மந்திரப்பேனா
- மீனா

- Nov 15
- 2 min read

அறிவழகி பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டிற்கு மிகவும் சோர்வாக வந்தாள். அப்பொழுது அவள் வீட்டிற்கு அவளுடைய பாட்டி வந்திருந்தார். பாட்டியோ பேத்தியை பார்த்த மகிழ்ச்சியில் வாரி அணைத்து கொண்டார். பிறகு அவளுக்கு பரிசாக ஒரு பேனாவை தந்தார். இதனால் அறிவழகி ஏமாற்றம் அடைந்தாள்
"என்ன பாட்டி நீங்க பொம்மை வாங்கிட்டு வருவீங்கன்னு நினைச்சேன்"
என்று வருந்தினாள்
அதற்குப் பாட்டி"என் செல்லக்குட்டியே இது சாதாரண பேனா இல்ல மந்திர பேனா"என்றார்
"எது மந்திர பேனாவா?…"என்று ஆச்சரியமடைந்தாள்.
சிரித்தபடி ஆமாம் என்று தலையசைத்தார் பாட்டி. பாட்டியோடு பேசிக் கொண்டிருக்கும் பொழுதே தூக்கம் வந்துவிட்டது எனவே அவரது மடியில் படுத்து உறங்கினாள். சிறிது நேரம் கழித்து எழுந்த பொழுது தெரிந்தது மணி ஆறு ஆகிவிட்டது என்று. ஏனெனில் ஏழு மணிக்கெல்லாம் வீட்டுப் பாடத்தை முடித்து, சாப்பிட்டுவிட்டு 8:00 மணிக்கே தூங்கி விடுவாள் ஆனால் இன்றோ வழக்கத்துக்கு மாறாக சாயந்திரமே தூங்கியதால், வீட்டுப் பாடத்தை எழுத மறந்திருந்தாள்.
அவளுக்கு அழுகை அழுகையாய் வந்தது. வீட்டுப் பாடத்தின் கேள்விகளை எடுத்துப் பார்த்த பொழுது மிகவும் கடினமாக உணர்ந்தாள்.பாட்டி பரிசாக தந்த மந்திர பேனாவை வைத்து நோட்டில் முதல் கேள்வியை எழுதினாள்
'மரங்களின் பயன்கள் என்ன?'
அட என்ன ஆச்சரியம்! அவள் எழுதியதும் பேனாவுடைய மை அவளை இழுத்து ஒரு அடர்ந்த காட்டிற்குள் விட்டது அங்கே இருந்த ஒரு பெரிய மரம் பேச ஆரம்பித்தது
"மரங்கள் ஆகிய நாங்கள் உயிர்களை வாழ வைக்கும் ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறோம், மேலும் பறவைகளுக்கு வீடுகளாக அவைகள் சாப்பிடும் பழங்களை உண்டு பண்ணுகிறோம்.. "என்று பேசி முடித்தவுடன் மீண்டும் அவள் வீட்டிற்குள் இருந்தாள் மிகவும் மகிழ்ச்சி அடைந்த அறிவழகி மரம் கூறிய விஷயத்தை ஞாபகப்படுத்தி எழுதினாள் பிறகு இன்னொரு கேள்வியை எழுத ஆரம்பித்தாள்
'உலகின் மிக உயரமான சிகரம் எந்த மலையில் உள்ளது?'
என்றும் எழுதி முடித்தவுடன் இமயமலையில் இருந்தாள் இமயமலை பேச ஆரம்பித்தது
"நான் தான் இமயமலை, என்னிடம் தான் உலகின் உயரமான சிகரம் உள்ளது அதன் பெயர் எவரெஸ்ட்."
என்று பேசி முடிக்க மீண்டும் அவள் வீட்டிற்கு வந்தாள் மிகவும் குளிராக இருந்ததால் அருகில் உள்ள கம்பளியை எடுத்துப் போர்த்திக் கொண்டாள்.
அடுத்த கேள்விக்கு எழுத ஆரம்பித்தாள்
'சுற்றுச்சூழலுக்கு தீங்காக இருப்பது எது?'
என்ற உடன் அவள் மிகவும் ஒரு மோசமான நிலத்தில் இருந்தாள்.
அந்த நெகிழி நிறைந்த மண் பேச ஆரம்பித்தது
"என்னை மட்டுமல்ல கடல் காற்று மற்றும் பல விஷயங்களை இந்த நெகிழி போன்ற பொருட்களால் பாதிப்பை அடைகின்றோம் அதுமட்டுமின்றி நெகிழி மக்குவதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் முடியாத காரியம் ஆகும் அது மண்ணில் மக்கி போவது மிகவும் சிரமம் நெகிழியை உண்ட விலங்குகள் பல உயிரிழந்துள்ளது எனவே நெகிழி பயன்ப்படுத்தாதீங்க" என்று அழுதது.
இந்த காட்சியை கண்ட பின் நெகிழியை இனி குறைவாக பயன்படுத்த வேண்டும் என்று எண்ணினாள்.
மறுநாள் காலை வீட்டு பாடத்தை முடித்த அறிவழகி ஆசிரியையிடம் காட்டினாள். அவளைப் பாராட்டும் விதமாக ஒரு மிட்டாயை அன்பளிப்பாக அளித்தார் . வீட்டில் தனது பாட்டியிடம் காட்டுவதற்காக காத்துக் கொண்டிருந்தாள் அறிவழகி. அவள் பையில் ஓரமாக இருந்த பேனா மகிழ்ந்தது

மீனா சென்னை மயிலாப்பூரில் உள்ள சிறுவர் தோட்ட மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறாள்
இவருக்கு சிறுவயதில் இருந்தே கதை எழுதவும் கதை புத்தகங்கள் படிக்கவும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்
இவர் நான்காம் வகுப்பு படிக்கும் போது பத்து சிறுவர்களுக்கான கதைகளைக் கொண்ட வெள்ளைப் பூக்கள் என்ற நூலை நூல்வனம் பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார்
விரைவிலேயே இவருடைய நாவல் ஒன்று வெளிவர இருக்கிறது




கதையின் மூலமாக கதாசிரியர் சுற்றுச்சூழலுக்கான பல்வேறு பயனுள்ள ,அனைவரும் பின்பற்ற வேண்டிய நல்ல பல அறிவுறுத்தல்களை அளிக்கிறார். வாழ்க வளமுடன்.