top of page

இலண்டனிலிருந்து அன்புடன் – 12

நூற்றாண்டு நாயகர்: டேவிட் அட்டன்பரோ



“டேவிட் அட்டன்பரோ” – இப்பெயரை நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். இயற்கையைப் பற்றிய இவருடைய வீடியோக்களை நீங்கள் கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள். கடந்த மே 8, 2026 அன்று டேவிட் தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவர் மட்டும் தனியாகக் கொண்டாடவில்லை; இங்கிலாந்திலுள்ள பல பள்ளிக் குழந்தைகளும் இவரது பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.


யார் இந்த டேவிட் அட்டன்பரோ? இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள பல தலைமுறை மக்களால் நேசிக்கப்படும் ஒரு மாபெரும் ஆளுமை. இயற்கை குறித்த ஆவணப்படங்களின் முன்னோடி அவர்.


வானொலி புகழ்பெற்றிருந்த காலத்தில்தான், டேவிட் இளைஞராக வேலை தேடிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில்தான் 'தொலைக்காட்சி' என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகமானது. இங்கிலாந்து அரசின் நிறுவனமான பிபிசி (BBC) தொலைக்காட்சி வழியே பார்வையாளர்களுக்கு என்னென்ன நிகழ்ச்சிகளை உருவாக்கலாம் என்று அப்போது சிந்திக்கத் தொடங்கியிருந்தனர். “வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், பெரிய அளவில் சாதிக்கலாம்” என்று பெரியவர்கள் அறிவுரை சொல்வதைக் கேட்டிருப்போம். அந்த அறிவுரைக்குச் சிறந்த உதாரணம் டேவிட் அட்டன்பரோ.


இன்றைய காலம், சமூக ஊடகங்களின் (Social Media) காலம். நம்முடைய கைபேசி (Mobile Phone) மூலமாக 'ரீல்ஸ்' (Reels) போன்ற குட்டி வீடியோக்களை எடுத்துப் பதிவு செய்து, அதன் வழியே பலரும் பெயரும் புகழும் அடைகிறார்கள். ஆனால், அவற்றில் பெரும்பாலானவை திரைப்படம் சார்ந்த பொழுதுபோக்கு அம்சங்களாகவே இருக்கின்றன; அல்லது பொய்யான தகவல்களைக் கொண்ட வீடியோக்கள் பெரிய அளவில் வைரலாகின்றன.

ஆனால், அட்டன்பரோ தன் இளமைக் காலத்தில் சந்தித்ததும் இதேபோன்ற ஒரு தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற காலம்தான். அவர் அந்தத் தொலைக்காட்சிக் கருவியைச் சரியான வழியில் பயன்படுத்தி, அதுவரை மனிதர்கள் யாரும் அறிந்திராத இயற்கையின் விசித்திரங்களையும், அறிவியலையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தார். தொலைக்காட்சி வழியே இயற்கை குறித்த அறிவையும், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியவர் அவர்தான்.


இயற்கையின் அற்புத உலகையும், அதன் ரகசியங்களையும் கோடிக்கணக்கான மக்களுக்கு எடுத்துச் சொன்னவர் டேவிட். இன்று உலகளவில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் விழிப்புணர்விற்கு அவரும் ஒரு முக்கியமான காரணியாக இருக்கிறார். ஊடகத்தை (Media) நல்வழியில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு அவரே மிகச் சிறந்த உதாரணம்!


இவ்வளவு சிறப்புமிக்க மனிதரான டேவிட் அட்டன்பரோவைப் பற்றி அறிமுகம் செய்யும் இரண்டு அருமையான படக்கதை புத்தகங்களைத்தான் நாம் தற்போது பார்க்கப் போகிறோம்.

முதலாவது புத்தகம்: “WILD PLANET” (The Inspiring Life and Wisdom of Sir David Attenborough) – ஹெய்லி ராகோ & ஜான் ராகோ (Hayley Rocco & John Rocco).


டேவிட் அட்டன்பரோவின் வாழ்க்கையை, அவரது தொடர் பணிகளை மிகவும் அழகான படங்களுடன் நமக்கு அறிமுகம் செய்யும் புத்தகம் இது. ஒவ்வொரு பக்கத்திலும் பெரிய எழுத்துகளுடன், டேவிட்டின் வாழ்வைக் குட்டி குட்டி வரிகளாக எழுதியிருக்கிறார்கள். எனவே, இதனை மிகவும் எளிமையாக வாசித்துவிடலாம். இதிலுள்ள ஓவியங்களைப் பார்த்தே டேவிட்டின் வாழ்வை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். இந்தப் புத்தகம் டேவிட் அட்டன்பரோவின் சிறுவயது ஆர்வம் முதல், அவர் எப்படி உலகப் புகழ்பெற்ற இயற்கை ஆர்வலராக மாறினார் என்பது வரையிலான அவரது வாழ்க்கைப்பயணத்தை அழகாக விவரிக்கிறது.


