top of page

இயலில் தேடலாம்!

Search this site

408 results found with an empty search

  • ஒரு லட்சம் கோழிக்குஞ்சுகள்!

    'அதிசயங்கள் தற்காலத்தில் நடைபெறுவதில்லை என்று பெர்னாட் ஷா சொன்னதாகப் படித்திருந் தான் பழனி என்னும் பழனியப்பன். ஆனால் அவன் கண்முன்னே நடந்த அதிசயத்தை அவன் பார்த்தானே! அவன் மட்டுமா? டவுன்ஹால் அருகே அன்றிருந்த நூற்றுக்கணக்கானோர் பார்த்தார்களே! அப்படிப்பட்ட அதிசயத்தை அதற்குமுன் யாரும் பார்த்ததில்லை என்றார்களே! அப்படி என்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன். பழனி டவுன்ஹால் அருகே சாலையைக் கடப்ப தற்காக நின்றிருந்தான். அதைக் கடந்து ராஜவீதியின் நடுவே உள்ள தேர்முட்டிக்குச் செல்லவேண்டும். அங்கேதான் அவன் வீடு. போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் வேகமாக - வேகமாகக்கூட இல்லை - மெதுவாகக் கூட இயங்க முடியாமல் நின்றுவிட்டன. பழனி வாகனங்களைப் பார்த்தான். அவனுக் கருகே ஒரு லாரியில் முட்டைகள் ! முட்டைகள் வைக்கும் அட்டைகளில் அடுக்கப்பட்ட தூய வெள்ளை முட்டைகள்! முட்டைகள் அடுக்கிய அட்டைகள் பதினைந்தோ, இருபதோ ஒன்றுக்குமேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்தன! அப்படிப்பட்ட அடுக்குகள் ஐம்பது அறுபதுக்கு மேலே! ஒரு அட்டைக்கு ஒரு நூறு முட்டைகள்! கண்ணாலேயே எண்ணிப் பார்த்தான்! மொத்தம் ஒரு லட்சத்துக்கு மேலே இருக்கலாம்! பழனி வண்டிகள், நெரிசல் சீர் செய்யப்பட்டு ஒடத் தொடங்கும் நேரம்! திடீரென்று 'சிக் சிக் சிக் சிக் என்ற சத்தம்! பெருஞ் சத்தம்! முட்டை லாரியிலிருந்த எல்லா முட்டைகளும் ஒரே சமயம் கோழிக்குஞ்சு களாக- வெள்ளை வெளேர் குஞ்சுகளாக மாறிக் கத்தின! அட்டையிலிருந்து நழுவி லாரியிலும், லாரி யிலிருந்து நழுவிச் சாலையிலும் விழுந்து சிதறின! கைப்பிடியளவில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வெள்ளைக் கோலிக்குண்டுகளை நடுச்சாலையில் கொட்டியதைப் போன்ற கண்கொள்ளாத காட்சி! நெரிசல் சரியானாலும் சாலையில் குட்டிக் குட்டி வெண்பஞ்சு மேகங்கள் போன்ற கோழிக்குஞ்சுகள் நிறைந்துவிட்டதால் எந்த வண்டியும் அசையவில்லை! முட்டை லாரிக்காரன் கேபினிலிருந்து எட்டிப் பார்த்தான்! அடுக்கிய அட்டைகளைத் தள்ளிக் கொண்டு குஞ்சுகள் கீழே விழுந்து. சாலையை நிறைத்துக் கொண்டிருந்தன. லாரி - கார் - ஸ்கூட்டர்-என்று எல்லா வாகனங்களின் முன்னும் பின்னும் அடியிலும் கோழிக்குஞ்சுகள்! கோழிக்குஞ்சுகள் வெள்ளமாய் ஓட அதன் நடுவே வாகனங்கள் மிதப்பது போன்ற தோற்றம்! பார்த்தவர்கள் பிரமித்தார்கள்! லட்சக்கணக்கான கோழிக்குஞ்சுகள் ஏதோ ஒரு கோரிக்கைக்காகச் சாலை மறியலில் ஈடுபட்டது போன்ற காட்சி! அவசரமாகப் போக வேண்டியதை மறந்து எல்லோரும் இந்தக் காட்சியைக் கண்டு ரசிக்க - வியக்க, போலீஸார் கோழிக்குஞ்சுகளை அப்புறப்படுத்த முயல்... அட்டா, உலக அதிசயங்கள் ஒன்று சேர்ந்தாலும் இப்படி ஒரு அதிசயத்தை உண்டாக்கியிருக்க முடியுமா! பக்கத்திலிருந்த மாலை முரசு புகைப்படக்காரர் கேமராவோடு வந்துவிட்டார்! உள்ளூர் தொலைக் காட்சியினர் கூடிவிட்டனர்! நிருபர்கள் கூடி விட்டனர்! அவர்களைப் போலவே, கோழிக்குஞ்சுகளை அகற்ற வந்தவர்களும் அதிசயக் காட்சியில் லயித்துப் போனார்களே தவிர, தமது வேலையில் முழுமையாக ஈடுபடவில்லை. சுமார் மூன்று மணி நேரம் டவுன்ஹால் பகுதியில் கோழிக்குஞ்சுகளின் நீடித்தது! ஆக்ரமிப்பு நீடித்தது. பழனி, அவ்வளவு நேரமும் அங்கே நின்று இந்த அதிசயத்தைக் கண்டு ரசித்தான்! முட்டைகள் எப்படித் திடீரென்று குஞ்சு களாயின! சில முட்டைகள் இப்படி மாறலாம். லட்சக் கணக்கான முட்டைகள் ஒரே சமயத்தில் எப்படிக் குஞ்சுகளாயின! குஞ்சாக மாறாத ஒரே ஒரு முட்டை கூட இல்லையே! ஏன்? பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் கேள்விகள் கேட்டன! ஆனால் யாருக்கும் சரியான-பொருத்தமான பதில் தெரியவில்லை! உண்மையான பதில் பழனிக்குத் தெரியும்! ஆனால் அவன் யாருக்கும் சொல்லவில்லை. "என்ன பதில்? எப்படி எல்லா முட்டைகளும் ஒரு நொடியில் குஞ்சுகளாயின! கொஞ்சம் சொல்லுங்கள்?" என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்! உங்களுக்கு மட்டும் சொல்கிறேன்! மூன்று நாளுக்கு முன்னே பள்ளி மாணவர் களோடு பழனி ஊட்டிக்குப் பயணமானான். குன்னூர் நெருங்கும்போது பயணம் தடைப்பட்டது. இரண்டு நாளுக்கு முன்னே பெய்த பெருமழையில் மண் சரிவு இருந்தது; பழனி புறப்பட்ட அன்று அதிகாலை, பேரளவில் ஒரு நிலச்சரிவு! குடிசை களோடு கூடிய ஒரு பகுதி பெயர்ந்து சரிந்து மலைப் பாதையில் நிறைந்து விட்டது. மாணவர்கள் ஊட்டிக்குச் செல்ல முடிய வில்லை! ஆனால் சரிவுக்கு முன்னாலே ஒரு சிற்றருவி! அங்கே பஸ்ஸை நிறுத்தவும், மாணவர்கள் ஓய்வு கொள்ளவும் போதுமான இடம் இருந்தது! அதனால் அங்கே தங்கி, மதிய உணவு உண்ட பிறகு புறப்பட்டனர்! நீர் பழனி அங்கே தங்கிய போது, சிற்றருவியிலே முகம் கழுவச் சென்றான். அப்போது மலைச்சரிவி லிருந்து பெயர்ந்து அருவி விழும் இடத்தில் ஒரு மண்கட்டி விழுந்திருப்பதைப் பார்த்தான். விழவிழ, அதில் ஏதோ மின்னுவது போலத் தெரிந்தது. பழனி அதை எடுத்தான். எலுமிச்சைப் பழ அளவில் ஒரு கண்ணாடி உருண்டை! பெரிய கோலி என்றும் சொல்லலாம்! அதைத் தண்ணீரில் கழுவி, கால்சட்டைப் பையில் போட்டுக்கொண்டான். அன்று அவர்கள் சாப்பிட உட்கார்ந்தார்கள்; அதுவும் ஒரு பலா மரத்தடியிலே! மரத்தில் பழங்கள்! பழனி ஏறிட்டுப் பார்த்தபடி, "ஒரு நல்ல பழம் விழுந்தா, மாணவர்கள் மேலே விழாம கொஞ்சம் தள்ளி விழுந்தா எவ்வளவு நல்லது!" என்று நினைத்தான். இதுதான் பழனியின் பழக்கம். அடிக்கடி 'இப்படி இருந்தா, இப்படி நடந்தா எவ்வளவு நல்லாயிருக்கும் என்று நினைப்பது வழக்கம். நினைப்பான். ஆனால் நினைத்தபடி நடக்காது! இப்போது அவன் நினைத்ததும்,தொப்பென்று ஒரு பழம் மாணவர் அருகே விழுந்தது! பழனி திகைத்து விட்டான்! அவன் நினைத்தது நடந்து விட்டதே! எப்படி? தற்செயலாய் நடந்ததா? ஒருவேளை அருவியில் கண்டெடுத்து, தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்ட கண்ணாடி உருண்டை இப்படிச் செய்ததா? பழனி எழுந்து நடந்தான். மாணவரை விட்டு விலகி நடந்தான். தன்னிடமிருந்த கண்ணாடி உருண்டையை எடுத்து ஒரு மரத்தடியில் வைத்தான். பிறகு தள்ளி நின்று "இங்கே இருக்கும் பலா மரத்தி லிருந்து ஒரு பழம் விழுந்தா சாப்பிடலாமே!" என்று நினைத்தான். பழம் விழவில்லை! மீண்டும் நினைத் தான். அப்போதும் பழம் விழவில்லை! அவன் கீழே வைத்த கண்ணாடி உருண்டையை எடுத்துச் சட்டைப்பையில் வைத்துக் கொண்டான். பிறகு ஒரு பழம் விழுந்தா சாப்பிடலாமே' என்று நினைத்தான்.உடனே ஒரு பழம் விழுந்தது. பழனிக்குக் கண்ணாடி உருண்டை ஏதோ மந்திரப் பொருள் என்பது புரிந்தது. அது நிலத்தடியிலிருந்து. நிலச்சரிவால் வெளிப்பட்டது போலும். பழனி இனி எது நினைத்தாலும் நடக்கும்! இதை உணர்ந்ததும், அவன் பயந்தான். குன்னூரிலிருந்து திரும்பிய பிறகு பழனி தன் இயல்புக்கு மாறாக எதையும் நினைக்கவில்லை. இன்று முட்டை லாரியைப் பார்த்ததும், தன்னை யறியாமல் "எல்லா முட்டைகளும் குஞ்சாக வேண்டும்" என்று நினைத்து விட்டான். "இப்படி வேறு ஏதாவது தவறாக நினைத்து அது நடந்துவிட்டால் என்ன செய்வது?" பழனி பயந்தான். உடனே கண்ணாடி உருண்டையைக் கையில் எடுத்துப் பார்த்தான்! இதை வீசியெறியலாமா? யாராவது அயோக்கியனிடம் கிடைத்தால் என்ன ஆகும்? அப்படி கிடைக்காமல் இருக்க என்ன செய்வது? பழனி இன்னும் டவுன்ஹால் அருகே, கையில் அந்தக் கண்ணாடி உருண்டையோடு நின்று யோசித்துக் கொண்டிருந்தான். திடீரென்று யாரோ ஒருவன் அவன்மீது மோதிக் கொள்ள, அவன் கையிலிருந்த கண்ணாடி உருண்டை கீழே விழுந்து சாலையில் உருண்டது. அதேசமயம் அங்கே வந்து கொண்டிருந்த ரோடுரோலர் முன்னே சென்றது. ஒரு நொடிக்குள். 'கடகட' சத்தத்துடன் அந்த ரோடுரோலர் கண்ணாடி உருண்டையைப் பொடியாய் நசுக்கிவிட்டு நகர்ந்தது. மாயக் கண்ணாடி தார்ச்சாலையில் பொடியாகி மின்னியது. பழனி அதைப் பார்த்து மகிழ்ந்தான். நினைத்ததை நடக்கச் செய்யும் கண்ணாடி உருண்டை இனி யாருக்கும் பயன்படாதல்லவா! நிம்மதியோடு வீடு நோக்கி நடந்தான், பழனி. ஆனால், "லட்சக்கணக்கில் கோழிமுட்டைகள் திடீரென்று குஞ்சுகளானது எப்படி?' என்பதைப்பற்றி கோவை நகரம் இன்னும் விவாதம் செய்து கொண்டிருக்கிறது! ( காலப்பெட்டகம் )

