top of page

சீனா பாடாவின் ஆபக்

இந்தியில்: ஃபயாஸ் அகமது தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ



தினமும் காலையில் சில பழக்கமான சத்தங்களைக் கேட்டுத்தான் எனது கண்கள் திறக்கும். தூக்கம் வழியும் கண்களைத் துடைத்துக்கொண்டு, கையில் வாளியைத் தூக்கிக் கொண்டு தெருமுனைப் பொதுக் குழாய்க்கு ஓடுவேன். அங்கே மனிதர்களின் நீண்ட வரிசை ஒரு பாம்பைப் போல வளைந்து நெளிந்து நிற்கும். 


அதைப் பார்ப்பதற்கே வேடிக்கையாக இருக்கும்!  எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு மனிதர் வசித்தார். சுற்றி இருப்பவர்கள் அவரை 'ஆபக்' என்று அழைப்பார்கள். அந்தப் பெயர் எனக்கு மிகவும் விசித்திரமாகத் தோன்றும். ‘ஒரு இந்தியருக்கு எப்படி இப்படி ஒரு பெயர் இருக்க முடியும்?’ என்று நான் அடிக்கடி யோசிப்பேன்.


நான் நினைத்தது சரியாகத்தான் இருந்தது. உண்மையில், ஆபக் இந்தியர் அல்ல. அவர் சீன நாட்டைச் சேர்ந்தவர். நான் குடியிருந்த அதே கட்டிடத்தில்தான் அவரும் வசித்தார். 


எங்கள் பகுதியில் தண்ணீருக்குப் பெரும் தட்டுப்பாடு இருந்தது.  தெருவோரக் குழாயில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தண்ணீர் பிடிப்பார்கள். வழிப்போக்கர்கள், ரிக்‌ஷா ஓட்டுநர்கள், தள்ளுவண்டி இழுப்பவர்கள் என எல்லோரும் அங்கேதான் வருவார்கள்.


கொல்கத்தாவில், நாங்கள் வசித்த பகுதியில் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். அங்கு வசிப்பவர்கள், பொதுவாக அவர்களைச் 'சீனா' என்று கூப்பிடுவார்கள். அதனால்தான் அந்த இடத்திற்கு 'சீனா பாடா' (சீனா குடியிருப்பு) என்று பெயர் வந்தது.


சீன மக்களுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் எங்களது வீட்டருகில் தாராளமாகக் கிடைக்கும். சீன நாட்டவருக்கு வீடுகள், ஹோட்டல்கள், கடைகள், பள்ளிக்கூடம் என எல்லாமே அங்கு உண்டு. அவர்களுக்கு ஒரு கோயிலும் இருந்தது. ஆனால், சில வியாபாரிகள் சேர்ந்து அந்தக் கோயிலை ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு மாற்றிவிட்டார்கள்.


கீழே கோயில் இருந்த இடத்தை ஒரு பாதுகாப்புக் கிடங்காக மாற்றிவிட்டார்கள். சாமி கும்பிடும் இடத்தை இப்படி மாற்றிவிட்டார்களே என்று யாரும் சண்டை போடவில்லை. 


அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போது எனக்குச் சிறு வயது என்பதால் அது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஆனால், இப்போது நினைத்துப் பார்க்கும்போது அது ஒரு குழப்பமான விஷயமாகத் தெரிகிறது.


ஆபக் ஒரு சீனக்காரர். மொட்டை மாடிக்கு மாற்றப்பட்ட அந்தக் கோயிலின் படிக்கட்டுகளுக்குக் கீழே இருந்த ஒரு சிறிய இடத்தில்தான் அவர் தங்கியிருந்தார். 


அதிகாலையிலேயே அவர் சத்தமாகப் பேசத் தொடங்கிவிடுவார்.


“நீ சீனா, உன் அப்பா சீனா, உன் குடும்பமே சீனா” என்று அவர் சொல்லும்போது புருவங்கள் கோபத்தில் சுருங்கும், முகம் சிவக்கும். இதற்கெல்லாம் காரணம் ‘தபாரக் அலி' என்பவர்தான்.


தபாரக் அலியும் எங்கள் குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர் தான். அவர் ஆபக்கை அடிக்கடி சீண்டிப் பார்ப்பார். சும்மா இருக்காமல், “ஏய் ஆபக்! நீ ஒரு சீனாக்காரன்” என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார். அவ்வளவுதான், ஆபக்கிற்குப் பயங்கர கோபம் வந்துவிடும். இருவருக்கும் இடையே பெரிய சண்டை நடக்கும்.


இது தினமும் நடக்கும் ஒரு விஷயம். “நீ ஒரு சீனாக்காரன்” என்று தபாரக் அலி சொல்வது, ஆபக்கிற்கு ஒரு கெட்ட வார்த்தையை விட அதிக வலியைத் தரும். அந்த வேதனை அவர் முகத்திலேயே தெரியும். அவர் கோபத்தில் துடிப்பார். அருகில் நிற்பவர்கள் இதை ஒரு வேடிக்கையாகப் பார்த்துச் சிரிப்பார்கள். அவர் திட்டிக் கொண்டே குழாயில் தண்ணீர் பிடித்துவிட்டு, வேகமாகத் தன் வீட்டிற்குள் சென்றுவிடுவார்.


