top of page

ஐக்கிய நாடுகளின் பிரகடனம் - 17

23 hours ago
2 min read

சர்வதேசங்களின் குழந்தைகள் உரிமைகள் குறித்த இந்தப்பிரகடனத்தில்,

183க்கு மேற்பட்ட நாடுகளின் கையெழுத்திடப்பட்டிருப்பதாக நாம்

அறிகிறோம். எத்தனை நாடுகள் கையெழுத்திட்டுள்ளன,

கையெழுத்திடாதவை எத்தனை என்பது போன்ற விவரங்கள் ஒரு புறம்

இருக்கட்டும்! நமது இந்தியாவும், இந்தியாவின் நெருங்கிய ‘நட்பு’ நாடான

இஸ்ரேலும், இன்னொரு மிகப் பெரிய ‘நட்பு’ நாடான அமெரிக்காவின்

அதிபர் ட்ரம்பின் ‘முன்னோடி’களும் கூடக் கையெழுத்திட்டிருக்கிறார்களாம்!

இதை வைத்துக் கொண்டு நாமும், நமது நாட்டின் குழந்தைகளும்,

பெற்றோர்களும் என்ன செய்ய முடியும்?


இஸ்ரேலின் விமானப் படைதான் நேரடியாகக் குழந்தைகள் படிக்கும் பள்ளி

மேலேயே குறிப்பாகக் குண்டுகள் வீசி அத்தனை பேரையும் கொன்றது.

இங்கே தமிழ்நாட்டில், நாம் கேள்வியேபட்டிராத இந்த மாதிரி விமானங்கள்,

குண்டு வீச்சுகள் பற்றி நமக்கு என்ன தெரியும்? நமக்குத் தெரிந்த இந்தக்

கும்பகோணம் டவுனில், திடீரென்று ஒரு நாள் ஒரு பள்ளிக்கூடத்து

மாடியில் கூரைக்கொட்டகைகளில் தீப்பிடித்துக் கொண்டு விட்டதாம்...

குழந்தைகள் எப்படியாவது உயிர் தப்பிக்க வேண்டுமே என்று

அலைமோதிப் பார்த்தால், எல்லாப் பக்கங்களிலும் பூட்டுப் போட்டு

அடைக்கப்பட்டிருந்தார்களாம். ஆசிரியைகள் அவர்களின்

உயிரைக்காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்

என்றும், ஆனால், மேல்மாடியில் இந்தக் குழந்தைகளுக்கு சமையல்

செய்து போடும் அந்த சமையல்கார ஆயா மட்டும் தன்னால் முடிந்த வரை

குழந்தைகளை வெளியே கொண்டுவர முடியுமா என்று போராடிப்

பார்த்தார். ஆனால் முடியவில்லை. 93 குழந்தைகளின் உயிர்கள்

பலியாயின. அந்த நேரத்தில் தமிழ்நாடே சோகத்தில் மூழ்கியது.

ஏராளமான விவாதங்கள் எழுந்தன. ஆவேசக்கட்டுரைகள் வெளிவந்தன.

அதன்பிறகு மீண்டும் எப்போதும் போல பழைய கதையே தொடர்கின்றன.

குழந்தைகளின் உரிமைகள் குறித்த தொடர்செயல்பாடுகள் நடக்கவேண்டும்.

இப்போது இரண்டு அம்சங்கள்: சற்றுக்கவலையுடன் பார்க்க

வேண்டியவையாகத் தோன்றின. முதல் அம்சம்: இந்தியாவில் மொத்தம்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மொத்த

எழுத்தறிவு விகிதம் 72.98 மட்டுமே. ஆனால், அதில், பார்வையற்றவர்களின்

எழுத்தறிவு விகிதம் 52.08 மட்டுமே!


