கௌதுக்
- கொ மா கோ இளங்கோ

- 3 days ago
- 4 min read
இந்தி: மானவ் கௌல் தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ

அம்மாவுடன் புதிய ஊருக்கு மாறிவந்ததும் கௌதுக்க்கு எல்லாமே புதிராக இருந்தது. அந்நிய மனிதர்களின் கண்கள், அறிமுகம் இல்லாத பறவைகளைப் பார்ப்பது போல அவளைப் பார்த்தன. ஒவ்வொரு வீட்டின் சன்னல் திரைக்குப் பின்னாலும் ஏதோ ரகசியம் ஒளிந்திருப்பது போலத் தோன்றியது.
கௌதுக்கின் அம்மாவுக்கோ மகளைச் சீக்கிரம் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்கிற பதட்டம். பள்ளியில் சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பும்போது அவசரத்தில் அவர் ஒரு தவறு செய்தார். மகளின் முழுப் பெயரை எழுத மறந்துவிட்டார். வெறும் 'கௌதுக்' என்று மட்டும் எழுதினார். ஒரு சிறு தவறு, மகளின் அடையாளத்தையே மாற்றிவிடும் என்று அப்போது அவருக்குத் தெரியாது. அன்று முதல், பள்ளியின் பதிவேடுகளில் அவள் வெறும் 'கௌதுக்'காகவே ஆகிப்போனாள்.
வகுப்பாசிரியர், மாணவர்களின் பெயரை அழைக்கும்போது, பெயருக்குப் பின்னால் இருக்கும் முழுப்பெயரையும் சேர்த்து அழைப்பார். எல்லோருக்கும் தந்தையின் பெயரோ, குலப்பெயரோ ஒரு நிழலைப் போலத் தொடர்ந்து வரும். ஆனால் கௌதுக்கின் முறை வந்தபோது ஆசிரியர் தடுமாறினார்.
"கௌதுக்!" என்று அழைத்துவிட்டு, அதற்குப் பின்னால் இன்னும் ஏதேனும் மிச்சமிருக்கிறதா என்று தாள்களைத் தேடிப் பார்த்தார். அந்தப் பெயர் முழுமையடையாமல் இருப்பதை உணர்ந்த ஆசிரியர், மறுபடியும் உறுதிப்படுத்திக் கொள்ள "கௌதுக்... கௌதுக்..." என்று இரண்டு முறை அழைத்தார்.
அமைதியான வகுப்பில் அது ஒரு பெயரைப் போல ஒலிக்கவில்லை. ஏதோ ஒரு காட்டுப் பறவையின் அழைப்பைப் போல எதிரொலித்தது. உடனே, வகுப்பில் இருந்த எல்லாத் தலைகளும் கௌதுக்கின் பக்கம் திரும்பின. மாணவர்கள் கைகளை வாயால் பொத்திக்கொண்டு கிண்டலாகச் சிரித்தனர் "இவளது பெயருக்குப் பின்னால் இனிஷியல் இல்லையா?" என்று முணுமுணுத்தார்கள்.
கௌதுக் அப்படியே கூனிக்குறுகிப் போனாள். வகுப்பில், எல்லா ஜோடிக் கண்களும் ஈட்டிகளைப் போலத் தன்னைத் துளைப்பதை அவளால் தாங்க முடியவில்லை. இருக்கையில் உட்கார்ந்தபடி தலையைக் கவிழ்த்திக் கொண்டாள். 'ஏன் எல்லாரும் என்னையே பார்க்கிறார்கள்? இந்தப் பெயர் அவ்வளவு வேடிக்கையானதா?' என்று யோசித்தாள். இதயம் படபடத்தது.
சிரிப்பொலி அடங்கும் வரை, அவளுக்கு ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம் போலத் தோன்றின. தனக்கு முழுப் பெயர் இல்லாதது இவ்வளவு இடஞ்சலை ஏற்படுத்தும் என்று அதற்கு முன்பு அவளுக்குத் தெரியாது. பள்ளியிலும் வெளியிலும் கௌதுக் தனது பெயருடன் ஒரு போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது.
வகுப்பில் சிரிப்புச் சத்தம் அதிகரித்தால் கெளதுக் சட்டென்று தனது தடிமனான கண்ணாடியைக் கழற்றிவிடுவாள். அடுத்த நொடியே உலகம் மாறிவிடும். பிறகு மனிதர்கள் தெரியமாட்டார்கள். மங்கலான வண்ண நிழல்கள் தெரியும். ஆசிரியர், நீல நிற மேகம் போலவும், மாணவர்கள் சிறிய வண்ணப் பூச்சிகள் போலவும் தெரிவார்கள். சில நேரங்களில், இந்த மங்கலான உலகம் நிஜ உலகத்தை விட அழகாக இருப்பதாகத் தோன்றும்.
