பீப்பீ - ஸ்ரீஜோதி விஜேந்திரன்
- ஸ்ரீஜோதி விஜேந்திரன்
- Aug 15
- 2 min read

அது ஒரு மழலையர் பள்ளி. உள்ளே நுழைந்த எல்லா குழந்தைகள் முதுகிலும் பை இருந்தது. அவர்கள் ஒருவர் பின் ஒருவராக வகுப்புக்குள் நுழைந்தனர். குட்டிக் கைகளில் கலர் கலராக வாட்டர் பாட்டில் இருந்தது.
சிலர், அவர்களாகவே சென்று, அதை அதற்குரிய இடத்தில் வைத்து விட்டு, சேரில் உட்கார்ந்தார்கள். சில குழந்தைகள் அப்படியே பேந்த பேந்த முழித்தார்கள்.
அவர்களுக்கு அபி மிஸ் உதவி செய்து, அவர்களை சேரில் உட்கார வைத்தார். கீ குடுத்த பொம்மை போல அவர்களும் நடந்து போய் இருக்கையில்
உட்கார்ந்தனர்.
அபி மிஸ், ஒவ்வொரு நாளும் ஒரு பாடலோ ஒரு கதையோ அல்லது ஒரு விளையாட்டோ சொல்லி அதற்கு பிறகு தான் வகுப்பை ஆரம்பிப்பார்.
அன்று ஒரு பாடல் பாட ஆரம்பித்தார்
“கியா கியா குருவி நான்”
குழந்தைகளும் கையை ஆட்டி, தலையை அசைத்து ஆளுக்கொரு ராகத்தில் பாடினார்கள்.
“கியா கியா குருவி நான்”
அப்போது, அந்த வகுப்பிற்கு புதிதாக ரியா வந்தாள். உடன் அவள் பெற்றோர் இருந்தனர்.
ரியா அவள் அம்மாவின் கையை இறுக்கமாக பிடித்திருந்தாள். அப்பா அவளது பையை அபி மிஸ்ஸிடம் குடுத்தார்.
"ரியா… மிஸ் கூட போடா குட்டி" அம்மா கொஞ்சலாக சொன்னார். ரியா பிடியை மேலும் இறுக்கிக் கொண்டாள்.
"உங்க பேரு ரியாவா? ரொம்ப நல்லா இருக்கே" அபி மிஸ் குனிந்து ரியாவிடம் கேட்டார்.
ரியா அம்மாவின் புடவைக்குள் ஒளிந்து கொண்டாள்.
"மிஸ், இவளுக்கு நாலு வயசு ஆகுது. இன்னும் சரியா பேச ஆரம்பிக்கல. கூப்பிட்டா திரும்பிப் பார்ப்பதில்லை, கண்களை பார்த்து பேச மாட்டேங்கறா. நாம் சொல்வதை முழுவதுமாக புரிந்து கொள்ள முடிவதில்லை.
” திறந்தவெளியிலும், குழந்தைகளோடும் நிறைய விளையாடினா அதெல்லாம் மாறிடும்னு டாக்டர் சொல்றாரு. கொஞ்சம் பாத்துக்கோங்க பிளீஸ்" கவலையோடு ரியாவின் அப்பா சொன்னார்.
"கவலைப்படாதீங்க சார். ரியா இங்க எல்லாமே கத்துக்குவா. அவளுக்கு இங்க நெறய பிரெண்ட்ஸ் இருக்காங்க"
என்று சொல்லிக்கொண்டே அபி மிஸ் ரியாவை பார்த்தார்.
ஒரு கையால் அம்மாவை இறுக்கிப் பிடித்திருந்தவள், இன்னொரு கையில் ஒரு குட்டிப் புல்லாங்குழல் வைத்திருந்தாள்.
"அவளுக்கு புல்லாங்குழல் ரொம்ப பிடிக்கும். எங்க போனாலும் அதை கையில் வச்சிக்குவா. அதை வாசிக்கறதும் ரொம்ப பிடிக்கும்"
என்று அம்மா சொன்னார்.
"ஒரு நிமிஷம் இருங்க" என்று சொல்லிவிட்டு அபி மிஸ் வெளியே போனார்.
அங்கே பக்கத்தில் ஒரு பூவரசு மரம் இருந்தது. அதில் இருந்து ஒரு இலையை பறித்து வந்தார். ரியாவின் அருகே வந்து, முட்டிக்கால் போட்டு உட்கார்ந்தார். அந்த இலையை சுருட்டி வாயில் வைத்து வாசித்தார்.
“பீ..பீ...பீ” சத்தம் வந்தது.
அதை கேட்ட ரியா, தரையைப் பார்த்தபடியே சிரித்தாள்.
அபி மிஸ் அவள் கையை பிடித்து கூட்டிப் போய் காலியாக இருந்த ஒரு சேரில் உட்கார வைத்தார்.
ரியா சில நாட்கள் மகிழ்ச்சியோடு பள்ளிக்கு வருவாள்; சில நாள் உள்ளே வர மாட்டேன் என அடம் பிடித்து ‘வீல் ‘ என அழுவாள்.
