இயலில் தேடலாம்!
Search this site
408 results found with an empty search
- யாரெல்லாம் சிரிப்பார்கள்
அம்மா சிரித்தால் அழகப்பா- அவள் அன்பில் பூக்கும் மலரப்பா! பாட்டி சிரிப்பில் கலகலப்பு- பாடும் பாடல்கள் தரும் மலைப்பு! பாப்பா சிரிக்கும் சிரிப்பினிலே- நம் பாரம் குறையும் நொடியிலே பூக்கள் சிரிப்பதைப் பார்த்தாயா?- அதன் புன்னகை எங்கும் மணம் வீசும்! வானம் சிரிப்பில் வானவில் - அது உன் வாசல் நோக்கி வருது பார்! கடல் சிரித்தால் அலை பிறக்கும்- அவை கரை சேரும் அழகைப் பார்! இத்தனை பேரும் சிரிக்கையில்- நீ இன்னும் ஏன் தூங்குகிறாய்? எழுந்து நீயும் சிரித்துப் பார்- உன் எதிரே உலகம் மலர்வதைப் பார்! கொ.மா.கோ.இளங்கோ எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
- உழவும் உணவும்!
கூவிச் சேவல் காலையில் - ஊரை எழுப்பி விடுது பார்! வாசல் இட்ட கோலமோ - வண்ணம் மின்னச் சிரிக்குது பார்! தோளில் கலப்பைத் தூக்கியே - உழவர் வயலை நோக்கிப் போகிறார்! நாத்து நடும் பெண்களோ – சேர்ந்து நாட்டுப் பாடல் பாடுவர்! வரப்பு ஓர நண்டுகள் - மெல்ல வளைக்குள் ஓடிப் போயின! கரும்புத் தோட்டத் தும்பியோ - காற்றில் களித்து ஆடிப் பறக்குது! பசுமை நிறைந்த வயலிலே – காலைப் பனித்துளிகள் மின்னுது! மிச்சம் இன்றி நிலத்திலே – நெல் முத்து விளைந்து நிற்குதே! கஞ்சி குடிக்க மரத்தடி – நமக்குக் குளிர்ச்சியாக இருக்குது! நெஞ்சு முழுக்க மகிழ்ச்சியும் – வயலில் நிறைந்து தானே கிடக்குது. கந்தல் ஆடை உடுத்தியே – வயலில் விந்தை செய்தான் விவசாயி! சண்டை போடும் மனிதனே – நம் சோற்றில் ஏது பிரிவினை? கொ.மா.கோ.இளங்கோ எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
- கடல்பச்சை நிறக் குடை
இந்தி: வருண் குரோவர் தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ நான் கடலைப் பார்த்ததே இல்லை. அதேபோல எனக்கென்று தனியாக ஒரு குடையும் இருந்ததில்லை. வாழ்வில் எனக்குக் கிடைத்த முதல் குடை கடல்பச்சை நிறத்தில் இருந்தது. அந்தப் பச்சை நிறம் வெறும் நிறமல்ல. நான் பார்த்திராத மகாசமுத்திரத்தின் ஒரு துளி எனக்குக் கிடைத்தது போல உணர்ந்தேன். பிடித்த நிறத்தில் குடை கிடைத்ததில் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தேன். பொதுவாகக் குடை அதிக விலையுள்ள பொருள் இல்லை. ஆனால், நாங்கள் அதை வாங்கியபோது, அது எங்களுக்குப் பெரிய சாதனையாகவும், மதிப்புடையதாகவும் இருந்தது. எனக்கு ஒன்பது வயதாக இருக்கும்போது டேராடூனில் இருந்த ராணுவப் பள்ளியில் படித்து வந்தேன். வீடு, பள்ளியிலிருந்து வெகு தொலைவில் இருந்தது. தினமும் அரை கிலோமீட்டர் நடந்து பேருந்து நிறுத்தத்துக்குச் செல்வேன். அங்கு ‘சக்திமான்’ என்ற ராணுவ லாரி வரும். அதில் ஏறுவது ஒரு போர்க்களத்தில் குதிப்பதைப் போன்ற சவாலானது. படிக்கட்டுகள் இல்லாத லாரியின் விளிம்பைப் பிடித்துத் தொங்கியபடிதான் ஏற வேண்டும். சில நேரங்களில் உள்ளிருக்கும் வீரர்கள் எங்களை வாரித் தூக்கி உள்ளே விடுவார்கள். எல்லாச் சிறுவர்களுக்கும் இந்தச் சாகசம் மிகவும் பிடிக்கும். பள்ளிக் காலத்தில் டேராடூனில் மழை கொட்டித் தீர்க்கும். உலக வெப்பமயமாதல் சிக்கல்கள் அப்போது கிடையாது. மழை எப்போது வரும், குளிர் எப்போது குறையும் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஜூலை மாதத்தில் பள்ளி திறந்தபோது மழை பெய்வதற்கான அறிகுறிகள் தெரிந்தன. சென்ற ஆண்டு வரை, நான் பயன்படுத்திய மழைக்கோட்டு சிறியதாகிப் போனது. அதன் பிறகு, எனக்கு அந்தக் குடை கிடைத்தது. பெற்றோரிடம் பணம் இருக்கிறதா இல்லையா என்ற கவலை எனக்கு இருந்ததில்லை. ஆனால் குடை ஒரு விலை உயர்ந்த பொருள் என்று எனக்குத் தெரியும். குடை மிகவும் அழகாக இருந்தது. அதுபோலப் பச்சை நிறத்தை நான் பார்த்ததே இல்லை. மழையில் நனைந்தால் கூட பரவாயில்லை, ஆனால் குடையைத் திறந்தால் அழுக்காகி விடுமோ என்று கவலை அடைந்தேன். முதல் நாள் பள்ளிக்கு எடுத்துச் சென்றபோது பெருமையாக இருந்தது. ஆனால் யாராவது திருடிவிடுவார்களோ என்ற பயமும் இருந்தது. மூன்றாம் நாள், லாரியிலிருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து செல்லும்போது அந்தச் சம்பவம் நடந்தது. பையைத் தடவிப் பார்த்ததும் இதயத் துடிப்பு நின்றது போல உணர்ந்தேன். ஐயோ! ஆசையாசையாகப் பாதுகாத்து வைத்த குடையைக் காணவில்லை. லாரியில் விட்டுவிட்டேனா? வகுப்பிலேயே மறந்து வைத்துவிட்டேனா? வீட்டிலிருந்து எடுத்து வந்தேனா? என்று நூறு கேள்விகள் மனதில் எழுந்தன. கொஞ்ச நேரம் தீவிரமாக யோசித்தேன். குடையைப் பள்ளிக்கு எடுத்து வந்தது ஞாபகம் வந்தது. வகுப்பில் ஒரு நண்பன் அதைப் 'கடல்பச்சை நிறக் குடை’ என்று பாராட்டியது நினைவுக்கு வந்தது. நான் இமாச்சல், டேராடூனைத் தவிர வேறு எங்கும் சென்றதில்லை. கடல் எப்படி இருக்கும் என்றும் எனக்குத் தெரியாது. கடல்பச்சை நிறக் குடையை எங்கே தேடுவது? வீட்டில் என்ன சொல்வது? பல குழப்பங்களுக்கு நடுவே வீட்டிற்குச் சென்றேன். அம்மாவிடம் உண்மையைச் சொல்லப் பயந்து, ஏதோ உளறினேன். "அம்மா, பள்ளியில் ஒரு பெரிய பையன் என் குடையைப் பறித்துக்கொண்டான்" என்றேன். அம்மா திகைப்புடன் பார்த்தார். எனது தொண்டை வறண்டது. கைகள் நடுங்கின. ஆனால் சொன்ன பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னேன். அம்மா என்னைத் துருவித் துருவி விசாரித்தார். "உணவு இடைவேளையில், பெரிய வகுப்பு பையன், என்னைத் தள்ளிவிட்டு குடையைப் பிடுங்கிக்கொண்டு போனான். அவன் மிரட்டியதால் நான் யாரிடமும் சொல்லவில்லை" என்று சினிமா கதையைப் போல பொய் சொன்னேன். அம்மா என் கதையை நம்பிவிட்டார். மறுநாள் எனக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிக்கு வந்து, தலைமை ஆசிரியரிடம் புகார் செய்யப்போவதாக அம்மா சொன்னார். நாங்கள் பள்ளிக்குச் சென்றோம். அம்மா, தலைமை ஆசிரியரிடம் நடந்ததை விவரித்தார். தலைமை ஆசிரியர் என்னிடம் அந்தப் பையனின் வகுப்போ, பெயரோ தெரியுமா என்று கேட்டார். எனக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டேன். "இது ஒரு குற்றம், இதைச் சும்மா விடக்கூடாது" என்று அவர் விசாரணையைத் தொடங்கினார். முதலில் அவர், எனது வகுப்புக்கு வந்து சம்பவம் எங்கே நடந்தது என்று கேட்டார். மற்ற மாணவர்களிடம் விசாரித்தார். யாரும் குடையைப் பார்க்கவில்லை என்றார்கள். சாட்சிகள் இல்லை. தலைமை ஆசிரியர் இதோடு நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர் திருடனைக் கண்டுபிடிக்க முடிவு செய்து, ஒவ்வொரு வகுப்பிற்கும் என்னை அழைத்துச் சென்றார். ஒவ்வொரு வகுப்பாக நுழைந்து, என்னை விட உயரமாக இருந்த பையன்களை அடையாளம் காட்டச் சொன்னார். எனக்கோ உடல் நடுக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உண்மையைச் சொன்னால் அவமானப்பட நேரிடும் என்ற பயம் ஒருபுறம் இருந்தாலும், யாரென்றே தெரியாத ஒருவனைத் திருடனாகச் சித்தரித்தல் தவறு என்று எனக்குள் குற்ற உணர்வு பெருகியது. நிரபராதியான யாரையாவது கை காட்டிவிடுவேனோ என்ற பயம், குடை தொலைந்த துக்கத்தை விடப் பெரியதாக இருந்தது. மூன்று மணி நேர அலைச்சலுக்குப் பிறகு தலைமை ஆசிரியர் களைத்துப் போனார். எனக்கும் சரியாக நினைவில்லை என்று கூறி தப்பித்தேன். ஆனால் மனதில் ஒரு திருடனின் முகத்தை நானே கற்பனை செய்திருந்தேன். அடுத்த மழைக்காலத்தில், அப்பா எனக்கொரு மழைக்கோட்டு வாங்கித் தந்தார். அது கடல்பச்சை நிறமில்லை. யாரும் அதிகம் விரும்பாத காக்கி நிறம். நாட்கள் நகர்ந்தன. குடை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக மறந்திருந்தோம். ஒரு வருடம் கழிந்தது. நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது, ஒருநாள் பள்ளியின் பழைய அறை திறக்கப்பட்டதாகச் செய்தி வந்தது. அங்கே பல பழைய பொருட்கள் கிடைத்தன. ஒரு ஆசிரியர், தூசு படிந்த ஒரு குடையைக் கொண்டு வந்து நீட்டினார். அடுக்குத் தூசுகளுக்கு இடையில் 'கடல்பச்சை' நிறம் பளிச்சென்று தெரிந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு பயமும் குழப்பமும் அதிகரித்தது. தலைமை ஆசிரியர் என்னையே உற்றுப் பார்த்தார். மாலையில் வீடு திரும்பியதும் அழுதுகொண்டே எல்லா உண்மையையும் அம்மாவிடம் சொன்னேன். எப்படி குடை தொலைந்தது? அதை மறைக்க எப்படிப் பொய் சொன்னேன் என்று விளக்கினேன். அதற்காக நிறைய திட்டுக்களும், சில அடிகளும் கிடைத்தன. அதை நான் தகுந்த தண்டனையாகவே ஏற்றுக்கொண்டேன். மறுநாள் பெற்றோர் பள்ளிக்கு வந்து மன்னிப்பு கேட்டனர். ஒரு வருடம் கழித்து, அந்தக் குடை கைக்கு வந்தபோது அதன் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அது சரியாகத் திறக்கவில்லை. மழையிலிருந்து யாரையும் காக்கின்ற வலிமையை அந்தக் குடை இழந்திருந்தது. ஆனால் கடல்பச்சை நிறம் மட்டும் மாறாமல் அப்படியே இருந்தது. குடை இப்போது மழையிலிருந்து என்னைக் காக்கவில்லைதான். ஆனால் எனது இளமைக் காலத்தின் ஒரு பொய்யையும், அதன் மூலம் நான் கற்றுக்கொண்ட கசப்பான உண்மையையும் பாதுகாத்து வைத்திருந்தது. அதுவரை நான் பார்க்காத, கற்பனை செய்திராத கடலைப் போல கண்முன்னே விரிகிறது. கொ.மா.கோ.இளங்கோ எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
- பறக்கும் பலகை
