அஞ்சலி
- கொ மா கோ இளங்கோ

- 20 hours ago
- 3 min read
இந்தியில்: அஞ்சிகா தமிழில் : கொ.மா.கோ.இளங்கோ

மதிய வெயில் மெல்லத் தணிந்து, மாலை நேரத்தின் இளஞ்சூடு தெருவெங்கும் பரவியது. வீட்டுத் திண்ணைகளில் உட்கார்ந்து சில பெண்கள் அன்றாடக் கதைகளைப் பேசிக்கொண்டிருக்க, பள்ளியிலிருந்து திரும்பிய சிறுவர்கள் தெருப் புழுதியில் ஓடி விளையாடத் தொடங்கினார்கள்.
அந்த அமைதியான சூழல், ஒரு செய்தி கேட்டுச் சட்டென்று கலைந்தது. எங்கிருந்தோ மூச்சிரைக்க ஓடிவந்த ஒரு பெண், "பக்கத்துத் தெருவில் இருக்கும் சமோசா கடைக்காரரின் இரண்டு பேரக்குழந்தைகளைக் காணவில்லையாம்" என்ற ஒரு தகவலைச் சொன்னாள்.
அந்த ஒரு கணம், அங்கிருந்த ஒவ்வொரு தாயின் இதயத்திலும் ஓர் இனம் புரியாத பயம் தொற்றிக்கொண்டது. விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகளை அவசர அவசரமாக வீட்டுக்குள் அழைத்துச் சென்று, பதற்றத்துடன் அணைத்துக்கொண்டார்கள்.
அப்போது தெரு முனையில், ஒரு சிறுவன் தள்ளாடி நடந்து வருவது தெரிந்தது. அவனுக்கு அதிகபட்சம் ஆறு வயது இருக்கலாம். ஆனால், அவனது உடலில் ஒரு பொட்டுத் துணிகூட இல்லை. பயத்தில் உறைந்துபோய், வெற்றுடம்போடு நடந்து வந்தான். தெருவில் வசிப்போர் ஓடிச்சென்று அவனைச் சூழ்ந்துகொண்டனர்.
"யார் இந்தப் பையன்? எங்கிருந்து வருகிறான்?" என்று கேள்விகள் எழுந்தன. அந்தச் சிறுவன் எதற்கும் பதிலளிக்கவில்லை. அவன் விம்மி அழுதுகொண்டிருந்தான். உடல் நடுங்கிக்கொண்டிருந்தான். பெரிய கொடூரத்தைச் சந்தித்துவிட்டு வந்திருப்பதை அவனது வெறித்த பார்வையைப் பார்த்துப் பலரும் உணர்ந்தார்கள். புகலிடம் ஏதுமற்ற அந்தச் சிறுவன், கூட்டத்தில் நின்றிருந்த ஒரு முதியவரின் காலடியில் தஞ்சம் புகுந்தான்.
காணாமல் போன குழந்தைகளில் ஒருவன் இவனாகத்தான் இருக்கும் என்று நினைத்து, சமோசா கடைக்காரரை அவசரமாக வரச்சொல்லி அழைத்தார்கள். பதற்றத்துடன் ஓடிவந்தவர், சிறுவனின் முகத்தைப் பார்த்துவிட்டு, "இவன் என் பேரன் இல்லை" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். சொந்தப் பேரன்கள் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம் அவரது முகத்தில் இருந்ததே தவிர, அங்கிருந்த சிறுவனின் பரிதாப நிலையைப் பார்த்து அவரது மனம் சற்றும் இளகவில்லை.
நேரம் செல்லச் செல்ல இருள் சூழ்ந்தது. களைப்பிலும் பயத்திலும் அந்தச் சிறுவன் தாத்தா வீட்டுத் திண்ணைக் கட்டிலிலேயே சுருண்டு படுத்துக்கொண்டான். மெல்ல மெல்ல உறங்கியும் போனான். அவனது உறக்கத்தோடு சேர்ந்து, அந்தத் தெருவின் நிஜமான முகமும் வெளிப்படத் தொடங்கியது.
பயம் விலகியதும், அந்தச் சிறுவன் தங்களுக்குச் சம்பந்தமில்லாத அந்நியன் என்று தெரிந்ததும், மக்களின் மனிதாபிமானம் மெல்லத் தனது நிறத்தை மாற்றிக்கொண்டது.
