top of page

வளரிளம் புதிர்ப்பருவம் - 9


பிரையோனி, ஜேமியிடம் உரையாடத் தொடங்கினார். 


உனக்கு ஒரு தோழி இருந்தால் என்ன செய்வாய்? எங்கே கூட்டிட்டுப் போவாய்?


சினிமாவுக்கு.


என்ன மாதிரியான படம்?


ஹாரர். 


A - சான்றிதழ் படமா?


ஆமா. தியேட்டரில் ஈஸியா ஏமாத்திட்டு உள்ளே போயிடலாம். 


சினிமா முடிந்த பிறகு  நீ அவளோடு நடந்து சென்று  நேரம் செலவளிப்பாயா? இல்ல நேரே வீட்டுக்கா? 


வீட்டுக்கெல்லாம் போக மாட்டேன். 


"அவளுக்கு முத்தம் கொடுக்கத் தோணுமா?" என்று பிரையோனி கேட்டார். 


ஜேமிக்கு லேசான  அதிர்ச்சி.

"இந்த மாதிரிக் கேள்வியெல்லாம் நீங்க கேட்கலாமா?" என்றான். 


ஏன், ஸ்கூல்ல இதெல்லாம் பேசமாட்டீங்களா? 


ஜேமி பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். 


உன் வயசுல இருக்கிற பையன், ஒரு பொண்ணு கிட்ட அல்லது பையன் கிட்ட எந்த அளவுக்கு உடல் ரீதியா நெருக்கமா நடந்துக்கலாம்னு நீ நினைக்குற? 


நான் Gay இல்லேன்னு  சொல்லிட்டேன். 


நீ Gay என்று நான் சொல்லவே இல்லியே! 


இதுக்கு நான் பதில் சொல்லியே ஆகணுமா? 


ஆமாம். உன்னால முடிஞ்சா சொல்லு. 


தெரியல. தொடுறது, முத்தம் கொடுப்பது....


உன்னைப் பொறுத்தவரை தொடுவதுன்ன என்ன?


உடல் பகுதிகளைத் தொடுவது. 


ஒவ்வொரு பகுதியாக பிரையோனி கேட்கக் கேட்க, "ஒருவேளை தொடுவேன்" என்று  ஜேமி தயங்கித்  தயங்கிச் சொன்னான். 


"நிஜமாகவே நீங்க இப்படியெல்லாம் கேட்கலாமா?" என்று  ஜேமி கேட்டான். 


உன்னை மாதிரி ஒரு 13 வயசுப்  எதிர் பாலின ஈர்ப்பு உள்ள பையன், ஒரு பொண்ணோட உடலைத்  தொடுவது சாதாரணமானது என்று நினைக்கிறாயா? 


பிரையோனியின் கேள்விகள் இன்னும் வெளிப்படையாக வரத் தொடங்கியதும் ஜேமியும் பெண் பிள்ளைகளிடம் எப்படியெல்லாம் நடந்துகொள்வேன் என்று பேசத் தொடங்கினான். அவர்களும் என்னைத் தொட்டார்கள் என்று சொன்னான். எங்கெல்லாம் தொட்டார்கள் என்று விவரித்தான்.


அவ்வப்போது தயங்கினான். 


இங்கு சரி, தப்பு என்று எதுவுமில்லை ஜேமி, நீ எவ்வளவு உண்மையாக இருக்கிறாய் என்பது தான் முக்கியம் என்று பிரையோனி சொன்னார். 


சற்றே யோசித்த ஜேமி, நான் சொன்னதெல்லாம் நடக்கவில்லை என்றான். 


Porn படங்களைப் பார்ப்பாயா?


நான் பார்க்க மாட்டேன். மற்றவர்கள் பார்ப்பாங்க.


"ஆனால் என்னுடன் படிக்கும் இரண்டு பெண் பிள்ளைகளைகளின் ஆடைக்குறைவான படங்களைப் பார்த்தேன்.அதாவது மேலாடை இல்லாமல்!" என்றான் ஜேமி.


இது தெரிந்தால் அந்தப் பிள்ளைகள் என்ன நினைப்பார்கள்? எவ்வளவு வருந்துவார்கள்?


வகுப்பில் எல்லாரும் தானே பார்த்தார்கள்.


பிரையோனி அதிர்ச்சியடைகிறார்.

"கெயிட்டி அதில் ஒருத்தியா?" என்று கேட்டார்.


ஜேமியின் முகம் இருண்டது. 

உங்களுக்கு எப்படித் தெரியும்? என்று அவன் குரல் தடுமாறியது. எப்படி இதை யூகித்தீர்கள்? என்று கேட்டான்.


நான் யூகிக்கவில்லை. 


Snapchat இல் அவதான் ஒருத்தனுக்கு அனுப்பினா அவன் எல்லாருக்கும் காட்டினான். 


