வளர்ப்போம் வளர்வோம் – 3

மகிழ்ச்சியின் விதை
“என் குழந்தை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.”
இது ஒவ்வொரு பெற்றோரின் மனதிலும் இருக்கும் இயல்பான ஆசை. ஆனால் குழந்தை எப்போது மகிழ்ச்சியாக இருக்கும்? எவையெல்லாம் குழந்தைக்கு மகிழ்வைத் தரும்?நம் குழந்தைகள் கேட்கும் அனைத்தையும் நாம் வாங்கிக்கொடுப்பதா? விரும்பியதை,நினைத்ததை எல்லாம் செய்ய அனுமதிப்பதா? எந்த சிறு துன்பமும் குழந்தையை நெருங்காமல் பார்த்துக்கொள்வதா?
உண்மையில், மகிழ்ச்சியான குழந்தைப் பருவம் என்பது சிக்கல்களே இல்லாத குழந்தைப் பருவம் அல்ல. எத்தனை சிக்கல்கள் வந்தாலும், “நான் பாதுகாப்பாக இருக்கிறேன்; நான் நேசிக்கப்படுகிறேன்; என்னால் சமாளிக்க முடியும்” என்ற உணர்வுடன் குழந்தை வளர்வதே மகிழ்ச்சியின் அடித்தளம்.
குழந்தைப் பருவத்தில் நாம் விதைக்கும் மகிழ்ச்சியின் விதைகள்தான், எதிர்காலத்தில் குழந்தையின் மனநலத்திற்கும் ஆளுமைக்கும் அடித்தளம்.
விளையாட்டு
குழந்தையின் உலகில் விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல.அது தான் மகிழ்ச்சியின் முதல் விதை.மூன்று மாதக் குழந்தை முகம் பார்த்து சிரிக்கும். ஆறு மாதக் குழந்தை நாம் முகத்தை நம் கைகளால் மூடினால் தன் கைகளால் எடுக்கும் விளையாட்டு தான் முதல் விளையாட்டு. அதைத் தொடர்ந்து வித விதமான விளையாட்டுக்கள் மூலமே குழந்தையின் மூளை வளர்ச்சி தூண்டப்படுகிறது.
“குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது” என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையில், ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் கற்றுக்கொண்டும், சிந்தித்துக்கொண்டும்,திறன்களை வளர்த்துக் கொண்டும் தன்னை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது .
குழந்தைப் பருவம் என்பதை வளர்ந்த பின்னர் வாழ்க்கை நடத்த முன் தயாரிப்பு செய்யும் பருவமாகவே நாம் புரிந்து கொள்கிறோம்.நாம் பாடப்புத்தகங்களில் மட்டும் கற்றல் நடப்பதாக எண்ணிக் கொண்டு விளையாட்டை பின்னுக்குத் தள்ளிவிடுகிறோம்.உண்மையில் குழந்தைகள் தங்களின் ஐம்புலன்கள் மூலம் பார்த்து, தொட்டு,கேட்டு, ஓடி, விளையாடி, ஆடி, பாடி, கற்பனை செய்து உலகத்தைப் புரிந்துகொள்ளும் பருவமே மகிழ்ச்சியான குழந்தைப் பருவம். அந்த வகையில் விளையாட்டுதான் குழந்தையின் வளர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது.
“விளையாட்டு தான் குழந்தையின் பிரதான வேலை” என்றார் மரியா மான்டிசொரி. விளையாட்டுதான் கற்றலின் அடிப்படை என்கிறது உளவியல்.சுதந்திரமாக விளையாடும் குழந்தை சிந்திக்கும் குழந்தையாக,சமூகக் கற்றல் நிறைந்த குழந்தையாக, தோல்வியை சந்தித்தாலும், மீண்டு எழும் குழந்தையாக வளர்கிறது.
