இயலில் தேடலாம்!
178 results found with an empty search
- ஏன் பிறந்தோம் -3
விலங்குகள் பறவைகள் பூச்சிகளின் சுய செயல்பாடு தாவரங்களுக்கும் உயிர் உண்டு. அவை தானாகவே செயல்படுகின்றன. அவை மனிதர்களைப் போல சுதந்திரமாக, படைப்பூக்கமிக்க சிந்தனையை வெளிப்படுத்துவதில்லை. ஒரு குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட்ட செயலுக்கு எதிர்வினை புரிகின்றன. அந்த எதிர்வினை தொடர்ந்து உயிர் வாழ்வதற்கான செயல்பாடே. உயிர்வாழ்தலும் இனப்பெருக்கமும்தான் அவற்றின் அடிப்படை நோக்கம். அதேமாதிரித்தான் விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் செயல்படுகின்றன. உயிர் வாழ்தலும் இனப்பெருக்கமும் உயிர் வாழ்தலுக்கு இரையை அடையாளம் காணுதல், அதாவது எதைச் சாப்பிடலாம். எதைச் சாப்பிடக்கூடாது என்று தேர்ந்தெடுத்தல். இரையைத் தேடுவது, அதாவது சாப்பிடும் இரை அதிகமாக இருக்கும் இடங்களில் தன்னுடைய வாழ்விடத்தை அமைத்துக்கொள்ளுதல். தன்னைப் பாதுகாத்துக்கொள்ளுதல். எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு, இயற்கைப் பேரிடரிலிருந்து பாதுகாப்பு, இதற்கான தகவமைப்புடன் கூடிய உடலமைப்பை உருவாக்கிக் கொள்ளுதல். அடுத்தது இனப்பெருக்கம். இயற்கையில் தங்களுடைய இருப்பையும் தொடர்ச்சியையும் தக்கவைத்துக் கொள்ளவும் உணவுச்சங்கிலியில் தன்னுடைய இருத்தலின் மூலம் தன்னைச் சார்ந்தோ அல்லது தான் சார்ந்தோ இருக்கக்கூடிய விலங்குகளுக்கு உதவிசெய்வது போன்றவற்றிற்கு இனப்பெருக்கம் அவசியம். உங்களுக்குத் தெரிந்திருக்கும். புற்கள் இல்லையென்றால் அவற்றை மேயும் தாவரஉண்ணிகள் மறைந்துவிடும். தாவரஉண்ணிகள் இல்லையென்றால் அவற்றை இரையாகச் சாப்பிடும் ஊனுண்ணிகள் மறைந்துவிடும். ஒரு மானைப் புலி வேட்டையாடுவதைப் பார்க்கும் நாம் பரிதாபப்படுகிறோம். ஆனால், மானைச் சாப்பிடும் விலங்குகள் இல்லையென்றால் என்ன ஆகும்? மான்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகிவிடும். அவை பூமியில் பச்சையாக வளரும் பெரும்பாலான தாவரங்களைச் சாப்பிட்டுவிடும். அந்தத் தாவரங்களைச் சார்ந்து தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ள பூச்சிகள், புழுக்கள் மறைந்துவிடும். அந்தப் பூச்சிகள், புழுக்களைச் சாப்பிட்டு வாழும் பறவைகளும் சிறுவிலங்குகளும் மறைந்துவிடும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இயற்கை ஒரு வலைப்பின்னல் மாதிரி அனைத்து உயிர்களையும் பிணைத்து வைத்திருக்கிறது. நுணுக்கமான வைரஸாக இருந்தாலும் சரி, உருவத்தில் பெரிய யானையாக இருந்தாலும் சரி ஒவ்வொரு உயிருக்கும் தனித்தனி குணம், உடல், பழக்கவழக்கங்கள், உணவுமுறை, இனப்பெருக்கம் ஆகியவற்றை இயற்கை உருவாக்கியிக்கிறது. அல்லது ஒவ்வொரு உயிரும் இயற்கையில் தாங்கள் வாழ்வதற்கு ஏற்ப சிறப்பு குணங்களை, தகவமைப்புகளைப் பரிணாமவளர்ச்சியில் பெற்றிருக்கின்றன. இலைவெட்டி எறும்புகள் கிட்டத்தட்ட ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் செய்திருக்கிறது. கரப்பான்பூச்சிகள் இரண்டரை கோடி வருடங்களாக அழியாமல் அணுகுண்டு தாக்குதலில்கூட அழியாமல் இன்றுவரை இருக்கிறது. இப்படிச் சிறப்பான குணாதிசயங்கள் ஒவ்வொரு உயிருக்கும் இருக்கிறது. அதைப் பற்றிக் கூடுதலாக நீங்களே படித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், நாம் இப்போது தெரிந்துகொள்ள வேண்டியது: அந்த உயிரினங்கள் அதற்கு முன்னால் எத்தனை லட்சம் ஆண்டுகளாக மாற்றங்களை எதிர்கொண்டிருக்கும் என்பதே. இந்த மாற்றங்கள் தானாக உருவானவையா? அல்லது திட்டமிட்டு உருவாக்கப்பட்டவையா? உண்மை என்ன? புலனுணர்விலும் அறிவிலும் கீழ்ப்படியில் இருக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் தாங்கள் இப்படி மாறவேண்டும், இப்படி மாறக்கூடாது என்றெல்லாம் முடிவுசெய்யும் அளவுக்கு சிந்திக்கத் தெரியாது. அந்த மாற்றங்கள் எல்லாம் அந்தந்த உயிரின் பிழைத்திருப்பதற்கான உள்ளுணர்வு (Survival Instict), அதன் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களின் விளைவு. அதேபோல புதிய உயிர்கள் தோன்றுவதற்கு மரபணுக்களில் நிகழும் மாற்றம் அல்லது திடீர்மாற்றமே காரணம் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஹோமோ சேப்பியன்ஸ் என்கிற அறிவியல் பெயர் சூட்டப்பட்ட நாம் தோன்றியதுகூட, மரபணுக்களில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தினால்தான் (Chromosome Mutations) என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். ஆக விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளுமேகூட தங்களுடைய வாழ்க்கையை இயற்கையைச் சார்ந்து தகவமைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் செயல்பாடுகள் இயற்கையைப் பாதிப்பதில்லை. இயற்கையை ஒட்டிய சிந்தனையையும் தத்துவத்தையும் அவை கொண்டிருக்கின்றன என்று சொல்லலாமா? இவற்றிலிருந்து மனிதன் மட்டும் மாறுபடுகிறான். எப்படி? ( தத்துவம் அறிவோம் )
- நகரும் மாய வீடு
வீடு என்பது பெரும்பாலான குழந்தைகளுக்கு பிடித்த இடம். பள்ளியைப் போன்று கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சுதந்திரமாக விளையாட, பேச, செயல்பட ஏற்ற இடம். ’நகரும் மாய வீடு’ என்கிற தலைப்பே குழந்தைகளின் முகத்தில் புன்னகையை வரவழைப்பதாக, ஆச்சரியமூட்டுவதாக, எதிர்பார்ப்பை தூண்டுவதாக உள்ளது. இந்தக் கதையின் மையக் கதாபாத்திரமான கூரை வீடு மந்திர சக்தியால் நகர்ந்து கொண்டே இருக்கிறது. அது எங்கெல்லாம் போகிறது? அதனுடன் யாரெல்லாம் பயணித்தார்கள், யார் யாரையெல்லாம் சந்திக்கிறது? என்னவெல்லாம் செய்கிறது? என்பதை மிக சுவைபட சுவாரசியமாக இந்த நூல் விவரிக்கிறது. ஒரு குரங்காட்டி, தனது குரங்கிற்கு சிவப்பு சட்டையும் பச்சை நிற பேண்டும் அணிவித்து வித்தை காட்டுகிறான். வித்தை முடிந்ததும் இருவரையும் தெருநாய்கள் துரத்த, சாலையை கடக்க முயன்ற போது, குரங்காட்டி வாகனம் மோதி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறான். சிறு காயங்களுடன் தப்பித்த குரங்கு யாருமில்லாத ஒரு கூரை வீட்டிற்குள் சென்று ஒளிந்து கொள்கிறது. தனக்கு இடையூறாக இருந்த உடைகளைக் கழட்டிப் போடுகிறது. இடுப்பில் கட்டி இருந்த கயிறு, ஒரு ஆணியில் மாட்டிக்கொள்ள குரங்கு அங்கிருந்து தப்பித்து ஓடி விடுகிறது. அதே சமயத்தில் வெளியே இடி மின்னலுடன் பலத்த மழை பெய்கிறது. கயிற்றில் கட்டப்பட்டிருந்த சிறு பாட்டில் கீழே விழுந்து, புகை போன்ற ஏதோ ஒன்று குடிசை முழுவதும் பரவுகிறது. அதனால் அந்த கூரை வீட்டிற்கு மந்திர சக்தி வந்து பேசவும், நகரவும் ஆரம்பிக்கிறது. அந்த வீட்டில் ஒரு பெரிய பல்லியும் குட்டி எலியும், அணிலும் வசிக்கின்றன. மூன்று ஜீவராசிகளும் பயந்து போனாலும் கூரையின் மூங்கில்களை வெட்டியாக பிடித்துக் கொள்கின்றன. கூரை வீட்டின் பயணம் தொடங்குகிறது. சின்ன சின்ன தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற் போன்ற அடுக்கு மாடி வீடுகளை பார்த்து கூரை வியந்து போகிறது. பின் அது காட்டின் அடிவாரத்திற்கு வருகிறது. தானியங்கள் ஏற்றி வரும் வாகனங்களில் இருந்து சிதறும் தானியங்களை கொத்தித் தின்னும் ஏராளமான பறவைகள் பின்னால் வந்த வாகனங்களால், அடிபட்டு இறப்பதை பார்க்கும் கூரை வீடும், பல்லியும், எலியும் அணிலும் அதிர்ந்து போகின்றன. சுயநலம் பிடித்த மனிதர்கள் தங்கள் ஆதிக்கத்தை காட்டிலும் நிலைநாட்டி வைத்திருப்பதை ஆசிரியர் விவரிக்கிறார். அங்கே உள்ள மலைகளையும் பாறைகளையும் வெடிவைத்து தகர்த்து சிறு கற்களாக்கி அவற்றை வீடு கட்ட எடுத்துப் போகின்றனர். அதனால் பறவைகளும் பாம்புகளும் இன்ன பிற ஜீவராசிரியர்களும் மிகவும் துன்பத்திற்கு ஆளாகின்றன. காட்டில் மரங்களை மனிதர்கள் வெட்டுகின்றனர். அதன் காரணமாக மரங்களில் இருக்கும் பறவைக்கூடுகள், முட்டைகள் குஞ்சுகளுடன் கீழே விழுந்து இறப்பதை வேதனையோடு பார்க்கிறது கூரை வீடு. தாய்ப்பறவைகளை இழந்த குஞ்சுப் பறவைகளை கூடோடு தன்னுடைய வீட்டுக்குள் வைத்துக் கொள்கிறது. அணிலும் எலியும் தானியங்களை எடுத்து வந்து அவற்றை உடைத்து குஞ்சுகளுக்கு தருகின்றன. மனிதர்களிடம் இல்லாத ஜீவகாருண்யமும் கருணையும் அவைகளுக்கு இருக்கின்றது. தப்பி வந்த குரங்கும் காட்டை வந்து அடைந்து, கூரை வீடுடன் சேர்ந்து வெயில் படும் இடங்களில் செடிகளை நடுகின்றன. சிறிது காலத்தில் ஏராளமான செடி கொடிகள் வளரத் தொடங்குகின்றன. இதை வாசிக்கும் குழந்தைள் காடு என்பது மரங்களுக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சொந்தமான இடம், அதை தனது சுயநலத்திற்காக மனிதர்கள் அழிக்கக் கூடாது என்று தெரிந்து கொள்வார்கள். நூல்; நகரும் மாய வீடு ஆசிரியர்; வே. சங்கர் பக்கங்கள்; 64 விலை; 70 வெளியீடு; பாரதி பதிப்பகம்
- ஆஹா!