வீட்டுப்பாடம் எழுதி முடித்த மகிழ்ச்சியில் முற்றத்திற்கு வந்து நின்று பார்த்தாள் சுபா. கீழ்வானில் நிலாவும் எழும்பி வந்து பார்த்தது. அதன் அருகில் ஒரு விண்மீன் பிரகாசமாய் ஜொலித்துக்கொண்டிருந்தது. அந்த நேரம் பக்கத்து வீட்டு சுமா நடந்து வருவது தெருவிளக்கு வெளிச்சத்தில் தெரிந்தது. சுபாவுக்கு விளையாட ஒரு ஆள் கிடைத்துவிட்டது. பேச்சு சத்தம் கேட்டு ஒவ்வொருவராக வந்து கூடினார்கள். “அங்கே பாரு.. நிலாவுல காளைமாடு காலைமடக்கி படுத்துக்கிட்டு அசை போடுது” இரண்டு கைகளையும் விரித்துக் காண்பித்தாள் சுபா. “வானத்துல பாரு.. நட்சத்திரங்கள் முகம் காட்டி சிரிப்பதுபோல் மினுங்குது” சுமா கைகளை தட்டி எம்பிக்குதித்தாள். வானத்தின் இருட்டுவெளியில் இறைந்து கிடக்கும் விண்மீன் கூட்டம் மனதிற்குள் வந்து குதியாட்டம் போட்டன. மாலை நேரத்தில் நீலவானமும் அதில் செம்பிழம்பாய் இறங்கி பதுங்கிய சூரியனையும் பார்த்த காட்சிகள் மாறி இருளின் வியாபகம் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருந்தது. அப்பொழுது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பிரகாசமான ஒளிச்சுடர் வானத்திலிருந்து இறங்கி வந்தது. அது பல வண்ணங்களில் ஒளிர்ந்து பூமிக்கு அருகில் நெருங்கி வந்தது. “அய்..ய்.யா. அங்கே பாரு. தேவதை போல ஒரு உருவம் நம்மளைப் பார்த்து வருது” குணா கைநீட்டிக் காண்பித்த திசையில் எல்லோருடைய முகங்களும் திரும்பி அண்ணாந்து பார்த்தன. அது இறக்கைகளை அசைத்தபடி நீண்ட கூந்தல் அசைய மயிலிறகாய் மிதந்தபடி பூமியில் கால்களை தொட்டு இறங்கியது. அதன் உடலெல்லாம் பொன்னிறமாகவும் கண்கள் மஞ்சளாக, கூந்தல் அடர்நீலமாகவும் இறக்கைகள் சிவப்பு, பச்சை, ஊதா நிறங்களிலும் ஒளி உமிழ்ந்துகொண்டிருந்தன. தேவதை தன் இறக்கைகளை மேலும்கீழுமாக மெதுவாக அசைத்துக்கொண்டிருந்தது. அதன் வண்ணவண்ண ஒளிமினுக்கம் ஒரு வில் போல வளைந்து ஆடியது. யாரும் அதைப் பார்த்து பயந்து போனதாக தெரியவில்லை. தேவதையின் சாந்தமான தோற்றமும் மென்மையான அசைவுகளும் வசீகரமான தோற்றமும் நெடுநாட்கள் பழகிய தோழியைப் போலவே இருந்தது. “குழந்தைகளே.. வானுலகத்திலிருந்து உங்களை பார்க்க வந்திருக்கிறேன். மேலே தெரிகிற நட்சத்திரங்கள், கோள்கள் எல்லாத்தையும் உங்களுக்கு காண்பிக்கப்போகிறேன்” “எங்க அம்மா திட்டும். நான் வரலை” என்று தினகர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துவிட்டான். “ஏய்.. பயப்படாதே. தேவதை நமக்காக வந்திருக்கு” தினேஷ் கையசைத்துச் சொல்லியும் திரும்பியே பார்க்காமல் போய்விட்டான். தேவதை சில நொடிநேரம் கண்களை மூடி கைகளை அசைக்கவும் ஒரு பலகை காற்றுவெளியில் மிதந்து அருகில் வந்தது. “இப்ப எல்லோரும் பலகையில் ஏறி உட்காருங்க. வானவீதியில் சஞ்சாரம் செய்துவிட்டு வருவோம்” அந்த விசாலமான பலகையில் ஏறி உட்கார்ந்ததும் எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒருவரையொருவர் உற்சாகமாய் பார்த்துக்கொண்டனர். தேவதையும் இறக்கைகளை குவித்து மடக்கி அவர்களோடு உட்கார்ந்துகொண்டது. உள்ளங்கைகளை ஏந்துவது போல கைகளை உயர்த்தவும் பலகை மெல்ல எழும்பி ஆகாயத்தில் பறந்தது. பறவைகளுக்கும் எட்டாத உயரத்தில் பறந்து பறந்து மேலே எழும்பிப் போய்க்கொண்டிருந்தது. பூமியிலிருந்து பார்த்தபோது சிறியதாய் மின்னிய புதன்கிரகம் பிரமாண்டமான ரூபத்தில் பசுமை நிறத்தில் ஒளிவீசிக்கொண்டிருந்தது. பலகை அந்த புதன் கோளில் போய் இறங்கியது. “குழந்தைகளே.. வீட்டு முற்றத்தில் விளையாடும் போது உங்களை தினமும் பார்ப்பேன். உங்களுக்கு என்னோட வீடு பிடிச்சிருக்கா” புதன் கைகளை நீட்டி அணைத்தபடி கேட்டது. “உன் பசுமை நிற ஜொலிப்பு எங்களுக்கு பிடிக்கும். ஆனால் இந்த இராத்திரி நேரத்தில் இங்கே கடும்குளிராக இருக்கிறதே” “நான் பகல் வேளையில் வெப்ப சுபாவமுள்ளவன். நான் சூரியனுக்கு அருகிலுள்ள மிகச்சிறிய கோள். நான் பாறைகளால் ஆனவன். 88 நாட்களுக்கு ஒரு முறை சூரியனை சுற்றிவருவேன். நீங்கள் நன்றாகப் படியுங்கள்” என்று சொன்னது. “சரி.. இன்னும் போவோம்” என்று தேவதை கையசைக்க பலகை பறந்தது. பிரகாசமான வெண்ணிறமாய் ஒளி வீசிக்கொண்டிருந்த வெள்ளி கோளை தொலைவிலிருந்து பார்த்தனர். அது அதிகமான வெப்பத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது. பறக்கும் பலகை இன்னும் பறந்து நிலவில் போய் இறங்கியது. “நிலாவில் காளைமாடு படுத்துருக்குன்னு சுபா சொன்னாளே. பாட்டி வடை சுடுதுன்னு கந்தனும் ரொம்ப நாட்களாக சொல்லிக்கொண்டிருந்தான். இங்கே வந்து பார்த்தால் மேடுபள்ளங்களும் பாறைகளாகவும் இருக்கிறதே” என்று சுமாவிற்கு தெளிவு வந்தது. வானவெளியில் பயணம் தொடர்ந்தது. பாறை, பாலைவனம், வெடிக்காத எரிமலை, பனி மூடிய துருவங்கள் என சிவப்பு நிறத்தில் ஒளிவீசிக்கொண்டிருந்த கோளை “செவ்வாய்” என குழந்தைகளுக்கு சொல்லிக்கொண்டிருந்தது தேவதை. செவ்வாய் கிரகத்தில் பலகை இறக்கிவிட்டதும் ஒருவரையொருவர் கைகளைக் கோர்த்து ஆட்டம் போட்டு ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தன் மடியில் விளையாடிய குழந்தைகளைப் பார்த்து எப்போதுமில்லாத வகையில் செவ்வாய்க்கு ஒரே சந்தோசம். “நான் உங்கள் பூமியின் விட்டத்தில் பாதி அளவு இருக்கிறேன். என்னிடம் பனிக்கட்டி வடிவில் நீரின் தடயங்கள் இருக்கிறது. என்னோடு வசிக்கலாமா என்று சிலபேர் இங்கே வந்து பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள். நீங்கள் விரும்பும்போது என்னிடம் வரலாம்” என்று உபசரித்தது. பறக்கும் பலகை உயரே உயரே பறந்து போய்க்கொண்டிருந்தது. கண்ணுக்கெட்டும் தூரத்திற்கு இருள்வெளியில் பதுங்கிய நீலவானத்தை ஊடுருவிக்கொண்டு போனது. பொன்னிறமான கதிர்களை வீசி பிரகாசமாய் மினுங்கிக்கொண்டிருந்தது வியாழன் கோள். “குழந்தைகளே.. இப்ப நாம் போய் இறங்கும் இடம் வியாழன். இங்கே வாயுக்களும் உலோகப்பாறைகளும் இருக்கும்” தேவதை சொல்லிக்கொண்டிருக்கும் போதே பலகை வியாழனில் இறங்கியது. அவர்களது வருகையால் மகிழ்ந்துபோன வியாழன் மேலும் பிரகாசமாய் ஒளிர்ந்து சிரித்தது. “நான் சூரியகுடும்பத்தில் மிகப்பெரிய கோள். தொண்ணூறுக்கும் மேற்பட்ட நிலவுகள் இங்கே உள்ளது. என்னைத் தேடி வந்து பார்த்ததில் எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் என்ன படிக்கிறீர்கள்” நீண்ட நாள் நண்பனைப் போல நலம் விசாரித்தது. பலகையிலிருந்து இறங்கியர்கள் வியாழன் காட்டிய அன்பில் மகிழ்ந்து உற்சாகமானார்கள். “பூமியிலிருந்து பார்க்கும் போது உள்ளங்கையில் அடங்குவது போல தெரியும் வியாழன் உங்கள் பூமியைவிட பதினொன்று மடங்கு பெரியதென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்” தேவதை சொன்னதை கேட்டு வியப்பாக இருந்தது. சரி மேலும் போகலாம் என்று பலகையில் அவர்கள் பயணம் தொடர்ந்தது. “அங்கே பாருங்கள். சாம்பல் நிறத்தில் ஒளிர்ந்து பிரமாண்டமாய் சுழன்று போகும் இது என்ன..” சுபா உற்சாகமாய் கைநீட்டிக்காண்பித்து கேட்டாள். “அதற்கு பெயர் சனி. அங்கேதான் இப்பொழுது போகிறோம்” என்று தேவதை ஒரு புன்முறுவல் பூத்தது. தன்னிடம் வந்தவர்களை வாரியெடுத்து அணைத்துக்கொண்டது சனி. “உன்னை பார்த்ததில் மனதெல்லாம் சந்தோசமாக இருக்கிறது. பூலோகத்தில் மனிதர்கள் எதற்காக உன்னை பார்த்து பயப்டுகிறார்கள்” தன் மனதில் இருந்த கேள்வியை கேட்டாள் சுமா. “நான் மிகவும் குளிர்ச்சியான கோள். ஒரு பிரமாண்டமான கடலில் என்னை தூக்கிப்போடுகிறீரகள் என்று வைத்துக்கொள்வோம். அப்போதும் கடல்நீரில் மிதந்துகொண்டுதான் இருப்பேன். நான் வாயுக்களால் ஆனவன். என்னைப் பார்த்து பயப்பட என்ன இருக்கிறது. நீங்கள் நேர்வழியில் இருந்து உங்கள் கடமையை ஆற்றுங்கள்” “சரி அப்படியே செய்கிறோம் “ “சூரிய ஒளியும் நிலவொளியும் உங்களை வந்து தொடுகிற மாதிரி நானும் உங்களை சந்திக்க வருவேன். அப்பொழுது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று பார்ப்பேன்” “நாங்கள் யாரும் உன்னை இதற்கு முன் உன்னைப் பார்த்ததேயில்லையே” “நான் வாயுக்கோளம். என் வியாபகம் பூமியிலும் இருக்கும்” “நீ சொன்னதை நினைவில் வைத்திருந்து எல்லோருக்கும் நன்மையே செய்வோம். இப்போது சென்று வருகிறோம்” “இவ்வளவு தூரம் வந்தபிறகும் ராகு கேதுவை இன்னும் பார்க்கவில்லையே” தினேஷ் ஆவலாய் கேட்டான். “அவை நிழல் கிரகங்கள். சூரியனுடைய சுழற்சியினால் அதனுடைய மையத்தில் ஏற்படும் அழுத்தத்தால் அதன் இருபுறமும் வெளியே வருகிற கருமை நிறமான காந்த அலைப்பாதைகளைத்தான் ராகு கேது என்று சொல்கிறோம்” “சரி நேரமாகிறது. அம்மா தேடுவார்கள். இப்பொழுது நாம் திரும்பிப்போகலாமா” சுபா கேட்க, எல்லோரும் பலகையில் ஏறிக்கொண்டார்கள். தேவதை கைகளை அசைக்கவும் பலகை அவர்களை சுமந்துகொண்டு பூமியை நோக்கி பறக்க ஆரம்பித்தது. நட்சத்திரங்கள் கண்சிமிட்டி விடை கொடுத்தன. சூரியனிலிருந்து மூன்றாவது வட்டப்பாதையில் சுழன்று கொண்டிருந்த பூமிக்கு மேல் நெருங்கி வந்தார்கள். வெளிச்சப்புள்ளிகளாய் ஊர் தெரிந்தது. சுபாவின் வீட்டு முற்றத்தில் பலகை வந்து இறங்கியது. குழந்தைகளின் ஆரவாரச்சத்தம் கேட்டு தினகர் ஓடி வந்து பார்த்தான். தேவதை உள்ளங்கையை மேல் நோக்கி உயர்த்த பறக்கும் பலகை மாயமாய் மறைந்து போனது. “குழந்தைகளே.. உங்களுக்கெல்லாம் மகிழ்ச்சிதானே. இப்பொழுது உங்களிடமிருந்து விடை பெற்றுக்கொள்கிறேன்” என்று தேவதை உயரே உயரே பறந்து போனது. நட்சத்திரங்களின் வர்ணஜாலங்களுக்கிடையே ஒளிர்ந்து ஒளிர்ந்து ஒரு புள்ளியாய் அந்த தேவதை மறைவதுவரை இமை கொட்டாமல் அதையே பார்த்துக்கொண்டிருந்தனர். ஜெ.பொன்னுராஜ் 1964. சுகாதார ஆய்வாளர் பணிநிறைவு. படைப்புகள்: பருத்திக்காடு, குமாரபுரம் ரயில் நிலையம் சிறுகதை தொகுப்பு, மாவளி நாவல். பதிப்பில்: நாட்டுப்புற கதைகள் பாகம் 1 & 2
- குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குவோம்!
