பேசும் கடல் - 1
- சகேஷ் சந்தியா
- Apr 6
- 2 min read

கடலில் அலைகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன. கடற்கரையில் இனியனும் அமுதாவும் மணலில் கோபுரம் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அலைகள் இனியனையும் அமுதாவையும் தொட்டுவித் துடித்தன. அருகில் அவர்களது அப்பா மீன்பிடி வலைகளை பழுது பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு பெரிய அலை வந்து. அமுதாவையும் இனியனையும் தொட்டது.தஈர மணலில் கட்டிய கோபுரங்களும் வீடுகளும் அலையில் கரைந்தன. அமுதாவுக்கு கோபம் வந்தது.
“உனக்கு ரொம்ப கொழுப்பு, நாங்க கட்டிய வீட்டை ஏன் இடிச்ச “ கடலைப் பார்த்துக் கேட்டாள் அமுதா.
“ இது நான் தினமும் வந்து போகும் இடம்தான் இன்றைக்கு நீங்கள் கோபுரம் கட்டி இருப்பதை கவனிக்கவில்லை, சாரி பேத்தி “ என்று கடல் சிரித்தது.
” என்னது நான் உன் பேத்தியா? ”
“ஆமாம்; மனிதர்களுக்கு நான் தானே தாய்.. கடல்தாய்.. சொல்லப்போனால் அனைத்து உயிர்களுக்கும் நான் தாய் “
’ உண்மைதான் பாட்டி அதுக்கு என் கோபுரத்தை இடிக்க வேண்டுமா? “
உங்க கிட்டே பேசணும்னு தான் வேகமாக வந்துட்டேன்.. சாரி..”
"ஓ.... அப்படியா பாட்டி.. நீங்க கூப்பிட்டா நாங்களே வந்துருப்போம்..”
” இனியன் தொல்காப்பியர் பொருளதிகாரம் அகத்திணையில் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று ஐந்து நிலங்களை பற்றி குறிப்பிடுகிறார். அதில் நெய்தல் நிலத்தை பற்றி கூறும்போது கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என்று அழைக்கப்படும் என்கிறார். அதாவது “வருணன் மேய பெருமணல் உலகம்” என்று அடைமொழி கொடுக்கிறார் “
” கடல் பாட்டி நாங்க எட்டாம் வகுப்பு தான் படிக்கிறோம். தொல்காப்பியம் எல்லாம் எப்படி எங்களுக்கு புரியும்?. ” என்றான் இனியன்.
“அது சரி கடற்கரை என்பது மணல் நிறைந்த பெருவழி என்று இதற்கு பொருள். சங்க பாடல்களில் கடற்கரைப் பகுதிகள் வெண்மணல் வெளியாக இருந்தது என்றும் இங்கு கடல்சார் தொழில் செய்யும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு இவர்களின் தொழில் கருவிகள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடற்கரையோரம் நெய்தல் மக்கள் கடல் தோன்றிய காலத்தில் இருந்தே வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு சான்றாக இந்த பகுதியை உங்களுக்கு நான் சுட்டிக் காட்டுகிறேன்.”
“பாட்டி அம்மா அதுக்கு ஏன் தொல்காப்பியம் சங்க இலக்கியம் என்று சொல்றீங்க நம்ம ஊரில் வாழும் மக்களே இதற்கு சான்று, என்றாள் அமுதா.
” சபாஷ் அமுதா கடற்கரையோரம் கடல் தொழில் செய்து வாழும் அனைவரும் நெய்தல் நிலத்துக்காரர்கள் இவர்கள் அனைவரையும் பரதவர்கள் என்று அழைப்பர் இதற்கு உறுதிமிக்க படகை ஆள்பவன் என்று பொருளும் உண்டு. இவர்கள் படகுகளில் வந்து என்னிடம் மீன்பிடித்து வாழ்கிறார்கள். கட்டுமரம் நாட்டு படகு விசைப்படகு என்று பல வடிவங்களில் மீன் பிடிக்கிறார்கள். தோணி மீன்பிடிக்கப்பல் என்று மிகப்பெரிய அளவிலும் மீன்பிடித்தலும் சரக்கு வணிகமும் நடைபெறுகிறது. மீன்களை பிடிப்பதற்கு வலை தூண்டில் ஒருவகையான உளி போன்றவை பயன்படுத்துகிறார்கள். ”
” எங்க அப்பா வலைவீசி தான் மீன் பிடிப்பாங்க, எப்பவாச்சும் தூண்டில் மீன் பிடிப்பாங்க உளியில் மீன் பிடிப்பதை நாங்கள் பார்த்ததே இல்லையே? ”
என்று இனியன் கேட்டான்.
” பழங்காலத்தில் உளியை எரிந்து மீன் பிடித்துள்ளனர் சுறாமீனை பிடிக்க வலை வீசினால் அது வலையை கிழித்துக்கொண்டு மீண்டும் என்னிடமே வந்துவிடும். அதனால் உளியை எரிந்து மீனை பிடிப்பார்கள். நெய்தல் மக்களை வேட்டை சமூகம் என்றும் அழைக்கிறார்கள்.
“எங்க அப்பா எதுவுமே எங்களுக்கு சொல்லவே இல்லையே ரொம்ப ஆச்சரியமா இருக்குதே!!! ” என்றாள் அமுதா.
” ஆச்சரியப்படுறீங்களா! என்னிடமும் பெரும் ஆச்சரியமிக்க அதிசயங்கள் மிக்க பல வளங்கள் இருக்குது.. என் மடியில் வாழக்கூடிய நெய்தல் நிலத்து மக்களிடமும் பல்வேறு பண்பாட்டுகள் உள்ளன. அதைப்பற்றி உங்களுக்கு நான் விரிவாக சொல்லுகிறேன்.
பண்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட மக்களின் வரலாறு, பண்புகள், பழக்கவழக்கங்கள்?, தொழில்நுட்ப அறிவு, வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு போன்றவற்றை பற்றி அறிவது. நான் உங்களுக்கு புரிகிற மாதிரி விளக்கமா சொல்றேன்.”
” சொல்லுங்க..பாட்டி..”
( அலை அடிக்கும் )
Comments