விளையாட்டின் மூலம் வளரும் வாழ்க்கைத் திறன்களாக உளவியல் ஆராய்ச்சிகள் கூறுபவை:
சிந்தனை மற்றும் பிரச்சினைத் தீர்க்கும் திறன்
கவனம் மற்றும் நினைவாற்றல்
உடல் இயக்கத் திறன்
சமூக உறவுகள்
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன்
படைப்பாற்றல்
தன்னம்பிக்கை
விளையாடும் பெற்றோர்
விலை உயர்ந்த பொம்மைகளை விட அதீத மகிழ்ச்சியைத் தருபவர்கள் தம் பிள்ளைகளோடு நேரம் செலவிட்டு விளையாடும் பெற்றோர்.ஒன்றாக உணவு சாப்பிடுவது, கதை பேசுவது, ஒன்றாக விளையாடுவது, குழந்தை சொல்லும் சிறிய விஷயங்களைக் கவனமாகக் கேட்பது என நாம் செய்யும் சிறு சிறு செயல்களும் குழந்தைகளின் ஆழ்மனதில் என்றும் நீங்கா நினைவுகளாக மாறிப்போகும்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு நம் பிள்ளைகள் நாம் வாங்கிக் கொடுத்த பொம்மைகளையும் பொருட்களையும் மறந்து போகலாம். ஆனால் நாம் அவர்களை எப்படி உணர வைத்தோம் ,எப்படி ரசித்துக் கொண்டாடி மகிழ்ந்தோம் என்பது என்றும் அவர்கள் நினைவில் நிலைத்து நிற்கும்.அந்த உணர்வே தன்னம்பிக்கையின் அடித்தளமாகிறது.
கலை மற்றும் படைப்பாற்றல்
ஒரு குழந்தை ஓவியம் வரையும்போது, நாம் பல நேரங்களில் கேட்கும் கேள்விகள் என்ன தெரியுமா?
“என்ன படம்?”“எப்படி வரையப் போகிறாய்?”“எதற்கு வரைகிறாய்?”
ஆனால் நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி என்ன தெரியுமா?
“இதை வரையும்போது நீ எப்படி உணர்ந்தாய்?”என்பது தான்.
கலை என்பது திறமையை நிரூபிக்கும் மேடை மட்டுமல்ல. குழந்தைகள் தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் சுதந்திரமாக வெளிப்படுத்தும் ஒரு இடம். வரைதல், வண்ணம் தீட்டுதல், களிமண் கொண்டு உருவங்கள் செய்தல், கதை எழுதுதல், இசை, நடனம், நாடகம் போன்ற படைப்பாற்றல் நிறைந்த செயல்களில் குழந்தைகள் ஈடுபடுவதும் அதன் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்துவதும் வெகு இயல்பானது. இசை கேட்டதும் ஒரு வயதுக் குழந்தை கூட குதித்து ஆடும் நடனம் இயல்பு தானே!
ஒவ்வொரு குழந்தையும் சிறந்த கலைஞனாக வந்தே தீர வேண்டும் என்பதல்ல நமது நோக்கம். குழந்தையின் கற்பனைக்கு இடம் கொடுப்பதும்,கலையின் வாயிலாக மகிழ்ச்சியுடன் தன்னை வெளிப்படுத்துவதுமே கலையின் நோக்கம்.
பெற்றோரோடும்,பிற குழந்தைகளோடும் இணைந்து விளையாடும் எளிய விளையாட்டுகள்,கலை செயல்பாடுகள் வயது வாரியாக:
2–5 வயது
குழந்தையுடன் தரையில் உட்கார்ந்து விளையாடுதல்
கதை சொல்லுதல்
வண்ணம் தீட்டுதல்
ஆடல்,பாடல்,கண்ணாமூச்சி
6–9 வயது
குழந்தையின் ஆர்வங்களைக் கவனித்து, அதற்கேற்ற
விளையாட்டுப்பயிற்சி
கலைப்பயிற்சி,
கதைகள் சொல்லுதல்,வாசித்தல்
தனி,குழு விளையாட்டுகள்
இவற்றில் வெற்றியை மட்டுமல்லாமல், முயற்சியையும் நாம் பாராட்டுவது அவசியம்
10–18 வயது
சிறிய வேலைகளை, பொறுப்புகளைக் கொடுப்பது
அவர்களின் நண்பர்கள், விருப்பங்கள், ரசனை குறித்த கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பது.
குடும்பத்தினருடன் ஒரு எளிய சுற்றுலா
வார இறுதியில் ஒரு குழந்தைகள் கூடுகை
கலை, இசை, விளையாட்டு, எழுத்து, புகைப்படம் போன்றவற்றில் அவர்களுக்கு ஆர்வம் இருந்தால், “இதில் எதிர்காலம் இருக்குமா?” என்று உடனே கேட்பதற்குப் பதிலாக, அவர்களின் தனித்துவத்தையும் ஆர்வங்களையும் மதிப்பது மிகவும் அவசியம்
உண்மையில் நம் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்கு பெரும்பாலும் மிகப் பெரிய முயற்சிகள் தேவைப்படுவதில்லை
ஒரு சிறு அரவணைப்பு
ஒரு கதை
சேர்ந்து சிரிக்க சில நிமிடங்கள்
ஒரு தலைக் கோதல்
இவ்வளவு தான்.இவையே மகிழ்ச்சியின் விதைகள்.
