top of page

சோகமானப் புத்தகம்


சோகமானப் புத்தகம் – இதுதான் இம்மாதம் 'லண்டனிலிருந்து அன்புடன்' தொடரில் நாம் பார்க்கப் போகும் புத்தகம். “சோகமானப் புத்தகம்” என்றெல்லாமா பெயர் வைப்பார்கள் என்றுதானே யோசிக்கிறீர்கள்?


கதையோ திரைப்படமோ அதன் முடிவு மகிழ்ச்சியாக இருந்தால்தான் நம் அனைவருக்குமே பிடிக்கும், அல்லவா? ஆனால், நம் நிஜ வாழ்வில் மகிழ்ச்சியும் சோகமும் கலந்துதான் இருக்கிறது. நாம் நிறைய நேரம் மகிழ்ச்சியாக இருந்தாலும், சில நேரங்களில் சோகமாகவும் இருப்போம் தானே?


நமக்கு வேண்டியது கிடைக்காமல் போனால், நமது நண்பர்கள் நம்முடன் சண்டையிட்டால், நம்மைச் சுற்றியுள்ள பெரியவர்கள் கண்டித்தால் எனப் பல நேரங்களில் நாம் சோகமாக இருந்திருப்போம். அதுமட்டுமல்ல, சில நேரங்களில் நமக்கு இருக்கும் கூச்சமோ பயமோகூட நம்மைச் சோகமாக மாற்றிவிடும். வகுப்பில் சரியான பதில் தெரிந்தாலும்கூட, "நமது பதில் தவறாக இருந்துவிட்டால் என்ன ஆகுமோ?" என்று பயந்து, அதனால்கூட நாம் சோகமாக இருப்போம். அப்படியான ஒரு விஷயத்தைத்தான் இந்தப் புத்தகம் வாசிக்கப் போகும் உங்களிடம் பேசப் போகிறது!


“என்னை வாசிக்கப் போகும் உங்களுக்கு நன்றி” என்று ஆரம்பிக்கும் இந்தப் புத்தகம், அதன் இரண்டாவது பக்கத்திலேயே “உங்களுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விட்டால்?” என்று அதுவாகவே நினைத்துக்கொண்டு சோகமாகிவிடுகிறது.


“ஒருவேளை வாசிக்காமலே என்னை நீங்கள் வைத்துவிட்டால்?”, “என்னை வண்ணம் தீட்டும் புத்தகமாக (coloring book) நீங்கள் நினைத்துவிட்டால்?” என்று வரிசையாக அது தனது கற்பனையில் ஒன்றிலிருந்து இன்னொன்று எனப் பல விஷயங்களை நினைத்து, பயந்து, அதனால் சோகமாகிவிடுகிறது. ஒரு கட்டத்தில், இந்தப் புத்தகத்தை வாசிக்கும் உங்களிடம் வந்து, “ஓ! நீங்களும் சில நேரங்களில் சோகமாக மாறிவிடுவீர்களா?” என்று சொல்லிவிட்டு அதற்கான காரணங்களையும் பேசுகிறது.


ஏதோ ஒரு விஷயம் நடக்கிறது, அதனால் நாம் சோகமாக இருக்கிறோம் என்பது இயல்பானதுதான். ஆனால், நடக்காத ஒரு விஷயத்தை நினைத்து, "அது தவறாக ஆகிவிடுமோ?" என்று எண்ணி சோகமாக இருப்பது சரியல்ல. “ஏதாச்சும் தப்பாயிட்டா என்ன பண்றது?” என்று நினைத்துச் சோகமாக இருப்பதால் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதையும் சேர்த்து இந்தப் புத்தகம் நமக்கு விளக்குகிறது.


“ஏதாச்சும் தப்பாயிட்டா என்ன பண்றது?” என்று நினைப்பதை விட்டுவிட்டு, “நமது முயற்சியால், நமது செயலால் ஏதாச்சும் நல்லது நடந்தால்?” என்று நாம் யோசிக்கத் தொடங்கினால், அதனால் நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நல்லதுதானே என்று இந்தப் புத்தகம் கூறுகிறது.


