செர்ரி மரம் - ரஸ்கின் பாண்ட்
- விஜி ரவி
- Aug 15
- 3 min read
தமிழில் - விஜிரவி

ராகேஷுக்கு ஆறு வயது. அவன் தன் தாத்தாவுடன் ஊருக்கு வெளியில் இருக்கும் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தான். அது காட்டை ஒட்டியிருந்தது. அவனுடைய அம்மாவும், அப்பாவும் 50 மைல் தொலைவில் ஒரு சிறு கிராமத்தில் வசித்து வந்தனர். அவர்கள் அங்கே விவசாயம் செய்து வந்தனர். அங்கே நல்ல பள்ளிக்கூடம் இல்லாததால் ராகேஷ் தாத்தாவின் வீட்டில் வசித்து வந்தான். அவர் ஒரு ஓய்வு பெற்ற காட்டிலாகா அதிகாரி.
தாத்தாவின் வீட்டிற்கும் ராகேஷின் பள்ளிக்கும் இடையே அரை மணி நேரம் நடக்க வேண்டும். ஒரு நாள் ராகேஷ் கடைத் தெருவில் செர்ரி பழங்களை வாங்கி தின்று கொண்டே வீடு வந்தான். அதில் சில பழங்கள் இனிப்பாகவும், சில புளிப்பாகவும் இருந்தன. அந்த சிறிய சிவப்பான செர்ரி பழங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் விளைந்தவை.
வீட்டை அடையும் போது அவன் கையில் மூன்று செர்ரிக்கள் மீதம் இருந்தன. தோட்டத்தில் இருந்த தாத்தாவுக்கு ஒரு பழத்தைக் கொடுத்து விட்டு அவன் மற்ற இரண்டையும் தின்றான். தன் கையில் இருந்த செர்ரிப் பழத்தின் விதையைக் காட்டி, “ இது அதிர்ஷ்டமானதா தாத்தா?” என்றான்.
“கையில சும்மா வைச்சிருந்தா ஒரு அதிர்ஷ்டமும் இல்லை ராகேஷ். அதை மண்ணில் நட்டு வை"
என்ற தாத்தா, தோட்டத்தில் ஒரு இடத்தையும் காட்ட, அவன் அங்கே அந்த விதையை நட்டான். அன்று மதியம் சாப்பிட்டு விட்டு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடப் போய் விட்டான். செர்ரி விதையை சுத்தமாக மறந்தே விட்டான்.
அவர்கள் வசித்த இமயமலை அடிவாரத்தில் கடுமையான குளிரும் பனியும் இருந்தது. அங்கே பழ மரங்கள் வளராது. ஏனென்றால் மண் முழுவதும் வறண்டு, பனியால் இறுகிப்போய் இருக்கும்.
தாத்தா தினமும் அவனுக்கு மனிதர்கள் மிருகங்களாக மாறிய கதைகள், மரங்களில் வாழும் பேய்கள் பற்றி சுவாரசியமாக கதைகள் சொல்லுவார். தாத்தாவின் கண் பார்வை மங்கி விட்டதால் ராகேஷ் அவருக்கு தினமும் செய்தித்தாள் வாசித்து காட்டுவான்.
சில மாதங்கள் கழித்து செர்ரி விதையை நட்ட இடத்தில் ஒரு சிறு செடி முளைத்திருந்தது. அதைப் பார்த்த ராகேஷிற்கு ஒரே ஆச்சரியம். ஓடிப்போய் தாத்தாவை அழைத்து வந்தான்.
அவரும், 'தண்ணீர் ஊற்றி பத்திரமாக பார்த்துக் கொள்' என்றார்.
அவனும் வாளியில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி விட்டு அந்த செடியை சுற்றிலும் கூழாங்கற்களால் வட்டமாக வேலி அமைத்தான். இரண்டு வாரங்களுக்கு ஒரு இன்ச் அளவு அது மெதுவாக வளர்ந்தது.
ஆனால் ஒரு நாள், தோட்டத்தில் புல்வெட்டிக் கொண்டிருந்த ஒரு பெண்மணியின் கையில் இருந்த அரிவாள் அந்த செர்ரி மரத்தின் மீது பட்டு, அதன் உடல் முக்கால்வாசி பிய்ந்து போனது. 'அவ்வளவுதான் இந்த மரம் இனி பிழைக்காது' என ராகேஷ் கவலைப்பட்டான். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக அந்த மரத்திற்கு எதுவும் தீங்கு நேரவில்லை.
வெயில் காலத்தில் மறுபடியும் அந்த மரத்தில் புதிதாக இலைகள் துளிர்த்தன. இப்போது ராகேஷிற்கு எட்டு வயது ஆகிறது. அவனுடைய தோற்றத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டு அவனுடைய தலை முடி சுருட்டையாக வளர்ந்து, கண்கள் நல்ல கருநீலமாக மாறின. இடையில் அப்பா அம்மாவின் வீட்டிற்கு போய் அவர்களுக்கு தோட்டத்தில் பயிர்கள் நடுவதற்கு உதவி செய்தான். தாத்தா வீட்டிற்கு திரும்பி வந்த போது செர்ரி மரம் இன்னும் சற்றே பெரிதாக வளர்ந்து அவனுடைய மார்பளவு உயரம் இருந்தது. மழை பெய்யும் சமயங்களில் கூட ராகேஷ் அதற்கு தண்ணீர் ஊற்றினான்.