கௌதுக், எப்போதும் பையில் ஒரு துண்டுச் சீட்டை வைத்திருப்பாள். அதில், ‘நான் உனக்கு ஒரு நல்ல நண்பனாக இருக்க முடியும்’ என்று எழுதி வைத்திருந்தாள். இந்த ஊருக்கு புதிதாக வந்ததிலிருந்தே அதைப் பையில் வைத்துப் பாதுகாத்து வந்தாள்.
ஐந்தாம் வகுப்பில் படிக்கும் கௌதுக், பின் வரிசையில் குறும்பு செய்யும் குழந்தைகளுடன் உட்கார ஆசைப்பட்டாள். அவர்கள் அரட்டையடிக்கும்போது யாரிடமாவது அந்தச் சீட்டைக் கொடுத்துவிடலாம் என்று நினைத்தாள். இல்லையென்றால் யாருடைய பையிலாவது போட்டுவிடலாம், யாருடைய சாப்பாட்டு டப்பாவில் சப்பாத்திக்கு அடியில் மறைத்து வைத்துவிடலாம் என்றும் யோசித்திருந்தாள்.
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அவள் சிறுமி என்பதால் பின் வரிசை இருக்கை மறுக்கப்பட்டது. அத்துடன் அவள் குட்டையாகவும் இருந்தாள். அதனால் முன் வரிசையில் உட்கார வேண்டியிருந்தது. முன் வரிசையில் உட்காரும் குழந்தைகளுக்கு மட்டும், ஆசிரியர்கள் ஏன் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள் என்று அவளுக்குப் புரியவே இல்லை.
‘முன்னால் உட்கார்ந்தால் ஆசிரியர் மட்டும்தான் தெரிவார். ஆனால் பின்னால் உட்கார்ந்தால் முழு வகுப்பையும் பார்க்க முடியும். புவியியல் ஆசிரியருக்குக் கூட, புவி அமைப்பின் ரகசியம் தெரியவில்லையே’ என்று கௌதுக் வியந்தாள்.
முன்னால் உட்கார்ந்தபடி, அவள் அடிக்கடி பின்னால் திரும்பிப் பெருமூச்சு விடுவாள். ஒவ்வொரு முறையும் பையில் கைவிட்டுத் தடவி, எழுதிவைத்த சீட்டைத் தொட்டுப் பார்ப்பாள்.
ஒரு நாள் மதிய உணவு இடைவேளையில், கௌதுக் ஓர் அரச மர நிழலில் உட்கார்ந்திருந்தாள். தூரத்தில் சிறுவர்கள் குழுவாகச் சேர்ந்து சிரித்துப் பேசியபடிச் சாப்பிடுவதைப் பார்த்தாள். குழுவுக்கு அருகில் சென்று நின்று பார்த்தாள். யாரும் அவளுக்கு இடம் தவில்லை. அதனால் கெளதக் அரச மரத்தையே வீடாக மாற்றிக்கொண்டாள்.
மரத்தின் ஒரு தடிமனான கிளை, மரத்தண்டோடு சேரும் இடத்தில்தான் அவள் உட்காருவாள். அது அவளுக்காகவே செதுக்கப்பட்டது போலத் தோன்றும். அந்தக் கிளைக்கும் மரத்தண்டிற்கும் நடுவில் ஓர் அணில் பொந்து இருந்தது.
அவ்வப்போது தலையை நீட்டி வெளியே எட்டிப் பார்க்கும் அணில் கௌதுக்கைப் பார்த்துச் சாத்தம் எழுப்பும். வேறு யாரும் பழகத் தயாரில்லை என்றாலும், தன்னோடு சேர்ந்து சாப்பிட ஓர் அணிலாவது இருக்கிறதே என்று ஆறுதல் அடைவாள்.
ஒரு துண்டுச் சப்பாத்தியைப் பிட்டு அணில் வளையின் வாசலில் வைத்துவிட்டுத் தான் கெளதுக் சாப்பிடுவாள். அன்று அவள், இரண்டு துண்டுகள் மட்டும் சாப்பிட்டுவிட்டு டப்பாவை மூடிவிட்டாள். அவளுக்கு வெண்டைக்காய் பொரியல் பிடிக்காது. பிறகு பையிலிருந்து அந்தச் சீட்டை எடுத்தாள்.
