top of page

கடல்பச்சை நிறக் குடை

இந்தி: வருண் குரோவர்  தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ 



நான் கடலைப் பார்த்ததே இல்லை. அதேபோல எனக்கென்று தனியாக ஒரு குடையும் இருந்ததில்லை. வாழ்வில் எனக்குக் கிடைத்த முதல் குடை கடல்பச்சை நிறத்தில் இருந்தது. அந்தப் பச்சை நிறம் வெறும் நிறமல்ல. நான் பார்த்திராத மகாசமுத்திரத்தின் ஒரு துளி எனக்குக் கிடைத்தது போல உணர்ந்தேன். பிடித்த நிறத்தில் குடை கிடைத்ததில் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தேன். பொதுவாகக் குடை அதிக விலையுள்ள  பொருள் இல்லை. ஆனால், நாங்கள் அதை வாங்கியபோது, அது எங்களுக்குப் பெரிய சாதனையாகவும், மதிப்புடையதாகவும் இருந்தது.

எனக்கு ஒன்பது வயதாக இருக்கும்போது டேராடூனில் இருந்த ராணுவப் பள்ளியில் படித்து வந்தேன். வீடு, பள்ளியிலிருந்து வெகு தொலைவில் இருந்தது. தினமும் அரை கிலோமீட்டர் நடந்து பேருந்து நிறுத்தத்துக்குச் செல்வேன். 


அங்கு ‘சக்திமான்’ என்ற ராணுவ லாரி வரும். அதில் ஏறுவது ஒரு போர்க்களத்தில் குதிப்பதைப் போன்ற சவாலானது. படிக்கட்டுகள் இல்லாத லாரியின் விளிம்பைப் பிடித்துத் தொங்கியபடிதான் ஏற வேண்டும். சில நேரங்களில் உள்ளிருக்கும் வீரர்கள் எங்களை வாரித் தூக்கி உள்ளே விடுவார்கள். எல்லாச் சிறுவர்களுக்கும் இந்தச் சாகசம் மிகவும் பிடிக்கும். 

பள்ளிக் காலத்தில் டேராடூனில் மழை கொட்டித் தீர்க்கும். உலக வெப்பமயமாதல் சிக்கல்கள் அப்போது கிடையாது. மழை எப்போது வரும், குளிர் எப்போது குறையும் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும். 


ஜூலை மாதத்தில் பள்ளி திறந்தபோது மழை பெய்வதற்கான அறிகுறிகள் தெரிந்தன. சென்ற ஆண்டு வரை, நான் பயன்படுத்திய மழைக்கோட்டு சிறியதாகிப் போனது. அதன் பிறகு, எனக்கு அந்தக் குடை கிடைத்தது.


பெற்றோரிடம் பணம் இருக்கிறதா இல்லையா என்ற கவலை எனக்கு இருந்ததில்லை. ஆனால் குடை ஒரு விலை உயர்ந்த பொருள் என்று எனக்குத் தெரியும்.


குடை மிகவும் அழகாக இருந்தது. அதுபோலப் பச்சை நிறத்தை நான் பார்த்ததே இல்லை. மழையில் நனைந்தால் கூட பரவாயில்லை, ஆனால் குடையைத் திறந்தால் அழுக்காகி விடுமோ என்று கவலை அடைந்தேன்.  முதல் நாள் பள்ளிக்கு எடுத்துச் சென்றபோது பெருமையாக இருந்தது. ஆனால் யாராவது திருடிவிடுவார்களோ என்ற பயமும் இருந்தது.


மூன்றாம் நாள், லாரியிலிருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து செல்லும்போது அந்தச் சம்பவம் நடந்தது. பையைத் தடவிப் பார்த்ததும் இதயத் துடிப்பு நின்றது போல உணர்ந்தேன். 


ஐயோ! ஆசையாசையாகப் பாதுகாத்து வைத்த குடையைக் காணவில்லை. லாரியில் விட்டுவிட்டேனா? வகுப்பிலேயே மறந்து வைத்துவிட்டேனா? வீட்டிலிருந்து எடுத்து வந்தேனா? என்று நூறு கேள்விகள் மனதில் எழுந்தன. 


கொஞ்ச நேரம் தீவிரமாக யோசித்தேன். குடையைப் பள்ளிக்கு எடுத்து வந்தது ஞாபகம் வந்தது. வகுப்பில் ஒரு நண்பன் அதைப் 'கடல்பச்சை நிறக் குடை’ என்று பாராட்டியது நினைவுக்கு வந்தது.

நான் இமாச்சல், டேராடூனைத் தவிர வேறு எங்கும் சென்றதில்லை. கடல் எப்படி இருக்கும் என்றும் எனக்குத் தெரியாது. கடல்பச்சை நிறக் குடையை எங்கே தேடுவது? வீட்டில் என்ன சொல்வது?

பல குழப்பங்களுக்கு நடுவே வீட்டிற்குச் சென்றேன். அம்மாவிடம் உண்மையைச் சொல்லப் பயந்து, ஏதோ உளறினேன். 


"அம்மா, பள்ளியில் ஒரு பெரிய பையன் என் குடையைப் பறித்துக்கொண்டான்" என்றேன். அம்மா திகைப்புடன் பார்த்தார்.  எனது தொண்டை வறண்டது. கைகள் நடுங்கின. ஆனால் சொன்ன பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னேன். அம்மா என்னைத் துருவித் துருவி விசாரித்தார். 