படம்: உ. நவீனா
- நீலச் சட்டை பார்பி பொம்மை
ஒரு கடையில் பல விதமான பொம்மைகள் இருந்தன. ஒரு அலமாரி முழுவதும் பார்பி பொம்மைகள் இருந்தன. இரவில் கடை சாத்திய பிறகு மனிதர் இல்லாத நேரத்தில் அந்தப் பொம்மைகள் ஒன்றோடு ஒன்று பேசிக் கொள்ளும். இரவு முழுவதும் கும்மாளம் போடும்! அடுத்த வாரம் புத்தாண்டு பிறக்க இருந்தது. புத்தாண்டு விற்பனைக்காகப் பல புதிய பொம்மைகள் கடையில் வந்து இறங்கின. ஒரு நாள் மாலை அந்தக் கடையில் வேலை செய்யும் பெண் புதிய பொம்மைகளை அலமாரியில் அடுக்க வந்தார். அங்கே ஒரு பழைய பார்பி பொம்மை இருந்தது. அது நீலச் சட்டை போட்டு இருந்தது. அது ஓர் ஆண்டுக்கும் மேலாக விற்பனை ஆகாமல் இருந்தது. அதைத் தொட்டால் கண் சிமிட்டிச் சிரிக்கும்! அந்தச் சிரிப்பு அவ்வளவு அழகாக இருக்கும்! “இந்தப் பார்பி பொம்மை ரொம்ப நாளா விக்காம இடத்தை அடைச்சிக்கிட்டு இருக்கு. இனிமே இதை யாரும் வாங்க மாட்டாங்க. இதைக் குப்பையில தூக்கிப் போட்டு விடலாமா?” என்று அந்தப் பெண் முதலாளியைக் கேட்டார். “இப்ப வேணாம். மூனு வாரத்துல பொங்கல் வருது. அப்போது பார்த்துக்கலாம்; இப்ப உள்ளே தள்ளி வை” என்றார் முதலாளி. அந்தப் பெண் அந்தப் பொம்மையை உள்ளே தள்ளி வைத்தார். முன்புறம் புதிய பொம்மைகளை அடுக்கினார். புதிய பார்பி பொம்மைகளின் உடைகள் பளிச்சென்று ரோஸ் நிறத்தில் இருந்தன. அவை போட்டு இருந்த செருப்புகள் தங்க நிறத்தில் மின்னின. பொத்தான்களைத் தொட்ட உடனே சில பொம்மைகள் இனிய இசையுடன் நடனம் ஆடின. முதலாளி சொன்னதைக் கேட்ட பழைய பொம்மைக்கு முகம் வாடி விட்டது. அன்று கடை மூடிய பிறகு புதிய பொம்மைகள் அதைக் கிண்டல் செய்தன. “நீலச் சட்டை போட்ட பார்பியை, எந்தப் பெண் குழந்தையாவது வாங்குமா?” என்று சொல்லிச் சிரித்தன. சோகமாக இருந்த அந்தப் பொம்மைக்கு, ஒரு குரங்கு பொம்மை ஆறுதல் கூறியது. “கவலைப் படாதே! நம்பிக்கையோடு காத்திரு; உன்னை விரும்பி வாங்கக் கூடிய குழந்தை சீக்கிரமே வரும்” என்றது குரங்கு பொம்மை. மறுநாள் காலையில் ஒரு பெண் குழந்தையை அழைத்துக் கொண்டு அவள் அம்மா காரில் வந்து இறங்கினார். “நிலா! நாலு கடை ஏறி இறங்கியாச்சி! நேரமாச்சு; உனக்குப் பிடிச்ச பொம்மையைச் சீக்கிரம் பார்த்து எடு” என்றார் அம்மா. நிலா பார்பி பொம்மைகள் இருந்த அலமாரி பக்கம் வந்தாள். முன் பக்கம் அடுக்கி இருந்த பொம்மைகள் வித விதமான ஒலி எழுப்பி நடனம் ஆடின. ஆனால் எதுவும் அவளைக் கவரவில்லை. அவள் அந்தப் பொம்மைகளை நகர்த்தி வைத்தாள். உள் பக்கம் இருந்த அந்த நீல பார்பி பொம்மையைக் கையை உள்ளே விட்டு எடுத்தாள். தான் தேடியது கிடைத்து விட்டது என்பது போல, அதைப் பார்த்ததும் அவள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி! “அம்மா! நான் தேடுனது கிடைச்சிட்டுது! இது தான் எனக்கு வேணும்” என்றாள். அதைப் பார்த்த அம்மா முகத்தில் அதிருப்தி! “எவ்வளவு அழகான ரோஸ் நிறத்துல புது பொம்மை எல்லாம் இருக்கு! எல்லாத்தையும் விட்டுட்டு இந்தப் பழசைப் போய் எடுக்கிறியே!” என்றார் அம்மா சற்றுக் கோபத்துடன். “இது தான் எனக்குப் பிடிச்சி இருக்கு! நீல பார்பி தான் எனக்கு வேணும்; ரோஸ் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது” என்றாள் நிலா பிடிவாதமாக. அந்தப் பார்பி பொம்மை மகிழ்ச்சியுடன் திரும்பிக் குரங்கு பொம்மையைப் பார்த்துக் கண் சிமிட்டியது. குரங்கு பொம்மையும் மகிழ்ச்சியுடன் தன் கட்டை விரலை உயர்த்திக் காட்டியது. கையை ஆட்டி டாட்டா சொன்னது. அந்தப் பொம்மையை வாங்கி வந்த நிலா, அதன் நெற்றியில் முத்தம் கொடுத்தாள். எங்கே சென்றாலும் அதைத் தன் நெஞ்சோடு அணைத்து எடுத்துச் சென்றாள். எப்போதும் அதைக் கட்டி அணைத்துக் கொண்டு தூங்கினாள். அது இல்லா விட்டால் அவளால் தூங்க முடியவில்லை. அந்தப் பொம்மைக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!
- “அந்த சொல் ஒலிக்காத நாளே இல்லை”
கமலாலயன்: சிறார் பாடல் எழுதுவதில் உங்களுடைய முன்னோடி என நீங்கள் யாரைச் சொல்வீர்கள்? பாவண்ணன்: ம.இலெ.தங்கப்பா அவர்களே இத்துறையில் என்னுடைய முன்னோடி. அவரே எனக்கு வழிகாட்டி நெறிப்படுத்தியவர். ஒருமுறை என்னுடைய பாடல்களைப் படித்துவிட்டு “உன்னுடைய ஆழ்நெஞ்சில் ஒரு சிறுவன் எப்போதும் ஓடிக்கொண்டும் துள்ளித்துள்ளி ஆடிக்கொண்டும் இருப்பதை என்னால் பார்க்கமுடிகிறது. ஒவ்வொரு பாட்டையும் எழுதிமுடித்ததும் அவனுக்குப் பாடிக் காட்டு. அவனுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே அது நல்ல பாட்டு. அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதை அப்படியே கிழித்துப் போட்டுவிடுவது நல்லது. அவனுக்குப் பிடிக்காததை ஒருபோதும் எழுதாதே” என்றார். அந்தச் சொல் எனக்குள் ஒலிக்காத நாளே இல்லை. அதைச் சொன்ன தங்கப்பாவை நினைக்காத நாளும் இல்லை. கமலாலயன்: உங்கள் பாடல்களைத் தொகுத்துப் புத்தகவடிவில் வெளியிடுவதற்கு முன் குழந்தைகள் நடுவில் அவற்றைப் பாடிக் காட்டி இறுதிப்படுத்துவது உண்டா? அல்லது வேறு எந்த முறையில் அந்தப் பாடல்களை நூலாக்கத்துக்குத் தேர்வு செய்கிறீர்கள்? பாவண்ணன்: என்னுடைய எல்லாப் பாடல்களின் தகுதியையும் தீர்மானிப்பவன் எனக்குள் வாழும் சிறுவன். பாடல்களைத் தொகுத்துப் புத்தகமாக்கும் வரைக்கும் நான் காத்திருப்பதில்லை. ஒவ்வொரு பாட்டையும் எழுதி முடித்ததும் அச்சிறுவன் அதை முதலில் முணுமுணுத்துப் பார்ப்பான். தாளக்கட்டோடு பாடிப் பார்ப்பான். அவனுக்கு உவப்பளிக்காத பாட்டை நான் கருத்தில் கொள்வதே இல்லை. அக்கணமே ஒதுக்கிவைத்துவிடுவேன். என் கண்ணில் படாதபடி வீசி எறிந்துவிடுவேன். அவனுடைய மகிழ்ச்சியும் உற்சாகமும் மட்டுமே நான் வைத்திருக்கும் அளவுகோல். கமலாலயன்: இசையை முறைப்படி கற்றவர்கள்தான் சிறார் பாடல்களை எழுதமுடியுமா? பாவண்ணன்: அப்படியெல்லாம் ஒரு விதியும் இல்லை. ஒவ்வொருவருடைய நெஞ்சிலும் ஒரு தாளமும் லயமும் இருக்கிறது. அதைப் பழகிப் பழகி நாம் நம்மை மேம்படுத்திக்கொள்ளலாம். பாடல் வரிகள் ஊற்றெடுத்து வெளிப்படும் நேரத்தில் எந்த வேகத்தோடு வருகிறதோ, அதுவே அப்பாட்டின் தாளம். அது குதிரையின் வேகத்தில் துள்ளித்துள்ளி வந்தால், அது குதிரையின் தாளம். யானையின் வேகத்தில் அசைந்து அசைந்து வந்தால், அது யானையின் தாளம். எந்தத் தாளமாக இருந்தாலும் அதைப் பாடுகிற சிறார்களுக்கும் காதால் கேட்கிற சிறார்களுக்கும் உற்சாகமாகவும் உல்லாசமாகவும் இருக்கவேண்டும். அது மிகமிக முக்கியம். கமலாலயன்: சிறு குழந்தைகளுக்கு எந்த மாதிரியான சந்தம், எந்தத் தாளம், எந்த ராகங்களில் பாடல்களை அதிகம் எழுதியிருக்கிறீர்கள்? பாவண்ணன்: பாடல் ஊற்றெடுப்பதற்கு உந்துதலாக அமையும் காட்சி அல்லது உரையாடல் அல்லது ஓர் அசைவு எந்தத் தாளக்கட்டுக்கு இசைவாக நிகழ்கிறதோ, அதுவே அப்பாட்டுக்குப் பொருத்தமான தாளக்கட்டு. ஒருநாளும் ஒருவர் தாளக்கட்டை முதலில் தீர்மானித்துவிட்டு அதற்குப் பிறகு பாட்டை எழுதமுடியாது. ஒரு மலர் மலர்வதுபோல அது இயல்பாக நிகழும் ஒரு செயல். நான் எழுதும் ஒவ்வொரு பாடலும் அப்படித்தான் உருவாகிறது. எந்தத் தாளக்கட்டில் அதிக அளவில் பாடல்களை எழுதியிருக்கிறேன் என்பதெல்லாம் என் நினைவில் இல்லை. கமலாலயன்: குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள வரிகளோடு பாடல் அமைந்தால்தான் குழந்தைகளால் அந்த வரிகளைப் பின் தொடரவும் பொருளைப் புரிந்துகொண்டு அவற்றை ரசித்து அனுபவிக்கவும் முடியும் என்பது போன்ற வரையறைகளை நீங்கள் முன்வைப்பீர்களா? அல்லது இதெல்லாம் அவரவர் விருப்பம் என்று விட்டுவிடுவீர்களா? பாவண்ணன்: எழுதுகிறவர்கள் தீர்மானிப்பது என்பதைவிட, எழுதத் தூண்டும் காட்சியும் கருவும் எப்படித் தீர்மானிக்கிறது என்பதுதான் முக்கியம். வெறும் நான்கே நான்கு வரிகளைக் கொண்ட சில பாடல்களை தங்கப்பா எழுதியிருப்பதை நான் படித்திருக்கிறேன். அவரே சில சமயங்களில் இருபது இருபத்துநான்கு வரிகள் கொண்ட பாடல்களையும் எழுதியிருக்கிறார். இரண்டு விதங்களிலும் அவர் சிறப்பாக எழுதியிருக்கிறார். சுருக்கம் அல்லது விரிவு என்பதற்கு அப்பால் ஒரு பாட்டுக்கு சுவை மிகமிக முக்கியம். அந்த அம்சத்தில்தான் ஒரு கவிஞன் கவனத்தைக் குவிக்கவேண்டும். கமலாலயன்: கவிமணி, பாரதியார், பாரதிதாசன், தமிழ் ஒளி, அழ.வள்ளியப்பா, பூவண்ணன் உள்ளிட்ட முன்னோடிகளிடமிருந்து சிறாருக்கான பாடல்கள் வகைமைகள் சார்ந்து நாம் கற்பதற்கும் பெறுவதற்கும் என்னென்னவெல்லாம் உள்ளன? பாவண்ணன்: வாணிதாசன், கி.வா.ஜகந்நாதன், ம.இலெ.தங்கப்பா, துரை.மாணிக்கம் என்கிற பெருஞ்சித்திரனார் போன்ற ஆளுமைகளின் பெயர்களையும் நான் இந்த முன்னோடி வரிசைக் கவிஞர்களின் பட்டியலில் இணைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முன்னோடிப் படைப்பாளியிடமிருந்தும் அடுத்தடுத்த தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள் உண்டு. அவற்றைப் பட்டியலிட்டுத் தொகுப்பதும் பகுப்பதும் கல்வியியல் துறைச் சடங்காக அமைந்துவிடுவதற்கான சாத்தியம் உண்டு. மழைநீரை நாம் ஒரு பாத்திரத்தில் மட்டும் எடுத்துக்கொள்ள முடியுமா? தொட்டனைத்தூறும் மணற்கேணி போல ஒரு முன்னோடிப் படைப்பாளியின் பாடல்கள் எல்லாம் பாடுந்தோறும் சுரக்கும் கேணிகளைப் போன்றவை. ஓர் ஊற்றுமுகத்தைக் கண்டு முடித்ததும் மகிழ்ச்சியோடு அடுத்த ஊற்றுமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கவேண்டும். எங்கும் தேங்கி நின்றுவிடக் கூடாது. சென்றுகொண்டே இருப்பவன் அறிந்துகொண்டே இருப்பான். கமலாலயன்: சிறார்களின் மன, அறிவு வளர்ச்சிகளில் சிறார் இலக்கியப்படைப்புகளின் - குறிப்பாக சிறார் பாடல்களின் - முக்கியத்துவம் பற்றி உங்கள் அனுபவங்களிலிருந்து நீங்கள் கூற விரும்புவது என்ன? பாவண்ணன்: அறிவியல், புவியியல், வரலாறு, கணக்கு என வெவ்வேறு துறைசார்ந்த நூல்களைப் படிக்கும்போது அந்தந்தத் துறை சார்ந்த ஞானத்தை அடைகிறோம். அப்புரிதலின் வழியாக அதே துறையில் மேலும் சில அடிகள் நம்மால் செல்லமுடியுமா என முயற்சி செய்து பார்க்கிறோம். ஆனால் இலக்கியம் சார்ந்த வாசிப்பு அளிக்கும் ஞானம் என்பது வாழ்வியல் ஞானம். உலகியல் ஞானம். எந்தத் துறையின் வழியாகவும் நாம் அடையத்தக்க ஞானத்தைவிட பெரிய ஞானம். சிறார் இலக்கியம் என்பது பேரிலக்கியம் என்னும் ஆலயத்துக்குள் செல்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு வாசல். வலையை வீசி மீன் பிடித்துப் பழகுவதற்கு முன்பாக தூண்டில் வீசி மீன் பிடித்துப் பழகுவதுபோல. சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், சிறார் இலக்கியம் என்பது ஒரு பயிற்சிக்கூடம். பயிற்சிக்கூடத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களால் பேரிலக்கியங்களுடன் தடுமாற்றமின்றி மிக எளிதாகவும் இயல்பாகவும் ஓர் ஒட்டுதலை உருவாக்கிக்கொள்ள முடியும். (பேட்டி: எழுத்தாளர் கமலாலயன்)
