top of page

தத்துவம் அறிவோம் - 15


மாற்றங்களின் வேகம்

வேட்டைச் சமூகமாக இருந்த மனிதர்கள் வேளாண் சமூகமாக, அதாவது விவசாயம் செய்யும்  சமூகமாக மாறினார்கள். இது எல்லாம் ஒரே நாளில் நடந்துவிடவில்லை.


நூற்றாண்டுகளாக மெல்ல மெல்ல மாற்றம் நிகழ்ந்தது.


மனிதர்களின் முன்னேற்றத்தில் மிகப்பெரிய மாற்றம் எப்படி வந்தது தெரியுமா? 


ஒரு வட்டத்தினால். 


என்னது வட்டமா?


ஆமாம்.


மலையிலிருந்து ஒரு வட்டக்கல் உருண்டு வந்தது. 


அந்த வட்டக்கல்தான் சக்கரமாக உருமாறியது.


சக்கரம் ஒர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வதைச் சுலபமாக்கியது.


வட்டமான கற்களை விட வட்டமான மரக்கட்டைகள் இன்னும் சுலபமாக  உருள்வதைக் கண்டுபிடித்தான். 


பிறகு வட்டமான மரக்கட்டைகளை வெட்டிச் செதுக்கி இன்னும் எடை குறைவாக உருள்வதற்கு  ஏற்ற வகையில் செய்தான்.


இதை எல்லாம் இப்போது நாம் நினைப்பது போல உடனே செய்து விடவில்லை. பல பத்தாண்டுகளுக்குப் பிறகே அந்தக் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த.

என்னது வட்டம்தான் மாற்றத்தைக் கொண்டு வந்ததா? 


எப்படி? என்று யோசிக்கிறீர்களா?


சைக்கிள் சக்கரம் வட்டம்.

காரின் சக்கரம் வட்டம்.

பஸ்ஸின் சக்கரம் வட்டம்.

ரயிலின் சக்கரம் வட்டம்.

அவ்வளவு ஏன்? வானில் பறக்கும் விமானத்தின் சக்கரமும் வட்டம் தானே!

வட்டங்கள் தான் மனிதர்களை நவீனமாக்கின..

உலகையே மாற்றும் ஒரு புதிய கண்டுபிடிப்பு உருவானது.

அது என்ன தெரியுமா?


கேட்டால் ஆச்சரியமாக இருக்கும்.

சக்கரம். 


சக்கரம் மனிதனுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை உருவாக்கியது.

ஆமாம். அதுவரை ஒரு இட த்திலிருந்து ஒரு பொருளைக் கொண்டு போக முடியாது. உதாரணத்துக்கு வேட்டையாடிய மிருகத்தைக் குகைக்குக் கொண்டு செல்ல  முடியாது. காயம்பட்டவர்களைத் தூக்கிச் செல்ல முடியாது.


வயதானவர்களைக் கூட்டிக் கொண்டு போக முடியாது.


ஆனால் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அவர்களுடைய பயணம் எளிதானது. மனிதர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு புலம்பெயர்ந்து செல்வது எளிதானதாக  மாறியது.


பொருட்களைக் கொண்டு செல்வது எளிதானதாக மாறியது.


அடுத்ததாக, நெருப்பு.


இயற்கையாக அதிக வெப்பத்தினால் உருவாகும் நெருப்பைச் செயற்கையாக  உருவாக்கியது அடுத்தகட்டப் புரட்சி எனலாம்.

 

ஒருவகையில் ஹோமோசேப்பியன்ஸ் போலச் செய்தல் என்று சொல்லப்படுகிற  திறன் கொண்டவர்களாக இருந்தார்கள். 


போலச்செய்தல் என்றால் இயற்கையான ஒன்றைப் பார்த்துச் செயற்கையாகச் செய்தல்.

உதாரணத்துக்கு, இயற்கையாக கூரான கற்கள் வேட்டை ஆயுதமாகப்  பயன்பட்டதைப் பார்த்து செயற்கையாகக்  கற்களைக் கூராக்கிப் பயன்படுத்துதல். இயற்கையாக உருண்ட கற்களை வட்டமான கற்களாக மாற்றுதல்.

இயற்கையாக உருவான நெருப்பைச் செயற்கையாக சிக்கிமுக்கிக் கற்களை  உரசி உருவாக்குதல்.


தற்செயலாக நெருப்பில் வெந்த விலங்குகளின் மாமிசத்தின் ருசி அறிந்ததும்,  செயற்கையாக நெருப்பை உருவாக்கி அதில் மாமிசத்தை வேகவைத்துச்  சாப்பிடுதல். இப்படிச்  சொல்லிக் கொண்டே போகலாம்.


