top of page

வளரிளம் புதிர்ப்பருவம் - 8


"என்னால் இங்கே இருக்க முடியவில்லை!" என்று ஜேமி கத்தத் தொடங்குகிறான். தொடர்ந்து கத்துகிறான் 


"ஜேமி, உட்காரு, உட்காரு " என்று பிரையோனி சொல்கிறார். அதை அவன் கேட்பதாகவே இல்லை. கத்திக் கொண்டே இருக்கிறான். 


நீங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கிறீங்க? என்னைப் பற்றி எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறீங்க. என்னால் முடியாது. இங்கே இருக்கவே முடியல. 


என்னால் உட்காரவே முடியாது. நான் என்ன செய்யணும்னு நீங்க எனக்குச் சொல்லாதீங்க.  நீங்க என்னைக்  கட்டுப்படுத்தாதீங்க. உங்களால் அது முடியவே முடியாது.  


ஜேமி கத்திக் கொண்டே அருகில் வருகிறான். பிரையோனி திகைத்து அமர்ந்திருக்கிறார். முகத்தில் சிறிது பயமும். 


காவலர் உள்ளே வருகிறார்.  ஏதாவது பிரச்சினையா என்று கேட்கிறார். 


ஏதும் இல்லை என்று பிரையோனி சொல்கிறார். நான் கத்திட்டேன் என்று ஜேமி சாதாரணமாகச் சொல்கிறான்.

வெளியே போய் ஒரு டீ எடுத்து வருகிறேன்  என்று பிரையோனி அந்த அறையை விட்டு வெளியேறுகிறார். சற்றே தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்கிறார். 


வளர் இளம்பருவக் குழந்தைகளின் மனநிலை மாறிக்கொண்டே இருக்கிறது. தான் நினைப்பது, செய்வது மட்டுமே சரி என்ற மனநிலையில் பலரும் இருக்கிறார்கள். உடனுக்குடன் முடிவுகளை எடுப்பதும் உடனுக்குடன் மாற்றிக் கொள்வதும் எளிதாக இருக்கிறது. 


 பொருளாதார வளர்ச்சியில் மட்டுமே நம்மில் பெரும்பாலானவர்களின் கவனம் இருக்கிறது. அல்லது ஏன், எதற்கு என்ற கேள்விகளே இல்லாமல் பொருளைத்தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம். 


சமூக நிகழ்வுகளாகத் திருமணம், குடும்பம் என்று மாற்றம் வந்த பிறகு பொருளின் பின்னே இன்னும் வேகமாக ஓடத்தொடங்குகிறோம். பிள்ளைகள் பிறந்து விட்டால் வேகத்தையும் நேரத்தையும் அதிகரிக்கிறோம். 


ஏன் இப்படி இருக்கிறோம்?

வாழ்க்கை என்றால் என்ன? 

என்பன போன்ற கேள்விகள் நம் வாழ்வில் அத்திப்பூக்கள்.


நம் ஓட்டத்தில் தடங்கல், சிக்கல் ஏற்பட்டால் திகைக்கிறோம், புலம்புகிறோம், செய்வதறியாது தடுமாறுகிறோம். 


இத்தகைய சூழலில் பிள்ளைகளை எப்படிக் கவனிக்கிறோம்?


பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தந்தால் போதும், நல்ல பெற்றோர். 

ஊரின் சிறந்த பள்ளி என்று சொல்லிக் கொள்ளும் பள்ளியில் எப்பாடுபட்டேனும் பிள்ளையைச் சேர்த்துவிட்டால், சிறந்த பெற்றோர். 


நம் குழந்தைப் பருவத்தில் நமக்குக் கிடைக்காதது எல்லாம் நம் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே நமது கடமை. 


இதையெல்லாம் இன்னும் விரிவாகச் சில வாரங்கள் கழித்துப் பேசலாம். இப்போது ஜேமியிடம் வருவோம். 


சமூகம் உருவேற்றி வைத்திருக்கும் 'ஆண்மை' குணங்கள் தனக்கு இருப்பதாக நம்பும் குழந்தை, ஜேமி. அவனுக்குச் சரி என்று நினைப்பதை மற்றவர்கள் தவறு என்று சொல்லும்போது துடித்துப்போகிறான். கோபப்படுகிறான். 