  • அறிவோம் ஆளுமை – 11

    கல்வி தான் அமைதியின் சக்தி – மலாலா ஜோ :-- குழந்தைகளே! இன்று நாம் உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு துணிச்சலான பெண் குழந்தையைப் பற்றி பேசப் போகிறோம். அவர் பெயர் மலாலா யூசுப் சாய்.  நகுலன்:-- நோபல் பரிசு வாங்கியவர் தானே? ரதி: -- பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காககப் போராடியவர் தானே அவர்? ஜோ:-- அவரேதான்! மலாலா 12 ஜூலை 1997 அன்று பாகிஸ்தான் நாட்டின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள மிஙோரா என்ற ஊரில் பிறந்தார். அவரது தந்தையின் பெயர் ஜியாவுத்தீன் யூசுப் சாய், தாயார் தூர் பேகை. அவரது தந்தை ஒரு ஆசிரியர். பெண்கள் படிக்க வேண்டும் என்று நம்பியவர். அதற்காகவே ஒரு பள்ளியையும் நடத்தினார். அவர் வாழ்ந்த சமூகத்தில் பெண் குழந்தை பிறந்தால் வருத்தப்படுவார்கள். ஆனால்…  மலாலா பிறந்த போது மலாலாவின் அப்பா மிகவும் மகிழ்ந்தார். “இந்தக் குழந்தை சாதாரண குழந்தை இல்லை… ஒரு நாள் பெரிய மாற்றத்தை உருவாக்கப் போகிறாள்!”  என்று கூறினார்.  அவர் குடும்ப மரத்தில் (Family Tree) பெண் குழந்தைகளின் பெயர் எழுதப்படுவதில்லை. மலாலாவின் பெயரை அவருடைய அப்பா பெருமையாக எழுதினார். நகுலன்:-- அது ரொம்ப அழகான விஷயம் அத்தை! மலாலா என்ன படித்திருக்கிறார்? ஜோ --- மலாலாவுக்குச் சிறு வயதிலிருந்தே படிப்பில் ஆர்வம் அதிகம். எப்போதும் பள்ளியில் முதல் மாணவியாக இருப்பார். வாசிப்பதையும் பேசுவதையும் மிகவும் விரும்பினார். “புத்தகம் தான் எனக்கு சக்தி தரும் நண்பன்‌” என்று கூறுவார். இங்கிலாந்தில் உள்ள Birmingham நகரத்தில் பள்ளியில் படித்தார். பிறகு உலகப் புகழ்பெற்ற Oxford University-யில் Philosophy, Politics, Economics போன்ற பாடங்களில் பட்டம் பெற்றார். ரதி : --- அத்தை!  மலாலா நிறைய கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பாராமே?    ஜோ -- ஆமாம்!  நீங்கள் என்னிடம் எத்தனை கேள்விகள்  கேட்கிறீர்கள்!  உங்களைப் போலவே தான் மலாலாவும்.   சிறு வயதிலிருந்தே  தன் தந்தையிடம் நிறையக்  கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பாராம். அவர் தந்தையும் அதற்குச் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டே இருப்பாராம். நகுலன்: -- என்ன மாதிரி கேள்விகள் அத்தை? ஜோ :-- அவர் கேட்ட கேள்விகள் மிகவும் சிந்திக்க வைக்கும். “ஏன் குடும்ப மரத்தில் பெண்கள் பெயர் இல்லை?” “ஏன் பெண்கள் பர்தா போட வேண்டும்?” “ஏன் சில பெண்கள் பள்ளிக்குச் செல்ல முடியாது?” “ஏன் பெண்கள் தனியாக வெளியே போகக் கூடாது?” “நான் படிக்கிறேன்… ஆனால் வீதியில் இருக்கும் அந்த சிறுவன் ஏன் பிச்சை எடுக்கிறான்?” “ஏன் சில குழந்தைகள் குப்பை பொறுக்குகிறார்கள்?” இப்படித் தன்னைச் சுற்றி சமூகத்தில் நடக்கும் விஷயங்களைப் பற்றிக் கேள்விகளைக் கேட்பாராம். ரதி : -- என்னுடன் படிக்கும் சஜினா மட்டும் பர்தா அணிந்து வருவாள். முகத்தை கூட காட்ட மாட்டார். எனக்கு அவளைப் பார்க்கும் போது பாவமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தில் படிக்க வரும் முதல் பெண் அவள் தான் என்று கூறினாள். அது மட்டுமல்ல பரம்பரையைப் பற்றிப் பேசும்போது அப்பா என் பாட்டியின் பெயரையோ அம்மாவின் பெயரையோ சொன்னதில்லை என்று சொன்னாள்.   இப்போது நானும் அதை யோசிக்கிறேன். பரம்பரையில்  என் அம்மாவையும் பாட்டியையும் என்னையும் சேர்க்க வேண்டும் என்று நானும் அப்பாவிடம் சொல்லப் போகிறேன். இனிமேல் பரம்பரை என்று கூறும்போது நான் எல்லோரையும் சேர்த்து தான் சொல்வேன் அது சரி அத்தை. மலாலாவுக்கு எப்படி இவ்வளவு கேள்விகள் கேட்கும் அளவிற்கு  தைரியம் வந்தது? ஜோ-- ஸ்வாட் பள்ளத்தாக்கில் இருந்த அவர்களுடைய நகரத்தை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தபோது எல்லாமே மாறியது. தீவிரவாதிகள் தொலைக்காட்சி வைத்திருப்பது, இசை வாசிப்பது  மற்றும் பெண்கள் படிப்பது போன்ற பல விஷயங்களைத் தடை செய்தனர். மேலும் தங்கள் உத்தரவுகளை மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகளையும் விதித்தனர். மலாலாவின் தந்தை பெண்கள் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் நடத்தும் பள்ளியில் பெண் குழந்தைகளும் படித்தனர். ஆனால் தீவிரவாதிகள் பள்ளியை மூடச் சொல்லி மலாலாவின் தந்தையை அச்சுறுத்தினர். ஆனால் அவரோ பயப்படாமல் தொடர்ந்து பள்ளியை நடத்தினார். அவரின் துணிச்சல் மலாலாவுக்கும் வந்தது என்று நினைக்கிறேன். நகுலன் :  அத்தை!  மலாலாவை எதற்காகச் சுட்டார்கள்? ஜோ -- ஒரு முறை BBC செய்தி நிறுவனம், “இங்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி ஒரு பெண் குழந்தை கட்டுரை எழுத வேண்டும்” என்று மலாலாவின் தந்தையிடம் கேட்டது.  முதலில் மலாலாவின் தந்தை ஆயிஷா என்ற மாணவியை முன்மொழிந்தார். ஆனால் அந்தக் குழந்தையின் குடும்பம்  தீவிரவாதிகளுக்குப் பயந்து மறுத்துவிட்டது. அப்போது ஒன்பது வயதான மலாலா எழுத முன்வந்தார். முதலில் அவள் “குல் மக்காய்” (Gul Makai) என்ற புனைபெயரில் எழுதினார். குல் மகாய் என்றால் சோளப்பூ என்று அர்த்தம்..  அந்தக் கட்டுரைகளில் அவர் பெண்கள் படிக்க முடியாத துயரத்தையும், அச்சத்தையும் எழுதினார். அந்த பள்ளத்தாக்கை தீவிரவாதிகள் ஆக்கிரமித்து எல்லோரையும் கொடுமைப்படுத்துவதைப் பற்றியும் எழுதினார்.  இது உலக நாடுகளில் மிகப்பெரும் பேசுபொருளாக மாறியது. தீவிரவாதிகள் அதை எழுதிக் கொண்டிருப்பது யார் என்று தேட ஆரம்பித்தார்கள்.  இந்த நேரத்தில் தான்  கொஞ்சம் தைரியம் பெற்று தன் சொந்த பெயரிலேயே எழுதத் தொடங்கினார் மலாலா. அதை கண்டுபிடித்த தீவிரவாதிகள் ஒரு நாள் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது பள்ளி வாகனத்திற்குள் உட்கார்ந்து இருந்த மலாலாவைச் சுட்டனர். அப்போது அவருக்கு வயது 15. ஆனால்…மலாலா உயிர் தப்பினார். சிகிச்சை பெற்று மீண்டு எழுந்தார். ஸ்வார்ட் பள்ளத்தாக்கில் மட்டும் ஒலித்துக் கொண்டிருந்த “பெண்கள் படிக்க வேண்டும்” என்ற அவர் குரல் உலகம் முழுவதும் ஒலிக்க ஆரம்பித்தது. 2014 ஆம் ஆண்டு…அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவுக்கு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 17. மிக இளைய வயதில் நோபல் பரிசு பெற்றவர் மலாலா..   ரதி : -- ஐ.நா. சபையில் மலாலா பேசினார் இல்லையா அத்தை?  ஜோ :-- ஆமாம். மிக முக்கியமான விஷயம் மலாலா தனது 16வது பிறந்த நாளில் ஐக்கிய நாடுகள் சபை மேடையில் (United Nations)  பேசினார்.  அந்த நாள் உலகம் முழுவதும் “Malala Day” என்று கொண்டாடப்பட்டது. அவர் அங்கு என்ன சொன்னார் தெரியுமா? “என்னை தாக்கியவர்கள் என் குரலை மௌனமாக்க நினைத்தார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை.” “கல்வி தான் அமைதியின் சக்தி.” “ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா… உலகத்தை மாற்ற முடியும்.” அந்த உரையை கேட்ட பிறகு உலகம் முழுவதும் மக்கள் கண்ணீர் விட்டார்கள்… பெருமையோடு கைத்தட்டினார்கள். நகுலன் - தற்போது மலாலா என்ன செய்கிறார் அத்தை? மலாலா தற்போது உலகம் முழுவதும் பெண்கள் கல்வி பெற வேண்டும் என்று வேலை செய்து வருகிறார். “Malala Fund” என்ற அமைப்பை தொடங்கி பல நாடுகளில் குழந்தைகளுக்கு உதவி செய்கிறார். அவர் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தார்.‌ இப்போது எழுத்தாளர், சமூகப் போராளி, கல்வி உரிமை குரல் கொடுப்பவர் என்ற பன்முக செயல்பாட்டாளராக விளங்குகிறார். ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.  பல நாடுகளில் பெண் குழந்தைகள் படிக்க உதவி செய்கிறார். அகதிகள், ஏழை குழந்தைகள், போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள். இவர்களுக்காக கல்வி உதவித்திட்டங்கள் செய்கிறார். உலகத் தலைவர்களைச் சந்தித்து பெண் கல்வி உரிமை பற்றிப் பேசுகிறார். தனது வாழ்க்கையைப் பற்றி “I Am Malala” என்ற புத்தகமும் எழுதியுள்ளார். ரதி --  அவரைப் பார்க்க ஒரு போராளி மாதிரி இல்லையே அத்தை? ஜோ : போராளி என்றால் ஆயுதம் ஏந்தித் தான் போராட வேண்டுமா? ஆயுதம் இல்லாமல் போராடும் கல்விப்போராளி அவர். மலாலா எப்போதும் கோபத்தோடு பேச மாட்டார். “நான் யாரையும் வெறுக்க மாட்டேன். என்னைக் காயப்படுத்தியவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும்.” என்று சொன்னார். அது தான் அவரின் உண்மையான பெருமை. நகுலன்: நாமும் கேள்விகள் கேட்கணும்… படிக்கணும்… மற்றவர்களையும் படிக்க வைக்கணும். ஜோ : நகுலா! நீ சொல்வது சரிதான்தான்! மலாலா நமக்குச் சொல்லும் பாடம் என்ன தெரியுமா? பயப்படாமல் உண்மை பேச வேண்டும். கல்வி எல்லோருக்குமான உரிமை. ஒரு குழந்தையின் குரலும் உலகத்தை மாற்றும். மலாலா ஒரு பெரிய தலைவர் அல்ல… ஒரு சாதாரணப் பெண் குழந்தை. ஆனால் அவர் கேட்ட கேள்விகள், அவர் காட்டிய துணிவு, அவர் சொன்ன வார்த்தைகள் இன்று உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு நம்பிக்கை கொடுக்கிறது. “படிக்க வேண்டும்” என்ற கனவு இருந்தால்… அந்தக் கனவு உலகையே மாற்றும்! ரதி, நகுலன் :  ஆம்! கனவு காணுவோம்! உலகத்தையே மாற்றுவோம்! சரிதா ஜோ சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். 1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும், 100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

  • சிறுவர் நாடகம் - நேற்று இன்று நாளை.