இரண்டாவது அம்சம், உலக நல வாழ்வு மையத்தின் பிரிவு தெரிவித்துள்ள

தகவலின்படி பள்ளிகளில் அடிப்படைச் சுகாதார / நலவாழ்வுச் சேவைகள்

எவற்றையும் தாங்கள் அன்று வரை பெற இயலாதிருந்த மொத்தக்

குழந்தைகளுடைய எண்ணிக்கையின் அளவு: 24.04 கோடிப்பேர்! இவர்களுள்,

இந்தியாவில் மட்டும் இருப்போர் 5 கோடிப்பேர் என்பது சமீபத்திய புள்ளி

விவரம். இது, 30.09.2026 அன்றைய ‘இந்து’ தமிழ் திசை நாளிதழில் இவ்விரு

செய்திகளும் இரு முனைகளில் வெளியாகியிருப்பவை.

இன்று, 06.10.2026- காலை, ’இந்து’ ‘தமிழ் திசை’-யின் ‘வெற்றிக்கொடி’ப்

பக்கத்தில் வந்துள்ள இரு கட்டுரைகளை வாசிக்க முடிந்தது. ‘கலகல’

வகுப்பறை –சிவாவின் ஆசிரியக்கனவின் முதல் பகுதி இன்று வந்துள்ளது.

கல்வியால் மட்டுமே மாற்றம் சாத்தியமா எனும் கேள்விக்குத் தன்

மறுமொழியைத்தேடி, ’கலகல’ வகுப்பறை சிவா, குழந்தைகளோடு

குதூகலமாக ஆடிப்பாடிக் கொண்டு ஒரு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

இது ஓர் அரிய தேடல். தொடர்ந்து இவ்வகையில் நாம் தேடியலைந்துதான்

தீர வேண்டும்.


இக்கட்டுரையாளரும் குழந்தை வளர் செயற்பாட்டாளர்தாம். மதுரை seed

கல்வி மையத்தின் நண்பர். கல்வி மையம் குறித்து இவருடைய நேரடி

அவதானிப்பில் தன் கவனத்திற்கு வந்த செயற்பாடுகள்,

மாற்றங்களிலிருந்து தனக்கு எழுந்துள்ள புதிய வினாக்களைப் பகிர்ந்து

கொண்டிருக்கிறார்.


ஒரு பள்ளிக்குள் இன்றைக்கு நுழைந்தால், வகுப்பறைகள் முன்பை விட

உயிர்ப்பாகவும், கலலப்பாகவும் தெரிகின்றன. மாணவர்கள் மாதிரிகளை

உருவாக்குகிறார்கள், விளக்கப் படங்களை வெட்டி ஒட்டி, திட்டப்பணிகளில்

பயன்படுத்துகின்றனர். எண்ணியல்(டிஜிட்டல்) சார்ந்து கருவிகளைப்

பயன்படுத்துகின்றனர். கதை சொல்லுதல், நாடகம், பாடல்-எல்லாமும்

இருக்கின்றன. மொத்தத்தில், வகுப்பறைச்சூழலும், கற்பித்தலின் வடிவமும்,

கருவிகளும் கடந்த பத்து ஆண்டுகளில் பெரிதும் மாறியுள்ளன.

முன்பு ஆசிரியர்கள் மட்டுமே பேசிக்கொண்டே இருந்தார்கள். பிள்ளைகள்

கொஞ்சம் ஏதேனும் ஓர் ஐயத்தை எழுப்பினால், “ஏய்! அமைதி!

சைலென்ஸ்!” என்கிற கட்டளைக் குரல்களை மேசை மீது பிரம்புகள்

எழுப்பும் ஓசைகளின் பின்னணியில் கேள்விப்பட்டோம். ஆனால்

இன்றைக்குச் சற்றே நிலைமை மாறியிருக்கிறது. இந்த மாற்றங்களுக்கான


பின்னணியில் சர்வதேச குழந்தைகள் உரிமைகளுக்கான பிரகடனம்

இருக்கிறதா?


தொடரும்…

கமலாலயன்
கமலாலயன்

சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.

சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று

பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார்.

மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page