top of page

வளரிளம்புதிர்ப் பருவம் - 11


உலகெங்கும் ஆண்மையின் அடையாளப் பெருமிதத்துடன் வளர்க்கப்படும் ஆண் குழந்தைகளுள் ஒருவனாகவே ஜேமியும் இருக்கிறான்.


கேட்டி தனக்குப் பிடித்த ஒருவனுக்கு அனுப்பிய படத்தை அவனே தனது நண்பர்களுக்கு அனுப்பினான்.  நான் ஆண்மையின் அடையாளம், தனது நண்பர்களை விடச் சிறந்த ஆண், பெண்கள் விரும்பும் ஆண் என்று பெருமையாகக் காட்டிக்கொள்ளும் செயல். அதன்மூலம் மற்ற ஆண்களின் மனதுள் உருவாகும் பொறாமையை ரசிக்கவும் முடியும். அந்தப் பொறாமையை ஜேமியும் வெளிப்படுத்தினான். இனி அவனை நம்பிப் பெண்கள் யாரும் தனிப்பட்ட படங்களை அனுப்ப மாட்டார்கள் என்று  பிரையோனியிடம் கூறினான்.


"பொண்ணுங்களுக்கு உன்னைப் பிடிக்கும்னு நினைக்கறியா?" என்று பிரையோனி கேட்டார்.


இல்லை, கண்டிப்பா இல்லை.


ஏன் கண்டிப்பா இல்லை?


ஏன்னா... நான் அசிங்கமா இருக்கேன்.


அது உனக்கு என்ன உணர்வைத் தருது?


நான் அசிங்கமா இல்லைன்னு 

சொல்ல மாட்டீங்களா?


நான் சொல்றது முக்கியம் இல்ல.


'சாதாரணமா எல்லோரும் பேசுவது போலப் பேச மாட்டீங்களா?" என்றான் ஜேமி. 


நீ இப்படி ஏதாவது சொல்லும்போது, அதெல்லாம் இல்லை என்று நான் சொல்லணும்னு நினைக்கறியா? நீ ஏன் உன்னை அசிங்கமா நினைக்குற? அசிங்கமா இருக்கறது உனக்கு எப்படி இருக்கு?


"நீங்க என்னை ஏதாவது சொல்ல வைக்கறீங்க. என்னை ஏதாவது சிக்கலில் மாட்டிவிடத் தந்திரம் பண்றீங்க!" ஜேமி எழுந்து கத்தத் தொடங்கினான். 


வெளியே நின்றிருந்த காவலர் எச்சரித்தார். ஜேமி அமைதியாக நின்றான். அவர் சென்றதும், நீங்க என்ன பண்றீங்க? என்று குரலைக் கடுமையாக்கினான். பிரையோனிக்கு அருகில் சென்று திடீரென "ஹே!" என்று குரல் எழுப்பினான். அவர் திடுக்கிட்டார். 


"ஜேமி, அங்கே போய் உட்காரு." பிரையோனி அழுத்தமாகச் சொன்னார். 


அங்கும் இங்கும் நடந்து தனது கோபத்தை வெளிப்படுத்திய பிறகு ஜேமி உட்கார்ந்தான். 


உரையாடல் தொடர்ந்தது.


உனக்கு டாமியும் ராயனும் நண்பர்கள். மூவரையும் மற்றவர்கள் கேலியும் கிண்டலும் பண்ணியதா ஏற்கனவே சொன்னாய். எப்படியெல்லாம் கேலி செய்தாங்க?


உங்களுக்கு அதைக் கேட்பதில் ஆர்வமா?


தெரிஞ்சுக்கவே கேட்கிறேன். சொல்லு.


"ஆமா... பட்டப்பெயர் வச்சு அழைப்பாங்க. கீழே தள்ளிவிட்டு எச்சி துப்புவாங்க." என்று ஜேமி சொன்னான்.


உனக்கு ஏன் இன்ஸ்டாகிராம் வேணும்?


வேணும். மத்தவங்க பக்கங்களைப் பார்க்க. இல்லேன்னா எல்லாவற்றையும் பார்க்க முடியாது. 


நீ இன்ஸ்டாவில் நிறையப் பெண்களை, விளம்பர நடிகைகளை Follow பண்ணியிருக்க.


ஆமாம். 


நீ ஏன் நிறைய படங்களையும் இன்ஸ்டாவில் பதிவு பண்ணியிருக்க?


அதனால் என்ன?


நீ நண்பர்களோடு மகிழ்ச்சியா இருப்பதைக் காட்டிக்கொள்ள விரும்பினாயா? யாராவது உனக்குப் பதில் போட்டால் அதன்மூலம் நட்பை உருவாக்கலாம்னு நினைச்சியா?


இல்ல...இல்ல . நீங்க என்ன சொல்ல வரீங்க? 


உன்னோட படங்களுக்கு கேட்டி கமெண்ட் பண்ணியிருக்கா. 


ஆமாம்.


பிரையோனி சில தாள்களை எடுத்துக் காட்டுகிறார். ஜேமியின் இன்ஸ்டாகிராம் பதிவுகள், கெயிட்டியின் எதிர்வினைகள் அச்செடுக்கப்பட்ட தாள்கள். 


