இயலில் தேடலாம்!
Search this site
408 results found with an empty search
- கனவு பயணம்
விஜியும் சல்மாவும் தோழிகள். எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள். விஜி எப்போதும் பேசிக்கொண்டே இருப்பாள். வீட்டுக்கதையை பேசுவாள். தெரு கதையை பேசுவாள். இவளுக்கு வாய் வலிக்குமா? வலிக்காதா? என்று அவளை பார்க்கிறவர்கள் ஆச்சரியப்படுவார்கள். விஜி சொல்லும் கதைகளை கேட்கும் பொறுமையான காதுகள் சல்மாவின் காதுகள். அவள் நம்ப முடியாத பல கதைகளை கூறுவாள். சல்மா கண்கள் விரிய ஆச்சரியமாக கேட்பாள். விஜிக்கு நிறைய ஆசைகள் இருந்தன. வெளி ஊர்களுக்கு பயணம் செய்யும். சைக்கிள் ஓட்டனும். யார் உதவியும் இல்லாம தானாகவே குளிக்கணும். அவசரம்னா தானாகவே நடந்து கழிவறைக்குப் போகணும். பள்ளிக்கூடத்துக்கு தனியா சைக்கிள்ல போகணும். இப்படி நிறைய ஆசைகள். எல்லா ஆசைகளும் ஆசைகளாக மட்டுமே இருந்தன. விஜியால் நடக்க முடியாது. இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி முட்டியால் தவழ்ந்து தான் நகர்வாள். அவளுக்கு சல்மாவை மிகவும் பிடிக்கும். விஜியின் அப்பா தினமும் தின்பண்டம் வாங்கி வருவார். அதில் கொஞ்சத்தை எடுத்து டப்பாவில் மறைத்து வைப்பாள். அடுத்த நாள் காலையில் அதை சல்மாவுக்கு தருவாள். "எனக்கு வேண்டாம் நீ சாப்பிடுப்பா" என்பாள் சல்மா. விஜி விடமாட்டாள். சில நேரங்களில் அவளே ஊட்டியும் கூட விடுவாள். விஜி நன்றாக பாடுவாள். ஆனாலும் விஜிக்கு பாடுவதில் பெரிய விருப்பமில்லை. அவளுக்கு சல்மாவுடன் கதை பேசத்தான் பிடித்திருந்தது. அவள் எப்போதாவது பாடுவாள். இது பள்ளியில் எந்த ஆசிரியருக்கும் தெரியாது. விஜி... பாட்டு பாடுப்பா....என்பாள் மலர். உடனே அனைவரும் விஜியை சுற்றி நின்று கொள்வார்கள் பாடு விஜி.... பாடு.... என்று கோரசாக கத்துவார்கள். யார் விஜியை பாடச் சொன்னாலும் அவள் பாட மாட்டாள். "விஜி பாடு" என்று சல்மா கூறியவுடன் விஜி பாடத் தொடங்குவாள். அவள் ஆசைகளை அவளே மெட்டு போட்டு பாடுவாள். ஒரு நாள் அவளோட வகுப்பறையை கடந்து போனார் மகா லட்சுமி டீச்சர். விஜி பாடிக் கொண்டிருந்தாள். பாட்டு சத்தம் கேட்டு உள்ளே வந்தார் . அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. " விஜி சூப்பரா பாடுறம்மா. உனக்குப் பாடத் தெரியும் என்று நீ ஏன் சொல்லவே இல்லை " என்றார் மகா டீச்சர். விஜியை திரும்பத் திரும்ப பாடச் சொல்லி கேட்டார். மகிழ்ச்சியில் அவள் அன்று இரவு தூங்கவே இல்லை. அடுத்த நாள் உடற்கல்வி பாட வேளை வந்தது. அனைவரும் மைதானத்திற்கு சென்று விட்டார்கள். விஜியை மூன்று சக்கர வாகனத்தில் சல்மாவும் அனிதாவும் உட்கார வைத்து அழைத்து வந்தார்கள். மைதானத்தின் ஒரு ஓரத்தில் மூன்று சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தாள் . நண்பர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கும் விளையாட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அவள் ஆசையாய் பார்ப்பதை சல்மா பார்த்து விட்டாள். தன் வகுப்பு தோழர்களை அழைத்துக் கொண்டு விஜியின் பக்கத்தில் வந்தாள். சல்மாவும் அனிதாவும் இரண்டு பக்கவாட்டில் பிடித்துக் கொண்டனர். பின்பக்கம் இரண்டு பேர் பிடித்துக் கொண்டார்கள். வேகமாக தள்ளிக்கொண்டே மைதானத்திற்குள் ஓடினார்கள். அப்படியே மைதானத்தை வட்டமடித்தார்கள். விஜி வண்டியின் கைப்பிடியை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். அண்ணார்ந்து வானத்தை பார்த்தாள். வானத்தில் பறப்பது போல இருந்தது. விஜி அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அதற்குப் பிறகு ஒவ்வொரு உடற்கல்வி பாடவேலையிலும் விஜி இப்படியே பறவை போல் பறந்து மகிழ்ச்சியாய் இருந்தாள். நாள்கள் கடந்தன. திடீரென்று பள்ளி பரபரப்பானது. மாவட்ட அளவிலான நாடகப் போட்டியில் கலந்து கொள்வதற்கான ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. சல்மா அவ்வப்போது நாடக ஒத்திகைக்குச் சென்று விடுவாள். விஜிக்கு சல்மா இல்லாத நேரம் என்னவோ போல இருக்கும். உணவு இடைவேளையின் போது சல்மாவிடம் கேட்டு விட்டாள். "சல்மா எனக்கும் கை, கால் நல்லா இருந்திருந்தால் நானும் நாடகத்தில் சேர்ந்து இருக்கலாம் தானே" என்றாள். சல்மாவுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. "டீச்சர் விஜியையும் நாடகத்தில் சேர்க்க முடியுமா?" என்று ஒத்திகையின் போது டீச்சர்கிட்ட கேட்டாள் சல்மா. வெளியூருக்கு எப்படிப்பா விஜியை கூட்டிட்டு போவது? என்றார் டீச்சர். நான் அவளை தூக்கிக் கொள்வேன். அது என் பொறுப்பு