கூட்டத்தில் சிலர் பொறுப்பைத் தட்டிக்கழிக்க இரக்கமின்றி, "இவனை இப்படியே போலீசில் ஒப்படைக்கலாமே?" என்றார்கள். அதில் ஒருவர், "வேண்டாம், இவன் ஏற்கனவே அதிர்ச்சியில் இருக்கிறான். விடிந்ததும் பார்த்துக்கொள்ளலாம்" என்றார். ஆனால், அப்போது எழுந்த ஒரு கேள்வி எல்லோரையும் வாயடைக்க வைத்தது. "இன்று இரவு இவனை யார் வீட்டில் வைத்துக் கொள்வது? இவனுக்கு யார் உணவு கொடுப்பது?" என்று ஒருவர் கேட்டார்.
அதுவரை வாய் கிழிய மனிதாபிமானம் பேசியவர்கள் சட்டென்று தயங்கிப் பின்வாங்கினார்கள். "என் வீட்டில் இட நெருக்கடி", "என் குழந்தைகள் பயப்படுவார்கள்", "விடிந்ததும் போலீஸ் கேஸ் என்று அலைய முடியாது" என ஒவ்வொருவரும் ஒரு காரணத்தைச் சொல்லி சிறுவனை ஒதுக்க முயன்றார்கள். இரவு நெருங்க நெருங்க, அந்தப் பிஞ்சு உடம்பு எல்லோருக்கும் பாரமாகத் தெரியத் தொடங்கியது.
அப்போது தெரு முனையில் அஞ்சலி நடந்து வருவது தெரிந்தது. அவளைக் கண்டதும் அங்கிருந்தவர்களின் முகங்களில் சட்டென்று நிம்மதி பிறந்தது. தங்களின் பொறுப்பையும், குற்ற உணர்வையும் தூக்கிப் போடுவதற்கு ஒரு வடிகால் கிடைத்துவிட்டது போல உணர்ந்தார்கள். 'அஞ்சலி இருக்கிறாளே, அவள் பார்த்துக் கொள்வாள்' என்ற சுயநலம் எழுந்தது.
தாத்தா அவளை அழைத்து, "அஞ்சலி அம்மா, கொஞ்சம் இங்கே வா... உன் வீட்டில் ஒரு படுக்கையைச் சேர்த்துக் கொள். இந்தப் பையனைப் பார், இவனுக்கு இன்று இரவு தங்க இடம் கொடு" என்றார்.
அஞ்சலி, சிறுவனைப் பார்த்தாள். நள்ளிரவுக் குளிரில், ஆடையின்றி, சுருண்டு படுத்திருந்த பிஞ்சு உடலைக் கண்டதும் அவளது இதயம் கணத்தது. இத்தனை பேர் வசிக்கும் தெருவில், குளிரில் நடுங்கும் அந்தச் சிறுவனைப் போர்த்த ஒரு துண்டு கூடத் தர யாருக்கும் மனது வரவில்லை என்பதை அவளால் நம்ப முடியவில்லை.
அஞ்சலி எதையும் யோசிக்கவில்லை. சமூகத்தின் பார்வையைப் பற்றியோ, விடிந்தால் வரப்போகும் வதந்திகளைப் பற்றியோ, அல்லது வீட்டிலிருக்கும் அடுத்த வேளை உணவைப் பற்றியோ யாரிடமும் வாதிடவில்லை. விவாதங்கள் மனிதர்களைக் காப்பாற்றுவதில்லை என்பதை ஆழமாக அறிந்திருந்தாள்.
மெதுவாகக் குனிந்தாள். சற்றும் தயங்காமல் இடுப்பில் சுற்றியிருந்த சேலையின் முந்தானையை 'சக்'கெனக் கிழித்து உருவினாள். குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த சிறுவனின் உடலின் மீது போர்த்தி, அவனது நடுக்கத்தைத் தனது சேலைக்குள் அடக்கினாள். பிறகு, கைகளை அவனது உடலுக்கு அடியில் கொடுத்து, அவனை அள்ளித் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். ஓர் அம்மா, தனது சொந்தக் குழந்தையைத் தூக்குவது போன்ற மகத்தான அன்பு அந்த அணைப்பில் இருந்தது.
திடீரெனக் கிடைத்த பாதுகாப்பான அரவணைப்பில், தூங்கிப்போன சிறுவனின் உடல் நடுக்கம் நின்றது. அவன் தனது பிஞ்சுக்கரங்களால் அஞ்சலியின் தோள்களை இறுக்கமாகக் கட்டிக்கொண்டான்.
தெருவில் நின்றிருந்த சுயநலக் கூட்டம், தங்களுக்குரிய பாரத்திலிருந்து தப்பித்துவிட்ட நிம்மதியில், மெதுவாக அங்கிருந்து கலைந்து சென்றது. அந்த இருண்ட இரவில், தெருவின் விளக்கு வெளிச்சத்தை விட, அஞ்சலியின் திண்ணையே அதிக ஒளியுடன் பிரகாசித்தது.

எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.





Comments