ஊருக்குள் வந்த ஒட்டகம்- அகிலாண்டபாரதி
- அகிலாண்டபாரதி
- Aug 15
- 3 min read

அமுதாவின் கிராமத்தில் திருவிழா வந்தது. வழக்கமாக திருவிழா வந்தால் பலூன் விற்பவர்கள் வருவார்கள், ராட்டினம் சுற்றுபவர்கள் வருவார்கள், ஜவ்வு மிட்டாய்க் காரர்கள், பஞ்சு மிட்டாய் விற்பவர்கள், பானி பூரி கடைக்காரர்கள், கலர் கலராய் வளையல், பாசி விற்பவர்கள் வருவார்கள். அழகழகான பொம்மைகளைக் கொண்ட கடைகள் வரும்.
இதுவரை இல்லாத புதுமையாக, இந்த முறை இரண்டு பேர் ஒரு பெரிய ஒட்டகத்தை நடத்திக் கூட்டி வந்திருந்தனர். அதுவரை திரைப்படங்களிலும் புத்தகங்களிலும் தான் ஒட்டகத்தைப் பார்த்திருந்தாள் அமுதா. ஒட்டகம் வந்திருக்கிறது என்று கேள்விப்பட்டவுடன் அவளும் அம்மாவும் அதைத் தேடிப் பிடித்து போய் பார்த்து வந்தார்கள். அதிலிருந்து அமுதா ஒட்டகத்தைப் பற்றியே பேசினாள்.
“அது அவ்ளோ பெருசா இருக்கும்மா”
“மேல சிவப்பு கலர்ல போர்வை போத்தியிருக்குது பாட்டி”
“மெதுவா நடக்குது பாருங்க”
“ஒட்டகத்தோட முகத்தைப் பார்த்தால் நீங்க சிரிக்கிற மாதிரி இருக்கு தாத்தா”
“நம்ம வீட்டை விட உயரமாக இருக்குது. என்னப்பா?”
என்று சதா ஒட்டகத்தை பற்றிய பேசியபடியே இருந்தாள்.
ராட்டினங்கள், கடைகள் எல்லாம் ஊருக்கு வெளியே ஒரு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அங்கே ஒட்டகத்தையும் நிறுத்தி வைத்திருந்தார்கள். ஐம்பது ரூபாய் கொடுத்தால் குழந்தைகளை ஒட்டகத்தின் மேல் ஏற்றி வைப்பார்கள். ஒட்டகம் மைதானத்தை ஒரு வட்டம் சுற்றி வந்து நிற்கும்.
சில குழந்தைகள் ஒட்டகத்தில் ஏறியவுடன் பயந்து போய் அழுதார்கள். சில குழந்தைகள் குதியாட்டம் போட்டார்கள். எல்லாவற்றிற்கும் ஒட்டகம் அமைதியாகவே இருந்தது. அமுதாவின் பக்கத்து வீட்டுச் சிறுவன் பாலன். சாப்பிடுவதற்கு ரொம்பவும் அடம்பிடிப்பான். அவன் ஒட்டகத்தில் போக வேண்டும் என்று ஆசைப்பட்டான்.
“நீ சாப்பாடு ஒழுங்காக சாப்பிட்டால் ஒட்டகத்தில் ஏற வைக்கிறேன்”
என்றார் அவனது அப்பா. அவனும் அன்றைக்கு சேட்டை பண்ணாமல் சமத்தாகச் சாப்பிட்டான்.
பாலனின் அண்ணன் கண்ணனுக்கு அன்று தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டேன் என்ற அடம் பிடித்தான். அழாமல் தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஒட்டகத்தில் கூட்டி போகிறேன் என்றதும் அவனும் அழாமல் தடுப்பூசி போட்டுக் கொண்டான். அமுதாவின் தெருவில் எல்லாக் குழந்தைகளும் மைதானத்துக்குச் சென்று ஒட்டகத்தின் மேல் ஏறி ஒரு முறை போய்விட்டு வந்தார்கள்.
போய்விட்டு வந்தவுடன் அமுதாவைப் போலவே அனைவரும் ஒட்டகத்தைப் பற்றியே பேசினார்கள். தெருவில் கிரிக்கெட் விளையாடுகையில், “ஒட்டகம் உயரத்துக்கு அடிக்கிறேன், பாக்குறியா” என்றான் ஒருவன்.
“நீ ஏன்டா குளிக்கல? ஒட்டகம் தான்டா குளிக்காது” என்றான் இன்னொருவன்.
சற்றே பெரிய சிறுமி ஒருத்தி, “ஒட்டகம் மொத்தமா நிறைய நிறைய சாப்பாடு சாப்பிடும். அதுக்கப்புறம் ஒரு மாசம் கூட அதால சாப்பிடாமலேயே இருக்க முடியும். தெரியுமா?” என்றாள்.