டீச்சர் என்றாள் சல்மா. அன்று மாலை விஜியை அழைக்க வந்த அம்மாவிடம் மகா டீச்சர் விஷயத்தை கூறினார். அம்மாவுக்கு அதிர்ச்சி. "அவளால் எந்த வேலையும் தனியா செய்ய முடியாது டீச்சர். அவள் அங்கு வந்து என்ன செய்யப் போறா . கை குழந்தைய வச்சுக்கிட்டு என்னாலையும் உங்க கூட வர முடியாது. உங்களுக்கு தான் தொந்தரவா இருக்கும். வேண்டாமே டீச்சர்" என்றார். "விஜி நல்லா பாட்டு பாடுவா. நாடகத்திற்கு பாட்டு பாட ஆள் தேவை. விஜியால் அது முடியும். உங்களுக்கு அனுப்ப விருப்பம் இருந்தா சொல்லுங்க. மற்றவைகளை நாங்க பார்த்துக்கிறோம்" என்றார் மகா டீச்சர். " உங்க விருப்பப்படி செய்யுங்க". என்று சம்மதித்தார் விஜியின் அம்மா. போட்டி நாள் வந்தது. விஜி குதூகலமாக கிளம்பினாள். சல்மாவும் அனிதாவும் சேர்ந்து விஜியை தூக்கிச் சென்று வேனில் உட்கார வைத்தனர். வேன் கிளம்பியது. ஜன்னல் ஓரத்தில் விஜி. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேல் வயல்வெளி. எதிர் காற்று முகத்தில் அடித்தது. பிரபலமான சினிமா பாட்டு வேனில் ஒலித்தது. ஆனந்தத்தின் உச்சத்தில் இருந்தாள் விஜி. டிரைவர் அண்ணன் பக்கத்தில் இருந்த அப்துல்லா சொன்னான் "அண்ணன் பாட்டை நிப்பாட்டுங்க. விஜி நீ பாடு" அவன் சொன்னதும் எல்லோருமே சேர்ந்து கொண்டனர். விஜி பாடு.... விஜி பாடு ....என்று ஒரே கூப்பாடு போட ஆரம்பித்தார்கள். அவள் பாட..... அனைவரும் ஆட..... ஒரே குதூகலம். அது அவள் ஆசைப்பட்ட பயணம். பக்கத்தில் இருந்த சல்மா விஜியின் குதூகலமான முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தாள். இருவரின் கைகளும் இறுகப் பற்றி இருந்தன.
- ஸ்டீவன் ஹாகிங்
20 வயதில் தீவிரமான நோய் கண்டறியப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இனி வாழ வாய்ப்பு இல்லை என்று மருத்துவர்கள் சொன்னாலும், அதற்குப் பிறகு 55 ஆண்டுகள் வாழ்ந்து, பல இயற்பியல் கோட்பாடுகளை உருவாக்கி, இந்த நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக திகழ்ந்து நமக்கு அனைவருக்கும் உத்வேகம் தந்த தனித்துவமான மனிதர் ஸ்டீவன் ஹாக்கிங். அந்த மாபெரும் அறிவியல் அறிஞரைப் பற்றி சிறு குழந்தைகளும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில், ‘ஸ்டீவன் ஹாகிங் :முடிவிலிருந்து ஒரு தொடக்கம்’ என்னும் நூலை எழுத்தாளர் கமலாலயன் அவர்கள் எழுதி, ஓங்கில் கூட்டம் இந்த நூலை வெளியிட்டு இருக்கிறார்கள். 1942 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் நாள் ஆக்ஸ்போர்டு என்ற இடத்தில் பிறந்தார். தந்தையின் பெயர் பிராங்க் . தாயின் பெயர் ஐசோபெல் ஹாக்கின்ஸ். தந்தை ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். தன்னுடைய 17 ஆவது வயதில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடப்பிரிவில் சேர்ந்தார். பின்பு அண்டவியலில் முனைவர் பட்டம் பெற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அவர் கருந்துளை பற்றிய ஆராய்ச்சியை அங்கு தொடங்கினார். 1974 இல் ராயல் சொசைட்டியில் உறுப்பினராக சேர்க்கப்பட்டார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்க தொடங்கிய காலத்திலிருந்து இவருக்கு அமியோடிரோபிக் லாட்டெரல் செலரோசிஸ் என்ற அரிதான நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோயின் தாக்கம் தொடங்கியிருந்தது. மெல்ல மெல்ல நடப்பதில் தடுமாற்றம் ஆரம்பித்து, நடப்பதற்கு ஊன்றுகோல் தேவைப்பட்டது. அந்த நோயின் தாக்கத்தால் அவர் நாடி நரம்பு எல்லாம் சிதைக்கப்பட்டு வந்தாலும் அவருடைய சிந்தனையையும் மனதையும் அதனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ரோஜர் பென் ரோஸ் என்ற மூத்த அறிவியலாளரின் கருத்தரங்கத்திற்கு சென்று கொண்டு திரும்பி வந்த நேரத்தில் , இந்த ஒருமை கணத்தேற்றத்தை பிரபஞ்ச வெளி முழுமைக்கும் பொருத்திப் பார்த்தால் என்ன? என்று எழுந்த ஒரு சிந்தனை தான் அவருக்கு அது சார்ந்த ஆய்வு கட்டுரையை எழுத வைத்து முனைவர் பட்டம் கிடைக்க வழி செய்தது. இவர் ஒரு மாற்றுத்திறனாளி என்று தெரிந்தும் இவரை காதலித்து மனம் புரிந்து கொண்ட பெண் தான் ஜேன். அவருக்கு வாழ்க்கையின் மீது பற்றும் ,வாழ்ந்தே தீர வேண்டும் என்ற உறுதிப்பாட்டையும் தந்த உறவு ஜேன். 