வளரிளம் புதிர்ப்பருவம்-12
- கலகல வகுப்பறை சிவா

- 2 days ago
- 3 min read
கட்டிலில் ஒரு கரடி பொம்மை.

ஜேமியின் வீடு களையிழந்து இருந்தது. சிறிய மகிழ்ச்சிப் பூவாக அவனது அப்பா எட்டி மில்லரின் பிறந்தநாள். ஐம்பதாவது பிறந்தநாள். ஜேமியின் அம்மா காலை உணவைத் தயார் செய்தார். அப்பாவும் மகிழ்ச்சியாக இருந்தார். பல நாட்களுக்குப் பிறகு மகிழ்ச்சி. மில்லர் பரிசுப் பொருட்களைப் பார்த்தார். அவருக்கு ஒரு வாழ்த்து மடல் சிறையிலிருந்து வந்திருந்தது. அவரது முகத்தை வரைந்து ஒரு வாழ்த்து அட்டையை அனுப்பியிருந்தான், ஜேமி. கண்கள் கலங்க அதைப் பார்த்தார் மில்லர். ஜேமி நன்றாக வரைந்துள்ளான் என்று அம்மாவும் நெகிழ்ந்தார்.
மில்லர் வீட்டுக்கு வெளியே வந்தார். வாசலில் நிறுத்தியிருந்தக் காரில் பெயிண்டால் 'Nonce' என்று பெரிதாக எழுதப்பட்டிருந்தது. இங்கிலாந்தில் அது ஒரு வசவுச்சொல்.பாலியல் குற்றவாளி என்று திட்டும் சொல். "யார் இதை எழுதியது?" மில்லர் கோபத்தில் கத்தினார். ஜேமியின் அம்மாவும் அக்காவும் ஓடி வந்தார்கள்.
அக்கம்பக்கத்தில் விசாரித்தாலும் எழுதியது யாரென்று தெரியவில்லை. மில்லரின் கோபம் அதிகரித்தது. வீட்டுக்குள் சென்று சோப்பைத் தண்ணீரில் கரைத்து எடுத்து வந்தார். எவ்வளவு துடைத்தாலும் பெயிண்ட் போகுமா? அவரது மன அழுத்தம் அதிகமானது.
சாலையில் மிதிவண்டியில் இரண்டு பையன்கள் சென்றார்கள். ஒருவன் மில்லரைப் பார்த்து Nonce என்று கத்தினான். மில்லர் , "நீங்கள் தான் எழுதினீர்களா?" என்று கோபமாகக் கத்தினார். சிறுவர்கள் சிரிப்பும் கேலியுமாக விரைந்து சென்றார்கள்.
மில்லர் தனது மனைவி , மகளை அழைத்துக்கொண்டு காரில் ஒரு பல்பொருள் அங்காடிக்குச் சென்றார். காரில் பெயிண்டால் எழுதியதை எவ்வாறு அழிக்கலாம் என்று விசாரித்தார். பணியாளர் ஓர் இளைஞர். சற்று நேரத்தில் அவருக்கு மில்லரை அடையாளம் தெரிந்தது.
"நீங்க யாரென்று எனக்குத் தெரியும். கவலைப்படாதீங்க. நான் உங்க பக்கம்தான். உங்க பையனின் வழக்கிற்குப் பண உதவி தேவை என்றால் சொல்லுங்க. இணைய வழியாகவே நிறைய நிதி திரட்டலாம்.' என்று அவர் சொன்னார்.
அதெல்லாம் தேவையில்லை என்று மில்லர் மறுத்தார். துடைப்பதற்கான பொருட்கள், காரின் நிறத்தில் பெயிண்ட் ஆகியவற்றை வாங்கினார். காரில் உள்ள எழுத்துகளை அழிக்க முயன்றார். முடியவில்லை. அப்போது 'Nonce' என்று கத்தும் சத்தம் கேட்டது. மில்லர் கோபத்துடன் திரும்பிப் பார்த்தார். காலையில் வீட்டருகே கத்திய அதே சிறுவன். கோபம் தலைக்கேற அவனை நோக்கி ஓடினார். அவனது சட்டையைப் பிடித்து உலுக்கினார். அவன் பயத்தில் நடுங்கினான். அவரிடமிருந்து விடுபட்டு ஓடினான். கீழே கிடந்த அவனது சைக்கிளைத் தூக்கி எறிந்தார். அவரின் மனைவியும் மகளும் ஓடி வந்தனர். "அவன் சின்னப் பையன். இப்படிச் செய்யலாமா?" என்று கத்தினார்கள். மில்லர் நிலைகுலந்திருந்தார். தான் செய்தது தவறு என்று புரிந்தாலும் மனதுள் கோபம் நிறைந்து இருந்தது. கோபத்துடன் காருக்கு அருகே சென்று கீழே வைத்திருந்த பெயிண்டை எடுத்தார். காரில் எழுதியிருந்த எழுத்துக்களின் மீது விசிறியடித்தார். Nonce என்று எழுதியிருந்த பக்கம் முழுவதும் பெயிண்ட் , தரையெங்கும் பெயிண்ட். பல்பொருள் அங்காடிக் காவலர்கள்,"தரையெல்லாம் பாழாகிவிட்டது. நீங்கதான் சுத்தம் செய்ய வேண்டும்." என்று சத்தம் போட்டார்கள். முடியாது என்று அவர்களோடு சண்டையிட்டபடியே மில்லர் காரில் கிளம்பினார்.
மில்லரின் குடும்பமே அதிர்ச்சியில் உறைந்திருந்தார்கள். அவரது பிறந்தநாளை நன்றாகக் கொண்டாட வேண்டும். திரைப்படத்திற்கும் போகலாம் என்று திட்டமிட்டிருந்தார்கள். எல்லாமே பாழ். பொது இடத்தில் சண்டை, சிறுவர்களிடம் காட்டிய வன்முறை என எல்லாமே தவறு என்று மில்லர் உணர்ந்தார். மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் காருக்குள் ஓர் இறுக்கம் தொடர்ந்தது.