    மீசையை முறுக்கிக்கொண்டு பேசு இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை இன்றும் பள்ளி வளாகங்களில் நாடகமாக பார்க்க முடிகிறது. பள்ளிகளில் நிகழ்த்தப்படும் நாடகங்கள் மூலமாக ஒரு குழந்தைக்கு நாடகம் என்கிற கலை அறிமுகம் ஆகிறது... நம்மில் பலருக்கும் இந்த கலை அவ்வாறே அறிமுகமாகிறது. எவ்வாறு கணிதம், அறிவியல், ஆங்கிலம் என அனைத்தும் துறைகளும் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்படுகிறதோ , அதேபோல் கலைகளும் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்படுகிறது. ஆனால் கணிதம், அறிவியல், ஆங்கிலம் போன்றவை அடிப்படையில் இருந்து எவ்வளவு தெளிவாகவும் கவனமாகவும் மிகுந்த தேர்ந்த தகுதியுடைய ஆசிரியர்கள் கொண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது... ஆனால், கலைகள் அவ்வாறு அறிமுகப்படுத்தபடுவதில்லை. எப்போதும் பள்ளி வளாகத்தில் இருக்கும் ஆர்வமிகு ஆசிரியர்களை கொண்டு உருவாக்கப்பட்டு நிகழ்த்தப்படுகிறது. இந்த நாடகங்களின் நோக்கம் வளாகத்தில் நடக்கின்ற சடங்கு செயல்பாடுகள் அதாவது பள்ளியின் ஆண்டு விழாக்கள் அல்லது பள்ளியில் நடைபெறும் கொண்டாட்ட நிகழ்வுகள் போன்றவற்றில் நிகழ்த்தப்படும் கலை நிகழ்வுகள் மட்டுமே என்று இருந்தபோதிலும் இவற்றை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் , ஏனென்றால் சமூகத்தின் பெரும்பான்மை மக்களுக்கும் இந்த பள்ளி வளாக நாடகங்களில் வழியாகவே கலைகளும், நாடக அறிமுகமகிறது.. அவ்வாறு அறிமுகமாகின்ற நாடகக்கலை எப்படி அறிமுகப்படுத்தப்படுகிறது?... பள்ளி வளாகங்களில் நடத்தப்படும் நாடகங்களும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டும் அந்த நாடகங்களிலும் பகுத்தறிவுக்கு புறம்பான அறிவியலுக்கு எதிரான உயர்வு தாழ்வை போதிக்கின்ற கருத்துக்கள், கொண்டாட்டங்கள் என்கிற பெயரிலோ, புராணங்கள், என்ற பெயர்களோ நிகழ்த்தப்படுவது சமூகத்தில் விஷத்தை விதைப்பதற்கு சமமான ஒன்றாகவே கருதப்பட வேண்டும்... ஏனென்றால் குழந்தைகளை பொறுத்தவரை பள்ளி வளாகங்களில் நடப்பவை அனைத்தும் உண்மையானவை, மேன்மையானவை. உள்ளடக்கம் அடிப்படையில் மட்டுமே அல்லாமல் அதனை நிகழ்த்த திறன் அடிப்படையிலும் வளாக நாடகங்களில் பெரும்பான்மையான நாடகங்கள் ஓதாமையை கொண்டிருக்கிறது இந்தப் போதாமைகளோடு நிகழ்த்தப்படும் நாடகங்கள் முழு நாடகங்கள் அல்ல! முழு நாடக வடிவங்கள் அல்ல!. இன்று வரை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் நாடகங்கள் தமிழ்நாடு பொறுத்த வரை இவ்வாறாகவே இருக்கிறது. குழந்தைகளுக்கு தங்கள் கதைகளை சொல்வதற்கான ஒரு கலையாக, தங்கள் சமூகத்தின் பிரச்சனைகளை பேசும் இடமாக, தங்களின் கற்பனைக்குஉருவம் கொடுக்கும் ஒரு கலையாக, நாடகம் அறிமுகப்படுத்தப்படாமல் வெறும் சடங்காக மட்டுமே அறிமுகப்படுத்தப்படுவது மிகப்பெரிய ஆபத்தை நாடகக் கலைக்கு உருவாக்கியிருக்கிறது வரி வடிவ அடிப்படையிலும் தமிழில் இருக்கும் நாடகங்கள் வெறும் உரையாடல்களாகவே துவங்குகிறது ஆங்கிலத்தில் இருக்கும் நாடகங்களில் மேடை வர்ணனை என்கிற முழு வர்ணனைக்குறிப்புகளும் தெளிவாக இடம்பெறுகிறது இலக்கிய வரி வடிவ அடிப்படையிலும் நாடகம் மிகவும் மேம்போக்காகவே குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. நாடகக்கலை நேற்று* என்று நாம் பேசுகின்ற பொழுது பள்ளி பாடத்திட்டத்தில் மற்றும் வளாக நாடகங்களில் இன்று வரையும் தீர்க்கப்படாமலும் தொடர்ந்து கொண்டும் இருக்கின்ற பிரச்சனைகளைப் பற்றி பேசித்தான் ஆக வேண்டி இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் நாடக ஆசிரியர்கள் பற்றிய கோரிக்கை மிகவும் முக்கியமானது. எவ்வாறு ஒரு திறமை இல்லாத ஆசிரியர் கணிதம், அறிவியல் போன்றவற்றை சிறப்பாக குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட முடியாதோ அதேபோல் ஒரு துறை சார்ந்த திறனற்ற ஆசிரியரால் அறிமுகப்படுத்தப்படும் கலையும் போதாமைகளுடைய புரிந்து கொள்ளப்படும் அந்தப் போதாமைகளோடு புரிந்து கொள்ளப்படுகின்ற கலை குழந்தைகளின் திறன் சார்ந்த வெளிப்பாட்டில் மிக முக்கியமானதாக இருக்கும் பொழுது அவர்களால் அந்தத் துறையில் திறன்மிகு சமூக மனிதர்களாக உருவாக முடிவதில்லை. ஒரு துறையில் ஆர்வம் கொண்டு கற்றுக்கொள்ள விரும்பும் குழந்தை கல்லூரியை தாண்டித்தான் கற்றுக் கொள்ள வேண்டியதாக மாறுகிறது. கல்லூரியை தாண்டி கற்றுக் கொள்வதற்கான சமூக பொருளாதார சூழ்நிலைகள் இல்லாத பல திறமை மிக்க குழந்தைகள் தங்களுடைய கனவுகள் பள்ளிகளிலேயே நசுக்கப்படுவதை காண்கிறோம் குழந்தைகளில் இருக்கும் திறமைகளை முறையாக கண்டுகொள்ளப்படவும், குழந்தை பருவத்திலிருந்தே பயிற்சி எடுத்துக் கொண்டு இலக்கிய அனுபவம் பெற்று உருவாகின்ற குழந்தைகள் கலை அனுபவம் பெற்று உருவாகின்ற சமூகங்களின் மனிதர்கள் உலகத்தரம் வாய்ந்த இலக்கிய பேராளுமையோடு மிளிர்வதை நாம் பல்வேறு நாடுகளின் சமூகங்களில் கல்விமுறையை உற்று கவனிக்கும்போது தெரிய வருகிறது. அரசு நடத்துகின்ற கலைத் திருவாக்கல் திருவிழாக்களில் வெற்றி பெறுகின்ற மாணவர்களுக்கும் அல்லது கலை சார்ந்த திறமைகள் இருக்கும் மாணவர்களுக்கும் அதையே முதன்மையாக கொண்டு படிக்க வேண்டும் என்று விரும்புகின்ற மாணவர்களுக்கும் அரசு பள்ளிகளில் எவ்வாறு 11ஆம் வகுப்புகளுக்கு மேல் அறிவியல் கணிதம் கணிப்பொறியியல் போன்றவற்றிற்கு தனிப்பிரிவுகள் இருக்கிறதோ அதேபோல் கலை பிரிவுகளுக்கும் தனி பிரிவுகள் இருக்க வேண்டும், அது எல்லாப்பகுதி குழந்தைகளுக்கும் பங்கு கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்கப்பட வேண்டும். வளாகங்களில் நாடகக் குழுக்கள் அமைத்து அந்த குழுக்கள் தொடர்ந்து பல்வேறு தளங்களில் சடங்கு ஆக நடத்தப்படும் நாடக விழாக்களை தாண்டி அவ்வப்போது அந்த குழு விரும்பும் கருத்திலோ தலைப்பிலோ நாடகம் நடத்தி தங்களின் வெளிப்பாட்டு திறனை வெளிப்படுத்த வாய்ப்புகள் செய்யப்பட வேண்டும். வளாகங்களைத் தாண்டி நாடகக் கலைஞர்களால் நிகழ்த்தப்படுகின்ற சிறுவர் நாடகங்களை நாம் மூன்று பிரிவாக பிரிக்கலாம். குழந்தைகள் குழந்தைகளுக்காக நிகழ்த்தப்படும் வகை,பெரியவர்கள் குழந்தைகளுக்காக நிகழ்த்தப்படும் வகை, குழந்தைகள் பெரியவர்களுக்காக நிகழ்த்தும் நாடகங்கள். இந்த மூன்று வகைகளையும் செய்வதற்கான மிகப்பெரும் சவால்களை எதிர்கொண்டு தமிழில் நவீன நாடக கலைஞர்கள் பல நாடகங்களை நிகழ்த்தி வந்திருக்கின்றனர். ஆனாலும் கதைகளில் இலக்கியங்களில் நிகழ்ந்தது போலவே இதற்கு முந்தைய நாடக நிகழ்வுகளும் அல்லது பெரும்பான்மையான நாடக நிகழ்வுகள் தெனாலிராமன் கதைகளையோ அல்லது ராஜாக்கள் பற்றிய கதைகளையும் அல்லது கடவுள் பற்றிய கதைகளையோ குழந்தைகளை வைத்து நிகழ்த்துவதாகவே இருந்திருக்கிறது அதிலிருந்து விலகி புதிய நாடக வகைகள் அதன் நிகழ்த்துதல் அடிப்படையிலும், உள்ளடக்கம் அடிப்படையிலும் உருவாக வேண்டும்... அவ்வாறான பல முயற்சிகள் தமிழில் நடந்து கொண்டிருக்கிறது. அது இன்னும் வலுப்பெற வேண்டும். குழந்தைகள் நாடகத்தில், பேசப்படாமல் இருக்கின்ற பெண் குழந்தைகளின் பிரச்சனைகள் , சமூக நீதிக் கருத்துக்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள், கணித ஆய்வுகள், அறிவியல் பூர்வமான நிகழ்வுகள், குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள், குழந்தைகளுக்கு இருக்கின்ற மன அழுத்தங்கள் போன்றவற்றை உரத்து பேசுகின்ற, குழந்தைகளின் வயதுக்கு ஏற்றபடி நிகழ்த்தி மேடையை அமைத்தோ, மேடையை மாற்றாக பயன்படுத்தியோ உருவாக வேண்டிய தேவை இருக்கிறது. அவ்வாறு நாடகங்கள் உருவாக வேண்டும் என்றால் நாடகக் கலையின் தேவையை சமூகம் உணர்ந்து அதற்கான ஆதரவை வழங்க வேண்டும். குழந்தைகள் நாடக குழுக்களுக்கு ஒத்திகை பார்க்க இடங்களும், குழந்தைகளும் பெற்றோரும் வந்து போகின்ற நாடகபொது வெளியை உருவாக்க வேண்டும். குழந்தைகள் நாடக கலைஞர்களுக்கு அரசு குழந்தைகள் நாடக கலைஞர் விருதை அறிவிக்க வேண்டும், குழந்தைகள் நாடகக் கலைஞர்களுக்கு அவரவர் பகுதிகளில் நாடக விழாக்களை ஒருங்கிணைப்பதற்கான ஆதரவை மாவட்ட நிர்வாகங்கள் வழங்க வேண்டும்! குழந்தைகள் நாடகத்தை உருவாக்குவதற்கான மிகப்பெரிய பட்டய படிப்பையும் பயிற்சி மையத்தையும் உருவாக்க வேண்டும். இந்த சமூக ஆதரவு தொடர்ந்து நிகழும் பொழுது குழந்தைகள் நாடகக்கலை வடிவ அடிப்படையிலும், உள்ளடக்க அடிப்படையிலும், மிகப்பெரிய சமூகத் தாக்கத்தை உருவாக்கும் என்பது நம்பிக்கை. நம்பிக்கை தரும் நாளை இருக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. சந்திரமோகன் இளங்கலை வணிகவியல் சவேரியார் கல்லூரி பாளையங்கோட்டயில் பயின்றவர். தேசிய நாடகப் பள்ளி ,காலச்சுவடு இணைந்து நடத்திய ஒரு மாதகால நடிப்புப் பயிற்சிப் பட்டறையின் மூலம் நவீன நாடக உலகில் 2007 நுழைந்தவர். நிகழ் நாடக மையத்தில் முழுநேர நாடகம் ஊழியராக தன் வாழ்க்கையைத் துவங்கி, நிகழ் நாடக மையத்தில் நாடக நிகழ்வுகள், நாடக உருவாக்கம், வடிவமைப்பு மற்றும் கல்வியில் நாடகம் போன்ற நுணுக்கங்களை பல்வேறு அயல்நாட்டு அறிஞர்கள் மூலம் அறிமுகமும் பயிற்சியும் பெற்று நான்காண்டு காலம் பணியாற்றினார். திருமிகு. பாலுமகேந்திரா அவர்களின் சினிமா பட்டறையில் நடிப்புத் துறை பேராசிரியராகப் பணியாற்றியவர்.