1966 இல் வானியல் ஆய்வு மையத்தின் பொறுப்பாளர்களில் ஒருவராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஹாகிங். அதற்குப் பிறகு ஜெனிவா நகரில் நடந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு, அவருக்கு எஞ்சி இருந்த பேச்சுத்திறனும் பறிபோனது. அப்போதும் அவர் சோர்ந்து போய்விடவில்லை. ஏனென்றால் அவருடைய சிந்தனைகளுக்கு தான் எல்லை இல்லையே. அதற்குப் பிறகு அவருடைய கண்ணசைவைக் கொண்டு சொற்களை உருவாக்கி உரையை தயாரித்துக் கொடுக்க ஒரு உதவியாளர் இருந்தார். கலிபோர்னியாவை சேர்ந்த , வால்ட் வால்டோஸ் என்ற நண்பர் Equalizer version EZ keys என்ற மின் பொருளை இவருக்காக பிரத்தியேகமாக தயாரித்து தந்தார். ஹாகிங் கண்ணசைவு, விரல் அசைவு இவற்றைக் கொண்டு எல்லாம் அவர் எண்ணங்களை சொற்களாக்க இந்த மென்பொருள் உதவியது. 1988 இல் வெளிவந்த அவருடைய காலம் ஒரு சுருக்கமான வரலாறு என்ற புத்தகம் அவருக்கு மிகப்பெரிய புகழை வாங்கி தந்தது. சாதாரண மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எழுதப்பட்ட இந்த நூல் , கோடிக்கணக்கான பிரதிகள் விற்றன. புவியீர்ப்பு விசை, மின்காந்த விசை, அணுக்கரு மென் விசை , அணுக்கரு பெரு விசை இந்த நான்கு திசைகளும் தான் பிரபஞ்சம் வெளியில் இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய அனைத்துக்கும் அடிப்படை. ஒருங்கிணைந்த கோட்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது ஐன்ஸ்டீனின் கனவு. ஸ்டீபன் ஹாக்கிங் இதற்காகத்தான் பெரும்பாடு பட்டார். Theory of everything இந்த கொள்கைக்கு பெயர் சூட்டி இருந்தார். ஆனாலும் அவராலும் இந்த ஆய்வை முடிக்க இயலவில்லை. இவருடைய அறிவியல் ஆய்வுகளுக்காக மட்டும் இவர் கொண்டாடப்பட வேண்டியவர் அல்ல. விடாமுயற்சி, தன்னம்பிக்கை வாழ்வில் எந்த கடினமான கணத்திலும் சோர்ந்து போய்விடாமல் தன் தேடல்களை நோக்கி பயணப்பட்ட ஒரு தனித்துவமிக்க மனிதர். நிச்சயம் இவருடைய வாழ்க்கை வரலாறை வாசிக்கும் குழந்தைகளுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை தரும். நூல்:- ஸ்டீவன் ஹாகிங் ( முடிவில் இருந்து ஒரு தொடக்கம்) ஆசிரியர் : கமலாலயன் வெளியீடு :- ஓங்கில் கூட்டம் - பாரதி புத்தகாலயம்
- கட்ட வண்டி
கடக்கு முடக்கு கட்ட வண்டி காட்டுவழியில் செல்லும்வண்டி மாடுரெண்டும் பூட்டிக்கிட்டு மாமாவையும் கூட்டிக்கிட்டு தாத்தா பாட்டியை ஏத்திக்கிட்டு தம்பியும் நானும் சேர்ந்துகிட்டு தன்னானே பாட்டுப் பாடிக்கிட்டு தரணி எங்கும் சுத்திடுவோம்.
- அய்யோ!
ஓவியம் உ.நவீனா:
- Adolescence web series - 1
Adolescence தொடர் பலரையும் சூறாவளியாகச் சுழற்றி அடித்திருக்கிறது. பதிமூன்று வயதுச் சிறுவன் தன்னுடன் படிக்கும் மாணவியைக் கத்தியால் கடுமையாகத் தாக்குகிறான். அச்சிறுமி இறக்கிறாள். உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு Adolescence தொடரை எடுத்திருக்கிறார்கள். ஏறத்தாழ ஒரு மணி நேரம் கொண்ட நான்கு பாகங்கள். இங்கே இப்படியெல்லாம் நடக்காது என்று சிலர் சொன்னார்கள். எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் சக மாணவனை அரிவாளால் வெட்டிய செய்தி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும். 'இந்தக் காலத்துப் பசங்க, ரெம்பக் கெட்டுப் போயிருக்காங்க. ஆளும் தலைமுடியும்.....'என்ற குரல்கள் ஏராளமாக ஒலிக்கின்றன. உடனேயே ' பள்ளிகளில் நீதிநெறி வகுப்புகள் இல்லை. நீதிக்கதைகள் சொல்லணும்' என்று எதிரொலிகள். சற்றே சிந்தித்தாலும் ஒவ்வொரு தலைமுறையும் இப்படித்தான் அடுத்த தலைமுறையைப் பார்த்துப் புலம்பியிருக்கிறது என்பது புரியும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இச்சமூகத்தில் நீதி தவறிய செயல்பாடுகள் இருந்ததால் தானே வள்ளுவரும் நீதிகளைச் சொல்லியிருக்கிறார். சமகாலத்தில் கேட்பதால் இப்போது அடுத்த தலைமுறைக்கு எதிரான குரல்கள் அதிகமாக இருப்பது போலத் தோன்றுகிறது. வளரிளம் பருவத்தைக் கடந்து நடுத்தர வயதை அடையத் தொடங்கிய பலரும் அடுத்த தலைமுறையைக் குற்றம் சொல்வதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்கள். காலம், சூழலுக்கு ஏற்ப சிந்தனையும் சமூக அக்கறையும் தவறுகளையும் செய்தே அனைவரும் வளரிளம் பருவத்தைக் கடந்திருக்கிறோம். இப்பருவத்தின் இருண்மைகள் அனைவருக்கும் உண்டு. 'இன்றைய தலைமுறை தவறுகளைச் செய்கிறது. நாங்களெல்லாம் ஒழுக்கமாக இருந்தோம்.' என்று சொல்லி முடிக்கும்போதுதான் தன்னை 'யோக்கியன்' என்று நிரூபிக்க முயல்வதைப் புரிந்து கொள்ளலாம். வளரிளம் பருவத்தினரிடம் வன்முறை, போதை, அக்கறை இன்மை போன்ற நடத்தைகள் இப்போது அதிகரித்திருப்பதாக பலரும் வருத்தப்படுகிறார்கள். