top of page

இலண்டனிலிருந்து அன்புடன் – 14


"இலண்டனிலிருந்து அன்புடன்" தொடரில் இம்மாதம் கவிஞர் மைக்கேல் ரோசன் அவர்களின் “Out of this World” எனும் கவிதைப் புத்தகம் குறித்துப் பார்க்கப் போகிறோம்.


"கவிதை" என்றதும் அது பெரியவர்களுக்கானது என்று நினைத்துவிட வேண்டாம்; இது சிறுவர்களுக்கான கவிதை! “ஓ! ரைம்ஸ்தானே (Rhymes)!” என்று நீங்கள் சொல்வது எனக்குக் கேட்கிறது. Rhymes என்பதும் ஒருவகை கவிதைதான் என்றாலும், அந்தப் பாடல்கள் பொதுவாக 8 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கானவை. ஆனால், சிறுவர்களுக்கான கவிதைகள் என்பது 8 முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கானது.


கவிதைகளை நம்மை அறியாமலே பல வடிவங்களில் நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம். சில நேரங்களில் நாமும்கூட கவிஞர்களாய் மாறிவிடுவோம்! ஓர் உதாரணம் சொல்லவா? நமக்குப் பிடித்தமான ஒரு திரைப்படப் பாடலின் வரிகள் சரியாகத் தெரியாவிட்டாலும்கூட, பாடலின் இசையிலுள்ள தாளத்திற்கு ஏற்றவாறு நமக்குத் தெரிந்த வார்த்தைகளைச் சேர்த்துப் பாடுவோம் அல்லவா? அதுகூட ஒருவகையில் நாம் கவிஞர்களாய் மாறுவது போல்தான்.


இலண்டனில் வாழ்ந்து வரும் எழுத்தாளர் மைக்கேல் ரோசன் அவர்களுக்குத் தற்போது 80 வயது ஆகிறது. இவர் ஓர் ஆங்கில ஆசிரியர். சிறுவர்களுக்குக் கவிதை எழுதுவதில் இவர் மிகவும் திறமைசாலி. கவிதைகள் மட்டுமல்லாமல் சிறுகதை, நாவல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு துறைகளில் இவர் வேலை பார்த்திருந்தாலும், அனைத்திலும் சிறுவர்களைப் பற்றித்தான் அதிகம் பேசுவார். அவரிடம் "கவிதை என்றால் என்ன?" என்று கேட்டதற்கு, அவர் இவ்வாறு கூறினார்:

“கவிதை என்பது நம் குடும்ப ஆல்பத்தில் உள்ள மிகவும் பிடித்த புகைப்படம் போன்றது. ஓர் அழகான புகைப்படம், நமக்குப் பிடித்த தருணங்களையெல்லாம் கண் முன்னே காட்சிகளாய் எப்படிச் சட்டெனக் கொண்டு வருமோ, அதுபோல்தான் கவிதையும்!


கவிதைகளில் நீங்கள் எல்லா விஷயங்களையும் முழுமையாகச் சொல்லி முடித்துவிட வேண்டும் என்ற அவசியமில்லை! கதைகளைப் போல இறுதியில் எல்லாவற்றையும் சரியாக முடித்து வைக்க வேண்டியதில்லை. கவிதைகள் கேள்விகளோடு முடியலாம், பதில்களே இல்லாமலும் நிற்கலாம், புதிய சிக்கல்களைப் பற்றி யோசிக்கவும் வைக்கலாம்.


வாழ்க்கை என்பதே கேள்விகளும் பிரச்சினைகளும் நிறைந்ததுதானே! குறிப்பாகக் குழந்தைகளுக்கு எத்தனை கேள்விகள்! ஒவ்வொரு கேள்வியும் எவ்வளவு சுவாரஸ்யமானது! இந்தக் கேள்விகள்தாம் கவிதைகளாய் மாறுகின்றன.”


ஆஹா! எவ்வளவு அழகாகச் சொன்னார் பார்த்தீர்களா!


