வளர்ப்போம்... வளர்வோம்...

பகுதி – 1 :
குழந்தைகள் மட்டும் வளர்வதில்லை.. நாமும் வளர்கிறோம்!
ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்திற்கு வரும் போது கூடவே நம்பிக்கையையும் கொண்டு வருகிறது. அது ஒரு குடும்பத்திற்கானது மட்டுமல்ல, ஒட்டு மொத்த உலகத்திற்கானது. ஆனால் அந்த நம்பிக்கை இறுதி வரை காப்பாற்றப் படுகிறதா? என்பது சிந்தனைக்குறிய கேள்வி. இந்தக் கேள்வி, ஒரு உளவியலாளராக நான் சந்தித்த ஒவ்வொரு குழந்தையையும் எனக்கு நினைவூட்டுகிறது.
"வளர்ப்போம்... வளர்வோம்..." என்ற இந்தப் பயணத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். இது பெற்றோர்களுக்கு ஆலோசனைகளை வாரி வழங்கும் ஒரு தொடர் அல்ல. குழந்தைகளின் மன உலகத்தைப் புரிந்துகொள்ளவும், பெற்றோர்களின் மனப் போராட்டத்தைப் புரிந்து கொள்ளவும், நமக்குள் நடக்கும் ஒரு உரையாடல்.
அன்பு மட்டும் போதுமா?:
குழந்தைகள், பதின்பருவத்தினர் மற்றும் அவர்களது பெற்றோர்களுடன் பயணித்த, பணியாற்றிய அனுபவத்தில் நான் உணர்ந்த மிகப்பெரிய உண்மை ஒன்று உண்டு. அது “ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு நல்லதையே நினைக்கிறார்கள்.”
அவர்களின் எண்ணத்திலும் அன்பிலும் எனக்கு எந்தக் கேள்வியும் இல்லை. அந்த அன்பு சில நேரங்களில் அதீத செல்லமாகவோ இல்லை அதீதக் கண்டிப்பாகவோ வெளிப்படுகிறது. சில நேரங்களில் அதிக அக்கறையாகவும், சில நேரங்களில் பயமாகவும், சில நேரங்களில் கவலையாகவும், சில நேரங்களில் கோபமாகவும் வெளிப்படுகிறது. ஆனால் குழந்தை வளர அந்த அன்பு மட்டும் போதுமானதா?
இன்றைய பெற்றோரின் சவால்கள்:
குழந்தை கோபப்படும்போது எப்படி அணுகுவது? தன்னம்பிக்கையை இழக்கும்போது என்ன பேசுவது? கேட்பதை வாங்கித் தர வேண்டுமா இல்லை தவிர்க்க வேண்டுமா? தவறு செய்தால் கண்டிப்பதா, தண்டிப்பதா இல்லை பேசிப் புரியவைக்க வேண்டுமா? பதின்பருவத்தில் தூரமாகிப் போகும் குழந்தையுடன் மீண்டும் எப்படி நெருக்கமாவது?
இப்படிப்பட்ட கேள்விகள் தினமும் பெற்றோரைத் துரத்துகின்றன. அதிலும் இன்றைய பெற்றோரின் வாழ்க்கைமுறை முன்பை விடவும் சவாலானதாக மாறியுள்ளது. அதற்கான காரணங்கள் பல..
1.கல்விச் சூழல் அழுத்தம்.
2.திரை நேரத்தின் தாக்கம்
3.சமூக ஊடகங்கள் தரும் அழுத்தம்
4.வேகமான வாழ்க்கை முறை
5.குடும்பத்தோடு செலவிட நேரப் பற்றாக்குறை
6.பொருளாதார நெருக்கடிகள்
யார் சிறந்த பெற்றோர்?:
இதற்கிடையில் "நான் ஒரு நல்ல பெற்றோராக இருக்கிறேனா? என் குழந்தைகளை நன்றாக வளர்க்கிறேனா?" என்ற கேள்விகளையும் பலர் மனதில் சுமந்துகொண்டே தான் வாழ்கிறார்கள்.
ஆனால் நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மை இருக்கிறது. அது 'குற்றமற்ற, சிறந்த, நூறு மதிப்பெண் பெறும் பெற்றோர்' என்று யாரும் இல்லை. அப்படிப்பட்ட ஒருவர் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
குழந்தைகளின் தேவை, குறைகளே இல்லாத பெற்றோர் அல்ல;
தங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் பெற்றோர்.
பேசும்போது முழுமையாகக் காது கொடுத்துக் கேட்கும் பெற்றோர்.
தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டாமல், அந்தத் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளத் துணை நிற்கும் பெற்றோர்.
வீட்டிலும் வெளியிலும் தனித்தன்மையோடு சுயமாக செயல்பட அனுமதிக்கும் பெற்றோர். அதனை ஊக்குவிக்கும் பெற்றோர்.
வளர்க்கிறோமா? வளர்கிறோமா?:
ஒரு தாயாக நான் கற்றுக் கொண்ட ஒரு அழகான பாடம் ”குழந்தை வளர்ப்பு என்பது ஒருவழிப் பயணம் அல்ல”. நாம் அவர்களை வளர்க்கிறோம் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் அவர்களும் நம்மை வளர்க்கிறார்கள்.
நமக்கு பொறுமையைக் கற்றுத்தருகிறார்கள்.
சின்னஞ்சிறு விஷயங்களிலும் மகிழ்ச்சியைக் காண கற்றுத்தருகிறார்கள்.
நம் சிறுவயது நினைவுகளை நமக்கு மீட்டுத் தருகிறார்கள்.
சில நேரங்களில், நமக்கே தெரியாத நம்முடைய பயங்கள், எதிர்பார்ப்புகள், உணர்வுகள் அனைத்தையும் நமக்குக் காட்டும் கண்ணாடியாகவும் மாறுகிறார்கள்.