அவர் தங்கியிருந்த இடத்தை ஒரு 'வீடு' என்று சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. மாடிக்குச் போகும் படிக்கட்டுகளுக்குக் கீழே இருந்த அந்தச் சிறிய இடம்தான் அவருடைய உலகம்.


ஆபக், சண்டை போட்டு ஓய்ந்த பிறகு, சில அலுமினியக் கம்பிகளை எடுத்துப் பறவைக் கூண்டுகள் செய்யத் தொடங்குவார்.  அவர் தன் மனதில் உள்ள கவலைகளை எல்லாம் அந்தக் கம்பிகளை வளைப்பதன் மூலமே தீர்த்துக் கொள்வார் போலத் தோன்றும். கோயிலைப் பாதுகாப்பதும், கூண்டுகள் செய்வதும்தான் அவருடைய வேலை. கோயிலுக்கு வரும் மக்கள், அன்போடு ஏதாவது கொடுத்தால் வாங்கிக் கொள்வார். ஆனால், அவர் யாரிடமும் பிச்சை கேட்க மாட்டார்.


ஆபக் தயாரிக்கும் கூண்டுகள் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். மக்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்து ஆசையோடு வாங்கிச் செல்வார்கள். அவருக்கு நிறையப் பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் கிடையாது. அன்றைய சாப்பாட்டிற்குப் பணம் கிடைத்தால் போதும் என்று நினைப்பார். 


கொல்கத்தாவில் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை. அவருடைய அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, மனைவி மற்றும் குழந்தைகள் என எல்லாரும் சீனாவில் இருந்தார்கள். பாவம், அவரால் யாரையும் போய்ப் பார்க்க முடியாது. அங்கிருந்து யாரும் இவரைத் தேடி வரவும் முடியாது.


உண்மையில் ஆபக் ஒரு போர்க்கைதி. 1962 இல் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே போர் நடந்தது. மற்ற போர்களைப் போலவே இதிலும் நிறைய பேர் உயிரிழந்தார்கள். இரண்டு நாடுகளுக்கும் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. போரில் சில வீரர்கள் கைதிகளாகப் பிடிக்கப்பட்டார்கள். சீன வீரராகச் சண்டை போட்ட ஆபக்கையும் இந்திய வீரர்கள் பிடித்துவிட்டார்கள். 


போர் முடிந்த பிறகு, இரண்டு நாடுகளும் கைதிகளைத் திருப்பி அனுப்பினார்கள். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் ஆபக் மட்டும் தன் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியவில்லை. அவரே இதைச் சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும்.


ஆபக்கைப் போலவே கொல்கத்தாவிலேயே தங்கிவிட்ட சீன வீரர்கள் இன்னும் பலர் இருந்தார்கள். சீன அரசாங்கம் அவர்களைத் திரும்பக் கூப்பிட எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஒருவேளை முயற்சி செய்திருந்தாலும், அதன் பலன் ஆபக் போன்ற ஏழை வீரர்களுக்குக் கிடைக்கவில்லை.

 

தபாரக் அலி கிண்டல் செய்யும்போது ஆபக் யாரைத் திட்டியிருப்பார்? தன் நாட்டு அரசாங்கத்தையா, தன் நாட்டு மக்களையா? தன் குடும்பத்தையா? தெரியவில்லை. ஆபக் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தாலும், அவரால் கொல்கத்தாவை விட்டு வெளியே எங்கும் போக முடியாது.


கடந்த முப்பது வருஷங்களாக, ஆபக் கடையில் இருந்து கம்பிகளை வாங்கி வருகிறார். நாள் முழுவதும் உட்கார்ந்து பொறுமையுடன் பறவைக் கூண்டுகள் செய்து கொண்டிருப்பார். களைப்பாக இருந்தால் சுவரில் சாய்ந்தபடி அப்படியே ஒரு குட்டித் தூக்கம் போடுவார். இதுதான் அவருடைய தினமும் நடக்கும் வாழ்க்கை.


ஆபக்கைப் பார்க்கும்போது எனக்கு இந்திய 'ஆபக்'களின் ஞாபகம் வருகிறது. சீனாவின் ஏதோ ஒரு ஊரில், ஏதோ ஒரு தெருக் குழாயடியில், இந்திய வீரர்கள் யாராவது தண்ணீர் பிடித்துக்கொண்டிருப்பார்கள். அங்கே இருக்கும் ஒரு சீனக்காரர் அவர்களைக் கிண்டல் செய்யும்போது, அவர்கள் முகமும் இதேபோலக் கோபத்தில் சுருங்கும். அதில் ஒருவர் காலையில் எழுந்ததும் சத்தமாகப் பேசுவார். 


“நீ இந்தியன், உன் அப்பா இந்தியன், உன் குடும்பமே இந்தியன்”

கொ.மா.கோ.இளங்கோ
கொ.மா.கோ.இளங்கோ

எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page