- நெல்லையில் வேனில் விழா -2025
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (திருநெல்வேலி கிளை) மற்றும் விரல்கள் நுண்கலை குழு இணைந்து, மே 10, 2025 அன்று குன்னத்தூர் கிராமத்தில் உள்ள 'வேணுவனம்' என்ற இடத்தில் சிறுவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் 35 குழந்தைகள் பங்கேற்றனர். திருமதி விஜி அவர்களின் கோலாட்டத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. எல்லா குழந்தைகளும் உற்சாகமாக பங்கேற்றனர். அடிப்படை கோலாட்ட அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுத் தந்தார். அதன் பின் ஓலைக் கலைஞர் திரு. திலகராஜ் அவர்கள் சிறந்த கலைவழிக் கல்வியைக் குழந்தைகளுக்கு அளித்தார். இவரின் அமர்வு ஆர்வத்தை மட்டுமல்லாமல் சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் இருந்தது. தென்னங்கீற்று மூலம் கைக்கடிகாரம், பேசும் பொம்மை, கிரீடம், கண்ணாடி போன்றவற்றை எளிதாக உருவாக்கக் கற்றுத்தந்தார். ஒவ்வொரு பொம்மையாக குழந்தைகளும் அவருடன் சேர்ந்தே செய்தனர். எல்லாரும் செய்த பின்னரே அடுத்த பொம்மையைச் செய்யச் சொல்லிக் கொடுத்தார்! செய்து முடித்தவர்கள் மற்றவர்களுக்கு ஆர்வமுடன் சொல்லிக் கொடுத்தனர்! எந்த குழந்தையும் பின் தங்கி விடக்கூடாது என்பதில் தெளிவுடன் நிகழ்வைக் கொண்டு சென்றார்! பிற்பகுதியில் ஓவியர் கார்த்திகா அவர்களின் கலைவகுப்பு நடைபெற்றது. 'நகலெடுக்காத கலை' என்பதையே அவர் வலியுறுத்து வருகிறார்! இடத்தைச் சுற்றி பார்த்து, குழந்தைகள் அவர்களுக்கு பிடித்ததை வரைந்தனர் – பூனை, மரங்கள், நாற்காலி, இலை எனப் பல வகையான ஓவியங்களால் அமர்வு களை கட்டியது. மரக்கதவில் இருந்த யானை சிற்பம், அறையின் நடுவில் தொங்கிக் கொண்டிருந்த விளக்கு மற்றும் பொருளாளர் ப்ரியா அவர்களின் உடையில் இருந்த வடிவமைப்பு என மூன்றையும் இணைத்து ஒரு பெண் குழந்தை வரைந்தது ஆச்சரியமூட்டும் வகையில் இருந்தது! இவை அனைத்தும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு பிறவிக் கலைஞர் என்பதைக் உணர்த்தியது! இறுதியில் சிறந்த கலை ஆசிரியர் மாஸ்டர். திரு. சந்துரு அவர்கள் சிறுவர்களுடன் கலந்துரையாடினார். இரண்டு வடிவங்களை வரையச் சொல்லி, அதன்மூலம் அவர்கள் வரைந்த விதத்திற்கு பின் இருக்கும் உளவியலை எடுத்துரைத்தார்! காலையில் காரப்பொரி, கருவேப்பிலை சாறு, மதியம் சாம்பார் சாதம், மோர் சாதம், மாலையில் கொண்டைக்கடலை சுண்டல், எலுமிச்சை சாறு ஆகியவை வழங்கப்பட்டன. விஷ்ணுபுரம் சரவணனின் 'கயிறு' புத்தகம் ஒவ்வொரு குழந்தைக்கும் பரிசாக வழங்கப்பட்டு, அதைப் படித்துக் கருத்து தெரிவிக்கவும், பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் விவாதிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. — தேவர்பிரான் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், திருநெல்வேலி கிளை, தலைவர்.
- சகுந்தலா தேவி
ஜோ : வணக்கம் செல்லக்குட்டிகளா! குழந்தைகள் : வணக்கம் ஜோ அத்தை ஜோ : கடந்த மாதம் இந்தியாவின் முதல் ஆசிரியரைப் பற்றிப் பார்த்தோம். இந்த மாதம் ஒரு முக்கியமான ஆளுமையை பத்தி பார்க்கப்போறோம். அதுக்கு முன்னாடி உங்க கிட்ட ஒரு கேள்வி உங்களுக்குப் பிடிச்ச பாடம் எது? நகுலன் : அறிவியல் ரதி : கணக்கு நகுலன் : என்னது கணக்கா ஐயோ சாமி கணக்குனாலே எனக்கு காய்ச்சல் வந்துரும். ரதி : கணக்கு அவ்வளவு கஷ்டம் இல்லை. புரிந்துகொண்டால் மிகவும் சுலபம் தெரியுமா? நகுலன் : ஓ நீ கணக்குல புலி என்று சொல்கிறாயா? ரதி : இப்போ சின்ன புலி சீக்கிரமா பெரிய புலி ஆயிடுவேன் நகுலன் : சரி நான் ஒரு கேள்வி கேட்கிறேன் சரியா சொல்றியா? ரதி கேளு நகுலன் 65 + 72 + 64 +32 +27+ 43+ 11 ரதி : 314 நகுலன் ஆச்சரியமா இருக்குது அத்தை! பாருங்க கையை இப்படி அப்படி ஆட்டி ஆட்டி உடனே சொல்லிட்டா! ஜோ : கூடிய சீக்கிரத்துல இந்தியாவுடைய முதல் பெண் கணித மேதை சகுந்தலா தேவி மாதிரி வர என்னோட வாழ்த்துக்கள். நகுலன் : யாருங்க அத்தை சகுந்தலாதேவி? அவங்க தமிழ்நாடா? ஜோ : இல்லை, அவங்க பெங்களூரு ரதி : அவர் கணிதத்தில் முனைவர் பட்டம் வாங்கி இருப்பாங்க. அதனால் தான் அவர் அந்த கின்னஸ் சாதனை எல்லாம் செய்ய முடிந்தது. ஜோ : அதுதான் இல்ல அவங்க ஆரம்பப் பள்ளியைக் கூட தாண்டாதவங்க. ரதி : அப்படியா! அப்புறம் எப்படி இப்படி ஒரு பெயர் வாங்கினாங்க? ஜோ : அவரோட அப்பா, சகுந்தலா சிறு வயதாக இருக்கும் போது சர்க்கஸில் சீட்டு கட்டடில் எண் வித்தைகள் செய்வதற்கு வீட்டில் பயிற்சி எடுக்கும் போது சகுந்தலா தேவி அதை கவனித்துக் கொண்டே இருப்பார். நகுலன் : அடேயப்பா! அப்ப அவர் தினமும் சர்க்கஸ் பார்க்க கூட்டிட்டு போய் இருப்பாரு. எங்க அப்பாவும் சர்க்கஸ் இருந்தால் எப்படி இருந்திருக்கும் நானும் தினமும் சர்க்கஸ் பார்த்து இருக்கலாம். ரதி : ஹ! ஹ! ஹ! எனக்கும் கூட அப்படித்தான் தோன்றியது. பிறகு என்னவாயிற்றுங்க அத்தை. ஜோ : அவரோட அப்பாவோடு சேர்ந்து சீட்டுக்கட்டு வித்தைகள் செய்ய ஆரம்பித்தார். அப்போதுதான் அவரின் அப்பாவுக்கு சகுந்தலாவின் கணிதத் திறமை தெரிந்தது. தன்னோட வேலையை விட்டுட்டு தெருக்களில் தன் குழந்தையோட கணித திறமையை ஒரு நிகழ்ச்சியா நிகழ்த்திக் காட்டினார். ரதி : சமீபத்துல் செஸ் சாம்பியன் பிரக்யானந்தாவோட அப்பா கூட வேலையை விட்டுட்டு பிரக்யானந்தாவை பயிற்சிகளுக்கும் போட்டிகளுக்கும் அழைச்சிட்டு போனாரே அந்த மாதிரி சகுந்தலா அவரோட அப்பாவும் அழைச்சிட்டு போயிருக்காங்க. ஜோ : சரியாகச் சொன்னாய் ரதி! அதே மாதிரி தான். ரதி : எங்க அப்பா கூட எங்காவது போட்டி நடந்ததுன்னா என்ன கூட்டிட்டு போவாங்க லீவு போட்டுட்டு கூட்டிட்டு போவாங்க. அவருடைய அப்பா ஏன் போட்டிகளுக்கெல்லாம் அழைத்துச் செல்லவில்லை? ஜோ : அந்தக் காலகட்டத்தில் இந்த மாதிரி நிறைய போட்டிகள் இல்லை. அதனால் பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் அழைத்துச் சென்று மாணவர்கள் முன்பு திறமை வெளிப்படுத்த வைத்தார். 6 வயதில் மைசூர் பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் நினைவாற்றல் திறன்களை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வு நடத்துனர். இது நிறைய இடங்களில் பேசப்பட்டு அதன்பிறகு தன் குழந்தையோட திறமையை உலகத்துக்கு அறிய செய்யணும் என்பதற்காகவே 1944 இல் லண்டன் சென்று 1960 வரைக்கும் ஏராளமான நாடுகளுக்கு பயணம் செய்து சகுந்தலாதேவியோட திறமையை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார். ரதி : அத்தை அவரோட திறமையைக் கண்டு பிடிப்பதற்கு எந்த மாதிரி கேள்விகள் கேட்டார்கள்? ஜோ : உதாரணத்திற்கு 1977 132 517 என்கிற எண்ணோட கனமூலத்தை வேகமா கணக்கிட்டாரு. அதுல கணினியவே தோற்கடிச்சுட்டார். அதன்பிறகு 1988 ஆர்தர் ஜென்குசன் என்கின்ற கலிபோர்னியா பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் சகுந்தலாதேவியோட கணிதத் திறமையைப் பரிசோதித்தார். 61 62 98 75 எண்ணின் கன மூலத்தையும் 170 859 375 என்கிற எண்ணோட ஏழாவது மூலத்தையும் கேட்டார். நகுலன் : இது கொஞ்சம் பெரிதாக இருக்கிறது கொஞ்சம் அதிக நேரம் எடுத்து இருப்பாரு. சரிங்களா அத்தை? ஜோ : இதில் தான் பெரிய ஆச்சரியமே. கேள்வி கேட்டு முடித்து அவர் நோட்டில் எழுதி முடிப்பதற்கு முன்பே பதில் சொல்லிட்டாரு. இது மாதிரி போகிற இடமெல்லாம் கேட்கிற கணக்குத் தொடர்பான அனைத்திற்கும் உடனே பதில் கொடுத்தாங்க. எல்லாரும் வியந்து போயிட்டாங்க. ரதி : எந்தக் கணக்கு பண்ணி கின்னஸில் இடம் பிடிச்சாரு?. ஜோ : ஜூன் 18, 1980இல் இம்பீரியல் கல்லூரி லண்டனில் கணினி துறை மூலமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் இரண்டு 13 இலக்க எண்கள் 76 86 36 97 74 87 0 மற்றும் 24 650 99 745 779 இந்த இரண்டு எண்களையும் பெருக்கி சரியா 28 வினாடிகளில் விடையைச் சொல்லிட்டார். நகுலன் : அதனால்தான் அவருக்கு கின்னஸ் கொடுத்தார்களா? நீதான் கணக்கில் பெரிய புலி ஆயிற்றே ரதி. இதை உன்னால் சொல்ல முடியுமா? சொல்லு பாக்கலாம்? ரதி : ஐயோடா! இவ்ளோ பெரிய எண்ணெல்லாம் என்னால் முடியாது. ஜோ : நகுலன், ரதி குட்டி இன்னும் வளர்ந்து இதைவிடப் பெரிய பெரிய கணக்கெல்லாம் போட முடியும். இல்லையா ரதி? ரதி ஆமாங்க அத்தை. அந்த இரண்டு எண்களையும் பெருக்கினதில் என்ன விடை கிடைத்தது? ஜோ : கேட்ப்பீர்கள் என்று தெரியும். அதனால தான் நான் சீட்டில் எழுதி வந்து இருக்கிறேன். என்னால் அவ்வளவு பெரிய எண்ணை மனப்பாடம் பண்ண முடியலை. 18 94 76 68 1777 995 426 462 773 730 இந்த எண்ணைச் சொல்வதற்கே எனக்கு மூச்சு வாங்குகிறது. உண்மையாலுமே அவர் ஜீனியஸ்தான். ரதி : அவர்களைப் பற்றி இந்தியில் ஒரு படம் கூட வந்திருக்கிறதாகவும் 2013இல் கூகுள்ல முகப்புல மேடம் சகுந்தலாதேவியோட படத்தை வைத்ததாகவும் அப்பா சொல்லி இருக்காங்க. எப்பவுமே நீ ஒரு சகுந்தலா தேவி மாதிரி வரணும்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க அப்பா. ஜோ : சரியா சொன்னே. நீயும் சகுந்தலா தேவி மாதிரி கணக்கில் பெரிய சாதனைகள் புரியவும் நகுலனும் அவனுக்குப் பிடித்த அறிவியலில் பெரிய சாதனைகள் புரியவும் வாழ்த்துகள் தங்கங்களா! அடுத்த மாசம் இன்னொரு ஆளுமையை பற்றி தெரிந்து கொள்ளலாம் சரியா செல்லங்களா? குழந்தைகள் : சரிங்க அத்தை! நன்றிங்க!