ஒரு வீட்டில் கோபப்படும் குழந்தை இருந்தால் கவனித்துப் பாருங்கள். அந்தக் குடும்பத்தலைவர் மற்றும் பெரியவர்கள் மற்றவர்களிடம், 'அவன் கோவக்காரன், அவனை ஏதும் சொல்லாதீங்க' என்பார்கள். அதே குடும்பத்தில் உள்ள மற்ற குழந்தைகளும் கோபக்காரனிடம் விட்டுக் கொடுத்த விட்டுக் கொடுத்தே போக வேண்டும். வேறு யாராவது எழியவர்களிடம்  இது பற்றிப் பேச முயற்சி செய்தாலும் ' அவன் அப்படித்தான். பெரியவன் ஆனதும் சரி ஆகிவிடுவான்' என்று சமாளிப்பார்கள்.


கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு, 'கட்டுத்தறி மாடு' என்று. அதைப்போலத்தான் இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள். வீட்டிற்குள் செயலில் வீரம், வெளியே சொல்லில் வீரம். 


உணர்வெழுச்சியால் தன்னிலை அறியாமல் தவறுகளைச் செய்து விடுகிறார்கள். அது தவறுதான் என்று உணர்ந்து வருந்தும் நிலை அவர்களிடம் ஏற்படுவது இல்லை. தன் செயலின் விளைவு பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் நான் செய்ததே சரி என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் செய்த குற்றத்தின் ஆழத்தை எவ்வாறு புரிய வைப்பது? அதுதான் பிரையோனிக்கு முன் நிற்கும் சவால். 


பிரையோனி கண்காணிப்பு  அறைக்குச் சென்று CCTV மூலம் ஜேமி என்ன செய்கிறான் என்று சிறிது நேரம் கவனித்துப் பார்க்கிறார். சற்றே புன்னகைத்து விட்டு விசாரணை அறைக்குச் செல்கிறார். 


"ஜேமி, நான் போலீஸ் இல்லை. உன்னிடம் எதையும் போட்டு வாங்க நினைக்கல. நடந்ததைப் பற்றி நீ என்ன புரிஞ்சு வச்சிருக்கே என்று தெரிஞ்சுக்கத்தான் நான் இங்கே வந்திருக்கேன்" என்று பிரையோனி அழுத்தமாகச் சொல்கிறார். ஜேமி, "எனக்குப் புரியுது. கேளுங்க, என்ன தோணுதோ கேளுங்க. இப்போ சரியா சொல்றேன்"என்கிறான். 


"ஆண்மை என்ற வார்த்தையைப் பற்றி நினைக்கும் போது எனக்கு என்ன தோணுதுன்னா, பொண்ணுங்க விஷயத்துல பசங்க எந்த அளவுக்கு ஆண்மையா உணர்வாங்க என்றுதான்." பிரையோனி சொல்கிறார். 


"நான் பெண்களை எப்படிப் புரிஞ்சு வச்சிருக்கேன்னு நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்." என்கிறான் ஜேமி.


சரி. உன் அப்பா உங்க அம்மாவிடம் அன்பா நடந்துக்குவாரா? சண்டை போடுவாங்களா?


எங்க அப்பா கோபப்படுவாரு. எதையாவது உடைப்பாரு. ஆனா அம்மாவை அடிச்சதே இல்லை. அவங்க மேல அன்பு வச்சிருக்காரு.


உங்க அப்பாவுக்கு பெண் தோழிகள் உண்டா?


இல்லை. அவர் தப்பானவர் இல்லை. 


நானும் அப்படிச் சொல்லல. நட்பாக பெண்கள் இல்லையா?


இல்லை. அவர் நண்பர்கள் எல்லோருமே ஆண்கள் தான்.


உனக்குப் பெண் நண்பர்கள் இருக்காங்களா?


இல்லை. 


ஏன், பெண்களைப் பிடிக்காதா?


பிடிக்கும்.


பிறகு ஏன் நட்பாக யாரும் இல்லை?


நான் பயந்தாங்கொள்ளி இல்லை.


சரி. உனக்கு ஒரு தோழி இருந்தா என்ன செய்வாய், எங்கே கூட்டிட்டுப் போவாய்.


சினிமாவுக்கு.


வளர் இளம்பருவத்தை, ஜேமியைப் புரிந்து கொள்ளுதலை நோக்கிய உரையாடல் தொடர்கிறது.

( உரையாடுவோம் )


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page