top of page

சிரியாவின் மகள்

மைத்ரேயி குல்கர்னி

தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ



துருக்கி நாட்டின் ‘இஸ்தான்புல்’ விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பயணிகள் எல்லோரும் கைகளில் இருந்த பயணச்சீட்டுகளைப் பதற்றத்துடன் பார்த்தபடி, விமானம் நிற்கும் நுழைவாயில்களை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள். "விமானங்கள் தாமதமாகும்..." என்ற அறிவிப்பு இடைவிடாது ஒலித்து, அங்கிருந்தவர்களின் பதற்றத்தை இன்னும் அதிகரித்தன.


நான் விமான நிலையத்துக்கு வந்து சுமார் ஏழு மணி நேரம் ஆகிவிட்டது. மெல்ல மெல்ல எனக்கு ஒரு கசப்பான உண்மை புரியத் தொடங்கியது. இன்று எனக்கு விமானத்தில் இடம் கிடைக்கப் போவதில்லை. அடுத்த விமானம் இன்னும் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குப் பிறகுதான் கிளம்பும். இந்தப் பயணம் தொடங்கியதிலிருந்தே ஏதோ ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்தது. 

இந்தப் பயணத்தின் தொடக்கமே ஒரு போராட்டமாகத்தான் இருந்தது. இஸ்தான்புல் வருவதற்கு முன்பே, கிளம்ப வேண்டிய நாளில் வீட்டில் ஒரு சிறிய விபத்து. அவசரமாக மருத்துவமனைக்குச் சென்று திரும்பியதில் பாதி நேரம் போனது. அதன் பிறகு, விமான நிலையத்திற்கு வரும் வழியில் முன்னெப்போதும் இல்லாத ஒரு போக்குவரத்து நெரிசல். ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தி ‘இந்தப் பயணம் இப்போது வேண்டாம்’ என்று என்னைத் தடுப்பது போலவே எனக்குத் தோன்றியது.


பயணக் களைப்பில், உடல் முழுவதும் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல வலியெடுத்தது. கையில் துருக்கி நாட்டு விசா (Visa) இல்லாததால், விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லவும் வழியில்லை. இந்த இருபத்தி நான்கு மணி நேரம் என்பது வெறும் நேரமல்ல, அது ஒரு பெரும் சுமை. தங்குவதற்கு ஒரு விடுதி தேட வேண்டும் அல்லது இந்த இருக்கையிலேயே இரவைக் கழிக்க வேண்டும். நான்கு சுவர்களுக்குள் இன்னும் ஒரு முழு நாளைக் கழிக்க வேண்டும் என்று நினைத்தாலே சலிப்பும், பயமும் சூழ்ந்து கொண்டது.


துரதிர்ஷ்டவசமாக அலைபேசியின் பேட்டரியும் தீர்ந்துவிட்டது. வீட்டில் உள்ள அப்பா, அம்மாவிற்கு நான் பத்திரமாக இருக்கிறேன் என்று ஒரு தகவல் சொல்லக்கூட வழியில்லை. விமான நிலைய வை-பை (Wi-Fi) வேலை செய்யவில்லை. ஒரு பெரிய கூட்டத்திற்கு நடுவே தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன். சுற்றிப் பார்த்தேன். அங்கே என்னைப் போலவே பல முகங்கள். சிலர் தரையில் படுத்திருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை. ஒவ்வொருவருக்கும் ஒரு அவசரம். நீண்ட யோசனையில் ஆழ்ந்தேன். 


விமான நிலையத்தின் குளிரூட்டப்பட்டக் காற்று உடலைத் தழுவினாலும், உள்ளுக்குள் ஒருவித வெப்பம் தகித்துக் கொண்டே இருந்தது. கையில் இருந்த பையை இறக்கி வைத்துவிட்டு, அங்கிருந்த ஒரு கண்ணாடிச் சுவரோரம் உட்கார்ந்தேன். 


அப்போது எனக்குத் தாகம் தொண்டையை அடைத்தது. தண்ணீர் பாட்டிலை எடுத்துப் பார்த்தேன். அதில் ஒரு சொட்டு கூட இல்லை. அருகில் இருந்த ஒரு சிறிய கஃபேவுக்குச் சென்று ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்தேன். ஆனால், அங்கே என் ஏ.டி.எம் கார்டுகள் எதுவுமே வேலை செய்யவில்லை. கையில் ரொக்கப் பணமும் இல்லை. 


‘பரவாயில்லை. தண்ணீர் குடிக்காமலேயே இன்னும் ஒரு நாள் இருந்துவிடலாம்’ என்று என்னையே சமாதானப்படுத்திக் கொண்டு, அந்தப் பாட்டிலை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டுத் திரும்பினேன். ‘ஏன் இந்தப் பயணத்திற்கு இந்த நாளைத் தேர்ந்தெடுத்தோம்?’ என்று மனதிற்குள் என்னையே திட்டித் தீர்த்தேன். பிறகு ஓரிடத்தில் சென்று உட்கார்ந்தேன். 


அப்போது, என் தோள் மீது ஒரு கை பட்டதை உணர்ந்தேன். திரும்பிப் பார்த்தேன். தேவதையைப் போல ஓர் இளம்பெண் நின்றிருந்தாள். அவள், உடல் முழுவதையும் மறைத்த வெள்ளை நிற உடை அணிந்திருந்தாள். அவளது கண்கள் கருணையால் நிறைந்து இருந்தன. அவளது புன்னகையில் எனது களைப்பு ஒரு கணம் மறைந்து போனது.


