top of page

எறும்பின் மூளையில் எத்தனை kb?

  • Writer: ஹேமப்பிரபா
    ஹேமப்பிரபா
  • Apr 6
  • 2 min read



எறும்பைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பாக ஒரு கதையைப் படித்துவிடுவோம்.

***


பள்ளியில் அடுத்த வாரம், ‘வினாடி வினா’ போட்டி வைக்கப் போகிறோம் என்று அறிவித்து இருந்தார்கள்.


ஒரு குழுவிற்கு மூன்று பேர் இருக்கலாம் என்றும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என்று அனைத்துப் பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்றும் அறிவித்து இருந்தார்கள். நண்பர்கள் தங்களுக்குள் குழுவாகப் பிரிந்து ‘வினாடி வினா’ போட்டிக்குத் தயாரானார்கள்.


பாலா, வர்ஷா, பாத்தீமா– மூவரும் ஓர் அணியில் இருந்தனர். ஒவ்வொரு பாடத்தையும் தங்களுக்குள் பிரித்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தார்கள். பாத்தீமாவுக்கு, கணிதம் மிகவும் பிடிக்கும். பாலாவுக்கு சமூக அறிவியல் என்றால் பிடிக்கும். வர்ஷாவுக்கு அறிவியல். இப்படியே பிரித்துக்கொண்டு படித்தார்கள்.


போட்டி நாளும் வந்தது.


‘இந்திய அரசமைப்பு சட்டம் எப்போது அமலுக்கு வந்தது?’ என்ற கேள்வி வந்ததும், ஜனவரி 26, 1950 என்று சட்டென்று பதிலளித்தான் பாலா. அடுத்ததாக ‘இரும்பு எந்த வாயுவுடன் வினை புரிவதால் துரு பிடிக்கிறது?’ என்ற கேள்வி வந்ததும் ஆக்ஸிஜன் என்று சரியான பதிலளித்தாள் வர்ஷா.


அடுத்ததாக, கணிதம் தொடர்பான கேள்வி. ‘240 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு சட்டை, இப்போது பத்து சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கிறது. அப்படியென்றால் சட்டையின் தற்போதைய விலை என்ன?’ என்ற கேள்வி கேட்டார்கள்.


கடகடவென்று மனக் கணக்குப் போட்டு 216 என்ற சரியான விடையைச் சொன்னாள் பாத்தீமா.


மூவரும் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்துகொண்டு போய், இறுதிச் சுற்றுக்கு வந்தார்கள்.இனிமேல், கேள்வி கடினமாகப் போகிறது. இதுவரை ஒவ்வொரு பாடத்தைச் சார்ந்தும் கேள்விகள் வந்துகொண்டிருந்தன. இனிமேல், மூன்று பாடங்களையும் இணைத்து கேள்வி கேட்கப்பட உள்ளது என்று அறிவித்து இருந்தார்கள். தேநீர் இடைவேளையின் முடிந்து, புதுத்தெம்புடன் மாணவர்கள் தயாராய் இருந்தனர்.


வினாடி வினா தொடங்கியது.


‘1853ஆம் ஆண்டு இந்தியாவில் முதன்முதலாக பயணம் செய்த ரயில், எங்கிருந்து எதுவரை எவ்வளவு வேகத்தில் பயணித்தது?’ என்ற கேள்வி.


முதல் ரயில் பயணம் மும்பையில் இருந்து தானே வரைக்கும் என்று பாலாவுக்கு நினைவுக்கு வந்தது.


இரண்டிற்கும் இடையில் தோராயமாக எவ்வளவு தூரம் இருக்கும் என்று யோசித்தான். பயண நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம் என்பதும், தோராயமாக முப்பது கிலோமீட்டர் பயணித்து இருப்பார்கள் என்பதும் அவனுக்கு நினைவுக்கு வந்தது.


பயண நேரமும், தொலைவும் தெரிந்ததும், வேகம் = தொலைவு/நேரம் என்ற சமன்பாடு வர்ஷாவுக்கு அத்துப்படி.


