top of page

இயலில் தேடலாம்!

178 results found with an empty search

  • கரும்பு பெண்மணி யார்?

    ரதி : ஸ்ஸ்ஸ்ஸ்.. என்ன வெயில்! நகுலன் : ஒரு கரும்பு ஜூஸ் குடிச்சா நல்லாருக்குமில்ல.. உதயசங்கர் : வாங்க செல்லங்களா.. இந்தா கரும்புச்சாறு குடிங்க.. குழந்தைகள் : ஐய்.. தாத்தா.. உங்கள எதிர்பார்க்கவே இல்லை.. சரிதா ஜோ அத்தை எங்கே? உதயசங்கர் : சரிதா ஜோ அத்தை இந்த மாசம் லீவு போட்டுட்டாங்க.. அதான் நான் வந்துட்டேன்.. கரும்புச்சாறு எப்படி இருக்கு? ரதி : சூப்பரா இருக்கு தாத்தா…. எனக்கு எப்பவுமே கரும்புச்சாறு தான் பிடிக்கும்.. உதயசங்கர் : செயற்கையான ரசாயான பான்ஙகளை விட இயற்கையான கரும்புச்சாறு உடம்புக்கு ரொம்ப நல்லது இல்லையா? இப்ப நான் ஒரு கேள்வி கேட்கப்போறேன்.. நகுலன் : எனக்குத் தெரியுமே.. கரும்புச்சாறில் என்ன சத்துகள் இருக்கின்றன? அப்படின்னு தானே.!. உதயசங்கர் : செல்லமே.. என்ன அறிவு? ஆனால் நான் கேட்கப்போற கேள்வி வேற.. கரும்புக்கு இனிப்புச்சுவையைக் கொடுத்தது யாரு? குழந்தைகள் : யாரு? இயற்கை தானே…!!! உதயசங்கர் : இயற்கையில் இந்தியாவில் விளைந்த கரும்புக்கு இத்தனை இனிப்புச்சுவை இல்லை..அந்த இனிப்புச்சுவையை ஒரு பெண் அறிவியலாளர் தான் கொடுத்தார்.. குழந்தைகள் : அப்படியா? யாரு? யாரு? யாரு? உதயசங்கர் : எதுக்கு இத்தனை யாரு? அவர் தான் கரும்புப்பெண்மணி ஜானகி அம்மாள்.. 1897- ஆம் பிறந்தவர். அவருடைய முழுப்பெயர் கக்கத் இடவேலத் ஜானகியம்மாள்.. கேரளாவைச் சேர்ந்த தாவரவியலாளர். ரதி : உண்மையில் பெருமையாக இருக்கு தாத்தா..யார் அந்த ஜானகியம்மா? அவங்களைப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்க.. உதயசங்கர் : ஜானகியம்மா அவரது வீட்டில் 19 ஆவது குழந்தை. அவருக்கு சிறு வயதிலிருந்தே படிக்க வேண்டும் என்று ஆசை.. அப்பாவிடம் அடம்பிடித்து சென்னையில் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் அந்தக் காலத்தில் பெண்கள் ஹோம் சயின்ஸ் மட்டும் தான் படிக்க முடியும்.. நகுலன் : அப்படியா தாத்தா..! உதயசங்கர் : ஜானகியம்மாளின் வகுப்புக்கு ஒரு தாவரவியலாளர் வந்தார். அவரிடம் ஜானகியம்மாள் நிறையக் கேள்விகளைக் கேட்டார்.. எல்லாம் தாவரவியல் தொடர்பான கேள்விகள்..அதைக் கேட்ட தாவரவியலாளர் அவரை சென்னையிலேயே தாவரவியல் படிக்கும் கல்லூரியில் சேர்த்து விட்டார். ரதி : கரும்பு எப்போது வரும் தாத்தா? உதயசங்க ர் : இந்தா வந்துருச்சி.. ஜானகியம்மாள் அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்குச் சென்றார். அங்கே தாவர உயிரணுவியல் ( CYTOLOGY ) துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தார். அமெரிக்காவிலும் சரி இந்தியாவிலும் சரி முதல் டாக்டர் பட்டம் பெற்ற பெண் ஜானகியம்மாள் தான்.. குழந்தைகள் : ஆகா.. சூப்பர் தாத்தா.. உதயசங்கர் : அமெரிக்காவில் புதுவகை கத்தரிக்காயைக் கண்டுபிடித்தார். அதை ஜானகி கத்தரிக்காய் என்று இப்போதும் அழைக்கிறார்கள். கோவையில் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் கலப்பினக் கரும்பைக் கண்டுபிடித்தார்.. நகுலன் : இந்தியாவில் அவரைக் கொண்டாடியிருப்பார்களே..! ரதி : ஆமாமா.. கொண்டாடிடக் கிண்டாடிப் போறாங்க.. இந்தக் காலத்திலேயே பெண்கள் என்ன செய்தாலும் பாராட்டறதுக்கு யோசிக்கிறாங்க.. உதயசங்கர் : ரதி சொல்றது உண்மை தான்.. அவர் பெண் என்பதாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் நிறைய அவமானங்களைச் சந்தித்தார்..ஆனாலும் அறிவுத்தாகம் அவருக்கு ஊக்கம் தந்து கொண்டேயிருந்தது. ரதி : வேறு என்ன கண்டுபிடிப்புகள் செய்திருக்கிறார் கரும்புப்பெண்மணி ஜானகியம்மாள்? உதயசங்கர் : பூக்களின் நிறங்களை மாற்றியிருக்கிறார்.. நகுலன் : எப்படி தாத்தா..? உதயசங்கர் : ரோஜா என்றால் ரோஸ் நிறம் தான் இருந்தது. ஆனால் ஜானகியம்மாள் மஞ்சள் ரோஜா, வெள்ளை ரோஜா, சிவப்பு ரோஜா, என்று உருவாக்கினார்.. மஞ்சளும் வெள்ளையும் கலந்த ரோஜாவுக்கு அவர் பெயரைத்தான் சூட்டியிருக்கிறார்கள்.. ரதி : என்ன பெயர் தாத்தா? உதயசங்கர் : மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள்.. குழந்தைகள் : எப்படி தாத்தா இந்த அறிவியலாளரைத் தெரிந்து கொண்டீர்கள்..? உதயசங்கர் : எழுத்தாளர். இ.பா. சிந்தன் இந்தியாவின் கரும்புப்பெண்மணி ஜானகி அம்மாள் என்று ஒரு சிறிய புத்தகம் எழுதியிருக்கிறார்.. அந்தப் புத்தகத்தைப் பஞ்சு மிட்டாய் பிரபுவின் ஓங்கில் கூட்டம் அமைப்பும் புக் ஃபார் சில்ட்ரெனும் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள்.. வாங்கி வாசித்துப் பாருங்கள்.. இன்னும் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.. குழந்தைகள் : சரி தாத்தா.. அடுத்த மாதம் சரிதா ஜோ அத்தை வந்துருவாங்களா? உதயசங்கர் : நிச்சயமா வந்துருவாங்க செல்லங்களா.. இனிமேல் கரும்பு ஜூஸ் குடிக்கும்போது…யார் ஞாபகத்துக்கு வருவாங்க? ரதி : இடவேலத் கக்கத் ஜானகி அம்மாள்.. உதயசங்கர் : ரோஜாப்பூவைப் பார்க்கும்போது… நகுலன் : மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள்! அனைவரும் சேர்ந்து : மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள்.! மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள்!.

