top of page

வளர்ப்போம்…வளர்வோம்.. - 2


பாதுகாப்பின் விதை


ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்குத் தேவையான உணவு, உடை, உறைவிடம், கல்வி எனப்பலவற்றையும் நாம் சிந்திக்கிறோம். ஆனால் குழந்தைக்கு மிகவும் முக்கியமான அடிப்படையான தேவை ஒன்று உள்ளது. அது தான் பாதுகாப்புணர்வு. ‘நான் பாதுகாப்பாக இருக்கிறேன்; நான் நேசிக்கப்படுகிறேன்; எனக்காக என் பெற்றோர் இருக்கிறார்கள்’ என்ற உணர்வு.


இந்த உணர்வின் அடித்தளம் Attachment – உணர்வுப்பூர்வமான நெருக்கம் என்கிறது உளவியல்.

குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே உருவாகும் ஆழமான உணர்வுப்பூர்வமான தொடர்பு குழந்தையின் பிறப்பு முதல் அவர்களின் ஆரம்பகால அனுபவங்களால் மெதுவாக உருவாகிறது. குழந்தை அழும்போது பெற்றோர் எவ்வாறு அரவணைக்கிறார்கள்? பயப்படும்போது எவ்வாறு ஆறுதல் அளிக்கிறார்கள்? மகிழ்ச்சியை எவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்கள்? தவறு செய்யும்போது எவ்வாறு அணுகுகிறார்கள்? இத்தகைய அன்றாட அனுபவங்களே குழந்தையின் மனதில் உறவுகளைப் பற்றிய ஒரு அடிப்படை நம்பிக்கையையும் புரிதலையும் உருவாக்குகின்றன.


பாதுகாப்புணர்வு என்றால் என்ன?


இதன் பொருள் பெற்றோர் எப்போதும் குழந்தையின் அருகிலேயே இருக்க வேண்டும் என்பதல்ல. குழந்தை பெற்றோரிடமிருந்து சிறிது விலகி விளையாடவும், பள்ளிக்குச் செல்லவும், சுயமாக சிந்திக்கவும், புதிய செயல்களை முயற்சிக்கவும் வேண்டும், அதே நேரம் குழந்தையின் மனதில், “எனக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் என்னை ஆதரிக்க ஒருவர் இருக்கிறார்.” என்ற நம்பிக்கை இருப்பதுதான் பாதுகாப்புணர்வு.


இந்த உணர்வு குழந்தைக்கு இந்த உலகத்தை சந்திக்கும் தைரியத்தையும், தோல்விகளை எதிர்கொள்ளும் திறனையும், பிறரிடம் நேர்மறையான உறவுகளை உருவாக்கும் அடித்தளத்தையும் வழங்குகிறது.


அதை எப்படி உருவாக்குவது?


பாதுகாப்புணர்வு என்பது ஒரு நாளில் உருவாகாது. சிறிய சிறிய தருணங்களின் தொகுப்பாகவே அது உருவாகும்.

  • குழந்தைகளைக் கண்ணோடு கண் பார்த்துப் பேசுவது

  • அவர்கள் பேசும்போது கைபேசியைப் பார்த்துக்கொண்டிருக்காமல் கவனமாகக் காது கொடுத்துக் கேட்பது.

  • அவர்கள் அழும்போது, “அழாதே! சத்தம் வரக்கூடாது” என்று அதட்டாமல், “உனக்கு வருத்தமாக இருக்கிறதா? நான் இருக்கிறேன்” என்று அணைத்துக் கொள்வது.

  • பள்ளியிலிருந்து வந்ததும் வீட்டுப் பாடங்களையும் மதிப்பெண்களையும் மட்டும் கேட்காமல், “இன்றைய நாள் எப்படி இருந்தது?” என்று மகிழ்வான தருணங்களைப் பற்றிக் கேட்பது.

  • குழந்தை தவறு செய்தாலும், “நீ செய்த செயல் எனக்குப் பிடிக்கவில்லை; அது தவறு தான்.


அதை சரி செய்ய நான் உதவுகிறேன். ஆனால் உன்னை நான் நேசிப்பதில் எந்த மாற்றமும் இல்லை” என்பதை உணர்த்துவது.


இவை அனைத்தும் குழந்தையின் மனதில் பாதுகாப்பின் விதைகளை விதைக்கும்.

அன்பு மட்டும் போதுமானதா?


அன்பு மிகவும் முக்கியமானதுதான். ஆனால் அது மட்டுமே போதாது. எழுத்தாளர் விழியன் அவர்கள் “scientific parenting” என்னும் வார்த்தையை பெற்றோர் கூடுகையில் அடிக்கடி பரிந்துரைப்பார். அதாவது பெற்றோரின் அன்பு அறிவியல்பூர்வமாகவும் இருக்க வேண்டும் என்பதே. ஒவ்வொரு முறையும் குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவது அன்பு ஆகாது. அதன் பெயர் செல்லம் கொடுத்தல்(pampering).


உரையாடலும் (conversation), நிலைத்தன்மையும் (Consistency), நம்பகத்தன்மையும் (Reliability) எல்லைகளும் (Boundaries) கொண்ட அன்பே இன்றையத் தேவை.