ஏப்ரல் 14 அன்று காலை மணி ஏழு ஆகிவிட்டிருந்தது. எனது குழந்தைகள் இருவரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் எழுப்பி விடுங்கள். பொழுது விடிந்து எவ்ளோ நேரமாச்சு? என்று இணையர் சொல்லிக் கொண்டிருந்தார். நான் இருவரையும் பெயர் சொல்லி எழுந்திருக்கச் சொன்னேன். அப்போது இளையவள், கண்ணைத் திறக்காமலே, “இன்னைக்கு லீவு” என்றாள். “அதுக்கு?“ என்றேன். “லீவுன்னா ஸ்கூலுக்குப் போகத் தேவையில்ல. அதனால லேட்டா எந்திரிச்சா போதும்” என்று கண்ணைத் திறக்காமலே பதில் சொல்லிவிட்டு படுத்திருந்தாள். அவளுக்கு உறக்கம் அதற்கு மேல் வரவில்லை. ஆனாலும் லீவு என்றால் எழுந்திரிக்க தேவையில்லை என்ற விசயம் மண்டைக்குள் உட்கார்ந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. பள்ளிக்கு விடுமுறை என்றால் எல்லாமே மாறுகிறது. காலையில் சீக்கிரம் எழுந்திரிக்க வேண்டியதில்லை. சாப்பிடுவது உள்பட எல்லாமே நேரம் தவறிச் செய்யலாம் என்றொரு புரிதல். அதை ஒருவிதத்தில் குழந்தைகள் அவர்களுக்கான சுதந்திரம் என்றுகூட புரிந்து கொண்டிருக்கக்கூடும். ஒருநாள் என்றால் பரவாயில்லை. இது தொடரும் போது வீட்டிலுள்ள எல்லாருக்கும் பெரும்பாலான நேரங்களில் சிரமமாகக்கூடும். பள்ளி நாட்கள் என்றால் காலை எழுந்து கிளம்புவதற்கு நேரம் சரியாக இருக்கும். அதனால் டிவி போடுவது இல்லை. செல்போனை எடுப்பதும் இல்லை. விடுமுறை என்றதும், காலையிலிருந்தே டிவியை பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள். இது பல வீடுகளில் இயல்பான ஒன்றாக இருக்கக்கூடும். தொடக்கத்தில் லீவு நாள்தானே என்று அனுமதிப்பதும், பின்னர் அதுவே பழக்கமாகிவிடுவதும் இயல்பானதுதான். எதையுமே தொடக்கத்தில் சரிசெய்யாவிட்டால் அன்றாடப் பழக்கமாகிவிடும் அல்லவா? பள்ளி நாட்களில் எப்போதாவது மாலை அல்லது இரவு நேரங்களில் அலைபேசியில் நேரம் செலவிட குழந்தைகள் கேட்பதுண்டு. கொஞ்சநேரம் எனக் கெஞ்சி வாங்கி ரீல்ஸ் பார்ப்பதுண்டு. ஆனால் விடுமுறை நாள் என்றால் அலைபேசியைக் கேட்பதில்லை. நம் கையில் இருந்து பிடுங்கிக் கொள்ளவே முயற்சிக்கிறார்கள். நம் பிள்ளைகள்தானே என்று கொஞ்சநேரம் எனக் கொடுத்துவிட்டால், அவர்களிடமிருந்து அலைபேசியை வாங்குவது ரெம்ப கடினமாகி விடுகிறது. இதற்கெல்லாம் காரணம் என்னவாக இருக்கும்? யாராக இருக்கக்கூடும்? முதல்நாள் இரவே தூங்கப் போகும் முன்னோ, அல்லது இரவு உணவின் போதோ நாம் பேசாமல் விட்டது. எதைப் பேசுவது? காலையில் எத்தனை மணிக்கு எந்திரிப்பது… அன்றைய நாளில் என்ன செய்வது? என்னென்ன செய்ய வேண்டியது இருக்கிறது… என்ன கற்றுக் கொள்ளப் போகிறோம்? எங்கு போகலாம்? இதையெல்லாம் குழந்தைகளோடு உரையாடலாம். அப்போது குழந்தைகள் மனதில் நாளைய தினம் இதையெல்லாம் நாம் செய்யப் போகிறோம் என்று ஏற்கனவே பதிந்துவிடும். அதற்கேற்ப அவர்களும் தயாராகிக் கொள்வார்கள். நமக்குத் தோன்றுகிற நேரம் ஒன்றைச் சொல்லும் போதுதான் அச்செயலில் குழந்தைகள் ஈடுபாடு காட்டுவதில் சிரமப்படக்கூடும். குழந்தைகள் படிக்கும்போது அவர்களின் கூடவே இருந்து வழிநடத்துவதும், கண்காணிப்பதையும் செய்யும் பெற்றோர் மற்ற காரியங்களில் குழந்தைகளுடன் இருப்பதை விரும்புவதில்லை. படிப்பிற்கு அதிக நேரத்தைச் செலவிட வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் குழந்தைகளின் படிப்புக்காக ஒதுக்குகின்ற நேரத்தைப் போலவே அவர்களுடன் விளையாடவும் நேரம் ஒதுக்க வேண்டும். முடிந்தால் அவர்களின் படிப்புக்கு உதவுவதற்காகச் செலவிடும் நேரத்தைவிட, கூடுதலான நேரத்தை விளையாடுவதற்காகப் பெற்றோர் ஒதுக்க வேண்டும் என்பது குழந்தைகளின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கிறது. இதில் எல்லாவிதப் பெற்றோர்களும் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட வாய்ப்பிருக்காது. சில வீடுகளில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கக்கூடும். அதற்கான மாற்று வழிகளையும் நாம் கண்டடையலாம். அப்படிப்பட்ட நேரங்களில் எப்போது வீட்டில் இருக்கிறோமோ? அப்போதெல்லாம் நேரம் செலவழிக்க முயற்சிக்கலாம். விளையாட்டில் குழந்தைகளுடன் ஒன்றாக நேரத்தைச் செலவிடுவது அவர்களுடன் நெருக்கமான உறவை பேண உதவும். குழந்தைகள் ஒன்றாக விளையாடும் போது, அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதோடு அவர்களின் மன அழுத்தமும் குறைகிறது. அதுமட்டுமல்லாமல் ஒருவருக்கொருவர் மிக இயல்பாக பல்வேறு விசயங்கள் குறித்து உரையாடல்களை நிகழ்த்தும் வாய்ப்பையும் பெறுகின்றனர். இப்படி மகிழ்ச்சியாக பல்வேறு நிகழ்வுகளில் குழந்தைகளை ஈடுபடுத்தும் போது அவர்கள் குடும்பத்தோடு ஒன்றிணைகின்றனர். குறிப்பாக குழந்தைகள் பெற்றோருடன் அதிக நேரம் விளையாடும் போது குழந்தைகள் அவர்களிடமிருந்து அதிக அறிவைப் பெறுகின்றனர். ஏனென்றால் விளையாடுவது என்பது வெறும் கேளிக்கை சார்ந்த விஷயமாக மட்டும் இல்லாமல், பெற்றோர் தங்களது அறிவையும் அனுபவங்களையும் தங்கள் குழத்தைகளிடம் கடத்துவதற்கான களமாகவும் அமைந்து விடுகிறது. அதனால் மின்னணு சாதனங்கள் இல்லாமல் ஒருமணி நேரத்தை குழந்தைகளுடன் செலவிட்டுப் பாருங்கள். எத்தனை மகிழ்ச்சிகரமான சூழல் உங்களுக்குக் கிடைக்கிறது என்று. பின்னர் தினமும் ஒருமணி நேரப் பழக்கமாகவும் இதனை மாற்றுவதற்கு முயற்சி செய்யலாம். தொடக்கத்தில் இதைக் கடினமாக உணர்ந்தாலும் அன்றாடச் செயல்பாடுகளில் ஒன்றாகவே நாள்பட மாறிவிடும். அதன் பிறகு குழந்தைகளோடு குழந்தைகளாக நாமும் நமக்குத் தெரிந்த விளையாட்டில் நடை போடுவோம்… விளையாட்டின் நோக்கத்தினையும், அதன் காரணத்தையும் அறியச் செய்யும் வகையில் தொடர்ந்து உரையாடுவோம்… இது பல வகையில் நம் மனங்களுக்குப் புத்துணர்ச்சியையும், குதுகலத்தையும் கொடுக்கும்! மிக முக்கியமாக, சமூகத்தில் பிறருடன் இணக்கமாக குழந்தைகள் பழகும் வாய்ப்பினை விளையாட்டின் வழியாகக் கற்றுக் கொடுக்க முடியும். இதை எல்லாவற்றையும்விட, குழந்தைகள் அலைபேசி உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்களின் மீதான அதீத ஆர்வத்தினை கைவிட துணை புரியும். தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாட்டினை படிப்படியாக குறைக்கவும் வழி வகுக்கும். குழந்தைகள் ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சி மிக்கவர்களாக மிளிர்வார்கள் என்பதிலும் ஐயமில்லை! குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குவோமா…? ரெடியா நீங்க? என்னது எப்போதிருந்தா…? இன்னைக்கே ஆரம்பிங்க! மு.தமிழ்ச்செல்வன் இவர் சமூகம், அரசியல், கல்வி, ஊடகம், விமர்சனம் எனப் பல தலைப்புகளில் தொடர்ச்சியாகக் கட்டுரைகளை எழுதி வருகிறார். இளைய தலைமுறையினரிடம் பல்வேறு தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எளிமையாகக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் எழுதி வருகிறார். இவரின் சிறுகதை, சிறார் கதைகள் பல்வேறு இதழ்களில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஊடகக்கல்வி, எழுத்தாற்றல், மேடைப் பேச்சாற்றல் உள்ளிட்ட பயிற்சிகளை 400 க்கும் மேற்பட்ட பல்வேறு குழுக்களுக்கு வழங்கியிருக்கிறார். பட்டாசுத் தொழிலாளிகள் துயர்மிக்க வாழ்வியலை மையமாகக் கொண்ட கரிக்காசு இவரது முதல் நாவல். இவர் இதுவரை 20 நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.