  • சிறார் இலக்கியத்தின் பெருஞ்சுடர்

    தமிழ்ச் சிறார் இலக்கியத்திற்கும் நூறாண்டு கால வரலாறு இருக்கிறது. பெரியவர்கள் இலக்கியத்தில் தீவிரமாக இயங்கிய பலரும் சிறாருக்கும் எழுதியிருக்கிறார்கள். சிறார் இலக்கியத்தையே தமது முதன்மை தடமென வகுத்துகொண்ட முன்னோடிகளும் ஏராளம். அவர்களில் தனக்கென தனித்த வழியமைத்துகொண்ட மூத்த படைப்பாளி ரேவதி. சிறுவயது முதலே வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்த ரேவதி, ‘குழந்தை இலக்கியக் கழகம்’ நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்கிறார். அங்கு பூவண்ணன் போன்ற எழுத்தாளர்கள் அளித்த பயிற்சியினால் ‘பாட்டு வாத்தியார்’ எனும் கதையை எழுதுகிறார். இக்கதை 1952ஆம் ஆண்டு வெளியாகிறது. அதற்கு முன்பே சில கதைகளை அவர் எழுதியிருந்தபோதும் பிரசுரமான முதல் கதை இதுவே. அவரின் 16 வது வயதிலேயே எழுத்தாளராகி விட்டார். ஹரிஹரன் எனும் இயற்பெயர் கொண்ட இவர், அப்பெயரில் கதைகள் எழுதிகொண்டிருந்தார். அப்போது இவரைச் சந்தித்த அழ வள்ளியப்பா, பெரியவர்களுக்கு எழுத பலர் இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு எழுத மிகக் குறைந்தவர்களே உள்ளனர். அதனால், தொடர்ந்து குழந்தைகளுக்கு எழுது என்று கூறியதோடு ‘ரேவதி’ எனும் பெயரையும் பரிந்துரைத்தார். அன்றுமுதல் ’ரேவதி என்று பெயரில் குழந்தைகளுக்குக் கதைகள் எழுதத் தொடங்கினார். பெரியவர்களுக்கு எழுது தனது கதைகளை எழுதுவதற்கு முன்பே, குழந்தைகள் மத்தியில் அக்கதைகளைச் சொல்கிறார். அவர்களின் ஏற்பு / மறுப்புக்குத் தக்க அக்கதையை எழுதும்போது மாற்றம் செய்கிறார். அதனால்தான் ஒரு நேர்காணலில், “குழந்தைகளுக்கு எழுதுவதில் மிகுந்த ஆத்மதிருப்தி கிடைத்தது. எழுதுவதை விட அவர்களுக்குக் கதை சொல்வதில் மிகுந்த திருப்தி ஏற்பட்டது” என்கிறார். இந்த அனுபவத்தில்தான் ‘குழந்தைகளுக்கு கதை சொல்வது எப்படி?” எனும் நூலும் எழுதினார். குழந்தைகள் கதை என்றாலே நீதிநெறிகளை விளக்குவதுபோல கதைகள் எழுதுவது என்ற சோர்வளிக்கும் அந்த வடிவத்தை மாற்ற முனைகிறார் ரேவதி. கதை எழுதும் வடிவத்தில் மட்டுமல்ல, கதையின் ’கரு’ வைத் தேர்வு செய்வதில் அவரின் சமகால சிறார் எழுத்தாளர்களை விட கவனம் ஈர்ப்பவராக இருக்கிறார். 1934 ஆம் ஆண்டு காந்தியடிகள் குற்றால அருவியில் நீராட வருகிறார். அங்கே குளிப்பதற்கு தலித்துகள் அனுமதி இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு குளிக்காமலேயே திரும்பிச் செல்கிறார். இந்தச் செய்தியை அடிப்படையாகக் 1978 ஆம் ஆண்டில் கொடிகாட்ட வந்தவன் எனும் சிறார் நாவலை எழுதினார். மிகப் பணக்கார வியாபாரி ஒருவர். பிரிட்டிஷ்காரர்களுக்கு ஆதரவாக இருப்பவர். அவரின் மகன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருக்கிறார். மகனைப் போலவே பேரனும் ஆகிவிடுவோனோ என்று பயப்படுகிறார் தாத்தா. பேரனை வெகுதூரத்தில் உள்ள பள்ளியில் படிக்க வைக்கிறார். வெள்ளையரை எதிர்க்கும் எவரையும்பிடிக்காத தாத்தா, தன் பேரனுக்கும் அந்தக் கருத்தை மடைமாற்றுகிறார். இதனால் காந்தியைப் பிடிக்காத பேரன், குற்றாலம் வரும் காந்திக்கு கருப்புக் கொடிக்காட்டச் செல்கிறான். அந்த இடைபட்ட காலத்தில் சாதி குறித்தும் தீண்டாமை குறித்தும் அவன் அறிந்துகொள்வதும். வெள்ளைக்காரர்கள் குளிக்கும் அருவியில் இவர்கள் ஏன் குளிக்க முடியவில்லை.... தண்ணீரை ஒருவர் தொட்டால் எப்படி தீட்டாகும் என பேரனின் மனதில் எழும் கேள்விகளும் அதற்கான பதில்களுமே நாவலின் மையம். இந்த நாவல் சிறார் இலக்கியத்தில் பெரும் பாய்ச்சல். அதுவரை இம்மாதிரியான கருப்பொருளை எடுத்து எழுதுவதில் பலருக்கும் தயக்கம் இருந்தது. அதை உடைத்தது ரேவதியின் மாபெரும் வெற்றி என்றே சொல்ல்லாம். இந்நாவல் 9 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு பரவலான கவனத்திற்குள்ளானது. (இந்த நாவல் இப்போது அச்சில் இல்லாதது பெரும்சோகம்) இதுமட்டுமல்ல, திருச்செந்தூர் அருகில் உள்ள ஊரில் நடந்த கதையை ‘சிறைமீட்ட செல்வன்’ எனும் நாவலாக எழுதினார். இந்து –இஸ்லாமிய ஒற்றுமை குறித்த கதையாக ‘ராம்-ரசாக்’ அமைந்தது. இதுபோல இன்னும் சில கதைகளைப் பட்டியலிடலாம். அறிவியல் தகவல்களைச் சுவையான கதைகளாக மாற்றும் பாணியையும் ரேவதி கடைபிடித்தார். மின்கல மாதவன் போன்ற நூல்களை உதாரணமாகச் சொல்லலாம். இப்படி 90க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார் ரேவதி. கனமான கதை மையம், ஆனால், அதை நம்மைச் சுற்றியுள்ளவர்களை கதாபாத்திரங்களாக்கி, எளிமையான மொழிநடையில் படிக்கையில் புதியதோர் அனுபவத்தைத் தருவதே ரேவதியின் எழுத்து பாணியாக இருந்தது. மின்சார வாரியத்தில் பணிபுரிந்தவர், பின்னாளில் கோகுலம், தினமணி, பூந்தளிர் உள்ளிட்ட சிறார் இதழ்களில் பெரும் பங்களித்தவர். அவ்விதழ்களுக்கு வரும் குழந்தைகளின் படைப்புகளைத் திருத்துவதை மனதிற்கு நெருக்கமான பணியாகக் கருதினார். அதை இவர் திருத்தினாலும் இவர் பாணிக்கு அக்கதையை மாற்றாமல் குழந்தைகளின் மொழிநடையிலேயே இருக்கும்படி செய்வதையே விரும்பியவர். குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்புகளிலு, குழந்தைகளை ஈர்க்கும் கதை சொல்லியாகவும், தேர்ந்த இதழாளராகவும் பன்முகங்களில் இயங்கியவர் ரேவதி. குறிப்பாக, சமூகம் சார்ந்த கதை மையங்களை குழந்தைகளிடமும் பேச வேண்டும் என்று அவர் துணிச்சலோடு முன்னெடுத்த முயற்சிகள்தாம் இன்றைய சிறார் இலக்கிய வெளிக்கு பெரும் முன்னுதாரணமாகத் திகழ்கின்றன. பலருக்கும் அப்படைப்புகளே நல்ல வழிகாட்டியாக விளங்கி வருகின்றன. சிறார் இலக்கியத்தில் ஆகச் சிறந்த படைப்புகளைத் தந்த ரேவதி மே 09 இரவு மரணம் அடைந்தார். இது சிறார் இலக்கியத்திற்கு மாபெரும் இழப்பு. ’கொடிகாட்ட வந்தவன்’ நூல் வேண்டும் என ஒருமுறை அவரிடம் தொலைப்பேசியில் கேட்டபோது, ‘தன்னிடமும் அந்தப் பிரதி இல்லை. உங்களுக்கு கிடைத்தால் எனக்கும் கொடுங்கள்’ என்றார். அந்த நூலுக்கு மட்டும் அல்ல, அவரின் முக்கிய நூல்கள் தற்போது வாசிக்கக் கிடைக்க வில்லை. அதை மறுவெளியீடு கொண்டுவருவதும் அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலிகளில் ஒன்றாக இருக்கும். நன்றி: தமிழ் இந்து

