குழந்தைகளின் உரிமைகள் - 13
ஐக்கிய நாடுகளின் அமைப்பு - குழந்தைகளின் உரிமைகள் குறித்த சர்வதேசப் பிரகடனம்:

பதினான்காவது உரிமையாக ஐக்கிய நாடுகளின் பிரகடனம் தெரிவிக்கும் அம்சம் எதுவெனில், குழந்தைகள் தங்களின் சொந்தச் சிந்தனைகள் எவையாக இருப்பினும், தாம் விரும்பும் மதம் எதுவாக இருப்பினும், கருத்துகள் எவையாக இருப்பினும், அவற்றை சக மனிதர்களின் உரிமைகளைப் பாதிக்காத வகையில் தேர்வு செய்து கொள்ளலாம்; அவற்றைப்பற்றிய கலந்துரையாடல்கள், விவாதங்கள், கருத்தரங்குகளில் பங்கேற்கலாம். அவற்றைப் பரப்புரைகளின் மூலம் மற்றவர்களிடம் பரப்புவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம். இங்கு உடனே நம் அனைவரின் மனதிலும் எழும் கேள்வி இதுவாகவே இருக்கும்: "என்னது? குழந்தை, தனக்கென்று ஒரு மதத்தைத் தேர்வு செய்து கொள்ள முடியுமா? அது எப்படி நடக்கும்? ஒரு குழந்தை, அதன் பெற்றோர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களோ அந்த மதத்தைத்தானே சேர்ந்திருக்க முடியும்? அதற்கென்று தனியே வேறு மதம் எப்படியிருக்க முடியும்?" இது நமது பொதுப் புத்தியிலுள்ள நீண்ட காலப் புரிதலின் விளைவு.
குழந்தைகள் இன்றைக்குத் தமது பெற்றோரின் சாதி, மதம்,இனம் ஆகியவற்றைத் தவிர, வேறு எத்தனை விஷயங்களில் பெற்றோரின் விருப்பங்கள் தாம் தமது விருப்பங்களும் என்று ஏற்றுக்கொள்கிறார்கள்? நன்றாக யோசித்துப் பார்ப்போம்: உணவு, திரைப்படங்கள், வீடியோ கேம்ஸ், உடைகள், ரசிக்கும் இசை, சினிமா, ஃபேவரைட் ஹீரோ, ஹீரோயின், மாடல் பெர்சனாலிட்டி - என எல்லாவற்றிலும் அவர்களுக்கென்று தேர்வுகள் இருக்கின்றன. சமீப காலத்திய நடப்புகளைப் பார்ப்பவர்களுக்குத் தெரியும்: எந்த நடிகரின் கட்சிக்குப் பெற்றோர் வாக்களிக்க வேண்டும் என்பதைக்கூடத் தாங்களே தீர்மானித்து, அதைத்தவிர்த்துப் பெற்றோர் வேறு முடிவுகளை எடுத்தால் தற்கொலை செய்து கொள்வதாக அல்லது உண்ணாவிரதம் இருக்கப் போவதாகப் பெற்றோரை மிரட்டும் அளவுக்கு இன்றைய குழந்தைகளின் மனநிலைகளில் தீவிர விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன. இதுதான் எதார்த்தம்! இது நமக்குக் கசப்பாகத்தான் இருக்கும்; ஆனால், விழுங்கித்தான் ஆக வேண்டும்!
இவையெல்லாவற்றிலும் தமக்கென தனிப்பட்ட தேர்வுகளைக் கொண்டிருக்கும் குழந்தைகள், மதம், சிந்தனைகள்,கருத்துகள் ஆகியவற்றில் தேர்வுகளைக் கொண்டிருக்க மாட்டார்களா? இப்படி நாம் சொல்லும் போது, உடனே, மற்றவர்களைத் தங்களின் மதத்திற்கு மாறும்படிக் கட்டாயப்படுத்துகிறார்கள், மத மாற்றத்தைத் திணிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டும் அவலங்கள் அன்றாடம் நிகழ்கின்றன. ஆனால், ஐக்கிய நாடுகள் அவையில் நிறைவேற்றப்பட்டுள்ள, குழந்தைகளின் உரிமைகள் குறித்த தீர்மானம், அது குறித்த சர்வதேசப் பிரகடனம் போன்றவற்றில், இந்தத் தனியுரிமை இன்றளவும் நடைமுறையில் உள்ளது; இந்தப் பிரகடனத்தில் கையொப்பமிட்டுள்ள நாடுகளில்,இந்தியாவும் ஒன்று.
ஆகவே, யூனிசெஃப் அமைப்பின் வழிகாட்டலில் இந்த உரிமையும் ஒன்றாக வலியுறுத்தப்படுகிறது. நமது பிள்ளைகள் நம் கண்முன்னே வளர்கிறார்கள். "நான் வளர்கிறேனே மம்மி…" எனப் பாடுகிறார்கள். அந்த வளர்ச்சிப் பாதையில், மேற்கண்டவாறு உள்ள யூனிசெஃப் உரிமைகளை அவர்கள் அறிந்துகொள்ளு மாறு செய்வது பெற்றோரின் கடமை என அந்த அமைப்பின் பிரகடனம் சொல்கிறது. அவ்வாறு செய்யும் போது,அவர்கள் தங்களின் உரிமைகளை வலியுறுத்தும் அதே வேளையில், சக மனிதர்களில் எவரையும், அவர்கள் தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதைத் தடுக்கவோ, மறுத்து நிற்கவோ ஒரு போதும் முயலக்கூடாது என்பதையும் அழுத்தமாகக் குறிப்பிடுகிறது.
எனவே, குழந்தைகள், தமது உரிமைகளை முறையாகப் பயன்படுத்துவதற்கும், மற்றவர்களின் உரிமைகளுக்குக் குறுக்கே நிற்காமல் இருப்பதற்கும் அவர்களுக் குப் பெற்றோரே வழி காட்டவும், துணை நிற்கவும் வேண்டும் என யூனிசெஃப் பிரகடனம் கூறுகிறது. நாம் இந்த விஷயங்களில் தெளிந்த அறிவுடன், சமநிலையுடன், சரியான ஒரு புரிதலுடன் செயல்பட வேண்டும் என்பதே இதன் அடிநாதம்.

சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.
சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று
பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார்.
மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.






Comments