தேடலில் பூத்த புன்னகை
வீரேந்திர துபே தமிழில்: கொ மா கோ இளங்கோ

மதிய வெயில் சன்னலைத் தாண்டி தங்கம் போல மின்னியது. அந்த நேரத்தில், வீட்டுத் திண்ணையில் ஒரு விசித்திரமான வேட்டையில் ஈடுப்பட்டிருந்தார் நாஞ்சியின் அத்தை. ஆமாம்! அதுதான் அத்தையின் புகழ்பெற்ற 'பேன் வேட்டை'.
அத்தைக்கு உலகிலேயே இரண்டு வேலைகள்தான் ரொம்பப் பிடிக்கும். ஒன்று, அடுத்தவர்களின் தலையில் பேன் தேடுவது. இன்னொன்று, யாரையாவது தன் தலையில் பேன் தேடச் சொல்வது.
அத்தையின் கையில் பேன்கள் அகப்படும்போது ‘டக் டக்’ என்று ஒரு சத்தம் வரும் பாருங்கள்! அதுதான் அவருக்கு உலகத்திலேயே மிகவும் பிடித்த இசை. அந்தச் சத்தம் கேட்கும் போதெல்லாம், ஏதோ ஒரு போரில் வெற்றி பெற்ற வீராங்கனையைப் போல அத்தையின் முகம் பெருமையில் பிரகாசிக்கும்.
அத்தை பேன் பார்க்க இறங்கிவிட்டால், வயிற்றுப் பசியோ தாகமோ எடுக்காது. பக்கத்தில் யாராவது வந்து ‘அத்தை.. அத்தை..’ என்று கத்தினாலும் காதில் விழாது. அத்தை அப்போது ஒரு சிலை போல மாறிவிடுவார்.
அப்பாவின் உடன்பிறந்த தங்கை என்றாலும், நாஞ்சிக்கு அவர் நெருங்கிய தோழி. “அத்தை! இதோ வந்துட்டேன்” என்று நாஞ்சி ஓடிவந்து அவர் மடியில் அமர்ந்தால் போதும், அத்தையின் முகம் அப்படியே மலர்ந்துவிடும்.
"வாம்மா நாஞ்சி... இந்த அடர்ந்த கூந்தலுக்குள்ள ஒரு ராட்சசப் பேன் ஒளிஞ்சிருக்குன்னு நினைக்கிறேன். அதை இன்னைக்குப் பிடிக்காம விடமாட்டேன்" என்று அத்தை கண்சிமிட்டுவார்.
நாஞ்சிக்கு அத்தையின் கைவிரல்கள் தன் தலைக்குள் மெல்ல ஊர்ந்து செல்வது மிகவும் பிடிக்கும். அது ஒரு சுகமான வருடல். அத்தை வெறும் பேன் மட்டும் பார்ப்பதில்லை. கூடவே நிறையக் கதைகளையும் சொல்வார்.
"தெரியுமா நாஞ்சி? முன்னொரு காலத்துல ஒரு ராஜா இருந்தாராம். அவரோட முடி ரொம்ப நீளமா இருக்குமாம்..." என்று அத்தை கதை சொல்லத் தொடங்குவார். நாஞ்சி மிகந்த உற்சாகத்துடன், “சரி.... அப்புறம்?” என்று தலையாட்டிப் பேச்சை வளர்ப்பாள்.
கதை சொல்வதற்கு இடையில் எப்போதாவது ஒரு பேன் கையில் சிக்கினால் அத்தைக்கு அப்படியொரு சந்தோஷம். அதை விரலால் இழுத்து, இடது கைக் கட்டைவிரல் நகத்தின் மேல் வைத்து ‘சட்’ என்று ஒரு சத்தம் வரும்படி நசுக்குவார். அந்தச் சத்தம் கதையில் வரும் ராஜா போரில் வென்றதைப் போன்ற வெற்றிக் கொண்டாட்டமாக இருக்கும்.
ஒரு நாள் அத்தை கவலையோடு உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள் நாஞ்சி.
அப்போது நாஞ்சி ஓடிவந்து, "அத்தை! இன்னைக்கு உங்க கூந்தல்ல நான் ராஜா கதையைத் தேடட்டுமா?" என்று கேட்டு அவருக்குப் பின்னால் சம்மணம் கூட்டி உட்கார்ந்து கொள்வாள். நாஞ்சியின் பிஞ்சு விரல்கள் அத்தையின் கூந்தலில் விளையாடும்போது, அவருடைய கவலைகள் மெல்ல மறையும். நாஞ்சி அதைக் கவனிப்பாள்.
நாட்கள் நகர்ந்தன. கோடை விடுமுறை முடிந்து நாஞ்சி ஹாஸ்டலுக்குக் கிளம்பினாள். பிரியும் போது அத்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “அத்தை! பத்திரமாக இருங்க. எனக்காக நிறைய பேன்களைச் சேர்த்து வைங்க” என்று விளையாட்டாகச் சொல்லிவிட்டுச் சென்றாள்.
விடுதியில் இருக்கும்போதும் இருவரும் அடிக்கடி கைபேசியில் பேசிக்கொள்வார்கள்.
