top of page

ஓர் அங்குலச் சிறுவன்

(ஜப்பானிய நாடோடிக் கதை) தமிழில் : சுகுமாரன்



உங்களுக்குத் தெரியுமா? முன்னொரு காலத்தில் ஒரு பையன் இருந்தான். உங்களை விட வயதானவன். அவன் உயரம் ஓர் அங்குலம் தான். அவன் பெயர் இசன் போஸ்கி. உங்கள் கட்டைவிரலை விட உயரமாக இருக்க மாட்டான். ஆனால் பல சிறிய உயிரினங்களைப் போலவே அவனிடமும் பெரிய ஆச்சரியங்கள் இருந்தன.


உங்கள் இதயமே பிளந்து விடும் அளவுக்கு ஏதாவது ஒரு விஷயத்திற்காக அதிகம் ஆசைப்பட்டிருக்கிறீர்களா?


ரொம்ப, ரொம்ப காலத்திற்கு முன்பாக ஒரு தாத்தாவும் ஒரு பாட்டியும் அவ்வாறு ஆசைப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஆசைப்பட்டதாலேயே இறந்து விடுவோம் என்று நினைத்தார்கள். அப்படியென்ன அவர்கள் ஆசைப்பட்டார்கள்? அன்பு செலுத்த ஒரு குழந்தை.

'மிகச் சிறிய குழந்தையாக இருந்தாலும் போதும்' என்றார் பாட்டி.


'என் சுண்டு விரலை விட சின்னதாக இருந்தாலும் போதும்' என்றார் தாத்தா.


பத்து முழு நிலாக்கள் வந்தன, போயின. அந்த வயதான தம்பதியின் ஆசை உண்மையானது. நீங்கள் இதுவரை பார்த்ததிலேயே மிகச் சிறிய குழந்தை பிறந்தது. அவன் தன் தாயின் கட்டை விரலில் இருந்து உலகிற்குள் அடியெடுத்து வைத்தான்.


'இசன் போஸ்கி' அவனுடைய அம்மா மகிழ்ச்சியில் கத்தினார். அவளுடைய உள்ளங்கையில் ஏந்திக் கொண்டாள் 'ஓர் அங்குலச் சிறுவன்'.


காலம் சென்றது. இசன் போஸ்கி குறைந்தபட்சம் பார்ப்பதற்காக கூட பெரிதாக வளரவில்லை. ஆனால் உள்ளே அவன் மனம் ஆர்வங்களோடு வளர்ந்தது. அவனுடைய இதயம் உலகத்தைப் பார்க்கும் ஆசையோடு வளர்ந்திருந்தது.


இசன் போஸ்கி ஒரு நாள் அப்பா, அம்மாவிடம் சொன்னான். 'எனக்கு ஒரு ஆசை இருக்கிறது.'

ஜப்பானின் தலைநகர் 'கியாடோ' செல்ல வேண்டும். அங்கு பார்க்க முடிந்ததை பார்க்க வேண்டும் என்பது அவனுடைய ஆசையாக இருந்தது.


நல்லது இசன் போஸ்கி என்று அவனுடைய பெற்றோர் கூறினர். நிறைய வாழ்த்துகள், கொஞ்சம் கவலையுடன் வழியனுப்ப தயாராயினர்.


'இதை எடுத்துக் கொள், அதை எடுத்துக் கொள் என்று அம்மா கூறினார்.' இசன் போஸ்கி தன்னுடன் ஒரு தைக்கும் ஊசி, ஒரு கிண்ணம் அரிசி, 'சாப் ஸ்டிக்' ஆகியவற்றை எடுத்துக் கொண்டான்.


இசன் போஸ்கி ஓடுகின்ற ஒரு ஆற்றுக்கு வந்தான். கிண்ணத்தில் ஏறி அதை படகுப் போல் பயன்படுத்தி ஆற்றில் பயணம் செய்தான். 'சாப் ஸ்டிக்' யை துடுப்பு போல் பயன்படுத்தினான்.

சில நாட்களுக்குப் பிறகு இசன் போஸ்கி 'கியாடோ' வந்து சேர்ந்தான். பரபரப்பான இடம். கற்களால் ஆன தெருக்களில் 'கடா, கடா..' என்று சத்தம் எழுப்பி காலணிகள் நடந்தன. வண்டி சக்கரங்கள் அவன் மேலே ஓடின.