அலைபேசியில் ஓர் அழைப்பு. சிறையிலிருந்து அழைப்பு என்றதும் பேசத் தொடங்கினார் மில்லர். அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொன்னான், ஜேமி. இங்கு சின்னச்சின்ன சிரமங்கள் இருந்தாலும் சமாளித்துக்கொண்டு இருக்கிறேன். பெரிதாகச் சிரமம் ஏதும் இல்லை. என்று பல விடயங்களைச் சொன்னான் ஜேமி. ஒலிபெருக்கியில் இணைந்ததால் காரில் இருந்த அம்மாவும் அக்காவும் கண்கள் பனிக்க அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில்," அப்பா, நான் எனது வாக்குமூலத்தை மாற்றித் தரப்போகிறேன். என் தவறை ஒத்துக்கொள்ளப் போகிறேன்.என்னை மன்னித்துவிடுங்கள்!" என்று ஜேமி சொன்னான். அவன் அப்பாவுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. "சரி ஜேமி உன் விருப்பம்." என்று சொன்னார்.
வீட்டுக்கு வந்தபிறகு ஒவ்வொருவரும் நடந்தவற்றை நினைத்து தனித்தனியே அழுகிறார்கள். குடும்பத்தில் ஒரு சிறுவன் செய்த தவறு அனைவரையும் பாதிக்கிறது. சமூகம் தவறு செய்தவர் குடும்பத்திலுள்ள அனைவரையும் குற்றவாளியாகவே பார்க்கிறது. என்ன செய்வது?
மில்லர் வருந்துகிறார். நடந்தவை குறித்து மனைவியிடம் பேசுகிறார். கடுமையாக நடந்துகொண்டதற்காக மன்னிப்புக் கேட்கிறார்.
"பரவாயில்லை. உங்கள் மனதிற்குள் படும் பாட்டை உணர்கிறேன். நம் வீட்டில் மூவருமே ஜேமியை நினைத்து வருந்துகிறோம். அன்று இரவு உண்மையில் என்ன நடந்தது என்று காவல் நிலையத்தில் காட்டிய ஒளிப்பதிவை நீங்கள் மட்டுமே பார்த்தீர்கள்." என்று மில்லரிடம் அவர் மனைவி கூறினார்.
ஆமாம், அவன் தவறு ஏதும் செய்யவில்லை என்று சொன்னான். ஆனால் ஒளிப்பதிவு வேறு விதமாக இருந்தது. அன்று நீ அவனுடன் விசாரணை அறைக்குள் சென்றிருந்தால் என்னை விட அவனுக்கு உதவியாக இருந்திருப்பாய் என்று மில்லர் கூறினார்.
நாம் அவனை நன்றாகத்தான் வளர்த்தோம். ஓவியத்தில் ஆர்வமாக இருந்தான். நிறைய வரைந்தான். பிறகு குத்துச்சண்டையில் ஆர்வமாகச் சில நாள் பழகினான். அவனால் சமாளிக்க முடியவில்லை. கால்பந்து விளையாட்டில் ஆர்வமானான். அவனால் அதிலும் பிரகாசிக்க முடியாமல் 'கோல் கீப்பர்' ஆனான். விளையாடும்போது மற்றவர்களின் பெற்றோர் பெருமிதமாக இருக்கும்போது நான் ஓர் ஓரத்திலிருந்து அவனைப் பார்ப்பேன். அவனும் என்னைக் கவனிப்பான். பிறகு அவனுக்காக ஒரு கணிப்பொறியை வாங்கித் தந்ததுதான் தவறு. அதில் அவன் என்ன பார்க்கிறான் என்பது நமக்குத் தெரியவில்லை. பிள்ளையைக் கெடுத்துவிட்டேனோ என்ற கவலை என்னை வாட்டுகிறது என்று மில்லர் கூறினார்.
இல்லை. நீங்கள் அவனுக்குச் சிறந்த அப்பாவாக இருந்தீர்கள். சில வேளைகளில் நாம் கொடுத்த சுதந்திரம் அவனைச் சீரழித்துவிட்டது. என்று அம்மா கூறினார். இருவரும் பேசிப்பேசித் தங்கள் மனக் கவலைகளைச் சற்றே ஆற்றிக்கொண்டனர். அங்கு அவர்களது மகள் வந்தார்.
அப்பா, உங்களுக்குப் புதுச்சட்டை நன்றாக இருக்கிறது. நாம் திரைப்படம் பார்க்க வெளியே போக வேண்டாம். யாராவது பார்த்து ஏதாவது கேட்டால் மனம் வருத்தப்படும். வீட்டிலேயே படம் பார்க்கலாம். இங்கேயே சாப்பிடுவோம். நான் கல்லூரிக்குச் செல்லும்போது இதேபோல் இன்னல்களைச் சந்தித்தால் சமாளித்துக் கொள்ளுவேன் என்று அப்பாவிடம் கூறினார். மூவரும் அன்றைய பொழுதை வீட்டிலேயே மகிழ்ச்சியாகக் கழிக்க முடிவு செய்தனர்.
மில்லர், ஜேமியின் அறைக்குள் சென்றார். அவனது கட்டிலில் ஒரு கரடி பொம்மை படுக்க வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் மில்லர் மனம் உடைந்தார். கட்டிலில் உட்கார்ந்து அழத்தொடங்கினார்.
தொடர்ந்து பேசுவோம்!





Comments