நம் குழந்தைகளின் வாழ்விலும் தோல்விகளும் ஏமாற்றங்களும் இருக்கும். 24 மணி நேரமும் நம்மால் அவர்களை மகிழ்ச்சிப் படுத்த முடியாது. ஆனால் அந்த அனுபவங்களுக்கிடையில்,“நான் நேசிக்கப்படுகிறேன்,நான் மதிக்கப்படுகிறேன்,என்னால் முடியும்,எனக்காக உதவ என் குடும்பம் இருக்கிறது.” என்று அவர்களை உணர வைப்பதும் இத்தகைய மகிழ்ச்சியின் விதைகளே!அவ்விதைகள் வளரும்போது, மகிழ்ச்சி என்பது வெளியில் தேட வேண்டிய ஒன்றாக இருக்காது.அது நமக்குள் நம் உள்ளத்தினுள் ஊறத் தொடங்கும்.விளையாட்டும் கலையும் குழந்தைகளின் மொழி. அது அவர்களின் உடல், மனம், சமூகத் திறன் ஆகியவற்றிற்கான பயிற்சியும் கூட.
மதிப்பெண்களுக்கு அப்பால்..
இன்றைய போட்டி நிறைந்த சூழலில் குழந்தையின் ஒரு நாளை பள்ளி, வீட்டுப்பாடம், வகுப்புகள், தேர்வு தயாரிப்பு என்று முழுவதுமாக நாம் நிரப்பிவிடும் அபாயம் உள்ளது.
“விளையாடும் இந்த நேரத்தைப் பயன்படுத்தி இன்னும் ஒரு வகுப்பு போகலாம்” என்று நாம் நினைக்கிறோம்.ஆனால் குழந்தையின் மனதில் எழும் கேள்வி “எப்போது நான் குழந்தையாக இருப்பேன்?” என்பதே. எதிர்காலம் சிறக்க வேண்டும் தான். அதற்காக நிகழ்காலத்தைத் தொலைத்து விடக்கூடாது அல்லவா?
ஒரு குழந்தை தினமும் சிறிது நேரமாவது கட்டுப்பாடுகள் இல்லாமல் விளையாடவும், தன் விருப்பப்படி ஏதாவது உருவாக்கவும் நாம் வாய்ப்புக் கொடுப்பது நேர விரயம் அல்ல. அது அவர்களின் மனநலத்திற்கான முதலீடு.
எனவே, குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்டியது தேர்வுகளும்,வீட்டுப்பாடங்களும் மட்டுமல்ல.விளையாட இடமும் நேரமும்,கற்பனை செய்ய சுதந்திரமும்,படைப்பாக்க வாய்ப்புகளுமே!இவையே ஒரு குழந்தையை குழந்தையாக இருக்க நாம் செய்யும் பேருதவி.
ஏனெனில்,“விளையாட்டோடு வளரும் குழந்தைகள் வாழ்க்கையைப் புரிந்து கொள்கிறார்கள்;கலையோடு வளரும் குழந்தைகள் தங்களையே புரிந்துகொள்கிறார்கள்.”

உளவியல் ஆலோசகர் (Counseling Psychologist) மற்றும் 'InnerCircle Nurturing Minds' அமைப்பின் நிறுவனர் ஆவார். குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் (Child & Adolescent) உளவியலில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இவர், சான்றிதழ் பெற்ற பள்ளி ஆலோசகராகவும், வாழ்க்கை முறை திறன் பயிற்சியாளராகவும் (Life Skills Trainer) பணியாற்றி வருகிறார்.
உளவியல் ஆலோசனை மற்றும் திறன் பயிற்சிகளில் சுமார் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர், ‘மகிழ் பதின்’ (Teen Psychology) புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். மாணவர்களின் மனநலம், ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதலுக்காக 1,500-க்கும் மேற்பட்ட அமர்வுகளையும் (Sessions),
1,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தனிப்பட்ட ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.






Comments