கூறுவதோடு நின்றுவிடாமல், அடுத்த பக்கத்திலேயே “சரி! என்னை வாசிக்கப் போகும் உங்களுக்கு நன்றி” என்று முதல் பக்கத்தில் வந்த அதே வரியுடன் மீண்டும் தொடங்குகிறது. அதன் அடுத்த பக்கத்தில், “என்னைப் பிடிக்காமல் போய்விட்டால்...” என்று சொல்லாமல், “உங்களுக்கு என்னைப் பிடித்துவிட்டால்...” என்று அது நேர்மறையாக (positive-ஆக) யோசிக்கத் தொடங்குகிறது!


இத்துடன் இந்தப் புத்தகம் நிறைவடைகிறது. இது ஒரு குட்டிப் புத்தகம்தான்! குட்டிப் புத்தகம் என்றாலும், மிகப்பெரிய செய்தியை இது நமக்குத் தருகிறது.


இந்தப் புத்தகம் படக்கதைப் புத்தகம் என்றாலும், குழந்தைகளுக்கான “Emotion Book Series” எனும் வகைமையைச் சேர்ந்தது. அதாவது நமது மனதில் தோன்றும் மகிழ்ச்சி, சோகம், அச்சம், கூச்சம், கோபம் என வெவ்வேறு உணர்வுகளைப் பற்றி இந்தப் புத்தக வரிசைகள் ஒவ்வொன்றாகத் தனியே பேசுகின்றன. ஒவ்வொரு உணர்விற்கும் ஒரு வண்ணத்தைப் பயன்படுத்தி வடிவமைத்துள்ளனர்.


'சோகமானப் புத்தகம்' பகுதிக்கு பச்சை நிறத்தைப் பயன்படுத்தியுள்ளனர். வெறும் பச்சை நிறத்தை மட்டுமே கொண்டு மிகவும் அழகாக வடிவமைத்துள்ளனர் என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு பக்கத்தில் அதிகபட்சம் இரண்டு வரிகள்தான் இருக்கின்றன. பெரியவனான நான் இந்தப் புத்தகத்தை மிகவும் ரசித்து வாசித்தேன். வாசித்த பிறகு, நானும் இப்போது தேவையற்ற பயத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, 'என்னுடைய முயற்சியால் ஏதேனும் நன்மை கிடைக்கும் என்றால் அதைத் துணிச்சலாகச் செய்யலாம்' என்று முடிவு செய்திருக்கிறேன்!


என்ன, நான் சொல்வது சரிதானே? குட்டீஸ்களாகிய நீங்களும் இந்த அழகிய புத்தகத்தை வாசித்துவிட்டு, உங்களுக்கு என்ன தோன்றியது என்று எனக்குச் செய்தி அனுப்புங்கள்! இந்த வரிசையிலுள்ள மற்ற புத்தகங்களையும் வாசியுங்கள்.


மீண்டும் சந்திப்போம்!


பஞ்சு மிட்டாய் பிரபு
பஞ்சு மிட்டாய் பிரபு

தஞ்சாவூர் இவரது சொந்த ஊர். தற்போது லண்டனில் வசித்துவருகிறார். எனக்குப் பிடிச்ச கலரு, குட்டித் தோசை, சாவித்திரியின் பள்ளி, எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம் ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். இங்கிலாந்திற்கும் கறுப்பின அடிமைத்தனத்திற்கும் உள்ள தொடர்பை இவரது இளையோர் நாவலான ஒலாடா பேசுகிறது. கறுப்பின அடிமைத்தனம் குறித்து நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட படைப்புகளில் மிக முக்கியமானது இந்த நாவல். மேலும் இவர் தொகுத்து வெளியான 'நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்-நோக்கமும் அதன் பாதையும்' என்கிற புத்தகம் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் ஆவணப் பெட்டகமாக விளங்குகிறது.



Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page