  • Adolescence web series - 2

    காவலர்கள் ஜெமியைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். காவல் நிலையம் எங்குள்ளது என்ற விவரத்தை ஜெமியின் பெற்றோரிடம் சொல்லி அங்கு வரச் சொல்கிறார்கள். செல்லும் வழியெங்கும் ஜெமி, "நான் எதுவும் செய்யவில்லை!" என்று சொல்லிக் கொண்டே இருக்கிறான். குரலில் பயமும் நடுக்கமும். கண்ணீர் வழிந்து கொண்டே இருக்கிறது. பதிமூன்று வயதுக் குழந்தை. வளரிளம் பருவத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறான். உடலிலும் உள்ளத்திலும் பட்டாம்பூச்சி பறக்கும் மாற்றங்கள். வண்ணமயமான எண்ணங்களின் காலம். நண்பர்களோடு பேசிச் சிரித்த எல்லாமே உண்மை என்று நம்பும் பருவம். சிரமமே இல்லாமல் எல்லாமும் எதிரே வரும் என்ற கானல் நம்பிக்கையின் பருவம். இது கனவிலும் எதிர்பாராத பேரதிர்ச்சி. ஜெமி மட்டுமல்ல எந்த வயதினர் ஆனாலும் தவறு செய்து சிக்கிக் கொண்டால் அழுது புலம்புகிறோம். நாம் செய்யும் போதே தவறு என்று தெரியும். என்ன தண்டனை என்றும் தெரியும். குழந்தைகளுக்கு இது தெரியாது. எது தவறு? தவறு செய்தால் பிறரையும் நம்மையும் எவ்வாறு பாதிக்கும்? என்ன தண்டனை? என்பவை குறித்துக் குழந்தைகள் எங்கு தெரிந்து கொள்வார்கள்? இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று எங்கும் கட்டளைகள். கட்டளைகளைப் பெரியவர்களே விரும்புவதில்லை. குழந்தைகளும் விரும்புவதில்லை என்பது நமக்கும் தெரியும். குழந்தைகளை எவ்வாறு வார்ப்பது என்பது பற்றி முழுமையாக நமக்குத் தெரியாது என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம். நாம் வளர்ந்த மாதிரியே நம் பிள்ளைகளை வளர்க்கிறோம். குழந்தைகள் கேள்விகளை எழுப்பும் போது செய்வதறியாது திகைக்கிறோம். ஜெமியின் அப்பாவும் தவிக்கிறார். அம்மாவும் அக்காவும் அழுகிறார்கள். எங்கள் பையன் நல்வவன். தவறு செய்யவே மாட்டான். ஏதோ தவறுதலாக காவலர்கள் ஜெமியைக் கைது செய்திருக்கிறார்கள் என்று அவன் பெற்றோர் நம்புகிறார்கள். ஜெமியின் அப்பா அவனிடம் தனியே கேட்ட போதும் ' தவறு எதுவுமே செய்யவில்லை' என்று ஜெமி கூறுகிறான். அப்பா அவனை முழுமையாக நம்புகிறார். காவல்நிலையத்திற்கு ஜெமியை அழைத்துச் செல்லும் வாகனத்தில் காவல் அலுவலருடன் சமூக சேவகர் ஒருவரும் இருக்கிறார். "ஜெமி, பதட்டப்படாதே. காவல் நிலையத்தில் விசாரிக்கும் போது நன்றாகத் தெரிந்த பதிலைச் சொல்லு. குழப்பமாக இருந்தால் No comments என்று சொல். உன்னுடன் வக்கீல் ஒருவர் இருக்கலாம். உனக்கு நம்பிக்கையான மூத்தவர் ஒருவரும் இருக்கலாம்." என்று காவல் அலுவலர் சொல்கிறார். காவல் நிலைய நடைமுறைகள் முடிந்து ஜெமியை ஓர் அறையில் இருக்க வைக்கிறார்கள். ஜெமியின் பெற்றோர் வேறு அறையில் இருக்கிறார்கள். காவல் நிலைய நடைமுறைகறையும் விசாரணை முறைகளையும் தனியே எழுதலாம். குழந்தை உரிமைகளை மீறிவிடாமல் கவனமாக அனைத்தும் நடைபெறுவது காவல்துறையினருக்குப் பாடம். ஜெமியின் அப்பாவுக்குத் தெரிந்த வழக்கறிஞர் யாரும் இல்லை என்பதால் அரசின் சார்பாக ஒருவரை வரவழைக்கிறார்கள். நம்பிக்கையான மூத்தவராக என் அப்பா என்னுடனேயே இருக்க வேண்டும் என்று ஜெமி கூறுகிறான். விசாரணை அறை. ஜெமி, அப்பா, வழக்கறிஞர் மூவரும் அமர்ந்திருக்கிறார்கள். எதிரே ஜெமியைக் கைது செய்த இரண்டு காவல் அதிகாரிகள். இந்த விசரணை முழுவதும் ஒலி ஒளி வடிவங்களில் பதிவு செய்யப்படும் என்று சொன்ன பிறகு விசாரணையைத் தொடங்குகிறார்கள். ஜெமி, நன்கு படிப்பவன். திறமையானவன். அவனுக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளப் பக்கம் இருக்கிறது. அதிலிருந்து எடுக்கப்பட்ட படப்பதிவுகளைக் காட்டி விசாரிக்கிறார்கள். ஜெமி நிதானமாகப் பதில் சொல்கிறான். சிக்கலான கேள்விகளுக்கு கவனமாக No comments சொல்கிறான். ஜெமி தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான விளம்பரப் பெண்களின் படங்களைப் பகிர்ந்திருக்கிறான். அவனது பாலுணர்வு பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொல்கிறான். அவனுக்கு நெருக்கமான நண்பர்கள் இரண்டு பேர். ஒன்றாகப் பள்ளியில் படிப்பவர்கள். மூவரும்தான் எப்போதும் ஒன்றாக இருப்பார்கள். மூன்று பேர் மட்டுமே நட்பாக இருக்கும் மும்முனை நட்பு சிக்கலானது என்று உளவியலில் கூறுகிறார்கள். சமத்துவம் இல்லாத மும்முனை நட்பு ஏராளமான நடத்தைச் சிக்கல்களை உருவாக்குகிறது. ஒரு சிறுமியின் படத்தைக் காட்டுகிறார்கள். இவள் பெயர் கேட்டி. உனக்குத் தெரியுமா என்று கேட்கிறார்கள். தெரியும், என் வகுப்பில் படிக்கிறாள் என்று ஜெமி சொல்கிறான். இவளைத்தான் நேற்று இரவு வாகன நிறுத்துமிடம் ஒன்றில் கொலை செய்திருக்கிறார்கள். உடலில் பல இடங்களில் கத்திக்குத்து. கடுமையான காயங்களால் அங்கேயே இறந்துவிட்டாள். இதைப் பற்றி உனக்குத் தெரியுமா என்று கேட்கிறார்கள். எதுவும் தெரியாது என்று ஜெமி கூறுகிறான். நேற்று இரவு வெளியே சென்றாயா என்று கேட்கிறார்கள். ஆம் என்று ஜெமி கூறுகிறான். நண்பர்களோடு வெளியே சென்று விட்டு நெடுநேரம் கழித்துதான் வீட்டுக்கு வந்திருக்கிறான். ஒரு காலணியின் படத்தைக் காட்டி அது அவனுடையது என்பதை உறுதி செய்கிறார்கள். CCTV பதிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட படங்களைக் காட்டுகிறார்கள். கேட்டி சென்ற வழியில் சிறிது நேரம் கழித்து ஜெமி சென்றிருக்கிறான். அவனுடைய உடைகளும் உருவமும் காலணிகளும் அது அவன் தான் என்று உறுதி செய்கின்றன. இறுதியாக இந்தக் காணொலியைப் பாருங்கள் என்று காவலர்கள் CCTV காட்சியைக் காட்டுகிறார்கள். ஜெமியின் முகம் இறுகுகிறது. அழத் தொடங்குகிறான். புதிர்கள் தொடரும்...

  • சடைக்கணவாய்க்கு எத்தனை கால்?

    ஆக்டோபஸ் (Octopus) என்ற கடல் உயிரியை அனைவரும் அறிந்திருப்போம். தமிழில் இது சடைக்கணவாய் அல்லது பேய்க்கணவாய் என்று அழைக்கப்படுகிறது. பேய்க்கணவாய் என்றதும் பயந்துவிடவேண்டாம். இதன் உடல் நிறமும் எட்டு உறுப்புகளும் கொஞ்சம் விநோதமாக இருப்பதால் இந்தப் பெயரை வைத்துவிட்டார்கள். தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிகளில் இது கடமா என்றும் அழைக்கப்படுகிறது. "பேய்க்கணவாய்க்கு எட்டு கால் இருக்கும்" என்பதை நாம் பல இடங்களில் படித்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம். அட, இவ்வளவு ஏன்? "ஆக்டோபஸ்" என்ற ஆங்கிலச்சொல்லுக்கே "எட்டுக்கால்கள் கொண்ட உயிரி" என்றுதான் பொருள். ஆனால் உண்மையில் சடைக்கணவாய்க்கு எட்டு கால்கள் கிடையாது. என்ன விளையாடுகிறீர்களா என்று கேட்கத் தோன்றுகிறதா? குழப்பம் வருகிறதா? மீண்டும் ஒருமுறை சடைக்கணவாயின் படத்தைப் பார்த்து எத்தனை கால்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்களா? எட்டுதானே இருக்கு என்று யோசிக்கிறீர்களா? எட்டு என்பது சரிதான், ஆனால் அவை கால்கள் அல்ல. கைகள்.தலை சுற்றுகிறதா? கொஞ்சம் விளக்கமாகப் பேசலாம். கைகளின் செயல்பாடுகள் என்ன? பொருட்களைப் பற்றிக்கொள்வது, தொட்டுப் பார்ப்பது. கால்களின் வேலை என்பது நம் உடலை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்வது. இங்கே விலங்குகளைப் பொறுத்தவரை "நடப்பது" என்று சொல்லிவிட முடியாது, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போவது என்றுதான் சொல்லமுடியும். ஏனென்றால், கங்காரு, தவளை போன்ற பல உயிரிகள் நடப்பதே இல்லை. ஆனாலு இவை இடம் பெயர்கின்றன. அவற்றின் கால்கள் குதிப்பது, தாவுவது போன்ற செயல்பாடுகளின்மூலம் அவற்றை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்கின்றன. ஆகவே கால்களின் வேலை அதுதான் - நாம் இடம்பெயர் உதவுவது. எது பற்றிக்கொள்ள, தொட்டுப் பார்க்க உதவுகிறதோ அது கை. இடம் பெயர எது உதவுகிறதோ அது கால். இதுதான் பொது வரையறை. இப்போது நாம் சடைக்கணவாய்க்கு வருவோம். சடைக்கணவாயின் தலையில் இருந்து தொங்கும் எட்டு உறுப்புகள் கைகளைப் போலத்தான் பயன்படுத்தப்படுகின்றன. இரை விலங்குகளைப் பிடிப்பது, சுற்றியுள்ளவற்றைத் தொட்டுப் பார்ப்பது, கைகளின் நுனியில் இருக்கும் உணர்வு செல்கள் மூலமாக வேதிப்பொருட்களைத் தெரிந்துகொள்வது, பாறைகளை உருட்டுவது போன்றவற்றையெல்லாம் செய்வதற்குக் கணவாய்கள் கைகளைப் பயன்படுத்துகின்றன. சரி, பேய்க்கணவாய் நீந்தும்போது என்ன ஆகும்? பேய்க்கணவாய்கள் அந்த எட்டு உறுப்புகளை வைத்து நீந்துவதில்லை. உடலில் இருந்து தண்ணீரை வெளியேற்றி அதன்மூலம் கிடைக்கும் உந்துவிசையால் நீந்துகின்றன. இதை Jet propulsion என்பார்கள். சரி, பேய்க்கணவாய் தரையில் ஊர்ந்து செல்வதைப் பார்த்திருக்கிறோமே, அது நடப்பதுபோலத்தானே? சில நேரம் மிக அரிதாக இவை கடலின் தரைப்பகுதியில் ஊர்ந்து செல்கின்றன, ஆனால் அதை மட்டுமே வைத்து இந்த எட்டு உறுப்புகளும் நகர்வதற்கு உதவுகின்றன என்று சொல்லிவிட முடியாது. பெரும்பாலான நேரம் இந்த எட்டு உறுப்புகளும் என்ன செய்கின்றன என்பதைத்தான் பார்க்கவேண்டும். ஆகவே இந்த எட்டு உறுப்புகளும் கைகளைப் போலவே செயல்படுவதால் இவற்றைக் "கைகள்" என்றே சொல்லவேண்டும். இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் சொல்லட்டுமா? ஒரு சில கணவாய் விஞ்ஞானிகள், "இந்த எட்டு கைகளில் இரண்டு கைகள் மட்டும் கால்களைப் போல சில நேரம் பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே அவற்றைக் கால்கள் என்று சொல்லலாம்" என்று சொல்லி வருகிறார்கள். மற்ற விஞ்ஞானிகள் இதை ஏற்கவில்லை. இவர்களும் தொடர்ந்து விவாதம் செய்துகொண்டிருக்கிறார்கள். இதற்கான சரியான ஆதாரங்கள் கிடைக்கும்வரை இவற்றைக் கைகள் என்றே சொல்லலாம். இனிமேல், சரியாக சொல்வீர்கள்தானே, எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம். "சடைக்கணவாய்க்கு எட்டு கைகள், இவற்றுக்கு இருப்பதை கால் என்று சொல்லமுடியாது". அதுசரி, அதென்ன எட்டு? ஏன் இவற்றுக்கு ஆறு கால்களோ ஏழு கால்களோ ஒன்பது கால்களோ இல்லை? என்ன காரணமாக இருக்கும்? யோசித்து பதில் அனுப்புகிறீர்களா? காரணம் கண்டுபிடிக்க முடியாவிட்டால் பரவாயில்லை. விரைவில் நானே

