வளரிளம் புதிர்ப்பருவம்-13 குழந்தைகளின் குரலைக் கேட்போம்.
- கலகல வகுப்பறை சிவா

- 2 days ago
- 2 min read

காட்சி: 1
ஓர் ஊரில் திருவிழா. ஆடல்பாடல் நிகழ்ச்சி. பக்திப் பாடலுடன் நிகழ்வு தொடங்கும். பிறகு திரைப்படப் பாடல்களுக்கு நடனம். நேரம் செல்லச்செல்ல ஆடல் மகளிரின் ஆடைகள் குறையும். முக்கல் முனகல் பாடல்களுக்கு நடனம். ஆபாச நடனம் என்று பொதுவாகச் சொல்லப்படும் நடனங்களைக்
குழந்தைகள், பெரியவர்கள் என ஊரே ரசிக்கும். பலரும் செல்பேசியில்
படம் பிடிப்பார்கள்.
காட்சி: 2
புகழ்பெற்ற கதாநாயகன் நடித்த திரைப்படத்தில் சண்டைக் காட்சி. பேரல் பேரலாக ரத்தம் தெரிக்கும் சண்டைக் காட்சிகள். கதாநாயகன் கத்தியை வீசுகிறார். அடியாள் ஒருவரின் தலை துண்டாகி உருள்கிறது. கழுத்திலிருந்து ரத்தம் பீய்ச்சுகிறது. குழந்தைகள் கைதட்டி ரசிக்கிறார்கள். பெரியவர்கள் முகம் மலர்கிறார்கள்.
பொது இடத்தில் சிகரெட் பிடிப்பவர்கள், குடித்துவிட்டு ரகளை செய்பவர்கள், வீட்டிலும் வெளியிலும் பெண்களை அவமதிக்கும் பல்வேறு சூழல்களைப் பார்த்துப் பார்த்து வளர்கிறார்கள் குழந்தைகள். பெண்ணை என்ன வேண்டுனாலும் செய்யலாம் என்பதே ஆண்மை என்று ஆண் குழந்தைகள் நம்புகிறார்கள்.
பெண்ணைச் சக உயிராக மதிக்காமல் தனது ஆளுகைப் பொருளாகப் பார்ப்பது பழக்கமாகிறது. ஆண் ஒரு பெண்ணை விரும்பினால் பெண்ணும் விரும்பியே ஆகவேண்டும். இல்லையென்றால் மிரட்டுவது, பலாத்காரம் செய்வது, முகத்தில் ஆசிட் ஊற்றுவது, போன்ற பலாத்காரச் செயல்கள் இப்போது பெண்ணின் உயிரை வாங்குவதாகவும் மாறியிருக்கிறது.
பொது இடங்களிலும் எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பெண் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் அதிகரித்துள்ளன.
ஒரு செயலைச் செய்யும் போது சரியா தவறா என்று பகுத்து ஆராயும் திறனைக் குழந்தைகளிடம் நாம் உருவாக்கவே இல்லை. பெரும்பாலும் விதி மீறலையே திறனாக எண்ணுகிறார்கள். அதுவே பெருமிதமாகவும் மாறியுள்ளது.
இதே உணர்வோடுதான் ஜேமியும் வளர்ந்தான். சமூக ஊடகத்தில் தன்னைக் கேலி செய்தது ஒரு பெண் என்பதே அவன் கோபத்தைத் தூண்டியது. நண்பர்கள் தூபம் போட்டனர். கத்தியை வைத்து மிரட்ட வேண்டும் என்று நினைத்திருக்கலாம். நேரில் சக மாணவி பேசிய முறை ஜேமிக்குள் வளர்த்திருக்கும் ஆதிக்க உணர்வைத் தூண்டியது. கொலை செய்தான்.
தவறு செய்தவன் தண்டனை அடைகிறான். அவனது குடும்பமே அதிகப் பாதிப்புகளை அடைகிறது. சமூகம் அவர்களையும் குற்றவாளிகளாகவே நடத்துகிறது. கேலி செய்கிறது. வெறுப்பை உமிழ்கிறது. அவமானப்படுத்துகிறது. அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு, பிள்ளையைச் சரியாக வளர்க்கவில்லையே என்ற குற்ற உணர்வில் பெற்றோர் தவிக்கின்றனர். அவர்களே அவர்களுக்கு ஆறுதல்.
பிள்ளையைச் சரியாக வளர்ப்பது எப்படி?