ஆனால், கடந்த சில மாதங்களாக அத்தையின் குரலில் ஒரு தளர்ச்சி இருந்தது. முன்பு போல உற்சாகமாகச் சிரிக்காமல், ஏதோ ஒரு கடினமான பாரத்தைச் சுமப்பது போலவே அவர் பேசினார். போனில் பேசும் நேரமும் குறைந்து கொண்டே வந்தது. ஏதோ ஒரு ரகசியம் தன்னிடம் இருந்து மறைக்கப்படுவதை நாஞ்சி உணர்ந்தாள்.
தீபாவளி விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த நாஞ்சிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
எப்போதும் திண்ணையில் உட்கார்ந்து பேன் பார்த்துக்கொண்டிருக்கும் அத்தையை அங்கே காணவில்லை. அத்தை உள்ளே இருட்டு அறையில் படுத்திருந்தார்.
புற்றுநோய் காரணமாக கதிரியக்கச் சிகிச்சை அத்தையை அடையாளம் தெரியாமல் மாற்றியது. சிகிச்சையின் வீரியத்தால் அத்தையின் அழகிய கார்மேகக் கூந்தல் முற்றிலும் உதிர்ந்து போயிருந்தது. அத்தையின் தலைக்கு மொட்டை அடித்திருந்தார்கள்.
நாஞ்சியைப் பார்த்ததும் அத்தை கண்களை மூடிக்கொண்டார். தனது மொட்டைத் தலையைக் கண்டு அவள் பயந்துவிடுவாள் என்று அத்தை நினைத்தார். ஆனால் நாஞ்சி எதையும் யோசிக்கவில்லை. ஓடிச் சென்று அவர் மார்பில் சாய்ந்து அணைத்துக் கொண்டாள். அத்தையின் மெலிந்த கைகள் அவளை இறுகப் பற்றின.
அன்று மாலை, அத்தைக்குத் தலையணை வைத்து உட்கார வைத்தார்கள். நாஞ்சி மெதுவாக அவருக்குப் பின்னால் சென்று அமர்ந்தாள். அத்தை சங்கடத்துடன் குனிந்து கொண்டார். நாஞ்சி தன் மென்மையான விரல்களை அத்தையின் மொட்டைத் தலையில் மெல்ல வைத்தாள். அந்தச் சருமத்தின் சூடு அவளுக்கு ஏதோ ஒரு செய்தியைச் சொன்னது.
நாஞ்சி குறும்புடன் பேசத் தொடங்கினாள், “அத்தை! நேராக உட்காருங்கள். நான் இல்லாத இந்தச் சில மாதங்களில் எத்தனை பேன்களைத் தலையில் வளர்த்து வைத்திருக்கிறீர்கள் பார்த்தீர்களா? என்னைப் பார்த்தால் உங்களுக்குப் பாவமாக இல்லையா? இவ்வளவு பேன்களையும் நான் ஒருத்தி மட்டுமா தேடிப் பிடிக்க வேண்டும்? நூற்றுக்கணக்கான பேன்கள் வளர்ந்திருக்கின்றன” என்றாள்.
அறையில் இருந்த எல்லோரும் சிலையாக நின்றனர். அத்தையின் மொட்டைத் தலையில் பேன் இருக்காது என்பது அங்கிருந்த எல்லோருக்கும் தெரியும். ஆனால் நாஞ்சி அந்த விளையாட்டை நிறுத்தவில்லை.
“இதோ பாருங்களேன்... ஒரு பெரிய ராட்சசப் பேன் இங்கே ஜாலியா விளையாடுது” என்று அத்தையின் வழுவழுப்பான தலையில் ஒரு புள்ளியைத் தொட்டுக் காட்டினாள். நிஜமான பேன் இல்லை என்றாலும், நாஞ்சியின் விரல் பட்ட இடத்தில் அத்தைக்குப் பழைய சுகமான வருடல் தெரிந்தது.
அத்தையின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் கன்னங்களை நனைத்தது. ஆனால், அவரது உதடுகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓர் உண்மையான புன்னகை மலர்ந்தது.
“தேடு நாஞ்சி... தேடு... எல்லாப் பேன்களையும் பிடிச்சிடு” என்று தழுதழுத்த குரலில் சொன்னார்.
அன்பு என்பது வெறும் கூந்தலில் இல்லை. வருடிக் கொடுக்கும் விரல் நுனிகளிலும், காயப்பட்ட மனதைத் தேற்றும் சொற்களிலும் இருக்கிறது என்பதை நாஞ்சி அன்று உணர்ந்தாள்.
புற்றுநோய் அத்தையின் கூந்தலைப் பறித்திருக்கலாம். ஆனால் நாஞ்சியின் அன்பு குறையாமல் இருந்தது. அத்தையின் முகத்தில் தெரிந்த புன்னகை, அவர் பிழைத்துக் கொள்வார் என்ற நம்பிக்கையை அவளுக்கும் குடும்பத்தாருக்கும் தந்தது.
.

எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.






Comments