top of page

பால்


இந்தி: பாரோ ஆனந்த்

தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ


“நல்ல செய்தி” என்று கத்திக்கொண்டே அமர் வேகமாகப் படிகளில் ஏறி வந்தான். அவனது தலைப்பாகைத் தலைக்குப் பின்னால் தொங்கிக்கொண்டிருந்தது. தலைமுடி காற்றில் பறந்தது.

“நல்ல செய்திம்மா! நகரில் கலவரம் வெடித்திருக்கிறது” 


“என்னடா உளறுகிறாய்?” என்று கேட்டபடி, கைகளில் ஒட்டியிருந்த மாவைக் கழுவிவிட்டு, அம்மா சமையலறையிலிருந்து வெளியே ஓடி வந்தார்.


“அம்மா! நான் உளறவில்லை. உண்மைதான். ஊரில் கலவரம் நடக்கிறது. பள்ளிகளை மூடிவிட்டார்கள். முஸ்லிம்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்கும் ஒளிந்து கொள்கிறார்கள்”


“இதையா நீ நல்ல செய்தி என்கிறாய்?” என்றபடி குளியலறையிலிருந்து வெளியே வந்த அப்பா, “உனது நண்பர்களான யூசுப்பும், ஷாஹித்தும் ஒளிந்துகொள்ள இடம் தேடிக்கொண்டிருக்கும்போது, இது எப்படி நல்ல செய்தியாகும்?” என்று கேட்டார். 


நீண்ட தலைமுடியிலிருந்து தண்ணீரைப் பிழிந்துகொண்டிருந்த அப்பாவை இடைமறித்து, “அவர்கள் முஸ்லிம்களா? எனக்கு அது தெரியவே தெரியாது. அவர்களது உம்மா, வாப்பாவும் கூடவா?” என்றான். 


“பின்னே என்ன, முட்டாளே!” என்று உள்ளே நுழைந்த அமித், பேச்சின் கடைசிப் பகுதியைக் கேட்டுவிட்டு அமரைக் கேலி செய்தான்.


“நான் முட்டாள் இல்லை. உனக்குத் தெரியாத ஒரு செய்தி என்னிடம் இருக்கிறது” என்று அமர் உடனே பதிலளித்தான்.


அப்பா கோபமாக முறைத்துவிட்டு, “அமர், கலவரங்கள் நல்லது என்று உனக்கு எப்படித் தெரியும்?” என்றார் கண்டிப்புடன். 


“பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. அப்படியானால் அது நல்ல செய்தி இல்லையா?” என்று சொல்லிவிட்டு, வெற்றிப் புன்னகையுடன் அண்ணனைப் பார்த்தான்.


“பள்ளி விடுமுறையா? ஆஹா!” என்று அமித் மகிழ்ச்சியில் கத்தினான்.


அமித், பள்ளிக்குச் செல்ல தயாராக இருந்தபோது தான் இதெல்லாம் நடந்தது. உடை மாற்றி, தலையில் எண்ணெய் தேய்த்து, எப்போதும் போல அரை மணி நேரத்திற்கு முன்பே தயாராக நின்றான். 


ஆனால் அவனது தம்பி அமர் அப்படியல்ல. அம்மா பலமுறைச் சத்தம் போட்டுக் கூப்பிட வேண்டும். சில நேரங்களில் படுக்கை விரிப்பையே இழுக்க வேண்டும். அப்போதுதான் படுக்கையை விட்டு எழுந்திருப்பான்.


அமித், அம்மாவுடன் சேர்ந்து அதிகாலையிலேயே எழுந்துவிடுவான். சூடான தேநீர் குடிப்பான். சுடச்சுட ரொட்டியில் வெண்ணெய் தடவிச் சாப்பிடுவான். இரவு உணவுக்குப் பிறகு பாத்திரங்களை அடுக்கி வைப்பதிலும் அம்மாவுக்கு உதவுவான்.


அமருக்கு இருக்கும் ஒரே வேலை, பால்காரர் ‘அலி’ பால் கொண்டு வந்ததும், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கூட்டுறவுப் பண்ணையிலிருந்து பால் வாங்கி வருவதுதான். ஆனால் இன்று அந்த வேலையைக்கூட செய்ய முடியாது போலிருந்தது.


திடீரென்று ஊரில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. மக்கள் அலறியபடி இங்கும் அங்கும் ஓடினார்கள். 


எப்போதும்போல அன்று காலை, குருபானி இசையோ, தேநீர்க் கோப்பைகளின் சத்தமோ கேட்கவில்லை. எல்லாத் திசைகளிலும் வானொலி அலறியது. 


அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா ஆகியோர் ஒரு மூலையில் ஒதுங்கி தங்களுக்குள் மெதுவாகப் பேசிக்கொண்டிருந்தனர்.