ஜேமி பதறியபடியே,"இதைப் பற்றியெல்லாம் கேட்க உங்களுக்குச் சட்டப்பூர்வ அனுமதி இருக்கா?" என்று கேட்டான்.


"இருக்கிறது. உனக்கு உதவி தேவையென்றால் இங்கிருந்து யாராவது ஒருவரை அழைத்து அருகில் வைத்துக்கொள்ளலாம்." என்று‌ பிரையோனி கூறினார்.


இல்லை.யாரும் தேவையில்லை.


இந்த emoji பதிவுகளுக்கு என்ன அர்த்தம் ஜேமி? இது Kidney bean emoji தானே! இதற்கு என்ன அர்த்தம்?



நான் Truth Group உறுப்பினர் என்று நினைச்சு அவ அந்த emoji போட்டிருக்கா. 


Truth Group அப்படின்னா என்ன?


பொண்ணுங்களைப் பிடிக்காது என்று சொல்றவங்க.


நீயும் அதில் உறுப்பினரா?


இல்லை. 


ஆனால் அங்கு என்ன பேசுறாங்க என்பது தெரியும்தானே!


ஆமாம். Incel பற்றித்தான் எல்லோரும் பேசினாங்க. 


நீயும் Incel, அப்படித்தானா? சற்றே அதுபற்றி விரிவாகச் சொல்றியா?


லவ் வேணும். ஆனால் கிடைக்காது.

எல்லாமே Red Pill மாதிரித்தான். பெண்களை வெறுக்கும் ஆண்கள் பற்றியது. 80, 20 என்றும் ஒன்று இருக்கு. 80% பெண்கள் 20 % ஆண்களைத்தான் விரும்புவாங்க. இதுவும் உண்மைதான். 


உனக்கு ஏன் கேட்டி இத்தனை Emoji போட்டிருக்கா?


ஏன்னா அவளுக்கு என்னைப் பிடிக்காது. ஏன்னா, நான் அசிங்கமா இருக்கேன். 


இதைப்பற்றி அவளிடம் பேசினாயா?


ஆமாம். ஆனா அவ... தலையை ஆட்டி சிரிச்சிட்டு போயிட்டா.

அதுக்காக அவளை நான் எதுவும் செய்யல. நான் அவளைக் கொன்றேன்னு நினைக்கிறீங்களா, அந்த வீடியோ உண்மையில்லை. அவ கெட்டவள். அவளை நான் கொன்றிருக்கணும். ஆனால் நான் கொல்லல. அவளிடம் நான் பேசினேன். அவ நண்பனுக்கு அனுப்பிய போட்டோ பற்றிப் பேசினேன். அப்படி அரை நிர்வாணப் படத்தை மற்றவர்கள் பார்த்திருக்கக் கூடாது. அதுக்காக கவலைப்பட வேண்டாம்னு சொன்னேன். அவளுக்கு என்மேல் கோபம் போயிருச்சான்னு கேட்டேன். இப்படிக் கேட்டால் அவளுக்கு என்னைப் பிடிக்கும்னு நினைச்சேன். என்னோடு சாப்பிட வர்றியா? என்று கேட்டேன். அவ சிரிச்சுக்கிட்டே மறுத்துட்டா. 


அதற்கு அப்புறம்தான் தான் அவளிடமிருந்து நிறைய emoji வரத் தொடங்குச்சா?


ஆமாம். 


நீ வெளியே கூப்பிடதுக்காக இப்படி உன்மேல் தாக்குதலைத் தொடங்கினாளா? 


ஆமாம். அவ கெட்டவள். மற்றவர்களைக் கேலி செய்பவள். அன்று நான் என்ன வேணாலும் பண்ணியிருக்க முடியும்.ஆனால் எதுவும் பண்ணல.  நான் அவளைக் கொல்லல.


ஜேமி, கொலை பண்ணுவது தப்பு என்று உனக்குத் தெரியுமா? அதுக்காக உனக்கு என்ன தண்டனை என்று தெரியுமா? 


தெரியும்.


சரி ஜேமி. உனக்கு நன்றி. இதுதான் நமது கடைசி சந்திப்பு என்று பிரையோனி கூறினார்.


ஜேமிக்கு அதிர்ச்சி. என்னைப் பற்றி நீதிபதியிடம் என்ன சொல்லுவீங்க? நான் கொலை பண்ணல. உங்களுக்கு என்னைப் பிடிக்குமா? ஏதாவது தப்பா சொன்னீங்க என்றால் சும்மா விடமாட்டேன் என்று கத்தினான். 


காவலர் வந்து ஜேமியை அழைத்துச் சென்றார்.


பிரையோனிக்கு அதிர்ச்சி,  இரக்கமாகவும் இருந்தது. உணர்வுகளைக் கையாளத் தெரியாத சிறுவன். பாவம்! அவரது கண்களில் நீர். சற்று நேரம் கழித்து அந்த அறையிலிருந்து வெளியேறினார்.


தன்னை ஒரு பெண் வெறுக்கிறாள் என்பதைத் தாங்க இயலாத ஜேமி திடீரெனக் கோபம் கொண்டதால் மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டான். அவனால் ஓர் உயிர் போயிருக்கிறது.


தொடர்ந்து பேசுவோம்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page