குழந்தைகளின் உரிமைகள் - 14
- கமலாலயன்

- Jun 15
- 3 min read
குழந்தைகளின் உரிமைகள் - ஐக்கிய நாடுகள் அவையின் சர்வதேசப் பிரகடனம்:

எப்போதுமே நமது சிந்தனைகள் பெரியவர்கள் சார்ந்தவையாகவே உள்ளன. அதிலும், ஆண்கள் சார்ந்தவையே 90 % அளவிற்கு மேல் ஆக்கிரமித்திருப்பது யதார்த்தம். குழந்தைகளையும், அவர்களின் உரிமைகளையும் நாம் பொருட்படுத்துவதே அரிதிலும் அரிதாக இருக்கிறது. ஆகவேதான், ஐக்கிய நாடுகளின் சர்வதேசப் பிரகடனம், குறிப்பாக யுனெஸ்கோ, குழந்தைகளின் உரிமைகள் குறித்து உரத்துப் பேசியிருக்கிறது; தொடர்ந்தும் பேசி வருகிறது. அந்த ஐ. நா. பிரகடனத்தின்படி, என்னென்ன உரிமைகள் குழந்தைகளுக்கு இருக்கின்றன என்பது குறித்து நாம் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம்.
இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்ட பிறகான இத்தனை ஆண்டுகளில், அவ்வப்போது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரும் புதிய புதிய, மாறிக் கொண்டு வரும் நவீன உலகின் அறிவியல் சாதனங்களின் தாக்கத்தால் உருவெடுக்கும் சூழல்களுக்கு ஏற்ப புதிய, கூடுதல் உரிமைகளும் உள்ளன. அவற்றையெல்லாம், உலக நாடுகளின் அரசாங்கங்கள், ஐ. நா. அமைப்பு, யூனிசெஃப், யுனெஸ்கோவின் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான துணைக்குழுக்கள் போன்ற அமைப்புகள் தொடர்ந்து கூடுதல் அறிக்கைகள், பிரகடனங்கள், தீர்மானங்கள் ஆகியவற்றின் மூலம் மக்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றன.
அத்தகைய உரிமைகள் குழந்தைகளுக்குத் தடையேதுமின்றி வழங்கப்படுகின்றனவா என்பதையும் அந்த அமைப்புகள் கண்காணித்துக் கொண்டு வருகின்றன. மேற்கண்ட அடிப்படை ஆவணத்தின் ஒன்று முதல் 42 வரையிலுள்ள பிரிவுகள், குழந்தைகளின் உரிமைகள் ஒவ்வொன்றையும் பற்றித் தனித்தனியே விரிவாக விளக்கியுள்ளன. அவற்றில் நாம் இதுவரை 14 பிரிவுகளைப் பற்றிய அறிமுகங்களைப் பார்த்து விட்டோம். 43 முதல் 54 வரையிலுள்ள ஐ. நா. பிரகடன அம்சங்கள், மேற்கண்ட பல்வேறு அமைப்புகள், எப்படியெல்லாம் பணியாற்றிக் கொண்டு வருகின்றன என்பதைப் பற்றி விளக்குகின்றன.
இந்தக் கட்டுரையில்,குழந்தைகளும் அவர்கள் அளவில் தனி நபர்களாகவும் இருப்பவர்கள் எனும் அடிப்படையில், பெற்றுள்ள மிக முக்கிய உரிமையான தமக்கான ‘அமைப்பு’களை உருவாக்கிக்கொள்ளும் உரிமையைப் பற்றிப் பார்க்கலாம்: பெரியவர்களாகிய நாம், நாம் வாழும் சமூகத்தில், பணியாற்றும் அலுவலகங்கள்/ தொழிற்சாலைகள்/ வணிக நிறுவனங்கள் போன்ற பொது வெளிகளிலும், தாங்கள் வசிக்கும் குடியிருப்புகள்/ அடுக்ககங்கள்/ தனித்த இல்லங்கள் போன்ற தனி வெளிகளிலும் முதலில் தனி நபர்களாகவே வாழத் தொடங்குகின்றனர். இந்தப்பொது/ தனி வெளிகளில், இவர்கள் தமக்கு ஏற்படும் பிரச்னைகள், நெருக்கடிகள், இடையூறுகள் ஆகியவற்றுக்குத் தேர்வு காண்பதற்குத் தொடக்க நிலைகளில், முடிந்தவரை தனி நபர்களாகத்தான் முயல்கிறார்கள்; அவற்றுக்கான தீர்வுகளையும் பெறுகிறார்கள். அதுதான் இயல்பு.
காலம் செல்லச்செல்ல, இவ்வாறு தனி நபர்களால் தீர்வு காண முடியாத விதத்தில் மேற்கண்ட பிரச்னைகளும்,நெருக்கடிகளும்,இடையூறு களும் அளவிலும் எண்ணிக்கையிலும் பெரியனவாக, அதிகமாக, விரிவான வையாக ஆகிக்கொண்டே வருகின்றன. அத்தகைய நிலையில், தனி நபர்களால் அந்த நெருக்கடிகளுக்குத் தீர்வுகளைக் காண முடிவதில்லை. மேற்கண்ட நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் நிர்வாகங்கள், தனி நபர்களின் கோரிக்கைகளைப் பொருட்படுத்துவதில்லை. இவர்களாலும் ஓர் அளவிற்கு மேல் தமது உயரதிகாரிகளையும், உரிமையாளர்களையும் எதிர்த்துக் கேள்விகள் கேட்க முடிவதில்லை; அப்படியே கேள்விகளை எழுப்பினாலும் அவர்கள் அலட்சியமாகக் கடந்து போய் விடுகிற நிலை உருவாக்கிவிடும்.