- அறமதியின் கதை - 4
சகோதரத்துவம் - அன்பென்னும் அடித்தளம் அறமதியின் முதல் வளையலிலிருந்து பாய்ந்த ஒளிக்கீற்றில் அன்பினி பயணித்தாள். ஒளி திடமாகி ஒரு திரவம் போல மாறியது. அன்பினி இப்போது நீந்திக் கொண்டிருந்தாள். அன்பினி இப்போது எங்கே இருக்கிறாள் தெரியுமா? அவள் உடம்பில் இருக்கிற ஒரு சின்ன இரத்த நாளத்தில். பாய்ந்தோடிய இரத்தம் அவளை ஒரு சவ்வுப் பெட்டிக்குள் தள்ளியது. படபடப்போடு அன்பினி அங்கே பார்த்த போது, அறமதி அமைதியாக ஒரு கோளம் மீது அமர்ந்திருந்தாள். "நம்ம எங்க இருக்கோம்?" அன்பினி கேட்டாள். "உன் உடம்புக்குள்ள இருக்குற ஒரு செல்லுக்குள்ள..." என்றாள் அறமதி. அப்போதுதான் கவனித்தாள் அன்பினி. அவள் மிதந்து கொண்டிருந்த ஜெல்லி போன்ற திரவம் சைட்டோபிளாசம் (Cytoplasm). திரவத்தின் மேல் வண்ண வண்ணப் பொருட்கள் மிதந்து கொண்டிருந்தன. அவளை முந்தித் தள்ளிவிட்டு மின்மினிப் பூச்சி போல ஒரு மைட்டோகாண்ட்ரியா மிதந்து சென்றது. "அறமதி, நீ உட்கார்ந்திருக்கிறது நியூக்ளியஸ் தானே... இதுதானே இந்தச் செல்லோட கட்டுப்பாட்டு மையம்..." என்று உற்சாகமாக சொன்னாள் அன்பினி. "ஆமா, சரியா சொன்ன. இந்தச் செல்லுக்குத் தன்னிச்சையாக இயங்க முழு சுதந்திரம் இருக்கு." என்றாள் அறமதி. "ஆமா. நான் படிச்சிருக்கேன். ஒரு செல் தானே தன்னோட முடிவுகளை எடுக்கும்னு. தனக்கு ஒரு ஆபத்துன்னா தற்காத்துக்கும். உணவுத் தேவை, கழிவு நீக்கம் இப்படிப் பல வேலைகளைச் சுயமா செய்யுமாம்... படிச்சதை நேர்ல பார்க்க ஆச்சரியமா இருக்கு அறமதி" என்றாள் அன்பினி. "ஆனா, ஒரு சின்னக் கேள்வி... இந்தச் செல்லை உன் உடம்பிலிருந்து பிரிச்சுத் தனியா வச்சா என்ன ஆகும்?" "அது இறந்துடுமே! மத்த செல்களோட சேர்ந்து இருக்கும்போதுதானே அது உயிர்வாழ முடியும்?" "சரியான பதில்... கோடிக்கணக்கான செல்கள் ஒன்ன ஒன்னு அழிச்சுக்காம, உன் உடம்புல சேர்ந்து இயங்குறதுக்கு காரணம் என்ன தெரியுமா?” கொஞ்சம் யோசித்த அன்பினி, “DNA” என்றாள். “கரெக்ட், உன் உடம்புதான் நம் இந்திய நாடு. இங்க இருக்கிற ஒவ்வொரு செல்லும், இந்தியக் குடிமக்கள். இந்தச் செல்கள் எப்படி இயங்கணும்னு சொல்லுற தகவல்கள் DNA-ல இருக்குது. அதே மாதிரி, நம்ம நாடு எப்படி இயங்கணும்னு வழிகாட்டுறது அரசியல் அமைப்புச் சட்டம். எல்லா குடிமக்களுக்கும் சுதந்திரம் இருக்கு — சிந்திக்க, செயல்பட, வழிபட! மூளை செல்லோ இல்ல தோல் செல்லோ.. எல்லாமே சமம் தான். அதே மாதிரி தான் நம்ம நாட்டுல எல்லா மக்களும் சமம். எந்த செல்லும் இங்கே தனித்து வாழ முடியாது. அது அர்த்தமுள்ளதா இருக்காது. அது போல தானே மக்களும்?" அன்பினி யோசித்தாள். அறமதி தொடர்ந்தாள், "தனிமனித கண்ணியத்தையும், நாட்டின் ஒற்றுமையையும் இணைக்கிற அந்தப் பாலம்தான் 'சகோதரத்துவம்'. நம்ம ஒருத்தரை ஒருத்தர் ஒரு உடன்பிறப்பைப் போல பார்த்தா மட்டும் தான் இங்கே எல்லோரும் சமம் அப்படிங்கிறதை ஏத்துக்க முடியும். நமக்கு கிடைச்ச இந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தணும். ஒவ்வொருத்தரும் அவங்க திறமையை நம்ம நாட்டோட, அதாவது எல்லா மக்களோட நலனுக்காகப் பயன்படுத்தணும்." "இப்போ புரிஞ்சது நீ ஏன் என்னை இங்க கூட்டிட்டு வந்தேனு”, அன்பினி சொன்னாள். சட்டென்று ஒரு கேள்வி அன்பினிக்குத் தோன்றியது. "நீ சொல்றது என் உடம்புல என்னவோ ஈஸியா நடக்குது... ஆனா ஒரு சமூகத்துல நடக்குறது சாத்தியமா...?" கேட்டாள் அன்பினி. இந்தக் கேள்வி அறமதியை உறைய வைத்தது. பழைய நினைவுகளுக்குள் கூட்டிச் சென்றது. துக்கம் அறமதியின் கண்களில் கண்ணீராய் நின்றது. அன்பினி அதிர்ந்து போனாள். “நீ ஏன் கலங்கி இருக்குற..? நான் உன்னை இப்படி பாத்ததே இல்லையே..” அறமதியின் துக்கம் அலையலையாய்க் காலத்தை நகர்த்தியது. எந்த அர்த்தமும் இல்லாமல் சிந்தப்பட்ட இரத்தம்... துடிதுடித்து இறந்த மனிதர்கள். துயரம் சுமந்த குழந்தைகள். அறமதியின் முகத்தில் இருந்த அந்தப் பெரிய வடுவிலிருந்து இரத்தம் கசிந்தது. “அந்த வடுவை நினைச்சா அழுகை வருது அன்பினி. மனிதர் வரலாற்றிலேயே இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை விடக் கொடுமையான ஒரு பெரிய இடப்பெயர்வு (Mass migration) வேறு எதுவும் இல்லை. பத்து லட்சம் பேர் கொல்லப்பட்டாங்க. ஒன்றரை கோடி பேர் அகதிகளா ஆனாங்க. யாரோ வரைஞ்ச ஒரு கோட்டுக்காக, சொந்த மண்ணை விட்டு விரட்டப்பட்டாங்க. எல்லாம் மதத்தின் பெயரால...” அன்பினி நடுங்கிப் போனாள். அறமதி சொன்ன எண்கள் அன்பினியின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. "ஒண்ணா சுதந்திரத்துக்காகப் போராடுனாங்க... அப்புறம் ஏன் இப்படி மாறினாங்க?" " 'நம்ம' - 'அவங்க' அப்படின்னு எப்பப் பிரிச்சுப் பார்க்கிறோமோ, அப்பவே வெறுப்புங்கிற நெருப்பு பத்திக்கிது. பிரிட்டிஷ்காரங்களை எதிர்த்த வரைக்கும் அவங்க 'இந்தியர்களா' இருந்தாங்க. ஆனா, ஒருத்தரை ஒருத்தர் மதத்தின் வழியா மட்டும் பார்க்க ஆரம்பிச்சப்போ, வெறுப்பு அவங்களைப் பிரிச்சுட்டது." அன்பினியின் கண்களுக்கு முன்னால் அந்த வண்ணமயமான நுண்ணுயிரி உலகம் மங்கத் தொடங்கியது. குளிரும் இருளும் நிறைந்த வேறொரு நிலப்பரப்பு அவளைச் சூழ்ந்தது. "வெறுப்பு மனிதர்களை மிருகங்களா மாத்தின அந்த நேரத்துலதான், ஒரு வயசான மனிதர் மனிதாபிமானத்தை மீட்கப் புறப்பட்டார்." கண்களை துடைத்துக்கொண்டு பேசினாள் அறமதி. "யார் அவர்?" - ஆர்வத்துடன் கேட்டாள் அன்பினி. "மகாத்மா காந்திஜி!" பெருமையோடு சொன்னாள் அறமதி. அன்பினியும் அறமதியும் இப்போது நவகாளியில் இருந்தார்கள். கடும் குளிர். கால்களில் காலணிகள் இல்லை. பாதையெங்கும் குப்பை, மலம், கூர்மையான கற்கள். அந்த முட்கள் நிறைந்த பாதையில் அவர் அமைதியாக நடந்தார். அமைதிக்காக நடந்தார். ஏழு வாரங்கள்... நாற்பத்தேழு இருண்ட கிராமங்கள்... எங்கே தீ பற்றி எரியுதோ அங்கே அன்பையே மருந்தாகத் தந்தார். "அவருக்குப் பயமா இல்லையா... கலவரம் நடக்கும் போது எப்படித் தைரியமா இங்க வந்தாரு..." என்று அன்பினி கிசுகிசுத்தாள். "அவர் உண்மையையும் அகிம்சையையும் நம்பி இங்கே வந்தாரு. எதிரிகளாக இருந்த மக்கள் மத்தியில் தங்கினாரு. எல்லா மனிதர்களும் சகோதர சகோதரிகளுன்னு சொன்னாரு. அன்பு தான் கடவுள்னு புரிய வச்சாரு. எந்த ஆயுதமோ, பாதுகாப்போ இல்லாத ஒரு வயசான மனிதர் முன்னாடி வெறுப்பு தோத்துப் போச்சு." “அன்பு ஜெயிச்சிருச்சு...” அங்கிருந்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் முகத்தில் நம்பிக்கை ஒளி வீசியது. அன்பினியும் அவர்களுள் ஒருவராக இருந்தாள். “அமைதி திரும்பிருச்சு.. அன்பு ஜெயிச்சிருச்சு..” என்று மீண்டும் மீண்டும் தூக்கத்தில் சொல்லிக்கொண்டிருந்தாள் அன்பினி. ஆனால், வார்த்தைகள் வெளிவரவில்லை. கழுத்தை யாரோ நெரிப்பது போல உணர்ந்தாள். மூச்சு விட முடியவில்லை. இதயம் வேகமாக துடித்தது. (அறிவோம் தெளிவோம் ) சுகன்யா ராமநாதன் எழுத்தாளர், கதைசொல்லி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட முகிழ் சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். தற்போது துபாயில் வசிக்கிறார்.
- நீங்கள் எப்போதும் தனியாக இல்லை!