தேவையான இடங்களில் அன்புடன் “இல்லை” என்று சொல்லி மறுப்பதும், நான் உன்னை நேசிக்கிறேன்; அதே நேரத்தில் உனக்கான எல்லைகளையும் நான் அமைப்பேன்” என்ற செய்தியை, குழந்தைகளுக்கு உணர்த்துவதும் பாதுகாப்பான பெற்றோரியத்தின் ஒரு பகுதிதான்.


பெற்றோருக்கான ஒரு சிறிய செயல்பாடு:


இன்று உங்கள் குழந்தையிடம் இந்தக் கேள்வியைக் கேளுங்கள்: “நீங்கள் ஒரு தவறு செய்தால், அதன் மூலம், ஏதாவது பிரச்சினை வந்தால், என்னிடம் சொல்லலாம் என்று தோன்றுகிறதா? இல்லை மறைக்கத் தோன்றுகிறதா?”


குழந்தையின் பதிலை முதலில் முழுமையாகக் கேளுங்கள். உடனடியாக விளக்கவோ, அறிவுரை கூறவோ வேண்டாம்.. புரிந்துகொள்ளுங்கள். குழந்தையின் உணர்வுகளுக்கு இடமளியுங்கள். நிச்சயம் மறைக்க மாட்டேன் என்று பதிலளித்தால், அது உண்மை என்று நீங்கள் உணர்ந்தால் மகிழ்ச்சி. குழந்தை உங்களிடம் பாதுகாப்பை உணர்கிறது. பதிலளிக்கத் தயங்கினாலோ இல்லையென்று கூறினாலோ கவலை வேண்டாம். இனி பாதுகாப்பான சூழலை நாம் வழங்க முயற்சி செய்வோமாக!


ஏனெனில் குழந்தையின் மனதில் பாதுகாப்பு உருவாகும்போது, அது தன்னம்பிக்கையாக மாறும். அந்தத் தன்னம்பிக்கை சுயசார்பாக வளரும். சுயசார்பு வாழ்க்கையை எதிர்கொள்ளும் திறனாக வலுவடையும்.


நாம் நினைவில் கொள்ள வேண்டியவை:


தினமும் நாம் பேசும் நம்பிக்கையான வார்த்தைகள், கொடுக்கும் ஒரு சிறு அரவணைப்பு, அவர்கள் பேசும் போது அதைக் காதுகொடுத்துக் கேட்கும் சில நிமிடங்கள், உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ஒரு தருணம் — இவையே

மனதில் விதைக்கப்படும் பாதுகாப்பின் விதைகள்.


உளவியலில் பொதுவாக குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே ” பாதுகாப்பான நெருக்கம்(secure attachment style)” ஏற்பட்டால் அது


1. பெற்றோரிடம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி தேவையானபோது ஆறுதலைத் தேட உதவும்

2. பிற உறவுகள் மீது நம்பிக்கையை உருவாக்கவும் உதவும் குழந்தையின் உணர்வுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படும்போதும் அல்லது “சும்மா அழாதே”, “இதற்கெல்லாமா பயப்படுகிறாய்?” என்று உணர்வுகளை உதாசீனப் படுத்தும்போதும், சிறு சிறு வெற்றிகள் ஊக்கமளிக்கப்படாதபோதும், குழந்தை தன்னுடைய உணர்வுத் தேவைகளைத் “தவிர்க்கும் தன்மை (Avoidant attachment style)” ஏற்பட்டு


1. அவர்கள் உதவி அல்லது ஆறுதல் கேட்பதைத் தவிர்க்கலாம்

2. தங்களுடைய உணர்வுகளை, தவறுகளை மறைக்கலாம்.


“நான் உனக்காக இருக்கிறேன். என் அன்பும் ஆதரவும் என்றும் நிலையானது. உன் அனைத்து உணர்வுகளுக்கும் இங்கே இடம் உண்டு. தவறுகளை சரி செய்து நாம் தொடரலாம்” எனக் கூறி தலைக் கோதினால் நம் குழந்தைகள் உலகத்தை நம்புவதற்கு முன், தன்னை முழுமையாக நேசிக்கும் ஒருவர் இருக்கிறார் என்பதை நம்பக் கற்றுக்கொள்வார்கள். அந்த நம்பிக்கை அவர்களைத் தொடர்ந்து வழி நடத்தும்.


(வளரும்)


சக்தி செண்பகவல்லி
சக்தி செண்பகவல்லி

உளவியல் ஆலோசகர் (Counseling Psychologist) மற்றும் 'InnerCircle Nurturing Minds' அமைப்பின் நிறுவனர் ஆவார். குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் (Child & Adolescent) உளவியலில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இவர், சான்றிதழ் பெற்ற பள்ளி ஆலோசகராகவும், வாழ்க்கை முறை திறன் பயிற்சியாளராகவும் (Life Skills Trainer) பணியாற்றி வருகிறார்.

உளவியல் ஆலோசனை மற்றும் திறன் பயிற்சிகளில் சுமார் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர், ‘மகிழ் பதின்’ (Teen Psychology) புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். மாணவர்களின் மனநலம், ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதலுக்காக 1,500-க்கும் மேற்பட்ட அமர்வுகளையும் (Sessions),

1,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தனிப்பட்ட ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.



Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page