top of page

குட்டிக்குருவி கரிச்சான் - பூங்கொடி பாலமுருகன்

ree

"டேய் மாறா என்ன யோசனை .. ஒன்னுமே  பேசாமல் அமைதியாக உட்கார்ந்து இருக்க ?" என்று  பேரனையே வெகு நேரமாய் பார்த்துக் கொண்டிருந்த சதாசிவம் கேட்டார். 

 

 "ஒன்னும் இல்ல தாத்தா" என்று சோகமான குரலில் மாறன் சொன்னான். அவன் ஒன்றும் இல்லை என்று சொன்னாலும் கூட அவன் முகத்தில் ஏதோ 

ஒரு சோகம் தென்பட்டது அவனாகவே சொல்லட்டும் என்று  தாத்தா விட்டு விட்டார்.

”இந்தா அவிச்ச நிலக்கடலை.இதைச் சாப்பிட்டுக் கொண்டே 

இங்கேயே அமர்ந்து இரு. நான் வேலைகளை முடித்துவிட்டு வருகிறேன்"


என்று சொல்லிக்கொண்டே தோட்டத்துக்குள் சென்று விட்டார்.


கீரனூர் என்ற அழகிய கிராமத்தில் வசிப்பவர் சதாசிவம். 

அந்தக் காலத்திலேயே நன்கு படித்த மனிதர்.   அவருக்கு விவசாயத்தின் மேல் ஆர்வம் அதிகம்.. அதனால் வேலைக்குச்  செல்லாமல் சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார். அவருடைய மகன்  அருண் பொறியியல் பட்டப்படிப்புப் படித்தவர்.அருகில் இருக்கும் கோவை 

நகரத்தில் ஒரு ஆலையில் பொறியாளராகப் பணியாற்றுகிறார்.அருணின்  செல்ல மகன்தான் இளமாறன். இளமாறனுக்குத்  தாத்தா , பாட்டி என்றால் உயிர். விடுமுறை விட்டால் போதும், கிராமத்துக்கு ஓடி வந்து விடுவான். 


 சதாசிவம் மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.


மாறன் அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் 

கொண்டிருந்தான்.  ஒரு சிறிய அழகிய பறவைத் தன்னைவிடப் பெரிய பருந்தைத் துரத்தித் துரத்திக் கொத்துவதைப் பார்த்தான்.அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. அந்தப் பறவையையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பறவையின் வால் மட்டும் இரண்டாகப் பிரிந்து இருப்பதைப் பார்த்தான்.

 

 தாத்தா எல்லா வேலைகளையும் முடித்து விட்டு வரும் வரை அவன் கவனம் 

முழுவதும் அந்தப்  பறவையின் மேலேயே இருந்தது.


பருந்தை மட்டுமல்ல ;காகத்தையும் அது துரத்தித் துரத்திக் கொத்தியது.  அந்தப் பறவையை பார்த்துக் கொண்டிருந்த சுவாரசியத்தில்,தாத்தா வந்தது கூட அவனுக்குத்  தெரியவில்லை. 


சிறிது நேரத்திற்கு முன்பு சோர்ந்து இருந்த பேரனின் முகம், மலர்ந்து இருந்ததைப் பார்த்து ரசித்தார். 

மெல்ல அவன் அருகில் அமர்ந்து அவன்  தோளைத் தொட்டதும்,


" தாத்தா..தாத்தா.. அந்தக் குட்டிப் பறவையைப்  பாருங்களேன். அது அவ்வளவு சிறியதாக இருந்தாலும் எப்படி பெரிய பறவைகள் கூடச் சண்டைப் போடுது  பாருங்க!"

என்று  வியப்போடு அந்தப் பறவையைக் காட்டினான்.


 அந்தப் பறவையைப் பார்த்ததும், " அட..நம்ம ரெட்டை வாலுக் குருவி " என்று சிரித்தபடியே  தாத்தா சொன்னார்.

 

"அய்.தாத்தா. இந்தக் குருவி பற்றி உங்களுக்குத் தெரியுமா ?" என்று வியப்போடு கேட்டான்.

 

" மாறா.. இந்தப் பறவையை  தினமும்  நான். சின்ன வயதில் இருந்து பார்த்துட்டு  வரேன்" 

என்றார்.

 

" தாத்தா..இந்தப் பறவையைப் பத்தி எனக்குச்  சொல்லுங்க தாத்தா.பிளீஸ்." 

என்று   அவர் கைகளைப் பற்றிக் கொண்டே ஆர்வத்தோடு கேட்டான்.

 

"சொல்றேன் சொல்றேன் கண்ணு." என்று அவன் ஆர்வத்தை ரசித்தபடியே சொல்ல ஆரம்பித்தார்.

 

" இந்தப் பறவைக்கு கரிச்சான்ன்னு பேரு. இரட்டை வால் குருவி, கரிக் குருவி, ஆனைச் சாத்தான் அப்படின்னு பல பெயர்களில் இந்தப் பறவையைக் குறிப்பிடுவாங்க. " 

என்று  தாத்தா சொல்லிக் கொண்டே வருகையில், 

 

"தாத்தா இதனோட வால் பகுதி இரண்டாக பிளந்து இருப்பதால் தானே இதுக்கு

 இரட்டை வால்க்குருவின்னு பெயர் வச்சாங்க " என்று பெயர் காரணத்தைக்

 கண்டுபிடித்து விட்ட மகிழ்வில் வேகமாய் சொன்னான். 