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளை விடக் கடந்த இருபது ஆண்டுகளில் சிந்தனையைத் தவிர அனைத்திலும் அளவற்ற மாற்றங்களை அடைந்திருக்கிறோம். குறிப்பாக அறிவியலின் வளர்ச்சி அளப்பரியது. எனவேதான் வளரிளம் பருவத்தினரின் நடத்தையில் இக்காலத்தில் பெரும் மாற்றம் இருப்பதாகத் தோன்றுகிறது. நம் சமூகத்தில் குழந்தைகளுக்கான செயல்பாடுகள் மிகவும் குறைவு. வளரிளம் பருவத்தினருக்கான செயல்பாடுகள் மிக மிக மிகக் குறைவு. குழந்தை இலக்கியமே தவழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் வளரிளம் பருவத்தினருக்கான கலை, இலக்கியம் போன்றவை குறித்த பேச்சே இல்லை என்று கூறலாம். குழந்தைப் பருவத்திலிருந்து இளம்பருவம் வரை மனிதத்தோடு அடுத்த தலைமுறையைப் பழக்காத சுயநலமிக்க சமூகமாகப் பெரியவர்கள் இருக்கிறோம். வேகமும் துடிப்பும் கொண்ட வளரிளம் பருவத்தினரை ஆற்றுப்படுத்தும் செயல்பாடுகளை உருவாக்க வேண்டும். அதற்கான கலந்துரையாடல்களை நிகழ்த்த வேண்டும். அதற்குத் தொடக்கமாகவே வளரிளம் பருவத்தினரைப் பற்றிய பல்வேறு தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் குறித்து உரையாடுவோம். அதிலிருந்து செயல்பாடுகளை உருவாக்க முயற்சி செய்யலாம். Adolescence பொழுது புலரும் நேரம். காவல் துறையினரின் வாகனங்கள் விரைகின்றன. ஆயுதம் தாங்கிய காவலர்கள் ஒரு வீட்டைச் சுற்றி வளைக்கிறார்கள். வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைகிறார்கள். எதிர்ப்படுபவர்களின் முகத்திற்கு நேரே துப்பாக்கி. 'கீழே உட்காருங்கள்' என்ற குரல்கள் எங்கும் ஒலிக்கின்றன. அம்மா கதறுகிறார். படியில் இறங்கி வந்த அப்பா, துப்பாக்கி முனையில் கைகளைத் தூக்கியபடி நிற்கிறார். அறையைத் திறந்த சிறுமி துப்பாக்கியைப் பார்த்துப் பயந்து அழுதபடி கீழே உட்கார்ந்திருக்கிறாள். அப்பாவிடம்," ஜெமி மில்லர் வீடுதானே இது? கைது செய்ய ஆணையோடு வந்திருக்கிறேன்." என்றபடியே ஒரு காவலர் மாடிக்குச் செல்கிறார். "நீங்க தப்பு பண்றீங்க. அவன் சின்னப்பையன்" என்று அப்பா கத்துகிறார். ஜெமியின் அறைக்கதவு திறக்கப்படுகிறது. பயத்தால் உடல் நடுங்கியபடியே கத்திக் கொண்டு இருக்கிறான் ஒரு சிறுவன். " ஜெமி மில்லர், ஒரு கொலைக் குற்றத்திற்காக உன்னைக் கைது செய்கிறேன். இப்போது நேரம் காலை 6.15 மணி." என்று காவலர் சொல்கிறார். ஜெமி பயத்துடன் "நான் எதுவும் செய்யல..." என்று அலறிக்கொண்டே இருக்கிறான். இப்படிப் பரபரப்பாகத் தொடங்குகிறது, Adolescence தொடர். காவல்நிலைய நடைமுறைகள், தொடக்க நிலை விசாரணைகள் என முதல் பாகம் முழுவதும் காவல் நிலைய நிகழ்வுகள் விரிவாகக் காட்டப்படுகின்றன. ஒவ்வொன்றையும் ஏன் செய்கிறோம் என்று கைது செய்தவரிடம் சொல்லிச் சொல்லிச் செய்கிறார்கள். மனித உரிமைகளை மீறி விடாமல் கண்ணியமாக விசாரணை நடைபெறுகிறது. நம் காவல் துறைக்கு இது மிகச்சிறந்த பாடமாக இருக்கும். 13 வயதே ஆன சிறுவன் மீது கொலைக்குற்றம். நடந் தது என்ன? (தொடரும்)
- புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம்!
1. நாம் வாழும் பூமி சுற்றுகிறது என்று சொல்கிறார்கள். பூமி ஒரு பந்தைப் போலிருக்கிறது. அதன் மேல்தான் நாம் வாழ்கிறோம். அப்படியென்றால், அதன் மேல் இருக்கும் நாம் ஏன் கீழே விழுவதில்லை? - ஆதிரன், திருச்சி வணக்கம் ஆதிரன், நான் புத்தகப் புழு பேசுறேன். நீங்கள் கேட்டிருப்பது ரொம்ப முக்கியமான கேள்வி. இதுபோன்ற சந்தேகங்கள்தான் அறிவை வளர்க்கும். ஆனா, இந்தக் கேள்விக்கு எனக்கும் சட்டுனு பதில் தெரியலை. நிறைய அறிவியல் புத்தகங்களை எடுத்துப் படிச்சேன். அதுல என்ன போட்டிருக்குன்னா... நீங்க சொல்ற மாதிரி பூமி ஒரு பிரம்மாண்டப் பந்துதான். அது தன்னைத் தானே சுத்திக்குது. இந்த சுழற்சியோட வேகம் நில நடுக்கோட்டுப் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு 1,675 கிலோமீட்டராம் (அம்மாடி, நாம பைக்குல 100 கி.மீ. வேகத்துல போனாவே தலைய சுத்துதே). பூமிப் பந்தின் மீதுதான் நாம் எல்லாரும் வாழுறோம். பூமியின் மீது இருக்கும் மனிதர்கள், மற்ற எல்லாமுமே ஒரே வேகத்தில் சுற்றிக்கொண்டே இருக்கின்றன. இருந்தாலும் நாம கீழே விழுவதில்லை. இதற்குக் காரணம் புவியீர்ப்பு விசை (Gravity). உலகில் உள்ள அனைத்தையும் இதுதான் கீழ புடிச்சு இழுத்துக்கிட்டிருக்கு. அப்படின்னா, அது இழுக்குறது நமக்கு ஏன் தெரியலை? நாம பொறக்குறதுக்கு முன்னாடி அம்மா வயித்துக்குள்ள இருந்த காலத்திலேர்ந்தே, அது நம்மை இழுத்துக்கிட்டுதான் இருக்கு. அதனால, அது இழுக்குறது நமக்கு தனியாத் தெரியாது. அது இருக்கிறதுனாலதான் நாம எல்லாரும் நடக்க, ஓட, விளையாட முடியுது. விண்வெளிக்குப் போய்ட்டா புவி ஈர்ப்பு விசை