இலண்டனிலிருந்து அன்புடன் – 11
- பஞ்சுமிட்டாய் பிரபு

- 10 hours ago
- 2 min read
உலகின் மோசமான விண்வெளி வீரர்

‘லண்டனிலிருந்து அன்புடன்’ தொடரில், இம்மாதம் “The Long-Lost Secret Diary of the World’s Worst Astronaut” என்ற ஒரு கலக்கலான புத்தகத்தைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். “என்ன இது? புத்தகத்தின் பெயர் இவ்வளவு நீளமாக இருக்கிறது?” என்று யோசிக்கிறீர்களா?
இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் டிம் காலின்ஸ் (Tim Collins), இதுபோல ‘The Long-Lost Secret Diary of the World’s Worst...’ (Pirate, Samurai, Knight) எனப் பல வேடிக்கையான புத்தகங்களை எழுதியுள்ளார். அழகிய ஓவியங்கள், பெரிய எழுத்துக்கள் என இந்தப் புத்தகத்தின் வடிவமைப்பும், கதை சொல்லும் விதமும் மிகவும் சுவாரசியமாக இருக்கும். 200 பக்கங்கள் இருந்தாலும், ஒரு பக்கத்தில் சில வரிகளே இருப்பதால் உங்களால் மிக எளிதாக வாசிக்க முடியும்.
இந்தப் புத்தகத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இது ஒரு நாட்குறிப்பு (Diary) வடிவில் எழுதப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கும் அல்லவா? ஒவ்வொரு நாளும் நடக்கும் சுவாரசியமான விஷயங்களை அதில் குறித்து வைப்போம் அல்லவா? அதே போன்ற ஒரு டைரிதான் இந்த நாவல்.
இது “எல்லி” (Ellie) என்ற 12 வயது சிறுமியின் ரகசிய டைரி. எல்லி தனது டைரியில் ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று வரிகள் மட்டுமே எழுதுவாள். சில நாட்களில் டைரி எழுதாமல் சோம்பேறித்தனமாகக்கூட இருந்துவிடுவாள்!
எல்லியின் டைரி ஜூன் 29-ஆம் தேதி தொடங்குகிறது. (வருடம் ஏதும் குறிப்பிடவில்லை, ஏனென்றால் இது எதிர்காலத்தில் நடக்கும் கதை என்று ஆசிரியர் தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறார்.) அன்றுதான் அமெரிக்காவின் நாசா (NASA) நிறுவனம், செவ்வாய் கிரகத்திற்கு (Mars) ஒரு விண்கலத்தை அனுப்புகிறது. எல்லியின் தந்தை நாசாவில் வேலை பார்ப்பவர். அதனால் அந்த விண்கலம் விண்ணில் பாய்வதை மிக அருகில் இருந்து பார்க்கும் அருமையான வாய்ப்பு எல்லிக்குக் கிடைக்கிறது. அதன் பிறகு, கோடை விடுமுறையில் அப்பாவுடன் நாசா அலுவலக நூலகத்திற்கு எல்லி தொடர்ந்து செல்கிறாள்.
அங்கே அவள் செய்யும் குறும்புத்தனங்கள், அதனால் நாசாவில் ஏற்படும் சிக்கல்கள், அதைச் சரி செய்ய நாசா எடுக்கும் அதிரடி முடிவுகள் எனப் புத்தகம் விறுவிறுப்பாகச் செல்கிறது. இறுதியில் எல்லி வெற்றிகரமாகச் செவ்வாய் கிரகத்திற்குச் செல்கிறாள். "செவ்வாய் கிரகத்தில் தரைஇறங்கிய முதல் மனிதர்" எனும் பெருமையையும் பெறுகிறாள்!
எல்லியுடன் வேறு சில மாணவர்களும் இந்தப் பயணத்தில் இணைகின்றனர். அதில் தேவ் எனும் இந்தியச் சிறுவனும் உண்டு. மொத்தம் எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்த நாவல், விண்வெளிப் பயணத்தில் இருக்கும் அறிவியலை மிகவும் சுவாரசியமாகவும் துல்லியமாகவும் நமக்குச் சொல்கிறது. இது ஒரு கற்பனைக் கதை என்றாலும், ஒரு விண்வெளி வீரராக என்னென்ன பயிற்சிகள் எடுக்க வேண்டும் என்பதை எல்லி வழியாக ஆசிரியர் மிகவும் நகைச்சுவையாக விளக்குகிறார்.
புத்தகத்தில் ஆங்காங்கே, “Get Real” எனும் தலைப்பில் சில உண்மைத் தகவல்களை ஆசிரியர் பகிர்ந்து கொள்கிறார். எது கற்பனை, எது அறிவியல் உண்மை என்பதை இது விளையாட்டாகப் புரியவைக்கும். அதேபோல், புத்தகத்தின் முடிவில் “Mission to Mars” எனும் தலைப்பில் செவ்வாய் கிரகப் பயணம் குறித்த அறிவியல் மற்றும் வரலாற்று முயற்சிகளையும், மனித இனத்தின் விண்வெளிச் சாதனைகளையும் ஆசிரியர் எளிமையாக அறிமுகப்படுத்துகிறார்.
விண்வெளி குறித்து அறிய ஆர்வமுள்ள குட்டீஸ் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. உங்களைப் போன்ற மாணவர்களின் பார்வையிலிருந்து மிகவும் குறும்புத்தனமாகவும், அதே சமயம் அக்கறையுடனும் இந்தப் புத்தகம் பேசுகிறது.

தஞ்சாவூர் இவரது சொந்த ஊர். தற்போது லண்டனில் வசித்துவருகிறார். எனக்குப் பிடிச்ச கலரு, குட்டித் தோசை, சாவித்திரியின் பள்ளி, எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம் ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். இங்கிலாந்திற்கும் கறுப்பின அடிமைத்தனத்திற்கும் உள்ள தொடர்பை இவரது இளையோர் நாவலான ஒலாடா பேசுகிறது. கறுப்பின அடிமைத்தனம் குறித்து நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட படைப்புகளில் மிக முக்கியமானது இந்த நாவல். மேலும் இவர் தொகுத்து வெளியான 'நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்-நோக்கமும் அதன் பாதையும்' என்கிற புத்தகம் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் ஆவணப் பெட்டகமாக விளங்குகிறது.





Comments