அமர், அமித்துக்கு அருகில் சென்றான். கழுத்தில் கையைப் போட்டு மெதுவாக, “வா, பட்டம் விடலாம். மொட்டை மாடிக்குப் போகலாம். யாருக்கும் தெரியாது. எல்லாரும் கலவரச் செய்தியில் மூழ்கியிருக்கிறார்கள்” என்றான். 


இருவரும் மாடிப்படிகளில் ஏறினார்கள். போகும்போது நூல்கண்டையும், மெத்தைக்குக் கீழே வைத்திருந்த பட்டத்தையும் எடுத்துக்கொண்டார்கள். 


மொட்டை மாடியில் வெயில் பரவியிருந்தது. குளிர்ந்த காற்று வீசியது. பட்டம் விடுவதற்கு ஏற்ற நேரம்.


பட்டத்தைத் தயார் செய்துகொண்டிருந்த அமர், திடீரென்று, “அண்ணா, கலவரம் என்றால் என்ன?” என்று கேட்டான். 


“கலவரத்தில் மக்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வார்கள். சிலர் பொருட்களைக் கொள்ளையடிப்பார்கள். வீடுகள், கடைகள் என்று சூறையாடுவார்கள்”


“ஆனால் ஏன்?”


“எனக்குத் தெரியாது...” என்று அமித் சலிப்புடன் சொன்னான்.


உண்மையிலேயே அவனுக்கு பதில் தெரியவில்லை. தம்பியிடம் ஒப்புக்கொள்ள விரும்பவில்லை.


“அவர்கள் திருடர்களா?” என்று கேள்வியெழுப்பிய அமர், “சில நாட்களுக்கு முன்பு தெருவில் திருட்டு நடந்தது. திருடர்கள் சமையல் பாத்திரங்களைக்கூட எடுத்துச் சென்றார்கள். அப்போது யாரும் அதைக் கலவரம் என்று சொல்லவில்லையே” என்றான். 


“அடச் சீ! வாயை மூடு. அந்த நூல்கண்டைக் கொடு” என்றான் கோபத்துடன்.


அமர், பழுப்பு நிற டேப்பை எடுத்துத் தர, பட்டம் நடனமாடாமல் இருக்க அமித் அதைச் சரிசெய்தான்.

அமருக்கு இன்னமும் புரியவில்லை. அவனுக்குத் தெரிந்ததெல்லாம், தங்களிடம் இல்லாத பொருட்களைப் பெறுவதற்காகத்தான் மக்கள் பிறரிடம் திருடுகிறார்கள் என்பதுதான்.


“ஆனால் முஸ்லிம்களை மட்டும் ஏன் கொள்ளையடிக்க வேண்டும்?” என்று மறுபடியும் கேட்டான். “நிறைய இந்துக்கள், சீக்கியர்களிடம் அதிகப் பணம் இருக்கிறதே. அவர்களை ஏன் கொள்ளையடிப்பதில்லை?” என்றான். 


சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு மறுபடியும் தொடர்ந்தான்: 

“அவர்களைக் கொல்வதற்கு என்ன அவசியம்? பொருட்கள் தேவை என்றால், அவற்றை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே?”


“முட்டாளே! அவர்கள் முஸ்லிம்கள். அதனால்தான்” என்றான் அமித், அமரின் கேள்விகளிலிருந்து தப்பிப்பது கடினம் என்பதைப் புரிந்துகொண்டவனாய்.


  “ஹமீத் பாயும் முஸ்லிம்தானே? நாம் அவரை அடிக்கவில்லையே. கொள்ளையடிக்கவும் இல்லையே. அவர் அப்பாவின் நண்பர், இல்லையா?”


“தம்பி, உனக்கு அரசியல் பேச வேண்டுமா? அல்லது பட்டம் விட வேண்டுமா?”  என்று அமித் எச்சரித்தான். 


அமருக்குப் பட்டம் விடத்தான் ஆசை. ஆனால் அவன் மனதில் தொடர்ந்து கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன.


‘இது வெறும் திருட்டு என்றால், கலவரத்தால் பள்ளிகளை ஏன் மூட வேண்டும்?’, ‘யாருடைய வீட்டிலாவது ஸ்கூட்டர் திருடுபோனால் பள்ளிகளை மூடுவதில்லையே’, ‘எத்தனையோ பணக்கார இந்துக்கள் இருக்கும்போது, முஸ்லிம்களின் வீடுகளில் மட்டும் ஏன் திருட்டு நடக்கிறது?’ என்றெல்லாம் யோசனைகள் எழ, தொடர்ந்து கேள்விகள் கேட்க அவனுக்குத் துணிச்சல் இல்லை.