ஆக, பயண வேகம் என்பது மணிக்கு 30 கிலோமீட்டர் என்று டக்கென்று சொன்னாள் கணக்கு பாத்திமா.


சரியான விடை என்பது 34கிலோமீட்டர் தூரத்தை, 57 நிமிடங்களில் பயணித்தார்கள். ஆக, பயண வேகம் என்பது மணிக்கு 35 கிலோமீட்டர்.


பிற அணியினருக்கு சுத்தமாக பதில் தெரியவில்லை. இவர்களுடைய பதில், சரியான விடைக்கு மிகவும் நெருக்கமாக இருந்ததால், பாலா – வர்ஷா – பாத்திமா அணியினருக்கு பரிசு கொடுக்கப்பட்டது.


***


இப்போது எறும்பு கதைக்கு வருவோம்.


எறும்பின் மூளையில் உள்ள நினைவகம் (storagespace) வெறும் 256KB மட்டுமே!நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைபேசிகள் 64GB, 128GB என்று வெவ்வேறு அளவிலான நினைவகத்துடன் (memory/storage) உள்ளன.நம்முடைய கைபேசிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 256 kb எவ்வளவு சின்னதாக தெரிகிறது அல்லவா?


ஆனால், யோசித்துப் பார்த்தால், எறும்புகள் உணவு தேடிச் செல்வது, சேகரித்த உணவை மீண்டும் வீட்டுக்குக் கொண்டுவந்து சேமிப்பது என்று பல வேலைகளைச் செய்கின்றன.


ஓர் இடத்துக்குப் போய் வருவதற்கு வழியை நினைவு வைத்துக்கொள்ள வேண்டும். அப்படியென்றால், எறும்புகளிடம் உள்ள 256KB நினைவகம் பத்தாதுதானே? மேலும், மூளையின் செயல்பாட்டை வெவ்வேறு பணிகளுக்கும் செலவிட வேண்டும்.


அப்படியிருக்கும்போது, தங்களிடம் உள்ள இத்துனூண்டு ‘மூளையில்’ எப்படி இத்தனை வேலைகளைத் திட்டமிட முடிகிறது?


மேற்கூறிய கதையில், பாலாவுக்கு மும்பை-தானே பற்றிய புவியியல் அமைப்பு தெரிந்திருந்தது. வர்ஷாவுக்கு சமன்பாடு தெரிந்திருந்தது. பாத்திமாவால் கணக்குப் போட முடிந்தது. மூவரும் தனிதனியாக இருந்திருந்தால் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முடிந்திருக்காது. மூவரின் கூட்டு முயற்சியால்தான் அவர்களால் பதிலளிக்க முடிந்தது. இதற்குப் பெயர்தான் கூட்டுப் புலமை (swarm intelligence) எனப்படுகிறது.


எறும்புகள் தங்களுக்கென்று ‘தலைமை எறும்பு’ சொல்வதைச் செய்வதில்லை. ‘தலைமை எறும்பு’ என்ற ஒன்று இல்லாமல், ஒவ்வொரு எறும்பும் தங்களுக்கான பணிகளைச் செய்வதாலேயே ஒரு வேலையை முடிக்க முடிகிறது.


உதாரணமாக, தாங்கள் நகரும்போது, பெரமோன் எனப்படும் ஹார்மோன் சுரப்பு வெளியிட்டு, பிற எறும்புகளுக்கும் வழித்தடத்தை அறிவிக்கின்றன. இது எறும்பின் கூட்டுப் புலமை.


இதேபோல, கூட்டுப் புலமை உத்தியைப் பயன்படுத்தி, உலகம் முழுக்க டிரோன் குழுக்கள், ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவுஆகிய துறைகள் வடிவமைக்கப்படுகின்றன.


சின்ன மூளை! பெரிய வேலை!!!


( தொடர்வோம் )

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
jadominic71
Apr 15

சிறப்பு

Like
bottom of page