  • ஆரம்பக் கல்வி படக்கதைகள்

    தற்போதைய பாடப்புத்தகங்கள், அதிலும் ஆரம்பக்கல்வி பாடப்புத்தகங்கள் வண்ணப்படங்களால் உருவாக்கப்பட்டிருப்பதை அறிவோம். இலக்கியத்தில் காட்சிப்படுத்துதல் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஓவியங்களை நவீன சிறார் இலக்கியத்தின் ஒரு பகுதியாக நாம் பார்ப்பதுபோல், பாடப்புத்தகங்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஓவியங்களே பாடத்தின் பெரும்பகுதியாக ஆக்கப்பட்டுள்ளன. நவீன மொழிக்கற்றலின் முக்கிய அம்சமாக கதைகளே உலகம் முழுவதும் முன்னிறுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசின் ஆரம்பக் கல்வி பாடப்புத்தகத்திலும் கதை மிகுதியாக ஆக்கப்பட்டதுடன் படக்கதைகளுக்கு முதன்மை இடம் வழங்கப்பட்டுள்ளது. பாடங்களும், ஓவியங்களும்/படங்களும் என பாடப்புத்தகம் காட்சிப்படுத்தலின் வடிவமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஓவியங்கள், இலக்கியமாகவும் இலக்கியத்தின் பகுதியாகவும் எப்பொழுதும் செயல்பட்டுவருகின்றன. ஓவியங்களுடன் எழுத்தும் இணைந்து புத்தகங்களில் அடுத்தடுத்த நிலைக்கு பயணிக்கின்றன. மொழியினைப் பயிற்றுவிக்கவும் புத்தகத்தின் மீது ஈடுபாட்டை ஏற்படுத்தவும் வண்ண ஓவியங்களும் படங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. ஓவியங்களும் படங்களும் ஒரு பொருளாக, மனிதராக, உறவாக, காட்சியாக... என விதம்விதமாக புத்தகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வரிசையில் ஓவியங்களும் படங்களும் நிறைந்த புத்தகத்தைக் குழந்தைகள் ஆர்வத்துடன் கையில் எடுப்பார்கள். புத்தகத்துடன் தனியாக நேரத்தை செலவிடுவார்கள். ஒரு குழந்தையும் மற்றொரு குழந்தையும் சேர்ந்து அமர்ந்து மகிழ்ச்சியோடு பேசிக்கொள்வதைப் பார்க்கலாம். இவ்வரிசையில்தான் புத்தகத்தில் பார்த்த காட்சிகளைக் கதையாக விவரிக்கின்றனர். மொழிக் கற்றலில் ஓவியங்களில் உள்ள படங்களைப் கவனித்து பார்ப்பார்கள். பார்த்த படங்களை நிஜ வாழ்க்கையோடு ஒப்பிடுவார்கள், படங்களைப் பற்றி பேசுவார்கள் / படங்களை வார்த்தையாக மாற்றுவார்கள் / படங்களைப் பார்த்து வரைவார்கள். கவனித்தல், பேசுதல், படித்தல், எழுதுதல் என்ற மிக முக்கியமான மொழித்திறன்களை வளர்த்தெடுப்பதில் படங்களின் பயன்பாடு முக்கியமாக உள்ளது. இதனால் ஆரம்பக்கல்வியில் அதிலும் மொழிப்பாடங்களான தமிழ், ஆங்கிலத்தில் எழுத்தைவிட அதிகமாகப் படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாடப்புத்தகங்களில் ஓவியங்களும், படங்களும், செயற்படங்களும், காட்சிப்படங்களும், கதைப்படங்களும், படக்கதைகளும் என ஓவியங்களால் நிறைந்துள்ளதைப் பார்க்கலாம். படக்கதைகளை மாணவர்களின் மொழி நிலை, வகுப்பிற்கு ஏற்ப எடுத்துச்செல்லப்பட்டுள்ளன. படத்தைக் கொண்டு கதை உருவாக்குதல்: படத்தைப் பார்த்து ஒரு பொருளின் பெயரைச் சொல்வது, படத்தைப் பார்த்து ஒரு செயலைப் பற்றி சொல்வது, படத்தைப் பார்த்து அதிலுள்ள நிகழ்வுகளை, அனுபவங்களைச் சொல்வது என்கிற வகையில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுடனான பேசுதல் மற்றும் உரையாடலை இலக்கியத்திற்கு இணையாக ஆக்க முடியும். அவ்வகையில் வார்த்தைகள் அற்ற படக்கதைகளை வழங்கி, அவர்களையே கதை சொல்லச் சொல்லிக் கேட்கும்பொழுது குழந்தைகளிடமிருந்து விதம்விதமான கதைகளைப் பெற முடிகிறது. கீழ்க்கண்ட படம் ஒரு கதையை மையப்படுத்தியது. ஆனால் பல்வேறு கதைகளின் உருவாக்கத்திற்கு இது உதவுகிறது. தன் கற்பனை, அனுபவத்தை இணைத்து மகிழவும் உருவாக்கவும் குழந்தைக்கு இது உதவுகிறது. கதைத் தலைப்புடன் படங்களைக் கொடுத்துக் கதையை ஒரு தலைப்பிலிருந்து யோசிக்க வைக்கலாம். படத்தைக் கொடுத்துக் கதை உருவாக்க ஆல்லது சொல்ல வைப்பதை முதல் இரண்டு வகுப்புகளிலும் சிறு வாக்கியமாக எழுதுவதை மூன்றாம் வகுப்பிலிருந்தும் பார்க்கலாம். படத்தைக் கொண்டு கதை உருவாக்குதல்: படத்தைப் பார்த்து ஒரு பொருளின் பெயரைச் சொல்வது, படத்தைப் பார்த்து ஒரு செயலைப் பற்றி சொல்வது, படத்தைப் பார்த்து அதிலுள்ள நிகழ்வுகளை, அனுபவங்களைச் சொல்வது என்கிற வகையில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுடனான பேசுதல் மற்றும் உரையாடலை இலக்கியத்திற்கு இணையாக ஆக்க முடியும். அவ்வகையில் வார்த்தைகள் அற்ற படக்கதைகளை வழங்கி, அவர்களையே கதை சொல்லச் சொல்லிக் கேட்கும்பொழுது குழந்தைகளிடமிருந்து விதம்விதமான கதைகளைப் பெற முடிகிறது. கீழ்க்கண்ட படம் ஒரு கதையை மையப்படுத்தியது. ஆனால் பல்வேறு கதைகளின் உருவாக்கத்திற்கு இது உதவுகிறது. தன் கற்பனை, அனுபவத்தை இணைத்து மகிழவும் உருவாக்கவும் குழந்தைக்கு இது உதவுகிறது. கதைத் தலைப்புடன் படங்களைக் கொடுத்துக் கதையை ஒரு தலைப்பிலிருந்து யோசிக்க வைக்கலாம். படத்தைக் கொடுத்துக் கதை உருவாக்க ஆல்லது சொல்ல வைப்பதை முதல் இரண்டு வகுப்புகளிலும் சிறு வாக்கியமாக எழுதுவதை மூன்றாம் வகுப்பிலிருந்தும் பார்க்கலாம். படக்கதை வாசித்தல்: படங்கள் கதையாக இருக்கும். கதையை வழிநடத்தும். சிறு வார்த்தைகளும் வாக்கியங்களும் படத்தின் உதவியோடு கதை வாசிப்பிற்குள் அழைத்துச்செல்ல உதவும். படத்தின் உதவியோடு வார்த்தைகளை மாணவர்கள் படிப்பார்கள். ஆசிரியர் வாசித்ததை மனதில் வைத்து படிப்பார்கள். வார்த்தையைக் காட்டி, ஆனால் அதில் இல்லாத ஒன்றை உச்சரிப்பார்கள். ஆர்வமும் பழக்கமும் கூடக்கூட வாசிப்பு நிலைக்கு படக்கதை அழைத்துச்செல்லும். நான்காம், ஐந்தாம் வகுப்புகளில் படக்கதைகள்: நான்காம், ஐந்தாம் வகுப்புகளிலும் படக்கதைகள் உள்ளன. பெரிய வாக்கியங்கள் அதிக பக்கங்கள், கனமான பாடப்பொருள்கள் என அடுத்தநிலைக்கு அவை நகர்ந்துள்ளன. ஆனாலும் வாசிப்பு என்பது மாணவர்களிடம் கவனமாக எடுத்துச்செல்லப்படும் ஒரு நிகழ்வு. படிப்படியாக மாணவர்களுக்கு உதவவேண்டிய ஒன்று. அதற்கான திட்டங்களில் படக்கதையின் பங்களிப்பை முக்கியமானதாகப் பார்க்கிறேன். படக்கதைகள் கவனிக்கப்பட வேண்டியவை: ஒவ்வொரு வகுப்பிலும் பாடமாக நான்கு படக்கதைகள்வரை இடம்பெற்றுள்ளன. அதோடு பயிற்சியிலும் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. கதைகள், அதிலும் படமே கதையாக வருவது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதேவேளை பாடமாக, பாடத்தின் கருப்பொருளை மையப்படுத்தியதாக வரும்பொழுது இலக்கியத்தின் தன்மை குறைந்து காணப்படுகிறது. வலிந்து மேற்கொள்ளும் போதனையாகிறது. அதோடு இதன் மொழி சார்ந்து இன்னும் பேசப்பட வேண்டியுள்ளது. ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்குக் கற்றலில் பெரும் சிரமத்தை பாடப்புத்தகத் தமிழ் ஏற்படுத்துகிறது என்பதை மொழிப்பாட வடிவமைப்பு சார்ந்து பலர் வலியுறுத்திவருகின்றனர். குழந்தைகளுக்கு புரியும்படியான மொழி, புழக்கத்திலுள்ள மொழி, அவர்களின் அனுபவத்தோடு இணைந்த மொழி ஆகியவை பாடப்புத்தகத்தையும் பாடங்களையும் வகுப்பறையையும் சென்றடைய கதை சார்ந்த மொழி பேருதவியாக இருக்கும். அது முழுமையாக நடைமுறைக்கு வரவேண்டிய அவசியத்தை நாம் திரும்பத்திரும்ப பேச வேண்டியுள்ளது.