சரி, வாருங்கள் அவருடைய புத்தகம் குறித்தும் பார்த்துவிடுவோம். “Out of this world” - இது 12 கவிதைகள் கொண்ட, 200 பக்கப் புத்தகம். வெறும் 12 கவிதைகளுக்கு 200 பக்கங்களா என எனக்கும் சற்றுத் தயக்கமாகவே இருந்தது. ஆனால், படிக்க ஆரம்பித்ததும் மிகவும் சுவாரஸ்யமாக உணர்ந்தேன். இதில் “Letters” (கடிதங்கள்) எனும் கவிதை எனக்கு மிகவும் பிடித்தமானது.


இவரது கவிதைகள் பெரும்பாலானவை, இவரது சிறுவயது சேட்டைகளிலிருந்தே உருவானவை. ஆதலால், அவற்றை வாசிக்க வாசிக்க நமது சேட்டைகளும் நினைவுக்கு வந்துவிடும்!


“கடிதங்கள்” எனும் கவிதையில் மைக்கேல் ரோசன்தான் ஹீரோ! அவரது அண்ணன் பெயரில் வீட்டிற்கு முதன்முறையாகக் கடிதம் வருகிறது. அதைப் பார்த்ததும், "அப்பாவிற்கு கடிதம் வருகிறது, அம்மாவிற்கு கடிதம் வருகிறது, தற்போது அண்ணனுக்கும் கடிதம் வருகிறது... ஆனால், தனக்கு மட்டும் கடிதம் ஏதும் வரவில்லையே!" என்று மைக்கேல் மிகவும் வருத்தமடைகிறான். தனக்கும் கடிதம் வர வேண்டும் என்று யோசிக்கிறான்.


செய்தித் தாள்களில் வரும் விளம்பரங்களைப் பார்க்கிறான். அதில் எவையெல்லாம் “இலவசம்! உங்கள் விருப்பத்தைக் கடிதம் மூலம் தெரிவியுங்கள்” என்ற வாசகத்தோடு இருக்கிறதோ, அதற்கெல்லாம் இவன் கடிதம் போடுகிறான். வழுக்கைத் தலைக்கான மருந்து, யோகா என வரிசையாக அவன் கடிதம் போட, அவனுக்கும் பதில் கடிதங்கள் வரத் தொடங்குகின்றன! அதன் பிறகு அவன் தன் அண்ணனிடம், “யாருக்கு அதிக கடிதங்கள் வருகின்றன என்று போட்டி வைக்கலாமா?” என வம்பிழுக்கிறான். அதன் பிறகு என்ன ஆனது எனும் சுவாரஸ்யமான சம்பவத்தை அழகான கவிதை வடிவில் இந்தப் புத்தகம் தந்துள்ளது.


20-25 பக்கங்கள் கொண்ட இக்கவிதையை 10 நிமிடங்களில் வாசித்து முடித்த பிறகு, நீங்கள் கட்டாயம் வயிறு குலுங்கச் சிரிப்பீர்கள்!


இந்தக் கவிதையை வாசித்த பிறகு நான் மைக்கேல் ரோசன் அவர்களின் தீவிர ரசிகராகிவிட்டேன். நீங்களும் வாசித்துப் பாருங்கள்... நீங்களும் என்னைப் போல ரசிகராக மாறுவீர்களா என்று எனக்குத் தெரியாது, ஆனால் கட்டாயம் ஒரு கவிஞராக மாறுவீர்கள்!


பஞ்சு மிட்டாய் பிரபு
பஞ்சு மிட்டாய் பிரபு

தஞ்சாவூர் இவரது சொந்த ஊர். தற்போது லண்டனில் வசித்துவருகிறார். எனக்குப் பிடிச்ச கலரு, குட்டித் தோசை, சாவித்திரியின் பள்ளி, எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம் ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். இங்கிலாந்திற்கும் கறுப்பின அடிமைத்தனத்திற்கும் உள்ள தொடர்பை இவரது இளையோர் நாவலான ஒலாடா பேசுகிறது. கறுப்பின அடிமைத்தனம் குறித்து நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட படைப்புகளில் மிக முக்கியமானது இந்த நாவல். மேலும் இவர் தொகுத்து வெளியான 'நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்-நோக்கமும் அதன் பாதையும்' என்கிற புத்தகம் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் ஆவணப் பெட்டகமாக விளங்குகிறது.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page