  • அறிவியல் கற்பேன்

    அறிவியல் கற்பேன் - நான்  அனுதினம் கற்பேன்  பெரிய விஞ்ஞானி - எனும்  பெயரும் வாங்குவேன் . ராக்கெட் ஏறுவேன் - வான  ரகசியம் கற்பேன்  பார்க்க அரியவை பல  பார்த்துத் திரும்புவேன். சந்த்ர மண்டலம் நான்  சென்று மீளுவேன்  வந்து சந்த்ரனின் -பல  விந்தை சொல்லுவேன். செவ்வாய் செல்லுவேன் - புதிய  சேதி சொல்லுவேன்  எவ்வாய் ஆயினும் - பிறகு  என்புகழ் பாடும்

  • வளரிளம் புதிர்ப்பருவம் - 8

    "என்னால் இங்கே இருக்க முடியவில்லை!" என்று ஜேமி கத்தத் தொடங்குகிறான். தொடர்ந்து கத்துகிறான்  "ஜேமி, உட்காரு, உட்காரு " என்று பிரையோனி சொல்கிறார். அதை அவன் கேட்பதாகவே இல்லை. கத்திக் கொண்டே இருக்கிறான்.  நீங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கிறீங்க? என்னைப் பற்றி எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறீங்க. என்னால் முடியாது. இங்கே இருக்கவே முடியல.  என்னால் உட்காரவே முடியாது. நான் என்ன செய்யணும்னு நீங்க எனக்குச் சொல்லாதீங்க.  நீங்க என்னைக்  கட்டுப்படுத்தாதீங்க. உங்களால் அது முடியவே முடியாது.   ஜேமி கத்திக் கொண்டே அருகில் வருகிறான். பிரையோனி திகைத்து அமர்ந்திருக்கிறார். முகத்தில் சிறிது பயமும்.  காவலர் உள்ளே வருகிறார்.  ஏதாவது பிரச்சினையா என்று கேட்கிறார்.  ஏதும் இல்லை என்று பிரையோனி சொல்கிறார். நான் கத்திட்டேன் என்று ஜேமி சாதாரணமாகச் சொல்கிறான். வெளியே போய் ஒரு டீ எடுத்து வருகிறேன்  என்று பிரையோனி அந்த அறையை விட்டு வெளியேறுகிறார். சற்றே தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்கிறார்.  வளர் இளம்பருவக் குழந்தைகளின் மனநிலை மாறிக்கொண்டே இருக்கிறது. தான் நினைப்பது, செய்வது மட்டுமே சரி என்ற மனநிலையில் பலரும் இருக்கிறார்கள். உடனுக்குடன் முடிவுகளை எடுப்பதும் உடனுக்குடன் மாற்றிக் கொள்வதும் எளிதாக இருக்கிறது.   பொருளாதார வளர்ச்சியில் மட்டுமே நம்மில் பெரும்பாலானவர்களின் கவனம் இருக்கிறது. அல்லது ஏன், எதற்கு என்ற கேள்விகளே இல்லாமல் பொருளைத்தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம்.  சமூக நிகழ்வுகளாகத் திருமணம், குடும்பம் என்று மாற்றம் வந்த பிறகு பொருளின் பின்னே இன்னும் வேகமாக ஓடத்தொடங்குகிறோம். பிள்ளைகள் பிறந்து விட்டால் வேகத்தையும் நேரத்தையும் அதிகரிக்கிறோம்.  ஏன் இப்படி இருக்கிறோம்? வாழ்க்கை என்றால் என்ன?  என்பன போன்ற கேள்விகள் நம் வாழ்வில் அத்திப்பூக்கள். நம் ஓட்டத்தில் தடங்கல், சிக்கல் ஏற்பட்டால் திகைக்கிறோம், புலம்புகிறோம், செய்வதறியாது தடுமாறுகிறோம்.  இத்தகைய சூழலில் பிள்ளைகளை எப்படிக் கவனிக்கிறோம்? பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தந்தால் போதும், நல்ல பெற்றோர்.  ஊரின் சிறந்த பள்ளி என்று சொல்லிக் கொள்ளும் பள்ளியில் எப்பாடுபட்டேனும் பிள்ளையைச் சேர்த்துவிட்டால், சிறந்த பெற்றோர்.  நம் குழந்தைப் பருவத்தில் நமக்குக் கிடைக்காதது எல்லாம் நம் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே நமது கடமை.  இதையெல்லாம் இன்னும் விரிவாகச் சில வாரங்கள் கழித்துப் பேசலாம். இப்போது ஜேமியிடம் வருவோம்.  சமூகம் உருவேற்றி வைத்திருக்கும் 'ஆண்மை' குணங்கள் தனக்கு இருப்பதாக நம்பும் குழந்தை, ஜேமி. அவனுக்குச் சரி என்று நினைப்பதை மற்றவர்கள் தவறு என்று சொல்லும்போது துடித்துப்போகிறான். கோபப்படுகிறான்.  ஒரு வீட்டில் கோபப்படும் குழந்தை இருந்தால் கவனித்துப் பாருங்கள். அந்தக் குடும்பத்தலைவர் மற்றும் பெரியவர்கள் மற்றவர்களிடம், 'அவன் கோவக்காரன், அவனை ஏதும் சொல்லாதீங்க' என்பார்கள். அதே குடும்பத்தில் உள்ள மற்ற குழந்தைகளும் கோபக்காரனிடம் விட்டுக் கொடுத்த விட்டுக் கொடுத்தே போக வேண்டும். வேறு யாராவது எழியவர்களிடம்  இது பற்றிப் பேச முயற்சி செய்தாலும் ' அவன் அப்படித்தான். பெரியவன் ஆனதும் சரி ஆகிவிடுவான்' என்று சமாளிப்பார்கள். கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு, 'கட்டுத்தறி மாடு' என்று. அதைப்போலத்தான் இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள். வீட்டிற்குள் செயலில் வீரம், வெளியே சொல்லில் வீரம்.  உணர்வெழுச்சியால் தன்னிலை அறியாமல் தவறுகளைச் செய்து விடுகிறார்கள். அது தவறுதான் என்று உணர்ந்து வருந்தும் நிலை அவர்களிடம் ஏற்படுவது இல்லை. தன் செயலின் விளைவு பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் நான் செய்ததே சரி என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் செய்த குற்றத்தின் ஆழத்தை எவ்வாறு புரிய வைப்பது? அதுதான் பிரையோனிக்கு முன் நிற்கும் சவால்.  பிரையோனி கண்காணிப்பு  அறைக்குச் சென்று CCTV மூலம் ஜேமி என்ன செய்கிறான் என்று சிறிது நேரம் கவனித்துப் பார்க்கிறார். சற்றே புன்னகைத்து விட்டு விசாரணை அறைக்குச் செல்கிறார்.  "ஜேமி, நான் போலீஸ் இல்லை. உன்னிடம் எதையும் போட்டு வாங்க நினைக்கல. நடந்ததைப் பற்றி நீ என்ன புரிஞ்சு வச்சிருக்கே என்று தெரிஞ்சுக்கத்தான் நான் இங்கே வந்திருக்கேன்" என்று பிரையோனி அழுத்தமாகச் சொல்கிறார். ஜேமி, "எனக்குப் புரியுது. கேளுங்க, என்ன தோணுதோ கேளுங்க. இப்போ சரியா சொல்றேன்"என்கிறான்.  "ஆண்மை என்ற வார்த்தையைப் பற்றி நினைக்கும் போது எனக்கு என்ன தோணுதுன்னா, பொண்ணுங்க விஷயத்துல பசங்க எந்த அளவுக்கு ஆண்மையா உணர்வாங்க என்றுதான்." பிரையோனி சொல்கிறார்.  "நான் பெண்களை எப்படிப் புரிஞ்சு வச்சிருக்கேன்னு நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்." என்கிறான் ஜேமி. சரி. உன் அப்பா உங்க அம்மாவிடம் அன்பா நடந்துக்குவாரா? சண்டை போடுவாங்களா? எங்க அப்பா கோபப்படுவாரு. எதையாவது உடைப்பாரு. ஆனா அம்மாவை அடிச்சதே இல்லை. அவங்க மேல அன்பு வச்சிருக்காரு. உங்க அப்பாவுக்கு பெண் தோழிகள் உண்டா? இல்லை. அவர் தப்பானவர் இல்லை.  நானும் அப்படிச் சொல்லல. நட்பாக பெண்கள் இல்லையா? இல்லை. அவர் நண்பர்கள் எல்லோருமே ஆண்கள் தான். உனக்குப் பெண் நண்பர்கள் இருக்காங்களா? இல்லை.  ஏன், பெண்களைப் பிடிக்காதா? பிடிக்கும். பிறகு ஏன் நட்பாக யாரும் இல்லை? நான் பயந்தாங்கொள்ளி இல்லை. சரி. உனக்கு ஒரு தோழி இருந்தா என்ன செய்வாய், எங்கே கூட்டிட்டுப் போவாய். சினிமாவுக்கு. வளர் இளம்பருவத்தை, ஜேமியைப் புரிந்து கொள்ளுதலை நோக்கிய உரையாடல் தொடர்கிறது. ( உரையாடுவோம் )

  • 2025 – கவனிக்க வேண்டிய சிறார் புத்தகங்கள்

    உதயசங்கர் நூல்கள் கொழுக்கட்டை மழை பெய்த நாள் – நிவேதிதா பதிப்பகம்  டாங்கோவின் எரியும் இதயம் – நூல்வனம் பதிப்பகம் யுஷ்கா எனும் பூனை – குப்ரின் – வானம் பதிப்பகம்  காக்கா கொண்டு போச்சு – அஷீதா – புக்ஸ் ஃபார் சில்ட்ரென்  பாப்பி பள்ளிக்கூடம் போகிறது – இயல் பதிப்பகம் பாப்பி வாசிக்கிறது – இயல் பதிப்பகம் எனக்குப் பிடித்ததை நான் சாப்பிடுவேன் – இயல் பதிப்பகம் உலகம் சுற்றும் பாப்பி – இயல் பதிப்பகம் உழைக்க வேண்டும் – இயல் பதிப்பகம் கனவு காணுங்கள் – இயல் பதிப்பகம் தீரன் ஹாய் வா – இயல் பதிப்பகம் மாயக்காடு – புக்ஸ் ஃபார் சில்ட்ரென்  Magic Hat – Nivethitha Pathippagam  அழகிய பன்றிக்குட்டி – வானம் பதிப்பகம்  கத்தரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும் – இந்து தமிழ் திசை  விழியன் நூல்கள் தேநீரில் மிதக்கும் கணிதம் – புக் ஃபார் சில்ட்ரென் ஆகா மரம் – இயல்வாகை கணிதக்கற்றலும் கற்பித்தலும் – சுட்டி மீடியா மாயமான கருப்புத்தொப்பி – வேக் அப் புக்ஸ் புத்தகக்கண்காட்சி எனக்கு எதற்கு? – குட் லக் ப்ளிகேஷன்ஸ் அம்கா – புக் ஃபார் சில்ட்ரென்  மகிழ் கணிதம் – சுட்டி யானை சிங் மங் டுங்  - நம் கிட்ஸ் மூன்றாவது மொழி – பாரதி புத்தகாலயம் ட டாங் – புக் ஃபார் சில்ட்ரென் கொ.மா.கோ.இளங்கோ நூல்கள் மொகாபாத் மர்ம ம் – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் சிறார் அறிவியல் கதைத்திரட்டு – 1 - சாகித்ய அகாடமி சிறார் அறிவியல் கதைத்திரட்டு – 2 - சாகித்ய அகாடமி பூ பூவனம் – சாகித்ய அகாடமி ஆயிரம் வாசல் – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் தேனி சுந்தர் நூல்கள் 1.நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன : புக்ஸ் ஃபார் சில்ரன் 2.நட்சத்திரக் குழந்தை : புக்ஸ் ஃபார் சில்ரன் 3.திட்டமிடாத வகுப்பறைகள்: பாரதி புத்தகாலயம்  4.உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார் - வாசல் பதிப்பகம் ஞா.கலையரசி நூல்கள் வைக்கம் வீரர் – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் பண்டித ரமாபாய் – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் கல்வியாளர் வசந்தி தேவி – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் காணாமல் போன ஓவியம் – பாடநூல் கழகம் வேலை நிறுத்தம் வெற்றி – பாடநூல் கழகம் மல்லியும் பல்லியும் – நிவேதிதா பதிப்பகம் சிறகு விரித்த சிறார் கதைகள் – நிவேதிதா பதிப்பகம்  A journey to the Blue Mountain – Book For Children ஆதி வள்ளியப்பன் நூல்கள் எப்படிப் பேசினார்கள்? – பாடநூல் கழகம் கடலுக்குள்ளே என்ன இருக்கு? – பாடநூல் கழகம் நாம் வாழ உதவுபவர்கள் – பாடநூல் கழகம் அது என்ன பறவை? – பாடநூல் கழகம் பாலூட்டிகள்  - பாடநூல் கழகம் நான் ஆறு – பாடநூல் கழகம் இது என்ன மரம்? – பாடநூல் கழகம் குடுவை மனிதன் – வாசிப்பு இயக்கம்  வானில் பறந்த மகிழ் – புக் பார் சில்ட்ரென் அலங்குப் பாதுகாவலர்கள் – ப்ரதம் புக்ஸ் விஷ்ணுபுரம் சரவணன் இடம் – சால்ட் பதிப்பகம் சரிதா ஜோ காட்டுக்குள் மர்ம விலங்கு – இயல் பதிப்பகம் குருங்குளம் முத்துராஜா நூல்கள் 1.மாதியும் பூனையும் – புக்ஸ் ஃபார் சில்ட்ரென் 2.பூ பூ பூசணிப்பூ – மேஜிக் லேம்ப் வெளியீடு  3.தாட் பூட் வாட் – வாசிப்பு இயக்கம் ராஜலட்சுமி நாராயணசாமி நூல்கள் தங்கப்பறவையும் கழுகும் – கவிநயா பதிப்பகம் கனலின் பயணம் – ஹெர் ஸ்டோரிஸ் பாரதிக்குமார் காஷ்குமரி – நிவேதிதா பதிப்பகம்  உதயசங்கர் 150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

