top of page

அடையாளம்

ஷிராஸ் ஹுசைன் தமிழில் : கொ.மா.கோ.இளங்கோ 



அந்த ஊர் மக்கள் எல்லோரும் மதித்து நடக்கும் பெரியவர் நானா சாஹிப். மிகவும் நேர்மையானவர். பழங்காலத்து மனிதர். தாத்தா தனக்குக் கற்றுத்தந்த வைத்திய முறையில் ஊருக்கே வைத்தியம் பார்க்கிறார். மூட்டு வலிக்கான 'ஹக்கீமி' கைவைத்திய மருந்தைத் தயாரித்து விற்கிறார். அது பலருக்கும் நல்ல பலனைக் கொடுத்தது. ஊர் மக்கள் அவரைப் புகழ்ந்து பாராட்டினார்கள். 


தினமும் அவர் தெருவில் நடந்து வரும்போது கம்பீரமாகத் தெரிவார். தெருவில் விளையாடும் சிறுவர்கள் நானா சாஹிபைக் கண்டதும் ஓடி வருவார்கள். "ஸலாம் சாஹிப்!” என்று வணக்கம் சொன்னதும், அவர்களை மதித்து சாஹிப்பும் கணீர்க் குரலில் பதில் ஸலாம் சொல்லுவார். ஊர் மக்களிடம் அவர் ஒரு குடும்பப் பெரியவரைப் போலவே வாழ்ந்து வந்தார்.


நானா சாஹிப் தங்கியிருந்த வீட்டிற்கு நேர் எதிரே ஒரு கட்டிடம் இருந்தது. அதன் மொட்டை மாடியில் ஒரு வெள்ளை நாய் தங்கியிருப்பதைக் கவனித்தார். நாய் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அதனிடம் ஒரு விசித்திரமான பழக்கம் இருந்தது. மற்ற நாய்களைப் போல அது எப்போதும் குரைத்துக் கொண்டிருக்காது. ஆனால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் விசித்திரமாக நடந்துகொள்ளும்.


ஒவ்வொரு முறையும் அருகில் உள்ள மசூதியில் தொழுகைக்கான 'அஸான்' சத்தம் கேட்டதும் அங்கு ஓர் அதிசயம் நிகழும். அஸான் ஒலிக்கத் தொடங்கிய அடுத்த நொடியே, நாய் தனது தலையை வானத்தை நோக்கி உயர்த்தி "ஹூஊஊ..." என்று நீளமாக ஊளையிடும்.

அதிகாலையில் எல்லோரும் உறங்கிக்கொண்டிருக்கும் 'பஜர்' நேரத்திலும், இரவில் 'இஷா' தொழுகை நேரத்திலும் ஊளையிடத் தவறியதில்லை. மசூதியில் அஸான் சொல்லி முடிக்கும் வரை, அந்த நாயும் ராகத்துடன் கத்திக்கொண்டே இருக்கும்.


தெருவாசிகளுக்கு நாயின் சத்தத்தைக் கேட்டுப் பழக்கமாகிவிட்டது. அமைதியான நேரங்களில், அஸான் சத்தமும், நாயின் ஊளைச் சத்தமும் சேர்ந்து அந்தப் பகுதியில் விசித்திரமான சூழலை உருவாக்கியிருந்தன. நானா சாஹிப் நாயின் செய்கையைக் கண்டு வியந்து போவார்.


நாட்கள் செல்லச் செல்ல அந்த நாயின் செய்கை நானா சாஹிப்புக்கு எரிச்சலைத் தந்தது. “இந்த நேரத்தில் ஏன் இப்படிக் கத்துகிறது?" என்று கோபப்படுவார். அதை விரட்டியடிக்க மொட்டை மாடியில் இருந்து கல் எறிவது போலக் கையை உயர்த்துவார். ஆனால் அந்த நாய் மிகவும் புத்திசாலி. அவர் கையில் நிஜமான கல் இல்லை என்பதை இரண்டு மூன்று நாட்களில் புரிந்துகொண்டது.


இப்போதெல்லாம் நானா சாஹிப் கையை உயர்த்தினால், அது வாலை ஆட்டிக்கொண்டு விளையாடத் தொடங்கிவிடும். ‘இன்னும் கல் எறியுங்கள்’ என்று கேட்பது போலத் துள்ளிக் குதிக்கும்.

