top of page

தத்துவம் அறிவோம் -18

9 hours ago
2 min read

பெண்ணை அடிமைப்படுத்தல்


என்னது பெண்களை அடிமைப்படுத்தினார்களா? என்று தோன்றுகிறதா?


ஆமாம்.


விவசாயத்தைக் கண்டுபிடித்து ஒரு இடத்தில் குடியேறியதும் மனிதனின் குணம் மாறிவிட்ட து. தனக்கு என்று நிலம், இடம், சேமிப்பு, செல்வம் வசதி, வாய்ப்பு என்று உருவாக்கத் தொடங்கினான்.


தன்னுடைய நிலத்தில் வேறு யாரும் சொந்தம் கொண்டாட க் கூடாது. தன்னுடைய வீட்டில் வேறு யாரும் குடி வரக்கூடாது. தன்னுடைய உணவை யாருக்கும் பகிர்ந்து கொடுக்க க் கூடாது. தன்னுடைய பொருட்களை யாரும் எடுக்க க் கூடாது. தன்னுடைய சேமிப்பை யாருக்கும் கொடுக்க க்கூடாது.


இப்படியான சுயநலம் என்ன செய்யும்?


ஆதிவேட்டை சமூகத்தில் எதையும் எல்லாரும் பகிர்ந்து கொண்ட நிலை மாறியது. தன் கூட்ட த்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனுக்கு எதையும் பகிர்ந்து கொடுக்க மனம் வரவில்லை.


அப்போது தான் திருட்டு என்ற சொல் உருவானது.


எது திருட்டு?


அடுத்தவன் பொருளை எடுத்துக் கொள்வது திருட்டு. அப்படித்தானே!


ஏன் அடுத்தவன் பொருளை எடுக்கிறான்?


இல்லாததால்..


ஏன் அவனிடம் இல்லை?


உணவோ, பணமோ வைத்திருப்பவர்கள் பகிர்ந்து கொடுக்க மறுப்பதால்.


அவர்களுடைய பொருளை எப்படிக் கொடுப்பார்கள்?


அவர்களுக்கு எப்படி இந்தச் செல்வம் வந்தது?


உழைப்பினால்.


ஒருவர் மட்டும் உழைத்தால் இத்தனை செல்வம் சேருமா? உதாரணத்துக்கு அதானி என்ற பணக்காரர் மட்டும் உழைத்து இத்தனை லட்சம் கோடியைச் சம்பாதிக்க முடியுமா?


அவர் லட்சக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு வைத்திருக்கிறார். அவர்கள் எல்லாரும் அவருக்காக வேலைச் செய்கிறார்கள். அவர்களுடைய உழைப்பை குறைந்த கூலி கொடுத்து விலைக்கு வாங்குகிறார்.


கொடுக்கும் கூலி என்பது…


அவர்கள் உழைத்தார்களல்லவா… அந்த உழைப்பினால் பொருள் உற்பத்தியாகுமல்லவா … அந்தப் பொருட்களை விற்றால் லாபம் வருமல்லவா…


அந்த லாபத்தில் ஒரு துளியைத் தான் கூலியாகக் கொடுக்கிறார். பெரும்பகுதி அவர் எடுத்துக் கொள்கிறார்.


அதனால் அவர் மிக விரைவில் பணக்காரர் ஆகிவிடுகிறார்.


அப்படி என்றால் ஆதியில் ஒரு கூட்டம் அல்லது இனக்குழு இருக்கிறது என்றால் அங்கே எல்லாம் எல்லாருக்கும் சொந்தம். யார் வேண்டுமானாலும் தேவைக்கு எடுத்துக் கொள்ளலாம். அப்போது தேவைக்கு மேல் எடுத்தால் கூட்டமே சேர்ந்து தடுக்கும். திட்டும். தண்டனை கொடுக்கும்.

ஆனால் இப்போது பசியுடன் இருப்பவன் உணவை எடுத்து விட்டால் அதைத் திருட்டு என்று சொல்ல ஆரம்பித்தார்கள். எல்லாருக்கும் பொதுவாக இருந்தபோது தேவைப்படுபவர்கள் எடுத்துக் கொண்ட செயல் இப்போது திருட்டு என்று பெயர் சூட்டப்பட்டு அதற்குத் தண்டனை வழங்கப்படுகிறது.


ஒரே செயல் எப்படி மாறுகிறது? யார் மாற்றினார்கள்? ஏன் மாற்ற வேண்டும்?

யோசித்துப் பாருங்கள்!


அதேபோல இன்னொன்றையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.


ஆதிகாலத்தில் இனக்குழுவுக்குத் தலைமை தாங்கி பெண்கள் நடத்தினார்கள். அப்போது எல்லாம் பொதுவாக இருந்தன.

ஆனால் எப்போது ஆண்கள் தலைமை தாங்க ஆரம்பித்தார்களோ அப்போது சுயநலம் வரத் தொடங்கிவிட்டது.


சுயநலம் வந்ததும் தன்னுடைய சொத்து தன்னுடைய வாரிசுகளுக்குத் தான் சொந்தமாக வேண்டும். என்ற சிந்தனை வந்தது.


அந்தச் சிந்தனை வந்ததும் பெண் தானே குழந்தை பெற்றுக் கொடுக்கிறாள், அவளை அடிமைப்படுத்த வேண்டும். அதற்கு முன்பு ஒரு கூட்டத்தில் யாரும் யாருடனும் இணை சேரலாம் என்றிருந்த நிலையை மாற்றினார்கள் ஆண்கள்.


தன்னைப் போலவே அனைத்து உணர்ச்சிகளும் சிந்தனைகளும் கொண்ட சக மனுசியான பெண்ணையும் ஒரு பொருளாக மாற்றத் தொடங்கினார்கள் எனது நிலம், எனது வீடு, எனது தானியம், எனது பொருள், என்று சொல்வதைப் போல எனது பெண், என்று சட்டங்களைக் கொண்டு வந்தார்கள்.


பெண்கள் உடமையாக்கப்பட்டார்கள்.

பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன.


ஆண்கள் சொல்வதைக் கேட்டு குடும்பத்துக்காக தன்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொடுக்கிற சடமாக மாற்றப்பட்டார்கள். ஒரு காலத்தில் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பெண்கள் இப்போது ஆண்களுக்கு அடிமைகளானார்கள்.


எந்தப் பெண்ணாவது சட்டங்களை மீறினால் கொடிய தண்டனை வழங்கப்பட்டது. ஆணுக்குப் பெண் அடங்கி நடக்க வேண்டும். சட்டங்கள், கதைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், விதிமுறைகளை உருவாக்கி அவற்றைக் காலம் காலமாக. பெண்களுக்குப் போதித்து மூளைச்சலவை செய்தார்கள்.


பெண் என்பவள் ஆணுக்காகவே படைக்கப்பட்டாள் என்று கடவுள் பெயரால் கட்டுக்கதைகளை உருவாக்கிப் பரப்பினார்கள்.


இந்த விதிமுறைகளை சமூகம் முழுவதும் நடைமுறைப்படுத்தினார்கள். அதனால் அடிமைகளாக வேலை செய்த ஆண்களும் பெண்களை அடிமைகளைப் போல நடத்தினார்கள்.


விநோதமாக இருக்கிறதல்லவா?


( அறிவோம் தெளிவோம் )


உதயசங்கர்
உதயசங்கர்

200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.

 சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்

 பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்

 விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page