  • லண்டனிலிருந்து அன்புடன் - 9

    புத்தாண்டில் குதூகலமான புத்தகப் பயணம்: காத்தரீன் ரெய்னருடன்... குழந்தைகளுக்கான ஆங்கிலப் புத்தகங்களில் அதுவும் குறிப்பாக படக் கதைப் புத்தகங்களுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இங்கே ஓவியர்கள் கதைகளுக்குப் படம் வரைவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கான புத்தகங்களையும் தாங்களே எழுதுகிறார்கள். தமிழில் பெரும்பாலும் எழுத்தாளர்கள் எழுதும் கதைகளுக்கே ஓவியர்கள் படங்கள் வரைகிறார்கள். ஆனால் ஆங்கிலத்தில், ஓவியர்கள் பலரும் எழுத்தாளர்களாகவும் இருக்கின்றனர். படக் கதைகள் உருவான காலம் முதல் இன்று வரை, ஓவியர்கள் குழந்தைகளுக்காக எண்ணற்ற புத்தகங்களை வழங்கி வருகின்றனர். இந்தக் கதைகளில் படங்களும் வார்த்தைகளும் ஒன்றோடொன்று சேர்ந்து, குழந்தைகளின் கற்பனை உலகை இன்னும் விரிவாக்குகின்றன. ஓவியர்களே எழுத்தாளர்கள் என்பதால், பல புதிய முயற்சிகளை அவர்கள் ஓவியங்களிலும், எழுத்தோவியங்களிலும், வடிவமைப்பிலும் செய்ய்கிறார்கள். அந்த வரிசையில் குறிப்பிடத்தக்க ஒருவரான, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த காத்தரீன் ரெய்னர் (Catherine Rayner) அவர்களைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம். சமீபத்தில் நான் நூலகம் சென்ற போது, காத்தரீன் ரெய்னர் அவர்களின் Ernest என்ற புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது எர்னஸ்ட் என்று பெயரிடப்பட்ட மூஸ் மான் (moose) பற்றிய கதை. எர்ன்ஸ்ட் அளவில் மிகவும் பெரிய விலங்கு. நம்மூர் எருமை மாட்டைவிட பெரியது என்று வைத்துக்கொள்ளலாம். அதனால், அது புத்தகத்தினுள் வர முடியாமல் தவிக்கிறது. ஆனால் எப்படியாவது புத்தகத்தினுள் வந்து குழந்தைகளைச் சந்திக்க வேண்டும் என்று அது ஆசைப்படுகிறது. எர்னஸ்ட்டுக்கு சிம்பக் என்ற அணில் நண்பன் இருக்கிறது. அதனிடம் சென்று யோசனை கேட்கிறது. சிம்பக், “குனிந்து பாரு”, “வளைய்ந்து பாரு” என்று சொல்கிறது. எர்னஸ்ட் எல்லாவற்றையும் முயற்சி செய்கிறது. ஆனால் எது செய்தாலும், அது புத்தகத்தினுள் வர முடியுமா? முடியாதல்லவா! இறுதியில், எர்ன்ஸ்ட் எப்படி புத்தகத்தினுள் வந்தது என்பதை கடைசிப் பக்கத்தில் தான் பார்க்க முடியும். எப்படித் தெரியுமா? நீங்களே சற்று கண்களை மூடி யோசித்துப் பாருங்கள்… இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும், எர்னஸ்ட்டின் உடலின் ஒரு சிறிய பகுதி மட்டுமே ஓவியமாக இருக்கும். ஆனால் புத்தகத்தின் கடைசி பக்கத்தில், பெரிய அளவிலான ஒரு பக்கத்தை எட்டாக மடித்து வைத்திருப்பார்கள். அதை விரித்தால், எர்னஸ்ட்டின் முழு ஓவியம் தெரியும்! இப்போது புரிகிறதா? எர்னஸ்ட் என்ற பெரிய மிருகம் எப்படி புத்தகத்தினுள் வந்தது என்று? இப்போது, ஓவியர் காத்தரீன் ரெய்னர் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம். அவர் ஸ்காட்லாந்தின் முக்கிய நகரமான எடின்பராவைச் சேர்ந்தவர். இவரது முதல் படக் கதைப் புத்தகமான Augustus and His Smile 2007ஆம் ஆண்டில் வெளியானது. அதன் பிறகு Harris Whose Feet Are Too Big, Abigail, a Giraffe Who Loves Counting, Iris and Isaac போன்ற பல புத்தகங்களை அவர் எழுதியும் வரைந்தும் உள்ளார். இவரது புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் விலங்குகளே. அது பற்றி அவர் சொல்வது என்ன தெரியுமா? “விலங்குகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் என் ஓவியங்களிலும் பெரும்பாலும் விலங்குகளையே வரைகிறேன்,” என்று காத்தரீன் ரெய்னர் கூறுகிறார். இந்த ஆர்வம் அவருக்கு சிறுவயதிலிருந்தே இருந்ததாம். அவர் குழந்தையாக இருந்தபோது வீட்டில் பல செல்லப்பிராணிகள் இருந்தன. முயல், நாய், ஹாம்ஸ்டர், தங்கமீன் என்று நிறைய! அவர் 13 வயதாக இருந்தபோது, குதிரை ஒன்றை பராமரித்தாராம். இன்றும் அவரிடம் ஒரு குதிரை இருக்கிறதாம். புதிய ஒரு விலங்கு கதாபாத்திரத்தை வரைய வேண்டுமென்றால், அவர் முதலில் அந்த விலங்கை நன்றாக கவனிப்பாராம். முடிந்தால், நேரில் சென்று அந்த விலங்கைக் காண்பாராம். Augustus என்ற புத்தகத்துக்காக, அவர் ஒரு பூங்காவில் புலியை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டே இருந்தாராம். ஒரு கதாபாத்திரம் சரியாக உருவாகும் வரை, அவர் அதை மீண்டும் மீண்டும் பென்சிலால் வரைவாராம். சில நேரங்களில் 30 அல்லது 40 முறை வரை முயற்சி செய்வார்! பிறகுதான் அதற்கு வண்ணம் தீட்டுவார். அதுவே டிராகன் போன்ற கற்பனையான விலங்கு என்றால், இரண்டு-மூன்று விலங்குகளின் குணங்களை கவனித்து அதனை ஒன்று சேர்ப்பார். அதே போல், மிருகங்களுக்குத் தகுந்தாற் போல் liquid acrylic அல்லது water colour pencil crayon போன்ற முறைகளைப் பயன்படுத்தி வண்ணம் தீட்டுவார். அவர் சொல்வது போல், நீங்களும் ஒரு விலங்கை கவனித்து பிறகு வரைந்து பாருங்களேன்! சரி குழந்தைகளே! இந்தப் புத்தாண்டை நாம் ஒரு குதூகலமான புத்தகத்துடன் தொடங்கி இருக்கிறோம். 2026 நம் அனைவருக்கும் மகிழ்ச்சியும் வாசிப்பு ஆர்வமும் நிறைந்த ஆண்டாக அமையட்டும். உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் பஞ்சு மிட்டாய் பிரபு தஞ்சாவூர் இவரது சொந்த ஊர். தற்போது லண்டனில் வசித்துவருகிறார். எனக்குப் பிடிச்ச கலரு, குட்டித் தோசை, சாவித்திரியின் பள்ளி, எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம் ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். இங்கிலாந்திற்கும் கறுப்பின அடிமைத்தனத்திற்கும் உள்ள தொடர்பை இவரது இளையோர் நாவலான ஒலாடா பேசுகிறது. கறுப்பின அடிமைத்தனம் குறித்து நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட படைப்புகளில் மிக முக்கியமானது இந்த நாவல். மேலும் இவர் தொகுத்து வெளியான 'நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்-நோக்கமும் அதன் பாதையும்' என்கிற புத்தகம் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் ஆவணப் பெட்டகமாக விளங்குகிறது.

  • டி-3

    ( ஒரு சை-ஃபை[Sci-Fi] கதை ) சென்னை நகரம் ஒரு நாள் காலையில் கொஞ்சம் வித்தியாசமாக விழித்தது. சூரியன் உதித்ததும், வானத்தில் பறவைகளுக்கு நடுவில் “வீ…வீ…வீ…” என்ற சத்தம் கேட்டது. மக்கள் மேலே பார்த்தார்கள். அங்கே… ட்ரோன்கள்! நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், வானத்தில் பறந்து கொண்டிருந்தன. ஆனால் அவை சாதாரண ட்ரோன்கள் அல்ல. ஒவ்வொரு ட்ரோனும் ஒரு வேலை செய்தது. “அம்மா! அந்த ட்ரோன் பால் கொண்டு வருது!” என்று பத்து வயது குட்டிக் கண்ணன் கத்தினான். “அந்த ட்ரோன் மருந்து!” “இந்த ட்ரோன் காய்கறி!” “ஹை! அது ஐஸ்க்ரீம் ட்ரோன்!” ஆம்! சென்னை நகரத்தில் ‘வான விநியோகத் திட்டம்’ தொடங்கப்பட்டிருந்தது. மக்கள் கடைக்குப் போக வேண்டியது இல்லை. டிரோன்களே வீட்டுக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வந்துக் கொடுக்கும். மக்களுக்கு அது ஒரு சுவாரசியமான விஞ்ஞான அதிசயம் போல தோன்றியது.  ஒரு நாள், கண்ணன் வீட்டின் பால்கனியில் ஒரு சிறிய ட்ரோன் வந்து இறங்கியது. “ஹலோ, கண்ணன்!” என்று அது பேசியது. “அப்பா! அம்மா! இங்க ஒரு டிரோன் வந்திருக்கு, இந்த ட்ரோன் பேசுது!” என்று கண்ணன் குதித்தான். அந்த ட்ரோன் சிரித்தது  “என் பெயர் டி-3. (Drone Number 3) நான் உங்களுக்கு உதவ வந்தேன்,” என்றது. கண்ணனின் கண்கள் சந்தோஷத்தில் பளபளத்தன. “உங்களுக்கு பெயர் எல்லாம் இருக்கா? நீ எப்படி பேசுற?” அவனுக்குப் படு ஆச்சரியம். “Artificial Intelligence! அதாவது செயற்கை நுண்ணறிவு,” டி-3 விளக்கியது. “எனக்கு யோசிக்கவும், பேசவும், வழி கண்டுபிடிக்கவும் தெரியும்.” ஒரு மாலை, நகரம் முழுக்க ஒரே பரபரப்பு. வானத்தில் பெரிய குழப்பம் நேர்ந்தது. ட்ரோன்கள் எல்லாம் இங்கும் அங்கும் சுற்றி சுற்றி பறந்தன. “பால் வரல!” “மருந்து வரல!” “என் ஐஸ்க்ரீம் எங்கே?”  ஒரே தேடல்கள்!! கண்ணன் உடனே டி-3யை அழைத்தான். “என்ன ஆச்சு?” டி-3 கவலையுடன் சொன்னது: “ஜிபிஎஸ் செயற்கைக்கோளில் ஏதோ கோளாறு போல. நாங்க வழி தவறிட்டோம், சரியான பாதையைக் கண்டு பிடிக்க முடியல.” கண்ணன் யோசித்தான். “ஜிபிஎஸ் இல்லாமல் நீங்க வழி கண்டுபிடிக்க முடியாதா?” டி-3 சிரித்தது. “முடியும்… மனிதர்களைப் போல சிந்திக்கும் திறன் இருந்தால்!” கண்ணன் ஒரு காகிதத்தில் நகர வரைபடம் வரைந்தான். “இது என் பள்ளி.” “இது மருத்துவமனை.” “இது மார்க்கெட்.” “நீங்க இதைப் பார்த்துப் பறக்கலாமே?” என்றான். டி-3 மகிழ்ச்சியடைந்தது. “மிகச் சிறந்த யோசனை, குட்டி விஞ்ஞானியே!!” அது அந்த வரைபடத்தை ஸ்கேன் செய்தது. “கவனிக்கவும்! எல்லா டிரோன்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!” என்று டி-3 அறிவித்தது. “இந்த வரைபடத்தைப் பின்பற்றுங்கள்!” கண்ணன் வரைந்த படத்தைக் காட்டியது. உடனே எல்லா ட்ரோன்களும் நேராக, சரியாகப் பறக்க ஆரம்பித்தன. சில நிமிடங்களில்… பால் வந்தது. மருந்து வந்தது. ஐஸ்க்ரீமும் வந்தது! 🍦 மக்கள் கைதட்டி மகிழ்ந்தார்கள். நகர மேயர் கண்ணனைப் பாராட்டினார், “நீ பெரிய விஞ்ஞானியாக வருவாய்!” கண்ணன் சிரித்தான். “நான் என் ட்ரோன் நண்பனுக்கு உதவி செய்யவே இதைச் செய்தேன்!” “தொழில்நுட்பம் சக்திவாய்ந்தது. ஆனால் மனிதர்களின் அறிவும் கருணையும் சேரும்போது தான் அது சிறப்பாக வேலை செய்யும்.” டி-3 கண்ணனுக்கு ஹை-ஃபை காட்டியது. அந்த நாளுக்குப் பிறகு, சென்னை வானம் இன்னும் வண்ணமயமாக இருந்தது. பறவைகளும் ட்ரோன்களும் சந்தோஷமாக பறந்தன.  கண்ணன் மேலே பார்த்து உற்சாகமாகச்   சொன்னான்: “ஒரு நாள் நானும் ட்ரோன்கள் போல பறக்கப் போகிறேன்!” ஸ்ரீஜோதி விஜேந்திரன் விஜோஸ் புக்ஸ் பார்ன் (ViJos Books Barn) என்ற நூலகத்தின் நிறுவனர் ஆங்கில மொழிப் பயிற்சியாளர் மென் திறன் பயிற்சியாளர் (Soft skills trainer) விருது பெற்ற சிறார் எழுத்தாளர்.