அதுமட்டுமல்லாமல், இந்தப் புத்தகத்தில் டேவிட் அவர்களின் வீடியோக்களிலிருந்து சில முக்கிய வரிகளை எடுத்து, அவற்றை மிகவும் சரியான இடங்களில் பயன்படுத்தியுள்ளனர். அதேபோல், சுற்றுச்சூழல் குறித்துக் குழந்தைகள் எளிதாக அறிந்துகொள்வதற்காக, அதிலுள்ள கலைச்சொற்களைத் தனியே அடையாளப்படுத்திக் காட்டியுள்ளனர்; புத்தகத்தின் பின்னிணைப்பாக அவற்றுக்கான விளக்கங்களையும் தந்துள்ளனர். எனக்கு இந்தப் புத்தகம் ஒரு குட்டித் திரைப்படம் பார்ப்பது போலவே இருந்தது!


இரண்டாவது புத்தகம்: “Little People, Big Dreams: David Attenborough” – மரியா இசபெல் சான்செஸ் வெகாரா (Maria Isabel Sánchez Vegara).


இலண்டன் பள்ளிகளில், சுற்றுச்சூழல் குறித்த சிறப்பு வகுப்புகள் கட்டாயம் இடம்பெறும். அந்த வகுப்பில் பங்கேற்கும் வாய்ப்பு எங்கள் வீட்டுச் சுட்டிக்கும் கிடைத்தது. அந்த வகுப்பில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு இந்தப் புத்தகத்தைப் பரிசாக வழங்கினர். அப்படித்தான் எங்கள் வீட்டு நூலகத்திற்கு இந்தப் புத்தகம் வந்தடைந்தது. அதுவும் குட்டி வடிவில், ஆமாம் “pocket-size” வடிவில் பள்ளிக் குழந்தைகளுக்குப் பரிசாகக் கொடுப்பதற்காகவே இதனை அழகாக வடிவமைத்திருந்தனர்.


இந்தப் புத்தகமும், டேவிட்டின் குழந்தைப் பருவம் முதல் தொடரும் அவரது பல்லாண்டு காலப் பணிகளை அழகிய படங்களுடன் எடுத்துச் சொல்கிறது. இதிலுள்ள ஓவியங்களும் வடிவமைப்பும் பச்சை நிறத்தை முதன்மைப்படுத்தி இருந்ததால், இயற்கையோடு அமர்ந்து வாசிப்பது போன்றே எனக்குத் தோன்றியது.


இந்தப் புத்தகத்தில், டேவிட் அட்டன்பரோவின் பெயர் எந்தெந்த உயிரினங்களுக்குச் சூட்டப்பட்டிருக்கின்றது என்ற சுவாரசியமான பட்டியலும் இடம்பெற்றுள்ளது. "என்னது? ஒரு மனிதரின் பெயரை மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும் சூட்டியிருக்கிறார்களா?" என்றுதானே ஆச்சரியப்படுகிறீர்கள்! எனக்கும் அதே ஆச்சரியம்தான் ஏற்பட்டது. (அவர் மீதுள்ள மரியாதையால் பல புதிய உயிரினங்களுக்கு விஞ்ஞானிகள் இவரது பெயரை வைத்துள்ளனர்).


வாய்ப்புக் கிடைத்தால் இந்த இரண்டு புத்தகங்களையும் அவசியம் வாசியுங்கள். இவரது ஆவணப்படங்களையும் அவசியம் பாருங்கள். அவை நமக்கு இயற்கை குறித்த அறிவியல் உண்மையை, அழகை, அதிலுள்ள ரகசியங்களை எடுத்துச் சொல்லும். இயற்கையைப் புரிந்துகொள்ளும் வழியே அதனை நாம் பாதுகாக்க இவை நமக்கு உதவும்.


தமிழிலும் இவரைப் பற்றித் தொடர்ந்து எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் போன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எழுதிவருகின்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வெளிவரும் 'துளிர்' அறிவியல் இதழ், விரைவில் டேவிட் அட்டன்பரோவின் சிறப்பு இதழாக வெளிவர உள்ளது. அதில் எனது கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்து பள்ளிகளில் அட்டன்பரோவின் வீடியோக்கள் எவ்வாறு குழந்தைகளின் கல்வியில் பயன்படுகின்றன என்பது குறித்து அதில் விரிவாக எழுதியிருக்கிறேன்.


சரி! வாருங்கள், இந்த நூற்றாண்டு மனிதரின் சாதனை மேலும் தொடர நாமும் அவரை நமது கட்டுரையின் வழியே வாழ்த்துவோம்.


பஞ்சு மிட்டாய் பிரபு
பஞ்சு மிட்டாய் பிரபு

தஞ்சாவூர் இவரது சொந்த ஊர். தற்போது லண்டனில் வசித்துவருகிறார். எனக்குப் பிடிச்ச கலரு, குட்டித் தோசை, சாவித்திரியின் பள்ளி, எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம் ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். இங்கிலாந்திற்கும் கறுப்பின அடிமைத்தனத்திற்கும் உள்ள தொடர்பை இவரது இளையோர் நாவலான ஒலாடா பேசுகிறது. கறுப்பின அடிமைத்தனம் குறித்து நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட படைப்புகளில் மிக முக்கியமானது இந்த நாவல். மேலும் இவர் தொகுத்து வெளியான 'நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்-நோக்கமும் அதன் பாதையும்' என்கிற புத்தகம் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் ஆவணப் பெட்டகமாக விளங்குகிறது.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page