குழந்தை வளர்ப்பு குறித்த புத்தகங்களுக்கும் காணொலிகளுக்கும் இப்போது மவுசு அதிகம். Parenting என்று இன்றைய இளம் தலைமுறையினர் குழந்தைகளைக் கவனிக்கிறோம் என்று செய்யும் செயல்களில் பலவும் முந்தைய /தலைமுறையை அதிர்ச்சியடைய வைக்கின்றன.
பொதுவாக ஒழுக்கம் என்று பேசப்படுவது குழந்தைகளின் முடி, உடை மீதான குறைகளாகவே நின்றுவிடுகிறது. பேசும் முறை, நடத்தை போன்றவை பற்றிப் பேசுவோர் மிகவும் குறைவு.
நீதியைப் பின்பற்றாத சமூகம், குழந்தைகளுக்கு நீதி நூல்கள், நீதிக்கதைகளைச் சொல்லித் தராததால் தான் இவ்வளவு சிக்கல்களும் என்று சொல்லித் தப்பித்துக் கொள்கிறது.
தவறு பெரிதாகி வெளியே தெரியும் வரை எல்லோருமே நான் சரி, மற்றவர்கள் தான் தவறு என்று பேசுகிறோம். இந்தத் தலைமுறை கெட்டுவிட்டது என்று குறைகளைப் பட்டியலிடுவதே முந்தைய தலைமுறையின் கடமையாக மாறிவிட்டது. இதுவே காலம்காலமாகத் தொடர்கிறது.
குழந்தைகளுக்கான சுதந்திரத்தை வழங்க வேண்டும். அவர்களின் இணையப் பயன்பாடு குறித்து விமர்சனம் செய்யாமல் முறையாகப் பயன்படுத்துவது பற்றிக் கலந்துரையாட வேண்டும்.
எதிர்காலத் தலைமுறையின் மீது அக்கறை கொண்ட அனைத்துத் தரப்பினரும் குழந்தைகளும் நிறைய கலந்துரையாட வேண்டும். காலத்திற்கு ஏற்ற செயல்பாடுகளை உருவாக்க வேண்டும். அவற்றைப் பழகும் இடங்களாகவே பள்ளியும் வீடும் சமுகமும் திகழவேண்டும். அப்போதுதான் நாம் வெறுமனே பேசிப் புளகாங்கிதம் அடையும் சமத்துவ சமூகம் மலரும்.
உலகெங்கும் பல்வேறு நாடுகளில் செயல்பாட்டுக்கு வந்த உரையாடல்களை முன்னெடுக்கக் காரணமாக அமைந்தது Adolescence தொடர் . இங்கு அது அவ்வளவு ஆழமான பேசு பொருளாக மாறவே இல்லை. அதுதான் அத்தொடரின் முதல் மூன்று பாகங்களை விரிவாகவும் நான்காம் பாகத்தை மிகச் சுருக்கமாகவும் இங்கு எழுதக் காரணமாக அமைந்தது.
Adolescence தொடர் தனிப்பட்ட உண்மை நிகழ்வின் அடிப்படையில் எடுக்கப்பட்டது அல்ல. உலகெங்கும் நடைபெற்ற பல்வேறு இளம்பருவக் குற்றச் செயல்களே இத்தொடரை உருவாக்கக் காரணமாக அமைந்தது. ஜேக் தார்ன், ஸ்டீபன் கிரகாம் இணைந்து கதையை உருவாக்கினர். நான்கு பாகங்களையும் இயக்கியவர் பிலிப் பராந்தினி. ஜேமியாக நடித்தவர் ஓவன் கூப்பர். அவரது தந்தையாக நடித்து கதை, தயாரிப்பு உட்படப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஸ்டீபன் கிரகாம். ஒளிப்பதிவாளர் மேத்யூ லூயிஸ். ஒவ்வொரு பாகமும் படத்தொகுப்பு இல்லாமல் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது. ஒத்திகையும் படப்பிடிப்பில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் தொடக்கத்திலிருந்து மீண்டும் படமாக்கியதும் இதனைச் சாத்தியமாக்கின. இது பார்வையாளர்களுக்கு நெருக்கமான உணர்வைத் தந்தது.
இங்கிலாந்து நாட்டின் பிரதமர் Adolesence குழுவினரைச் சந்தித்து உரையாடினார். நாட்டிலுள்ள நடுநிலைப்பள்ளிகளில் இத்தொடரைத் திரையிட ஏற்பாடு செய்தார்.
தொடர்ந்து பேசுவோம்.





Comments