- குழந்தைகளின் உரிமைகள் - 1
உலகநாடுகள் அனைத்தின் ஒன்றுபட்ட ஒரு சர்வதேசக் கூட்டமைப்புக்கு ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு என்கிறோம். சுருக்கமாக ஐ. நா. சபை என்ற பெயரால் அது அழைக்கப்படுகிறது. இந்த ஐ. நா. சபையின் துணையமைப்புகளுள் ஒன்று : unicef என்கிற, உலகக் குழந்தைகளுக்கான அமைப்பு. உலகத்தின் குழந்தைகள் அனைவரும் கல்வி, சுகாதாரம், உணவு, உறைவிடம் உள்பட அனைத்து அடிப்படைத்தேவைகளையும் பெற்றுத்தன்னிறைவு பெற்றவர்களாக ஆக வேண்டும் என்பது இந்த அமைப்பின் குறிக்கோள், இலட்சியம். ஒரு குழந்தை என்றால் யார், அதன் உரிமைகள் என்னென்ன, அவற்றைப் பாதுகாப்பதில் பெற்றோர், குடும்பத்தின் பிற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், சமூக உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்,சமுகத் தலைவர்கள் போன்று அனைத்துத்தரப்பினரும் ஆற்ற வேண்டிய பங்களிப்புக் குறித்து யுனிசெஃப் ஒரு தீர்மானம் இயற்றியிருக்கிறது. ” குழந்தைகளின் அனைத்து உரிமைகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. அவையனைத்தும் ஒன்றுக்கொன்று சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை குழந்தைகளிட மிருந்து எந்தக் காரணம் பற்றியும் பறித்துக் கொள்ளப்படக் கூடாதவை. ஒரு குழந்தை என்றால் யார் ? ஆணோ , பெண்ணோ , யாராயிருந்தாலும், 18 வயதிற்குக் கீழ் உள்ள எந்த ஒரு மனிதரும் குழந்தை என்று unicef வரையறுத்துள்ளது. இதை உலக நல வாழ்வு அமைப்பு உள்பட உலகமே ஏற்றுக் கொண்டும் இருக்கிறது. யுனிசெஃப் கன்வென்ஷனில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறிப்பிடும் அனைத்து உரிமைகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. எல்லாக் குழந்தைகளுக்கும் இந்த உரிமைகள் உண்டு. அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கே வேண்டுமாயினும் வசித்து வரலாம். எந்த மொழி பேசுவோராகவும் இருக்கலாம். அவர்களின் மதம் எது என்பதோ, அவர்கள் எதைச் சிந்திக்கிறார்கள் என்பதோ, அவர்களின் தோற்றம் எப்படி இருக்கிறது என்பதோ – இவை எதுவுமே பிரச்னையே இல்லை. அந்தக் குழந்தை, ஒரு பையனாகவோ, ஒரு சிறுமியாகவோ இருக்கக்கூடும். ஒரு சிலர் உடல், மன ரீதியான மாற்றுத்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுள் சிலர் பரம ஏழைகளாக இருப்பார்கள். வேறு சிலர் பணம் படைத்தவர்கள். இன்னும் சிலர் நடுத்தர நிலையில் இருக்கலாம். அவர்களின் பெற்றோர் யார் என்பதோ, அவர்களில் யார் மேற்கண்ட மூன்று நிலைகளில் எந்த நிலையைச் சேர்ந்தவர் என்பதோ இங்கு பிரச்னையில்லை. குழந்தைகளின் பெற்றோர் எந்தக் கடவுள் அல்லது மதத்தை நம்புகிறார்கள் என்பதும் நமக்கு முக்கியமல்ல. அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள், எப்படிப்பட்ட வாழ்க்கை நடத்துகின்றனர் என்றும் பார்க்க வேண்டியதில்லை. மேற்கண்ட எந்த ஒரு விஷயத்தின் அடிப்படையிலும், எந்த ஒரு காரணத்தினாலும் எந்த ஒரு குழந்தையும் ஒரு போதும் பாதிக்கப்படக்கூடாது. இவற்றுள் எந்த ஓர் அம்சத்தின் அடிப்படையிலும் எந்தக் குழந்தையும் நியாயமற்ற முறையில் நடத்தப்படக்கூடாது. ” Unicefகன்வென்ஷன் நிறைவேற்றிய மேற்கண்ட தீர்மானத்தின் முதல் அம்சமே மேலே சற்று விரிவாகத் தரப்பட்டுள்ளது. ஒரு வகையில், அதன் தமிழ் மொழியாக்க வடிவம் என்றே சொல்ல வேண்டும். இதுதான் மற்ற எல்லா அம்சங்களுக்கும் அடிநாதம். ஆனால் இன்றைய நிலை என்ன ? சற்றுக் கண்களை மூடிக்கொள்வோம். கடந்த பத்து அல்லது பதினைந்து நாள்களுக்குள் நமது கண்களில் பட்ட, நாம் பத்திரிகைகளில் அல்லது தொலைக்காட்சிச் செய்திகளில் படித்த, பார்த்த செய்திகளில், குழந்தைகள் பற்றியவற்றைக் கொஞ்சம் நினைவுக்குக் கொண்டு வந்து பார்ப்போம். மூன்று வயதுப் பெண் குழந்தையை, அதே பள்ளியில் படிக்கும் பன்னிரண்டு வயதுப் பையன், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, தலையில் பாறாங்கல்லால் தாக்கியதில், அது மரணமடைந்தது. ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட இரண்டு மூன்று ஆசிரியர்கள், தங்களின் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு, அவர்களைத் துன்புறுத்தியிருக்கிறார்கள். ஒரு ஆசிரியர் குழந்தையின் மண்டையில் தாக்கி மண்டை ஓடு உடைந்திருக்கிறது. இவையும் இன்னமும் ஏராளமான செய்திகளை அன்றாடம் எதிர்கொள்கிறோம். இவை எதைக்காட்டுகின்றன ? நமது குழந்தைகளின் நிலை என்னவாக இருக்கிறது என்ற ஓர் எதார்த்தத்தைக் காட்டுகின்றன. மொத்தமுள்ள குழந்தைகளில் ஒரு பத்துப்பேரின் பிரசனைகளை வைத்து ஓட்டு மொத்தக் குழந்தைகளின் நிலைமையே இதுதான் என்று தீர்மானித்து விட முடியுமா ? முடியாது ! கூடாது ! ஆனால், இவை ஒரு வகைமாதிரிப் பிரச்னைகள். மற்ற குழந்தைகளின் நிலைமைகளில் வெவ்வேறு வகையான சிக்கல்கள் இருக்கின்றன. குடும்பத்தில், தெருவில், பள்ளியில், பஸ்களில், கோயில்களில், பிற பொது இடங்களில் என்னென்ன வகையான துன்பங்களைக் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள் என்று நாம் சற்று விரிவாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. அப்போதுதான், ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் உரிமைகள் இவை என்று உலகமே ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு விட்ட உரிமைகள் கூட, எந்த ஓரு இடத்திலும், ஒரு போதும் முழுமையாகக் கிடைப்பதில்லை என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையை நாம் தெரிந்து கொள்ள முடியும். ( உரிமைகள் அறிவோம்.)
