top of page

குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் கதைகள்

  • Writer: பூங்கொடி பாலமுருகன்
    பூங்கொடி பாலமுருகன்
  • Apr 6
  • 2 min read


நூல் : பிரேமாவின் புத்தகங்கள்

ஆசிரியர் : இரா.நாறும்பூநாதன்

பக்கங்கள் : 48

பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்


தன் மீது வாஞ்சையாய் இருந்து, விரல் பிடித்து அழைத்து போன மனிதர்களை ஆவணப்படுத்தும் வேணுவன மனிதர்கள் என்ற நூலும், நெல்லையைப் பற்றிய ஒரு சுருக்கமான சுவராசிய கையேடான திருநெல்வேலி நிலம் -நீர் - மனிதர்கள் என்ற நூலும் காலம் கடந்தும் இலக்கிய வரலாற்றில் நிலைத்து நிற்கும் நூல்கள். இந்த நூல்களைப் படைத்த படைப்பாளி மறைந்த எழுத்தாளர், கதைசொல்லி இரா.நாறும்பூநாதன் அவர்கள்.


குதூகலிக்கும் குழந்தை மனம் நிரம்பிய எழுத்தாளர் நாறும்பூநாதன் சிறார் இலக்கியத்திலும் முத்திரையைப் பிரேமாவின் புத்தகங்கள் மூலம் பதித்துச் சென்றிருக்கிறார். இதில் மொத்தம் 7 கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும் குழந்தைகளுக்கு சமகால பிரச்சினைகளை எளிய மொழியில் குழந்தைகளுக்கு கடத்துகிறது.


பிரேமாவின் புத்தகங்கள்:-


கோடை விடுமுறை முடிந்து, அடுத்த வகுப்பிற்குள் பிரேமா நுழைந்ததும், தன்னுடைய புது புத்தகங்களுக்கு அட்டை போட பிரேமா நினைக்கிறாள். விளையாட்டு என்றால் அனைத்தையும் மறந்து விடும் இயல்பு கொண்டவர்கள் குழந்தைகள். புத்தகங்களை மறந்துவிட்டு விளையாட பிரேமா சென்றவுடன், புத்தகங்களுக்குள் போட்டா போட்டி. தானே சிறந்தவன் என்றும் தனக்குத்தான் பிரேமா முதலில் அட்டை போடுவாள் என்று இறுமாப்பாய் பேசிக் கொண்டிருக்கும்போது, தளும்பாத நிறைகுடத்தைப் போன்று அமைதியாய் இருக்கிறது ஒரு புத்தகம். பிரேமா அட்டை போட முதலில் எந்த புத்தகத்தை எடுப்பாள்? ஏன் ? என்று சுவாரசியமாய் சொல்லும் கதை.


மாடசாமி உண்மையில் மக்கு தானா?


இன்றைய கல்விமுறை மதிப்பெண்களை வைத்து தான் மாணவர்களின் திறமையை அளவிடுகிறது. வெறும் மதிப்பெண்களை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்வியலை பற்றி அறியாமல், அரிசி அண்ணாச்சி கடையில் கிடைக்கும் என்று சொல்லும் குழந்தைகளுக்கு மத்தியில், வாழ்வியலை நன்கு உணர்ந்த மாடசாமி மக்கு தானா? என்ற கேள்வியை வாசிப்பவர்களுக்குள் உருவாக்கும் கதை.


ஆறறிவு:-


மனிதன் மற்ற உயிர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்தி காட்டும் பகுத்தறிவு என்னும் ஆறாவது அறிவை பெற்றிருந்தாலும், உண்மையில் அந்த அறிவை பயன்படுத்துகிறானா? என்ற கேள்வியை டிட்டு என்ற குருவியின் மூலம் ஆசிரியர் வினவுகிறார்.


மனிதருள் வேறுபாடு உண்டோ?


ஆதியில் இல்லாது பாதியில் வந்த இந்த சாதி மனிதர்களுக்குள் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டை உருவாக்கி வைத்து இருக்கிறது. ஆனால் மனிதம் தான் எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்பதைப் பேசும் கதை.


காட்டுக்குள் தெரிந்த இன்னொரு காடு :-


பல்வேறு பரிணாம வளர்ச்சி களுக்கிடையே , பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்பு குனிந்து நடந்து கொண்டிருந்த மனிதன் மெல்ல மெல்ல நிமிர்ந்து இன்று நிலையை எட்டி இருக்கிறான். ஆனால் ஒரு கையடக்க கருவி மீண்டும் மனிதனை பரிணாம வீழ்ச்சி அடைய வைத்து தலை குனிந்தபடியே நடக்க வைத்திருக்கிறது என்பதை காட்டுக்குள் இருக்கும் விலங்குகளின் வழியாக , அலைபேசியின் அதீத பயன்பாட்டை நையாண்டி செய்யும் கதை இது


கணக்கு எனக்கு பிடிக்கும்:-


கணக்கு பிணக்கு ஆமணக்கு..என்பது உண்மையா? உண்மையில் குழந்தைக்கு கணக்கு பிடிப்பது இல்லையா? இல்லை கணித ஆசிரியரின் மீதான பயத்தினால் கணக்கு பிடிப்பது இல்லையா? என்பதை உளவியல் ரீதியாக ஆராய்ந்து குழந்தைகள் மொழியில் சொல்லப்பட்டு குழந்தைகளை கணிதத்தை நேசிக்க வைக்கும் கதை இது.


பார்வதி அத்தையின் பொங்கல்:-


குழந்தைகளுக்கு சமகால நிகழ்வுகளையும் பிரச்சனைகளையும் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் உருவான கதை இது. பசி சுண்டி இழுக்கும் வயிறோடு காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மயங்கி விழும் குழந்தைகளை பார்த்திருப்போம். அவர்களின் பசிப்பிணி போக்க வந்த காலை உணவு திட்டத்தை இந்த கதை பதிவு செய்திருக்கிறது. பசி வந்தால் பத்தும் பறந்து போகும்போது... சாதி மட்டும் ஏன் பறப்பதில்லை?

மொத்தத்தில் இந்த சிறார் கதைகள் அறிவுரை சொல்லும் தொனியிலோ , பயமுறுத்தும் விதத்திலோ இல்லாமல் குழந்தைகளின் உயரத்துக்கு குனிந்து அவர்களுடன் சேர்ந்து தோளில் கை போட்டு இனிமையான வார்த்தைகளில் பேசுகிறது.பிரேமாவின் புத்தகங்கள்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page