  • கடல் எவ்வளவு ஆழமானது?

    கடல் ஆழமானது என்று நமக்குத் தெரியும். "ஆழ்கடல்" என்றுகூட ஒரு பதம் உண்டு. ஆனால் கடல் எவ்வளவு ஆழம் இருக்கும்? அதை எப்படி அளக்கிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கண்டுபிடிக்கலாம் வாருங்கள்.  சராசரியாக கடல் 3700 மீட்டர் ஆழம் இருக்கும். அதாவது 12,000 அடி. இதை எப்படிப் புரிந்துகொள்வது? கோயில் கோபுரம் பார்த்திருக்கிறீர்களா? அது உயரமாக இருக்குமே? அதுபோல 45 கோபுரங்களை ஒன்றன்மீது  ஒன்றாக அடுக்கினால்  என்ன அளவு வருமோ, அந்த அளவுக்குக் கடல் ஆழமாக இருக்கும். சரி, இது சராசரி ஆழம்.... கடலின் அதிகபட்ச ஆழம் எவ்வளவு? பசிபிக் பெருங்கடலில் மரியானா பள்ளம் (Mariana Trench) என்ற பகுதியில்  சாலஞ்சர்  டீப் என்ற இடம் இருக்கிறது. அங்குதான் கடலின் ஆழம் மிகவும் அதிகமாக இருக்கும். அங்கு கடலின் ஆழம் 11,928 மீட்டர். என்ன? புரிந்துகொள்ள சிரமமாக இருக்கிறதா? 11 கிலோமீட்டர் ஆழம்! இன்னும் எளிமையாகப் புரிந்துகொள்ள ஒரு உதாரணம் சொல்லட்டுமா? எவரெஸ்ட் சிகரம் இருக்கிறதே, அந்த சிகரத்தை அப்படியே சாலஞ்சர்  டீப்பில் போட்டால்  அது முழுமையாக மூழ்கிவிடும். அதற்கும் மேல் 3 கிலோமீட்டர் அளவுக்கு நீர் இருக்கும்! இந்த ஆழங்களை எல்லாம் எப்படி அளந்தார்கள்? அந்த காலத்தில் Lead line என்ற ஒருவகை கயிறை வைத்திருப்பார்கள். ஒவ்வொரு ஆறு அடிக்கும் அதில் ஒரு முடிச்சு இருக்கும், இந்தக் கயிறின் முனையில் ஒரு காரீய உருளை இருக்கும். கப்பல் மேல் நின்றுகொண்டு இந்தக் கயிறை கடலுக்குள் விடுவார்கள். அந்தக் கயிறு  அப்படியே  கீழே போகும். ஒரு கட்டத்தில் காரீய உருளை கடல் தரையில் இடிக்கும்போது எத்தனை முடிச்சு உள்ளே போயிருக்கிறது என்பதைக் கணக்கிட்டால் ஆழம் தெரிந்துவிடும். இப்போது தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது என்பதால் ரேடார், சோனார் போன்ற கருவிகள்  பயன்படுத்தப்படுகின்றன.  நீங்கள் பார்த்த மிக உயரமான கட்டிடம் எது? அது எவ்வளவு உயரமாக இருந்தது? எங்களுக்கு சொல்லுங்கள்.  நாராயணி சுப்ரமணியன் உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.  கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக  பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர்  பட்டமும் பெற்றவர். இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி  கல்விக்குழுமத்தின்   படைப்பூக்க   விருது ,பாவை  விருது  ஆகிய விருதுகளைப்  பெற்றுள்ளார். கடலும்  மனிதரும் , விலங்குகளும்  பாலினமும் , ஆழ்கடல், சூழலும்  பெண்களும் , நெய்தல் மீன்கள்  உள்ளிட்ட   பதினைந்து     நூல்களை எழுதியுள்ளார்.

  • வரலாற்றின் இடைவெளிகளை இலக்கியத்தால் நிரப்பமுடியும். – மருதன்

    நேர்காணல் – கமலாலயன் வரலாறு என்பது என்ன? வரலாறு என்பது இறந்த காலத்தை ஆராயும் துறை என்பது மிக அடிப்படையான, மிக எளிமையாக ஒரு விளக்கம். ஆனால் இறந்த காலம் என்றொன்று உண்மையில் இருக்கிறதா? அதை நாம் முழுக்கக் கடந்து வந்துவிட்டோமா? வந்துவிட்டோம் என்றால் எதற்காக நாம் இன்னமும் கீழடி, சிந்து சமவெளி, சோழர்கள், முகலாயர்கள் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம்? புதிய சுதந்தர இந்தியா பிறந்தபோது, புதிய இந்தியாவுக்கு ஒரு தேசியச் சின்னம் தேவைப்பட்டபோது ஜவாஹர்லால் நேருவுக்கு ஏன் அசோகரின் நினைவு வந்தது? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அசோகரிடமிருந்து நாம் பெற்றுக்கொள்வவதற்கு இன்னமும் ஏதேனும் இருக்கிறதா என்ன? ஆம் என்றால் அவர் இறந்த காலத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் கிடையாதா? நமக்கு அசோகர் தேவை என்றால் இறந்த காலம் நமக்குத் தேவை என்றுதானே பொருள்? இறந்த காலம் என்பது மண்ணோடு மண்ணாகிப்போன பழங்கதை என்றால் உலகெங்கும் ஏன் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்கிறார்கள்? எகிப்தையும் கிரேக்கத்தையும் மெசபடோமியாவையும் ஏன் வரலாற்றாசிரியர்கள் இன்னமும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்? சாக்ரடீஸ், பிளேட்டோ, புத்தர், கன்ஃபூஷியஸ் ஆகியோர் குறித்து புதிய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருப்பது ஏன்? வள்ளுவரும் ஷேக்ஸ்பியரும் ஷெல்லியும் டால்ஸ்டாயும் பாரதியும் புதுமைப்பித்தனமும் இறந்த காலத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்களிடமிருந்து நாம் இன்றும் புதிது, புதிதாகக் கற்றுக்கொண்டிருப்பதற்கு என்ன காரணம் இருக்கமுடியும்? ஒன்றுதான். காலம் ஒருபோதும் இறப்பதில்லை. நினைவுகள் ஒருபோதும் மறைவதில்லை. நாம் வாழும் காலம் என்பது வானத்திலிருந்து திடீரென்று வந்து விழுந்த ஒரு மாயம் அல்ல. அது கடந்த காலத்தின் தொடர்ச்சி. உண்மையில் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் போன்ற பிரிவினைகள்கூட ஒரு வசதிக்காக நாமே உருவாக்கியவைதாம். ஆற்று வெள்ளம்போல் காலம் தொடர்ச்சியாக முன்னோக்கிப் பாய்ந்துகொண்டே இருக்கிறது. அந்த ஓட்டம்தான் காலம். இன்றைய உலகைப் புரிந்துகொள்ள நேற்றைய உலகை நாம் புரிந்துகொள்ளவேண்டும். நேற்றைய உலகம் என்பது அதற்கு முந்தைய தினத்தின் தொடர்ச்சி. எப்போதோ வாழ்ந்த மனிதர்களை அல்ல, இப்போதும் வாழும் நம்மைதான் வரலாறு ஆராய்கிறது. வரலாறு என்றால் என்ன எனும் கேள்விக்கு நான் அளிக்க விரும்பும் மூன்று சொல் பதில், 'அது நம் கதை' என்பதுதான். வரலாற்றுச் செய்திகளைக்குழந்தை இலக்கியங்களில் எப்படிப் பொருத்தமாக இணைப்பது? வரலாற்றில் கதைகள் மலை மலையாகக் கொட்டிக்கிடக்கின்றன. கனவை விஞ்சும் பல சாகசங்கள் நிஜத்தில் நிகழ்ந்திருக்கின்றன. இலக்கியம் ஒரு வகையில் வரலாற்றைச் சார்ந்திருக்கிறது என்றே சொல்லலாம். வரலாறு உண்மை சார்ந்தது. இலக்கியம் கற்பனை சார்ந்தது. என்றாலும் இந்த இரண்டும் தொடர்ந்த உரையாடிக்கொண்டிருக்கின்றன. வரலாற்றிலிருந்து இலக்கியம் நிறைய கற்றுக்கொண்டதுபோல் இலக்கியத் தரவுகளிலிருந்தும் வரலாறு நிறையவே பலனடைந்திருக்கிறது.  எடுத்துக்காட்டுக்கு, தொன்மக்கதைகளை எடுத்துக்கொள்வோம். எல்லாப் பண்டையச் சமூகங்களிலும் இலியட், ஒடிசி, ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்கள் இடம்பெற்றுள்ளன. இவை எல்லாம் காலம் காலமாக வாய்மொழி இலக்கியங்களாகக் கடத்தப்பட்டவை. இவற்றில் கற்பனை மிகுதி என்றாலும் வரலாற்று ஆசிரியர்கள் இவற்றை ஆழ்ந்த வாசிக்கிறார்கள். விரிவாக ஆராய்கிறார்கள். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் வரலாறும் கற்பனையும் வாய்வழிக் கதைகளும் அழகாக ஒன்று கலந்திருக்கின்றன. தேவதைக் கதைகளையும் நீதிக்கதைகளையும் அற நூல்களையும் சங்க இலக்கியங்களையும் முழுக்கற்பனை என்று சொல்லிவிடமுடியுமா? காலம் கடந்து இன்றும் இக்கதைகள் நம்மோடு உயிர்த்திருப்பதற்கு என்ன காரணம் இருக்கமுடியும்? இக்கதைகள் எங்கிருந்து தோன்றின, எப்படிப் பரவின? இதுபோன்ற கேள்விகளை எழுப்பும்போது இலக்கியமும் வரலாறும் கைகோர்த்துக்கொள்கின்றன. டால்ஸ்டாயின் பிரமாண்ட படைப்பான போரும் அமைதியும் வரலாற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு நாவல். அதில் கற்பனையும் உண்மையும் பிரிக்கமுடியாத ஒன்று கலந்திருக்கின்றன. வரலாற்றிலிருந்து எதை எடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும்? எது குழந்தைகளுக்குப் பொருத்தமாக இருக்கும்? எது பொது வாசகர்களுக்கான கதை? எதைச் சிறுகதையாக மாற்றலாம், எது நாவலுக்கான பொருள் போன்றவற்றை ஓர் இலக்கியவாதிதான் தீர்மானிக்கிறார். ஒரு நல்ல இலக்கியவாதியால் எதையும் நல்ல கதையாக மாற்றமுடியும். கடந்த காலத்திலிருந்து தனது நாடகத்துக்கு ஏற்றதை ஷேக்ஸ்பியரும் தனது நாவலுக்கு ஏற்றதை டால்ஸ்டாயும் சரியாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டனர். இன்று ஒருவர் கதையோ நாடகமோ கவிதையோ நாவலோ எழுதும்போது அதேபோல் தனக்கானதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளமுடியும். 3. வரலாற்றையும் புனைவையும் கலந்து நாம் எழுதுகிறோம் என்றால், பிற்காலத்தில் அவற்றை  ஆய்வு செய்பவர்கள் எப்படி அவற்றைப் பிரித்து இனங்காண முடியும்? நெப்போலியனைக் கற்றவர்கள், ரஷ்யாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான போரின் பின்னணியைத் தெரிந்துகொண்டவர்கள் டால்ஸ்டாயை வாசிக்கும்போது அவர் எங்கெல்லாம் கற்பனை செய்திருக்கிறார், எங்கெல்லாம் வரலாற்றைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். ஓர் இலக்கியப் படைப்பை வாசிக்கும்போது அதிலுள்ளவை அனைத்தும் உண்மை என்று நாம் எடுத்துக்கொள்வதில்லை.  சாக்ரடீஸ் எப்படி இருப்பார்? அசோகர் எப்படிப் பேசுவார்? புத்தர் இருபத்து நான்கு மணி நேரமும் புன்முறுவல் பூத்த முகத்தோடுதான் காட்சியளிப்பாரா? ஒரு வரலாற்று ஆசிரியரிடம் சென்று கேட்டால், என்னிடம் தரவுகள் இல்லை. எனவே தெரியாது என்றுதான் சொல்வார். அவர் சொல்வதுதான் உண்மை. ஆனால் அதற்காக நாம் புத்தரை, அசோகரை, சாக்ரடீஸை, இன்னபிறரைக் கற்பனை செய்யாமல் இருக்கமுடியுமா? வரலாறு வந்து சொல்லட்டும் என்று கன்னத்தில் கை வைத்துக்கொண்டு காத்திருக்கமுடியுமா? முடியாது. வரலாறு விட்டுச் செல்லும் இத்தகைய இடைவெளிகளை இலக்கியம் கற்பனையைக் கொண்டு அழகாக இட்டு நிரப்புகிறது.  எழுதியவர் யார், அது எத்தகைய நூல் என்பதைக் கொண்டு எது வரலாறு, எது கற்பனை என்பதைப் பிரித்தறிய முடியும். எனக்குத் தரவுகளோடு கூடிய ஆய்வுகள் மட்டுமே தேவை என்போர் வரலாற்றை நாடலாம். கடந்த காலத்தைக் கண்மூடி கற்பனை செய்து பார்க்க விரும்புகிறவர்கள் இலக்கியத்தை நாடலாம். நான் படித்த கதையில் எது உண்மை, எது கற்பனை என்று மயக்கம் கொள்வோர் மீண்டும் வரலாற்றை நாடி உண்மையைத் தெரிந்துகொள்ளலாம்.  4. தமிழில் சிறார் இலக்கியங்களில் எந்த அளவுக்கு வரலாறு இடம் பெற்றிருக்கிறது? இன்றைய தமிழ் சிறார் இலக்கியங்களின் நிலை   நான் பார்த்தவரை மிக மிகக் குறைவாகவே இடம்பெற்றுள்ளது. கதை எழுதுபவர்கள் கதையல்லாத துறைகளைச் சேர்ந்த நூல்களை நிறைய வாசிக்கும்போது அவற்றிலிருந்து பெற்றதைக் கதைகளில் செலுத்தமுடியும் என்று நம்புகிறேன். படக்கதை, சிறுகதை, நாவல் என்று பல வடிவங்களில் வரலாற்றைக் கற்பனை கலந்து அழகாகக் கொண்டு செல்லமுடியும். அதற்கான சாத்தியங்கள் கடலளவு விரிந்து கிடக்கிறது. மருதன் - தமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர். இதழியலாளர்,கல்கி, கோகுலம் ஆனந்தவிகடன், சுட்டி விகடன், அவளவிகடன், ஜூனியர் விகடன் குங்குமம், இந்து தமிழ்திசை போன்ற பத்திரிகைகளில் தொடர்கள் எழுதியிருக்கிறார். தற்சமயம் கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர். மாயாபஜாரில் இவர் எழுதிய இளம் வாசகர்களுக்கான இடம்,பொருள், மனிதர், விலங்கு, மாய உலகம், தேன் மிட்டாய் போன்ற தொடர்களின் மூலம் குழந்தைகளைக் கவர்ந்தவர். பிற முக்கியமான படைப்புகள் அசோகர், ரோமிலா தாப்பர், இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை. கமலாலயன் சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார். மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