- லீவு
சைக்கிளை நிறுத்திவிட்டு வேகவேகமாகப் படியேறி மொட்டை மாடிக்கு வந்தான் ஆகாஷ். அவனின் நண்பர்கள் முன்பே அங்கே வந்துவிட்டனர். “ஏண்டா இவ்ளோ லேட்டு?” என்று முகிலன் கேட்க, “நான் எங்கடா லேட்டு… இன்னும் அக்கா கூட வரவே இல்லையே?” என்று பதில் சொல்லிகொண்டே புத்தகப் பையைக் கழற்றி கீழே வைத்தான். ”சரிடா…. அக்கா வரதுக்குள்ள முடிவை எடுத்துடணும்” என்றான் விக்கி. “ஆமாடா… மூணு நாளா இதை வைச்சு இழு இழுன்னு இழுத்துட்டு இருக்கீங்க. அக்கா கிட்ட தெளிவா சொல்லிடுவோம்” என்றாள் பூரணி. அனைவரும் அக்கா வருவதற்காகக் காத்திருந்தார்கள். அது லீலா வீட்டின் மொட்டை மாடி. லீலா ஆசிரியர் பணிக்குப் படித்திருக்கிறார். இன்னும் வேலை கிடைக்கவில்லை. அதனால் தன் வீட்டு மொட்டை மாடியில் டியூசன் எடுக்கிறார். அதற்காக சின்ன பந்தல் போட்டப்பட்டிருக்கும். காலையில் பத்தாம் வகுப்புக்கும், மாலையில் ஒன்பது வகுப்புக்கும் டியுசன் எடுக்கிறார். அவரை முதலில் மிஸ் என்று அழைத்தார்கள். ஆகாஷ் மட்டும் அக்கா என்று கூப்பிட்டான். அது அப்படியே எல்லோருக்கும் பரவி ‘லீலா அக்கா’ என்றுதான் இப்போது அழைக்கிறார்கள். பள்ளி முடிந்ததும் ஆகாஷ், முகிலன், பிரின்ஸி, ரஹீம் என ஒன்பதாம் வகுப்பில் உள்ள 40 பேரில் 18 பேர் இங்கு டியூசனுக்கு வந்துவிடுவார்கள். முழு ஆண்டுத் தேர்வுக்கு இன்னும் ஒரே மாதம்தான் இருக்கிறது. அதனால் தீவிரமாகப் படித்தனர். லீலா படியேறி வரும் சத்தம் கேட்டதும் சலசல என்று இருந்த பேச்சுச் சத்தம் சட்டென்று நின்றது. “ஸ்கூல் விட்டு வந்து ஸ்நாக்ஸ் ஏதாச்சும் சாப்பிட்டிங்களா?” என்று கேட்டவாறே அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தார் லீலா. ”ஓ” என்று எல்லோரும் சொல்லி முடித்தும் சிலர் மட்டும் குசுகுசு எனப் பேசுவது கேட்டது. “நான் என்ன சொல்லியிருக்கேன்… யார் பேசினாலும் சத்தமாப் பேசுங்க… இல்லாட்டி பேசாதீங்கன்னுதானே?” என்று லீலா கேட்டதும் குசுகுசு பேச்சு நின்றது. ”இவன்தான் அக்கா” என்று முகிலனைக் கைக்காட்டினாள் பிரின்ஸி. “என்ன முகிலா… என்கிட்ட சொல்லலாமா?” “இல்ல… அக்கா, நாளைக்கு டியூசன் லீவுன்னு சொன்னீங்க இல்ல…” தயங்கிகொண்டே சொல்ல ஆரம்பித்தான் முகிலன் “ஆமா… அதுக்கு என்ன?” “இல்லக்கா, நாளைக்கு லீவு விட வேண்டாமேன்னு பேசிட்டு இருந்தோம்” “என்னடா இது ஆச்சர்யமா இருக்கு. சனி, ஞாயிறுல டியூசன் வைச்சா சில பேர வர மாட்டீங்க… இப்ப என்னடான்னா, நானே லீவு விட்டாலும் வேணாம்னு சொல்றீங்க?” என்று வியப்பாகக் கேட்டார் லீலா. “ இன்னும் ஒரு மாசம்தான் எக்ஸாம்க்கு இருக்குக்கா…. அதான்” என்று எழுந்து சொன்னான் ஆகாஷ். “ஓ! அப்படின்னா கூட்டா சேர்ந்து பேசியிருக்கீங்களா… அப்ப, அதைப் பேசி முடிச்சிட்டு பாடத்துக்குப் போலாம். என்ன?” யாரும் பதில் சொல்லாம் மெளனமாக இருந்தனர். “சரி, நாளைக்கு எதுக்காக லீவு விட்டிருக்கேன்” “ரம்ஜான் பண்டிகை” என்று எழுந்து சொன்னான் முகிலன். “அதனால” என லீலா பேச்சைத் தொடர்வதற்குள், எழுந்த ஆகாஷ், “அக்கா, அன்னிக்கு எப்படியும் ரஹீமும் பாத்திமாவும் வர மாட்டாங்க. அப்ப அவங்களுக்கு மட்டும் லீவு விட்டுடலாமே… எங்களுக்கு டியுசன் வைக்கலாமே?” என்றாள் பிரின்ஸி. “வைக்கலாம்தான்…. தீபாவளி அன்னிக்கு என்னென்ன செய்வீங்க சொல்லுங்க?” “காலையில குளிச்சிட்டு, புது டிரெஸ் போட்டுகிட்டு பட்டாசு கொளுத்துவோம்” என்றனர் ஆகாஷூம் முகிலும். ”ஒரு புஷ்வாணம் நல்ல வெளிச்சத்தோடு மேலே போய்ட்டு வர்றதைப் பார்க்கிறப்ப உங்களுக்கு எப்படி இருக்கும்?” எனக் கேட்டார் லீலா “ரொம்ப சந்தோஷமா இருக்கும்” என்றான் ஆகாஷ். “ரொம்ப இல்லக்கா… ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப” என்று வாயை இழுத்து மிமிக்ரி மாதிரி செய்துகாட்டினான் முகிலன். எல்லோரும் சிரித்தனர். ”அப்படியா… உங்க தெருவுலேயே இருக்கிற ரஹீமும் அதே புஷ்வாணத்தைப் பார்த்தா அவனுக்கு மகிழ்ச்சியா இருக்கும்ல” “நிச்சயம் இருக்கும்க்கா” ”சரி… புது டிரெஸ்… பட்டாசு அவ்வளோதானா தீபாவளி?” “இல்ல இல்ல… ஸ்வீட்ஸ் நிறைய செய்வாங்க… அதை தெருவில இருக்கிற எல்லார் வீட்டுலேயும் கொண்டுபோய் கொடுப்போம்” “ரஹீம் வீட்டுக்கும்தானே?” “ஆமா… முதல்ல போறதே அவன் வீட்டுக்குத்தான்” “ஏன் அவன் வீட்டுக்கு கொடுக்கணும்… அவனுக்குத்தான் தீபாவளி பண்டிகை இல்லையே?” “நாங்க எல்லாம் ஸ்வீட் சாப்பிடும்போது அவனும் சாப்பிடனும் இல்லக்கா… பட்டாசுக்கூட அவனுக்குக் கொடுப்பேன்” என்றான் முகிலன். “அப்பன்னா, பண்டிகைங்கிறது ஏதோ ஒருவகையில் எல்லோரும் சேர்ந்து கொண்டாடுறதுதானே?” “ஆமா?” “அப்பன்னா, ரம்ஜானும் அப்படித்தானே? அது ரஹூம், பாத்திமா வீட்டு பண்டிகை மட்டுமா என்ன?” மெளனமாக யோசித்தனர். “தீபாவளி, கிறிஸ்மஸ் பண்டிகை மகிழ்ச்சியில ரஹூமையும் பாத்திமாவையும் உங்களோடு சேர்த்துகொள்ற மாதிரி ரம்ஜான் பண்டிகை மகிழ்ச்சியில் உங்களையும் அவங்கக்கூட சேர்த்துக்க ஆசை படுவாங்க இல்ல” “ஆமாக்கா” என்றனர் ஒரே குரலில். “அக்கா… ரம்ஜான் அன்னிக்கு காலையில இருந்து அவங்கக்கூட இருக்கோம். மாலையிலதானே டியூசன்?” என்று புதுகேள்வி கேட்டான் முகிலன். “ஆமா, வழக்கமான நாட்கள்ல டியூசனுக்கு அவங்களா வர முடியல்லன்னா… பரவாயில்ல… அவங்க கொண்டாடுற நேரத்துல டியூசன் வைச்சா என்ன பண்ணுவாங்க?” “அவங்களே லீவு போட்டுடுவாங்க அக்கா” “அப்ப வீட்டுல இருக்கிறப்ப, இன்னிக்கு அக்கா சொல்லிக்கொடுக்கிறத மிஸ் பண்றோம்னு அவங்களுக்கு தோணும்ல” “ஆமா அக்கா… ஒருவேளை கொண்டாட்டத்தை விட்டுட்டு அவங்களே டியூசனுக்கு வந்துட்டா?” என்றாள் பூரணி. “அவங்களே வந்தாலும் நாம வலுக்காட்டயப்படுத்தின மாதிரி தானே இருக்கும் பூரணி?” “ஆமாக்கா” “அதனால…” என்று லீலா பேச ஆரம்பித்ததை இடைமறித்த முகிலன் “ஆமாக்கா… ஒருநாள் லீவு விட்டா எதுவும் ஆகிடாது. அதை சேர்த்து அடுத்த நாள் கூடுதலா நேரம் ஒதுக்கி படிச்சிடலாம். நாளைக்கு பாத்திமாவோடும் ரஹீமோடும் சேர்ந்து ரம்ஜானைக் கொண்டாடப் போறோம்” என்றான். இப்படிப் பேசி முடிக்கும்போதும் ரஹூமும் பாத்திமாவும் டியூசனுக்கு வந்தார்கள். “ஸாரி அக்கா… கொஞ்சம் லேட்டாயிடுச்சு” என்றனர். ”பரவாயில்லை. பாடத்தை ஆரம்பிப்போமா?” என்று லீலா கேட்க உற்சாகமாக எல்லோரும் தலையாட்டினர். அடுத்த நாள் ரம்ஜான். லீலா வீட்டு மொட்டை மாடியில் ஆகாஷ், முகிலன், பூரணி, பிரின்ஸி உள்ளிட்ட நண்பர்கள் கூடியிருந்தனர். எதற்காக? டியூசனுக்காக இல்லை. தன் டியூசன் நண்பர்களுக்கு பிரியாணி விருந்து தருவதற்காக அங்கு வரச் சொல்லியிருந்தனர் ரஹூமும் பாத்திமாவும். அவர்களும் பிரியாணிக்காக ஆவலாகக் காத்திருந்தனர். மாடிப்படியில் இருவரும் ஏறிவரும் சத்தம் வருவதற்குள் பிரியாணியின் வாசம் மொட்டை மாடிக்கு வந்துவிட்டது. எல்லோரும் “ஹோ….” எனச் சத்தமிட்டு அவர்களை வரவேற்றனர்.