இருக்காது. அதனாலதான் விண்வெளில வீரர், வீராங்கனைகள் மிதக்குறாங்க. சரி, நாம கேள்விய விட்டு ரொம்ப தூரமா விண்வெளிக்கே போய்ட்டோம். திரும்ப பூமிக்கே வந்திருவோம். ஒரு எடுத்துக்காட்டு சொன்னா உங்களுக்கு இன்னும் நல்லா புரியும்னு நினைக்கிறேன். ஒரு நேரான சாலையில், ஒரே சீரான வேகத்தில் ஒரு கார் போய்க்கிட்டு இருக்கு. அதுக்குள்ள நீங்கள் இருக்கிங்க. அந்த காருடன் வேறு எதுவுமே குறுக்கிடாதபோது, ஏதாவது அசைவை நம்மால உணர முடியுமா? முடியாது இல்லையா? அதுபோலத்தான் பூமியில நாம வாழ்றதும். பூமியோட சுத்தும் வேகம் ரொம்பப் பெரிய அளவுக்குக் கூடவோ, குறையவோ இல்லை. அது சீரான வேகத்துல சுத்துது. இது மட்டுமில்லாம, புவியீர்ப்பு விசை வேற இருக்கு. இதெல்லாம் சேர்ந்து நாம இப்போ இயல்பா வாழ்றதுக்கு, நடமாடுறதுக்கு உதவுது. நம்மளோட இயல்பான இயக்கத்துல ஏதாவது தடை வந்தா கீழ விழுகுறோம், காயமாகுது. இல்லேன்னா நாம எப்பவுமே எல்லா வேலைகளையும் செய்ய எந்தத் தடையும் இந்த உலகத்துல இல்ல. 2. மாவட்ட ஆட்சியர்களைப் போல அமைச்சர்களும் ஏன் படித்துப் பரீட்சை எழுதக் கூடாது? - யாழினி, திருநெல்வேலி. வணக்கம் யாழினி! வழக்கமா எல்லாரும் அறிவியல், பொது அறிவுக் கேள்வி கேட்பாங்க. நீங்க அரசியல் கேள்வி கேட்டிருக்கீங்க. இந்த வயசுலேயே உங்களுக்கு இப்படி கேள்வி வந்திருக்கிறது ரொம்ப நல்ல விசயம். Government என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவது தமிழில் அரசு எனப்படுகிறது. இதன் முக்கிய அங்கங்கள் சட்டம் இயற்றும் அவை, அரசு நிர்வாக அமைப்பு, நீதித் துறை. அரசு கொள்கைகளை/சட்டங்களை உருவாக்குதல், அவற்றை நடைமுறைப்படுத்துதல், சட்டத்தைப் பாதுகாத்தல் ஆகிய வேலைகளை இந்த அமைப்புகளே செய்கின்றன. இதில் அரசு நிர்வாக அமைப்பை இயக்குபவர்களே நீங்கள் கூறும் மாவட்ட ஆட்சியர்கள், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள். இதற்கான தேர்வை ஒரு முறை எழுதித் தேர்வாகிவிட்டால், அவர்கள் நிரந்தரமாகப் பணியாற்றலாம். இந்தத் தேர்வுகள் ஆங்கிலேயர் காலத்திலிருந்தே நடத்தப்பட்டுவருகின்றன. அரசு கொள்கைகளை உருவாக்குவதில் குறிப்பிட்ட அளவும், நடைமுறைப்படுத்துவதிலும் இவர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள். அதேநேரம் இந்தக் கொள்கைகளை வகுப்பது சார்ந்து மக்கள் என்ன நினைக்கிறார்கள், அவற்றில் எதற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க நினைக்கிறார்கள் என்பதுடன் அனைத்துத் தரப்புக்கும் அனைத்தும் உரிய வகையில் கிடைப்பதை உறுதிசெய்ய மக்கள் பிரதிநிதிகள் தேவைப்படுகிறார்கள். இந்த பிரதிநிதிகளே அரசியல்வாதிகள். அரசு அதிகாரிகளைப் போல அரசியல்வாதிகள் தேர்வை எழுதுவது இல்லை என்பது உண்மைதான். ஆனால், அவர்களுக்குத் தேர்தல் எனும் தேர்வு உண்டு. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால் நம்முடைய பிரதிநிதியாகவே (இவர்களில் சிலர் அமைச்சர் ஆகிறார்கள்) உள்ளாட்சி மன்றம், மாநகராட்சி மன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு அவர்கள் செல்கிறார்கள். இந்த மன்றங்களே மக்களுக்குத் தேவையான சட்டங்களை இயற்றுகின்றன. அரசு சட்டங்கள், கொள்கைகள் உருவாக்கப்படும்போது நம் சார்பாக மன்றங்களில் பேசுவது, வாதிடுவது ஆகிய வேலைகளை அவர்கள் செய்கிறார்கள். இப்படி பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வசதியாக, ஒரு அமைப்பாக கட்சிகளில் அவர்கள் சேர்கிறார்கள். அவர்கள் சரியாகச் செயல்படுவதை உறுதிசெய்ய மக்களான நாம்தான் அழுத்தம் கொடுக்க வேண்டும். அரசியல்வாதிகள் சரியாகச் செயல்படவில்லை என்றால், அடுத்துவரும் தேர்தலில் மக்கள் தோற்கடிப்பார்கள். அதற்கு முன்னதாகவே, நம் நாட்டுச் சட்டங்களின்படி அரசியல்வாதிகளுக்கு எதிராகப் புகார் அளிக்கலாம், வழக்கு தொடுக்கலாம். 100 சதவீதம் இல்லாவிட்டாலும் அரசியல்வாதிகள் நம்முடைய சமூகத்தின், சமூகம் இருக்கும் நிலையின் பிரதிபலிப்புதான். அதிகாரம் என்பது மக்களுக்குச் சேவையாற்ற என்பதற்கு பதிலாக, தங்கள் சுயநலனுக்குப் பலரும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். வெகுமக்கள் சரியாக செயல்பட்டால், அந்நாட்டு அரசியல்வாதிகளும் சரியாகச் செயல்படுவார்கள். அனைத்துத் தரப்பினருக்கும் கல்வியுடன், அரசியல் கொள்கைகள், ஆட்சிக் கொள்கைகள்/சட்டங்கள் சார்ந்த பயிற்சி இதற்கு அவசியம். இதை சமூகச் செயல்பாட்டாளர்கள் உதவியுடன் மக்களான நாம் முன்னெடுக்கலாம், பரவலாக்கலாம். கூட்டாகவும் சிந்தனைபூர்வமாகவும் செயல்பட்டால் மாற்றங்கள் சாத்தியமாகும்.