இன்றுவரை ஹோமோசேப்பியன்ஸ் போலச் செய்பவர்களாகவே  தொடர்கிறார்கள். இப்போது கூடப் பாருங்களேன். நாம் நம்முடைய நண்பரைப் பார்த்து பொருட்களை வாங்குகிறோம்.


பெண்கள் அடுத்தவீடு பக்கத்துவீட்டில் வசிக்கும் பெண்கள் சொல்வதைக் கேட்டு பொருட்களை  வாங்குகிறார்கள். இல்லையென்றால்.


விளம்பரத்தில் வருகிற மனிதர்கள் சொல்வதைக் கேட்டு பொருட்களை  வாங்குகிறோம். 

இல்லையா?


அந்தப் பொருட்களின் உண்மைத்தன்மை பற்றிக் கவலைப்படுவதில்லை.

எல்லோரும் வைத்திருக்கிறார்கள். நாமும் வைத்திருக்க வேண்டும். எல்லோரும் வாங்குகிறார்கள். நாமும் வாங்க வேண்டும். 


இந்தப் போலச் செய்தல் என்ற குணம் இயற்கையைப் பார்த்து போலச் செய்யும்போது புதிய  கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறது.  


அந்தக் கண்டுபிடிப்புகள் மனிதர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை  உருவாக்குகின்றன. எனவே தான் மனிதர்கள் எப்போதும் புதுமை விரும்பிகளாகவே இருக்கிறார்கள்.


விவசாயத்தைக் கண்டுபிடித்த பிறகு மனிதர்களின் வாழ்க்கையில் அதுவரை  இல்லாத புதிய மாற்றம் உண்டானது.


அதுவரை நாடோடிகளாக, வேட்டைச் சமூகமாகத் திரிந்தவர்கள் ஒரே இட த்தில் தங்கினார்கள். அதுவும் குறிப்பாக விவசாயம் செய்வதற்குப் பொருத்தமாக நீர்நிலைகளின்  அருகில் தங்கினார்கள்.

அப்படி அவர்கள் ஒரே இட த்தில் தங்கி விவசாயம் செய்தபோது ஒரு புதிய  வாழ்க்கை தொடங்கியது. அது மனிதகுலத்துக்கே புதிய அத்தியாயமாக இருந்தது. 


கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் ஆண்டுகளாய் ஒரே மாதிரியாக வாழ்ந்த ஹோமோசேப்பியன்ஸ்  சட்டென்று ஒரு புதுயுகத்துக்குள் அடியெடுத்து வைத்தனர்.


அந்தப் புதுயுகம் மனிதர்களுக்கு எவ்வளவு நன்மைகளைக் கொண்டு வந்ததோ  அந்த அளவுக்கு தீமைகளையும் கொண்டு வந்தது. 


நன்மைகளினால் மனிதகுலம் முன்னேறியது.


தீமைகளினால் மனிதர்களில் ஒரு பிரிவினர் அடக்குமுறைக்கு உள்ளானார்கள்.

ஏன் அப்படி நடந்தது?


அந்தப் புதுயுகத்துக்குப் பெயர் என்ன?


நிலவுடைமைச் சமூகம்.


நிலவுடைமை என்றால் என்ன?


( அறிவோம் தத்துவம் )



உதயசங்கர்
உதயசங்கர்

200 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.

 சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்

 பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்

 விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.


3 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
rajinisangee7576@gmail.com
18 hours ago
Rated 3 out of 5 stars.

தோழரின் மிக எளிமையான வரலாற்று பாடம் மிக அருமை. எளியோர் மொழியில்! புரியும் வகையில்! படைப்புகள் கொண்டு செல்லப்பட வேண்டும். அந்த வகையில் தோழர் உதயசங்கரின் படைப்புகள் என்றும் எளிமையானவை! இலகுவானவை! எளிதில் பஞ்சில் நெருப்பாக பற்றி கொள்ளக் கூடிய திறன் படைத்தவை.. வாழ்த்துகள் தோழர்.

அன்புடன்-

பா.கா. தென்கனல் இசைமொழி

Like

இரா.தெ.முத்து
19 hours ago
Rated 4 out of 5 stars.

எளிதான முறையில் தத்துவம் அறிவோம் தொடர் இருப்பது மகிழ்ச்சி.வாழ்த்துகள் பாலபுரஸ்கார் உதயசங்கர்

Like

இரா.தெ.முத்து
19 hours ago
Rated 4 out of 5 stars.

எளிதான முறையில் தத்துவம் அறிவோம் தொடர் இருப்பது மகிழ்ச்சி.வாழ்த்துகள் பாலபுரஸ்கார் உதயசங்கர்

Like
bottom of page