- “நான் கதைகளை நேசிக்கிறேன்”
அமெரிக்க எழுத்தாளர் டே கெல்லர், கேட் டி’கமில்லோவிடம் அவரது புதியநாவலான ”ஃபெரிஸ்” குறித்தும், அவரது எழுத்துகளில் பரவலாகக் காணப்படும் முக்கியமான கருத்துக்கள் குறித்தும் பேசுகிறார் - தமிழாக்கம்: வே.சங்கர் டே கெல்லர் : வணக்கம். உங்களோடு நான் இந்த நேர்காணலைச் செய்வதற்கு மிகவும் பெருமிதமடைகிறேன். உங்கள் புத்தகங்களை நான் இப்போது மட்டுமல்ல, என் சிறுவயதில் இருந்தே நேசிக்கிறேன். நான்காம் வகுப்பு படிக்கும் போது The Tiger Rising புத்தகத்தை என் வகுப்பு ஆசிரியர் உரக்க வாசித்துக்காட்டிய நினைவுகள் இன்னும் என் மனதைவிட்டு அகலாமல் இருக்கிறது. Despereaux புத்தகத்தை நூலகத்திற்குச் சென்று வாசித்ததும் மறக்கமுடியாத அனுபவம். இப்போது உங்களை நேரில் சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கேட் டி’கமில்லோ: உங்களது வார்த்தைகள் என்னை நெகிழச்செய்கிறது. குழந்தைகளின் புத்தக உலகம் என்பது யாராலும் கற்பனை செய்யமுடியாத அற்புதமான ஒன்று. ஒரு முறை கேதரின் பேட்டர்சனை சந்தித்தபோது, ’உங்களை நீண்டநாட்களாகப் பார்க்கவே முடியவில்லையே?’ என்று கேட்டேன். அதேபோல, கிரிஸ்டோபர் பால் கர்டிஸை முதன்முறையாக நேரில் சந்தித்தபோது ஏற்பட்ட உணர்வை ஒருபோதும் மறக்க முடியாது. நாம் அனைவரும் ஒரே நோக்கத்துடன்தான் செயல்படுகிறோம் என்று தோன்றுகிறது. குழந்தைகள் தனிமையை உணராமல் இருக்க வேண்டுமானால் கதைகள் சொல்வதுதான் ஒரே வழி. வாழ்க்கை கடினமாக இருந்தபோதிலும், நாம் செய்யும் பணி மிகவும் மகத்துவமானது. உங்களுக்குள் இன்னும் இருந்துகொண்டிருக்கும் சிறுவயதுக் குழந்தைமைக்கு நன்றி. டே : உங்களுக்கு, உண்மையிலேயே நான்தான் நன்றி செல்லவேண்டும். இந்த அருமையான பணியில் ஈடுபட்டிருக்கும் மகத்தான மனிதர்கள் மத்தியில் நானும் இருப்பது என் அதிர்ஷ்டம்தான். இதை இறுதியில் கேட்கலாம் என்றிருந்தேன், ஆனால், இப்பொழுதே தொடங்குகிறேன். நீங்கள் முதன்முதலில் Winn-Dixie புத்தகத்தை எழுதத் தொடங்கிய காலத்திற்குப் போய், அப்போது இருந்த உங்களிடம் ஒரு வார்த்தை சொல்ல வாய்ப்பு கிடைத்தால், என்ன சொல்வீர்கள்? கேட் : அருமையான கேள்வி. அந்தக் காலத்திற்குப் போவது மிகவும் எளிது என்று எனக்குத் தோன்றுகிறது. அந்தக் கதையை எழுதத் தொடங்கும்போது எனக்குள் ஒருவிதமான தெளிவற்ற உணர்வு இருந்தது. பிறகு காலப்போக்கில் ’இதுதான் என் வாழ்க்கையின் உன்னதமான பணி’ என்று புரிந்து கொண்டேன். அப்போது எனக்குள் ஏராளமான ஐயப்பாடுகள் இருந்தன. இப்பொழுதும் இருக்கிறது. அந்தக் காலகட்டத்திற்குத் திரும்பிச்சென்று சொல்லவேண்டுமானால், ”இதுதான் உனக்கான சரியான பாதை” என்று சொல்லிக்கொள்வேன். டே : மிகவும் அழகாகச் சொன்னீர்கள். உங்கள் இத்தனை கால எழுத்துப் பயணத்தில், “பொதுவெளியில் எழுத்தாளராகவும், உள்ளார்ந்த பிரபல இலக்கியப் படைப்பாளராகவும்” இருப்பதை எப்படிச் சமன் செய்கிறீர்கள்? கேட் : கடந்த வாரம் ஒரு நிகழ்வில் ஒருவர் கேட்டார்: “The Tale of Despereaux என் குழந்தைப் பருவத்தில் என் உயிரைக் காப்பாற்றியது என்று யாராவது சொன்னால் அதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?” என்றார். ”அதைப் பற்றி என்னால் யோசித்துப்பார்க்கவே முடியவில்லை.” என்று பதில் சொன்னேன். ஒரு குழந்தை தன் மனதிற்குள் உள்ளதைப் பகிரும் தருணத்தில் நான் நிஜமாகவே அந்தக் குழந்தையுடன் இருக்கவிரும்புகிறேன். இதுதான் ஒரு கதைசெய்யும் மாயம். கதையின் மூலம் ஒரு குழந்தையின் மனதிற்குள் ஊடுருவ முடிகிறது. அக்குழந்தை சொல்லும் வார்த்தைகள் எனக்குள் எத்துணை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை நான் அந்தக் குழந்தைக்குச் சொல்ல முயற்சிப்பேன். பிறகு, அந்த கனம் நிறைந்த நிமிடங்களை நான் மறந்துவிடவேண்டும். இல்லையென்றால் மனம் குழம்பிவிடும். இதுபோன்ற அனுபவங்கள் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும் அல்லவா! டே : ஆம். சிறார்களுக்கு எழுதும்போது பொறுப்பு கூடிவிடுகிறது. அவர்களுக்கு உதவ வேண்டும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் சிலநேரங்களில் பயமுறுத்துவதாகவே இருக்கிறது. அவர்களுக்கு எழும் உளவியல் சிக்கல்கள் அனைத்தையும் ஒற்றைப் புத்தகத்தில் தீர்த்துவிடவேண்டும் என்று திணிக்கிறோம். பிறகு எப்படி ஒரு கதையை எழுதுவது? கேட்: மிகவும் உண்மை. குறிப்பாக குழந்தைகளுக்கான புத்தகங்களில், ”இதில் என்ன நீதி இருக்கிறது?” என கேட்பது வழக்கம். ஆனால் பெரியவர்களுக்கான எழுத்தாளர்களிடம் இம்மாதிரி அசட்டுத்தனமான கேள்விகள் கேட்கப்படுவதில்லை. நான் குழந்தைகளுக்கு எதையாவது கற்பிக்க முயன்றிருந்தால், நிச்சயம் தோல்வியடைந்திருப்பேன். எனவே, “இந்தக் கதையில், இவ்வுலகில் உள்ள குழந்தைகளை நம்பிக்கையுடன் வாழச் செய்யவேண்டும்” என்று எண்ணிக்கொண்டு எழுதினால், அது நடக்காது. அப்படிச் சிந்திக்கவும் கூடாது. நான் சமீபத்தில் வாஷிங்டனில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டேன். அது மிகப்பெரியதொரு சுமையாக இருந்தது. அந்தந்த கணத்தில் முழுமையாக இருக்கவேண்டியது அவசியம் என்பதை நான் உணர்வேன். பிறகு விமானத்தில் திரும்பும்போது Colson Whitehead எழுதிய Harlem Shuffle புத்தகத்தை வாசித்தேன். நான் மீண்டும் என் உடலுக்குள் திரும்பிய மாதிரி உணர்ந்தேன். “நீங்கள் உங்களை யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் எப்போதும் தனித்துவமானவர்; உங்களுக்கே உரிய சிறப்புகள் உங்களுக்குள் உண்டு. முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்; உங்களுக்கே உரிய பிரகாசத்துடன் நீங்கள் ஜொலிப்பீர்கள்.” டே : “நீங்கள் உங்களுடைய உடலுக்குள் மீண்டும் திரும்பிவந்தேன் என்று சொல்வதைக் கேட்கும்போது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதுபோன்ற உணர்வுகளை நானும் மிகத்துல்லியமாக உணர்ந்திருக்கிறேன். எழுத்தாளர் என்ற உண்மையான சுயத்தையும், புத்தக ஆசிரியர் என்ற என் வெளிப்படையான முகத்தையும் தனித்தனியே பிரித்துப்பார்க்கும்போது ’எழுதும் செயலே’ என்னை எனக்குள் திரும்ப அழைத்துவருவதைப் போல உணர்கிறேன். வகுப்பறைப் பாடம் என்ற கோணத்தில் ஒரு விசயத்தை அணுகும்போது உங்கள் புத்தகங்களில் வரும் சொற்கள்தான் எனக்கு நினைவில் வருகிறது. Ferris நான்காம் வகுப்பு ஆசிரியரிடம் இருந்து கற்றுக்கொண்ட சொற்களை நினைவுகூருகிறாள். அவற்றை தான் புரிந்துகொண்டதைப் போல வாசகருக்கும் கடத்துகிறாள். உங்கள் புத்தகங்கள் குழந்தைகளுக்கு புதிய சொற்களையும் அந்தச் சொற்களின் அர்த்தங்களையும் கற்றுத்தருகின்றன. கதையின் மூலம் நீங்கள் சொல்லவரும் நோக்கம் அதுதான் என்று என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. உங்களது சொந்தவரிகளையே நான் மேற்கோள் காட்டுவதாகத் தவறாக நினைக்கவேண்டாம். இருந்தாலும் சொல்கிறேன். ‘Ferris மற்றும் Billy எழுத்துக்களையும், வார்த்தைகளின் அர்த்தங்களையும் தேர்வுகளுக்காக படித்து மனப்பாடம் செய்தார்கள். அந்தச் சொற்கள் அவர்களின் மூளை மற்றும் இதயத்தில் நிரந்தரமாக பதிந்துவிட்டன. அவை இப்போது Ferris-இன் சொற்களாகிவிட்டன.’ என்று எழுதியிருக்கிறீர்கள். இந்த வரி என்னை மிகவும் ஆச்சரியப்படச் செய்தது. அதனால்தான் இந்தக் கேள்வி என் மனதில் உருவானது. உங்களுக்கு முதன்முறையாக ‘சொற்கள் எனக்கானவை’ என்று உணர்ந்த தருணம் எப்போது?” கேட்: “நான் எப்படியாவது விரைவில் வாசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று வெறித்தனமாக இருந்தேன். அப்போது, என் மனம் முழுவதும் வேறொரு உலகில் இருந்தது. ’கதைகள்தான்’ எனக்கு மிகவும் அவசியம் என்ற உணர்வு இருந்தது. ஆனால், பள்ளிக்குச் சென்றவுடன் எங்களுக்கு உச்சரிப்புகள் (phonics) கற்றுக்கொடுக்கத் தொடங்கினார்கள். என்ன காரணத்தாலோ, phonics என் முளைக்குள் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. எனக்கு பயமாக இருந்தது. பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்ததும் கதறி அழுதேன். நான் கதைகள் வாசிக்க வேண்டும், ஆனால் இந்தத் எழுத்துக்கள் கொண்டிருக்கும் உச்சரிப்புகள் என்னைப் பாடாய்ப்படுத்துகின்றன. நான் மிகவும் விரும்பிய வாசிப்பு என்ற அந்த விஷயம் என்னிடமிருந்து விலகிவிட்டது போலவே இருந்தது. என் அம்மா என்னுடைய சுபாவத்தை நன்றாகப் புரிந்து கொண்டவர். மிகவும் அன்பானவர். என்னவோ செய்யட்டும் என்று வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு ஓரமாக நிற்கவில்லை. ”அடடே! இதற்காகவா வருத்தப்படுகிறாய்? நீ எல்லாவற்றையும் மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்வதில் வல்லவளாயிற்றே” என்றார். பிறகு எனக்காக வார்த்தை அட்டைகளைத் (flash cards) தயார் செய்தார். அதன் உதவியோடு சொற்களை மனப்பாடம் செய்து வாசிக்கக் கற்றுக்கொண்டேன். அம்மா ஏதாவது ஒரு சொல்லை ஃப்ளாஸ் கார்டில் காட்டி முடிப்பதற்குள் நான் சொல்வதில் தேர்ச்சி பெற்றேன். ஒவ்வொரு வார்த்தையையும் என் அம்மா எனக்கு காட்டும் போதெல்லாம் அது ஒரு பரிசு போலவும், ஒரு திறவுகோல் போலவும் இருந்தது. எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது – நாங்கள் இருவரும் சமையலறையில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்திருப்போம். அவர் அந்த அட்டைகளை எனக்கு காட்ட, ‘இவை என்னுடையவை. இந்தச் சொற்களைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்’ என்று என் மனதுக்குள் சொல்லிக்கொள்வேன்” டே : நீங்கள் சொன்ன கதையைக் கேட்டவுடன் Ferris புத்தகத்தின் முதுகெலும்பாக இருக்கும் ஒரு வரி எனக்கு நினைவுக்கு வருகிறது. ‘ஒவ்வொரு கதையும் ஒரு அன்புக் கதையே’. நீங்கள் இப்போது சொன்ன கதையும் ஒரு அன்புமிகுந்த கதையே. இது மிகவும் அழகானது மட்டுமல்ல மனித