ஒரு நாள் அவன் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய போது செர்ரி மரக்கிளையில் ஒரு பூச்சியும், முசுமுசு கம்பளிப்பூச்சியும் இருந்ததைப் பார்த்தான். கம்பளிப்பூச்சி மிக ஆர்வமாக மரத்தின் இலைகளை தின்றது. ராகேஷ் வேகமாக அதை மரத்திலிருந்து எடுத்து காய்ந்த இலைகளில் மீது போட்டான். ‘ நீ பட்டாம்பூச்சியாக மாறிய பின்பு இங்கு வரலாம் என்றான்.
குளிர்காலமும் வந்தது. வயல் எலி குளிர், பனிக்கு அஞ்சி அந்த மரத்தில் தஞ்சம் புகுந்தது. கடுமையான பனியின் காரணமாக பள்ளத்தாக்குக்கு வரும் பாதை அடைக்கப்பட்டு செய்தித்தாள்கள் எதுவும் வரவில்லை. அதனால் தாத்தாவிற்கு அதிக கவலையாகி விட்டது.
பிப்ரவரி மாதம் ராகேஷின் 9வது பிறந்தநாள் வந்தது. செர்ரி மரத்திற்கு 4 வயது ஆகிவிட்டது. இப்போது ராகேஷும், அந்த மரமும் ஒரே அளவு உயரத்தில் இருந்தார்கள்.
ஒரு நாள் தாத்தா அவனை உற்சாகமாக 'ராகேஷ்' என்று கூவி அழைத்தார். அவனும் ஓடி வந்து பார்த்தான். அந்த செர்ரி மரத்தில் பிங்க் நிறத்தில் அழகான பூ பூத்திருந்தது. அதைத் தொடர்ந்து நிறையப் பூக்கள் அந்த மரத்தில் பூத்தன. மரம் ராகேஷை விட மிக உயரமாக வளரத் தொடங்கியது. தாத்தாவை விட உயரமாக வளர்ந்தது.
செர்ரி மரத்தின் பூக்களில் இருந்து தேனை எடுப்பதற்காக நிறைய தேனீக்கள் வரத் தொடங்கின. சிறிய பறவைகளும் பூக்களில் அமர்ந்து தேனை கொத்திச் சென்றன. வசந்த காலம் முழுவதும் பூக்கள் பூத்துக் குலுங்கின.
கோடைகாலத்தில் அந்த மரத்தில் சிறிய, அழகான சிவப்பு நிறத்தில் செர்ரி பழங்கள் காய்த்தன. மிக ஆர்வமாக ஒன்றைப் பறித்து சாப்பிட்டான் ராகேஷ். ஆனால் உடனே துப்பிவிட்டான். 'ரொம்ப புளிப்பா இருக்கு' என்றவனிடம், 'அடுத்த வருஷம் நல்ல இனிப்பா மாறிடும்' என்றார் தாத்தா. ஆனால் பறவைகளுக்கு அந்த சுவை பிடித்திருந்ததால் விரும்பி உண்டன.
ஒரு நாள் வீட்டிற்குள் தாத்தாவைக் காணோம் என ராகேஷ் வெளியே வந்து பார்த்தபோது செர்ரி மரத்தடியில் பிரம்பு நாற்காலியைப் போட்டு அதில் சாய்ந்திருந்தார்.
“இந்த மரம் நல்லா நிழல் கொடுக்கிறது. இந்த மரத்தின் இலைகள் மிக அழகாக இருக்கின்றன ”என்றார்.
தாத்தா எழுந்து வீட்டிற்குள் போனதும் மரத்திற்கு அடியில் இருந்த புல்வெளியில் படுத்துக்கொண்டான் ராகேஷ். காற்றில் ஆடும் மரத்தின் இலைகளின் வழியாக நீலவானம் தெரிந்தது. மற்றொருபுறம் அழகான மலைகளும் மேகங்களும் தெரிந்தன.
தாத்தா வெளியே வந்து அவனருகில் அமர்ந்து கொண்டார். அவர்கள் இருவரும் இரவு வரும் வரை அங்கேயே அமர்ந்திருந்தார்கள். வானத்தில் நட்சத்திரங்கள் மின்னின. மற்ற பூச்சிகளும் சத்தமிடுவது கேட்டன.
" தாத்தா, இந்தக் காட்டில எத்தனையோ மரங்கள் இருக்கு. ஆனால் இந்த செர்ரி மரம் மட்டும் ஏன் இவ்வளவு ஸ்பெஷல்? ஏன் இதை நமக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு?” என்றான் ராகேஷ்.
"இந்த மரத்தை நாமே நட்டோம்ல. அதனால் தான் இது ஸ்பெஷல்' என்றார் தாத்தா.
"ஒரே ஒரு விதையில் உருவான மரம்" என்ற ராகேஷ் அந்தப் பெரிய மரத்தின் சின்னக் கிளையை மென்மையாகத் தடவினான். மரத்தை கட்டிப் பிடித்தபடி, இலையின் நுனியை ஒரு விரலால் தொட்டான்.
“ இது தான் இயற்கையின் அதிசயமோ?” என அவன் வாய் முணுமுணுத்தது.
Comments