ஒரு நாள் இரவு, நானா சாஹிப் உடல்நலக் குறைவால் சீக்கிரமே தூங்கிவிட்டார். சற்று நேரத்தில் அஸான் சத்தம் கேட்டது போல உணர்ந்து திடீரென விழித்துக்கொண்டார். சுற்று முற்றும் கவனித்தார். மசூதியில் அஸான் ஒலிப்பதற்கு முன்பே நாய் குரைத்துக் கொண்டிருந்தது. தனது 30 வருடப் பழைய கடிகாரத்தைப் பார்த்தார். அஸான் சொல்ல வேண்டிய நேரம்தான் என்று புரிந்தது. நாயை எண்ணி வியப்பாகவும்  இருந்தது. மசூதியில் மின்சாரம் தடைபட்டதால் ஒலிபெருக்கி வேலை செய்யவில்லை போலும். ஆனால் அந்த நாயின் குரைப்புச் சத்தம் தொழுகை நேரத்தை ஞாபகப்படுத்தியது. 


அன்று மதியம், ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்தது. அந்த நாய், நானா சாஹிப்பைப் பின்தொடர்ந்து மசூதிக்குள் வந்துவிட்டது. அப்போதுதான் மசூதியின் தரை தளத்தில் புதிதாகச் சிமெண்ட் பூச்சு பூசியிருந்தார்கள். நாய் உள்ளே நுழைந்ததும் அங்கிருந்தவர்கள் சத்தமிட்டு அதைத் துரத்தினர். நானா சாஹிப்பும் வழக்கம்போலக் கல்லை எறிவது போலக் கையை மடித்துக் காட்டி விரட்ட முயன்றார்.


அங்கிருந்த ஒரு சிறுவன், கல்லை எடுத்து நாயின் முதுகில் எறிந்தான். நாய் வலியால் அலறிய சத்தம் மசூதி முழுவதும் எதிரொலித்தது.


இதைக் கண்ட நானா சாஹிப்புக்கு கோபம் வந்தது. "ஏய் தம்பி! ஏன் இப்படிச் செய்தாய்?” என்று கத்தினார். எப்போதும் நாயைத் திட்டிக்கொண்டிருந்தவர், இன்று அது அடிபட்டதும் துடித்துப்போனார். சட்டெனக் கீழே பார்த்தவர், ஈரமான சிமெண்ட் தரையில் பதிந்த நாயின் கால் தடங்களைச் சரிசெய்து மறைக்க முயற்சி செய்தார். 


அதன் பிறகு, அந்த நாய் எதிர் வீட்டு மொட்டை மாடிக்கு வருவதே இல்லை. நாய் காணாமல் போனது, நானா சாஹிபுக்குக் கவலையைத் தந்தது. வெளியே "நாயின் ஊளைச் சத்தம் கேட்காததால் நிம்மதி" என்று சொன்னாலும், அவரது உள்ளமும், கண்களும் நாயைத் தேடி அலைந்தன. அதன் குறும்புத்தனமும், வாலாட்டும் அழகும் அவருக்குப் பழகிப்போயிருந்தது. மாலையிலும், இரவிலும் நாயின் சத்தம் கேட்கவே இல்லை.


மறுநாள் காலையில் மசூதிக்குச் சென்றபோது, புதிய சிமெண்ட் தரை நன்றாகக் காய்ந்திருந்தது. ஆனால் ஒரு மூலையில், நாயின் சிறிய கால் தடம் மட்டும் இன்னும் லேசாக் கண்ணுக்குத் தெரிந்தது. அதை நாயின் கால் தடம் என்பதை விட, அது விட்டுச் சென்ற அன்பின் அடையாளமாக உணர்ந்தார். 


மசூதிக்குள் வந்து செல்பவர்கள், நாயின் கால் தடத்தைப் பார்த்தால் கோபப்படுவார்கள் என்று நானா சாஹிப் பயந்தார். அப்போது ஒருவர் அவருக்கு “ஸலாம்” சொன்னபோது, அவசர அவசரமாகத் தனது காலால் அதை மறைத்துக்கொண்டார். நாயின் கால் தடம் உலகிற்குத் தெரியாமல் போயிருக்கலாம். ஆனால் அது, நானா சாஹிபின் பாதங்களுக்கு அடியில் பத்திரமாக இருந்தது.

மனதுக்குள் நாயின் குறும்பை நினைத்து, "நீ, போக்கிரிக் கழுதை" என்று முணுமுணுத்தபடி தண்ணீர்க் குழாயைத் திறந்தார். கைகளை நனைக்கும்போது, அவரது கண்கள் நாயின் நினைவால் சில சொட்டுக் கண்ணீர் சிந்தின.


கொ.மா.கோ.இளங்கோ
கொ.மா.கோ.இளங்கோ

எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page