"உணவு இடைவேளையில், பெரிய வகுப்பு பையன், என்னைத் தள்ளிவிட்டு குடையைப் பிடுங்கிக்கொண்டு போனான். அவன் மிரட்டியதால் நான் யாரிடமும் சொல்லவில்லை" என்று சினிமா கதையைப் போல பொய் சொன்னேன். அம்மா என் கதையை நம்பிவிட்டார்.


மறுநாள் எனக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிக்கு வந்து, தலைமை ஆசிரியரிடம் புகார் செய்யப்போவதாக அம்மா சொன்னார். நாங்கள் பள்ளிக்குச் சென்றோம். அம்மா, தலைமை ஆசிரியரிடம் நடந்ததை விவரித்தார். தலைமை ஆசிரியர் என்னிடம் அந்தப் பையனின் வகுப்போ, பெயரோ தெரியுமா என்று கேட்டார். எனக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டேன். "இது ஒரு குற்றம், இதைச் சும்மா விடக்கூடாது" என்று அவர் விசாரணையைத் தொடங்கினார்.


முதலில் அவர், எனது வகுப்புக்கு வந்து சம்பவம் எங்கே நடந்தது என்று கேட்டார். மற்ற மாணவர்களிடம் விசாரித்தார். யாரும் குடையைப் பார்க்கவில்லை என்றார்கள். சாட்சிகள் இல்லை. தலைமை ஆசிரியர் இதோடு நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர் திருடனைக் கண்டுபிடிக்க முடிவு செய்து, ஒவ்வொரு வகுப்பிற்கும் என்னை அழைத்துச் சென்றார். ஒவ்வொரு வகுப்பாக நுழைந்து, என்னை விட உயரமாக இருந்த பையன்களை அடையாளம் காட்டச் சொன்னார். 


எனக்கோ உடல் நடுக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உண்மையைச் சொன்னால் அவமானப்பட நேரிடும் என்ற பயம் ஒருபுறம் இருந்தாலும், யாரென்றே தெரியாத ஒருவனைத் திருடனாகச் சித்தரித்தல் தவறு என்று எனக்குள் குற்ற உணர்வு பெருகியது. நிரபராதியான யாரையாவது கை காட்டிவிடுவேனோ என்ற பயம், குடை தொலைந்த துக்கத்தை விடப் பெரியதாக இருந்தது.  


மூன்று மணி நேர அலைச்சலுக்குப் பிறகு தலைமை ஆசிரியர் களைத்துப் போனார். எனக்கும் சரியாக நினைவில்லை என்று கூறி தப்பித்தேன். ஆனால் மனதில் ஒரு திருடனின் முகத்தை நானே கற்பனை செய்திருந்தேன். 


அடுத்த மழைக்காலத்தில், அப்பா எனக்கொரு மழைக்கோட்டு வாங்கித் தந்தார். அது கடல்பச்சை நிறமில்லை. யாரும் அதிகம் விரும்பாத காக்கி நிறம்.

 

நாட்கள் நகர்ந்தன. குடை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக மறந்திருந்தோம்.  ஒரு வருடம் கழிந்தது. நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது, ஒருநாள் பள்ளியின் பழைய அறை திறக்கப்பட்டதாகச் செய்தி வந்தது. அங்கே பல பழைய பொருட்கள் கிடைத்தன. ஒரு ஆசிரியர், தூசு படிந்த ஒரு குடையைக் கொண்டு வந்து நீட்டினார். அடுக்குத் தூசுகளுக்கு இடையில் 'கடல்பச்சை' நிறம் பளிச்சென்று தெரிந்தது.


அதைப் பார்த்ததும் எனக்கு பயமும் குழப்பமும் அதிகரித்தது. தலைமை ஆசிரியர் என்னையே உற்றுப் பார்த்தார். 


மாலையில் வீடு திரும்பியதும் அழுதுகொண்டே எல்லா உண்மையையும் அம்மாவிடம் சொன்னேன். எப்படி குடை தொலைந்தது? அதை மறைக்க எப்படிப் பொய் சொன்னேன் என்று விளக்கினேன். அதற்காக நிறைய திட்டுக்களும், சில அடிகளும் கிடைத்தன. அதை நான் தகுந்த தண்டனையாகவே ஏற்றுக்கொண்டேன். மறுநாள் பெற்றோர் பள்ளிக்கு வந்து மன்னிப்பு கேட்டனர்.


ஒரு வருடம் கழித்து, அந்தக் குடை கைக்கு வந்தபோது அதன் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அது சரியாகத் திறக்கவில்லை. மழையிலிருந்து யாரையும் காக்கின்ற வலிமையை அந்தக் குடை இழந்திருந்தது. ஆனால் கடல்பச்சை நிறம் மட்டும் மாறாமல் அப்படியே இருந்தது. 


குடை இப்போது மழையிலிருந்து என்னைக் காக்கவில்லைதான். ஆனால் எனது இளமைக் காலத்தின் ஒரு பொய்யையும், அதன் மூலம் நான் கற்றுக்கொண்ட கசப்பான உண்மையையும் பாதுகாத்து வைத்திருந்தது.  அதுவரை நான் பார்க்காத, கற்பனை செய்திராத கடலைப் போல கண்முன்னே விரிகிறது.


கொ.மா.கோ.இளங்கோ
கொ.மா.கோ.இளங்கோ

எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page