கரடிக்கு ஏன் குட்டையான வால் வந்தது?
- சுகுமாரன்
- Apr 6
- 2 min read

ஒரு குளிர் கால காலை நேரம்.
ஒரு நரி ஒரு கொத்து மீன்களை மீனவனிடமிருந்து திருடியது. நரி தன் குகைக்குப் போகும் வழியில் கரடியைச் சந்தித்தது.
நரியிடம் இருக்கும் மீன்களைப் பார்த்து கரடியின் கண்கள் பெரிதாயின. கரடியின் நீண்ட வால் உற்சாகத்தில் ஊஞ்சல் போல் ஆடியது.
(குழந்தைகளே, முன்னொரு காலத்தில் கரடிகளுக்கு நீண்ட வால் இருந்தது.)
நரி கரடியிடம் கேட்டது : 'அம்மாடி! இவ்வளவு மீன்கள் உனக்கு எப்படி கிடைத்தது. எனக்கும் கொஞ்சம் கொடுப்பியா?'
'இல்லை. இவைகள் என்னுடைய மீன். இவைகளைப் பிடிக்க எனக்கு ரொம்ப நேரமானது. உனக்கு வேண்டுமென்றால் நீயே பிடித்துக் கொள்' என்றது நரி.
'தண்ணீர் பனிக்கட்டியாக உறைந்து கிடக்கு. நீ எப்படி மீன்களைப் பிடித்தாய்?' கரடி ஆச்சரியத்துடன் கேட்டது.
கண்களை சிமிட்டிக் கொண்ட நரி, 'ஏன் நீ என்னுடன் வா. உனக்குக் காட்டுகிறேன், என்றது.
நரி கரடியை ஏரிக்கு அழைத்துச் சென்றது. 'கரடியே, ரொம்ப எளிது. பனிக்கட்டியில் முதலில் ஒரு ஓட்டைப் போடு. அதில் உன் வாலை விடு. ரொம்ப நேரம் வைத்திரு. உன் வாலில் வந்து மீன்கள் கடிக்கும். நிறைய மீன்கள் வேண்டுமென்றால் ரொம்ப நேரம் வைத்திருக்கனும். வாலை எடுத்து விடாதே. நிறைய மீன்களைப்பிடித்து விட்டோம் என்று நீ நினைத்தவுடன் வாலை பலமாக இழு' என்று நரி கரடிக்கு மீன் பிடிக்கும் வழியைச் சொன்னது.
நரி சொன்னது போலவே கரடி செய்தது. கொஞ்ச நேரம் ஆனது. தன் வாலை ஏதோ கடிப்பது போல் உணர்ந்தது.
'நரி நீ சொன்னது சரி' என்று கரடி மகிழ்ச்சியில் கத்தியது. 'நான் மீன்களை பிடித்து விட்டேன்' என்றும் சொன்னது.
அதைக் கேட்ட நரி ஓடியே போய் விட்டது. ஓடும் போதே தனக்குள் சிரித்துக் கொண்டது.
கரடியின் வால் உறை பனிக்குள் சிக்கிக் கொண்டது என்பது நரிக்குத் தெரியும். அதனால்தான் அது ஓடியது.
கரடி மதியத்திற்கு மேலும் அங்கு உட்கார்ந்து இருந்தது. கரடியின் வால் மேலும் மேலும் கடிப் பட்டது. நரியை விட அதிகமான மீன்களைப் பிடித்து விட்டோம் என்று கரடி எண்ணிக் கொண்டது.
கடைசியாக கரடி மீன்களைப் பிடித்தது போதும் என்று முடிவுக்கு வந்தது.
கரடி தன் வாலை உறை பனிக்குள்ளிருந்து வெளியே இழுத்தது. வால் கொஞ்சம் கூட நகரவில்லை. இன்னொரு முறை வேகமாக இழுத்தது. ஒன்றும் நடக்கவில்லை.
கடைசியாக கரடி தன் முழு பலத்தையும் சேர்த்து இழுத்தது. வால் அறுந்து விட்டது.
(குழந்தைகளே! அன்று முதல் கரடிகளுக்கு குட்டையான வால் வந்து விட்டது.)
கரடி வலியால் கத்தியது. 'நரி நீ என் கையில் கிடைத்தால் சட்னி' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டது.
கரடி நரியைத் தேடி அலைந்தது.
கடைசியாக நரி கரடியிடம் மாட்டிக் கொண்டது.
குழந்தைகளே! கரடி நரியை என்ன செய்தது? என்பது அடுத்த கதை.
( நார்வே நாட்டு நாடோடிக் கதை )
Comments