மனதைக் கனிவூட்டுவதாகவும் இருக்கிறது.” கேட் : “நீங்கள் இப்படி சொல்லும்போது எனக்கு இன்னும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. என் அம்மாவுக்கு தெளிவாக நன்றி சொல்ல இயலாமல் போய்விட்டது. அது இன்றளவும் எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர் என்னிடம் என்னென்னவற்றையெல்லாம் பரிசாகக் கொடுத்தார் என்பது எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. ஏனென்றால், அவர் எனக்கு என்னவெல்லாம் தேவை என்பதைக் கவனித்துக் கவனித்து நிவர்த்தி செய்தார். அவர் எப்போதும் என்னை ஒரு ‘வாசிப்பவளாகவே’ பார்த்தார். கவனித்தார். நான் வாசிப்பதற்கு ஏற்ற புத்தகங்களை முதன் முதலாக எனக்காக வாங்கித் தந்ததும் அவர் தான்.” டே : “அந்த மாதிரியானவர்கள் நம்முடைய வாழ்க்கையில் நிச்சயம் இருக்க வேண்டும். இந்த நேர்காணலுக்குப் பிறகு, உடனே என் அம்மாவை அழைத்து நன்றி சொல்லப் போகிறேன்!” கேட் : “ஆம், கண்டிப்பாக நன்றி சொல்லுங்க!” டே : “ஒவ்வொரு கதையும் ஒரு அன்புக் கதை என்ற கருத்து – நீங்கள் அந்த புத்தகத்தை எழுதுவதற்கு முன்பே நம்பினீர்களா? இல்லையெனில் எழுதிக் கொண்டிருக்கும்போது அது உங்களுக்குள் வந்ததா?” கேட் : : “நீங்கள் கேட்கும் விதமே எனக்கு மிகவும் பிடிக்கிறது. அதனால் நாம் நண்பர்களாக இருக்கவேண்டும் போலிருக்கிறது!” டே : [வாய்விட்டுச் சிரிக்கிறார்] கேட் : “எனக்கொரு சிறந்த தோழி இருக்கிறாள், நாங்கள் இருவரும் ஒன்றாக வளர்ந்தோம். அவளுக்கு 2019 டிசம்பர் 31ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அது என் அப்பாவின் பிறந்தநாளாகும். ஆனால், அவர் அதே ஆண்டின் நவம்பரில் இறந்துவிட்டார். 2020 ஜனவரி 1ஆம் தேதி, அந்தக் குழந்தையின் புகைப்படங்கள் என் கைபேசியில் வந்தன. அந்தக் குழந்தையின் பெயர் Rainy. அந்தக் குழந்தை அன்பு நிறைந்த உறவினர்களால் சூழப்பட்டிருந்தாள். அம்மா, அப்பா, இரண்டு பாட்டி-தாத்தாக்கள்...” அப்போது, நான் என்ன நினைத்தேன் என்றால், ‘இவ்வளவு பாசத்துடன் வாழ்த்துகள் சொல்லப்பட்ட ஒரு குழந்தையின் வாழ்கையை மையமாகக் கொண்டு ஒருகதையைத் தொடங்கினால் எப்படி இருக்கும்?’ ஏனென்றால் நான் எழுதிய எந்த கதையிலும் இப்படியொரு தொடக்கம் இருக்கவே இல்லை. அதே நேரத்தில் என் அப்பா என்னுடைய நினைவில் இருந்தார். அவர் மிக மோசமான, துயரமிக்க சிறுவயதைக் கொண்டவர். அவர் நிச்சயம் பாராட்டத்தக்கவர்தான். எங்களுக்கு சிறந்ததைக் கொடுக்க முயற்சி செய்தார், ஆனால் முடியவில்லை. அது மிகவும் மோசமாகவே இருந்தது. அவர் இவ்வுலகை விட்டு சென்ற நேரத்தில், அந்தக் குழந்தை இந்த உலகில் வந்திருக்கிறாள். நான் என்ன நினைத்தேன் என்றால், ‘ஒரு குழந்தை பிறந்த நொடியிலிருந்தே அன்பு நிரம்பி வளர்கிறாள் என்ற இடத்திலிருந்து கதை எழுதினால் எப்படி இருக்கும்?’ அதுவே என் கதையின் தொடக்கம். அன்பு மையமாக இருந்தது. பிறகு, ஒவ்வொரு தடைகளையும் நான் விலக்கியபடியே சென்ற பிறகு, கதையில் உள்ள பாட்டி Charisse சொல்வதைப் பாருங்கள்: ‘ஒவ்வொரு கதையும் ஒரு அன்புக் கதையே’. நான் உருவாக்குகிற கதாபாத்திரங்கள் என்னைவிட புத்திசாலிகள். காரணம், இது உண்மையாகவே நிகழ்கிறது. ஒவ்வொரு நல்ல கதையும் ஒரு அன்புசூழ் கதையாகத்தான் பரிணமிக்கிறது.” டே : “நீங்கள் இந்தக் கதையைச் சொல்லும்போது எனக்கு உடல் முழுக்க புல்லரிக்கிறது. இப்போது, உங்கள் கதாபாத்திரங்களைப் பற்றியும் பேச ஆசையாக இருக்கிறது. உங்கள் எல்லா கதைகளிலும் வரும் கதாபாத்திரங்கள் மிகப் பெரிய அளவில் இருந்தாலும், அவை எல்லாம் நம்மைப் போலவே சாதாரண மனிதர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் வித்தியாசமானவர்களாக இருந்தாலும், அவை கேலிச்சித்திரங்களில் உள்ள கதாபாத்திரங்களைப்போல ஆகிவிடுவதில்லை. நீங்கள் கதாபாத்திரங்களை உருவாக்கும்போது என்ன செய்கிறீர்கள்?” கேட் : கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க நான் பெரிதும் மெனக்கெடுவதில்லை. நான் கதாப்பாத்திரங்களைத் தேடுகிறேனோ இல்லையோ, உண்மையில் அவைகள் என்னைக் கண்டடைந்துவிடுகின்றன. கேலிச்சித்திரம்போல நான் அவைகளை உருவாக்கும் நேரத்தில் மிகுந்த எச்சரிக்கையோடுதான் நடக்கிறேன். அது மிகப்பெரிய சவால். ஆனால், உருவாக்கியபிறகு அதை என்ன செய்யவேண்டும் என்று எனக்கே தெளிவாகத் தெரிவதில்லை. அது ஒரு வித்தியாசமான அனுபவம்தான். ஒருசிலர் கேட்பார்கள், “நீ எப்போ பெரியவர்கள் வாசிக்க ஒரு புத்தகம் எழுதப்போறே? என்று. அந்தக் கேள்வியை எதிர்கொள்ளும்போதெல்லாம் எனக்கு சிரிப்புதான் வரும். நான் இருக்கவேண்டிய இடத்தில் இருக்கிறேன் என்று நினைத்துக்கொள்வேன். ஏனென்றால், குழந்தைகளுக்கு எழுதும் புத்தகங்களின் மீது எனக்குத் தீராத மயக்கமுண்டு. அது நேரடியாகத் தெரியாது. ஒரு விசித்திரமான அழகு மிதந்து செல்வதைப் போல ஓரக்கண்களால் பார்க்கும்போது தெரியும். அதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? அது Katherine Paterson சொன்னது போல: ‘நம்பிக்கையான முடிவைத் தரவேண்டியது நம் கடமை. எழுதும்போது எதிர்பாராதவிதமாக வந்துசேரும் ஒரு சில வித்தியாசமான கதாபாத்திரங்கள், என் உள்ளத்தில் உண்மையாகவே வாழ்கிறார்கள். அவர்கள் அந்த நம்பிக்கை பயணத்தில் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். ஏனெனில், நம்முடைய ஒற்றுமையை உணரும்போதுதான், நம்பிக்கைக்கான ஒரு இடம் உருவாகிறது. இதுதான் புத்தகங்கள் செய்யும் அற்புதம். “புத்தகங்கள் உன்னை யாரோ உண்மையில் பார்க்கிறார்கள் என்று உணரச்செய்கின்றன. அதே நேரத்தில், நீயும் பிறரை எப்படிப் பார்க்கவேண்டும் என்று கற்றுக்கொடுக்கின்றன”. ஆசிரியர் குறிப்பு: கேட் டி’காமில்லோ (Kate DiCamillo) அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற சிறார் இலக்கிய எழுத்தாளர். 2014 – 2015- ஆண்டுக்கான (National Ambassador for Young People & Literature) அமெரிக்க சிறார் இலக்கிய தூதராக நியமிக்கப்பட்டார். தன் எழுத்துக்களின் மூலம் குழந்தைகளின் பழக்கவழக்கங்களை, நுண் உணர்வுகளை, வாழ்க்கை மீதான பார்வைகளைக் கதாபாத்திரங்களின் வழியாகவும், உருக்கமான உரையாடல்கள் மூலமாகவும், குழந்தைகளின் உலகத்தை உணர்த்தும் வகையிலும் கற்பனைக் கதைகளைப் படைப்பதில் வல்லவர். மார்ச் 25, 1964ல் அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் பிறந்த இவர், சிறுவயதின் பெரும்பாலான காலத்தை ஃப்ளோரிடா மாகாணத்தில் கழித்தவர். Because of Winn-Dixie (2000) இவரது முதல் நாவல். ஒரு சிறுமிக்கும், அவளால் அழைத்துச்செல்லப்படும் ஒரு நாய்க்கும் இடையே உருவாகும் நட்பு பற்றிப் பேசும் இந்நாவல் Newbery Honor விருதைப் பெற்றது. The Tale of Despereaux (2003), Despereaux என்ற பெயர்கொண்ட ஒரு சிறிய சுண்டெலி பற்றிய நாவல். இந்நாவல் தைரியம், பாசம், மற்றும் ஒரு அரண்மனை உலகத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்நாவல் Newbery Medal விருது பெற்றது. Flora & Ulysses (2013) என்ற நாவல் Flora என்ற சிறுமியும் ஒரு சக்திவாய்ந்த ardent சிட்டுக்குருவி மற்றும் Ulysses இடையே நடக்கும் அதிசய அனுபவங்களைப் பற்றியது. இந்நாவல் ஒரு காமிக்ஸ் பாணியில் எழுதப்பட்டது. இந்நாவல் Newbery Medal விருதை மீண்டும் வென்றது. The Miraculous Journey of Edward Tulane (2006) என்ற நாவல் porcelain rabbit எட்வர்ட் டுலேனின் பயணத்தைச் சொல்வது. இந்நாவல், பயணத்தின் வழியே அன்பு, பாசம், இழப்பு, தியாகம் ஆகியவற்றைப் பற்றி பேசுகிறது. Raymie Nightingale (2016) என்ற நாவல் குழந்தைகளின் மனங்களில் ஏற்படும் ஏக்கம், நண்பர்களுடன் வளர்கின்ற உறவுகள் பற்றி அழகாகச் சொல்கிறது. கேட் டி’காமில்லோவின் எழுத்துக்களில் அன்பு, நம்பிக்கை, நகைச்சுவை இவை மூன்றும் எல்லா இடங்களிலும் பிரதானமாக வெளிப்படுகிறது). டே கெல்லர் (Tae Keller) அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற சிறார் இலக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். இவர் எழுதிய கதைகளில் பெரும்பாலும் இரட்டைக் கலாச்சாரப் பின்னணியை மையமாகக் கொண்ட சிறுமிகள், தங்களது தனித்துவமான அடையாளத்தைக் கண்டறிய முயல்வதைப்பற்றியதாக இருக்கிறது. இவரது ’When You Trap a Tiger (2020)’ என்ற நாவல் ஒரு இரட்டை கலாச்சார வாழ்வைக்கொண்ட சிறுமி லில்லி மற்றும் அவரது கொரிய பாட்டி இடையிலான உறவைப் பற்றியது. கொரிய நாட்டுப்புறக் கதைகளால் ஈர்க்கப்பட்டு எழுத்தப்பட்ட இக்கதை, 2021ஆம் ஆண்டு Newbery Medal விருதைப் பெற்றது. The Science of Breakable Things (2018) என்ற இந்தக் கதை, ஒரு சிறுமி தனது தாயின் மனநலக் குறைபாட்டை புரிந்துகொள்ள முயற்சிக்கும் பயணத்தை விவரிக்கிறது. இது 2018ஆம் ஆண்டின் சிறந்த புத்தகங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது. Jennifer Chan Is Not Alone (2022) என்ற இவரது நாவல், சமூக ஒதுக்கீடு மற்றும் நட்பின் முக்கியத்துவத்தைப் பற்றியதாக இருக்கிறது. நன்றி – School Library Journal
- சூரிய ஒளி இல்லாமலேயே வாழும் உயிரிகள்