வீட்டில் பெற்றோர்கள் தனியாக உங்களை விட்டுவிட்டு ஒருநாள் கடைக்குப் போயிருப்பார்கள். அப்போது நீங்கள் என்ன நினைப்பீர்கள்? “வீட்டில் நான் மட்டும்தான் இருக்கிறேன்!” என்று தோன்றுமா? ஆனால் உண்மையில், நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை! ஆமாம், உங்களைச் சுற்றியும், உங்களுக்கு உள்ளேயும் எப்போதும் நுண்ணுயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. உங்கள் முகத்தில் இப்போது கூட கோடிக்கணக்கான மிகச் சிறிய “டெமோடெக்ஸ்” (Demodex) சிறிய உண்ணிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ‘பூச்சி’ என்று சொல்லாமல், உண்ணி என்று சொல்வதற்கும் காரணமுள்ளது. பூச்சிகளுக்கு ஆறு கால்கள் இருக்கும். அப்படியில்லை என்றால், அவை பூச்சிகள் வகைப்பாட்டில் வராது. மீண்டும் ‘டெமோடெக்ஸ்’ என்னும் உண்ணிகளுக்கு வருவோம். அவை மனிதர்களின் தோலில் இயல்பாக வாழும் நுண்ணுயிர் உலகத்தின் ஒரு பகுதியாகும். கண் இமைகள், புருவம், மூக்குப் பகுதிகளில் இருக்கும். தோலில் உருவாகும் எண்ணெய் மற்றும் இறந்த செல்களை உணவாக உண்ணுகின்றன. பெரும்பாலான நேரங்களில் அவை எந்தத் தீங்கும் செய்யாது. அடுத்தது, வீட்டில் நாம் உபயோகப்படுத்தும் குடிநீர். நேரடியாக குழாயில் இருந்து நாம் பிடித்து அருந்தும் நீரிலும் நுண்ணுயிர்கள் இருக்கும். காய்ச்சிய பின்னும் இருக்கும். எந்த மாதிரி பாக்டீரியாக்கள் என்பதில்தான் விஷயமே இருக்கிறது. பெரும்பாலான கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் (coliform bacteria) மண், செடிகள் மற்றும் விலங்குகளின் உடலில் இயல்பாகக் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்காதவை. ஆனால், அதே வகையைச் சேர்ந்த ஈ.கோலை (E. coli) பாக்டீரியாக்கள் குடிநீரில் இருந்தால் வயிற்று நோய்களை ஏற்படுத்தலாம். இதற்காகவே தண்ணீரைக் காய்ச்சிக் குடிக்கிறோம். அதுமட்டுமில்லை, நமக்கு உள்ளேயும் வெளியேயும் கோடிக்கணக்கான நல்ல வைரஸ்கள் கூட இருக்கின்றன. உங்களுக்கு ஒன்று தெரியுமா? கங்கை நீர் புனிதம் என்று சொல்கிறோம் அல்லவா, அதற்குக் காரணம் கூட கங்கை நீரில் உள்ள பாக்டீரியோபேஜ் (Bacteriophage) என்னும் வைரஸ்கள்தான். இவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் வைரஸ்கள். இவ்வகை வைரஸ்கள் நம் உடலிலும் இருக்கின்றன. நம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொன்று நமக்கு நன்மை விளைவிக்கின்றன. ஆக, இரண்டு விஷயங்களை நாம் புரிந்து கொள்ளலாம். முதலாவது, நாம் எப்போதும் தனியாக இல்லை. நமக்குத் துணையாக நுண்ணுயிர்கள் உள்ளன. இரண்டாவது, எல்லா நுண்ணுயிர்களும் தீங்கு விளைவிப்பவை அல்ல. ‘நுண்’ உயிர்கள் இல்லாமல் எந்த ‘பெரிய’ உயிரினமும் வாழ முடியாது. சின்ன விஷயம் பெரிய செய்தி! ஹேமபிரபா இவர் சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் “உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல் துறையில்” உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழில் அறிவியல் கட்டுரைகள், கதைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் உள்ளிட்டவற்றை எழுதி வருகிறார். இவருடைய முதல் நூல், கரோனா வைரஸ் பெருந்தோற்று குறித்த “இதுதான் வைரல்: அறிவியல் பார்வையில் கரோனா”. சிறார்களுக்காக இவர் எழுதிய “அறிவுக்கு ஆயிரம் கண்கள்” நூல் பரவலான வாசகர்களைச் சென்றடைந்து பாராட்டைப் பெற்றது. இவர் பல்வேறு தளங்களில் பொதுமக்களிடையே அறிவியல் பரப்புரையும் செய்து வருகிறார். தொடர்புக்கு: hemazephyrs@gmail.com
- வளரிளம்புதிர்ப் பருவம் - 11
உலகெங்கும் ஆண்மையின் அடையாளப் பெருமிதத்துடன் வளர்க்கப்படும் ஆண் குழந்தைகளுள் ஒருவனாகவே ஜேமியும் இருக்கிறான். கேட்டி தனக்குப் பிடித்த ஒருவனுக்கு அனுப்பிய படத்தை அவனே தனது நண்பர்களுக்கு அனுப்பினான். நான் ஆண்மையின் அடையாளம், தனது நண்பர்களை விடச் சிறந்த ஆண், பெண்கள் விரும்பும் ஆண் என்று பெருமையாகக் காட்டிக்கொள்ளும் செயல். அதன்மூலம் மற்ற ஆண்களின் மனதுள் உருவாகும் பொறாமையை ரசிக்கவும் முடியும். அந்தப் பொறாமையை ஜேமியும் வெளிப்படுத்தினான். இனி அவனை நம்பிப் பெண்கள் யாரும் தனிப்பட்ட படங்களை அனுப்ப மாட்டார்கள் என்று பிரையோனியிடம் கூறினான். "பொண்ணுங்களுக்கு உன்னைப் பிடிக்கும்னு நினைக்கறியா?" என்று பிரையோனி கேட்டார். இல்லை, கண்டிப்பா இல்லை. ஏன் கண்டிப்பா இல்லை? ஏன்னா... நான் அசிங்கமா இருக்கேன். அது உனக்கு என்ன உணர்வைத் தருது? நான் அசிங்கமா இல்லைன்னு சொல்ல மாட்டீங்களா? நான் சொல்றது முக்கியம் இல்ல. 'சாதாரணமா எல்லோரும் பேசுவது போலப் பேச மாட்டீங்களா?" என்றான் ஜேமி. நீ இப்படி ஏதாவது சொல்லும்போது, அதெல்லாம் இல்லை என்று நான் சொல்லணும்னு நினைக்கறியா? நீ ஏன் உன்னை அசிங்கமா நினைக்குற? அசிங்கமா இருக்கறது உனக்கு எப்படி இருக்கு? "நீங்க என்னை ஏதாவது சொல்ல வைக்கறீங்க. என்னை ஏதாவது சிக்கலில் மாட்டிவிடத் தந்திரம் பண்றீங்க!" ஜேமி எழுந்து கத்தத் தொடங்கினான். வெளியே நின்றிருந்த காவலர் எச்சரித்தார். ஜேமி அமைதியாக நின்றான். அவர் சென்றதும், நீங்க என்ன பண்றீங்க? என்று குரலைக் கடுமையாக்கினான். பிரையோனிக்கு அருகில் சென்று திடீரென "ஹே!" என்று குரல் எழுப்பினான். அவர் திடுக்கிட்டார். "ஜேமி, அங்கே போய் உட்காரு." பிரையோனி அழுத்தமாகச் சொன்னார். அங்கும் இங்கும் நடந்து தனது கோபத்தை வெளிப்படுத்திய பிறகு ஜேமி உட்கார்ந்தான். உரையாடல் தொடர்ந்தது. உனக்கு டாமியும் ராயனும் நண்பர்கள். மூவரையும் மற்றவர்கள் கேலியும் கிண்டலும் பண்ணியதா ஏற்கனவே சொன்னாய். எப்படியெல்லாம் கேலி செய்தாங்க? உங்களுக்கு அதைக் கேட்பதில் ஆர்வமா? தெரிஞ்சுக்கவே கேட்கிறேன். சொல்லு. "ஆமா... பட்டப்பெயர் வச்சு அழைப்பாங்க. கீழே தள்ளிவிட்டு எச்சி துப்புவாங்க." என்று ஜேமி சொன்னான். உனக்கு ஏன் இன்ஸ்டாகிராம் வேணும்? வேணும். மத்தவங்க பக்கங்களைப் பார்க்க. இல்லேன்னா எல்லாவற்றையும் பார்க்க முடியாது. நீ இன்ஸ்டாவில் நிறையப் பெண்களை, விளம்பர நடிகைகளை Follow பண்ணியிருக்க. ஆமாம். நீ ஏன் நிறைய படங்களையும் இன்ஸ்டாவில் பதிவு பண்ணியிருக்க? அதனால் என்ன? நீ நண்பர்களோடு மகிழ்ச்சியா இருப்பதைக் காட்டிக்கொள்ள விரும்பினாயா? யாராவது உனக்குப் பதில் போட்டால் அதன்மூலம் நட்பை உருவாக்கலாம்னு நினைச்சியா? இல்ல...இல்ல . நீங்க என்ன சொல்ல வரீங்க? உன்னோட படங்களுக்கு கேட்டி கமெண்ட் பண்ணியிருக்கா. ஆமாம். பிரையோனி சில தாள்களை எடுத்துக் காட்டுகிறார். ஜேமியின் இன்ஸ்டாகிராம் பதிவுகள், கெயிட்டியின் எதிர்வினைகள் அச்செடுக்கப்பட்ட தாள்கள். ஜேமி பதறியபடியே,"இதைப் பற்றியெல்லாம் கேட்க உங்களுக்குச் சட்டப்பூர்வ அனுமதி இருக்கா?" என்று கேட்டான். "இருக்கிறது. உனக்கு உதவி தேவையென்றால் இங்கிருந்து யாராவது ஒருவரை அழைத்து அருகில் வைத்துக்கொள்ளலாம்." என்று பிரையோனி கூறினார். இல்லை.யாரும் தேவையில்லை. இந்த emoji பதிவுகளுக்கு என்ன அர்த்தம் ஜேமி? இது Kidney bean emoji தானே! இதற்கு என்ன அர்த்தம்? நான் Truth Group உறுப்பினர் என்று நினைச்சு அவ அந்த emoji போட்டிருக்கா. Truth Group அப்படின்னா என்ன? பொண்ணுங்களைப் பிடிக்காது என்று சொல்றவங்க. நீயும் அதில் உறுப்பினரா? இல்லை. ஆனால் அங்கு என்ன பேசுறாங்க என்பது தெரியும்தானே! ஆமாம். Incel பற்றித்தான் எல்லோரும் பேசினாங்க. நீயும் Incel, அப்படித்தானா? சற்றே அதுபற்றி விரிவாகச் சொல்றியா? லவ் வேணும். ஆனால் கிடைக்காது. எல்லாமே Red Pill மாதிரித்தான். பெண்களை வெறுக்கும் ஆண்கள் பற்றியது. 80, 20 என்றும் ஒன்று இருக்கு. 80% பெண்கள் 20 % ஆண்களைத்தான் விரும்புவாங்க. இதுவும் உண்மைதான். உனக்கு ஏன் கேட்டி இத்தனை Emoji போட்டிருக்கா? ஏன்னா அவளுக்கு என்னைப் பிடிக்காது. ஏன்னா, நான் அசிங்கமா இருக்கேன். இதைப்பற்றி அவளிடம் பேசினாயா? ஆமாம். ஆனா அவ... தலையை ஆட்டி சிரிச்சிட்டு போயிட்டா. அதுக்காக அவளை நான் எதுவும் செய்யல. நான் அவளைக் கொன்றேன்னு நினைக்கிறீங்களா, அந்த வீடியோ உண்மையில்லை. அவ கெட்டவள். அவளை நான் கொன்றிருக்கணும். ஆனால் நான் கொல்லல. அவளிடம் நான் பேசினேன். அவ நண்பனுக்கு அனுப்பிய போட்டோ பற்றிப் பேசினேன். அப்படி அரை நிர்வாணப் படத்தை மற்றவர்கள் பார்த்திருக்கக் கூடாது. அதுக்காக கவலைப்பட வேண்டாம்னு சொன்னேன். அவளுக்கு என்மேல் கோபம் போயிருச்சான்னு கேட்டேன். இப்படிக் கேட்டால் அவளுக்கு என்னைப் பிடிக்கும்னு நினைச்சேன். என்னோடு சாப்பிட வர்றியா? என்று கேட்டேன். அவ சிரிச்சுக்கிட்டே மறுத்துட்டா. அதற்கு அப்புறம்தான் தான் அவளிடமிருந்து நிறைய emoji வரத் தொடங்குச்சா? ஆமாம். நீ வெளியே கூப்பிடதுக்காக இப்படி உன்மேல் தாக்குதலைத் தொடங்கினாளா? ஆமாம். அவ கெட்டவள். மற்றவர்களைக் கேலி செய்பவள். அன்று நான் என்ன வேணாலும் பண்ணியிருக்க முடியும்.ஆனால் எதுவும் பண்ணல. நான் அவளைக் கொல்லல. ஜேமி, கொலை பண்ணுவது தப்பு என்று உனக்குத் தெரியுமா? அதுக்காக உனக்கு என்ன தண்டனை என்று தெரியுமா? தெரியும். சரி ஜேமி. உனக்கு நன்றி. இதுதான் நமது கடைசி சந்திப்பு என்று பிரையோனி கூறினார். ஜேமிக்கு அதிர்ச்சி. என்னைப் பற்றி நீதிபதியிடம் என்ன சொல்லுவீங்க? நான் கொலை பண்ணல. உங்களுக்கு என்னைப் பிடிக்குமா? ஏதாவது தப்பா சொன்னீங்க என்றால் சும்மா விடமாட்டேன் என்று கத்தினான். காவலர் வந்து ஜேமியை அழைத்துச் சென்றார். பிரையோனிக்கு அதிர்ச்சி, இரக்கமாகவும் இருந்தது. உணர்வுகளைக் கையாளத் தெரியாத சிறுவன். பாவம்! அவரது கண்களில் நீர். சற்று நேரம் கழித்து அந்த அறையிலிருந்து வெளியேறினார். தன்னை ஒரு பெண் வெறுக்கிறாள் என்பதைத் தாங்க இயலாத ஜேமி திடீரெனக் கோபம் கொண்டதால் மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டான். அவனால் ஓர் உயிர் போயிருக்கிறது. தொடர்ந்து பேசுவோம்.