இசன் போஸ்கி ஜாக்கிரதையாக தன் பாதையில் நடந்தான். இறுதியாக அவன் நகரத்திலுள்ள பெரிய, அழகான வீட்டுக்கு வந்தான்.


சான்ஜோ வின் வீடு என்று இசன் போஸ்கி ஆச்சரியத்தோடு கூறினான். அவன் அந்த வீட்டின் அன்பான, துணிச்சலான எஜமானரான சான்ஜோ பற்றி நிறைய அதிசயமான கதைகளைக் கேட்டிருக்கிறான்.


அந்த வீட்டின் பெரிய கதவருகே இசன் போஸ்கி காத்திருந்தான். நீல நிற வானம் இளஞ்சிவப்பு நிறத்திலிருந்து ஆரஞ்ச் வண்ணத்திற்கு மாறியது, கடைசியாக கதவு திறக்கப்பட்டது.


'நான் இசன் போஸ்கி' என்று கூறி அவன் குதித்தான், கத்தினான். 'நான் உங்களுக்குச் சேவை செய்ய வந்திருக்கிறேன், பிரபு சான்ஜோ' என்றான்.


அந்த உயர்ந்த மனிதன் உற்று நோக்கினான். இடது பக்கம் பார்த்தான், வலது பக்கம் பார்த்தான். சுற்றும் முற்றும் பார்த்தான்.


'கீழே பாருங்கள்' என்று இசன் போஸ்கி கத்தினான்.


பிரபு சான்ஜோவின் வாய் ஆச்சரியத்தில் திறந்தது. அவர் குனிந்து அந்த குட்டி சிறுவனை தூக்கிக் கொண்டார்.


'என் மகனே! நீ என் கட்டை விரலை விட சிறிதாக இருக்கிறாய். எனக்கு நீ என்ன செய்ய முடியும்?'

இசன் போஸ்கி சிரித்துக் கொண்டு சொன்னான்: 'கண்களால் மட்டும் பார்ப்பவர்களை இசன் போஸ்கி ஆச்சரியப்படுத்துவான்'.


அப்போது அவன் தனது தையல் ஊசியை வெளியே எடுத்தான். அந்தப் பெரிய மனிதரின் காதுக்கு அருகே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த ஈ ஒன்றை வெட்டி வீழ்த்தினான்.


இசன் போஸ்கி சீக்கிரத்தில் சான்ஜோ வீட்டின் நம்பிக்கைக்குரிய வேலையாளாக மாறினான். குறிப்பாக இளவரசி சான்ஜோ அவனை சார்ந்தே இருந்தாள். ஏனெனில், அவள் தலையில் அணிந்திருந்த சீப்புகளின் மீது மிக நுணுக்கமான வேலைப்பாடுகளை அவனால் மட்டுமே வரைய முடிந்தது. அவளுடைய அலங்கார மேசையின் அடியில் தவறி விழுந்த மிகவும் சிறிய காதணிகளை அவனால் கண்டுபிடித்து கொடுக்க முடிந்தது. நாள் முழுவதும் கூட இளவரசியின் தோளின் மீது அமர்ந்து அவளுக்குத் துணையாக இருந்தான்.


பனிக் காலம் வந்தது. கறுப்பு மரக்கிளைகளில் பனி பூசப்பட்டிருந்தது. வசந்தக் காலத்தில் மரக்கிளைகள் 'செர்ரி' மலர்களை இளஞ்சிவப்பு, வெள்ளை நிற மடிப்புகளுடன் ஆடையாக அணிந்திருந்தன. நாள் முழுவதும் இளவரசியும் இசன் போஸ்கியும் 'செர்ரி' மலர் விழாவைக் கொண்டாடினர்.


இருவரும் வீட்டுக்கு நடந்தப் போது இளவரசி இசன் போஸ்கியை நகைச்சுவை ஒன்றை கூறும்படி கேட்டாள். ஆனால் இசன் போஸ்கி வாயைத் திறந்து சொல்லுவதற்கு முன்பாக ஒரு நிழல் அவனைக் கடந்தது. அவன் அதைப் பார்த்து நடுங்கினான்.


