வளரிளம் புதிர்ப்பருவம் - 10
- கலகல வகுப்பறை சிவா

- Apr 15
- 3 min read

மாணவர்களுக்கான வினாத்தாளில்,
1. நீங்கள் காதலிக்கிறீர்களா? ஆம் / இல்லை.
2. ஆம் எனில் அவர் பெயர், வகுப்பு, பள்ளி
3. அவரோடு பேசியது உண்டா?
4. தினமும் பேசுவீர்களா?
5. நேரில், செல்பேசியில் எவ்வளவு நேரம் பேசுவீர்கள்?
6. பெண் நண்பர்கள் உண்டா? எத்தனை பேர்?
7. அவர்களோடு எப்படிப் பேசுவீர்கள்?
போன்ற கேள்விகள் இருந்தன. மறுநாள் வகுப்பறைக்குச் சென்றதும் வினாத்தாளை அனைவருக்கும் கொடுத்தேன்.
தம்பிகளா, இதிலுள்ள கேள்விகளுக்கு கவனமா பதில் எழுதிக் கொடுங்க. உங்க பெயர் தேவையில்லை. உண்மையை எழுதுங்க. நிச்சயமாகத் தனிப்பட்ட எந்த பதிலையும் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்றேன்.
மாணவர்கள் அதிக ஆர்வமுடன் எழுதினார்கள். வகுப்பறை மெல்லிய சிரிப்பொலிகளால் நிரம்பியது. பக்கத்தில் இருப்பவன் எழுதுவதை எட்டிப்பார்ப்பதும் மறைப்பதும்
"ஐயா, எட்டிப் பாக்குறான்!" என்ற குரல்களுமாக வகுப்பறை கலகலப்பாக இருந்தது.
பாடவேளை முடிந்ததும்
மாணவர்கள் எழுதித் தந்தவற்றை வாசிக்கத் தொடங்கினேன்.
இதுவரை கலந்துரையாடிவற்றையும் வினாத்தாளையும் மனது ஒப்பிட்டுக் கொண்டே இருந்தது. பாவம் இவர்கள். கற்பிதங்களின் கனவுகளுக்குள் வாழ்கிறார்கள் என்ற எண்ணம் எழுந்தது. தொடர்ந்து அனைவரின் பதில்களையும் வாசித்து முடித்தேன். கவலை தோய்ந்த புன்னகை என் முகமெங்கும் நிரம்பியது.
நாற்பது சதவீதம் பேருக்குக் 'காதலி' உண்டு. இருபது சதவீதம் பேர் செல்பேசியிலும் நேரிலும் பேசிக்கொள்கிறார்கள். பதினைந்து சதவீதம் பேர் பார்ப்பது மட்டும். ஐந்து சதவீதம் பேர் 'உன் பெயர் என்ன?' என்பது போன்ற சில வார்த்தைகளைப் பேசியிருக்கிறார்கள்.
அடுத்ததாக ஒன்றைக் கேட்கத் தோன்றியது.
ஒரு பெண்ணைப் பார்த்ததும் உன் மனதில் என்ன தோன்றுகிறது?
கடகடன்னு எழுதுங்க" என்றேன்.
வகுப்பறை வேகமாக எழுதத்தொடங்கியது.
பெண்ணைப் பார்த்ததும் மனதில் எழும் உணர்வுகளை அப்படியே எழுதிவிடுவார்களா? என்று ஒரு கேள்வி மனதில் தோன்ற ஆரம்பித்தது. ஏடாகூடமாக ஏதாவது எழுதிவிட்டால் என்ன செய்வது? என்று ஒரு குரல் எனக்குள் எழுந்தது.
மாணவர்கள் என் மீது கொண்ட நம்பிக்கையை அவர்களது பதில்கள் காட்டும் என்ற எண்ணம் எழுந்து மற்ற ஐயங்களைச் சற்றே தள்ளி வைத்தது.
எனக்குள் நான் உரையாடிக் கொண்டிருந்த போதே எழுதி முடித்தவர்கள் கொடுக்கத் தொடங்கினர். எதிர்பார்ப்போடு வாசிக்கத் தொடங்கினேன்.
நான் ஒரு பெண்ணைப் பார்த்தால், அந்தப்பெண் என்னைப் பார்த்தால் இதயம் வேகமாகத் துடிக்கும். உடல் எல்லாம் நடுங்கத் தொடங்கும். அத்துடன் அந்த இடத்தைவிட்டுச் சென்று விடுவேன்.
முதல் பதிலை வாசித்ததும் உணர்வை அப்படியே எழுதியிருப்பது குறித்து மகிழ்ச்சி ஏற்பட்டது. எத்தனை வயதானாலும் நான் உட்பட பலருக்கும் இதே உணர்வு இருக்கத்தானே செய்கிறது என்று நினைத்துச் சிரித்தபடியே
அடுத்தடுத்து வாசிக்கத் தொடங்கினேன்.
பெண்ணைப் பார்த்ததும் அழகா இருக்கிறார்களா என்று பார்க்கத் தோன்றும்.
அந்தப் பெண்ணிடம் போய் பேச வேண்டும் என்று தோன்றும்.
கூடவே இருக்கணும்னு தோணும். காதல் வரும்.