- கோடை விடுமுறையின் தேன்துளிகள்: ‘கோல்யா சினிட்சினின் நாட்குறிப்புகள்
சோவியத் ரஷ்யா நமக்கு அளித்துள்ள பொக்கிஷங்களில் ஒன்று “கோல்யா சினிட்சினின் நாட்குறிப்புகள்” என்ற நூல். நிகோலாய் நோசோவ் எழுதிய இந்த நூல் தமிழில் ரகுரு என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 2018ல் வாசல் வெளியீடாக வந்த நூல் இன்னும் போதிய கவனம் பெறவில்லையோ என்றே தோன்றுகிறது. கோடை விடுமுறை என்றாலே நாம் குழந்தைகளாக இருந்த போது குதூகலமாக இருந்த நாட்கள் எப்போதும் நினைவுக்கு வரும். வளர்ந்தவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். ஆனால் இன்றோ கோடை விடுமுறையில் குழந்தைகளை ஏதேனும் ஒரு வகுப்புக்கு அனுப்புவோமா அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வகுப்புக்கு அனுப்புவோமா என்று திட்டம் தீட்டப்படுகிறது. சில வீடுகளில் விடுமுறை முடியும் முன்னர் தன் குழந்தை ஏதேனும் ஒரு கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசரம், இன்னும் சிலருக்கு குழந்தையின் தொந்தரவு இல்லாமல் இருந்தால் போதும் என்ற எண்ணம்; இன்னும் சிலருக்கு தாங்கள் வேலைக்குச் செல்லும் வேளையில் குழந்தைகளை கவனித்துக் கொள்ள இயலாமையால் வேறு வழியின்றி ஒரு வகுப்பில் சேர்க்கின்றனர். இவ்வாறு பல காரணங்களோடும், முடிவுகளோடும் அருமையான கோடைக் காலம் நகர்கிறது. இப்படி ஒரு சூழலில் முதலில் பெரியவர்களும், பின்னர் குழந்தைகளும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் “கோல்யா சினிட்சினின் நாட்குறிப்புகள்.” கோல்யா சினிட்சின் என்ற சிறுவன் தன் கோடைக்கால நாட்களை டைரிக் குறிப்புகளாக எழுதுவதுதான் இக்கதை. தன் தினசரி வாழ்வில் நடப்பதை இச்சிறுவன் எழுதி வருகிறான். தன் டைரியின் பக்கங்கள் முடிவுற்றதால் இக்கதையும் முடிவுறுகிறது என கோல்யா எழுதுவது இந்த நூலின் ஆசிரியர் குழந்தைகளுக்கே உண்டான அழகியலுடன் தொடக்கம் முதல் முடிவு வரை எழுதியதைக் காட்டுகிறது. கோல்யா, தான் டைரி எழுதத் தொடங்கும் போது என்ன எழுதுவதென்று தெரியாமல் “இன்று எழுதுவதற்கு ஒன்றுமில்லை” என குறிப்பிடுவது குழந்தைகளின் வெளிப்படையான, நேர்மையான வாழ்வியலைக் காட்டுகிறது. எழுத ஒன்றுமில்லாத சிறுவன் போகப்போக ஒரே நாளில் பல பக்கங்கள் எழுதுகிறான். அவன் பயணம் செல்லும் இடமெல்லாம் அந்த டைரியும் உடன் செல்கிறது. உலகம் முழுக்க கோடைக் காலம் என்பது குழந்தைகள் டைரி எழுதப் பழக நல்ல நேரம் தான் போல, ஏனெனில் மற்ற மாதங்களில் புத்தகச் சுமையே மேலோங்குகிறது. இவ்வாறு துவங்கும் கதையில், கோடையில் குழுவாக ஏதாவது ஒரு கூட்டு உழைப்பினை குழந்தைகள் செய்வது சோவியத் ரஷ்யாவில் வழக்கமானது. அவ்வாறு கோல்யாவும் அவனது தோழர்களும் அவர்களின் குழுவுடன் பல ஆலோசனைகளுக்கும், யோசனைகளுக்கும் பிறகு தேனீக்கள் வளர்ப்பது என்று முடிவு செய்து அப்பயணத்தினை தொடங்குகின்றனர். அதனைப் பற்றி அறிந்துகொள்ள ஆசிரியரை நாடுகின்றனர். மேலும் அறிந்துகொள்ள மற்றும் தேனீக்களை சேகரிக்க மூன்று நண்பர்கள் தங்களின் நகரத்தினை விட்டு, காடு வழியாக, கிராமத்திற்குப் பயணம் மேற்கொள்கின்றனர், அங்கு தங்குவதாக இருந்த ஒரு சிறுவனின் அத்தை வீடு பூட்டியிருக்க, தாங்களாகவே ஒரு தற்காலிக கூடாரம் அமைத்து தங்குகின்றனர். அதில் சந்திக்கும் பிரச்சனைகள், அனுபவங்கள், தேனீக்களைப் பின் தொடர்வது, ஏதேச்சையாக சந்திக்கும் பெரியவர் என அனைத்தும் அவர்களின் மனதில் மட்டுமல்லாமல் நமக்குள்ளும் ஆழமாக பதிகிறது. இப்பயணம் தொடர்பாக உண்மையைச் சொல்லாமல் வீட்டில் மூவரும் மாட்டிக்கொள்ளும் காட்சி அனைவருக்கும் சிரிப்பூட்டக்கூடியது. தபாலில் தேனீக்களை பெறப்போகிறோம் என்ற கோல்யாவின் குறிப்பு அவனுக்குப் போலவே நமக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது. தேனீக்கள் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் காட்டிய மூவர், அவர்களின் தவறினால் சேகரித்த தேனீக்களை கோட்டை விட்டதனாலும், தேனீக்களிடம் வாங்கிய கொட்டுகளாலும், தேனீக்கள் வளர்க்கும் பணியினை கைவிட முடிவு செய்கின்றனர், இவர்கள் தவிர மற்ற சிறுவர்கள் கடிதம் மூலம் தபாலில் தேனீக்களைப் பெறுகின்றனர். இம்மூன்று சிறுவர்கள் இல்லாமல் மற்றவர்கள் அப்பணியினை செவ்வனே தொடர்ந்து செய்வது, அதனால் இவர்கள் வருந்தி, பின்னர் அவர்களின் தோழர்களுடன் இணைந்து செயல்பட்டு, சிறப்பாக தேனீக்களை வளர்த்து பத்திரிக்கையில் இவர்களைப் பற்றிய செய்தி வந்து, இவர்கள் பிரபலமாவது வரை இக்குழுவின் பயணமானது அருமை. இவற்றை வாசிக்கும் போது உலகின் எல்லா திசையிலுள்ள குழந்தைகளும் ஒன்று போல் தான் உள்ளனர் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. அவர்களின் சேட்டைகள், வம்புகள், சண்டைகள், கற்றுக்கொள்ளும் ஆர்வம், பிடித்த வேலையில் முழு ஈடுபாடு, குழுவாக செயல்படுதல், கவனித்தல் என அனைத்திலும் குழந்தைகள் ஒன்று போல தான் உள்ளனர். இக்குழுவின் வாழ்க்கையில் தேனீக்களும் ஒரு பகுதியாகிவிடுகின்றன. இக்கதையில் வரும் ஆசிரியர் நீனா செர்ஜியேவ்னா மாணவர்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் நேரடியாக பதில்கூறாமல் அவர்களே கண்டறியும் அனைத்து உத்திகளையும் பயன்படுத்துகிறார். அதனால் மீண்டும் மீண்டும் அவரிடமே மாணவர்கள் கேள்விகளுடன் படையெடுக்கின்றனர். “மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தால் போதும்” என்ற உவமையை பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது. அவ்வாறு கற்பது வாழ்நாள் கல்வியாக மாறும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. சோர்வில்லாமல், அறிவியல் பார்வையுடன் தேனீக்களின் வாழ்வைப் படிக்கும் இச்சிறுவர்கள் மூலம் நாம் தேனீக்களைப் பற்றி கற்றுக் கொள்கிறோம். அவர்கள் செய்யும் விதவிதமான ஆராய்ச்சிகளை வாசிக்கும் போது புன்னகையை வரவழைக்கின்றன. அறிவியலை இப்படியும் கற்கலாமா என்று தோன்றுவதற்கு பதிலாக இப்படித்தான் கற்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. சோவியத் ரஷ்யாவிற்கே உரித்தான கூட்டு முயற்சிகளையும், குழுக்களையும் குறிக்கும் வண்ணம் “பாலர் சங்கக்குழு”, “இளம் இயற்கையாளர் வட்டம்” மற்றும் “மாணவர்களைக் கொண்ட பள்ளி நிர்வாகக் குழு” போன்றவைகள் புத்தகம் முழுக்க நிரம்பியுள்ளன. நம்மிடம் இவ்வாறு குழுக்கள் இல்லையே என்ற ஏக்கம் எழுகிறது. இங்கு குழந்தை தொழிலாளர்களுக்கும், குழந்தை உழைப்பாளர்களுக்கும் வித்தியாசம் தெரியாமலல்லவா இருக்கிறோம்! குழந்தைகளின் உள்ளார்ந்த தேடல்கள், அதற்கு அவர்கள் எடுக்கும் முயற்சிகள் தோல்விகள், மறுமுயற்சிகள், கற்றுக் கொள்ளும் புது திறமைகள், என அனைத்தும் இக்கதையில் இயல்பாக உள்ளன. சூழ்நிலைகளுக்கேற்ப முடிவுகள் எடுக்கும் தன்மை இயற்கையிலேயே குழந்தைகளுக்கு உண்டு என்பதையும், தங்களின் பொறுப்புகளை அவர்கள் கைவிடவும் செய்வர், விட்டதை விட்ட இடத்திலிருந்தே துவங்குவர் என்பதையும் இக்கதை நமக்குக் காட்டுகிறது. பாராட்டுகளை சிறுவர்கள் எதிர்கொள்ளும் விதம் பெரியவர்களுக்கு ஒரு பாடம்! இச்சிறுவர்கள் பிரபலமான பிறகு, நாட்டின் பல பகுதிகளிலிருந்து கடிதப் போக்குவரத்துகள் நடக்கின்றன. ஒவ்வொன்றும் அழகு தான். பல மூலைகளிலுருந்து குழந்தைகள் இணைந்தே வாழ்ந்துள்ளனர் சோவியத் ரஷ்யாவில். அவ்வாறு கோல்யாவிற்கு வரும் ஒரு கடிதத்தில் “தேனீ வளர்ப்பாளன்” என்று அச்சிறுவனைக் குறிப்பிட்டு பெறப்படுகிறது. தனக்குத்தான் விரும்புவது போன்று ஒரு அடையாளம் கிடைத்ததாக அவன் மகிழ்கிறான். அது தானாக வந்துவிடவில்லை. அவனின் உழைப்பிற்குக் கிடைத்த பரிசு. அப்படி ஒரு அடையாளம் இல்லாமல் தான் நம்மில் பலர் இருக்கிறோம். தாங்கள் கோடையில் செய்துள்ள இந்தப் பணி தன் நாட்டின் உருவாக்கத்தில் தங்களது “சிறிய பங்களிப்பு” என்கின்றனர் பெருமையாக. நாம் நமது குழந்தைகளின் பங்களிப்பாக எதைப் பார்க்கிறோம் என்று நினைக்கையில் சற்று அச்சமாக உள்ளது. செ. பிரியதர்ஷினி பொது நிர்வாகத்தில் முனைவர் பட்டம் பெற்று அரசு கல்லூரியில் நிதியாளராக பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் திருநெல்வேலி கிளை பொருளாளராகவும் உள்ளார்.
- காக்கை குருவி எங்கள் சாதி..