  • லண்டனிலிருந்து அன்புடன் -3

    உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பள்ளி ஆண்டு விழா என்றால் குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். விதவிதமான விளக்குகள், வண்ணமயமான ஆடைகள், ஆடல், பாடல், நடனம், நாடகம் என எவ்வளவு அழகாக இருக்கும். “மேடை நாடகம்” என்பதை நாம் எல்லோருமே ஆண்டு விழாவில்தானே பார்த்திருப்போம். ஆனால் பாருங்கள்! லண்டனிலுள்ள பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் நடப்பதில்லை.  ஆண்டுவிழாக்கள் இல்லாதது பெரிய வருத்தம்தான். இருந்தாலும் குழந்தைகள் நடிக்கும் நாடகத்திற்கென தனியே நிகழ்வுகள் பள்ளிகளில் நடக்கும். நாடகத்தினைக் காணப்பெற்றோர்கள் அழைக்கப்படுவார்கள். ஆரம்ப நிலை வகுப்பு மாணவர்கள் என்றால், சுமார் 15 நிமிட அளவில் அந்த நாடகம் அமையும். அதுவே உயர் வகுப்புகள் என்றால், 1.30 மணி நேர அளவில் நாடகம் நடக்கும். இந்த நாடகங்களில் உள்ள சுவாரஸ்யமான விசயம் என்ன தெரியுமா? ஒரு புத்தகத்தை எடுத்து, அதை வகுப்பில் வாசித்து, அது குறித்துப் பேசி, நாடகத்திற்குத் தேவையான அலங்காரங்களை வகுப்பில் உருவாக்கி, அதன் பிறகு நாடகமாக மாற்றுவார்கள். கிட்டத்தட்ட மூன்று மாத காலம் அவர்கள் எடுத்து கொள்வார்கள்.  அப்படிப் பெற்றோராக நான் பார்த்த நாடகம் மூலம் அறிமுகமான புத்தகம் தான் “Handa’s Surprise”. ஹான்டா எனும் சிறுமி, தனது தோழியான அகேயோவைச் சந்திக்கப் பக்கத்துக் கிராமத்திற்குச் செல்கிறாள். தனது தோழிக்கு இன்ப அதிர்ச்சி தர அவள் ஆசைப்படுகிறாள். அகேயாவிற்கு பழங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று எண்ணி ஏழு விதமான பழங்களைக் கூடையில் வைத்து எடுத்துச் செல்கிறாள்.  “நான் தரப் போகும் இந்தப் பரிசு அகேயாவிற்கு கட்டாயம் இன்ப அதிர்ச்சியாக இருக்கும்” என்று அவள் எண்ணிக்கொண்டே செல்கிறாள். கூடையைத் தலையில் வைத்துச் செல்லும் வழியில், குரங்கு ஒன்று வருகிறது, அது கூடையிலுள்ள வாழைப்பழத்தை எடுத்துச் சென்று விடுகிறது. அடுத்து வான் கோழி வருகிறது, கொய்யாப் பழத்தை எடுத்துச் சென்றுவிடுகிறது. இப்படியாக வரிக்குதிரை, யானை, ஒட்டகச்சிவிங்கி, மான், கிளி என அடுத்தடுத்து வரும்  விலங்குகள் ஒவ்வொன்றாகப் பழங்களை எடுத்துச் சென்று விடுகின்றன. ஹான்டா, தனது தோழி மகிழ்ச்சி அடையப் போகிறாள் என்பதைக் கற்பனைச் செய்து கொண்டே இருந்ததால், பழங்கள் காணாமல் போனதை அவள் அறியவில்லை. வெறும் கூடையை அவள் தலையில் வைத்துச் சென்று கொண்டிருந்தாள். அப்பொழுது, அங்கு ஒரு ஆடு ஓடி வந்துகொண்டிருந்தது. அது வேகமாக வந்து, ஒரு ஆரஞ்சு பழ மரத்தை மோதியது. அந்த ஆரஞ்சு மரத்தைத் தான் ஹான்டா கடந்துகொண்டிருந்தாள். மரத்திலிருந்து விழுந்த ஆரஞ்சு பழங்கள் எல்லாம் ஹான்டாவின் கூடையில் விழுந்தன. இந்தக் கதை எதுவும் அறியாத ஹான்டா, அகேயாவைக் கண்டதும், “உனக்கு நான் ஒரு surprise வைத்திருக்கிறேன்” என்று சொல்லி கூடையைக் கீழே வைக்கிறாள். “ஓ! ஆரஞ்சு பழங்கள்…எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த ஆரஞ்சு பழங்கள். இது எனக்கு உண்மையில் இன்ப அதிர்ச்சி தான் ஹான்டா” என அகேயா மகிழ்ச்சியில் குதிக்கிறாள்.  “நாம் வேறு பழங்கள் அல்லவா கொண்டு வந்தோம், கூடையில் ஆரஞ்சு பழங்கள் எப்படி வந்தன” என ஹான்டா அதிர்ச்சி அடைகிறாள். என்று கதை முடிகிறது. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் & ஓவியர் “Eileen Browne”. இவர் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்தக் கதை ஆப்பிரிக்க நிலத்தில் நடப்பதாக அவர் வரைந்திருப்பார். புத்தகத்தின் அட்டைப்படமும் சரி, அதன் உள் ஓவியங்களும் சரி, பார்த்ததுமே அனைவருக்கும் பிடித்துவிடும். இங்கிலாந்தில் பல்வேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் வாழ்கின்றனர் என்று நான் ஏற்கனவே உங்களிடம் கூறியிருந்தேன். அதனால், பல்வேறு நாடுகள் குறித்தும், அங்குள்ள மக்களின் வாழ்க்கை குறித்தும் அறிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்த வரிசையில் “Handa’s Surprise” புத்தகம் மிக முக்கியமான புத்தகமாகக் கருதப்படுகிறது. இந்தப் புத்தகம் 1994 ஆம் ஆண்டு வெளியானது. 30 வருடங்கள் கடந்து இன்றும் இந்தப் புத்தகம் கொண்டாடப்பட்டு வருகிறது.