அவ்வாறான ஒரு சூழலில்தான், அனைவரின் சார்பிலும் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசவும்,வலியுறுத்தவும்,அவற்றைக்கட்டாயம் நிறைவேற்றியே தீர வேண்டுமென்ற நிர்ப்பந்தத்தை நிர்வாகங்களுக்கு ஏற்படுத்தவும் தொழிற்சங்கங்கள், அலுவலர் அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கம், நுகர்வோர்/ வாடிக்கையாளர்களின் கூட்டமைப்புகள் போன்ற பொதுநல அமைப்புகளை உருவாக்கியாக வேண்டிய அவசியம் எழுகிறது.
அவ்வாறான அமைப்புகளின் நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்படும் 5 அல்லது 7 பேர், தமது அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரின் சார்பிலும் நிர்வாகங்களையும், அரசாங்கங்களையும் அணுகிப் பேச்சுவார்த்தைகள் மூலம் தங்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகளைப் பெறுகின்றனர். நமது தொடர் குழந்தைகளின் உரிமைகளைப் பற்றியதுதானே, இதில் இங்கு பெரியவர்களின் அமைப்பு களைப் பற்றிய விவரங்கள் எதற்கு என்று ஒரு கேள்வி,இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு எழுந்திருக்கும். இப்போது அந்தக் கேள்விக்குப் பதிலையும், குழந்தைகளுக்கும் கூட, தங்களுக்கான அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளும் அவசியமும், உரிமையும் உண்டா என்பதையும் இங்கு பார்ப்போம்.
ஐ. நா. பிரகடனத்தின்படி, நாம் இதுவரை பார்த்தவை, பார்க்க வேண்டியவை உள்பட ஏராளமான உரிமைகள் இருக்கின்றன. ஆனால், அப்படியான உரிமைகள் தங்களுக்கு இருக்கின்றன என்பதே குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கும் சரி, தெரிவதே இல்லை. அப்படியே ஓரளவு அரைகுறையாக விவரங்களைத் தெரிந்து வைத்திருந்தாலும், அவற்றை எப்படிப் பெறுவது என்பது அநேகமாக எவருக்கும் தெரிந்திராது. இங்குதான் குழந்தைகளின் உரிமைகளைப் பெறுவதற்கு, பெரியவர்களைப் போலவே தங்களுக்கான அமைப்புகளை உருவாக்கிக்கொள்ளும் உரிமை உண்டு என்பதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.
ஐ. நா. பிரகடனத்தின் 15 –ஆவது பிரிவு என்ன சொல்கிறது என்றால், “குழந்தைகள் தங்களின் விருப்பப்படி, தனிக்குழுக்களையோ அல்லது அமைப்புகளையோ தாங்களே முயற்சிகளை மேற்கொண்டு உருவாக்கிக்கொள்ளலாம்” என்கிறது! இத்தகைய அமைப்புகளின் மூலம், அவர்கள், தமது உரிமைகளை நிறைவேற்றித்தருமாறு அதிகாரிகளையும், நிர்வாகிகளையும் அணுகி கோரிக்கைகளை முன்வைக்க முடியும்.
தமது அமைப்புகளின் மூலம், மற்றவர்களை வலியுறுத்தலாம்; உதவி கோரிப்பெறலாம். மற்ற சக மனிதர்களுக்கு எவ்விதத்திலும் தொந்தரவில்லாமல், சக மனிதர்களை எவ்வகையிலும் பாதிக்காமல், அவர்களைத் துன்புறுத்தாமல் குழந்தைகள் தங்களுக்கான எந்த விதமான அமைப்புகள் / குழுக்கள் போன்றவற்றை உருவாக்கிக்கொள்ளலாம்.
நாம், உலக அளவிலோ நம் நாட்டிலோ இம்மாதிரி அமைப்புகளை உருவாக்கும் விஷயத்தில் ஏதேனும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோமா? நானறிந்தவரை,வானொலி நிகழ்ச்சிகளில் இடம்பெறும் வினாடி வினா, சேர்ந்திசைப் பாடல் போட்டிகளில் பங்கேற்பதற்கு உதவும் குழுக்களை உருவாக்கி அவற்றின் மூலம் குழந்தைகளுக்கு அத்தகைய வாய்ப்புகளைப் பெற்றுத்தருவது என்ற ஒரு விஷயம், நீண்ட காலமாக அதாவது 1960 –களில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது; இன்றளவும் அது தொடர்கிறது. சமீப காலங்களில், குழந்தைகளுக்கு நாடாளுமன்ற – சட்டமன்ற நடைமுறைகளில் அறிமுகத்தையும், ஒரு பயிற்சியையும் உருவாக்கும் முயற்சியில், பாலர் நாடாளுமன்றம்/ சிறார் சட்டமன்றம் போன்ற விவாதமேடைக் குழுக்கள் நிறைய உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த அம்சம் பற்றிய சிந்தனையே பெரிதாக இல்லாத நிலைமையில், இன்னும் நாம் போகவேண்டிய தூரம் மிகவும் அதிகம். போவோம்!

சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.
சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று
பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார்.
மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.





Comments