அன்று வயல் அறுவடை வேகமாக நடந்தது. நெல்மணிகள் களத்து மேட்டில் குவிந்தன. விவசாயி குப்பன் அவற்றை மூட்டைகளில் கட்டி மாட்டுவண்டியில் ஏற்றும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது மகன் குமரன் அவர் என்ன செய்கிறார் என்று பார்த்துக் கொண்டே நின்றான். களத்து மேட்டில் குவிந்திருந்த நெல்லைக் குருவிகள் தின்பதற்கு பறந்து ஓடி வந்தன. அதைப்பார்த்த குப்பன் கம்பெடுத்து அவற்றை விரட்டினார். அதையும் குமரன் பார்த்தான். மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார் குப்பன். உடன் மகன் குமரனையும் வண்டியில் ஏற்றிக் கொண்டார். வண்டி வீடு வந்து சேர்ந்தது. மகிழ்ச்சியுடன் நெல் மூட்டைகளை இறக்கினார். இந்த ஆண்டு நெல்சாகுபடி நல்லா இருந்தது என்று மகிழ்ச்சியுடன் சொன்னார். "குமரா.. இந்தத் தடவை நெல் நல்லா விளைஞ்சிட்டு.. நம் உறவினர்கள் மற்றும் அருகில் உள்ளவர்களுக்கெல்லாம் இன்னைக்கு நம் விவசாய நிலத்தில் விளைஞ்ச காய்கறிகளைக்கொண்டு சாப்பாடு போடணும்" என்றார். குமரனுக்கு புதிராக இருந்தது." நெல்லை தின்னவந்த குருவிகளை விரட்டினீங்க.. இப்போ ஊருக்கு சாப்பாடு போடப்போறேன்னு சொல்லுறீங்க" என்று வியப்புடன் கேட்டான். குப்பன் உடனே, "குமரா..நாம உழைச்சி கிடைக்கிற பொருளை நாலு பேருக்கு கொடுத்துச் சாப்பிடணும். அதுதான் நியதி" என்று சொல்ல, அந்த நாலு பேருல குருவி வராதா என்று குமரன் யோசித்தான். அதைப் பார்த்த குப்பன் உடனே, " குமரா..நீ சின்னப்பையன் உனக்குப் புரியாது..போ..போ" என்றார். குமரன் வீட்டுக்குள் சென்று தன் தாயிடம் விளக்கம் கேட்டான். அவர்"உன் அப்பாவிடமே விளக்கம் கேள்" என்று சொல்லிவிட்டு அவர் நகர்ந்து கொண்டார். குமரனுக்கு குழப்பமாகவே இருந்தது. மதியம் குப்பனின் வீட்டில் அனைவருக்கும் சாப்பாடு. குப்பனும் அவரது மனைவியும் வந்தவர்களை அன்புடன் உபசரித்து உணவு வழங்கினர். அவர்கள் சாப்பிட்டுவிட்டு, குப்பனுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டுச் சென்றனர். பின்னர் குப்பன் காக்கைக்கு தனியாக ஒரு இலையில் சாப்பாடு வைத்தார். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஒரு காக்கை ஓடி வந்தது. இலையின் அருகில் அமர்ந்தது. உணவைப் பார்த்தது. கா..கா..கா..என்று கத்தியது. சிறிது நேரத்தில் காக்கைகள் கூட்டமாக வந்து சேர்ந்தன. அனைத்து காக்கைகளும் ஒன்று சேர்ந்து அந்த உணவை உண்டன. குமரன் ஆச்சரியமாகப் பார்த்தான். நெல்லை உண்ணவந்த குருவிகளை விரட்டிய தந்தை இந்த காக்கைக்கு கூப்பிட்டுச் சாப்பாடு போடுறாரே என்று யோசித்தான். தன் தந்தையிடம் "அப்பா! நெல்லைத் தின்னவந்த குருவிகளை விரட்டினீங்க..இப்போ காக்கையைக் கூப்பிட்டுச் சாப்பாடு போடுறீங்க.." என்று கேட்க, குப்பன் சிரித்தார். "டேய்! காக்கை தான் மட்டும் தனியா சாப்பிடாது. நாலு காக்கைகளை கூப்பிட்டு பகிர்ந்து சாப்பிடும். அவ்வளவு உயர்ந்த குணம் உள்ளது காக்கை..அதனாலத்தான் காக்கைக்கு சோறுவச்சேன்" என்றார். "அப்படியா அப்பா" என்று குமரன் வியப்புடன் கேட்டான். அடுத்த நாள் காலை, குப்பனின் மனைவி வீட்டில் சமையல் அறையில் வடை சுட்டுக்கொண்டிருந்தார். வடை மணம் எங்கும் வீசியது. அப்போது மரத்தில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது ஒரு காக்கை. திடீரென்று பாய்ந்து ஒரு வடையை வாயில் கவ்விக்கொண்டு பறந்தது. இதைப் பார்த்த குப்பன் ஆத்திரம் அடைந்தார். "ஆ.. காக்கா" என்று சொல்லியபடி ஒரு கல்லை எடுத்து அந்த காக்கையை நோக்கி வீசினார். அது வடையை கீழே போடாமல் பறந்து சென்றது. இதை குமரன் பார்த்தான். "ஏப்பா..நேற்றுதான் காக்கா மற்ற காக்காக்களுக்கு கொடுத்து சாப்பிடுதுன்னு சொன்னீங்க.. இன்னைக்கு ஒரு வடையைத் தூக்கிட்டுப் போன காக்கையை கல்லைத்தூக்கி வீசுறீங்க" என்று கேட்க, குப்பன் கோபமாக,"இது திருட்டுக் காக்கை" என்று திட்டினார். உடனே,"இந்த காக்கையும் மற்ற காக்கைகளுக்கு கொடுத்துதானே வடையைச் சாப்பிடும்" என்று குமரன்கேட்டான். குப்பன்,வேகமாக," திருடறது தப்பு..அதான் அந்த காக்கை மீது கல்வீசினேன்" என்றார். குமரனும் விடவில்லை."ஏப்பா..நேற்று சோறு வச்ச மாதிரி..இன்னைக்கும் தனியா வடை வச்சிருந்தா அந்தக் காக்கை ஏன் திருடப் போகுது..நீங்க கொடுக்காததால்தானே காக்கை அதுவா எடுத்துட்டு ஓடிச்சி" என்று கேட்க,குப்பனுக்கு குப்பென்று வியர்த்தது. "ஆமா! நீ சொல்லுறது சரிதான்..நம்மளா கொடுத்தா அது ஏன் எடுத்துட்டுப் போகுது.." என்றவர், வடைகளை எடுத்து தனியாக ஒரு இலையில் வைத்தார். காக்கை மற்றக் காக்கைகளை கூப்பிட்டு வடைகளை தின்றன. குப்பனும் குமரனும் மகிழ்ச்சியுடன் பார்த்தனர். குப்பன் தன் மகனைப் பார்த்து," உனக்கு இவ்வளவு அறிவு எங்கிருந்து வந்துச்சப்பா?" என்று கேட்க," அதுவாப்பா..பாரதியார் பாட்டிலிருந்துதான் நான் தெரிஞ்சிக்கிட்டேனப்பா..அவர், காக்கை குருவி எங்கள் சாதி" என்று பாடியிருக்காருப்பா..மனிதர்களுக்கு பகிர்ந்துண்ட நீங்கள் பறவைகளுக்கும் பகிர்ந்துண்டு சாப்பிடணுமப்பா" என்றான். அதைக்கேட்ட குப்பன் மகனின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார். கோ.சுரேஷ்குமார் மேனாள் மேல்நிலைக்கல்வி வேளாண் அறிவியல் தொழிற்கல்வி ஆசிரியர், கல்வியாளர், சிறார் கதை ஆசிரியர், இயற்கை உணவு ஆர்வலர், "மைக்ரோகிரின்" வளர்ப்பு செயல்பாட்டாளர், வேளாண் விழிப்புணர்வு கட்டுரையாளர், பயிற்சியாளார்.
- சிறார் இலக்கியத்தின் ஒரு செவ்வியல் மீளுருவாக்கம்: ‘கொடி காட்ட வந்தவன்'
தமிழ்ச் சிறார் இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான எழுத்தாளர் ரேவதி அவர்கள் (இயற்பெயர் ஹரிஹரன்) 90-க்கும் மேற்பட்ட படைப்புகளின் மூலம் சிறார் இலக்கியத்துக்குக் குறிப்பிடத்தக்க பங்களித்திருக்கிறார். கோகுலம், பூந்தளிர் உள்ளிட்ட சிறார் இதழ்களில் பணியாற்றிய இவரது படைப்புகளில் மிக முக்கியமானது, ‘கொடி காட்ட வந்தவன்’ என்ற நாவல். இது வெளியான காலத்தில் பரவலான கவனம் பெற்று, ஒன்பது மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1978ஆம் ஆண்டு தமிழ்நாடு காந்தி நினைவு நிதி, மதுரை இதை முதன்முதலில் வெளியிட்டுள்ளது. 10/05/2026 அன்று ரேவதி அவர்களின் முதல் நினைவு நாளன்று அவரது குடும்பத்தினர் முன்னிலையில் ‘இந்நாவலின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டுக் ‘கதைவண்டி’ பதிப்பகம் சிறப்பான அஞ்சலி செலுத்தியது. தற்கால வாசிப்புக்கு அச்சில் இல்லாமலிருந்த இந்தச் செவ்வியல் படைப்பை அரிதின் முயன்று தேடிக் கண்டுபிடித்து நூலாக்கம் செய்துள்ள ‘கதைவண்டி’ பதிப்பாசிரியருக்கு மிகவும் நன்றி. அரசியல், சமூகம் சார்ந்த பிரச்சினைகளைச் சிறாரிடம் பேசலாமா? என இன்று கூட சிறார் எழுத்தாளர்கள் எழுதத் தயக்கம் காட்டும் சூழ்நிலையில் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பே தீண்டாமை குறித்து மிகவும் துணிச்சலாகவும், பிரச்சாரமாகவோ நீதிபோதனையாகவோ இல்லாமல், நேர்த்தியான கலை வடிவிலும் மிக எளிய நடையில் அழகான சித்திரமாகத் தீட்டித் தந்திருக்கிறார் ஆசிரியர். காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவையும், அவரது குரு சாவர்க்கரையும் தேசபக்தர்கள் என்றும், போராளிகள் என்றும் சிலர் போற்றித் துதிக்கும் இக்காலத்தில், நம் தேசத்தந்தை காந்தியடிகளின் சேவையையும், இந்திய விடுதலைப் போரில் அவர் ஆற்றிய பங்கையும் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டியது நம் கடமை. பதின்பருவத்தினர் தம்மைச் சுற்றியுள்ள சமூகத்தைப் புரிந்துகொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து பொறுப்புணர்வுடன் செயல்பட, நாம் கடந்து வந்த பாதையும், இந்திய வரலாறும் அவர்களுக்குத் தெரிய வேண்டியது மிகவும் அவசியம். அந்த வகையில் தமிழ்நாட்டில் காந்தியடிகளின் சுதந்திரப் போராட்ட எழுச்சியைப் பின்னணியாகக் கொண்டு சிறுவர்களுக்காக எழுதப்பட்ட முதல் நாவல் என்ற பெருமையை இந்நூல் பெறுகிறது. ஆசிரியர் தம் முன்னுரையில், “காந்தி இயக்கத்தின் கொள்கைகள் எந்தக் காலத்துக்கும், எந்த நாட்டுக்கும் பொருந்தும். இந்த அதிசயத்தை நமது வாழ்நாளிலேயே நாம் காணப்போவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்நூல் குழந்தைகளால் விரும்பிப் படிக்கப்பட்டால் இயக்கமே நடத்தி வெற்றி பெற்றதாக மகிழ்வேன்” என்று எழுதியிருக்கிறார். மோகன் என்ற 12 வயது சிறுவன் இந்நாவலின் கதாநாயகன். ஆங்கில அதிகாரிகளின் குழந்தைகளும் பணக்கார வீட்டுப் பிள்ளைகளும் படிக்கும் ஆங்கிலப்பள்ளியில் படிக்கும் சிறுவன், நாட்டுநடப்பு தெரியாமல் கிணற்றுத் தவளையாக வளர்கிறான். தன் தாத்தா நடத்தும் துணிக்கடை முன்பும், கள்ளுக்கடை முன்பும் விற்பனையைத் தடுத்து மறியலில் ஈடுபடும் காந்தி இயக்கத் தொண்டர்களைப் பார்க்கும்போது, கலகக்காரர் காந்தி என்ற தவறான எண்ணம் அவனுக்கு ஏற்படுகின்றது. பின் அந்த மறியல் போராட்டத்தின் உண்மையான நோக்கத்தையும், விடுதலைக்களத்தில் காந்தியடிகளின் பங்கையும் அவன் எப்படித் தெரிந்து கொண்டான் என்பது மீதிக்கதை. மேலும் காந்தியின் ஆணையை ஏற்றுத் தம் தென்னந்தோப்புகளை அழித்துவிட்டுக் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டுச் சிறை சென்ற ‘ஈரோட்டு ராமசாமி’ (தந்தை பெரியார்) குறித்தும் இந்நாவல் பேசுவது சிறப்பு. கள்/மது குடிப்பதால் குடும்பம் எப்படிச் சீரழிகிறது? சுதேசி இயக்கத்தின் அடிப்படை நோக்கமென்ன? அந்நியப் பொருட்களை வாங்கிக் குவிப்பதால் நாட்டின் பொருளாதாரம் எப்படிப் பாதிக்கப்படுகிறது? காந்தியடிகள் இடுப்பில் ஒரு துண்டு மட்டும் உடுத்த ஏன் முடிவு செய்தார்? உப்பு சத்தியாக்கிரகம் ஏன் நடத்தப்பட்டது போன்ற பல விவரங்களைச் சிறுவர்கள் இக்கதையை வாசித்துத் தெரிந்து கொள்ளலாம். கதையினூடாகச் சாதியக் கொடுமை, தீண்டாமை ஆகியவை குறித்துப் பேசுவது இந்நாவலின் தனிச்சிறப்பு. தீண்டத்தகாதவன் வீட்டு வாளியால் கிணற்றில் நீர் இறைத்தமையால் கிணறு தீட்டாகிவிட்டது என்று ஊர் மக்கள் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியடைகிறான் மோகன். இன்றளவும் பல கிராமங்களில் சாதி, தீண்டாமை கொடுமைகள் முற்றிலும் நீங்கியபாடில்லை என்பதால், இந்நாவல் இக்காலத்துக்கும் வாசிக்கப் பொருத்தமாயுள்ளது. தமிழ்ச் சிறார் எழுத்தாளர்களும், பதின்பருவத்தினரும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல். ஓவியர் கோ.ராமமூர்த்தி அவர்கள் வரைந்த அட்டைப்படமும், உள் ஓவியங்களும் மிகவும் அருமை. “ரேவதி அவர்களின் மகுடத்தில் ஒரு வைரம் தான் இந்நாவல்” என்று சாகித்திய பாலபுரஸ்கார் விருது வென்ற சிறார் எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி அவர்கள் கூறியிருப்பதை, நான் வழிமொழிகின்றேன். கொடி காட்ட வந்தவன் ரேவதி கதைவண்டி பதிப்பகம், சென்னை-34. செல்:- 7502340787. விலை ரூ 110/-. ஞா.கலையரசி ஞா.கலையரசி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில்பணிசெய்து ஓய்வுபெற்றவர். ‘மந்திரக்குடை,’ ‘பூதம்காக்கும்புதையல்,’ ‘நீலமலைப்பயணம்’ ‘பேய்த்தோட்டம்’ உள்ளிட்டசிறார்நூல்களின்ஆசிரியர். ‘சுட்டி உலகம்’ வலைத்தளம், ‘பூஞ்சிட்டு’ சிறுவர் மின்னிதழ் ஆகியவற்றின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார்.