- சாம்பல் நிற அணில்
” அது என்ன விலங்கு ?” என அண்ணன் அப்பாவிடம் கேட்டான். ஒரு புளிய மரத்தின் கிளையில் நம்ம ஊர் அணிலைப் போன்று ஆனால் சற்று பெரிதான விலங்கு தொங்கிக்கொண்டு புளியம் பழத்தை கடித்துக்கொண்டிருந்தது. ” இதுவா அணில் ” என்று சொன்னார் அப்பா. ” அணில் இவ்வளவு பெரிதாக இருக்குமா ? நம்ம வீட்டுக்கு அருகில் உள்ள அணில் குட்டியா தான இருக்கும் ” எனக் கேட்டாள் தங்கை. ” ஆம் இந்தியாவில் மூன்று வகையான பெரிய அணில்கள் வாழ்கின்றன. அதில் ஒன்று தான் இந்த சாம்பல் நிற அணில் ” என விளக்கம் சொன்னார் அப்பா. இந்த உரையாடல் எங்கே நடந்தது தெரியுமா? மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் வனச்சுற்றுலா வந்த அம்மா அப்பா அண்ணன் தங்கை ஆகியோர் பேசிக் கொண்டிருந்தார்கள். நடந்து செல்லும் வழியில் ஒரு புளிய மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருந்த அணிலைப் பார்த்த அண்ணன் கேட்டான். அண்ணனின் முகத்தைப் பார்த்த அப்பா சொன்னார், ” சாம்பல் நிற அணிலின் ஆங்கிலப் பெயர் Grizzled-Giant Squirrel. இதன் உடம்பில்கருப்பு மற்றும் வெள்ளை நிற முடிகள் கலந்து சாம்பல் நிறத்தில் காணப்படுகிறது. அதனால் சாம்பல் நிற அணில் என அழைக்கிறோம். கிராமங்களில் நரை அணில் எனவும் அழைக்கிறார்கள். “ ” சாம்பல் நிற அணில் என்ன சாப்பிடும்? ” என்று தங்கை கேட்டாள். “ மாம்பழம், வாகை மரத்தின் இலை, பூ மற்றும் விதை, புளிய மரத்தின் பட்டை மற்றும் விதை ஆகியவற்றைச் சாப்பிடும்.” ” அது மட்டும் ஏன் தலை கீழாக படுத்துக்கொண்டே தின்கிறது ? ” ” சாம்பல் அணில் மற்ற அணில்களை பெரியது. அதனால் உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவது கடினம்.. சாம்பல் நிற அணில் தன்னுடைய முன்னங்கால்களை 180 டிகிரி வரை திருப்பிக் கொண்டு சாப்பிட முடியும்..”. ” அப்பா! அணிலின் வால் புசு புசு னு இருக்குது ” என்றாள் தங்கை ” ஆமாம்மா. சாம்பல் நிற அணில் வாலின் நீளம் 50-90 சென்டி மீட்டர், உடம்பின் நீளத்தை (25 – 40 சென்டி மீட்டர்) விட இரண்டு மடங்கு பெரியதாக இருக்கும்..”. ” சாம்பல் நிற அணிலினால் நமக்கு என்ன பயன் ? ” என்று அம்மா கேட்டார் ” பழங்களைச் சாப்பிட்டு விதைகளை பரப்பி மரங்கள் வளர்வதற்கு உதவுகிறது. வேகமாக வளரும் அதன் பற்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த மரப்பட்டைகளைக் கடிக்கும். இதனால் மரத்திலிருந்து பிசின்கள் வெளியாகின்றன. இந்த மரப்பிசினை பூச்சிகள் தங்களது கூடுகளை கட்ட பயன்படுத்துகின்றன. “ “ அவ்வளவு தானா? என்று கேட்டான் அண்ணன். ” சிறிய ஊனுண்ணிகளுக்கு சாம்பல் நிற அணில் முக்கிய உணவாக திகழ்வதால் வனத்துக்குள் உணவுச் சங்கிலியை சமநிலையில் வைத்துக்கொள்ளவும் பல்லுயிர் பாதுகாப்புக்கும் உதவுகிறது. ” என்றார் அப்பா. ” ஓ இவ்வளவு நன்மைகள் இருக்கா ?” என்றார் அம்மா. ” ஆமாம், அதனால தான் இப்பகுதி 1988 முதல் சாம்பல் நிற அணில்கள் சரணாலயமாக செயல்பட்டு வருகிறது. ” ” குரங்கு நிறையா இருக்கு ஏன் சாம்பல் நிற அணில் ஒன்னே ஒன்னு தான் பார்த்தோம். “ என்று சந்தேகத்தைக் கேட்டாள் தங்கை. ” எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருக்கு..”. ” ஏன் குறைவாக உள்ளது ? உடனே அண்ண்ன் கேட்டான் “ சாம்பல் நிற அணில் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு குறிப்பிட்ட வாழ்விடங்களில் மட்டுமே வாழ்பவை. அந்த இடத்தின் சூழல் பாதிக்கப்படும் பொழுது அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது. அணிலால் தன் குட்டிகளை வளர்க்க முடிவதில்லை. ” என்று சொன்னார் அப்பா. ” அந்த இடம் எப்படி ஆபத்துக்குள்ளாகிறது ? “ என்று கேட்டான் அண்ணன். ” இங்கு நம்மைப் போல வரும் மக்கள் பிளாஸடிக் பைகளை பயன்படுத்துகின்றனர், இங்கேயே தூக்கி எறிந்துவிட்டு செல்கின்றனர். இங்கு தினமும் நடந்து வருபவர்களால் வழிகள் உருவாகின்றன. நாளுக்கு நாள் அது பெரிதாகி தாவரங்கள் வளருவதில்லை. அதனால் காடு துண்டு துண்டாகிறது.. “ “ சிந்திக்க வேண்டிய விஷயம் தான்..” என்றாள் தங்கை. “ஆமாம்.எல்லோருமே சிந்திக்க வேண்டும்..” என்று அண்ணன் சொன்னான்.