அவள், கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை என்னிடம் நீட்டி, "இதை எடுத்துக் கொள்ளுங்கள், இது உங்களுக்காகத்தான்" என்று ஆங்கிலத்தில் சொன்னாள்.


எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. "மிக்க நன்றி" என்று சொல்லிவிட்டு ஒரு மடக்குக் குடித்தேன். அந்த ஒரு மிடறு தண்ணீர் என் தொண்டையை மட்டுமல்ல, என் உள்ளத்தையும் குளிர்வித்தது. 


நான் அவளோடு சென்று அமர்ந்தேன். அவளுக்கு அருகில் ஒரு சிறிய குழந்தை. அந்தக் குழந்தையின் கண்கள், அதிகாலையில் மலரும் மொட்டுகளைப் போல அழகாக இருந்தன.


"நீங்கள் எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டேன்.

சிறிய அமைதிக்குப் பிறகு, "நான் சிரியாவிற்குப் போகிறேன்... என் பெற்றோரைப் பார்க்க" என்றாள் அவள். 


'சிரியா' என்ற பெயரைப் கேட்டதுமே என் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. ‘யுத்தம் கொழுந்துவிட்டு எரியும் அந்த நரகத்திற்கு இப்போது ஏன் போகிறாள்?’ என்று நான் மனதுக்குள் நினைத்ததை அவளது கண்கள் கண்டுகொண்டன.


"என் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை. அவர் அங்கே தனியாக இருக்கிறார். நான் போனால் அவருக்கு ஏதாவது உதவி செய்ய முடியும்" என்று அமைதியாகச் சொன்னாள். அவள் குரலில் மரணத்தைப் பற்றிய பயமில்லை. அம்மாவைப் பார்க்கத் துடிக்கும் ஒரு மகளின் பேரன்பு மட்டுமே இருந்தது.


தொடர்ந்து அவள் பேசினாள். அவளது ஊருக்கு அருகில் உள்ள நகரங்களில் எல்லாம் போரின் உக்கிரம் தாள முடியாத அளவிற்கு இருப்பதாகவும், வானிலிருந்து பறந்து வரும் ட்ரோன்கள் அடுக்குமாடி கட்டடங்களைத் தூசியாக்கும் காட்சிகளைப் பார்த்ததாகவும் விவரித்தாள். அன்புக்குரியவர்களைப் போரில் பறி கொடுத்துவிட்டு, இடிபாடுகளுக்கு நடுவே மக்கள் கதறும் ஓலச் சத்தம் அங்கே அன்றாட நிகழ்வாகிவிட்டது என்றாள்.


"அம்மா இருக்கும் ஊர் இப்போதைக்கு அமைதிதான். ஆனால் எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. வீட்டை விட்டு வெளியே அடியெடுத்து வைப்பதே ஆபத்து. விமானம், டாக்ஸி, பேருந்து என எதிலுமே பாதுகாப்பு இல்லை. ஆனாலும் நான் போக வேண்டும்..." என்று சொல்லும்போது, அவளது கண்களில் தைரியம் தெரிந்தது.


அவளது துயரத்தோடு ஒப்பிடும்போது, என் விமானம் தாமதமானதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று எனக்குத் தோன்றியது. இன்னும் இருபத்தி நான்கு மணி நேரம் கழித்து நான் மும்பை சென்றால், அங்கே எனக்காக ஒரு டாக்ஸி காத்திருக்கும். வீட்டின் கதவைத் திறந்ததும் அப்பா அணைத்துக் கொள்வார். அம்மா எனக்குப் பிடித்த அவல் உப்புமா செய்து வைத்திருப்பார். எனது உலகம் பாதுகாப்பானது.


ஆனால் இந்தப் பெண்? கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு, எப்போது குண்டு விழும் என்று தெரியாத ஒரு போர்க்களத்திற்குள் துணிச்சலோடு நுழையப் போகிறாள். இவ்வளவு பெரிய கவலையைச் சுமந்து கொண்டு, எனக்குத் தண்ணீர் கொடுத்து உதவிய பெருந்தன்மை என்னை நிலைகுலையச் செய்தது.


சில நாட்களுக்குப் பிறகு நான் இந்தியா திரும்பினேன். செய்திகளில் சிரியாவில் போர் தீவிரமடைந்த செய்திகள் வந்தன. இடிந்து விழும் வீடுகளையும், எரியும் வீதிகளையும் தொலைக்காட்சியில் பார்த்தபோது, அந்தப் பெண்ணின் முகமும், அவளது குழந்தையின் அழகான கண்களுமே நினைவுக்கு வந்தன.


அவளைப் போல எத்தனையோ மகள்கள் தன் பெற்றோருக்காகவும், எத்தனையோ தாய்கள் பிள்ளைகளுக்காகவும் தவித்துக் கொண்டிருப்பார்கள். 


போர் என்பது வெறும் நிலப்பரப்பைக் கைப்பற்றுவது அல்ல. ஆயிரக்கணக்கானோரின் அன்பையும், எதிர்பார்ப்பையும், வாழ்வையும் சிதைப்பது என்பதை மிக நெருக்கமாக உணர்ந்தேன்.

போரைப் பற்றிய கதைகள் எல்லாமே வேதனையானவைதான். இப்போது அவளைத் தொடர்புகொள்ள என்னிடம் எந்த வழியும் இல்லை.


ஆனால், எனது தோழி, அந்தச் சிரியாவின் மகள்  குடிக்கத் தந்த ஒரு மிடறு தண்ணீர், வாழ்நாள் முழுதும் மனதை ஈரம் குறையாமல் வைத்திருக்கும்.


கொ.மா.கோ.இளங்கோ
கொ.மா.கோ.இளங்கோ

எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page