top of page

திமிங்கிலங்களும் ஓங்கில்களும் ஏன் கரை ஒதுங்குகின்றன?


"கரை ஒதுங்கிய திமிங்கிலம் - மீட்புப் பணியில் வனத்துறையினர்" போன்ற தகவல்களை நாம் செய்தித்தாளில் பார்க்கலாம். திமிங்கிலங்கள், கடல் பன்றிகள் (Porpoises), ஓங்கில்கள் (Dolphins) போன்ற கடல்வாழ் பாலூட்டிகள் அவ்வப்போது கரை  ஒதுங்குகின்றன.


ஒரு கடல்வாழ் பாலூட்டி கையறு நிலையிலோ காயமுற்றோ நோய்வாய்ப்பட்டோ அல்லது இறந்தோ கரையில் வந்து கிடப்பதை "கரை ஒதுங்குதல்" என்பார்கள். இது ஆங்கிலத்தில் Beaching அல்லது Stranding என்று அழைக்கப்படுகிறது. 


சில நேரங்களில் ஒரு தனி விலங்கு கரை ஒதுங்கும்அல்லது பல விலங்குகள் 

ஒன்றாகக் கரை ஒதுங்கலாம்.


இது துல்லியமாக இதனால் மட்டும்தான் ஏற்படும் என்று குறிப்பிட்டுச் சொல்வது கொஞ்சம் கடினமானது.ஏனென்றால் பெரும்பாலான சூழல்களில் ஒரு விலங்கு கரை ஒதுங்கியபின்புதான் நமக்குத் தெரியவரும்.


கரை ஒதுங்குவதற்கு முன்பாக அந்த விலங்கு கடலில் எப்படிப்பட்ட பாதிப்புகளையெல்லாம் எதிர்கொண்டது என்பது நமக்குத் தெரியாது, இல்லையா?

ஆகவே ஒரு யூகமாகத்தான் நம்மால் காரணங்களை சொல்லமுடியும்.


சரி, என்னென்ன காரணங்கள் இருக்கலாம்?


  • நோய்வாய்ப்பட்ட கடல் பாலூட்டிகள் நன்றாக நீந்த முடியாமல் சோர்ந்துபோய் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு கரைக்கு அருகில் வரலாம்.


  • கரைக்குப் பக்கத்தில் வந்துவிட்டால் ஆழம் குறைவான அந்தப் பகுதியில் 

  • அவை மாட்டிக்கொண்டு கரை ஒதுங்கலாம்.


  • வேட்டையாடிகளிடமிருந்து தப்பிக்க வேகமாக நீந்தும் கடல் பாலூட்டிகள்  கரைக்கு அருகில் வந்து மாட்டிக்கொள்ளலாம்.


  • சிலவகை கடல்பாசிகளின் நச்சுப்பொருட்கள் திமிங்கிலங்களின் மூளைச் செயல்பாட்டை பாதிக்கலாம்.மூளை பாதிக்கப்பட்ட கடல்வாழ் பாலூட்டிகள் திசை தெரியாமல் நீந்தி கரைக்கு வரும்.


  • கடலில் இருக்கும் மாசுபாடுகளால் திமிங்கிலங்களுக்கு நோய் ஏற்படலாம். நோய்வாய்ப்பட்ட கடல்வாழ் பாலூட்டிகள் திசை தெரியாமல் நீந்தி 

  • கரைக்கு வரும்.


  • பெரிய கப்பல்களில் இருக்கும் ப்ரொப்பெல்லர்கள் (Propellers) எனப்படும் பாகங்களும் கடலில் மிதக்கும் மீன்பிடி வலைகளும் கடல்வாழ் பாலூட்டிகளுக்குக் கடுமையான காயங்களை ஏற்படுத்தலாம். இவ்வாறு பாதிக்கப்பட்ட கடல்வாழ் பாலூட்டிகள் சோர்ந்துபோய் திசை தெரியாமல் நீந்தி கரைக்கு வரும்.


  • கடல்வாழ் பாலூட்டிகள், குறிப்பாகத் திமிங்கிலங்களின் தலைப்பகுதியில் மேக்னடைட் (Magnetite) என்ற ஒருவகைப் படிகக்கல் இருக்கிறது. இது பலவீனமான காந்தப்புலத்தைக் கூட ஏற்று திசை அறிவிக்கக்கூடியது. இந்தப் படிகம் திமிங்கிலங்கள் திசை அறிய உதவுகிறது என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். கடலில் ஏற்படும் மாற்றங்களால் காந்தப்புலம் மாறும்போது கடல்வாழ் பாலூட்டிகள் திசை கண்டுபிடிக்கும் திறன் மாறும், இவை தடுமாறி கரைக்கு வந்துவிடும்.


  • திமிங்கிலங்களும் ஓங்கில்களும் ஒலியை வைத்துத் தகவல் பரிமாற்றம் செய்யக்கூடியவை என்பது நம் அனைவருக்கும் தெரியும். கடலுக்குள் ஏற்படும் ஒலி மாசுபாடு இந்தத் தகவல் பரிமாற்றத்தில் குறுக்கிடுகிறது, இது கடல்வாழ் பாலூட்டிகளை பாதிக்கிறது.


  • ஏதோ ஒரு தனி கடல் பாலூட்டி நோயுற்றதாலோ பயத்தாலோ கரைக்கு அருகில் வந்துவிட்டால் அது ஆபத்தில் இருப்பதாகக் குரல் எழுப்பும். இந்தக் குரலைக் கேட்டு அதன் உறவினர்களும் நண்பர்களும் அதற்கு உதவுவதற்குக் கரையை நோக்கி வரலாம். ஆழமற்ற பகுதிக்கு அருகில் வந்த உடனேயே இந்த விலங்குகள் எல்லாம் மாட்டிக்கொள்ளும்.


உங்களுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் கடல்வாழ் பாலூட்டிகள் கரை ஒதுங்கினால் உடனே வனத்துறைக்குத் தகவல் சொல்லுங்கள். அல்லது காவல் துறைக்கோ தீயணைப்புத் துறைக்கோ தகவல் சொல்லி அவர்கள் மூலம் வனத்துறையினரை அணுகலாம். அங்கு கூட்டமாகக் கூடி மீட்புப் பணிகளில் குறுக்கிட வேண்டாம்.


கரை ஒதுங்கிய விலங்கின்மேல் ஏறி உட்காரக் கூடாது, அதைத் தொட்டுப்பார்க்கவோ சீண்டவோ கூடாது. அது பாதிக்கப்பட்ட விலங்கு என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது ஒரு செல்ஃபி பாயிண்ட் அல்ல. ஆகவே பொறுப்புடன் இருக்க வேண்டும்.  பாதிப்பைக் குறைத்து அந்த விலங்கை பத்திரமாக அதன் வாழிடத்துக்கு அனுப்பி வைப்பதுதான் நமது கடமை.


நாராயணி சுப்ரமணியன்
நாராயணி சுப்ரமணியன்

உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.  கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர் 

பட்டமும் பெற்றவர்.

இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி கல்விக்குழுமத்தின் படைப்பூக்க விருது,பாவை விருது ஆகிய விருதுகளைப்  பெற்றுள்ளார். கடலும் மனிதரும், விலங்குகளும் பாலினமும், ஆழ்கடல், சூழலும் பெண்களும், நெய்தல் மீன்கள் உள்ளிட்ட பதினைந்து  நூல்களை எழுதியுள்ளார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page