வானத்தை அடைத்திருந்தது ஓனி. அது பயங்கரமான, மனிதரை தின்னும் பூதம் அவர்களைப் பார்த்து சிரித்தது.


'ஓனி, தூரம் போய் விடு, இல்லையென்றால்.' கையிலிருந்த ஊசி வாளை சுழட்டி இசன் போஸ்கி எச்சரிக்கை செய்தான்.


'ஹா... ஹா...' பூதத்தின் சிரிப்பு இசன் போஸ்கியை காற்றில் சுழலச் செய்தது.

'உன்னைப் பார்த்தால் எலியை விட சிறியதாக இருக்கிறாய். உன்னால் என்னை துன்புறுத்த முடியுமா?' என்று கேட்டது பூதம்.


இசன் போஸ்கி சிரித்தவாறே சொன்னான்: 'கண்களால் மட்டும் பார்ப்பவர்களை இசன் போஸ்கி ஆச்சரியப் படுத்துவான்.'


பறக்கும் பூச்சியை விட வேகமாக இசன் போஸ்கி சிரிக்கும் பூதத்தின் வாய்க்குள் பாய்ந்தான். அவன் அப்படியே வழுக்கி பயங்கர பூதத்தின் தொண்டைக்கு வந்தான். 'க்ளப்...' அவன் ஓனி பூதத்தின் வயிற்றுக்கு வந்தான். ஸ்லாஸ்...பக்...இஷ்...சப்... அவன் பூதத்தின் வயிற்றை ஊசியால் தாக்கினான்.

'ஊ...யா...ஓ...வாவ்...' ஓனி பூதம் கதறியது. 'தயவு செய்து...' ஓனி கெஞ்சியது... தயவுசெய்து... இசன் போஸ்கி வெளியே வா...'


இசன் போஸ்கி இன்னொரு குத்து விட்டான். 'உன்னுடைய பாடத்தை படித்து விட்டாயா?' என்று கேட்டான்.


'ஆமாம்... ஆமாம்... ஆமாம்...' பூதம் உரத்தக் குரலில் பதில் சொன்னது.

இசன் போஸ்கி தாவிக் குதித்து தொண்டைக்கு வந்தான். பின்பு பூதத்தின் வாயிலிருந்து வெளியே குதித்தான்.


டெம்... டம்... டமா... பூதம் தரை குலுங்க ஓட்டம் பிடித்தது.


'ஹா... ஹா...` இசன் போஸ்கி சிரித்தான். அவன் பூதத்தை தோற்கடித்தது மட்டுமல்லாமல், பூதம் விட்டு சென்ற மந்திர சுத்தியலும் கிடைத்தது.


இசன் போஸ்கி வெள்ளியால் ஆன மந்திர சுத்தியலைத் தொட்டவுடன்... இசன் போஸ்கி அழகான இளைஞனாக தரையில் நின்றான். முன்பு அவனால் இளவரசியின் 'ஷீ'வைத்தான் நேராக பார்க்க முடிந்தது. இப்போது அவளுடைய முகத்தைப் பார்த்தான்.


அடுத்து என்ன நடக்கும் என்பதை உங்களால் ஊகிக்க முடியும்! இளவரசிக்கும் அந்த அழகான வீரனுக்கும் திருமணம் நிச்சயமானது. கிராமத்திலிருந்த அவனுடைய வயதான பெற்றோர் சான்ஜோ வீட்டுக்கு வந்தனர்.


இப்போது இசன் போஸ்கியின் வெளித்தோற்றம் அவனது உள்ளார்ந்த திறமைகளுக்குப் பொருத்தமாக இருந்தது.


சுகுமாரன்
சுகுமாரன்

1975 ஆம் ஆண்டு முதல் சிறுகதை, நாவல் கட்டுரை சிறார் இலக்கியம் மொழி பெயர்ப்பு என 75 நூல்கள் எழுதியிருக்கிறார் அதில் 40 நூல்கள் மொழிபெயர்ப்புகளாகும். பபாசியின் அழ.வள்ளியப்பா விருது, தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவராக இருக்கிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page