top of page

புத்தகப் புழுவிடம் நீங்களும் கேட்கலாம்!


ree

1. நாம் வாழும் பூமி சுற்றுகிறது என்று சொல்கிறார்கள். பூமி ஒரு பந்தைப் போலிருக்கிறது. அதன் மேல்தான் நாம் வாழ்கிறோம். அப்படியென்றால், அதன் மேல் இருக்கும் நாம் ஏன் கீழே விழுவதில்லை?

- ஆதிரன், திருச்சி


வணக்கம் ஆதிரன், நான் புத்தகப் புழு பேசுறேன். நீங்கள் கேட்டிருப்பது ரொம்ப முக்கியமான கேள்வி. இதுபோன்ற சந்தேகங்கள்தான் அறிவை வளர்க்கும். ஆனா, இந்தக் கேள்விக்கு எனக்கும் சட்டுனு பதில் தெரியலை. நிறைய அறிவியல் புத்தகங்களை எடுத்துப் படிச்சேன். அதுல என்ன போட்டிருக்குன்னா...

நீங்க சொல்ற மாதிரி பூமி ஒரு பிரம்மாண்டப் பந்துதான். அது தன்னைத் தானே சுத்திக்குது. இந்த சுழற்சியோட வேகம் நில நடுக்கோட்டுப் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு 1,675 கிலோமீட்டராம் (அம்மாடி, நாம பைக்குல 100 கி.மீ. வேகத்துல போனாவே தலைய சுத்துதே).


பூமிப் பந்தின் மீதுதான் நாம் எல்லாரும் வாழுறோம். பூமியின் மீது இருக்கும் மனிதர்கள், மற்ற எல்லாமுமே ஒரே வேகத்தில் சுற்றிக்கொண்டே இருக்கின்றன. இருந்தாலும் நாம கீழே விழுவதில்லை. இதற்குக் காரணம் புவியீர்ப்பு விசை (Gravity). உலகில் உள்ள அனைத்தையும் இதுதான் கீழ புடிச்சு இழுத்துக்கிட்டிருக்கு. அப்படின்னா, அது இழுக்குறது நமக்கு ஏன் தெரியலை?


நாம பொறக்குறதுக்கு முன்னாடி அம்மா வயித்துக்குள்ள இருந்த காலத்திலேர்ந்தே, அது நம்மை இழுத்துக்கிட்டுதான் இருக்கு. அதனால, அது இழுக்குறது நமக்கு தனியாத் தெரியாது. அது இருக்கிறதுனாலதான் நாம எல்லாரும் நடக்க, ஓட, விளையாட முடியுது. விண்வெளிக்குப் போய்ட்டா புவி ஈர்ப்பு விசை இருக்காது. அதனாலதான் விண்வெளில வீரர், வீராங்கனைகள் மிதக்குறாங்க.


சரி, நாம கேள்விய விட்டு ரொம்ப தூரமா விண்வெளிக்கே போய்ட்டோம். திரும்ப பூமிக்கே வந்திருவோம். ஒரு எடுத்துக்காட்டு சொன்னா உங்களுக்கு இன்னும் நல்லா புரியும்னு நினைக்கிறேன்.


ஒரு நேரான சாலையில், ஒரே சீரான வேகத்தில் ஒரு கார் போய்க்கிட்டு இருக்கு. அதுக்குள்ள நீங்கள் இருக்கிங்க. அந்த காருடன் வேறு எதுவுமே குறுக்கிடாதபோது, ஏதாவது அசைவை நம்மால உணர முடியுமா? முடியாது இல்லையா?


அதுபோலத்தான் பூமியில நாம வாழ்றதும். பூமியோட சுத்தும் வேகம் ரொம்பப் பெரிய அளவுக்குக் கூடவோ, குறையவோ இல்லை. அது சீரான வேகத்துல சுத்துது. இது மட்டுமில்லாம, புவியீர்ப்பு விசை வேற இருக்கு. இதெல்லாம் சேர்ந்து நாம இப்போ இயல்பா வாழ்றதுக்கு, நடமாடுறதுக்கு உதவுது. நம்மளோட இயல்பான இயக்கத்துல ஏதாவது தடை வந்தா கீழ விழுகுறோம், காயமாகுது. இல்லேன்னா நாம எப்பவுமே எல்லா வேலைகளையும் செய்ய எந்தத் தடையும் இந்த உலகத்துல இல்ல.


2. மாவட்ட ஆட்சியர்களைப் போல அமைச்சர்களும் ஏன் படித்துப் பரீட்சை எழுதக் கூடாது?

- யாழினி, திருநெல்வேலி.