" ரொம்ப ரொம்ப சரி கண்ணு.. இதோட  நிறம்  பளபளவென  மின்னும்  கருப்பு  நிறமாய்  இருப்பதைப்  பார்த்தாய் தானே.. புறாவை விடச் சற்று சிறியது இந்த கரிச்சான்.  நீளமான வால்,   கடைசியில் பிளவுபட்டு இருப்பது தான்  இந்தப் பறவையின் சிறப்பு." 

 

தாத்தா சொல்லச்  சொல்ல கண்கள் மினுங்க  கேட்டுக்கொண்டே இருந்தான்.

 

 மேலும்     இரட்டைவால் குருவிக்குப்  பயம் என்பது அணுவளவும் கிடையாது.  அது  தன்னைவிட உருவத்திலும், பலத்திலும் பெரிதான காகம், கழுகு, பருந்து  போன்ற  பறவைகளைக் கண்டு அச்சம் கொள்வதில்லை. அவைகளைத்  துரத்தித் துரத்தி விரட்டும். அந்தப் பறவைகளும் பயந்தோடித் தப்பித்தோம், பிழைத்தோம்  என்று  திரும்பிக்  கூட  பாராமல்  அதி வேகமாகப் பறந்து செல்லும். இந்தக் காட்சி பார்க்க வேடிக்கையான,  வினோதமான ஒன்று   என்று தாத்தா அந்தப்  பறவையைப் பற்றிச்  சொல்லிக் கொண்டே வந்தார். 

 

" தாத்தா.. பெரிய பறவைகள் கூட  இந்தக் குட்டிக் கரிச்சான  பார்த்து பயப்படுறதப் பார்த்தா  வியப்பா இருக்கு தாத்தா" என்று ஆச்சரியத்தோடு சொன்னான்.

 

"கண்ணு.. உருவத்தைப் பார்த்து எதையும் எடை போடக்கூடாது. அதைவிட இன்னொரு விஷயம். இந்த கரிச்சான் இருக்கிற தைரியத்துல, மணிப்புறா, தவிட்டுக் குருவி, கொண்டைக் குருவி  போன்ற   சாதுவான  பறவைகள் கரிச்சான் கூட்டுக்குப்  பக்கத்துல கூடு  கட்டி  இனப்பெருக்கம்  பண்ணும்."

 

" கரிச்சான் இருக்க பயமேன்.அப்படித் தானே தாத்தா." என்றான் மாறன். 

 

" அதே தான் கண்ணு."

 

" தாத்தா.. நான் இனிமேல் குட்டியா இருக்கேன்னு  கவலைப்பட மாட்டேன். கரிச்சான்  மாதிரி தைரியமா இருப்பேன்"    என்று  உறுதியாய்  மாறன் சொன்னான்.


" உன்னை யாராச்சும் குட்டியா இருக்கேன்னு கிண்டல் பண்ணாங்களா மாறா ? "  என்று கேட்டார்.


"ம்ம்..ஆமாம் . தாத்தா.. சரியா  கண்டுபிடிச்சிட்டீங்க. எங்க பள்ளியில்  ஆண்டுவிழாவில் என்னை மேடையில் பேச தலைமையாசிரியர் 

தேர்ந்தெடுத்தார். இதை மகிழ்வாக வகுப்பில்  பகிர்ந்தேன்.  ஆனா எங்க வகுப்பு பசங்க, டேய் பொடியா.. உனக்கு மைக் எட்டுமா ? ஸ்டூல் போட்டு ஏறி நின்னு பேச போறியான்னு கிண்டல் பண்ணிக்கிட்டே 

இருந்தாங்க.எனக்கு அதுதான் ரொம்ப வருத்தமாயிடுச்சு தாத்தா." 

 என்று கொஞ்சம் சோர்வோடு சொன்னான்.

 

" மாறா.. உயரம் அவங்க அவங்க மரபுல வந்தது. உங்க அப்பா கூட காலேஜ்  போனதுக்கப்புறம்  தான் நல்லா வளர்ந்தான். அதுபோலத்தான் நீயும் இருக்க. அதுவவுமில்லாம   அவங்க உருவத்தில்  உயரமா இருக்கலாம். ஆனா மேடையில ஏறி பேசும்  அளவுக்கு அவங்க இன்னும் உயரவில்லை.  1500  மாணவர்கள் இருக்கிற இடத்தில,உனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு 

அப்டின்னா , நீ  அந்த அளவுக்கு தகுதில உயர்ந்திருக்க."   

என்று  தாத்தா  பெருமிதத்தோடு  சொல்லச் சொல்ல, மாறன் மனதில் மாற்றம் ஏற்பட்டது.

 

"ஆமா தாத்தா ...நான் இந்த கரிச்சான் மாதிரி குட்டியா இருந்தாலும் தைரியமானவன் தாத்தா.மேடையில் எப்படி பேசிக் கலக்கிட்டு வரேன்..பாருங்க " 

என்று உற்சாகமாய் சொன்னான். 


அதை ஆமோதிப்பது போல் கீச் கீச் என்று கரிச்சானின் குரல் கேட்டது.

 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page