top of page

தத்துவம் அறிவோம் - 19

19 hours ago
2 min read

கட்டுக்கதைகளின் காலம்



மனிதர்களை எப்படி அடிமைப்படுத்த முடியும்? நாம் எல்லாம் சுதந்திரமாகத் தானே இருக்கிறோம். என்ற கேள்வி வருகிறது அல்லவா? எல்லாரும் சமமாக இருந்த ஆதிப்பொதுவுடமைக் காலத்தில் மனிதர்கள் தங்கள் தேவைக்காகச் சேர்ந்திருந்தனர். பாதுகாப்பு, உணவு, இனவிருத்தி ஆகிய முக்கியச் செயல்பாடுகளுக்காகக் கூட்டமாக இருந்தனர். அப்போது எல்லாம் சுலபமாக இருந்தது. கூட்டமாக வேட்டையாடும்போது மிகக் குறைவாகவே உழைத்தார்கள். கிடைத்ததைப் பங்கிட்டுக் கொண்டார்கள். யாரும் யாருக்கும் அடிமை இல்லை. எல்லாம் விருப்பத்தின் பேரிலும் தேவைக்காகவும் செய்தார்கள். அப்படிச் சுதந்திரமாக இருந்தவர்களை எப்படி அடிமைப்படுத்த முடியும்?


யோசித்துப் பார்ப்போமா?


விவசாயம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு நிலங்களை ஆக்கிரமிக்கிறார்கள். பூமிக்குச் சொந்தமான நிலத்தை தனக்குச் சொந்தம் என்று நினைக்கிறார்கள். எல்லாம் பொது என்ற நிலை எல்லாம் தனி என்று மாறுகிறது. முன்பு தங்களுடைய கூட்டத்துக்காக வேலை பார்த்தார்கள். இப்போது தனி மனிதருக்காக வேலை பார்க்க வேண்டும். 


யாராவது ஒரே நாளில் மாறிவிடுவார்களா?


அப்படி நடக்குமா? 


நிலத்தை வைத்திருந்தவர்கள் அந்த நிலத்தில் விளைந்த தானியங்களின் மூலம் பெரிய செல்வந்தரானார்கள்.


எப்படித் திடீரென்று செல்வந்தராக மாறமுடியும்?


தனிமனிதர்களை தங்களுடைய நிலத்தில் வேலை செய்ய வைத்தார்கள். அவர்களுடைய உழைப்புக்கு ஏற்ற கூலியைக் கொடுக்கவில்லை. அதாவது ஒருவர் ஒரு நாளில் 12 மணி நேரம் நிலத்தில் வேலை பார்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு 12 மணி நேர வேலைக்கான கூலியைத் தரவேண்டும் இல்லையா? அதுதானே சரி. ஆனால் அவர்களுக்கு 6 மணி நேரக் கூலியே தரப்பட்டது. மீதி 6 மணி நேரக் கூலி என்ன ஆச்சு?


அதை நிலம் வைத்திருந்தவர் எடுத்துக் கொண்டார். அவர் உழைக்கவே இல்லை.

அது சரிதானா?


சரிதானே. அவர் நிலம் வைத்திருக்கிறார். அவர் வேலை கொடுக்கிறார். அதனால் அவர் எடுத்துக் கொள்கிறார். அப்படித்தானே நாம் நினைப்போம்.


இப்போது இப்படிக் கேள்விகளைக் கேட்டுப் பார்ப்போமே.

நிலம் எங்கிருக்கிறது?


பூமியில்.


பூமியின் நிலம் யாருக்குச் சொந்தம்?


பூமிக்கா? 


பூமியில் பிறந்த மனிதருக்கா? 


மனிதன் பிறக்கும்போதே நிலத்தைக் கொண்டுவந்தானா? 


இயற்கையின் கோடிக்கணக்கான படைப்புகளில் மனிதனும் ஒரு படைப்பு. இல்லையா?

ஆனால் மனிதன் தன்னைப் படைத்த பூமியை, இயற்கையை என்ன செய்கிறான்?


அப்படி என்றால் பூமிக்குச் சொந்தமான நிலத்தைத் தன்னுடைய நிலம் என்று சொல்ல உரிமை இருக்கிறதா?


யோசித்துப் பாருங்கள்.


நிலத்தைச் சொந்தம் என்று சொன்னான். மற்றவர்களை நிலத்தில் பாடுபடச் சொன்னான். பாடுபட்டு விளைந்த தானியங்களை அவர்களுக்குக் கொஞ்சம் கொடுத்தது போக மொத்தமாக எடுத்துக் கொண்டான். இதைக் கேள்வி கேட்காமல் இருப்பார்களா?


மற்றவர்கள் கேட்டார்கள். சண்டை போட்டார்கள். அப்போது நிலத்தின் சொந்தக்காரன் இரண்டு தந்திரம் செய்தான்.


என்ன இரண்டு தந்திரம்?


