top of page

ஏன் பிறந்தோம்? - 1


ree

குழந்தைகளுக்குத் தத்துவமா? இதென்ன கேலிக்கூத்தாக இருக்கிறது? என்று யோசிக்கிறீர்களா? ஒரு உண்மை தெரியுமா? இயற்கையில் குழந்தைகள் எல்லாருமே தத்துவவாதிகள் தான்.


கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறதா? தத்துவம் எல்லாம் மண்டையைப் போட்டு உடைக்கிற காரியம். பெரியவர்களுக்கே புரியாத விஷயம். இதில் குழந்தைகளுக்குத் தத்துவம் என்பதெல்லாம் கேலிக் கூத்தாக இருக்கிறது என்று நாம் நினைக்கலாம்.


ஒரு விஷயம் தெரியுமா? குழந்தைகள் மட்டுமல்ல. பெரியவர்களான நாமும் தத்துவவாதிகள் தான். அன்றாடம் தத்துவச்சிந்தனைகளுடன் தான் நாளைத் தொடங்குகிறோம். நாளை முடிக்கிறோம். நாமும் தத்துவவாதிகள் என்று நமக்கே தெரியாது. ஏன் மற்றவர்களுக்கும் கூடத் தெரியாது? ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! இன்னும் பல ஆச்சரியங்களை இந்தத் தொடரில் சந்திக்க இருக்கிறோம்.

இப்போது குழந்தைகளிடம் தொடங்குவோம்.


பொதுவாகக் குழந்தைகளுக்கு என்ன தெரியும்? என்றோ எதுவும் தெரியாது! என்றோ குழந்தைகள் மீது அலட்சியம் காட்டுகிறோம். ஆனால் பிறக்கும் போதே குழந்தைகள் தத்துவச்சிந்தனையுடன் பிறக்கின்றன.


எப்படி? அதைப் பார்ப்பதற்கு முன்னால் முதலில் தத்துவம் என்றால் என்ன? என்று பார்த்து விடலாமா?


தத்துவம் என்பது இந்த உலகை அறிந்து கொள்வது. வாழ்க்கையைப் புரிந்து கொள்வது. வாழ்க்கையை விளக்குவது. வாழ்க்கையின் நோக்கம் பற்றி விவாதிப்பது. வாழ்க்கையின் லட்சியங்களை உருவாக்குவது.


இப்படிச் சொல்லலாம். இவை தனித்தனியாகவோ சேர்ந்தோ இருக்கலாம். சரிதானே!

இந்த பூமியில் உள்ள எந்த விலங்குகளோ, பறவைகளோ, பூச்சிகளோ, தத்துவம் பேசுகிறதா?


இல்லை. ஏன் பேசுவதில்லை?


மிக முக்கியமான காரணம், அவை தங்களையும் தங்களைச் சுற்றியுள்ள இயற்கையையும் பிரித்துப் பார்ப்பதில்லை. இயற்கையின் சூழலுக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை வாழ்கின்றன. அப்படி வாழ்வதற்கான இயற்கைச்சூழல் இல்லாதபோது மறைந்து விடுகின்றன. அப்படிப் பல பறவைகள், விலங்குகள் மறைந்ததை நாம் அறிவோம்.


அவற்றின் தோற்றம் பற்றியோ, மறைவைப் பற்றியோ அவற்றிற்குத் தெரியாது. ஏன் பிறந்தோம் என்றோ? எப்படிப் பிறந்தோம் என்றோ? எதற்காகப் பிறந்தோம் என்றோ? அவை சிந்திப்பதில்லை.


பிறக்கும்போதே தன் உடலில் தகவமைந்திருக்கும் மரபணுக்களின் தூண்டுதலில் உணவு, தங்குமிடம், பாதுகாப்பு, இனப்பெருக்கம் போன்றவற்றைச் செய்கின்றன. இவற்றில் எதையும் கட்டுப்படுத்தவோ, மாற்றவோ விலங்குகளால் முடியாது. இயற்கையின் தீர்மானத்தின் படியே வாழ்ந்து மடிகின்றன.


என்ன காரணத்தினால் அவற்றால் இயற்கையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.


ஆமாம். அவற்றிற்குச் சிந்திக்கும் ஆற்றல் இல்லை. அது தான் எனக்குத் தெரியுமே என்று நினைக்கிறீர்களில்லையா!


சரிதான். ஆக நாம் எல்லாரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வரலாம். தத்துவத்துக்கு அடிப்படை சிந்தனை. அல்லது சிந்திக்கும் ஆற்றல் மனிதன் பிறந்ததிலிருந்தே சிந்திக்கும் விலங்காக இருக்கிறான். எனவே அவன் தத்துவவாதியாகவும் இருக்கிறான்.

என்ன சரிதானே!


அப்படி என்றால் குழந்தைகளும் தத்துவவாதிகளாகத்தான் பிறக்கிறார்கள் என்பதில் உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா?


சரி. தத்துவத்துக்கு அடிப்படை என்ன?

சிந்திக்கும் ஆற்றல்.

சிந்திக்கும் ஆற்றல் என்றால் என்ன?


(தொடரும்)



1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

மிகவும் அருமை ஐயா ..உங்களுடைய அடுத்த பதிவிற்காக காத்து இருக்கிறோம் ஐயா


Like
bottom of page