- அறிவோம் ஆளுமை – 14
தலைமுறைகளின் ஒளிவிளக்கு முத்துலட்சுமி அம்மையார் ரதி : அத்தை, முத்துலட்சுமி அம்மையார் மாதிரி நீ தைரியமா இருக்கணும். பல பெண்களுக்கு முன்மாதிரியா இருக்கணும் அப்படின்னு அப்பா அடிக்கடி சொல்லுவாங்க. அப்படி அவங்க என்ன சாதனை பண்ணினாங்க? ஜோ : அவங்க ஒரு சாதனை இரண்டு சாதனை இல்லை.. பல சாதனைகள் செய்ஞ்சிருக்காங்க… ரதி.. புதுக்கோட்டையில் 1886 இல் பிறந்த அவங்க இந்தியாவில் பெண்கள் பள்ளியில் படிக்கவே பயந்த காலத்தில் கல்லூரியில் படித்து தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரானாங்க.. மருத்துவர் மட்டுமல்ல கல்வியாளர், சட்டம் இயற்றுபவர், சீர்திருத்தவாதி மற்றும் ஒடுக்கு முறைக்கும் அடிமைத்தனத்திற்கும் எதிராகப் போராடிய போராளி. நகுலன் : அடேயப்பா அவ்வளவு பெரிய ஆளா அவங்க? ஜோ : ஆமா நகுல் …இன்னும் நிறைய செஞ்சு இருக்காங்க. ரதி : அத்தை அப்போது பெண்கள் பள்ளிக்குப் போக முடியாதா? ஜோ : அந்தக் காலத்தில் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கணும். அதிகம் படிக்கக் கூடாது. உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் முத்துலட்சுமி அம்மையார் சிறு வயதிலிருந்தே படிப்பில் மிகவும் ஆர்வமாக இருந்தார். அவருடைய அப்பா நாராயணசாமி கல்வியின் முக்கியத்துவம் புரிந்தவர். சமூகத்தில் பலர் எதிர்த்தாலும், மகளைப் படிக்க வைத்தார். நகுலன் : அத்தை… அவங்க தான் ஆண்கள் கல்லூரியில் சேர்ந்த முதல் பெண்ணா? ஜோ : சரியா சொன்ன! அப்போது பெண்கள் படிப்பதற்கென்று தனிக்கல்லூரி கிடையாது… புதுக்கோட்டையில் இருந்த மகாராஜா கல்லூரியில் முதலில் பெண்களை சேர்க்கவே விரும்பல. ஆனா முத்துலட்சுமியின் திறமையை பார்த்து பின்னர் சேர்த்தாங்க. அந்தக் கல்லூரியில் சேர்ந்த முதல் பெண் மாணவி அவர்தான். அப்போ அவரைப் பார்த்து வியந்தாங்க. சிலர் கோபப்பட்டாங்க. ஏனென்றால் புதிய மாற்றங்களை ஏத்துக்க மக்கள் தயங்குவாங்க. ஆனாலும் முத்துலட்சுமி அம்மையார் பயப்படவில்லை. பின்னர் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கும் ஒரே பெண் மாணவி அவர்தான். அதன் பிறகு அரசு மருத்துவமனையில் முதல் பெண் ஹவுஸ் சர்ஜன் ஆனார். ரதி : அது ரொம்பப் பெரிய விஷயமா அத்தை? ஜோ : அந்தக் காலத்துல மிகவும் பெரிய விஷயம். இன்று பெண்கள் மருத்துவராக இருப்பது சாதாரணம். ஆனால் அப்போது அது ஒரு புரட்சி மாதிரி. நகுலன் : சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றாரா? ஜோ : மகாத்மா காந்தியின் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றார். ரதி : அத்தை, அவங்க பெண்களுக்காக என்ன செய்தாங்க? ஜோ : 1917-ல் மார்கரெட் கசின்ஸ் முயற்சியால் தொடங்கப்பட்ட இந்திய மாதர் சங்கத்தில் இணைந்து பணியாற்றினார். குழந்தைகள் உதவிச்சங்கம், சாரதா மகளிர் மன்றம், இந்தியப் பெண்கள் சமாஜம் போன்ற அமைப்புகளிலும் பங்காற்றினார். 1926-ல் பாரிஸில் 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி அம்மையார் கலந்து கொண்டார். பெண்களுக்கான சம உரிமை, இளவயது திருமணம், விதவை மறுமணம் குறித்துப் பேசினார். நகுலன் : அவர்தானே முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்? ஜோ - ஆமாம். சரியாக சொன்னாய். சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி அவர். அதுமட்டுமின்றி பெண்களுக்கான வாக்குரிமைக்காக தொடர்ந்து குரல் எழுப்பினார். சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயரானார். 1925-ல் சட்டசபைத் துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இருதார மணத்தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம், விபச்சார ஒழிப்புச்சட்டம், பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டம் போன்ற சட்டங்கள் இயற்ற வழிவகை செய்தார். பிப்ரவரி 2, 1929-ல் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் நிறைவேறியது. ரதி: தேவதாசி முறை என்றால் என்ன அத்தை? ஜோ: தேவதாசி முறை என்பது சிறுவயதுப் பெண்களைக் கோயிலுக்கோ அல்லது தெய்வத்திற்கோ அர்ப்பணித்து, அவர்களைக் கடவுளின் மனைவியாகக் கருதி, கோயில் பணிகளிலும் கலைகளிலும் ஈடுபடுத்திய பழங்காலச் சமூக மற்றும் சமய வழக்கமாகும். நகுலன் – இப்படி எல்லாமா வழக்கம் இருந்திருக்கிறது.? ஜோ : ஆமாம் நகுல்.. தேவதாசி முறை ஒழிப்புச் சட்ட த்தை சட்டசபையில் நிறைவேற்ற நிறையப் பெரிய மனிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதாவது தேவதாசி முறை இருக்க வேண்டும்.. அது இந்தியாவின் கலாச்சாரம் என்று சொன்னார்கள். ஆனால் தேவதாசி முறை ஒழிப்புச்சட்டத்தைக் கொண்டுவர முத்துலட்சுமி அம்மையார் கேட்ட கேள்வி மிக முக்கியமான காரணமாக அமைந்தது. ரதி : அப்படி என்ன கேள்வி கேட்டார் அத்தை? ஜோ: காலம் காலமாக நாம் பின்பற்றும் வழக்கத்தையும் பண்பாட்டையும் மாற்றக்கூடாது என்றும், தேவதாசிகள் கடவுளுக்கே பணி செய்யும் அற்புதப்பணி என்றும் அதனால் புண்ணியம் கிடைக்கும் என்றும் சட்டசபையிலே சுதந்திரப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தி பேசினார். அதற்கு முத்துலட்சுமி அம்மையார் , 'கடவுளுக்கே செய்யும் பணி அதனால் புண்ணியம் கிடைக்கும் என்றால், இனிமேல் உங்கள் வீட்டுப் பெண்கள் அந்தப் பணிகளைச் செய்து புண்ணியம் தேடட்டும்.. போதுமான புண்ணியத்தைத் தேவதாசிகள் தேடிச் சேர்த்து விட்டார்கள்…என்று தகுந்த பதிலடி கொடுத்தார். நகுலன் , ரதி : சபாஷ் சரியான பதில் அத்தை! ரதி : பெண்களுக்கு ‘அவ்வை இல்லம்’ என்ற ஒரு இல்லத்தை தொடங்கினாராம். அது எதற்காக அத்தை ? ஜோ : ஒரு நாள் மூன்று சிறுமிகள் பாதுகாப்பு கேட்டு அவரிடம் வந்தார்கள். சாதியைக் காரணம் காட்டி யாரும் அவர்களை ஏற்கவில்லை. அதனால் முத்துலட்சுமி அம்மையார் அவர்களுக்காக ‘அவ்வை இல்லம்’ என்ற இல்லத்தைத் தொடங்கினார். அங்கே பெண் குழந்தைகள் பாதுகாப்பாக தங்கலாம், படிக்கலாம், நல்ல வாழ்க்கை வாழ கற்றுக்கொள்ளலாம். ரதி : அப்படின்னா அவர் குழந்தைகளுக்காக ஒரு பெரிய அம்மா மாதிரி இருந்தாரா? ஜோ : ஆமாம் ரதி. நகுலன் : புற்றுநோய் மருத்துவமனையை அவர்தான் கட்டினாரா?” ஜோ : அவருடைய சகோதரி புற்றுநோயால் மிகவும் கஷ்டப்பட்டார். அப்போது நல்ல சிகிச்சை கிடைக்கவில்லை. அதனால் ஏழை, பணக்காரன் என்று பார்க்காமல் அனைவருக்கும் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்று நினைத்தார். அதன் பிறகு உருவானதுதான் அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட். இன்று உலகமே பாராட்டும் பெரிய மருத்துவமனையாக அது வளர்ந்திருக்கிறது. ரதி : அத்தை, நான் பெரியவளானதும் குழந்தைகளுக்காக ஒரு நூலகம் தொடங்கணும். ஜோ : அட, அது ரொம்ப நல்ல கனவு. நகுலன் : நான் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக அறிவியல் கற்றுக்கொடுப்பேன். ஜோ : அதுதான் முத்துலட்சுமி அம்மையார் போன்ற மனிதர்கள் நமக்குக் கற்றுத்தருவது. பெரிய சாதனை என்றால் புகழ் மட்டும் இல்ல. பிறருக்கு உதவுவது தான் உண்மையான சாதனை. ரதி : அவருக்கு விருது கிடைத்ததா? ஜோ : ஆமாம். இந்திய அரசு அவருக்கு ‘பத்ம பூஷண்’ விருது கொடுத்தது. ஆனால் அவருடைய உண்மையான விருது என்ன தெரியுமா? ரதி, நகுலன் : என்ன? ஜோ : இன்று ஆயிரக்கணக்கான பெண்கள் தைரியமாக படிப்பது… குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்வது… மருத்துவ உதவி கிடைப்பது… அவையே அவருடைய மிகப்பெரிய வெற்றி. நகுலன் : அத்தை… ஒவ்வொரு மனிதரும் தான் வாழும் சமூகத்தைப் பற்றி யோசித்தால் உலகமே கொஞ்சம் நல்ல இடமா மாறும்னு தோணுது. ஜோ : உண்மைதான் குழந்தைகளே! முத்துலட்சுமி அம்மையார் போல ஒருவரின் வாழ்க்கை பல தலைமுறைகளுக்கு ஒளி காட்டும். சரிதா ஜோ சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.