ஒன்று எதிர்ப்பவர்களை, கேள்வி கேட்பவர்களை, சண்டைபோடுபவர்களை அடக்குவதற்கு அடியாட்களை வேலைக்கு வைத்தான். அவர்கள் அடித்து நொறுக்கினார்கள். பல சமயம் கொலையும் செய்தார்கள். அதைப் பார்த்த மற்றவர்கள் பயந்தார்கள். நடப்பது அநியாயம் என்றாலும் பதில் பேசவில்லை.


இன்னொரு தந்திரம்


நிலத்தை வைத்திருந்தவன், தன்னை கடவுளின் தூதர் என்றான். கடவுளின் பிரதிநிதி என்றான். கடவுளின் குழந்தை என்றான். அவன் சொல்வதை அனைவரும் கேட்கவேண்டும் என்றான். அவனுடைய தந்திரத்துக்குத் துணையாகப் பூசாரிகளை வைத்துக் கொண்டான். பூசாரிகள் அந்த நில உடமையாளர்களைப் புகழ்ந்து பாடல்கள் பாடினார்கள். கடவுளே பூமிக்கு அனுப்பி வைத்து, நீதி நியாயத்தை நிலை நாட்டச் சொல்லியிருக்கிறார் என்று கட்டுக்கதைகளைக் கட்டினார்கள். தினமும் அந்தக் கட்டுக்கதைகளைக் கோவில்களில் கதைகளாகச் சொன்னார்கள். திரும்பத் திரும்பக் கேட்டு மக்களும் அதை உண்மை என்று நம்பத் தொடங்கினார்கள்.


அதன்பிறகு நில உடமையாளர் சொல்வது தான் சட்டம் ஆகி விட்டது. அவனுடைய வசதிக்காகச் சட்டங்களை இயற்றினான். படை திரட்டினான். அருகிலுள்ள நிலங்களைக் கைப்பற்றினான். அங்கிருந்த மக்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கினான். பல ஊர்களைச் சேர்த்து நாடாக்கினான். நாட்டுக்கு அவனே அரசன் ஆனான். பெரிய பெரிய கோவில்களைக் கட்டினான். பூசாரிகள் புரோகிதர்கள் ஆனார்கள். 


இன்னும் புதிது புதிதாகக் கட்டுக்கதைகளை எழுதினார்கள்.

கடவுள்களின் கதைகளை எழுதினார்கள்.

அரசர்களின் வாழ்க்கையைக் கதைகளாக எழுதினார்கள்.

குடிமக்கள் எப்படி வாழவேண்டும் என்று கதைகளாக எழுதினார்கள்.

பெண்களுக்கான கட்டுப்பாடுகளைக் கதைகளாகச் சொன்னார்கள்.

ஆண்களுக்கான கடமையைக் கதைகளாகச் சொன்னார்கள்.

குழந்தைகளுக்கான நன்னெறிகளைக் கதைகளாகச் சொன்னார்கள்.

ஆக, கதைகளின் வழியே மக்களின் மனதை வசியம் செய்தார்கள்.

மக்களும் கதைகளை உண்மை என்று நம்பி எதைப் பற்றியும் கேள்வி கேட்பதை மறந்தார்கள். அரசர்கள் தங்களுடைய ஆசைப்படி இஷ்டம் போல வாழ்ந்தார்கள்.


ஒன்றை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.


இந்தக் கட்டுக்கதைகளில் இருந்தது எல்லாம் சுயநலம், பேராசை, கேள்வி கேட்காமல் நம்புவது, அரசருக்காகத் தியாகம் செய்வது, பெண்களை அடிமைப்படுத்துவது, எல்லாரும் கல்வி கற்பதை மறுப்பது, போன பிறவியில் செய்த பாவங்களுக்கு இந்தப் பிறவியில்  தண்டனை தான் இந்த வாழ்க்கை, இல்லாத சொர்க்கம், நரகம், என்று ஏராளமான கட்டுக்கதைகளை உருவாக்கினார்கள்.

எனவே நில உடமைச் சமூகம் ஏற்றத்தாழ்வுகள் மிக்கதாக இருந்தது. 


ஏழைகள், பணக்காரர்கள் என்று இரண்டு விதமான மனிதர்கள் இருந்தார்கள். ஏழைகள் உழைத்தார்கள். உழைத்துக் கொண்டே இருந்தார்கள். மூன்று வேளை உணவுக்கே கஷ்டப்பட்டார்கள். நல்ல உடை உடுத்த கஷ்டப்பட்டார்கள். குடியிருக்க இடம் இல்லாமல் கஷ்டப்பட்டார்கள்.


அவர்களிடம் உங்களுடைய கஷ்டத்துக்குக் காரணம் தலைவிதி என்று கதைகள் சொல்லப்பட்டன. 

யோசித்துப் பாருங்கள்.


யாருக்கும் சொந்தமில்லாத இந்த பூமியில் எல்லாரும் சமமாக வாழவேண்டும் தானே. 

அப்படி வாழ்வதற்கு வழி சொல்லாதக் கட்டுக்கதைகளை நாம் நம்பலாமா?


( அறிவோம் தெளிவோம் )





Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page