அபி மிஸ் அவள் விளையாட சில விளையாட்டு சாமான்களை எடுத்துக்
கொடுப்பார். அதை வாங்கி கொண்டு உள்ளே வருவாள்.
உள்ளே வந்தாலும் மற்ற குழந்தைகள் போல பாடங்களை திருப்பி சொல்ல
மாட்டாள். ஒரு இடத்தில் உட்காராமல் இங்கும் அங்கும் ஓடுவாள், ரைம்ஸ் பாடும் போது மட்டும் எங்கே இருந்தாலும் ஓடி வந்து வாசல் அருகே நின்று பார்ப்பாள். மற்றவர்கள் பாடி முடித்தவுடன் மறுபடி விளையாட ஓடி விடுவாள்.
அபி மிஸ் மற்ற குழந்தைகளுக்கு சொல்லி குடுக்கும் போது, அவ்வப்போது ரியாவை மடியில் உட்கார வைத்துக்கொள்வார்.
எல்லோரும் விளையாடும் சமயத்திலும் ரியாவை சேர்த்துக்கொள்ளும்படி
பார்த்துக் கொள்வார். ரியாவை அங்கே எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். ஆனால் விளையாட கூப்பிட்டால் உடனே வரமாட்டாள்.
அதனால், அவளுடன் விளையாட வேண்டும் என்று யார் நினைத்தாலும்,
"ரியா, இந்தா பீப்பீ" என்று சொன்னால் போதும். ரியா அவர்களுடன் ஒட்டிக்கொள்வாள்.
சில மாதங்களில் கொஞ்சம் முன்னேற்றம் இருந்தது. ஒரு சில வார்த்தைகள் பேச ஆரம்பித்து இருந்தாள். இன்னும் முகத்தை நிமிர்ந்து பார்த்து பேசுவதில்லை.
அந்த வருடம் ஆண்டு விழாவிற்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த முடிவு
செய்யப்பட்டது. தினமும் ஆடல் பாடல் என பயிற்சி கொடுத்தார்கள்.
ரியா வழக்கம் போல தள்ளி நின்று மற்றவர்கள் செய்வதை பார்த்துக் கொண்டிருப்பாள். ஆண்டு விழா அமர்க்களமாக தொடங்கியது. பார்வையாளர்கள் எல்லோரும் சேரில் உட்கார்ந்து இருந்தார்கள்.
குழந்தைகள் முகத்தில் பவுடர் போட்டு, லிப்ஸ்டிக் அப்பி, பிங்க், பச்சை, ஊதா, மஞ்சள் என கலர் கலராக டிரெஸ் பண்ணி இருந்தார்கள்
.
நடனம் ஆடும் போது மேடைக்கு கீழே நின்று, ஆசிரியர்கள் ஆடிக் காட்ட, அதை பார்த்துக்கொண்டே குழந்தைகள் மேடையில் ஆடினார்கள்.
பார்வையாளர்கள் பலமாக கை தட்டினார்கள். ரியா அபி மிஸ் கையை பிடித்தபடி நின்றிருந்தாள்
சிறப்பு விருந்தினர் மேடையில் பேசுவதற்காக அழைக்கப்பட்டார்.
திடீரென்று ரியா மேடைக்கு ஓடினாள். இதை அபி மிஸ் எதிர்பார்க்கவில்லை.
குடு குடுவென ஓடிய ரியா, மைக்கில் பேசிக்கொண்டிருந்த சிறப்பு விருந்தினர்
அருகே சென்று நின்றுகொண்டாள். அவர் பேச்சை நிறுத்தினார்.
அபி மிஸ் வேகமாக ரியாவை கூட்டிப் போக ஓடி வந்தார். ரியாவின் அம்மாவும் அப்பாவும் உட்கார்ந்து இருந்த சேரில் இருந்து பதற்றத்தோடு எழுந்து மேடையை நோக்கி ஓடி வந்தார்கள்.
ரியா கையில் ஏதோ இருந்தது. அது என்ன தெரியுமா?
அபி மிஸ் செய்து குடுத்த பீப்பீ தான் அது. அதை வாயில் வைத்து ஊதினாள்.
மற்ற குழந்தைகள் மேடையில் நடனம் ஆடியதை பார்த்த அவளுக்கும் பீப்பி வாசிக்க ஆசை வந்திருக்கலாம் . ரியா வாசிக்கவும், சிறப்பு விருந்தினர் மைக்கை அவளுக்கு பிடித்தார்.
குழந்தைகள் கைகள் தட்டி ரியாவை உற்சாகப் படுத்தினார்கள். அங்கே இருந்த அனைவரும் கூட சேர்ந்து கை தட்டினார்கள்.
வாசித்து முடித்ததும் ரியா ஓடி வந்து அபி மிஸ் அருகே நின்று கொண்டாள்.
அவ்வளவு பேர் முன்னால், பயம் இல்லாமல், ரியாவாகவே முன்வந்து வாசித்தது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
எது எப்படியோ ரியா தயக்கத்தை உடைத்து மேடையேறியதை பார்த்த எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.




ரியாவின் பூவரசம் பீ..பீ.. இனிமை. அபி மிஸ்சின் அரவணைப்பு பாசமிக்கது.