வண்ண வண்ண பலூன்கள் - கீதாஞ்சலி
- கீதாஞ்சலி
- Aug 15
- 2 min read

இன்று கிருத்திகாவின் எட்டாவது பிறந்த நாள். கிருத்திகாவின் விருப்பபடியே அவர்களது பெற்றோர்கள் வண்ண ஹீலியம் பலூன்களால் வீட்டை அலங்கரித்துள்ளனர்.
கிருத்திகா ஹீலியம் பலூன்களை பார்த்ததும்,
“ ஐய்!! அப்பா அம்மா ரொம்ப அழகாக இருக்கு, நிறைய ஹீலியம் பலூன்கள் ஜாலி ஜாலி என் நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக விளையாடுவேன் ” என்றாள் கிருத்திகா.
” சரி, சரி பார்த்து விளையாடுங்கள் ” என்றனர் அவளது பெற்றோர்கள்.
அவளது நண்பர்கள் பிறந்தநாள் விழாவிற்கு வந்தனர். அனைவரும் சுவையான கேக், இனிப்புகளை சுவைத்தனர். கிருத்திகாவும் அவளது நண்பர்களும் ஹீலியம் பலூன்களைக் கொண்டு மகிழ்ச்சியாக விளையாடினார்கள்.
பிறந்தநாள் விழாவின் முடிவில், கிருத்திகா,
“ வாருங்கள்! வாருங்கள்! எல்லா ஹீலியம் பலூன்களையும் பறக்க விடலாம் ” என்றாள்.
அனைவரும் ”ஏய்ய் ஜாலி ” என்று மகிழ்ச்சியாக ஹீலியம் பலூன்களை வானத்தில் பறக்கவிட்டனர். பலூன்கள் வானத்தில் சூப்பரா பறக்குது. அது மேகங்கள் கூட விளையாட வேகமாக போகுது என்று சொல்லி கிருத்திகாவும் அவளது நண்பர்களும் பேசிச் சிரித்தனர்.
பலூன்கள் வானத்தை நோக்கி பறந்தன. மெதுவாக மேகங்களை அடைந்தன.
ஆனால் அந்தக் பலூன்களின் பயணம் அங்கேயே முடியவில்லை.
அந்த பலூன்கள் பல கிலோமீட்டர்கள் பறந்து, பல மணிநேரம் கழித்து கடலோரம் வந்தன. அவற்றில் ஒரு ஊதா வண்ண பலூன், மெதுவாக காற்றில் சுழன்று, கடலில் விழுந்தது.
அந்தக் கடலுக்குள், பரிதி என்ற கடலாமை உணவை தேடி நீந்திக் கொண்டிருந்தது. அப்போது ஊதா நிற பலூன் கடலினுள் விழுந்தது. அது பார்க்க ஜெல்லிபிஷ் போல இருந்தது. பரிதி, அதை ஜெல்லிபிஷ் என நினைத்து தின்றுவிட்டது.
அடுத்த சில நிமிடங்களில், பரிதிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. பரிதியினால் நீந்த முடியவில்லை, மூச்சுவிடவும் சிரமப்பட்டது. பரிதி வலியுடன் சிரமப்பட்டு மேலே மிதந்தது.
அந்த நேரத்தில், கிருத்திகா தனது தந்தையுடன் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தாள். அவள் தூரத்தில் மிதந்த பரிதியை பார்த்தாள்.
பரிதி, எந்த அசைவும் இல்லாமல் மயக்கநிலையில் இருந்தது. கிருத்திகா தன் அப்பாவுடன் அருகிலுள்ள விலங்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.
மருத்துவர்கள் பரிசோதித்தபின், அதன் வயிற்றில் ஒரு ஹீலியம் பலூன் துண்டு சிக்கியிருப்பதை கண்டுபிடித்தனர்.
” இதெல்லாம், நாம் நமது மகிழ்ச்சியாக வானத்தில் விடும் பலூன்கள் தான் ”
என்று மருத்துவர் ஒருவர் சொன்னார்.
கிருத்திகாவும் அவளது அப்பாவும் அதைக் கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்தனர்.
"நாம் மகிழ்ச்சியோட விடுகிற பலூன், ஒரு விலங்குக்கு துன்பம் ஏற்படுத்துமா?" என்றாள் கிருத்திகா.
” ஆமாம்! லேக்டேஸ் பொருளால் உருவாக்கபடும் பலூன்கள் மட்கிப்போக பல மாதங்கள் முதல் பல வருடங்களாகும். இதுவே மைலாரால் உருவாக்கப்படும் பலூன்கள் பல நூறு வருடங்கள் ஆனாலும் மக்கவே மக்காது. நாம் பலூன்கள் வெடித்ததும் அப்படியே விட்டுவிடுகிறோம். அதனை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். வெடித்த பலூனின் சிறு துண்டை விலங்குகள் உண்டால் ஆபத்து. ஹீலியம் பலூன்கள் மண்ணிலிலும் விழாலாம் கடலிலும் விழலாம். எங்கே விழுந்தாலும் விலங்குகள் உணவு என்று நினைத்து தின்றால் ஆபத்து ”
என்றார் விலங்குகள் மருத்துவர்.
” ஓ…. இந்த சின்ன பலூனில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா? இனிமேல் பலூன்களை நாங்கள் உபயோகிக்கமாட்டோம். இதனை பற்றிய விழிப்புணர்வை அனைவரிடமும் கூறுவேன் ”
என்றார் கிருத்திகாவின் அப்பா.
” நானும் இனி பலூன்கள் வேண்டும் என்று கேட்கமாட்டேன். என் நண்பர்களிடம் இதனை பற்றி கூறுவேன் ”
என்றாள் கிருத்திகா.
கிருத்திகா வீட்டுக்குத் வந்தவுடன், தனது நண்பர்கள் — அருண், ஷர்மி, இனியா மற்றும் மற்ற பள்ளி நண்பர்களிடம் சொன்னாள்.
“நாம் பலூன்களை வானத்தில் விட்டாலும் அது பறந்து, கீழே வரும். பலூன்கள் மக்க பல வருடங்களாகும். கடல் அல்லது காட்டுக்குள் விழுந்தால், பல உயிர்கள் பாதிக்கப்படலாம். நாம் சின்ன விஷயம்னு நினைக்கிற விஷயம், வேறு உயிர்களுக்கு பெரிய ஆபத்து!” என்று கூறினாள் கிருத்திகா.
அவளது நண்பர்கள்,
“ஓ.. அப்படியே, இனி நாங்களும் பலூன்களை பயன்படுத்தமாட்டோம் ” என்றனர்.
அந்த வாரம் பள்ளியில் ஒரு சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வு நாள் விழா நடைபெற்றது. கிருத்திகா மற்றும்அவளது நண்பர்கள் இந்தக் கதையை எல்லோருக்கும் எடுத்துரைத்தார்கள். அதிலிருந்து, அந்த பள்ளி மாணவர்கள் அனைவரும் பலூன்களை தவிர்த்தனர்.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய காகித அலங்காரங்கள், தோட்ட விளக்குகள், பசுமை வண்ண ஓவியங்கள், இயற்கை பூக்கள், இலைத் தோரணங்கள்
போன்றவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
பரிதி கடலாமையின், உடல் நிலை சீரானது. அதனை மீண்டும் கடலில் விட்டனர். பரிதி மகிழ்ச்சியாக தன் வீட்டை நோக்கி பயணித்தது.
Nice story