- வாண வேடிக்கை
பட்பட் படார் டம்டம் டமார் பட்டாசுச் சத்தம் கேட்கிறது விமானம் போல வானில் ஏறி பாதி வழியில் வெடிக்கிறது இருட்டு படிந்த ஊரின் மீது ஒளியை அள்ளித் தெளிக்கிறது விலகிச் செல்லும் வெளிச்சக் கீற்று எங்கோ வானில் கலக்கிறது கண்ணைப் பறிக்கும் நிறங்களில் எல்லாம் வண்ணப் பொறிகள் விழுகின்றன அண்ணாந்து பார்த்து ரசிப்பதற்குள்ளே அனைத்துப் பொறிகளும் மறைகின்றன
- நீர் பலூன் சோதனை
Water baloon experiment பலூன்கள் மிகவும் உடையக்கூடிய விஷயங்கள். அவை கூர்மையான பொருட்களிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும் தீப்பிழம்புகளில் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். ஒரு நெருப்பு ரப்பரை பலவீனப்படுத்தி வெடிக்கச் செய்யலாம். இருப்பினும், பலூனை உடைக்காமல் ஒரு பலூனை நேரடியாக சுடர்களில் எவ்வாறு பிடிக்க முடியும் என்பதை இந்த சோதனையில் நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். தேவையான பொருட்கள் : 1. காற்றால் நிரப்பப்பட்ட ஒரு பலூன் 2. தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பலூன் 3. ஒரு மெழுகுவர்த்தி ஏற்றியது 4. வயது வந்தவரின் உதவி பரிசோதனையை எவ்வாறு செய்வது : 1. ஒளிரும் மெழுகுவர்த்தியை தொட்டியில் வைக்கவும், இந்த வழியில் ஏதாவது நடந்தால், நீங்கள் குழாய் நீரைக் கொண்டு தீப்பிழம்பை எளிதாக அணைக்கலாம். 2. ஒரு பலூனை ஊதி, அதைக் கட்டவும். பின்னர் அதை ஒரு மெழுகுவர்த்தியின் மீது வைக்கவும். பலூனுக்கு என்ன நடக்கிறது? 3. இப்போது ஒரு பலூனை தண்ணீரால் நிரப்பி, அதைக் கட்டவும். கவனமாக இருங்கள் அல்லது நீங்கள் ஈரமான முடிவடையும்! 4. இப்போது மெழுகுவர்த்தியின் மீது தண்ணீர் பலூனை பிடித்துக் கொள்ளுங்கள். என்ன நடக்கிறது? அதன் பின்னால் உள்ள அறிவியல் : என்ன நடக்கிறது தண்ணீர் இல்லாத பலூன் ஏன் தீப்பிழம்பில் உடைகிறது? தீப்பிழம்பு அதில் வைக்கப்படும் அனைத்தையும் சூடாக்குகிறது. இது இரண்டு பலூன்களின் ரப்பரை சூடாக்குகிறது. தண்ணீர் இல்லாத பலூனின் ரப்பர் மிகவும் சூடாகி, பலூனுக்குள் காற்றின் அழுத்தத்தை எதிர்க்க முடியாத அளவுக்கு பலவீனமாகிறது. தண்ணீரைக் கொண்ட பலூன் தீப்பிழம்பில் உடைவதை எவ்வாறு தடுக்கிறது? பலூனுக்குள் உள்ள நீரைச் சுடர்களில் வைக்கும்போது, நீர் தீப்பிழம்பிலிருந்து பெரும்பாலான வெப்பத்தை உறிஞ்சுகிறது. பின்னர், பலூனின் ரப்பர் மிகவும் சூடாக மாறாது. ரப்பர் சூடாகாததால், அது பலவீனமடையாது, மேலும் பலூன் உடைக்காது. பலூன் உடைக்காது. தீச்சுவாலைக்கு மேலே பலூனின் வெளிப்புறத்தில் புகை வடிவத்தின் கருப்புத் துண்டைக் கூட நீங்கள் காணலாம். நீர் குறிப்பாக வெப்பத்தை உறிஞ்சி ஒரு நல்ல உறிஞ்சியாகும். நீரின் வெப்பநிலையை மாற்ற நிறைய வெப்பம் தேவைப்படுகிறது. 1 கிராம் இரும்பின் வெப்பநிலையை அதே அளவு உயர்த்துவதை விட 1 கிராம் நீரின் வெப்பநிலையை 1C உயர்த்துவதற்கு 10 மடங்கு அதிக வெப்பம் தேவைப்படுகிறது. அதனால்தான் கொதிக்க ஒரு டீகெட்டில் தண்ணீரைக் கொண்டு வர நீண்ட நேரம் ஆகும். மறுபுறம், நீர் குளிர்ச்சியடையும் போது, அது அதிக வெப்பத்தை வெளியிடுகிறது. இதனால்தான் பெருங்கடல்களுக்கு அருகிலுள்ள பகுதிகள் அல்லது பிற பெரிய நீர்நிலைகள் குளிர்காலத்தில் அதே அட்சரேகையில் உள்ள பகுதிகளைப் போல குளிர்ச்சியடைவதில்லை.
- பறக்கும் பன்றி
பாவலன் நல்ல ஓவியன்தான் பறக்கும் குதிரை படம் வரைந்தான் அன்று இரவு அவன் கனவில் பன்றி ஒன்று வந்தது பார்! என்ன தம்பி நியாயம் இது? என்னை மறந்தது எப்படி நீ வலிமை மிகுந்த குதிரைக்குதான் வாய்ப்பு வசதியும் தருவாயோ? சேற்றில் கிடந்து உழல்கின்றேன் சிரமப்பட்டு வாழ்கின்றேன் விரட்டி வந்து அடிக்கின்றார் வீல் வீலென அலறி துடிக்கின்றேன் என்னைப் போன்ற எளியவர்க்கு இறக்கைகள் தந்தால் ஆகாதா? என்ற பன்றியின் குறையை நினைத்தபடி படுத்து புரண்டான் பாவலனும் உறக்கம் கலைந்து எழுந்தவுடன் பறக்கும் பன்றி படம் வரைந்தான்!
- கேளு பாப்பா கேளு!