அதனால்தான் இந்தத் தொடருக்கு "வளர்ப்போம்... வளர்வோம்..." என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தேன். நாமும் அம்மாவாக, அப்பாவாக ஒவ்வொரு நாளும் வளர்கிறோம். நம்மை இன்னும் பக்குவமானவர்களாகவும், கனிவானவர்களாகவும், உணர்வுப்பூர்வமான மனிதர்களாகவும் மாற்றும் பயணமாக குழந்தை வளர்ப்பு இருக்க வேண்டும்.
ஒவ்வொரு உரையாடலிலும்...
ஒவ்வொரு அணைப்பிலும்...
ஒவ்வொரு மன்னிப்பிலும்...
ஒவ்வொரு சிரிப்பிலும்...
நமக்கான பாடம் உள்ளது.
ஒரு குழந்தையின் மனம் எப்படி மலர்கிறது? குழந்தைகளின் மூளை எப்படி வளர்கிறது?அவர்களின் நடத்தைக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகள் என்ன? இவற்றை எல்லாம் பற்றி பேசப்போகிறோம்.
குழந்தைகளின் வளர்ச்சிப் படி நிலைகள், நடத்தை மாற்றங்கள், சமூகக் கற்றல், தன்னம்பிக்கை, பொறுப்புணர்வு, நட்பு, திரை நேரம், ஒழுக்கம், பதின்பருவ மாற்றங்கள், மனஅழுத்தம், உணர்வுகளைக் கையாளும் திறன்—இவை அனைத்தையும் அறிவியல் ஆதாரங்களோடும், அன்றாட வாழ்க்கை அனுபவங்களோடும் இணைத்து என்னால் முடிந்த வரை எளிமையாகப் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.
நீங்கள் இங்கு தனியாக இல்லை:
மிக முக்கியமாக, இந்தத் தொடர் யாரையும் குறை சொல்லும் இடமல்ல.
உங்கள் குழந்தை பொதுவெளியில் அடம் பிடித்து அழுதிருக்கலாம்...
பதின்பருவ மகன் அல்லது மகள் உங்களிடம் பேசாமல் இருக்கலாம்...
ஒரு நாள் கோபத்தில் நீங்கள் அதிகமாகக் கண்டித்துவிட்டு, பின்னர் மனம் வருந்தியிருக்கலாம்...
அப்படியான அனுபவங்கள் இருந்தால், நீங்கள் மட்டும் இங்கு தனியாக இல்லை.
இது பல குடும்பங்களின் இயல்பான வாழ்க்கையில் ஒரு பகுதிதான்.
நம் தவறுகளிலிருந்தும் நாம் கற்றுக்கொண்டு, நாளுக்கு நாள் குழந்தையுடன் சேர்ந்து வளர்வது தான் இயல்பான பெற்றோரியம். அன்பு, பாதுகாப்பு, ஏற்றுக்கொள்ளுதல்—இந்த மூன்றும் ஒரு குழந்தையின் மன வளர்ச்சிக்கான வேர்கள்.
இந்தத் தொடரின் மூலம், ஒரு ஆலோசகராக மட்டுமல்லாமல், குழந்தைகளின் உலகத்தை தினமும் பார்த்து, கேட்டு, கற்றுக்கொண்டு, அவர்களுடன் பயணிக்கும் ஒருவராக என் அனுபவங்களையும் சிந்தனைகளையும் உங்களுடன் பகிர விரும்புகிறேன்.
நீங்கள் பெற்றோராக இருந்தாலும்...
ஆசிரியராக இருந்தாலும்...
தாத்தா, பாட்டியாக இருந்தாலும்...
அல்லது குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொள்ள விரும்பும் யாராக இருந்தாலும்...
இந்தப் பயணத்தில் உங்களுக்கான ஒரு சிறு ஒளிக்கீற்று கிடைக்கும் என்று நம்புகிறேன்.
ஏனென்றால்,
ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களைப் புரிந்துகொள்ளும் பெரியவர்கள் தேவை.
ஒவ்வொரு பெரியவருக்கும், குழந்தைகளோடு சேர்ந்து வளர ஒரு வாய்ப்பு தேவை.
இந்த முதல் சந்திப்பை இப்படி நிறைவு செய்கிறேன்.
"குழந்தைகள் இயல்பாகவே மலர்கிறார்கள். அந்த மலர்ச்சியை ரசிக்கும் தருணத்தில், நாமும் அமைதியாக வளர்ந்து கொண்டிருக்கிறோம்."
(வளர்வோம்)

உளவியல் ஆலோசகர் (Counseling Psychologist) மற்றும் 'InnerCircle Nurturing Minds' அமைப்பின் நிறுவனர் ஆவார். குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் (Child & Adolescent) உளவியலில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இவர், சான்றிதழ் பெற்ற பள்ளி ஆலோசகராகவும், வாழ்க்கை முறை திறன் பயிற்சியாளராகவும் (Life Skills Trainer) பணியாற்றி வருகிறார்.
உளவியல் ஆலோசனை மற்றும் திறன் பயிற்சிகளில் சுமார் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர், ‘மகிழ் பதின்’ (Teen Psychology) புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். மாணவர்களின் மனநலம், ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதலுக்காக 1,500-க்கும் மேற்பட்ட அமர்வுகளையும் (Sessions), 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தனிப்பட்ட ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.






Comments