  • கிளிக்கூடு

    அப்பொழுதுதான் ஒரு பாட்டம் மழை பெய்து வெறித்திருந்தது. உச்சி மதிய நேரத்தில் ஈரக்காற்று வீசிக்கொண்டிருந்தது. ஊருக்கு மேல்புறம் ஓடைக்கரையில் நின்றுகொண்டிருந்த பனைமரக்கூட்டத்தில் உட்கார்ந்துகொண்டு “க்.கிய்..க்.கிய்..கீ..” என கிளிகள் சத்தம் போட்டுக்கொண்டிருந்தன. ஓலைகள் காய்ந்து விழுந்து நின்ற ஒரு மொட்டைப்பனையின் பொந்திலிருந்து இரண்டு கிளிக்குஞ்சுகள் தலையை நீட்டி வெளியே எடடிப்பார்த்தன. சிற்றோடையில் மழைநீர் பெருக்கெடுத்து சுழித்தபடி ஓடிக்கொண்டிருந்தது. அதில் காய்ந்த மரக்குச்சிகளும் இலைகொடிகளும் சலசலத்தபடி மிதந்துகொண்டு போவதைப் பார்த்து குஞ்சுகள் அதன் பொந்து வீட்டுக்குள் போய் ஒளிந்துகொண்டன. அவற்றின் தாய்க்கிளி எங்கெல்லாமோ தொலைவில் பறந்து திரிந்து தட்டாங்காய், மிளகாய், நாவல்பழம் என உண்பதற்கு கொண்டுவந்து கொடுத்தது.  குஞ்சுக்கிளிகள் சந்தோசமாக வளர்ந்துவந்தன. அதற்கு இறக்கைகள் முளைத்து பறக்கவேண்டிய நேரமும் நெருங்கி வந்தது. அன்றைக்கு தாய்க்கிளி குஞ்சுகளைப் பார்த்து, “குழந்தைகளே.. உங்களுக்கு நெய்த்தக்காளி பழங்களை கொண்டு வாரேன். ஆசையாய் தின்னலாம். அதுவரை கூட்டுக்குள்ளேயே விளையாடிக்கிட்டு இருங்கள்” என்று தன் இணையோடு வெகுதொலைவிற்கு பறந்து போனது.  அவை இறக்கை தட்டிப்பறந்து தொடுவானத்திற்கப்பால் மறைவதுவரை பார்த்துக்கொண்டிருந்த குஞ்சுகள் கூட்டிற்குள் போய் இருந்துகொண்டன. எங்கிருந்தோ பறந்தவந்த மின்மினிப்பூச்சி கூட்டிற்குள் எட்டிப்பார்த்தது. கூட்டில் வெளிச்சம் படரவும் குஞ்சுகள் “நீ  யார்” என்று கேட்டது.  “நான் உன் தாய்க்கிளியின் நண்பன். நான் வசிக்கும் மாமரத்திற்கு பழங்களை உண்ணவரும்போது எங்களுக்குள் நட்பு உண்டானது” “நீ எங்கள் வீட்டில் விளக்கேற்றி வைத்து பிரகாசமாய் ஜொலிக்கிறாய். எங்கள் கூடு  இப்பொழுது வெளிச்சத்தில் மிணுங்குகிறது. உன்னை எங்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. இவ்வளவு நாட்களாக எங்கே போயிருந்தாய்” “நாங்கள் குளிர்நேரத்தில் மண்ணுக்குள்ளே போய் இருந்துகொள்வோம். கோடை நேரத்தில்தான் வெளியே வருவோம்” “அம்மா நெய்த்தக்காளி கொண்டு வாரேன் என்று போயிருக்கிறது. நீயும் இருந்து சாப்பிட்டுப்போ” “அதெல்லாம் எனக்கு பிடிக்காது. நத்தை, புழு, பூச்சிகளைத்தான் சாப்பிடுவேன். சரி குழந்தைகளே.. பத்திரமாக இருந்துகொள்ளுங்கள். வேடர்கள் வரும் சத்தம் கேட்டது. அதுதான் உங்களை எச்சரிக்கை செய்ய வந்தேன். கூட்டுக்கு வெளியே எட்டிப்பார்க்காதீர்கள். பிடிச்சிட்டுப்போயிருவான். நான் வாரேன்” என்று மினுக்மினுக்கென பறந்து போனது. கூட்டுக்குள் லேசான இருட்டு படர்ந்தது.  ஓடைக்கரையில் சிறுவர்களின் பேச்சு சத்தம் கேட்டது. மின்மினியின் எச்சரிக்கையை மறந்து கிளிக்குஞ்சுகள் பொந்துக்கு வெளியே வந்து எட்டிப்பார்த்தன.  “ஏய்.. அங்கே பாரு. கிளிக்குஞ்சுகள்” மால்ராசுக்கு கையை நீட்டி உணர்த்தி பனைமரத்தின் பொந்தை காட்டினான் மல்லையா. குஞ்சுகளும் பயமறியாமல் குனிந்து கீழே பார்த்தன. “அ..ய்.ய்.யா…” உற்சாகத்தில் ஆர்ப்பரித்தான் மால்ராசு. சிறுவர்கள்  இருவரும் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார்கள். விடுமுறை நாள் என்பதால் காடை கதுவாலி பிடிக்க வந்தவர்கள் கிளிகளை பார்த்துவிட்டார்கள். மல்லையா சரசரவென மொட்டைப்பனையில் ஏறினான். தம் கூட்டைப் பார்க்க ஒருவன் ஏறுவதைப் பார்த்து கிளிகள் பொந்துக்குள் போய் ஒளிந்துகொண்டன. பாதிப்பனை உயரத்தில் இருந்த கிளிக்கூட்டில் கையைவிட்டு அந்தக்கிளிகளை பிடித்து டவுசர்பைக்குள் திணித்து மெதுவாக பனையைவிட்டு இறங்கினான்.  உள்ளங்கைகளில் குஞ்சுகளை எடுத்துவைத்து அதை மால்ராசுக்கு காட்டினான். அதன் இளம்பச்சை இறகுகளை நீவிவிட்டான். வளைந்து சிவந்த அலகை ஆட்காட்டிவிரலால் தடவிப்பார்த்தான். கிளிகள் இறக்கைகளை தட்டி பறக்க எத்தனித்தன. பொத்திப் பிடித்துக்கொண்டான். கிளிகள் ஒன்றும் செய்ய இயலாமல் மிரண்டுபோய் பார்த்தன.  மல்லையா கிளிகளை வீட்டிற்கு கொண்டுவந்து ஒரு கம்பிவலைக்கூண்டிற்குள் அடைத்து கூரைவிட்டத்தில் தொங்கவிட்டான். பாசிப்பயறும் ஒரு கிண்ணத்தில் தண்ணீரும் கொண்டுபோய் “சாப்பிடு” என்று வைத்தான். கிளிகள் தன் தாய்தந்தையை நினைத்து கலங்கின. அவற்றின் கண்களில் பிரிவின் ஏக்கம் தெரிந்தது. மல்லையா வைத்த பயிரையும் தண்ணீரையும் முகர்ந்துகூட பார்க்கவில்லை. தன் பொந்துக்கூட்டில் இருந்தபோது பனையோலைகள் அசைந்து விசிறிய காற்று வருடிக்கொடுத்து உறங்கச்செய்ததை நினைத்துப் பார்த்தன. இப்போது கூண்டை தொங்கவிட்டிருந்த  வீட்டில் காற்று உள்ளே வராமலும் அடுப்பங்கரைப் புகை வந்து மண்டியும், மனிதர்கள் சப்தமாக பேசும் ஒலிகளும் அதற்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. என்னசெய்வதென்று தெரியாமல் கூண்டின் வலைக்கம்பிகளில் கொத்திக்கொத்தி சோர்ந்து போய்விட்டன.  நெய்த்தக்காளிப்பழங்களை தேடிப்போன கிளிகள் தன் கூட்டிற்கு திரும்பி வந்தன. அதன் அலகுகளில் வரிவரியான கோடுகளுடன்  பழுப்பு நிறத்தொலிகள் மூடிய நெய்த்தக்காளிப் பழங்கள் வெளிர் ஆரஞ்சு வண்ணத்தில் பளப்பாய் இருந்தன. ஆவலாய் இரை கொண்டுவந்த கிளிகள் தன் குஞ்சுகளைக் காணாமல் பரிதவித்துப் போய் அந்தப் பனைமரங்களை சுற்றிச்சுற்றிப் பறந்தன. காடெல்லாம் வட்டமடித்துப் போய் தன் குஞ்சுகளை தேடித்தேடிப்பார்த்தன. பொழுது இருட்டும்வரை எங்கு தேடினாலும் கிடைக்காமல் துயரத்தோடு கூட்டிற்குத் திரும்பின. இரவெல்லாம் தூங்காமல் தன் குஞ்சுப்பறவைகளை நினைத்து கத்திக்கொண்டிருந்தன. தோலுரிந்த நெய்த்தெக்காளிப்பழம் கண்களை உருட்டிப்பார்த்து பேசியது.  “கிளியே… நீ காடு மேடெல்லாம் பறந்து போய் தேடிப்பார்த்தாய். கொஞ்சம் ஊருக்குள்ள போய் பாரு. மனிதர்கள் யாராவது இங்கே வந்து பிடிச்சிட்டுப்போயிருப்பாங்க” “பழமே… நீ சொல்வதும் சரிதான்” என்று கூட்டிலிருந்து தன் இணையோடு மறுபடியும் குஞ்சுகளைத் தேடிப்பறக்கும்போது பொழுது விடிந்திருந்தது.  ஊருக்குள் போய் வீட்டுக்கூரைகளிலும் மரக்கிளைகளிலும் போய் உட்கார்ந்துகொண்டு ஜோடிக்கிளிகள் சத்தம் கொடுத்தன. கூண்டில் அடைக்கப்பட்டிருந்த குஞ்சுகள் இது தன் தாய் கூப்பிடுவது போல் உள்ளதே என பதிலுக்கு “க்.கிய்.கிய்…”யென சத்தம் கொடுத்தன.  “ஆஹா… தன்னோட குஞ்சுகள் இங்கேதான் இருக்கிறது” என சன்னல் வழியாக சத்தம்வந்த வீட்டிற்குள் எட்டிப்பார்த்தது. உள்ளே போய் கொக்கி போல் வளைந்த கால்நகங்களால் கூண்டின் கம்பிகளில் பிராண்டியது. குஞ்சுகள் பறக்கமுயன்று  முடியாமல் தன் அலகுகளால் தாய்க்கிளியை தொட்டுத்தொட்டுப் பார்த்தது. மனிதர்களின் நடமாட்டம் தெரியவும் பறந்துபோய் அருகிலிருந்த மரத்தில் போய் உட்கார்ந்த ஜோடிக்கிளிகளை குஞ்சுகள் ஏக்கத்தோடு பார்த்தன. அதன்பிறகான நாட்களில் ஆள்அருவமற்ற வேளைகளில் பழம், கொட்டைகள் என கொண்டுவந்து கொடுத்து தன் குஞ்சுகளோடு கொஞ்சநேரம் பேசிவிட்டுப் போனது.  இப்போதெல்லாம் மல்லையா பெற்றோர் சொல்படி கேட்பதில்லை. அவனுக்கு சேட்டைகள் அதிகமாகிப்போனது என்று வீட்டிலுள்ள பெரியவர்கள் அவனை வெளியூரிலுள்ள பள்ளிக்கூடத்தில் சேர்த்து அங்கேயே மாணவர்விடுதியில் தங்கவைத்துவிட்டனர். மல்லையாவுக்கு அந்தப் புதிய இடம் பிடிக்கவேயில்லை. எப்போது பார்த்தாலும் பிரம்பை கையில் வைத்தபடி கண்டிப்பு காட்டும் ஆசிரியர்கள், திருக்கு மீசை உருட்டும் விழிகளுடன் இருக்கும் விடுதி வார்டன்களை பார்த்து தன் சுதந்திரம் பறிபோனதுபோல் உணர்ந்தான். சிநேகிதர்களை சேர்த்துக்கொண்டு சில்லான் பிடிக்கப்போக முடியலை, மரமேறிக்குரங்கு விளையாட முடியவில்லை என்று அந்நியப்பட்டுப்போய் ஒடுங்கிப்போயிருந்தான். வேகாத சாதமும் பிடிக்காத குழம்பும் அடிக்கடி வீட்டை ஞாபகப்படுத்தியது.  புதிய இடத்தில் உற்சாகமின்றி இறுக்கமாய் நாட்கள் நகர்ந்து போனது. தான் மொட்டைப்பனையில் பிடித்து வந்து கூண்டில் அடைத்து வளர்த்த கிளிகளைப் பற்றி  இப்போது நினைவிற்கு வந்தது.  பள்ளிக்கு காலாண்டுத் தேர்வுக்குப் பின்  விடுமுறை விட்டிருந்தார்கள். மகிழ்ச்சியாக வீட்டிற்குப் போனதும் நேராக கிளிக்கூண்டிற்கு அருகில்தான் போனான். கிளிகளுக்கு அழகிய பச்சை வண்ணத்துடன்  இறக்கைகள் முளைத்து நன்றாக வளர்ந்திருந்தன. அதன் மூக்கு கோவைப்பழமாய் சிவந்து  வசீகரம் செய்தது. “இன்று உங்களுக்கு விடுதலை” என்று மெல்ல கூண்டின் கதவுகளை திறந்தான். அந்த நேரத்தில் விருட்டென வெளியேறிய கிளிகள் இறக்கைகளை அசைத்துப் பறந்தன. அவை மேகாட்டு ஓடைக்கரை பனங்காட்டைப்பார்த்துதான் சப்தம் கொடுத்தபடியே சென்றன. பனங்காட்டிலிருந்து ஜோடிக்கிளிகள் எழுப்பிய சப்தம் எதிரொலியாய் கேட்டு காற்றோடு கலந்தது. மல்லையா கிளிகள் பறந்துசென்ற திசையை பார்த்து தன் கைகளை மடக்கி இறக்கைகளை அசைப்பதுபோல் தட்டிக்கொண்டிருந்தான். ஜெ.பொன்னுராஜ்  1964. சுகாதார ஆய்வாளர் பணிநிறைவு. படைப்புகள்: பருத்திக்காடு, குமாரபுரம் ரயில் நிலையம் சிறுகதை தொகுப்பு, மாவளி நாவல். பதிப்பில்: நாட்டுப்புற கதைகள் பாகம் 1 & 2