கேள்வி: குழந்தைகளுக்கு அரசியல் வேண்டுமா? ( ஸ்ரீமதி, சென்னை) பதில்: நிச்சயம் வேண்டும். அதிகாரம், ஜனநாயகம், சமத்துவம், பொதுநலம் குறித்த புரிதல்களை ஏற்படுத்த வேண்டும். அதுவே அவர்களுக்குத் தேவையான, அடிப்படையான அரசியல். அதேவேளையில் கற்பனை மிகுந்த அவர்களது உலகை சிதைத்து விடாமல் அந்த சிந்தனைகளை உருவாக்க வேண்டும். காட்டில் சிங்கத்திற்கு கட்டுப்பட்டு மற்ற மிருகங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு மிருகம் அதற்கு இரையாக உடன்படுவது போன்ற தந்திரக்கதைகளை மாற்றி எல்லா மிருகங்களும் ஒன்று சேர்ந்து சிங்கத்தை எதிர்த்தால் விரட்ட முடியும் என்ற வழிகளை காட்ட வேண்டும். கேள்வி: அறிவியல் மனப்பாங்கு என்றால் என்ன? ( ஆதினி, தென்காசி) பதில்: நம்மைச் சுற்றி இருக்கிற ஒவ்வொன்றையும் கவனிப்பதும், அதுகுறித்த சிந்தனைகளில் ஈடுபடுவதும் அறிவியல் மனப்பான்மை. ஏன் என்றும் எப்படி என்றும் ஒவ்வொன்றையும் ஆராய்வதன் மூலம் உண்மைகளை அறியும் முயற்சிதான் அது. சூரியன் இருக்கும்போது பகலாகவும், சூரியன் இல்லாமல் இருக்கும் போது இரவாகவும் ஏன் இருக்கிறது என்று ஒரு காலத்தில் கேள்விகள் எழுந்தன. மனிதர்கள் அதுகுறித்து சிந்திக்கத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாகத்தான் பூமி உருண்டை என்பதையும், பூமி சூரியனை சுற்றி வருகிறது என்பதையும் கலிலியோ மூலம் உலகம் அறிந்தது. இன்று நாம் அறிந்திருக்கும் ஒவ்வொரு உண்மைக்கும் பின்னால் மனிதர்கள் காலம் காலமாய் கேட்டு வந்த எத்தனையோ கேள்விகளும், உண்மையைத் தேடும் இடைவிடாத முயற்சிகளும் இருக்கின்றன. இந்த அறிவியல் மனப்பான்மையால்தான் மனித இனம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கிறது.
- இலண்டனிலிருந்து அன்புடன்
வணக்கம் சுட்டிகளா, “இயல்” சிறுவர் இதழ் புத்தம் புதிதாய் மலர்ந்துள்ளது. புதியது என்றாலே அதில் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிறைந்திருக்கும். அந்தக் கொண்டாட்டத்தில் நானும் உங்களுடன் இணைகிறேன். அதுவும் எங்கிருந்து தெரியுமா? இலண்டனிலிருந்து… “இங்கிலாந்து சிறுவர் இலக்கியம்” எனும் தலைப்பில் உங்களை நான் ஒவ்வொரு இதழிலும் சந்திக்க இருக்கிறேன். இலண்டனில் பிரபலமான சிறுவர் புத்தகங்கள் பற்றித்தான் பேசப் போகிறோம். Virtual Reality கண்ணாடி அணிந்து கொண்டால் எப்படி இருக்கும்? அப்படிதான் நாம் அனைவரும் ஒன்றாகப் புத்தகங்கள் மூலம் இலண்டனைச் சுற்றிப் பார்க்கப் போகிறோம். என்ன? புத்தகங்கள் வழியே இலண்டனைச் சுற்றிப் பார்க்க நீங்கள் தயாரா? hologauze animations இலண்டனின் மிக முக்கியமான அடையாளம் “தேம்ஸ் நதி”. திருவிழா, பண்டிகை என எந்த ஒரு முக்கியமான என்றாலும் மக்கள் தேம்ஸ் நதிக்கரையில் கூடிக் கொண்டாடுவார்கள். 2025ஆண்டு புத்தாண்டை வரவேற்க சுமார் ஒரு இலட்சம் மக்கள் தேம்ஸ் நதியோரம் கூடினர். பல இலட்சம் மக்கள் நேரலையில் இந்நிகழ்வைப் பார்த்தனர். சரியாக 12மணிக்கு பட்டாசுகளும் டிரோன் விளக்குகளும் இணைந்த வான வேடிக்கை நிகழ்வு தொடங்கியது. இந்நிகழ்வில்தான் முதன்முதலாக hologauze animations பயன்படுத்தப்பட்டன. Hologauze animations என்பது புதுவகையான மாய பிம்பங்கள். “London Eye” என அறியப்படும் மிகப் பெரிய ராட்டினம் உள்ளது. அந்த இராட்டினத்தைச் சுற்றித்தான் hologauze animations நடைபெற்றன. ஆரம்பத்தில் hologauze animations மூலம் “Happy New Year” போன்ற வாழ்த்துச் செய்திகளே இடம் பெற்றன. ஆனால், நிகழ்வின் முடிவில் மாய திரையில் சிறப்பு விருந்தினர் ஒருவர் தோன்றி இன்ப அதிர்ச்சி தந்தார். அவர் யார் தெரியுமா? இங்கிலாந்தின் பிரதமரோ, மறைந்த எலிசபத் ராணியோ, ராஜா பிலிப்போ, விளையாட்டு வீரரோ, நடிகரோ, இசைக் கலைஞரோ, விஞ்ஞானியோ அல்ல. அங்குத் தோன்றியது, சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான, சிறார் இலக்கியத்தின் மிக முக்கிய கதாபாத்திரமான “பேடிங்கடன் கரடி”. ஆமாம்! பேடிங்கடன் கரடிதான் அன்றைய சிறப்பு விருந்தினர். நாடு, இனம், மொழி, மதம், கலாச்சாரம் என பல்வேறு வேறுபாடுகள் நிறைந்த மக்கள் வாழும் இடம் இங்கிலாந்து. வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாய் வாழும் சூழலை உருவாக்குவதே இங்கிலாந்து அரசின் நோக்கம். அந்த ஒற்றுமையை வலியுறுத்தும் செய்தியைத்தான் “பேடிங்கடன் கரடி” எனும் சிறுவர் புத்தகம் உலகிற்கு வழங்கியுள்ளது. "As we enter the new year, I always remember what Mrs Brown says: in London everyone is different, but that means anyone can fit in. I think she must be right. Because although I dont' look like anyone else, I really feel at home. Happy New Year, Love, from Paddington" ஆமாம் செல்லங்களா! பேடிங்கடன் கரடி என்பது உலக அமைதியின் அடையாளமாய் விளங்குகிறது. சரி! இவ்வளவு முக்கியமான பேடிங்கடன் புத்தகம் குறித்தும், அதன் ஆசிரியரான மைக்கேல் பாண்ட் குறித்தும் விரிவாக அடுத்த இதழில் பார்ப்போம். ( தொடரும் )