பையிலேயே இருந்ததால் சீட்டு கசங்கிப் போயிருந்தது. ஈரமான கையால் அடிக்கடித் தொட்டதால் கிழிந்துவிடும் நிலையில் இருந்தது. சீட்டின் நுனியை இரண்டு விரல்களால் பிடித்து, வெயிலில் காட்டுவதற்காகக் கையை மேலே தூக்கினாள். உஷ்ணக காற்று பட்டதும் சிறிது நேரத்தில் அது காய்ந்துபோனது. அவளுக்கு நிம்மதி திரும்பியது.
அதே நேரத்தில் அவளுக்கு ஒரு யோசனை வந்தது. மரத்தைச் சுற்றி தேடியவள், ஒரு சிறிய தட்டையான கல்லை எடுத்தாள். கையிலிருந்த சீட்டை மடித்து அணில் பொந்துக்குள் வைத்தாள். சீட்டு பறந்துவிடாமல் இருக்க அதன் மேல் கல்லை வைத்தாள். உள்ளே இருந்த அணில், அவளது நடவடிக்கைகளை ஆச்சரியத்துடன் பார்த்தது.
அப்போது அருகில் இருந்த ஒரு சிறுவனின் குரல் கேட்டது.
"ஏய்!"
கெளதுக் திரும்பிப் பார்த்தாள். டிட்டு நின்று கொண்டிருந்தான். அவனும் வகுப்பில் முன் வரிசையில் உட்காருபவன் தான். படுசுட்டி. கௌதுக்கைப் போலவே தடிமனான கண்ணாடி அணிந்திருந்தான். கௌதுக் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
"அங்கே என்ன செய்கிறாய்?" என்று டிட்டு கேட்டான்.
கௌதுக் தோள்களை உயர்த்தி ஒன்றும் இல்லை என்று சைகை செய்தாள்.
"உனக்கு ஏன் இனிஷியல் இல்லை?" என்று அவன் அடுத்த கேள்வியைக் கேட்டான். கௌதுக் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். பிறகு டிட்டு அவளை நெருங்கி வந்தான்.
கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, "நான் எனது இனிஷியலைச் சாப்பிட்டுவிட்டேன்" என்றாள் கௌதுக்.
டிட்டு ஆச்சரியத்துடன் "யாராவது அதைச் செய்ய முடியுமா?" என்று கேட்டான்.
"நான் சின்னப் பிள்ளையாக இருந்தபோது வயிற்றில் புழுக்கள் இருந்தன. அவை வெள்ளை நிறத்தில் இருந்த நீளமான புழுக்கள். வயிற்றில் இருந்து கொண்டு எல்லாவற்றையும் சாப்பிட்டுவிடும். ஒரு நாள், ஆசிரியர் எனது பெயரைத் கேட்டபோது முழுப்பெயரும் நினைவுக்கு வரவில்லை. ஆனால் கீழே குனிந்து வயிற்றைப் பார்த்தபோதுதான் ஓர் உண்மை புரிந்தது. அந்தப் புழுக்கள் எனது மிச்சப் பெயரை சாப்பிட்டுவிட்டன என்று புரிந்தது"
டிட்டு கண்களை விரித்துப் பார்த்தான்.
"இப்போதும் வயிற்றில் புழுக்கள் இருக்கிறதா?"
"அம்மா மருந்து கொடுத்தார். இப்போது அவை வயிற்றுக்குள் ஆழ்ந்து உறங்குகின்றன” என்று டிட்டுவின் காதருகில் வந்து ரகசியமாகச் சொன்னாள் கௌதுக்.
மணி அடித்தது. டிட்டு வகுப்புக்கு ஓடினான். கௌதுக், அந்தச் சீட்டை மடித்துவைத்தபடி அணிலிடம், "எனக்கு ஒரு நல்ல நண்பன் கிடைக்கும் வரை இந்தச் சீட்டைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்" என்றாள்.
அணில் பொந்திலிருந்து 'சக்..சக்...' என்ற சத்தம் கேட்டது. அணில், 'சரி' என்கிறதா, 'இல்லை' என்கிறதா என்ற யோசனையில் வகுப்பை நோக்கி நடந்தாள்.
எது எப்படியோ, நாளை மதிய உணவு இடைவேளையில் அதற்கான பதில் அவளுக்குக் கிடைத்துவிடும்.

எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.





Comments