வணக்கம் யாழினி! வழக்கமா எல்லாரும் அறிவியல், பொது அறிவுக் கேள்வி கேட்பாங்க. நீங்க அரசியல் கேள்வி கேட்டிருக்கீங்க. இந்த வயசுலேயே உங்களுக்கு இப்படி கேள்வி வந்திருக்கிறது ரொம்ப நல்ல விசயம்.


Government என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவது தமிழில் அரசு எனப்படுகிறது. இதன் முக்கிய அங்கங்கள் சட்டம் இயற்றும் அவை, அரசு நிர்வாக அமைப்பு, நீதித் துறை. அரசு கொள்கைகளை/சட்டங்களை உருவாக்குதல், அவற்றை நடைமுறைப்படுத்துதல், சட்டத்தைப் பாதுகாத்தல் ஆகிய வேலைகளை இந்த அமைப்புகளே செய்கின்றன. இதில் அரசு நிர்வாக அமைப்பை இயக்குபவர்களே நீங்கள் கூறும் மாவட்ட ஆட்சியர்கள், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள். இதற்கான தேர்வை ஒரு முறை எழுதித் தேர்வாகிவிட்டால், அவர்கள் நிரந்தரமாகப் பணியாற்றலாம். இந்தத் தேர்வுகள் ஆங்கிலேயர் காலத்திலிருந்தே நடத்தப்பட்டுவருகின்றன. அரசு கொள்கைகளை உருவாக்குவதில் குறிப்பிட்ட அளவும், நடைமுறைப்படுத்துவதிலும் இவர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள்.


அதேநேரம் இந்தக் கொள்கைகளை வகுப்பது சார்ந்து மக்கள் என்ன நினைக்கிறார்கள், அவற்றில் எதற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க நினைக்கிறார்கள் என்பதுடன் அனைத்துத் தரப்புக்கும் அனைத்தும் உரிய வகையில் கிடைப்பதை உறுதிசெய்ய மக்கள் பிரதிநிதிகள் தேவைப்படுகிறார்கள். இந்த பிரதிநிதிகளே அரசியல்வாதிகள்.


அரசு அதிகாரிகளைப் போல அரசியல்வாதிகள் தேர்வை எழுதுவது இல்லை என்பது உண்மைதான். ஆனால், அவர்களுக்குத் தேர்தல் எனும் தேர்வு உண்டு. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால் நம்முடைய பிரதிநிதியாகவே (இவர்களில் சிலர் அமைச்சர் ஆகிறார்கள்) உள்ளாட்சி மன்றம், மாநகராட்சி மன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு அவர்கள் செல்கிறார்கள். இந்த மன்றங்களே மக்களுக்குத் தேவையான சட்டங்களை இயற்றுகின்றன. அரசு சட்டங்கள், கொள்கைகள் உருவாக்கப்படும்போது நம் சார்பாக மன்றங்களில் பேசுவது, வாதிடுவது ஆகிய வேலைகளை அவர்கள் செய்கிறார்கள். இப்படி பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வசதியாக, ஒரு அமைப்பாக கட்சிகளில் அவர்கள் சேர்கிறார்கள்.


அவர்கள் சரியாகச் செயல்படுவதை உறுதிசெய்ய மக்களான நாம்தான் அழுத்தம் கொடுக்க வேண்டும். அரசியல்வாதிகள் சரியாகச் செயல்படவில்லை என்றால், அடுத்துவரும் தேர்தலில் மக்கள் தோற்கடிப்பார்கள். அதற்கு முன்னதாகவே, நம் நாட்டுச் சட்டங்களின்படி அரசியல்வாதிகளுக்கு எதிராகப் புகார் அளிக்கலாம், வழக்கு தொடுக்கலாம். 100 சதவீதம் இல்லாவிட்டாலும் அரசியல்வாதிகள் நம்முடைய சமூகத்தின், சமூகம் இருக்கும் நிலையின் பிரதிபலிப்புதான். அதிகாரம் என்பது மக்களுக்குச் சேவையாற்ற என்பதற்கு பதிலாக, தங்கள் சுயநலனுக்குப் பலரும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். வெகுமக்கள் சரியாக செயல்பட்டால், அந்நாட்டு அரசியல்வாதிகளும் சரியாகச் செயல்படுவார்கள். அனைத்துத் தரப்பினருக்கும் கல்வியுடன், அரசியல் கொள்கைகள், ஆட்சிக் கொள்கைகள்/சட்டங்கள் சார்ந்த பயிற்சி இதற்கு அவசியம். இதை சமூகச் செயல்பாட்டாளர்கள் உதவியுடன் மக்களான நாம் முன்னெடுக்கலாம், பரவலாக்கலாம். கூட்டாகவும் சிந்தனைபூர்வமாகவும் செயல்பட்டால் மாற்றங்கள் சாத்தியமாகும்.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page