ஆணின் காதல், காமம் போன்ற உணர்வுகள் குறித்து இலக்கியப் பதிவுகள் இருக்கின்றன. ஆனால்   வளரிளம்பருவத்தில் இத்தகைய உணர்வுகள் எவ்வாறு தோன்றின என்பது குறித்த பதிவுகள் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லாம்.


குழந்தைப் பருவக் காதல் என்று பெருமிதத்தோடு சொல்வதும் உண்டு.


ஓர் ஆண் குழந்தை வளர வளரப் பெண்ணை ஆணின் சொத்து, உரிமை என்றெல்லாம் சமூகத்திலிருந்து கற்றுக்கொள்கிறது. 

பெண் உடல் மீதான ஈர்ப்பை வளரிளம்பருத்தில் உணரத் தொடங்குகிறது.


வளரிளம் பருவ ஆண் பிள்ளைகள் தங்களுக்குள் பெண்ணைப் பற்றி என்ன பேசுவார்கள்? 

பெண் பிள்ளைகள் ஆணைப்பற்றி என்ன பேசிக்கொள்வார்கள்? ‌ 


இந்தக் கேள்விகளுக்கான பதில்களாக மேலை நாடுகளில் வளரிளம்பருவ இலக்கியங்கள் இருக்கின்றன.


இங்கு நமது வாழ்விலிருந்து யோசிக்கலாம். பிறகு இதுபற்றி விரிவாக உரையாடலாம். 


சில ஆண்டுகளுக்கு முன்  ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சிலர் தங்கள் நாள் குறிப்பு ஏடுகளில் காதலைப் பற்றி எழுதியிருந்தார்கள். அதனால் வகுப்பில் காதலைப் பற்றிய உரையாடல்களைத் தொடங்கினேன். 


'காதல்' என்று கரும்பலகையில் எழுதிவிட்டு மாணவர்கள் முன் சாக்பீசை நீட்டினேன்.  பலத்த போட்டிக்கிடையே  அதைக் கையில் வாங்கியவர், நெறியாளர் ஆனார். 


அன்பு, 

புனிதமானது, 

நட்பு, 

வாழ்க்கை, 

மனதைப் புரிந்துகொள்ளுதல், சுகம், 

தெரிந்து கொள்வது, அழிவதில்லை, 

உண்மை, 

சந்தோஷம், 

மனதிற்குப் பிடித்தவரை நேசிப்பது, 

வரலாறு, 

திருமணம், 

பழகுவது, 

விரும்புவது, 

மனதில் பாரம், 

காதல் ஒரு நோய், 

உயிருக்கும் மேல், 

காதல் ஒரு காமம், 

ஏமாற்றி சுற்றுவது, 

காதல் ஒரு போதை, பணச்செலவு, 

வாழ்வில் முக்கியமானது, விரும்பும் பெண்ணை மணம் முடிப்பது, 

இன்பம், 

அறியாதவர்களை இணைப்பது, 

காதல் பொன்னாது, வாழ்க்கையை மாற்றும், துன்பம், 

ஏமாற்றுவது, மனதளவில் நேசிப்பது, காதல் ஒரு பைத்தியம், எந்தப் பருவத்திலும் வருவது காதல், காதல் ஒரு நல்ல காலம், காதல் ஒரு துணிவு, 

துள்ளாத மனமும் துள்ளும், காதல் அழகானது.


அதுவரை திறக்காத வாய்களும் திறந்தன. மடை திறந்த வெள்ளமாகப் பாய்ந்த எண்ணங்களால் கரும்பலகை நிரம்பி வழிந்தது. 

காதலைப் பற்றி சமூகம் பேசும் அனைத்தையும் ஒன்றாகக் கேட்க முடிந்தது. பாட வேளையும் நிறைவடைந்தது. அனைவரும் சொன்னவற்றை யோசிக்கும் போது ஆச்சரியமும் வருத்தமும் தோன்றின.


வளரிளம் பருவத்தினரை காதல் என்ற வார்த்தை பாடாய்ப்படுத்துகிறது. இவர்கள் யாரைக் காதலிக்கின்றனர்?  கற்பிதங்களும் வயதின் ஆர்வமும் ஏதாவது ஆபத்தை ஏற்படுத்தி விடுமோ? போன்ற பல்வேறு எண்ணங்கள் மனதுள் எழத்தொடங்கின. ஒரு வினாத்தாளை உருவாக்கி அனைவரிடமும் கொடுத்து எழுதச் சொல்லலாம் என்று தோன்றியது. மனதில் தோன்றிய கேள்விகளை எல்லாம் எழுதினேன். அவற்றிலிருந்து சில கேள்விகளை மட்டும் தட்டச்சு செய்து வினாத்தாளை உருவாக்கினேன்.


தொடர்ந்து பேசுவோம்!


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page