top of page

நிழல் விளையாட்டு

  • Writer: உதயசங்கர்
    உதயசங்கர்
  • Apr 6
  • 2 min read



சச்சு இப்போது எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டாள். தத்தக்கா புத்தக்கா என்று ஒவ்வொரு காலாக எடுத்து வைக்கிறாள். எப்போது வேண்டுமானாலும் வண்டி குடை சாய்ந்து விடும் என்பதைப் போலத்தான் அடி எடுத்து வைக்கிறாள். சில சமயம் அப்படியே சாய்ந்து சப்பென்று உட்கார்ந்து விடுவாள். உடனே சிரிப்பு வந்துவிடும் சச்சுவுக்கு. அம்மாவைப் பார்த்துச் சிரிப்பாள். முன்னால் இருக்கிற ஒரே ஒரு பல் மட்டும் பூ மாதிரி சிரிக்கும்.


சச்சு எழுந்து நடக்கத் தொடங்கிய பிறகு தூங்கி எழுந்தால் போதும் நடைதான். சாப்பிடும் போது தன் அம்மா பின்னாலேயே நடப்பாள். அம்மா பின்னால் வருவதைப் பார்த்தது சச்சுவுக்கு உற்சாகமாகி விடும்.


கெக்க்க்கே என்று சிரித்துக் கொண்டே இன்னும் வேகமாக தத்தக்கா புத்தக்கா அடி எடுத்து வைப்பாள். அம்மாவும் சிரித்துக் கொண்டே பின்னால்போய்,

“ பிடி பிடி கள்ளாளி.. செல்லத்தைப் பிடி..” என்று கொஞ்சுவார்.


இரவில் அம்மா வீட்டில் விளக்கு போட்டார். அப்போது சச்சு ஒன்றைக் கண்டுபிடித்தாள். சச்சு நடக்கும் போது அவளுடன் கூடவே யாரோ நடப்பதைப் பார்த்தாள். அவளைப் போலவே தத்தக்கா புத்தக்கா என்று அதுவும் நடந்தது.


அவள் திரும்பிப்பார்த்தாள். சுவரில் நிழல் ஆடியது. அவள் கையை அசைத்தாள். அதுவும் கையை அசைத்தது. அவளுடைய தலையில் கொண்டை போட்டு விட்டிருந்தார் அம்மா. நிழலும் கொண்டை போட்டிருந்தது.


சச்சுவுக்கு மகிழ்ச்சி. கெக்க்க்கே என்று சிரித்தாள். நிழலும் தலையை ஆட்டி ஆட்டி சிரித்தது. சச்சுவின் காலில் கிடந்த கொலுசு குலுங்கியது. நிழலின் காலில் கிடந்த கொலுசும் குலுங்கியது. சச்சு நிழலைப் பார்த்துக் கொண்டே நடந்தாள். அப்படியே எதிரில் இருந்த சுவற்றில் முட்டி விட்டாள். நிழலும் முட்டியது.

சரியான முட்டு. சச்சுவுக்கு அழுகையே வந்து விட்டது.


அப்படியே உட்கார்ந்து அழுதாள் சச்சு. நிழலும் அழுதது. அழும்போது நல்லாவே இல்லை. உடனே சச்சு அழுவதை நிறுத்தி விட்டாள். அம்மா வந்து சோறு ஊட்டி விட்டார். அம்மாவின் நிழலும் தெரிந்தது. நிழல் அம்மா நிழல் சச்சுவுக்கு ஊட்டிவிட்டது.


சச்சு நிழலைப் பார்த்துக் கொண்டே எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டாள். அம்மாவுக்கு ஆச்சரியம்.


ராத்திரி படுக்கப்போனாள் சச்சு. எப்போதும் அம்மா கூடத்தான் படுப்பாள். படுக்கும்போது பார்த்தாள்.


நிழல் இல்லை. அம்மா விளக்கை அணைத்தார். அவ்வளவு தான் நிழலைக் காணவில்லை. சச்சு இருட்டுக்குள் நிழலைத் தேடினாள். அவளுக்கு அழுகை வந்தது. அழ ஆரம்பித்தாள்.


அம்மா பதறிப்போனார்.


“ ஏண்டா.. சச்சு ஏன் அழுறே..? “ என்று கேட்டார்.


சுவரைக் காட்டி மழலைமொழியில் “ பொம்ம “ அழுதாள். அம்மாவுக்குப் புரிந்து விட்டது.


“ சச்சுப்பாப்பா தூங்கப் போறில்ல.. அந்தப் பொம்மையும் அவங்க வீட்டுக்குத் தூங்கப் போயிட்டு.. காலைல நீ எந்திரிக்கும்போது அதும் வரும்..இன்ன..”

என்றார். சச்சுவுக்கு அம்மா சொன்னது சரிதான் என்று பட்டது. உடனே அழுகையை நிறுத்தி விட்டு கண்களை மூடினாள். அவள் உதடுகளில் புன்னகை தோன்றியது.


சச்சுவின் நிழலும் உறங்கியது.


காலையில் சச்சுப்பாப்பா கூட விளையாடணும்ல..

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page