  • புத்தகப்புழுவிடம் நீங்களும் கேட்கலாம்! - அமிதா

    இப்பவும் ஏப்ஸ் குரங்கு, சிம்பன்சி குரங்கு இருக்குது. ஆனா, அவை ஏன் மனிதனாக மாறவில்லை? ஜெ. அ. ஆண்டிரியா ஜோஸ் வணக்கம் ஆண்டிரியா ஜோஸ். நான் புத்தகப் புழு பேசுறேன். நீங்க கேட்டிருக்கும் கேள்வி எல்லாருக்கும் திரும்பத்திரும்ப எழக்கூடிய கேள்விதான். நாம வாலில்லா குரங்கிலிருந்து (Apes) வந்தோம்னா, இப்பவும் ஏன் அந்தக் குரங்குங்க இருக்குது? இது பார்க்க சிக்கலான கேள்வியா தோன்றினாலும்கூட, பரிணாமவியல் தந்தை சார்லஸ் டார்வின் தொடங்கி, பலரும் இது போன்ற விஷயங்களுக்கு திட்டவட்டமான பதிலைத் தந்திருக்காங்க. முதல்ல நாம கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் பலரும் நம்புறது மாதிரி, நாம குரங்கிலிருந்து பிறக்கவில்லை. நம்முடைய மூதாதை குரங்கு கிடையாது. பரிணாமவியலில் நமக்கும் வாலில்லா குரங்குகளுக்கும் ஒரு பொது மூதாதை (common ancestor) இருந்தது. இந்தப் பொது மூதாதை வாழ்ந்த காலம் 60-80 லட்சம் ஆண்டுகளுக்கு முன். பொது மூதாதையிலிருந்து வந்த சிம்பன்சி, கொரில்லா, போனபோ, ஒராங்ஊத்தன் ஆகியவை பெரிய வாலில்லா குரங்குகள். இவை தனியாகவும், நாம் தனியாகவும் பரிணாம வளர்ச்சி பெற்றோம். எனவே, நாமும் அவையும் நேரடி உறவினர்கள் இல்லை. தூரத்து உறவினர்கள்தான். ஓர் எடுத்துக்காட்டு மூலம் இதை இன்னும் எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். ஒரு ஊரில் மனிதர்கள் எல்லாரும் உள்ளூர் ரயிலில் ஏறுகிறார்கள். ஒருவர் முதல் இறக்கத்தில் இறங்குகிறார், ஒருவர் நடு இறக்கத்தில் இறங்குகிறார், ஒருவர் கடைசி இறக்கத்தில் இறங்குகிறார். ஆனால், எல்லாரும் ஒரே ஊரில்தானே வாழ்கிறார்கள். அதுபோல் பரிணாம வளர்ச்சியில் வாலில்லா குரங்குகள் நடு இறக்கத்தில் இறங்கிவிட்டன. நாம் கடைசி இறக்கத்தில் இறங்கியிருக்கிறோம். பொது மூதாதையிலிருந்து பிறந்த மனித இனத்தில் இதுவரை புவியில் 21 மனித சிற்றினங்கள் வாழ்ந்துள்ளன. அவற்றில் 9 இனங்கள் இருந்ததற்கு திட்டவட்டமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதில் கடைசியாகத் தோன்றிய ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் நவீன மனித இனமான நாம் மட்டுமே எஞ்சியுள்ளோம். தகவமைத்துக்கொள்ள முடியாத மற்ற மனித சிற்றினங்கள் அழிந்துவிட்டன. நமக்கும் வாலில்லா குரங்குகளும் பொது மூதாதையிலிருந்து பிறந்திருந்தாலும், ஏன் இரண்டும் ஒரே மாதிரி இல்லை. இரண்டும் வேறுவேறு சுற்றுச்சூழலில் வாழ்வதற்கான தகவமைப்பைப் பெற்றதால் உருவானவை. அவற்றுக்கும் நமக்கும் மரபணுரீதியில் தொடர்பு இருந்தாலும், இன்னும் நெருங்கிப் பார்த்தால் வேறுபாடுகளும் புரியும். காடுகளில் உள்ள மரங்களில் ஏறுவது, வேகமாக செயல்படுவது வாலில்லா குரங்குகளின் குறிப்பிடத்தக்க தகவமைப்பு. அதேநேரம் மனித இனமோ இரண்டு கால்களில் நடக்கக்கூடிய, அதாவது தரையில் வாழக்கூடிய தகவமைப்பைப் பெற்றது. நமக்கும் அவற்றுக்கும் இதுபோல் நிறைய வேறுபாடுகள் உண்டு. பரிணாமப் பாதையில் நம் இரண்டுக்கும் பொதுவான அம்சம் இருந்தாலும்கூட, பல லட்சம் ஆண்டுகளாகத் தனித்தனியேதான் வாழ்ந்துவருகிறோம். அதனால், அவை அப்படியே வாழ்கின்றன. நாம் மனிதர்களாக வாழ்கிறோம். இரண்டும் தனித்தனி இனங்கள் என்பதால், இன்றைய வாலில்லா குரங்குகள் மனிதனாக மாற வேண்டிய அவசியமில்லை. செடிகளுக்கும் கொடிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? கா. மு. நேஹா, 6ஆம் வகுப்பு வணக்கம் நேஹா. உங்களைச் சுற்றியுள்ள இயற்கையின் முக்கிய அங்கமான தாவரங்களைப் பற்றி கேள்வி கேட்க வேண்டுமென நினைத்த உங்களுக்கு வாழ்த்துகள். செடி, கொடிகள் எனப் பொதுவாகக் கூறப்பட்டாலும் தாவரங்கள் அடிப்படையில் ஐந்தாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை மூலிகை/செடி (herbs), புதர்செடி (shrubs), மரங்கள் (trees), ஏறுகொடி (climbers), படர்கொடி (creepers). செடிகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் மூலிகைகள், தண்டுப்பகுதி மரமாக ஆகாத/உயரமாக வளராத புதர்செடிகள் ஆகியவை வரும். அதேபோல் கொடிகளில் உயரமாக பற்றிக்கொண்டு வளரும் ஏறுகொடிகள், தரையில் படர்ந்து வளரும் படர்கொடிகள் ஆகியவை வருகின்றன. செடி, கொடிகளுக்கு இடையிலான பொதுவான வேறுபாடுகளைப் பார்ப்போம். செடிகளின் தண்டுப்பகுதி மென்மையாக, கடினமற்று இருக்கும். மழை, காற்று அதிகம் இருந்தால், இவை சாய்ந்துவிடும். இவை எளிதாக உடைந்துவிடக்கூடியவை. இவை உயரமாக வளர்வதில்லை. தக்காளி, கத்தரிக்காய் போன்ற காய்கள், மல்லிகை, நித்தியகல்யாணி, துளசி உள்ளிட்டவை செடிகளுக்கு எடுத்துக்காட்டு. நடுத்தண்டு மரமாக மாறாத புதர்தாவரங்களும், செடிகளே. மூலிகைகளைவிட இவை உயரமாக வளரும் என்றாலும், மரம் போல அதிக உயரத்துக்கு இவை வளர்வதில்லை. ரோஜா, செம்பருத்தி உள்ளிட்டவை புதர்செடிகள். ஏறுகொடிகள், படர்கொடிகள் போன்றவற்றின் தண்டுகளும் உறுதியாக இருக்காது. எனவே, அவற்றால் நிமிர்ந்து நிற்க முடியாது. ஏறுகொடிகளில் இருக்கும் பற்றுக்கம்பிகளைக் கொண்டு கம்பு, கோல், சுவர் போன்றவற்றில் இந்தக் கொக்கிகளால் பற்றிக்கொண்டு ஏறும். புடலை, பாகல், சுரை, வெள்ளரி போன்றவை ஏறுகொடிகளுக்கு எடுத்துக்காட்டு. படர்கொடிகளால் இதுபோல் உயரமாக ஏறவும் முடியாது. அவை தரையில் படர்ந்து வளரும். படர்கொடிகளின் காய்கள் எடை மிகுந்தவையாக இருக்க வாய்ப்பு அதிகம். அதனால், அவை தரையில் வளரவே பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கின்றன. பறங்கி, பூசணி, தண்ணீர்பூசணி போன்றவை படர்கொடிகளுக்கு எடுத்துக்காட்டு. எந்த வகைத் தாவரமாக இருந்தாலும் உணவு, மருந்து, அழகு, அலங்காரம் எனப் பல்வேறு தேவைகளுக்கு நமக்கு உதவுகின்றன. அவை இல்லாவிட்டால் நாம் வாழ முடியாது என்பதை மறந்துவிடக் கூடாது.

  • பதின் பருவக் கவிதைகள்

    வேண்டுதல் ஊரெல்லாம் நிறைய்ய வீடிருக்க ஏன்தான் குடி வந்தானோ எங்க வீட்டுக்கு. எப்பவுமே அவனும் என்னைவிட நல்லா படித்தபடி இருக்கிறான். எதற்கெடுத்தாலும் எங்கப்பா அவனையே காரணம் காட்டி அடிக்கவேற செய்யறாரு. அய்யா அய்யனாரப்பா ஐம்பது ரூவா உண்டியலில் போடுகிறேன் மறக்காம என் கோரிக்கையை நிறைவேற்றி வைத்திடு. நாளை வரும் ரிசல்ட்டில் அவனைவிட ஒரு மார்க்காவது அதிகமாக வாங்கவேண்டும் அதனால் எனக்கு கிடைக்கும் ஐ போன் அலைபேசி. எதைக் கற்றோம் ஒரே இழுப்பில் இழுத்த பீடியை வீசியபடி எரிச்சலோடு கத்தினார் என்னத்த சொல்லிக் கொடுக்கறாங்க வாழ்க்கையை வாழ கற்றுக்கொடுக்காத பாடத்தை படித்தென்ன பிரியோஜனம் கண்களில் நீர் திரள கத்தியால் உடலைக் கீறினார். எழுதிய தேர்வில் எடுக்க முடியாது போகும் தேர்ச்சி மதிப்பெண்களென அவளாக முடிவெடுத்து ஆயுளை முடித்துக்கொண்டு பிணவறையில் தூங்குவதுபோல் கிடக்கிறாள். வெளியான ரிசல்ட்டில் வெற்றி கொண்டது அறியாமல். ஆசிரிய தேவதை இன்ஜினியர் டாக்டரென எல்லோரும் விரும்பும் குட்டைகளில் ஊறும் மட்டைகளாக இருக்காதீங்க என்றவறை எரிச்சலோடு பார்த்தோம். அவரவர் ஆர்வத்திற்கேற்ற படிப்புகள் நிறைய்ய இருக்கென பட்டியல் இட்டுக்கொண்டிருந்தவரை வாய்பிளந்து அதிசயித்தோம் வாய்ப்புகள் ஆயிரம் இருக்கென. இப்போ வெப்ப மண்டலக் காடுகளில் பட்டாம்பூச்சி ஆய்வு மாணவியாக பறந்தபடி இருக்கிறேன் உடன்படித்த அனைவரும் அவரவருக்கான துறைகளில் ஆளுமைகளாக ஆனந்தித்து வாழ்கிறார்கள். மனதுள் வழிகாட்டிய ஆசிரியர் வாழ்கிறார் தேவதையாக.

