அப்படிப்பட்ட நூல்கள் தேவை. ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு

பலவித நாட்டார் கதைகளுடன் அறிவியலைக் கதைகளாகக் கூறும் ரோபோக்கள்,

வேற்றுக் கிரகவாசிகள் வரும் சாகசக் கதைகளும் நாம் தந்தால் அவர்கள் கற்பனை

பெருகும்.


பதின்ம வயதினருக்கு classics என்று கருதப்படும்  செவ்விய இலக்கியத்தில் உள்ள 

தமிழ் மற்றும் இதர இந்திய மொழிகளின் நூல்கள், ஆங்கில நூல்களின் எளிய

மொழியில் உள்ள  மொழியாக்க நூல்கள் இவற்றின் சுருக்கமான வடிவங்களில் உள்ள

பதிப்புகளைத் தந்தால் இந்திய இலக்கியங்களையும் உலக இலக்கியங்களையும்

படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். மிகக் குறைந்த விலையில் வந்தால் எல்லோரையும்

எட்ட முடியும்.


ரஷ்ய மற்றும் சீன மொழிச் சிறார் நூல்களை என் குழந்தைப் பருவத்தில் மிகக் குறைந்த விலையில் வாங்க முடிந்தது. அதேபோல் ஆங்கிலச் செவ்விய நூல்களான ’Tale of Two Cities’, ’Hucklebury Finn’, ’Tom Sawyer’, ’Hunchback of Notredame’, ’Treasure

Island’, ’Count of Montecristo’ இவற்றைப் போன்ற நூல்களை சுருக்கமான

வடிவத்தில் பதிப்பித்து மிகக் குறைந்த விலையில் வெளியிட்டது பல செவ்விய

நூல்களைப் பற்றி அறிந்துகொள்ள என் குழந்தைகளுக்கு உதவியது. இதைத் தமிழிலும்

மற்ற இந்திய மொழிகளிலும் ஓர் இயக்கம் போல் செய்யவேண்டும் என்று எனக்கு

மாளாத ஆசை!


ஈரோடு சர்மிளா: தமிழ்ச்சிறார் இலக்கியத்தில் புதிதாக எழுத வருபவர்களுக்கு

என்ன ஆலோசனைகள் சொல்வீர்கள்?


அம்பை: பொதுவாக நான் யாருக்கும் ஆலோசனைகள் கூறுவதில்லை. அதற்கு வேறு

பலர் இருக்கிறார்கள். நான் அந்தப் பொறுப்பை ஏற்பதில்லை. ஆனால் சிறார்

இலக்கியத்தைப் பொறுத்தவரை ஒன்று மட்டும் எனக்குப் புரிகிறது. சிறார்களுக்கு எந்த

உபதேசமும் தேவையில்லை. சுற்றியுள்ள  உலகத்தின் சாளரங்களை சாகசமாகவும்

மந்திரக் கணங்களாகவும் மனத்தைத் தொடும் கதைகளாகவும் கூறி நாம் திறந்தால்

போதும். சிறார்கள் அவர்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்வார்கள்.

அதற்கு நம்மில் உள்ள குழந்தையையும் பதின்ம வயது நபரையும்

தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page