  • அணில் செய்த உதவி

    பள்ளிக்குப் பக்கத்தில் இருந்த பெரிய மாமரம் பல உயிர்களின் இல்லமாக இருந்தது. அதில் ஒரு கிளையில் சின்ன குருவியும் அதன் குஞ்சுகளும் வாழ்ந்து வந்தன. அதே மரத்தில் கொஞ்சம் மேலே, சுறுசுறுப்பான ஒரு அணிலும் தன் வீட்டை கட்டியிருந்தது. அணிலும் குருவியும் நண்பர்களாக இருந்தனர், குருவி 'கீச்... கீச்...' என்று பாடினால், அணில் வாலை ஆட்டிக் கொண்டு அதனுடன் விளையாடும்'. ஒரு நாள் மதியம். திடீரென்று வானத்தில் கரு மேகங்கள் சூழந்தன. பலத்த காற்று வீசியது. மாமரத்தின் கிளைகள் எல்லாம் சுழன்று சுழன்று ஆடின. 'குருவியே! கூடு கவனம். காற்று அதிகமாக வீசுது.' என்று அணில் எச்சரித்தது. குருவியும் தன் கூடு குலுங்குவது கண்டு பயந்தது. குஞ்சுகளும் அஞ்சி ஒடுங்கின. அடுத்த நிமிடம், ஒரு பலத்த காற்று அடித்ததில் குருவியின் கூடு 'தொப்'யென்று தரையில் விழுந்தது. அதில் இருந்த இரண்டு சிறிய குஞ்சுகளும் பயந்து 'கீச்... கீச்...' என்று சத்தமிட்டன. குருவி பதறிப் போய் கீழே இறங்கி, 'அய்யோ! என் குஞ்சுகள்...' என்று அழுதது. அந்த நேரம் அணில் விரைவாக கீழே பாய்ந்து வந்தது. 'குருவியே! கவலைப்படாதே... உன் குஞ்சுகளை நான் காப்பாத்துறேன்' என்று தைரியம் சொன்னது. மழை கொட்டியது. காற்று இன்னும் நிற்கவில்லை. குச்சிகளாலும் பஞ்சாலும் ஆன கூடு நனைந்துக் கிடந்தது. அணில் தன் கூர்மையான பற்களாலும் வலிமையான முன்னங்கால்களாலும் கூட்டை நன்றாகப் பிடித்து மரத்தில் ஏறத் தொடங்கியது. குருவி கூடவே பறந்தது. 'மெதுவா... இங்கே வா... இந்த கிளைதான் பாதுகாப்பா இருக்கும்' என்று கூறி வழிகாட்டியது. பல சிரமங்களுக்குப் பிறகு, அணில் கூட்டையும் குஞ்சுகளையும் பத்திரமாக கிளையில் வைத்தது. அணிலுக்கு இப்போதுதான் மூச்சு வந்தது. குருவி நிம்மதியானது. 'நன்றி நண்பா! நீ செய்த உதவியால் என் குஞ்சுகள் காப்பாற்றப்பட்டன. இதை நான் எப்போதும் மறக்க மாட்டேன்' என்றது குருவி கண்ணீர் விட்டது. கண்ணீர்த்துளிகள் மழைத்துளிகளோடு கலந்தன. ஆனால் அணில் உதவி செய்த போது அதற்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது. கூட்டை தூக்கிச் செல்லும்போது அணிலின் வால் ஒரு கூர்மையான கிளையில் சிக்கி காயம்பட்டது. அணில் வலியால் கத்தியது. மரத்தில் சமநிலை வைத்துக் கொள்வது அதற்குக் கடினமானது. 'அய்யோ!... என் வால்!... வாலை அசைத்தாலே வலிக்கிறது. எப்படி நான் மரத்தில் ஓடப் போகிறேன்? என்று அணில் கவலைப்பட்டது. அடுத்த நாள் அது வழக்கம் போல் மரக்கிளைகளில் ஓட முடியவில்லை. அப்படி ஓடாமல் இருந்தால் உணவு, தண்ணீர் எங்கே கிடைக்கும்? அணிலின் நிலையைப் பார்த்து குருவி வருந்தியது. 'அணில் என் குஞ்சுகளைக் காப்பாற்றியது. இப்போ அது சிக்கலில் இருக்கிறது. நான் எப்படி உதவப் போகிறேன்?' என்று யோசித்தது. அடுத்தநாள் காலை. குருவி அருகிலிருந்த வயலுக்குப் பறந்துச் சென்றது. ஒரு தோட்டத்திற்கும் சென்றது. தானியங்களையும் சிறு பழங்களையும் தன் அலகில் எடுத்துக் கொண்டு வந்தது. அவற்றை அணிலின் அருகில் வைத்தது. 'நண்பா, நீ ஓட வேண்டாம், இங்கேயே ஓய்வு எடு. உனக்குத் தேவையான உணவுகளை நான் கொண்டு வந்து தருகிறேன்' என்றது குருவி. அணில் ஆச்சரியப்பட்டது. 'நீ சின்ன பறவை! உனக்கும் உன் குஞ்சுகளுக்கும் உணவு தேவை. எனக்கும் சேர்த்து உழைக்க முடியுமா?' என்று கேட்டது. குருவி சிரித்தபடி, 'நண்பர்கள் என்றால் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். நீ என் குஞ்சுகளைக் காப்பாற்றினாய். இப்போது நான் உன்னை பார்த்துக் கொள்கிறேன்.' என்றது.  சில நாட்கள் கழிந்தன. குருவியின் உதவியால் அணில் ஓய்வெடுத்தது. அதனால் அணிலின் வால் குணமாகியது. மீண்டும் அது மரக்கிளைகளில் சுறுசுறுப்பாக ஓடத் தொடங்கியது. அந்த நாளிலிருந்து அணிலும் குருவியும் நெருக்கமான நண்பர்களானார்கள். எப்போதும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்தனர். சுகுமாரன் 1975 ஆம் ஆண்டு முதல் சிறுகதை, நாவல் கட்டுரை சிறார் இலக்கியம் மொழி பெயர்ப்பு என 75 நூல்கள் எழுதியிருக்கிறார் அதில் 40 நூல்கள் மொழிபெயர்ப்புகளாகும். பபாசியின் அழ.வள்ளியப்பா விருது, தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவராக இருக்கிறார்.

bottom of page