ஒட்டகம் ஊருக்குள் வந்து பத்து நாட்கள் ஆகியிருந்தன. திருவிழா முடிந்து விட்டது. மைதானத்தில் இருந்து ஒட்டகக் காரர்கள் இருவரும் ஒட்டகத்தைக் கூட்டிக்கொண்டு தெருக்களுக்குள் வந்தனர். அமுதாவின் தெருவில் ஒட்டகத்திற்கு நிறைய ரசிகர்கள் இருந்ததால் காலை, மாலை இரண்டு வேளையும் இவர்களது தெருவுக்கு வந்தது ஒட்டகம்.
“நிறைய தடவை ஒட்டகம் மேலே ஏறியாச்சு. இனிமே யாருக்கும் ரவுண்டு கிடையாது”
என்று பெற்றோர்கள் திட்டவட்டமாகக் கூறினார்கள்.
குழந்தைகள் ஒட்டகத்தின் பின்னாலேயே ஓடினார்கள். “ஓடாதீங்க, விழுந்திடுவீங்க, அடிபட்டுடும்” என்று அம்மாக்கள் சொல்ல, “பரவாயில்லை போகட்டும், இதெல்லாம் ஒரு சந்தோஷம்தானே. சின்ன வயசுல யானை எங்க ஊருக்குள்ள வர்றப்ப நாங்களும் இப்படியே தான் பின்னாலேயே போவோம்” என்றார்கள் தாத்தாக்கள்.
பாலன் மீண்டும் சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடித்தான். பாலனைப் பார்த்து அவனது எதிர் வீட்டில் உள்ள மீனா அடம்பிடித்தாள். மீனாவைப் பார்த்து மீனாவுடைய தம்பி கோகுல் அடப்பிடித்தான். கோகுலைப் பார்த்து சக்தி, சக்தியைப் பார்த்து கவிதா என்று அனைத்துக் குழந்தைகளும் அடம்பிடிக்க ஆரம்பித்தார்கள். பெற்றோர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தபோது, “உங்க குழந்தை சாப்பிட்டாச்சா?” என்று தான் கேட்டார்கள். அன்று மாலை ஒட்டகம் அவர்கள் தெருவுக்கு வந்த போது வேறு வழியில்லாமல், “கடைசியா ஒரே ஒரு தடவை ஒட்டகத்து மேலே ஏறிக்கலாம்” என்று அனுமதி கொடுத்தார்கள். சாப்பிட அடம் பிடித்த குழந்தைகள் ஒட்டகத்தின் மேல் ஏறி ஒரு சுற்றுச் சுற்றி வந்தவுடன் சாப்பிடத் தொடங்கினார்கள்.
ஒட்டகம் அமுதாவின் வீட்டருகில் வந்தது.
“அண்ணா! ஒட்டகம் சாப்பிட்டுச்சா” என்று கேட்டாள் அமுதா.
“இன்னும் இல்ல பாப்பா” என்று ஒட்டகக்காரர் சொல்ல, வீட்டுக்குள் இருந்து கொஞ்சம் பழங்களைக் கொண்டு வந்தாள் அமுதா. அவளைப் பார்த்து பாலன் தங்கள் வீட்டு ஆட்டுக்குட்டிக்கு எடுத்து வைத்திருந்த கீரைக் கட்டை வாங்கி வந்தான். மீனா அவளது அப்பாவிடம், “அப்பா புல்லுக்கட்டு வாங்கிட்டு வாங்க” என்றாள். அவர்கள் அனைவரையும் அத்தனை நாட்கள் சாப்பிட வைத்த ஒட்டகம், அன்று அவர்களது தெருவின் நடுவில் நின்று அனைவரும் கொடுத்த உணவுகளை நன்றாகச் சுவைத்துச் சாப்பிட்டது. தெருவுக்கு மத்தியிலிருந்த பெரிய தொட்டியில் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒரு குடம் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றினார்கள். அதையும் நன்றாக உறிஞ்சிக் குடித்தது.
“அட நமக்கு எல்லாம் ஒட்டகம் சாப்பிட்டுச்சான்னு கேக்கணும்னு தோணவே இல்லையே!” என்று பெரியவர்கள் சொன்னார்கள்.
“இனிமே அடுத்த ஊருக்குப் போற வரைக்கும் ஒட்டகத்துக்கு சாப்பாடு தேவை இல்லை. நல்ல சந்தோஷமா சாப்பிட்டுச்சு” என்றார் ஒட்டகக்காரர். அமுதா ஒட்டகத்தில் ஏறினாள். இரண்டு முறை தெருவைச் சுற்றி வந்து நின்றது ஒட்டகம். மகிழ்ச்சியுடன் இறங்கினாள்.
அடுத்த ஊருக்குச் செல்லும் திசையில் ஒட்டகம் நடக்க ஆரம்பித்தது. எல்லா குழந்தைகளும் சேர்ந்து ஒட்டகத்துக்கு டாட்டா காட்டினார்கள். கொஞ்ச தூரம் சென்றதும் ஒட்டகம் அமுதா இருந்த திசையில் திரும்பிப் பார்த்தது.
அது தன்னைப் பார்த்து மட்டும் லேசாகச் சிரித்தது போல் இருந்தது அமுதாவுக்கு!
Fantastic