  • பாப்பாண்டும் ரயில்பூச்சியும்

    அப்போதுதான் பாப்பாண்டு மாமரத்துப் பக்கம் வந்தான். மண்ணில் ஒரு பூச்சி ஊர்ந்து சென்றது. அதை பார்க்கவே அவனுக்கு அதிசயமாக இருந்தது. அன்றுதான் முதல் தடவை அப்படியொரு பூச்சியைப் பார்க்கிறான். அது அவ்வளவு அழகு. சிகப்பும் கறுப்பும் கலந்த அழகு வண்ணம். பக்கத்தில் சென்று உற்று பார்த்தான். அதன் நீண்ட உடல், பாசிமணியை அடுத்து அடுத்து சேர்த்து வைத்தது போல், மேடும் பள்ளமுமாய் இருந்தது. இரண்டு பக்கங்களிலும் நூற்றுக் கணக்கான கால்கள். தலையின் முன் இரண்டு கண்கள். வேக வேகமாக நகன்றது. அப்படியே, ரயில் போலவே இருந்தது. ஒரு குச்சியால் அதைத் தொட்டான். கண்ணிமைக்கும் நேரத்தில் சுருண்டு கொண்டது. அப்படியே கிடந்தது. பாப்பாண்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆபத்து எதுவும் இல்லை என்று தெரிந்ததும் மறுபடியும் உடலை நேராக்கி ஊர்ந்தது. பாப்பாண்டு தாத்தாவிடம், “ தாத்தா ..இது என்ன பூச்சி? ” என்று கேட்டான். “ இதுவா.. இதுக்குப் பேரு ரயில்பூச்சி..” என்றார் தாத்தா. உடனே பாப்பாண்டுவின் சின்ன மூளையில் கேள்வி முளைத்தது. ” ஏன் தாத்தா.. ரயில் பூச்சின்னு பேரு வந்தது? “ என்று கன்னத்தில் ஒரு விரலை வைத்துக் கொண்டே கேட்டான். தாத்தா சிரித்துக் கொண்டே, ” ரயில் பெட்டிகளைச் சேர்த்து வைத்த மாதிரி உடம்பு இருக்குல்ல..ரயிலைப் பார்த்துட்டு உன்னை மாதிரி ஒரு சுட்டிப்பையன் வைத்த பேரு தான் ரயில்பூச்சி..” என்றார். பாப்பாண்டுக்கு அந்த ரயில்பூச்சியை பிடித்து விட்டது. தரையில் ஊர்ந்து போகும்போது அப்படியே மிதக்கிற மாதிரியே இருக்கும். தினமும் ரயில்பூச்சியோடு விளையாடுவான். பேசுவான். ஆடுவான். பாடுவான். அவன் சொல்வதை எல்லாம் ரயில்பூச்சி கேட்கும். மகிழ்ச்சியாக இருந்தால், அவன் கைகளில் ஏறிவரும். ஒருநாள், பாப்பாண்டு ரயில்பூச்சியிடம், ” நீ…..! இத்தனை கால்களுடன்…… அழகாய் ஊர்ந்து போகிறாய்… இத்தனை கால்களும் உனக்கு யார் தந்தது? ” என்று ஆச்சரியத்துடன் பாப்பாண்டு கேட்டான். ” எனக்கு என் அம்மாதான் தந்தார்.. ” என்றது ரயில்பூச்சி. ” உன் அம்மாவுக்கு யார் தந்தார்கள்? “ என்று அடுத்த கேள்வியைக் கேட்டான் பாப்பாண்டு. "ம்ம்ம்.. இயற்கை தான் எங்கள் இனத்துக்கு இத்தனை கால்களைக் கொடுத்தது. “ என்று ரயில்பூச்சி சொன்னது. பாப்பாண்டு யோசிக்கவே இல்லை. அடுத்த கேள்வியைக் கேட்டான். “ எப்படி இயற்கைக்கு யாருக்கு எத்தனை கால் கொடுக்க வேண்டும் என்று தெரியும்..? பாரு.. எனக்கு இரண்டு கால் தான், நாய்க்கு நாலு கால்.. எறும்புக்கு ஆறுகால்.. சிலந்திக்கு எட்டுகால்.. “ என்று சொல்லி நிறுத்தினான். கொஞ்ச நேரத்துக்கு ரயில்பூச்சி எதுவும் பேசவில்லை. யோசித்தது. பிறகு மெல்ல தலையைத் தூக்கியது. முன்னங்காலால் முகத்தைத் தேய்த்தது. “ பாப்பாண்டு என்னுடைய தாத்தா சொல்லியிருக்காரு.. ஒவ்வொரு உயிரும் இந்த பூமியில் வாழறதுக்கு ஒவ்வொரு சிறப்பான உடல் அமைப்பை உருவாக்கிக் கொண்டன.. அப்படித்தான் நாங்களும் உருவாக்கிக் கொண்டோம்.. அறிவியலைப் படிக்கும்போது உனக்குத் தெரியும்.. “ என்று பேசிவிட்டு உடம்பை முன்னும் பின்னும் சுருக்கி நீட்டியது. பாப்பாண்டுவின் கண்கள் விரிந்தன. ரயில்பூச்சி சொல்வதைப் புரிந்து கொள்ள முயற்சித்தான். “ உங்க தாத்தாவுக்கு எல்லாம் தெரியுமா? “ என்று கேட்டான் பாப்பாண்டு. “ ஏன் உன்னுடைய தாத்தாவுக்கும் எல்லாம் தெரியுமே. நீ கேட்டுப்பாரு..என்னுடைய தாத்தா எங்களுக்கு மண்ணில் எப்படி பள்ளம், மேடு பார்த்து லாவகமாக செல்வது என சொல்லித் தந்தார். எங்கள் உணவு எது? எப்படி சாப்பிடுவது? என்றும் சொல்லிக் கொடுத்தார். மரத்தின் மேல், கீழே விழாமல் எப்படி மரத்தைப் பிடித்து செல்வது என்றும் சொல்லித் தந்தார். ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித் தந்தார். ” என்றது ரயில்பூச்சி. அதைக் கேட்ட பாப்பாண்டு பேச ஆரம்பித்தான். “ என் தாத்தாவும்…. இந்த உலகம் எப்படித் தோன்றியது? உயிர்கள் எப்படித் தோன்றியது? செடி, கொடிகள், மரங்கள். பூச்சிகள் புழுக்கள், விலங்குகள் பறவைகள் இவை எல்லாம் எப்படி தோன்றின? என்றும் சொல்லிக் கொடுத்தார். அறிவியலைப் படிக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வார்” ரயில் பூச்சி, “ நல்ல தாத்தா..” என்றது. பாப்பாண்டு, “ ஆமாம்.. அறிவியலைத் தெரிந்து கொள்ளவில்லை என்றால் நம்மிடம் கதைகளைச் சொல்லி ஏமாற்றி விடுவார்கள் என்றும் சொல்லுவார்..” என்று பெருமையாகச் சொன்னான். ரயில்பூச்சி மகிழ்ச்சியில் அவனுடைய கையில் ஏறி உடம்பைத் தூக்கி நடனம் ஆடியது. பாப்பாண்டுவும் துள்ளிக்குதித்து நடனம் ஆடினான்.

  • குழந்தைகள் உரிமைகள் - 3

    உலகிலுள்ள எல்லா நாடுகளின் அரசாங்கங்களும் அந்தந்த நாட்டுக் குழந்தைகளின் அனைத்து உரிமைகளையும் அவர்கள் அனைவருக்கும் கட்டாயம் கிடைக்குமாறு செய்ய வேண்டும் என்று யுனிசெஃப் தனது பிரகடனத்தின் நான்காவது அம்சத்தில் வலியுறுத்துகிறது. அவ்வாறு தங்கள் நாட்டுக் குழந்தைகளுக்கு எல்லா உரிமைகளும் கிடைப்பதை உறுதி செய்ய அவை தங்களால் இயன்ற அத்தனைக் கடமைகளையும் தவறாமல் செய்ய வேண்டும் என்று அது விதித்திருக்கிறது. இந்த இடத்தில், ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் ‘அரசாங்கம்’ ( ‘government’ ) என்பது என்ன, அது எப்படி உருவாகிறது என்பதைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம். ஒவ்வொரு நாட்டிலும், அந்த நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்று ஒன்று கட்டாயம் இருக்கும், இருக்க வேண்டும். ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் பொதுத்தேர்தல்கள் நடப்பது பொதுவான ஒரு நடைமுறை. நமது நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கொரு முறை இந்திய அளவில் நாடாளுமன்றத்துக்கும், மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் சட்டமன்றப் பேரவைக்கும் தேர்தல்கள் நடைபெறும். எம் எல் ஏ க்கள், எம் பி க்கள், மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் போன்றோரை நமது மக்கள் வாக்குகள் அளிப்பதன் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் எம் எல் ஏக்களும், எம் பிக்களும் கூடித் தங்களுக்குள் ஒருவரை அந்தந்த மாநில முதல்வர் ஆகவும், இந்திய அளவில் பிரதமர் ஆகவும் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். இவ்வாறு உருவாகும் நிர்வாக அமைப்புக்கு ‘அரசாங்கம்’ ( ‘government’ ) என்று பெயர். ஆனால், இந்த அரசாங்கம் என்றைக்கும் நிலையாக இருப்பதில்லை. அவ்வப்போது நடைபெறும் தேர்தல்களில் வெற்றி பெறும் கட்சி எதுவோ அதனுடைய அரசாங்கம்தான் பதவியில் இருந்து ஆட்சி செய்யும். ஆனால், எப்போதுமே நிலையாக, நிரந்தரமாக இருக்கும் ஒரு நிர்வாக அமைப்பு, இந்தியாவிலும் உலக நாடுகள் அனைத்திலும் இருந்து கொண்டிருக்கும். அந்த அமைப்புக்கு ‘அரசு’ ( ‘state’ )என்று பெயர். இராணுவம், காவல்துறை, நீதிமன்றம் போன்ற அமைப்புகள் இந்த அரசின் கீழ்தான் இயங்குகின்றன. எந்த ஒரு சட்டத்தையும் நாடாளுமன்றமும், மாநில சட்டமன்றங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களின் ஒரு மனதான முடிவாகத் தீர்மானித்து நிறைவேற்றினாலும் கூட, அரசுத்துறைகளின் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் – வளர்ச்சித்துறை அதிகாரிகள், அரசுப்பணியாளர்கள் அனைவரும் ஒரு மனதாக அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து,மனதார ஏற்றுக்கொண்டு அதை நடைமுறைப்படுத்தினால்தான் அந்தச்சட்டத்தின் பயன்கள் பொது மக்களைப் போய்ச்சேரும். எந்த ஓர் இயந்திரத்திலும், ஒரு பெரிய பற் சக்கரத்துடன் இணைந்த பல சிறிய பற்சக்கரங்கள் அனைத்தும் எந்தப் பல்லிலும் உடைசலோ,கீறலோ இல்லாமல் ஒரே சீராக இயங்கினால்தான் அந்த இயந்திரத்தின் இயக்கம் தடைப்படாமல் வேலை நடக்கும். ஆனால், இந்த நாட்டின் இன்றைய அரசியல் அமைப்பில், மிக வலுவான, அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஓர் ஒன்றிய அரசு, தனது பிரதிநிதிகளாக உள்ள ஆளுநர்களைக் கொண்டு, மாநில சட்டமன்றங்களின் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இணைந்து நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களைக் கூட, ஒப்புதல் அளிக்காமல் தடை செய்வது, நிதியளிக்க மறுப்பது போன்ற நடைமுறைகளைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். பல இலட்சம் குழந்தைகளின் கல்வி உரிமைகளைப் பாதிக்கும், மறுக்கும் நீட் தேர்வை நிராகரிக்கும் சட்டம்,புதிய கல்விக்கொள்கையை இங்கு நடைமுறைப்படுத்தத் தேவையில்லை என்ற சட்டம் போன்ற பல சட்டங்களை நிறுத்தி வைக்கும் போக்கைக் காண்கிறோம். இது ஏதோ ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையே நடக்கும் அரசியல் சண்டை மட்டுமே அல்ல;மாறாக,இந்த மாநிலத்தில் மாநில அரசின் கல்வி நிலையங்களில் பயிலும் பல இலட்சம் குழந்தைகளின் விருப்புரிமைகளைப் பறிக்கும் செயலாகும். இத்தகைய நிலைமை இந்த நாட்டில் மட்டுமன்றி வேறு பல நாடுகளிலும் அந்தந்த நாட்டு அரசியல்,சமூக,பொருளியல் சூழல்களுக்கு ஏற்ப நிலவுவதைப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளின் செய்தியறிக்கைகளிலும் பார்க்கிறோம். யுனிசெஃப் அமைப்பு, எல்லா நாட்டு அரசாங்கங்களுமே குழந்தைகளின் உரிமைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்குத் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தாக வேண்டியது கட்டாயம் என்று சர்வதேசப் பிரகடனத்தில் விதித்திருப்பதற்கு மிக முக்கியமான காரணங்களுள் ஒன்று, உலகில் பல நாடுகளுக்கு இடையே நடக்கும் போர்களில், அந்தப் போர்களுக் குக் காரணங்கள் எவையாயிருப்பினும், போரில் ஈடுபடும் இருதரப்புக் குழந்தைகளுமே அந்தப் போர்களால் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதேயாகும். ரஷ்யா- உக்ரைன் போர், இஸ்ரேல் – ஹமாஸ் போர், இந்தியா – பாகிஸ்தான் போர் – இப்படி எந்தப் போர் என்றாலும், உணவுப் பொருள்கள், மருந்துகள், ரொட்டிகள், பால் போன்று குழந்தைகளுக்கு மிக மிக அத்தியாவசியத் தேவைகள் கூட மறுக்கப்பட்டு விடுவது அந்தப் போரின் உடனடி விளைவாக ஆகி விடுகிறது. கடந்த பத்து நாள்களுக்கு முன்பு, இப்படி இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் அமைப்புடன் தான் நடத்தும் போரில், செஞ்சிலுவைச்சங்கம் மூலம் பலஸ்தீனக் குழந்தைகளுக்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருள்கள், ரொட்டிகளைக் கூட அவர்களுக்கு வழங்க அனுமதிக்காததால் சுமார் 14,000 குழந்தைகள் சாவின் விளிம்பில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி உலகின் அனைத்துப் பகுதி மக்களையுமே மனம் பதறச் செய்தது. எனவேதான், யுனிசெஃப் அமைப்பு, உலகின் எல்லா அரசாங்க நிர்வாகிகளுக்கும் தனது சர்வதேசக் குழந்தைகள் பிரகடனத்தின் நான்காவது அம்சத்தை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில் முழு மனதுடன் ஈடுபாடு காட்டும்படி வலியுறுத்தல்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறது. ஆனால், அரசியல் அதிகாரம் என்ற ஒரே குறிக்கோளின் மீது தவிர, வேறு யாருடைய நலன்கள் குறித்தும் துளியும் கவலைப்படாத அரசாங்கங்களின் போக்கை எப்படி, எப்போது, யாரால் மாற்ற முடியும் ? இதுதான் இன்று நம் முன்னுள்ள மில்லியன் டாலர் கேள்வியாகும் !