"சூரியனுடைய ஒளிதான் எல்லா உணவுச்சங்கிலிகளுக்கும் அடிப்படையானது" என்று நாம் பள்ளிப்பாடங்களில் படித்திருப்போம். சூரிய ஒளி இல்லாமல் தாவரங்களால் உணவு தயாரிக்க முடியாது, தாவரங்கள் இல்லாமல் உணவுச்சங்கிலியும் இயங்காது. ஆகவே சூரியனுடைய ஒளி இல்லாமல் எந்த உணவுச்சங்கிலியும் செயல்பட முடியாது. 1977 வரை எல்லாரும் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கண்டுபிடிப்பு எல்லாவற்றையும் மாற்றியது. 1977ம் ஆண்டில் என்ன நடந்தது? தென்னமெரிக்காவுக்கு அருகில் உள்ள கலபகோஸ் தீவுகளில் உள்ள ஆழ்கடல் பகுதியில் சில அறிவியலாளர்கள் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்கள். இந்தக் குழுவின் தலைமை அறிவியலாளராக இருந்தவர் ராபர்ட் பல்லார்ட் என்ற நிலவியலாளர். நார் என்ற ஆராய்ச்சிக் கப்பலில் அமர்ந்துகொண்டு அவர்கள் ஆழ்கடலில் புகைப்படம் எடுக்கும் கருவிகளை அனுப்பிக்கொண்டிருந்தார்கள். கடலுக்கு அடியில் உள்ள வெந்நீர் ஊற்றுகளில் (Hydrothermal Vent) என்னென்ன உயிரினங்கள் வாழ்கின்றன என்று தேடியபோது, அவர்கள் ஒரு புதிய வகை பாக்டீரியாவை கண்டுபிடித்தார்கள். இந்த பாக்டீரியா எப்படியெல்லாம் உணவு தயாரிக்கிறது என்று சோதனை செய்து பார்த்தபோது அறிவியலாளர்கள் வியந்துபோனார்கள். ஏனென்றால், இந்த பாக்டீரியா, கரியமில வாயு என்று அழைக்கப்படும் கார்பன் டை ஆக்சைடையும் ஹைட்ரஜன் சல்ஃபைடு வாயுவையும் மட்டுமே வைத்துக்கொண்டு உணவு தயாரித்துவிடும்! சூரிய ஒளி இல்லாமல் உணவு தயாரிக்கும் முதல் உயிரினம் இப்படித்தான் கண்டுபிடிக்கப்பட்டது! "இதுவரைக்கும் சூரிய ஒளி இருந்தால் மட்டுமே உணவு தயாரிக்க முடியும் என்றுதானே நம்பிக்கொண்டிருக்கிறோம். இந்த சின்னஞ்சிறு பாக்டீரியா நமது அடிப்படையான நம்பிக்கைகளையே சுக்குநூறாக உடைத்துவிட்டதே" என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். "நாங்கள் எல்லாருமே பேசக்கூட மறந்து அப்படியே ஆச்சரியத்தில் உறைந்துபோனோம். இந்த உயிரிகளைக் கண்டுபிடித்தது ஒரு அட்டகாசமான உணர்வைத் தந்தது" என்று அந்த நிகழ்வைப் பற்றிக் கூறுகிறார் ராபர்ட் பல்லார்ட். கண்ணுக்கே தெரியாத ஒரு நுண்ணுயிரி, அறிவியலையே மாற்றியமைத்தது. சூரிய ஒளி இல்லாமல் உயிர்கள் வாழ முடியும் என்று அனைவரும் அறிந்துகொண்டார்கள். அது மட்டுமல்ல, சூரிய ஒளி படாத ஆழ்கடலில் முழுமையான உணவுச்ச்சங்கிலிகள் இருக்கும் என்பதையும் அன்றுதான் கண்டுபிடித்தார்கள். சூரிய ஒளி இல்லாமல் இவ்வாறு உணவு தயாரிப்பதை வேதிச்சேர்க்கை (Chemosynthesis) என்று அழைக்கிறார்கள். இந்த உலகில் ஆயிரக்கணக்கான வேதிச்சேர்க்கை நுண்ணுயிர் இனங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் பாக்டீரியா மற்றும் ஆர்க்கியா வகையைச் சேர்ந்த நுண்ணுயிர்கள்தான் வேதிச்சேர்க்கை செய்கின்றன. அது மட்டுமல்ல, இந்த வகை நுண்ணுயிர்கள் வெப்பம் அதிகமான, ஆக்சிஜன் குறைவாக உள்ள பகுதிகளிலும்கூட தாக்குப்பிடித்து வாழும் தகுதி படைத்தவை. கடினமான சூழலில் வாழும் இதுபோன்ற உயிரிகளை Extremophile என்று அழைப்பார்கள். அதீதத் தன்மையை விரும்பும் உயிரிகள் என்று இதற்குப் பொருள் கூறலாம். இந்த வேதிச்சேர்க்கை நுண்ணுயிரிகளின் இன்னொரு சிறப்பம்சத்தை சொல்லட்டுமா? சிலவகை வேதிச்சேர்க்கை நுண்ணுயிர்கள் தனியாக வாழும். இன்னும் ஒரு சில நுண்ணுயிர்கள், பிற விலங்குகளின் உடலில் இணைந்து கூட்டாக வாழும்! அந்த விலங்குகள் தனியாக வேட்டையாடவோ,உணவு தயாரிக்கவோ தேவையில்லை. இந்த பாக்டீரியாக்கள் தயாரித்துத் தரும் உணவை அப்படியே சாப்பிட்டால் போதுமானது. விலங்குகளுக்கு உணவு கிடைத்துவிடும், பாக்டீரியாக்களுக்கு இருப்பதற்கு இடம் கிடைத்துவிடும். இருவருக்கும் சாதகமான நட்பு இது. நண்டுகள், ஆழ்கடல் புழுக்கள், சிப்பிகள் என பல வகை உயிரினங்களுடன் இந்த பாக்டீரியாக்கள் இணைந்து வாழ்கின்றன. இந்த பூமியில் உயிர்கள் உருவானபோது சூரிய ஒளியை வைத்து உணவு தயாரிக்கும் முறை இருக்கவில்லை என்றும், இந்த வேதிச்சேர்க்கை முறைதான் முதலில் வந்தது என்றும் சில அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். சூரிய ஒளியும் அதிகப்படியான ஆக்சிஜனும் இல்லாமலேயே இந்த உயிரிகளால் வாழ முடியும் என்பதால் இவைதான் பண்டைய உயிரினங்களாக இருந்திருக்கும் என்று அவர்கள் சொல்கிறார்கள். இது மட்டுமல்ல, செவ்வாய் கிரகம், வியாழன் கோளின் நிலவான யுரோப்பா போன்ற பல இடங்களில் உயிர்கள் வாழ முடியுமா என்று நாம் தேடிக்கொண்டிருக்கிறோம். இந்தப் பகுதிகளில் எல்லாம் இதுபோன்ற வேதிச்சேர்க்கை நடப்பதற்கே வாய்ப்பு அதிகமாம்! ஆகவே இங்கெல்லாம் ஒருவேளை நுண்ணுயிர்கள் வாழ்ந்தால் அவையும் வேதிச்சேர்க்கை செய்யக்கூடிய நுண்ணுயிர்களாகத்தான் இருக்குமாம். பில் நை என்ற புகழ்பெற்ற அறிவியல் ஆர்வலர், "மனித இனத்தின் 100 நூறு முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பட்டியலிட்டால் அதில் வேதிச்சேர்க்கை நுண்ணுயிர்கள் கட்டாயம் இடம்பெறும்" என்கிறார்.
- லண்டனிலிருந்து அன்புடன் - 2
சுட்டிகளுக்கு அன்பு வணக்கம், “இலண்டனிலிருந்து அன்புடன்” எனும் தொடரை, இலண்டனில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்திலிருந்து நாம் தொடங்கியிருந்தோம். புத்தாண்டு கொண்டாட்டத்தில் hologauze animations வழியே தோன்றி வாழ்த்துச் சொன்ன “பேடிங்கடன் கரடி” குறித்து சென்ற பதிவில் நாம் பேசியிருந்தோம். உலகப் புகழ் பெற்ற “பேடிங்கடன் கரடி” புத்தகம் பற்றித்தான் நாம் இனி பார்க்க இருக்கிறோம். "A Bear Called Paddington" என்ற குறுநாவல் 1958ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் மைக்கல் பாண்ட். 1958யிலிருந்து 2016 வரை மொத்தம் 30 புத்தகங்கள் பேடிங்க்டன் கரடி கதாபாத்திரம் கொண்டு வெளியாகியுள்ளன. ஒவ்வொரு புத்தகமும் 8-10 அத்தியாயங்கள் கொண்டவை. நீங்கள், எட்டு வயதிற்கு மேல் உள்ளவர் என்றால் நீங்களாகவே இந்தப் புத்தகத்தை வாசித்துவிடலாம். Paddington என்பது இலண்டனில் உள்ள ஓர் ஊரின் பெயர். அங்கு ஒரு பெரிய ரயில் நிலையமும் உண்டு. அந்த ரயில் நிலையிலிருந்து, இங்கிலாந்தில் உள்ள வெவ்வேறு தொலைதூர ஊர்களுக்கு ரயில்கள் வந்து செல்வது வழக்கம். கதையின்படி, மிஸ்டர் பிரவுன் மற்றும் அவரது மனைவி இருவரும் பேடிங்கடன் ரயில் நிலையத்திற்கு வருகின்றனர். அவர்களது குழந்தைகள் வெளியூரில் விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், குழந்தைகள் வீட்டிற்குத் திரும்புகின்றனர். ரயிலின் வருகைக்காக அவர்கள் காத்திருந்த போதுதான், கோட்சூட் & தொப்பி அணிந்த கரடி ஒன்று தனது பெட்டியுடன் ரயில் நிலையத்தில் தனியே அமர்ந்திருப்பதை இருவரும் கவனித்தனர். அந்தக் கரடியின் கழுத்தில் “Please look after this bear” என்றும் எழுதப்பட்டிருந்தது. இருவரும் அந்தக் கரடியிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தனர். தான் பெரு(Peru) எனும் நாட்டிலிருந்து வருவதாகவும், அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு நிறையப் பாதிப்புகள் ஏற்பட்டதால், தனது அத்தை லூசி தன்னை இலண்டன் அனுப்பினார் என்றும் ஆனால் தனக்கு எங்குச் செல்வது, எங்குத் தங்குவது, யாரிடம் உதவி கேட்பதும் தெரியவில்லை என்று வருத்தமாகக் கூறுகிறது. வந்து நீண்ட நேரமாகியும், யாரும் தன்னுடன் பேசவில்லை என்றும், தனக்கு மிகவும் பசிக்கிறது என்றும் பேடிங்கடன் கரடி பதில் அளித்தது. கரடிக்கு அவர்கள் உணவு வாங்கி தருகின்றனர். அப்பொழுதுதான் கரடிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கும் போது, “பேடிங்டன்” எனும் ரயில் நிலையத்தின் பெயரையே கரடிக்கு வைக்கின்றனர். அதற்குள் குழந்தைகள் அங்கு வந்து சேருகின்றனர். அழகான பேசும் கரடியை பார்த்ததும், கரடியை வீட்டுக்கு அழைத்துச் செல்ல சிறுவர்கள் விரும்புகின்றனர். அப்படித்தான் பேடிங்க்டன் கரடி ப்ரவுன் குடும்பத்தில் இணைகிறது. அதன் பிறகு அந்தக் கரடி குடும்பத்தினருடன் இலண்டனிலுள்ள ஒவ்வொரு பகுதிக்குச் செல்வதும் அங்குச் செல்லும்போது அது செய்யும் சேட்டைகளுமே இந்தப் புத்தகத்தின் கதை. பேடிங்க்டனுக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கமும் உண்டு. அது குழந்தைகள் போலவே சிந்திக்கும். orange marmalade எனப்படும் ஒரு இனிப்பு தான் பேடிங்கடனுக்கு பிடித்த உணவு. ஊர் சுற்றுவது, அத்தைக்குக் கடிதம் எழுதுவது, ரகசியமாக வீட்டில் உள்ளவர்களுக்குப் பரிசுகள் ஏற்பாடு செய்வது என அது நிறையத் திட்டமிடும். ஆனால் அதன் சில செயல்கள் மட்டுமே பாராட்டுகளைப் பெற்றுத் தரும். பல நேரங்களில் அது செய்யும் செயல்கள் சொதப்பி பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளும். அதிலிருந்து தப்பிப்பதுதான் பேடிங்க்டன் கரடியின் சுவாரஸ்யமான கதை. திரைப்படங்களில் ரசித்த வடிவேலு அவர்களின் நகைச்சுவை போன்றே பேடிங்க்டன் கரடியின் செயல்களும் நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும். பேடிங்க்டன் கதை திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. இதுவரை மூன்று திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில்கூட “Paddington at Peru” எனும் மூன்றாம் பாகம் வெளியானது. பேடிங்க்டன் கரடி தனது சொந்த ஊரான பெருவுக்கு சென்று தனது அத்தையைத் தேடுவதாகக் கதை அமைந்திருக்கும். கதையின் முடிவில், பேடிங்க்டனின் சொந்த ஊரான பெருவிலே தங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இங்கிலாந்தா? பெருவா? எது தனது சொந்த ஊர் என்ற குழப்பத்தில் பேடிங்க்டன் தவித்துக்கொண்டிருக்கும். நாம் அனைவருமே வெவ்வேறு காரணங்களுக்காக, நமது சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்கோ, வேறு மாநிலத்திற்கோ, அல்லது வேறு நாட்டிற்கோ மாறியிருப்போம். புதிய இடத்தில் பல ஆண்டுகள் வாழ்ந்தாலும், சொந்த ஊரை நாம் அடிக்கடி நினைத்துக் கொள்வோம். “சொர்கமே என்றாலும் அது நம் சொந்த ஊர் போல வருமா” பாடலைகூட நாம் கேட்டிருப்போம். எது நமது சொந்த ஊர்? பிறந்த ஊரா? அல்லது நாம் தற்போது வாழும் ஊரா? என்ற குழப்பம் அனைவருக்குமே உண்டு. அதே குழப்பத்தில்தான் பேடிங்க்டன் கரடியும் தவித்துக்கொண்டிருக்கும். பேடிங்க்டன் தனது கரடி சொந்தங்களுடன் பெருவில்தான் தங்கப் போகிறது என்று அனைவரும் எதிர்பார்க்க, இங்கிலாந்துதான் தனது சொந்த ஊரென பேடிங்க்டன் முடிவெடுக்கும். ஏன் தெரியுமா? ஏனென்றால், யாதும் ஊரே! யாவரும் கேளீர்! என்கிறது பேடிங்க்டன். அதனால்தான், உலக அமைதியின் அடையாளமாகக் கருதப்படுகிறது பேடிங்க்டன் கரடி.












