top of page

குழந்தைகளின் உரிமைகள் -12

Mar 15
2 min read

குழந்தைகளின் கற்றல் செயல்பாடு எப்போது தொடங்கும் ? 


விவரம் தெரியத் தொடங்கின நாளிலிருந்தே குழந்தைகள் கற்றுக்கொள்ளத் தொடங்கி விடுகிறார்கள். அவர்கள் காண்பவை, அவர்களின் காதுகளில் விழுபவை, பெற்றோரும், அவர்களைச் சூழ்ந்துள்ள பிற மனிதர்களும் தமது நடத்தைகள் மூலம் வெளிப்படுத்தும் பண்புகள், அவர்களின் உரையாடல்களிலி ருந்து தாங்கள் கிரகித்துக் கொள்பவை - என்று பல்வேறு வழிகளில் குழந்தை களின் கற்றல் நிகழ்கிறது.  


மிக அடிப்படையாகப் பார்த்தால், மனிதர்களின் கண்களில் படும் நிகழ்வுகளும், காதுகளில் விழும் உரையாடல் களும்தாம் அடிப்படையில் அவர்களின் சிந்தனைகளுக்கும் வழி வகுக்கின்றன. அந்த வகையில், குழந்தைகள் மேற்கண்டவாறு பல்வேறு வழிகளில் கற்றுக் கொள்ளும் விஷயங்கள், அவர்களின் சிந்தனைகளைத் தூண்டுகின்றன. முதலில் கற்றல், பின் சிந்தனை, இந்த  இரண்டையும் அடுத்துக் குழந்தைகள் அவரவர் புரிதலுக்கேற்ப சில உணர்ச்சிகளுக்கு ஆட்படத் தொடங்குகின்றன. சிறார்களோ, பெரியவர்களோ, ஆண்களோ பெண்களோ மனிதர்களாகப் பிறக்கும் எல்லாருமே உணர்ச்சிகளுக்கு ஆட்படுகிறவர்கள்தாம். தாங்கள் கற்றதை, சிந்தித்ததை, உணர்வதை,மற்ற சக மனிதர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் மனிதர்ககளின் அடிப்படைப்பண்புகளுள் ஒன்று. 


வயதில் பெரியவர்களாவது இடம் - பொருள்- சூழல்களுக்கு ஏற்ப, தாம் பார்ப்பதை, சிந்திப்பதை, உணர்வதைப் பிறருடன் உடனேயே, முழுமையா கவோ, கொஞ்சம் பகுதியளவிலோ  பகிர்ந்து கொள்ளலாம்; ஓரளவு மட்டும் பகிரலாம். அல்லது, முற்றிலும் எதையுமே பிறருடன் பகிர்ந்து கொள்ளாமல், தமது மனங்களுக்குள்ளேயே போட்டுப் புதைத்து விடவும் கூடும். ஆனால், குழந்தைகளுக்கு அவ்வாறு மறைக்கத் தெரியாது; தோன்றாது. எனவே தாம் கற்றதை, சிந்திப்பதை, உணர்வதைப் பெற்றோருடனோ, வீட்டிலுள்ள பிறருடனோ, பொதுவெளிகளில் அவர்கள் சந்திக்கும் ஆசிரியர்கள் அல்லது சக மனிதர்களுடனோ உடனே பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற விருப்பம் மிகத் தீவிரமாக இருக்கும். 


அவ்வாறு  ஒரு குழந்தை நம்மிடம் ஆர்வத்துடன் வந்து எதையேனும் பகிர்ந்து கொள்ள முற்படும் போது, அவ்வாறு முயல்வதற்கு, பகிர்ந்து கொள்வதற்கு அந்தக் குழந்தைக்கு உரிமையுண்டு என்று ஐக்கிய நாடுகளின் கன்வென்சன் அங்கீகரித்திருக்கிறது. அவர்கள், தங்களின் மனங்களில் உணர்வதை உரையாடலின் மூலம் பகிர முற்படலாம். சிறு சிறு சித்திரங்களை வரைவதன் மூலம் பகிரலாம்; அல்லது தனக்குத் தோன்றுவதை எழுதிக் காட்டலாம். அல்லது, இவையெல்லாவற்றுக்கும் மாறாக, அக்குழந்தை தனக்கே உரித்தான ஏதோ ஒரு செய்கையின் மூலம்,அல்லது சமிக்ஞை மூலம் மற்றவர்களுக்குத் தான் உணர்வ தைப் பகிர்ந்து கொடுக்க முற்படலாம். அவ்வாறு ஒரு குழந்தை தம்மிடம் கொடுக்க வருவதை இரு கரங்களாலும், முழு மனதுடன், ஆர்வதுடன் ஏந்திப் பெற்றுக்கொள்ள வேண்டியது சக மனிதர்களின், இந்த  ஓட்டு மொத்த சமூகத் தின் கடமை. 


அதே சமயம், குழந்தைகள் இவ்வாறு பகிர்பவை, எப்போதேனும் ஏதோ ஒரு வகையில் பிற குழந்தைகளை, சக மனிதர்களை, பெற்றோரைப் பாதிக்கும் வகையில் அல்லது புண்படுத்தும் வகையில் இருந்து விடவும் கூடும். அவ்வாறு இருந்தால் அப்போது நாம் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் ஐக்கிய நாடுகளின் பிரகடனம் குறிப்பிடுகிறது. குழந்தைகளின் தவறுகளை, அவர்களின் உணர்வு வெளிப்பாட்டில் பிறரைப் பாதிக்கும் அம்சங்கள் எவை, ஏன் அவற்றைத் தாங்கள் ஏற்க முடியாமல் இருக்கிறோம் என்பதைத் தெளிவாகவும், மென்மையாகவும் குழந்தைகளுக்குப் புரிய வைத்து விட வேண்டும். மிகவும் கவனத்துடனும், பொறுப்புடனும் குழந்தைகளைக் கையாள வேண்டுமென்பதே எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியம்.


கமலாலயன்
கமலாலயன்

சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.

சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று

பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார்.

மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page