  • பேசும் கடல் - 3

    “ அண்ணா...... அண்ணா சுனாமியை ஆழிப்பேரலைன்னு தானே சொன்னாங்க, ஆழிப்பேரலையின்  ஜப்பானிய பெயர்தானே சுனாமி? “   "ஐயோ கொஞ்சம் பொறு அமுதா...... நம்ம கடல் பாட்டிகிட்டயே கேட்போம்"     “ பாட்டி..... என்ன ரொம்ப அமைதியா இருக்கீங்க..... எப்பவும் வேகமா அலை அடிச்சிட்டு இருப்பீங்களே...... என்னாச்சு"   " பேரப்பிள்ளைகளா? நான் அமைதியா இருப்பதும்,  ஓங்கி அலையடிப்பதும் காற்றின் அழுத்தத்தால் தான். காற்றின் அழுத்தம் இருந்தா பெரிய அலையா இருக்கும், இல்லைன்னா? சின்ன அலையா இருக்கும்"    "அப்போ பாட்டி ஆழிப்பேரலை காற்றினால் தான் வந்ததா?  ” சற்றும் யோசிக்காமல் அமுதா கேட்டாள்.   " சபாஷ் பாராட்டுக்கள்...... மொதல்ல ஆழி என்றால் என்ன என்பது புரிய வேண்டும்"    “ஆமாம்......ஆமாம்...... சொல்லுங்க" இனியனுக்கு ஆர்வம் கூடியது.    "பொதுவாக மக்கள் கடல்,  அலை என்ற இரண்டு சொற்களால் என்னைப் பார்ப்பார்கள். ஆனால் கடலின் மக்களாகிய நெய்தல் நிலத்தவர்கள் பல பெயர்களில் என்னை அழைப்பார்கள் .  ஆழி என்பது பொதுவாக என்னைக் குறிக்கும் சொல் தான் தமிழ் இலக்கியங்களிலும் என்னை ஆழி என்று தான் அழைப்பார்கள்.  காற்றையும் கடலையும் நம்பி வாழும் மீனவர்கள், காற்றோடும் கடலோடும் பேசுவார்கள். ”   "பேசுவார்களா ?எப்படி?  ” என்று இருவருமே வியப்போடு கேட்டார்கள்.   " பெரிய அலை வரும்போது படகில் செல்லும் மீனவர்கள் எல்லோரும் படகில் எழுந்து நின்று "தாயே தாழ்ந்து வா தாயே" என்று வேண்டுதல் செய்வார்கள் அலை மிக உயரமாக வரும்போது மீனவர்களை அது பாதிக்கும் என்பதால் "கடல் ஆத்தா ...... தாழ்ந்து வா ஆத்தா " என்று கேட்டுக் கொண்டாலே அலைகள் அமைதியாகும்."    "உண்மையாகவா? கேட்டதும் நீங்க அமைதியா இருப்பீங்களா? " என்று இனியன் கேட்டான்.   "அது அவங்க நம்பிக்கை,  இது தாய் பிள்ளை உறவு போன்றது மற்றவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது" என்று கடல்பாட்டி சொன்னார். அப்போது அவருடைய குரல் தழுதழுத்தது.    ” அது சரி மேட்டருக்கு வாங்க,  ஆழின்னா  என்ன அதைப் பற்றி சொல்லவே இல்ல"  என்று ஆர்வத்தோடு அமுதா கேட்டாள்.   ” மீனவர்கள் கடலில் எழும் அலைக்கும் பல பெயர்களை சூட்டி உள்ளார்கள். மார்சா,  மாரியா , ஆழி என்று அழைப்பார்கள்.  இதில் ஆழி என்பது காற்றின் விசையால் அலைகள் விரிந்து, எழும்பி இரண்டு மடிப்பு போல் மடங்கி அடிப்பதை ஆழி என்பார்கள். இது மிக ஆபத்தானது. அலைகள் எழும்பி மடங்கி அடிக்கும் போது மீனவர்கள் மாட்டிக் கொண்டால் அவர்களால் தப்பிக்க முடியாது. அந்த அலை அவ்வளவு வேகமாக அடிக்கும்.” என்று கடல்பாட்டி சொல்லும்போதே ஆழியின் ஓசை கேட்டது.   ” கேட்கும்போதே பயமாயிருக்கு அண்ணா?   ” அமுதா இனியனின் கைகளை இறுகப் பற்றி கொண்டாள்.   "அமுதா பயப்படாதம்மா.... ஆழி இரண்டு வகை உண்டு கரைய ஆழி, வெலங்க ஆழி அதாவது கரைப்பகுதியில் ஏற்படும் பேரலை. தூரத்தில் ஏற்படும் பேரலை .கடலில் பயணிக்கும் போது மீனவர்கள் கடலோடும் காற்றோடும் அலையோடும் பேசுவார்கள் அல்லது அவைகளைப் பற்றி பேசுவார்கள் "   ” ஆமாம்.  அது உண்மைதான் எங்க வீட்டிலையும் அப்பாவும் பெரியப்பாவும் பேசுவாங்க ...தான் கேட்டு இருக்கேன் ” என்றான் இனியன். “ பேரப்பிள்ளைகளா? காற்று , கடல்  இரண்டும் மீனவர்களுக்கு உயிரும், உடலும் போன்றது. எப்போதும் அதைப் பற்றியே பேசுவார்கள். அதற்கு அவர்கள் பல பெயர்கள் சூட்டி மகிழ்வார்கள் ” என்றார் கடல்பாட்டி பெருமையாக. ” அது சரி உங்க பிள்ளைகள நீங்க விட்டுக் கொடுப்பீங்களா? ” என்று அமுதா கிண்டலாகச் சொன்னாள். .   ” ஆமாம் ....அவர்கள் கடலின் மக்கள்..” என்று கம்பீரமாகச் சொன்னார் கடல்பாட்டி.   ” அது சரி....காற்றுக்கு  எப்படி பெயரிடுவாங்க....? ” என்று இனியன் கேட்டான்.   ” சொல்றேன் கண்ணுகளா..” என்று சொல்லிவிட்டு காணாமல் போனார் கடல்பாட்டி.   ( கடல் பேசும் )

  • ஏழு ஹைக்கூ

    நகரமெல்லாம் திரிந்த குருவிக்கு இளைப்பாறக் கிடைக்கவில்லை காடு * அம்மா கால் பித்த வெடிப்பு  பாசத்தின் பள்ளத்தாக்கு, கற்துகளும் விரும்பி உட்புகும் * ஊரை காக்க விரும்பும் அய்யனார்   எல்லையை தாண்டி  ஊருக்குள்ளே வாழ விரும்பாதவர்.   * நீருக்கும் மனிதன்மேல் பயம், சருவலைக்காரணம் காட்டி,  கடலை அடைகிறது * நரியின் குழியில் விழுந்த புலிக்கூட்டம்  இன்னும்  இழக்கவில்லை வீரத்தை (இலங்கை சம்பவத்தின் அடிப்படையில்)  * புத்தகத்தை புரட்டிடும் மனிதன் இருவிரலால்  தன் வாழ்வையே புரட்டுகிறான். * யானையைகாட்டிலும் மனிதனிடமே அதிகம் உள்ளது மதம். எழுதியவர்: ஹ. சக்திவேல், 11ஆம் வகுப்பு, இராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செஞ்சி, விழுப்புரம் மாவட்டம். 8015626376

bottom of page