அமர், வானத்தில் பட்டத்தைப் பறக்கவிடப் போகும் நேரத்தில், கீழே சிலர் ஓடும் சத்தம் கேட்டது. அவனது கவனம் மீண்டும் கீழே திரும்பியது. தடுப்புச் சுவரில் எட்டிப் பார்த்து அதிர்ச்சியடைந்தான்.

தெருவில் பால்காரர் அலி ஓடிக்கொண்டிருந்தான். அந்தத் தெருவில் அவனைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. 


அமருக்குச் சிரிப்பு வந்தது. எவ்வளவு வேடிக்கையான காட்சி!


பால்காரன் தன்னைவிட உயரமான பால் கேனைத் தூக்கிக்கொண்டு ஓடினான். பால் அவன் மீது சிதறியதைக்கூட கண்டுகொள்ளவில்லை.


“அம்பி, அங்கே என்ன பார்க்கிறாய்? இங்கே வா” என்று அமித் அவரசரமாக அழைத்தான்.

“அண்ணா, இங்கே பார்! நம்ம பால்காரர் எப்படி ஓடுகிறான்? அவன் ஏன் ஓடுகிறான்? பால் முழுவதும் கொட்டிவிடுமே” 


அருகில் வந்த அமித், அமருக்குப் பின்னால் நின்றுகொண்டு, “பால்கார அண்ணா! வேகமாக ஓடு. உனக்குப் பின்னால் நாற்பது திருடர்கள் ஓடி வருகிறார்கள்” என்று சத்தமாகக் கத்தினான். 

ஒரு கும்பல் பால்காரனைத் துரத்தியது. சிலரது கைகளில் கம்புகள் இருந்தன. சிலரிடம் செங்கற்களும் பாட்டில்களும் இருந்தன.


இரு சகோதரர்களும் மொட்டை மாடியில் நின்றுகொண்டு வயிறு குலுங்கச் சிரித்தனர். உலகம் பைத்தியமாகிச் சுற்றுவது போல இருந்தது. சிரித்துச் சிரித்து கண்களில் கண்ணீர் திரண்டது. 

திடீரென்று, அவர்களின் கண்ணெதிரில் ஒரு காட்சியைக் கண்டனர்.


பால்காரன் அலி, பக்கத்து வீட்டில் வசிக்கும் அமர் பிராஜியின் வீட்டு வாசலைக் கடந்தபோது, அது நடந்தது. அப்போது திடீரென்று வீட்டுக்கு வெளியே வந்த அமர் பிராஜி, ஓடிக்கொண்டிருந்த அலியைக் கைகளால் அணைத்துக்கொண்டார். அலி சட்டென்று நின்றான். தலையில் இருந்த பால் கேன் சில நொடிகள் குலுங்கியது. 


“நன்றி! அமர் பிராஜி” என்று மேலே இருந்தபடி அமித் கத்தினான். 


மாடியிலிருந்த இருவரும், அலி சட்டெனக் கீழே குனிவதைக் கண்டனர். பிறகு மெல்ல மெல்ல அவன் முன்னோக்கிச் சரிவதைப் பார்த்தார்கள்.  


“அண்ணா! பார்த்து...” என்று இருவரும் மொட்டை மாடியிலிருந்து கத்தினர்.


ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டது. தெருவில் வெள்ளை நதி ஓடத் தொடங்கியது. அலி அதன் நடுவில் விழுந்து கிடந்தான். 


அவனைத் துரத்தி வந்த கூட்டம் அப்படியே நின்றுவிட்டது. அதிர்ச்சியடைந்த சிறுவர்கள், அமர் பிராஜி மெல்ல மெல்லப் பின்னால் நகர்வதைக் கண்டனர். அவர் தனது கால்களை உதறினார். அதில் படிந்திருந்த பால் துளிகள் கீழே சிதறின. 


சால்வையைக் கைகளில் சுருட்டிக்கொண்ட அவர், மேலே நின்றுகொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்தார். அப்போதுதான் அமர், அவரது கையில் ஒரு கூர்மையான கத்தியைக் கண்டான்.

சட்டெனப் பால்காரனைப் பார்த்தான். பாலின் வெள்ளை நதி நிறம் மாறிக்கொண்டிருந்தது. வெள்ளைப் பால் சிவப்பானது.


அதைப் பார்த்தபோதுதான் இருவருக்கும்  கலவரம் என்றால் என்ன என்று புரிந்தது.


“அமித்...” என்று அமர் முணுமுணுத்தான். அமித், அவனைக் கட்டியணைத்தான்.

“எனக்குக் கலவரங்களைப் பிடிக்கவில்லை”


இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்தபடி நின்றனர். இனி ஒருபோதும் பாலைச் சிவப்பாக மாற விடமாட்டோம் என்று மனதில் உறுதியெடுத்தனர்.


கொ.மா.கோ.இளங்கோ
கொ.மா.கோ.இளங்கோ

எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page