கவிதை எழுதவேண்டும் என்று மனது ஏங்கும்.
பார்த்ததும் காதல் தோன்றும்.
வித்தியாசமான உருவமாக, அழகாக இருந்தால் காதலித்துக் கல்யாணம் பண்ணத் தோன்றும்.
எந்த ஊரு? எந்தப் பள்ளி? என்று கேட்டுப் பேசத் தோன்றும்.
என் வயதா என்று தோன்றும். மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும். பழகத் தோன்றும்.
நான் ஏன் பெண்ணைப் பார்த்து யோசிக்க வேண்டும்?
சிலரைப் பார்த்ததும் மதிக்கத் தோன்றும். நமக்கு ஏற்ற பெண் என்றால் மட்டுமே யோசிக்கத் தோன்றும்.
புத்துணர்ச்சியா இருக்கும். பேசத் தோன்றும். ஆனா பேசியது இல்லை.
நான் பார்க்கும் போது அந்தப் பொண்ணு என்னைப் பார்த்தால் எனக்கு வெட்கம் வரும்.
தம்பிகளா, உங்களோடு தொடர்ந்து கலந்துரையாடியதில் மகிழ்ச்சி. பல பேர் மனதில் இருப்பதை நம்பிக்கையா பகிர்ந்திருக்கீங்க. உங்களுக்கு ஒரு சில செய்திகளை மட்டும் சொல்றேன்.
காதல் என்று இங்கே சொல்லப்படும் விளக்கங்கள் பெரும்பாலும் உண்மை இல்லை. உங்கள் வயசுக்கு ஏத்தபடி உடலில் மாற்றங்கள் வரும். அறிவியல் பாடத்தில் விரிவா படிப்பீங்க.
உங்க உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களை கவனிச்சுப் பாருங்க. பெண்களின் முகத்தைப் பார்த்துப் பேசுங்க. நண்பர்களோடு பேசும்போது, குழுவாக இருக்கும் போது கவனமா இருங்க. காதல் என்று உருகிப் பேசுவதைத் தாண்டி எதையுமே செய்ய முயற்சிக்காதீங்க. எப்போதும் பெண்ணைக் கேலி செய்யக்கூடாது என்பதில் உறுதியா இருங்க. இப்பதான் பெண்கள் வெளியே வராங்க. சிறு அசம்பாவிதமும் அவர்களை வீட்டுக்குள்ளேயே முடக்கிவிடும். பெண் சக உயிர் என்று மதிப்பது மனிதத்தன்மை. என்று சுருக்கமாகச் சொல்லி முடித்தேன்.
இந்தச் சமூகம் குழந்தைகள் மீது பல முனைத் தாக்குதலை நடத்துகிறது. அது சுழலாகி இவர்களை இழுத்து மூழ்கடித்து விடாமல் கை கொடுத்துத் தூக்கும் கரங்களே இன்றைய தேவை என்ற எண்ணம் ஏற்பட்டது.
தொடர்ந்து சில வாரங்கள் காதல், பெண்ணைச் சக உயிராக மதித்தல் குறித்தே வகுப்பறையில் உரையாடல்கள் நிகழ்ந்தன.
பெண், ஆணுக்கு அடங்கி இருக்கவேண்டும். அவனது விதிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்ற பாடம் வீட்டிலிருந்தே ஓர் ஆண்குழந்தை கற்கத் தொடங்குகிறது. கலைகள், ஊடகங்கள் வழியே இந்த 'ஆண்மை' வலுவடைகிறது.
குழந்தைகளுக்கான கலைகள், இலக்கியம்,கொண்டாட்ட வெளிகள், சுதந்திரமாக இருக்கும் நேரம், தனது தோழர்களுடன் செலவழிக்கும் நேரம் ஆகிய எல்லாமே இப்போது அரிதாகியிருக்கிறது.
வளரிளம்பருவக் குழந்தைகளின் மனதுள் இயல்பாக எழும் கேள்விகளைக் கேட்டறியும் நம்பிக்கையான பெரியவர்கள் இல்லை. காலம் காலமாகப் பல்வேறு வழிகளில் கிடைத்துவரும் ரகசியக் கதைகளை உண்மை என்றே நம்பத் தொடங்குகிறார்கள். ஆணின் வாழ்நாளெல்லாம் இந்த நம்பிக்கை தொடர்கிறது.
அதுதான் பெண்களின் மீதான மீறல்களை நியாயப்படுத்துகிறது. கலாச்சாரம், பண்பாடு என்று பல்வேறு கூறுகளின் உதவியால் பெண்மையை ஆண்மையே வரையறுக்கிறது.
உலகெங்கும் ' ஆண்மை' என்று கற்பிக்கப்பட்ட ஆணாதிக்க சமூகத்தின் குரலாகவே ஜேமி இருக்கிறான்.
தொடர்ந்து பேசுவோம்!





Comments